அத்தியாயம் - 2
சிராஜ் தந்தையை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் புறப்பட தாயாரானான்.
“டேய் போய் சேர்ந்ததும் மறக்காம கால் பண்ணு என்ன”
“சரிடா” என திகழுக்கு பதில் உரைத்தான் சீராஜ், திகழின் தாயார் அவனிடம் சாப்பாட்டு பையை கொடுத்தார். “புளியோதரை செஞ்சுருக்கேன். இதை சாப்பிட்டுக்கோ டிரையின்ல சாப்பாடு வாங்காதடா” என்றார் பின் தன் மகனிடம் திரும்பி “முகிலா உங்க அப்பா எங்கடா?” என கேட்டார்.
“என் அப்பாவும் அவரும் அவங்க ஓனர் பார்க்க போய் இருக்காங்க” என பதில் அளித்தான் சிராஜ்
“ஆனா அம்மா அவங்க போய் ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் வரல” என்றான் திகழ்
“அவங்க ஓனர் அப்பாவுக்கு புருசன்னு அம்மா தான் சொல்வாங்களே அவ்வளவு சீக்கிரத்துல இந்த கதை முடியாது” என்றாள் திகழின் தங்கை.
“அதுசரி அப்படி என்ன தான்டா பேசுவாங்க?” என திகழ் கேட்க தாேள்களை குழுக்கினான் சிராஜ்
“ஆனா அம்மா யூ ஆர் கிரேட்” என்றாள் அவரின் தவப்புதல்வி.
இவர்களது சம்பாஷனைகளை அவரது தாயார் கண்டுகொண்டது போல் தெரியவில்லை.
சிராஜின் குடும்பம் முதன்முதலாக மதுரைக்கு வேலைக்கு வந்த பொழுது மொழி அறியா காரணத்தினால் வெகுவாக யாரிடம் பழக்கம் இல்லாமல் இருந்தனர். வேலன் சிராஜின் தந்தை வேலை செய்யும் நிறுவனத்தில் சூப்பரவைசராக வேலை செய்தவர்.
“வேலன் பையா” என ஆரம்பித்ததில் தொடங்கியது அவர்களது உறவு. “சிராஜை நன்றாக படிக்க வை” என்று வேலன் கூறிய காரணத்தால் அவனை படிக்க வைத்தார் அவரது தந்தை. அதனை தொடர்ந்து இரண்டு குடும்பமும் நட்பு குடும்பம் ஆனது.
தந்தைமார்கள் இருவரும் வந்ததும் திகழ் அவர்களை அழைத்துக் கொண்டு இரயில்வே ஸ்டேசன் சென்றான். சிராஜையும் தந்தையையும் வழி அனுப்பி வைத்தனர்.
இரயில் புறப்படும்போது வெளியே எட்டிப்பார்த்த சிராஜ் கை அசைத்துக் கொண்டிருந்த திகழிடம் “திகழ் பழனி பக்கத்துல எந்த ஊரு சொன்ன?” எனக் கேட்டான்.
“நாழிகை குறிஞ்சி ஏன்டா?”
“சும்மா தான் ஊர் பேர் மறந்துட்டேன்”
சரி என தலை அசைக்கவும் வண்டி அவர்களை கடந்து சென்றது.
தான்வி கிராமத்திற்கு வந்து சேரும் போது நன்றாக இருட்டிவிட்டது. பழனியில் இருந்து இந்த கிராமத்திற்கு வரும் பேருந்து வரும் வழியில் பழுதாகி போனதால் தாமதமாகிவிட்டது.
அவள் வருகைக்காக காத்திருந்த நபரும் ஊருக்குள் வந்துவிட்டதும் “நான் வீட்டுக்கு கிளம்புறேன்மா. என் வீடு பக்கத்து ஊரு இதுக்கு மேல போனால் கடைசி பஸ் போயிடும்” என்றார்.
“சரிணா அதான் ஊருக்குள்ள வரைக்கும் வந்துட்டீங்களே நான் இதுக்கப்புறம் போய்கிறேன்” என்றாள் தான்வி.
அவர் தலை அசைத்தபடி நகரும் வேலையில் “அண்ணா” என அழைத்தாள்.
“சொல்லுங்கமா?” என திரும்பியவரிடம் “ஒரு பைக் ஏற்பாடு பண்ணிக்கோங்க அண்ணா அடுத்தடுத்த நாள் வேலை அதிகமா இருக்க வாய்ப்பு இருக்கு காரணம் தேடாதீங்க?” என்றாள்.
“வண்டி இருக்குமா கொஞ்சம் வேலையா இருக்கு இரண்டு நாள்ல கைக்கு வந்துரும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
ஊர் சற்று அமைதியாக தான் இருந்தது. மக்கள் அனைவரும் தங்களது இல்லத்தில் தஞ்சம் அடைந்து இருந்தனர். கிராமங்களில் பொதுவாகவே சீக்கிரம் உறங்கி அதிகாலை வேகமாக எழும் பழக்கம் கடைபிடிக்கப்படும். இங்கும் அதுபோலவே இருந்தது.
இருளான சூழல் கொஞ்சம் திகிழை கொடுத்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உதவியாள் கூறிய திசை பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.
கிராமத்திலிருந்து சற்று துாரம் தள்ளி அமைந்திருந்தது அந்த ஏரி. கும்மிருட்டில் துாரத்தில் தெரிந்த விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தவளின் கால்கள் அந்த விளக்குகள் அணைந்ததும் நின்றது.
இப்பொழுது அவள் கையில் இருந்த மொபைல் டார்ச்சை தவிர்த்து சுற்றி எங்கும் இருள் சூழ்ந்து இருக்க திடுக்கிட்டு போனாள்.
“என்ன இது இவ்வளவு இருட்டா இருக்கு? துணைக்கு கூட யாரும் இல்லையே என்னை மட்டும் தனியா அனுப்பிவிட்டு இருக்காங்க என்ன கம்பெனியோ” என புலம்பினாள்.
அதே நேரம் “இது உனக்கு கொடுக்கப்பட்ட வேலை நீ தான் செய்யனும் நீ கல்லு மண்ணா சுமக்க போற இங்க லோக்கல் ஆட்கள் காலையில வேலைக்கு வந்துருவாங்கனு சொல்லிட்டு தான போனாரு அந்த அண்ணா அப்புறமும் என்ன உனக்கு?” என்றது மனசாட்சி
முன்னோக்கி நடக்கவும் பயம் வந்தது. பேசாமல் திரும்பி கிராமத்திற்கு சென்று யார் வீட்டிலாவது தங்கி கொள்வோமா? என்று தோன்றியது.
தெரியாத ஊரில் திடீரென தோன்றிய பயத்தில் வந்த திசை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்ட ஒரு ஆணும் பெண்ணும் கதவை திறந்தனர். அவள் தன்னை பற்றிய விவரத்தை கூறிவிட்டு இன்று ஒருநாள் மட்டும் தங்கி கொள்ள அனுமதி கேட்டாள்.
ஆனால் அவர்கள் அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் கதவை பட்டென்று அடைத்துவிட்டனர்.
தான்விக்கு அவமானமாக இருந்தது. அதேநேரம் என்ன மனிதர்கள் இவர்கள் ராத்திரி நேரம் ஒரு பெண் உதவி என்று கேட்டு வந்திருக்க சிறிதும் மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்கிறார்களே என்று எண்ணினாள்.
பிறகு அடுத்தவீட்டை நெருங்க முன்பு நடந்த நிகழ்வால் மனது லேசாக தடுமாறியது. தயக்கத்தோடு கதவை தட்ட அவர்களோ வாய்விட்டு உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
அவமானத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். பயம் மேலோங்கிய போதும் அடுத்த வீட்டை நோக்கி செல்லவில்லை. சுற்றிலும் பார்த்தாள் எங்காவது மரத்தடியில் படுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணமும் வந்தது.
தான் ஒரு பெண் என்பதும் சேர்ந்தே நினைவுக்கு வர சிறு வயதில் இருந்து அனுபவித்த பாலியல் துன்பங்கள் நினைவுக்கு வந்தது. அசந்து துாங்கிய நேரம் எவரேனும் ஏதாவது செய்துவிடுவார்களோ? வீடுகளில் என்றால் துணைக்கு அவர்களது குடும்பத்து உறுப்பினர்கள் இருப்பார்கள் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பு குறைவு இப்பொழுது என்ன செய்வது என்று பயந்தவள் தைரியத்தை வளர்த்து கொண்டு
திரும்பி ஏரியை நோக்கியே செல்ல ஆரம்பித்தாள்.
ஆனால் தேவையில்லாத எண்ணங்கள் நினைவுக்கு வர யாரும் இல்லா ஏரிகரையில் தன்னை கற்பழிப்பு செய்துவிடுவார்களோ? என்னை என்னால் தற்காத்து கொள்ள முடியாவிடில்? எவரேனும் அம்முயற்சியை தொடர்ந்தால்? எப்படி தப்பிப்பது? என்று ஆயிரம் யோசனைகள் மூளைக்குள் தோன்றி படபடப்பை உண்டு பண்ணியது.
நடுக்கத்துடன் அடியெடுத்து வைத்தவளின் பின்னிருந்து ஒரு கை அவளது தோளை தீண்ட பதறி கத்தினாள். அதற்குள் அந்த உருவம் தீண்டிய கையாலே அவளது வாயை பொத்தியது.
பயம் நீங்கி கண்களை திறந்து எதிரில் பார்க்க கையில் இருந்த தீபந்தத்தின் வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகம் தெரிந்தது.
பாவடை தாவணியில் நீண்ட கூந்தல் முன்புறம் விழுந்து ஊசலாடிக் கொண்டிருக்க மிரட்சியுடன் தான்வியை பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த பெண்.
“சாரி சாரி பயப்படாதீங்க அக்கா”
ம் என தலை அசைத்தவள் நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டாள்.
“அக்கா நீங்க அவங்க வீட்டு கதவை தட்டுறதை பார்த்துட்டு தான் இருந்தேன். இங்க எல்லாரும் அப்படி தான் யாரும் வீட்டுக்குள்ள சேர்த்துக்கமாட்டாங்க” என்றாள் அந்த பெண்.
அவள் கூறுவது விசித்திரமாக இருக்கவும் புரியாது பார்த்தாள். அதையும் தாண்டி தன் முன் நின்றிருக்கும் பெண் யார் அவள் தன்னை ஏன் கண்காணிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அறிய வேண்டும் என்றது அவள் மனம்.
“யார் நீங்க?”
“நான் இந்த ஊர் பொண்ணு தான் அதோ அதான் என் வீடு” என்று துாரத்தில் தெரிந்த ஒரு பெரிய வீட்டை கை காட்டினாள். “நான் அங்க சும்மா மாடியில காத்து வாங்கிட்டு இருந்தப்போ நீங்க ஏரி பக்கம் தனியா போறத பார்த்தேன். அதான் துணைக்கு வரலாம்னு கீழ இறங்கி வந்தேன். அப்போ தான் நடந்ததை கவனிச்சேன்” என்றாள்.
“ஓ ரொம்ப தாங்க்ஸ்” என்றவள் அவளோடு இணைந்து நடந்தாள். அப்பொழுது அவளது ஒரு கையில் டார்ச் இருக்க மறுகையில் தீபந்தமும் இருந்தது. அது அவளுக்கு வித்தியாசமாகபட அவளிடம் அதுபற்றி கேட்டும்விட்டாள்.
சின்ன சிரிப்போடு அவள்புறம் திரும்பிய அந்த பெண் “என்ன அக்கா இங்க வேலை பார்க்க வந்திருக்கீங்க? விவரம் எல்லாம் கேட்டு வரமாட்டீங்களா- இது ரிசவர் பாரஸ்ட்கு பக்கத்துல இருக்க கிராமம் காட்டு விலங்குகள் நடமாட்டம் இருக்காது? சுத்தி பாருங்க வேலிகள் இருக்கு” என்றாள்.
அவற்றை கவனித்த பிறகு “காட்டு விலங்குகள்னா எந்த மாதிரி?” எனக் கேட்டாள்.
“யானை,புலி, காட்டெருமை அப்புறம்” என்ன சொல்லிக் கொண்டே போனவள் அவளது அதிர்ந்த முகம் கண்டு பேச்சை நிறுத்தினாள்.
“என்னாச்சு அக்கா?”
“இல்ல கொஞ்சம் பயமா இருக்கு” என வெளிப்படையாக ஒத்துக் கொண்டாள். அவளது பயந்த முகம் கண்டு இளகியவள் “அக்கா எப்பவும் வரும்னு இல்ல பயப்படாதீங்க” என்றாள். அவளது முகத்தில் பயம் தெரியாதது கண்டு சோர்வுற்றவள் “என்னோட வீட்டுக்கு போனலும் இதே நிலைமை தான் அக்கா” என்றாள்.
பின் யோசனை வந்தவளாக “அக்கா வாங்க” என்று அழைத்துச் சென்றவள் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு “இங்கையே இருங்க நீங்க தங்குறதுக்கு ஏற்பாடு பண்றேன்” என அகன்றாள்.
இரண்டு எட்டு வைத்தவளின் கைகளை பற்றியள் வெளிறிய முகத்துடன் அவளை பார்க்க “இந்த தீப்பந்தத்தை கையில வச்சுக்கங்க” என்றவள் வேகமாக வீடு நோக்கி ஓடினாள்.
படபடக்கும் இதயத்துடன் நின்று கொண்டிருந்த தான்விக்கு இந்த இரவு தான் வாழ்நாளுக்கும் மறக்காது என்பது போல் இருந்தது.
சில நிமிடங்களில் திரும்பி வந்த பெண்ணவள் அவளது கைபற்றி தாங்கள் வந்த திசைக்கு எதிர்புறம் இருந்த பாதையில் நடந்தாள்.
அங்கே ஒரு பெரிய மணிக்கூண்டு அமைந்திருக்க அதன் வாயிற்கதவை திறந்தாள். உள்ளே அழைத்து சென்றவள் விளக்குகளை ஒளிக்கவிட்டாள்.
“இன்னைக்கு ராத்திரி இங்க தங்கிக்கங்க கதவை உள்பக்கமா தாழ் போட்டுக்கங்க நான் காலையில எல்லாரும் எழுந்துகிறதுக்கு முன்னாடி இங்க வந்து உங்கள ஏரிக்கு கூட்டிட்டு போறேன் நான் உங்களுக்கு உதவி பண்றது தெரிஞ்ச என்னை சும்மா விடமாட்டாங்க நீங்க இங்க பாதுகாப்பா இருக்கலாம் ஆனா துாக்கம் சரியா இருக்காது காலையில சீக்கரம் வந்துருவேன்” என்றவள் அங்கிருந்த கிளம்பினாள்.
“ஏய் பொண்ணே உன் பேரு என்ன?” என அவள் கேட்பதற்குள் ஓடிவிட்டாள் அவள்.
திகழ்முகிலன் தன் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “டேய் பழனி தான போற காலையில போக கூடாது? ஏன்டா இப்படி சாமத்துல கிளம்பனும்னு அடம்பிடிக்குற” என அவன் தாய் கத்திக் கொண்டிருந்தாள்.
“ஆமாடா ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியா காட்டு விலங்கு நடமாடும்டா சொன்னா கேளுடா” என்றார் வேலன்.
“இல்லப்பா திண்டுக்கல்ல ஒரு சின்ன வேலை இருக்கு நைட் அங்க போய்டு காலையில தான் பழனி போறேன்” என்றான் திகழ்
அதன்பிறகே சமாதானம் ஆன அவனது பெற்றோர் அவனை வழி அனுப்பி வைக்க நாழிகை குறிஞ்சியை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.
இங்கே தான்வியோ விடியலுக்காக காத்திருந்தாள். பயண சோர்வின் காரணமாக உறக்கம் அவளை தழுவ கண் அயர்ந்தாள். தீடிரென மணிக்கூண்டின் பின்புறம் இருந்து புலியின் உருமல் சத்தம் அவளை துாக்கத்தில் இருந்து எழுப்பியது. கண் திறந்தவளின் முன் ஏதோ நிழல் ஆட திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.
தொடரும்..