அத்தியாயம் - 3
துாக்கம் முழுதாக கலைந்துவிட எழுந்து அமர்ந்தவளுக்கு தன்னை நினைத்தே கேவலமாக இருந்தது.
அந்த கட்டிடத்தின் வெளிச்சத்தில் தெரிந்த தன் நிழலை பார்த்து தான் பயந்திருந்தாள். தன்னை விட்டுசென்ற பெண் வருவாளா இல்லையா? என தெரியாமல் வாசல்புறம் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
அதன்பிறகு புலியின் உறுமல் சத்தம் ஏதும் இல்லாததால் பயம் சற்று தெளிந்து போனது.
சில மணி நேரத்தில் வாசல் கதவு தட்டப்படவும் யோசனையோடு சென்று கதவின் அருகே நின்றாள். கதவை திறக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவளை “நான் தான் அக்கா கதவை திறங்க” என்ற அந்த பெண்ணின் குரல் தெளிவுபடுத்தியது.
உடனடியாக கதவை திறந்தாள் தான்வி. வெளியே நின்றிருந்த பெண் “சீக்கிரம் வாங்க போகலாம் அக்கா” என்றாள்.
தான்வி தங்கியிருந்த அறையின் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்ட அப்பெண் அவளை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
லேசாக விடிய ஆரம்பித்திருந்தது. சிலர் எழுந்து தங்களது வேலைகளை செய்து கொண்டிருக்க தாமதமாக வந்த தன்னையே நொந்து கொண்டவள் தான்வியை வேறுபுறம் அழைத்து சென்றாள்.
அவள் பாதை மாறி கூட்டிப் போனதும் “நேத்து அந்த பக்கமா தான போனோம் எனக்கு நல்லா நினைவு இருக்கு” என கேள்வி எழுப்பினாள்.
“இல்ல அக்கா அங்க ஆட்கள் நடமாட ஆரம்பிச்சுட்டாங்க நான் உதவி பண்றது மத்தவங்களுக்கு தெரிய கூடாதுனு நேத்தே சொன்னேன்ல அதான் இந்த பக்கமா போறோம் கொஞ்சம் சுத்து தான் பொறுத்துக்கோங்க”
ம் என்றவள் “நல்ல வேலையில வந்து மாட்டிக்கிட்டேன் இங்க கிளம்பும் போது இந்த மாதிரி பிரச்சனை இருக்குனு எதுவுமே சொல்லல அட்லீஸ்ட் நேத்து வந்த அந்த அண்ணன் ஆவது சொல்லி இருக்கலாம்” என்றாள்
“அட போங்க அக்கா அவரே ராத்திரி அந்த மரவீட்டுக்கு வர பயந்து போய் தான் வேகவேகமா ஓடிட்டாரு”
“என்ன சொல்ற? ஆனால் கடைசி பஸ் போய்டும்னு தான என்கிட்ட சொன்னாரு”
“அதை நம்ப வேற செய்றீங்களா?” என்றவள் முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
“ஆமா இங்க எல்லாரும் ஏன் என்னை நைட் வீட்டுல சேர்த்துக்கல? எல்லாமே வித்தியாசமா இருக்கு”
“அக்கா தப்பா எடுத்துக்காதீங்க இங்க நீங்க எந்த வேலைக்கு வந்தீங்களோ அந்த வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்புற வழிய பாருங்க வேற எதையும் கேட்காதீங்க” என மூஞ்சியில் அடித்தது போல் பட்டென்று கூறினாள்.
அதில் தான்வியின் முகம் வாடிவிட மெல்ல அவள் பின்னே நடந்தாள். பத்து நிமிட நடைபயணத்திற்கு பிறகு ஏரியை வந்தடைந்தனர்.
“சரி இனி நீங்க பார்த்துக்குவீங்கல நான் கிளம்புறேன்”
“ஏய் என்ன அப்படியே விட்டுட்டு போற”
“வேற என்ன செய்யனும்?”
“இங்க ஆட்கள் யாரும் வரமாட்டாங்களா ரொம்ப அமைதியா இருக்கு”
“இனிமே தான் வேலை செய்ற ஆட்கள் வருவாங்க அங்க பாருங்க ஏற்கனவே பொருள் எல்லாம் இறக்கிட்டாங்க இரண்டு வண்டி கூட நிக்குது பாருங்க”
அவள் காட்டிய திசையை பார்த்த பின் அருகில் இருந்த ஏரியோடு கூடிய மரவீடுகளையும் கவனித்தாள். அதிகாலை நேரம் ஏரியும் சூரிய உதயமும் மலை பகுதியும் மரவீடும் என பேரழகாக இருந்தது. கண்கள் பரந்திருந்த அழகைவிட்டு நகர மறுத்தது.
எங்கோ யானை பிளிரும் சத்தம் கேட்கவும் மிரண்டு திரும்பினாள் அழகு இருக்குற இடத்துல ஆபத்தும் சேர்ந்தே இருக்கும்னு சொல்றது சரிதான் போல என எண்ணியவள் எதிரில் இருந்தவளை பார்த்தாள்.
“சரி சரி வேலைக்கு ஆட்கள் வரும் வரைக்கும் இங்கையே இருக்கேன்”
“ரொம்ப தாங்க்ஸ் ஆமா உன் பெயர் என்ன?”
“பூமிகா”
“நைஸ் நேம்”
புன்னகைத்தவள் அவளுடன் அங்கிருந்த கரையோர வீடுகளில் ஒன்றை சுத்தம் செய்து தான்வி தங்குவதற்கு தயார் செய்தனர்.
பின் தான்வி பிரஸ் ஆகி வேறு உடை மாற்றி தயாரானாள். பின் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு நபர்கள் அவ்விடம் நோக்கி வந்தனர்
“மேடம் அங்க கூட்டம் கூட்டி இருக்காங்க உங்களை அழைச்சுட்டு வரச் சொன்னாங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
“ஐயோ நீ எனக்கு ஹெல்ப் பண்ணியது தெரிஞ்சதோ போச்சு உன்னை எதாவது சொல்வாங்களா?”
தரையை பார்த்து யோசித்தவள் “வாங்க பாத்துக்கலாம்” என அவளையும் அழைத்துக் கொண்டு கூட்டம் கூடி இருந்த இடத்திற்கு சென்றனர்.
மொத்த கிராமமும் அங்கே தான் கூடி இருந்தது. விவசாய வேலைக்கு சென்ற ஆட்கள் கூட அனைத்தையும் பாதியில் விட்டுவிட்டு அங்கு கூடியிருந்தனர்
இருவரும் கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைய அவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான் ஒருவன்.
ஃபாரஸ்ட் ரேஞ்சர்கான யூனிஃபார்ம் அணிந்து கம்பீரமாக நின்றிருந்த அவனின் பின்புற தோற்றமே வசீகரிப்பதாகவும் அதே நேரம் ஆளுமையாகவும் இருந்தது.
இவர்களை தொடர்ந்து இன்னும் சிலரும் கிராமத்தின் வேறு வேறு பக்கம் இருந்து ஓடிவந்தனர். ஒருவன் அந்த ரேஞ்சரின் காதில் ஏதோ சொல்ல தலை அசைத்தவன் குரலை செறுமிக்கொண்டு பேச தாயரானான்.
“எல்லாரும் நல்லா கவனிங்க நான் புதுசா வந்துருக்கிற ஃபாரஸ்ட் ரேஞ்சர். இதுவரைக்கும் நீங்க காட்டுக்குள்ள அரசாங்கத்துக்கு தெரியாம சுதந்திரமா சுத்திக்கிட்டு இருந்தாலும் இனிமே அப்படி இருக்க முடியாது அதை நல்லா நியாபகம் வச்சுக்கோங்க இதுக்கு முன்னாடி இருந்த ஆபிசர் எப்படினு எனக்கு தெரியாது ஆனால் இனிமே ஏரியோட மேற்கு பக்கம் போறதா இருந்தா என்னோட அனுமதி இல்லாம போக கூடாது” என கூட்டத்தை பார்த்து கூறியவன் “மீறி போனா…. போக கூடாது அவ்வளவு தான் புரிஞ்சதா புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கூட்டத்தில் நடுநாயகமாக நாற்காலியில் அமர்ந்திருந்த நபரை பார்த்து அழுத்தி கூறினான்.
அந்த நபர் அவனை அலட்சிய பார்வை பார்த்தார். அந்த பார்வை அவனை பாதிக்கவும் இல்லை கூட்டத்தில் மீண்டும் பார்வையை பதிக்க அவன் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள் தான்வி.
அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே இருக்க அவனுடன் பணிசெய்யும் மற்றொரு அதிகாரி “சார் அந்த ஏரிகரை வீடுகள் பத்தி சொன்னேன்ல” என இழுக்க சரி என்றவன் அந்த பொண்ணை மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவங்களை அனுப்பி வைங்க என்றான்.
அவனும் கூட்டத்தை பார்த்து கலைந்து செல்லும்படி கூறினான். பூமிகாவின் அருகே வந்த அவள் தாய் அவளது தலையிலே தட்டி “எங்கடி போய் தொலைஞ்ச வீடு தங்கமாட்டியா?” என திட்டியபடி அவளை இழுத்து சென்றார்
தான்வியின் முன்னே வந்த ரேஞ்சர் ஆபிசர் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான். தன் கைபேசியில் ஒரு வீடியோ ஒன்றை ஒளிபரப்பினான். அது காட்டுவழியில் மிருகங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் தான்வியும் பூமிகாவும் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
“வந்த முதல்நாளே அனுமதி இல்லாத பாதையில நடந்து போயிருக்கீங்க தப்பு இல்ல”
“சாரி எனக்கு இதுபத்தி தெரியாது. அந்த பொண்ணு தான் கூட்டிட்டு போனாள்” என்றவள் நேற்று நடந்த விஷயங்களை விளக்கி கூறினாள்.
நக்கல் சிரிப்பு சிரித்தவன் “என்ன மேடம் நல்லா கதை சொல்றீங்க?” என்றான்.
அவள் மறுத்து சொல்ல முற்படும் பொழுது “போதும் உங்களோட பொய்யான கதைகள் இனிமே கவனமா நடந்துக்கோங்க அடுத்த முறை இந்த மாதிரி கூப்பிட்டு வச்சு பேசமாட்டேன்” என்றவன் அவளை விலக்கி நடந்து சென்றான்.
“இவ்வளவு பெரிய பொறுப்போட இங்க வந்துட்டு இடத்தை பத்தி தெரிஞ்சுக்காம வந்தேனு சொல்ல வேண்டியது என்ன நம்பிக்கையில இந்த மாதிரி ஆட்களை அந்த வேலைக்கு ஆஃபர் பண்ணுனாங்களோ? யூஸ்லெஸ்” என முணுமுணுத்தபடி சென்றான்.
அவனது முணுமுணுப்பு சத்தம் அவளது செவியில் தெளிவாக கேட்டுவிட சென்ற அவனின் முதுகை முறைத்துப் பார்த்தாள்.
கிராமத்தைவிட்டு தான் தங்கியிருந்த இடத்தை நோக்கி நடந்தவனின் கைபேசி ஒளித்தது. யார் என்று எடுத்து பார்த்தவனின் முகம் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து புன்னகையை ஏற்றுக் கொண்டது
“ஹலோ சொல்லுடா சிராஜ்”
“டேய் திகழ் யூனிஃபார்ம்ல செம்மையா இருக்கடா”
“உனக்கு எப்படிடா தெரியும்?” என கேட்டான் திகழ்முகிலன்
“அது நீ உங்க அம்மாக்கு அனுப்பிய போட்டோவ பாப்பா என் நம்பருக்கு அனுப்பிவிட்டிருந்தாள் இப்போ தான் பார்த்தேன் உடனே கூப்பிட்டுட்டேன்”
“ரொம்ப தாங்க்ஸ்டா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் கூப்பிடவா?”
“சரிடா ஒன்னும் பிரச்சனை இல்ல அப்புறமா நான் பேசுறேன்” என்று வைத்துவிட்டான் சிராஜ்
இங்கே சீரமைப்பு வேலைகளை துவங்கி இருந்தனர். தான்வி காலையில் திகழ் அவளிடம் பேசியதை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.
நேற்று நடந்த விஷயங்களில் இருந்து இன்று இந்த நொடி வரை நடந்த விஷயங்கள் வரை அனைத்தும் அவளை பெரிதும் பாதித்தது. அவன் கூறிய வார்த்தைகள் அவளது தன்மானத்தை தாக்கியது.
“காட்டு மிருகத்தால செத்தாலும் பரவா இல்ல தைரியமா இருக்கனும் ஒத்துகிட்டு வந்த வேலைய நல்லபடியா செஞ்சுமுடிச்சு கொடுத்துட்டு தான் இங்க இருந்து போகனும் அவனுக்கு திமிர் ஜாஸ்தி என்னை பார்த்து அப்படி சொல்லிட்டான்ல நான் யாருனு காட்டுறேன்” என்றவள் மேற்கொண்டு வேலையை பார்த்திட ஆரம்பித்தாள்.
அன்று முழுவதும் வேலைகள் அவளை ஆக்கிரமித்து கொண்டது. இரவு அங்கே தனியே தங்குவது என ஏற்பாடாக கொஞ்சம் பயமாக தான் இருந்தது.
இரவு துணைக்கு ஆட்கள் தங்கி கொள்ள கேட்கலாம் என்றால் அனைவரும் வேலை முடிந்து புறப்படுவதிலே கவனமாக இருந்தனர்.
மாலை வேலையில் ஒரு மனிதன் ஏரியின் ஒரு கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தன். பார்ப்பதற்கு அவனது தோரணையும் சரியாக தோன்றவில்லை.
அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கிராமவாசிகள் அனைவருக்கும் இதுபோன்ற செயல்கள் சாதரணமானவை என தோன்றியது. ஆனால் அவளுக்கு உறுத்திய ஒரு விஷயம் என்றால் அவன் கடைசி வரை ஒரு மீன் கூட பிடிக்கவில்லை என்பது மட்டும் தான்.
அவன் புறப்பட்டதும் அவள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் அனைத்து பக்கமும் கதவு சன்னல் தாழ் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துவிட்டு இரவு உணவிற்கான சமையலை செய்திட ஆரம்பித்தாள்
பகலிலே இன்டக்சன் கேஸ் டவ் மற்றும் பத்திரங்கள் வாங்கி கொடுத்துவிட்டு சென்றனர். காய்கறிகளும் இதர பொருட்களும் கிளம்பும் வேளையில் வாங்கி வந்திருந்தமையால் அவளுக்கு சிரமம் இல்லாமல் போனது.
இரவு விளக்கை ஒளிரவிட்டவள் மாலை நடந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தாள். பூமிகா வந்திருந்தாள்.
“இன்னைக்கும் அந்த கடிகார கூண்டு அறையிலையே தங்குறீங்களா அக்கா?”
“வேண்டாம் பூமி நாங்க இங்கையே தங்கிக்குறேன்”
“ஆனா அக்கா உங்களுக்கு பயமா இருக்குனு சொன்னீங்களே?”
“அதுக்காக என்ன செய்ய முடியும்? சூழ்நிலைக்கு பொருந்தி போக வேண்டாமா இல்லனா பிழப்பை எப்படி ஓட்டுறது?”
அவள் தயங்கி கொண்ட இருக்க தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள். பூமிகாவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.
இரவு விளக்குகளை அணைத்துவிட்டு தான் தூங்கும் அறைக்கு வந்தாள். கண்களை மூடி உறங்க முயற்சித்தாள். உறக்கம் வர மறுத்தது.
தனிமை பயத்தை அளித்தது. அப்பொழுது கதவு படபடவென தட்டப்பட துள்ளி விழுந்தாள்
தொடரும்