அத்தியாயம் - 6
கடிகார கூண்டின் வெளியே வந்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்த தான்வியையும் கண்ணோரம் படர்ந்திருந்த நீரை துடைத்தபடி இருந்த பூமிகாவையும் ஆராய்ச்சியுடன் கூடிய அனல் பார்வை பார்த்து நின்றான் திகழ்முகிலன்.
“இந்த ராத்திரி நேரம் இரண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க?”
“அக்கா தான் அவங்க பொருள் எதோ இங்க விட்டுட்டு போய்ட்டேன் எடுக்கனும்னு சொன்னாங்க அதான் வந்தோம்” என கரகரப்பான குரலில் சொன்னாள் பூமிகா
“அதுக்கு இந்த ராத்திரி நேரம் தான் வரனுமா? பகல் நேரத்துல வந்து எடுத்துருக்கலாமே?”
“சார் கிராமத்து வழக்கம் தான் உங்களுக்கு தெரியுமே?”
சலிப்பாக கண்களை சுழற்றியவன் “சரி நீங்க தேடியது கிடைச்சதா மேடம்? என்ன பொருள் அது காட்டுங்க” என்றான்.
“அது என் பர்சனல் உங்ககிட்ட எதுக்கு அதை காட்டனும்?”
திகழ்முகிலனுக்கு தான்வியின் பதிலில் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. கோப பெருமூச்சு அதிகமாகி புஜங்கள் மேல் எழுந்தது.
அவனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கடிகார கூண்டின் அறையை பூட்டி சாவியை பூமிகாவின் கையில் திணித்தவள் “வா பூமி போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
பூமிகா தான் திகழை திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்தாள்.
பூமிகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தான்வி.
சிறிது தூரம் சென்ற பின் அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள்.
அவளை முறைத்தபடி திகழ் வந்து கொண்டிருந்தான்.
அவனது வாயோ “பர்ஸ்னல்லாம் பர்ஸ்னல்” என புலம்பியபடி வந்தது.
தான்வி தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்தியபின் குடிலின் அருகே சென்றான் திகழ்.
வெகுநேரம் ஆகியும் அவனுள் எழுந்த கோபம் மட்டுப்பட மறுத்தது. தன்னை தானே புதிதாக உணர்ந்தான். தனது புதிய குணாதிசயம் தோன்ற காரணமான தான்வியின் மீது தான் மென்மேலும் கோபம் பெருகியது.
அறைக்குள் அடைந்த தான்வியின் எண்ண அலைகள் எல்லாம் விதார்த் ஆதிரை என்ற பெயரை சுற்றியே இருந்தது.
மறுநாள் முதல் வேலையாக பூமிகாவை சந்தித்தாள்.
“என்ன அக்கா விடிஞ்சும் விடிய முன்னாடி என்ன பார்க்க வந்திருக்கீங்க மறுபடியும் காடிகார கூண்டுக்கு போகனுமா” என கேட்டாள் பூமிகா.
அவளது கண்கள் சிவந்து கன்னங்கள் வீங்கி போயிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டிருந்திருக்கிறாள் என்பது தான்விக்கு நன்றாக புரிந்தது.
“அழுதியா பூமி?”
அவள் மவுனம் காக்கவும் “எனக்கு உன் அண்ணனை பத்தி சொல்லேன்?” என வினவினாள்.
“எதுக்கு கேக்குறீங்க?”
“சும்மா தெரிஞ்சுக்க தான்”
“அண்ணன் சுரங்கவியல் பொறியியல் மேல்படிப்பு பண்ணிட்டு இருந்த சமையம் ஒருமுறை லீவ்னு சொல்லி ஊருக்கு வந்துச்சு”
“மைனீங் இன்ஜீனியரிங்” என மனதுக்குள் பிரம்மிப்பு அடைந்த தான்வி “என்ன சொல்ற பூமி?” என்றாள்.
“ஆமா அக்கா எங்க ஊர்லையே படிச்ச ஒரே ஆள் என் அண்ணன் தான். வெளி உலகம் தெரியனும்னு சொல்லி என் அப்பா தான் அவனை வெளியூர் அனுப்பி படிக்கவச்சாரு”
“ஓ.. அப்புறம்?”
“ஊருக்கு வந்த போது தான் என் அண்ணனுக்கும் ஆதிரைக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு”
“ஆதிரை யாருனு நீ சொல்லவே இல்லையே”
“இப்போ நீங்க பார்த்துட்டு இருக்குற வேலைய அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே செய்றதுக்காக வந்தவங்க”
“எனக்கு புரியல பூமி என்ன சொல்ற?”
அதன்பிறகே தான் உளறிவிட்டதை உணர்ந்தாள் பூமிகா.
இதன்பிறகு மறைத்தும் பயன் இல்லை என்பதை புரிந்துக் கொண்டவள் நடந்ததை பற்றி விளக்கிட ஆரம்பித்தாள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதே ஏரிகரை வீட்டின் சீரமைப்பு பணிக்காக நாழிகை குறிஞ்சி வந்திருந்தாள் ஆதிரை.
குறும்பு தனமும் வெகுளி சிரிப்பும் அடங்கிய அழகிய பட்டாம்பூச்சி போல் துருதுருவென இருப்பாள்.
ஒருமுறை வேலையை முடித்து அனைவரும் கிளம்பிய பின் வெளியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவளுக்கு துணையாக மகேந்திரன் என்பவன் அருகில் இருந்த மற்றொரு மரவீட்டில் தங்கியிருந்தான்.
அவன் வேறு யாரும் அல்ல தினமும் மீன்பிடிக்க வருவது போல் தான்வியை பார்த்துக் கொண்டிருப்பானே ஊர் தலைவரின் உதவியாள் அவன் தான்.
மீன்களை பிடித்து ஆதிரைக்காகவும் தனக்காகவும் சமைத்து கொண்டிருந்தான் அவன்.
ஆதிரை அவனை மாகி என்று அழைப்பது வழக்கம்.
“மாகி எவ்வளவு நேரம் பசிக்குது சீக்கிரம் எடுத்துட்டு வாங்க” என அவனது வீட்டை நோக்கி கத்தினாள் ஆதிரை.
“கொஞ்சம் பொறுங்க அம்மா முடிஞ்சது” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான் அவன்.
சலித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரை அப்பொழுது ஒரு ராட்சத அணில் காட்டில் இருந்து தப்பி ஏரிகரை பக்கம் வந்திருந்தது.
அதை பார்த்து அதிசயத்தவள் தனது கைபேசியில் புகைபடம் எடுக்க ஆரம்பித்தாள்.
அது இவளை பார்த்து மிரண்டு ஓட இவளும் பின்தொடர்ந்து ஓடினாள்.
ஒருகட்டத்தில் அது ஏரியின் மேற்கு திசை நோக்கி ஓட இவளும் பின்னே சென்றாள்.
ஒரு எல்லைக்கு மேல் செல்ல விடாமல் அவளை பிடித்து இழுத்தது ஒரு கரம்.
நிமிர்ந்து கரங்களுக்கு சொந்தகாரனை பார்க்க அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்
“சாகனும்னு ஆசை இருக்குறவங்க தான் ஏரியோட மேற்கு பகுதிய நோக்கி போவாங்க உனக்கு அப்படி ஒரு நிலை வர என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?” என வினவினான் அவன்.
அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்தாள் ஆதிரை.
“சாரி நான் கவனிக்காம.. அது அந்த அணில்ல துரத்திட்டு வந்தேன்”
“நீங்க இன்னும் எனக்கு தாங்க்ஸ் சொல்லவே இல்லை”
“ஓ ஐ ஆம் சாரி அன்ட் தாங்க்யூ” என்றவள் மரவீட்டின் திசையை தொடர்ந்தாள்.
“ஹலோ மிஸ் ஆள் புதுசா இருக்கீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா?”
“வுட் ஹவுஸ் ரினோவேஷன்காக வந்து இருக்கேன்”
“ஓ.. நான் விதார்த் இந்த ஊரு தான்”
தலையை அசைத்தபடி அங்கிருந்து சென்றுவிட்டாள் ஆதிரை.
“என்ன பொண்ணு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இருக்கா? நான் பெயர் சொல்லி அறிமுகம் ஆகி இருக்கேன் அவளோட பேரையும் எங்கிட்ட சொல்லலாமே, ஓவரா மெட்டு பண்றாளே” என்று புலம்பியபடி வீட்டிற்கு சென்றான்.
ஊர் தலைவர் மகன் வெகுநாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்திருப்பதால் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பாவம் பூமிகாவிற்கு தான் வேலை செய்து எலும்புகள் எல்லாம் கழண்டு விழுவது போல் இருந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் பூமிகாவின் மூலம் விதார்த்தும் ஆதிரையும் நண்பர்களாக மாறி போயினர்.
நட்பு மெல்ல மெல்ல காதலாக மாற ஆரம்பித்தது. அதனை இருவரும் வெளிப்படையாக பகிர்ந்துக் கொண்டனர்.
அவர்களது காதல் தினமும் வளர்ந்து விருச்சமாக ஆரம்பித்தது. கடிகார கூண்டு அவர்களது காதல் சின்னமாகி போனது.
ஊர்தலைவருக்கு விஷயம் தெரியவர மறுப்பு ஏதும் கூறாமல் ஒப்புக் கொண்டார். ஆனால் அவனது படிப்பு முடியும் வரை கவனமாக இருத்தல் வேண்டும் படிப்பில் சறுக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என விதார்த்திடம் கேட்டுக் கொண்டார்.
அவனும் ஒப்புக்கொள்ள தினமும் பரிட்ச்சைக்கு படிப்பதும் ஆதிரையுடன் கதை அளப்பதும் என இப்படியாக விடுமுறை முடிந்துவிட அன்று ஊருக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தான் விதார்த். செல்லும் முன் ஆதிரையிடம் வந்தவன் செய்தியை சொல்ல அவளோ கோபம் அடைந்தாள்.
“ஏன் என்கிட்ட முன்னாடியே இதுபத்தி சொல்ல நீ?”
“முன்னாடியே சொல்லியிருந்த இருக்குற நேரம் சந்தோசமா இருக்குறதை விட்டுட்டு மூஞ்சை தூக்கிவச்சுட்டுல இருந்து இருப்ப”
“ஆனாலும் நீ சொல்லி இருக்கலாம்” என்று அழுதாள். அவளது கண்ணீரை துடைத்தவன் “இன்னும் பதினைஞ்சு நாள் தான் எக்ஸாம் முடிஞ்சதும் ஓடிவந்துடுவேன் ஓகே” என்றான்.
இருமனதாக தலையை அசைத்தாள் ஆதிரை.
“சரி உன்னோட வேலை முடிய இன்னும் எத்தனை நாள் ஆகும்?”
“கொஞ்சம் மெட்டீரியல்ஸ் வர வேண்டியது இருக்கு. அது இங்க வர எப்படியும் இரண்டு வாரம் ஆகும் அதுக்குபிறகுனு பார்த்தால் எப்படியும் இரண்டுல இருந்து இரண்டரை மாதம் ஆகும்.”
“நீ உன்வீட்டுல எதுவும் நம்மளை பத்தி சொல்லி வச்சு இருக்கீயா?”
“இல்ல”
“சொல்ல வேண்டாம் நான் எக்ஸாம் முடிஞ்சு ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் நானே நேரடியா உன் வீட்டாளுங்ககிட்ட பேசுறேன் சரியா?”
“சரி நீயே வந்து சொல்லு” என்றவள் அவன் கைகோர்த்து அவனது வீட்டிற்கு சென்றாள். பரிட்ச்சை எழுத சென்றவனுக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.
நாட்கள் மெல்ல கடக்க ஆரம்பித்தது. விதார்த் ஊருக்கு வருவதாக கூறிய நாளும் வந்தது. ஆதிரை அன்றைய நாள் முழுவதும் படபடப்புடனும் ஒருவித உற்சாகத்துடனும் சுற்றிக் கொண்டிருந்தாள்.
மகேந்திரன் அவளது நிலையை சொல்லி கேலி செய்து கொண்டே இருந்தார்.
இரவு வரை அவன் வரவே இல்லை. அவனது எண்ணிற்கு அழைத்து பேசிய பொழுது தந்தை அனுப்பிய கார் வரும் வழியில் ரிப்பர் ஆகிவிட்டது சரி செய்துவிட்டு இப்பொழுது தான் மீண்டும் கிளம்பி உள்ளேன் என பதில் அளித்தான்.
அவன் சொன்ன நேரத்தை பார்த்த பொழுது எப்படியும் இரவு வெகுநேரம் சென்ற பிறகு தான் வருவான் காலை தான் அவனை சந்திக்க இயலும் என்பதை புரிந்துக் கொண்டாள்.
மனம் ஏனோ மிகவும் சோர்வாகவும் கவலையாகவும் மாறிப் போனது. தனது காத்திருப்பிறகு கிடைத்த ஏமாற்றத்தில் அவளது கண்களில் கண்ணீர் உற்பத்தி ஆனது.
இரவு நேரம் திடீரென கதவு தட்டப்படவும் பயத்தில் துள்ளி எழுந்தாள் ஆதிரை. டேபில் மீதிருந்த கைபேசியை எடுத்து மகேந்திரனின் எண்ணிற்கு அழைத்தாள்.
மறுபுறம் அழைப்பு ஏற்கப்படவும் “மாகி யாரோ கதவை தட்டுறாங்க யாருனு கொஞ்சம் பாருங்களேன்” என்றாள்.
அவரும் வெளியே பார்த்துவிட்டு புன்னகையுடன் “விதார்த் தம்பி தான் வந்து இருக்காரு அம்மா” என்றார்.
பயம் சட்டென மகிழ்ச்சியாக மாறவும் அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக எழுந்து கதவை நோக்கி ஓடினாள்.
வெளியே சர்ப்ரைஸ் என்றபடி விதார்த் நின்றிருந்தான். அவனை அணைத்துக் கொள்ள சென்றவள் பின் தயங்கி நின்றாள். நொடியில் முகபாவனையை மாற்றிக் கொண்டவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு சந்தோசத்தில் துள்ளி குதித்தாள்.
“உள்ள கூப்பிடுவீங்களா இல்லையா மேடம்?”
“ஐயோ சாரி நான் மறந்தே போய்ட்டேன்” என்றவள் அவனை உள்ளே அழைத்து அமர வைத்து டீ போட்டு கொண்டுவந்து கொடுத்தாள்.
அதை பருகியபடி அவளை பார்த்த விதார்த் “சீக்கிரம் உங்க வீட்டாளுங்ககிட்ட பேசி கல்யாண தேதிய குறிக்கனும்” என்றான்.
“என்ன திடீர்னு கல்யாணம் வரைக்கும்? ”
“பின்ன கட்டிபிடிக்க கூட கல்யாணம் ஆகனும்னு கன்டிசன் போட்டு வச்சிருக்கியே”
அவள் வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள். பின் சிறிது நேரம் அவளோடு உரையாடிவிட்டு கிளம்ப ஆயத்தமானான் விதார்த்.
“ஏய் ரொம்ப நேரமாகிருச்சுபா எதுவும் காட்டுவிலங்குகள் வந்துச்சுனா பிரச்சனை காலையில போ”
“அப்போ காலையில போன மட்டும் வராதா?” எனக் கேட்டு சிரித்தவன் அவளது முறைப்பில் சிரிப்பை அடக்கி கொண்டு “இங்க வரை காட்டு விலங்குகள் வராதுனு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல மலைக்கு மேல நிறைய நீர் நிலைகள் இருக்கு சோ எந்த காட்டுவிலங்கும் நீருக்காக இந்த ஏரிக்கரைக்கு வர வாய்ப்பே இல்லை.எதாவது ஒன்னு இரண்டு வழி மாறி வந்தால் தான் உண்டு அன்னைக்கு ராட்சத அணில் வந்ததே அது மாதிரி மத்தபடி வாய்ப்பில்லை சோ நீ பயப்படாத” என்றவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு மரவீட்டை தாண்டி சென்றவன் பின் திரும்பி பார்த்து வாசலில் நின்றிருந்தவளிடம் “அப்புறம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே வீட்டுல நாம தங்குறது தப்பு கிடையாதா மேடம்” என்று கத்திக் கேட்டான். காற்றில் கைகளை வீசி அவனை அடிப்பது போல் பாவனை செய்த ஆதிரை புன்னகையுடன் கைகளின் சைகையை மாற்றி டாட்டா காட்டினாள்.
அவனும் இவளுக்கு கை அசைத்துவிட்டு வீட்டிற்கு சென்றான். மறுநாள் விதார்த்தின் தந்தை அவனை ஏரியின் மேற்கு புறம் இருந்த மலை பக்கம் கூட்டி போனார்.
“அப்பா இந்த பக்கம் ஆபத்துனு சின்ன வயசுல இருந்து சொல்லுவீங்க இப்போ எதுக்காக அங்க கூட்டிட்டு போறீங்க”
“அதெல்லாம் கட்டுக்கதைடா மகனே. காட்டு விலங்குகள் நடமாட்டம் மலைக்கு மேல இன்னும் பல மைல்க்கு அந்தபக்கம் தான் வாய்ப்பு இருக்கு இதெல்லாம் அப்பா பரப்புனா புரளிடா” என்றான்.
“ஆனால் எதுக்குபா?”
“சொல்றேன் வா” என்றவர் அவனை சற்று தொலைவு சென்றபின் இருந்த காரின் மூலம் மலையின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தொடரும்..