• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழல் ஆனது ஏனோ? - 7

MK27

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
13
3
3
thanjavur

அத்தியாயம் - 7

தன் முன் கண்ட காட்சியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினான் விதார்த். தந்தையின் புறம் திரும்பியவன் “அப்பா என்ன நடக்குது இங்க” என குழப்பமாக கேட்டான்.

“சுத்தி போய் பாருடா உனக்கே எல்லாம் புரியும்” என்றவர் அங்கிருந்த ஒரு வேலை ஆளை அழைத்து பேச ஆரம்பித்தார்.

இவன் மனதில் எழுந்த பாரத்துடன் சுற்றிலும் பார்த்தவன் இன்னும் சற்று தூரம் நடந்து சென்றான்.

நீலகிரி மற்றும் பழனி மலையில் மட்டுமே அதிகமாக கிடைக்கும் கனிம வளங்களில் ஒன்றான பாக்சைட் வெட்டி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது.

பாக்சைட் கனிமத்தில் அதிகப்படியான அலுமினியம் கலந்துள்ளது. வேறு பல கனிமங்களில் இருந்து அலுமினியம் பிரித்து எடுக்கப்பட்டாலும் பாக்சைட்டில் இருந்து அலுமினியத்தை பிரித்து எடுப்பது செலவு குறைந்த முறையாகும்.

பழனி, நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில், 2285- 1980 மீட்டர் உயரத்தில் பாக்சைட் உறைகள் காணப்படுகின்றன. இவை அரசாங்கத்திற்கு தெரிந்த விபரம் ஆனால் இவையன்றி நாழிகை குறிஞ்சி ஏரியின் மேற்கு பகுதிகளிலும் பாக்சைடுகள் கிடைக்கின்றன.

அவற்றை வெட்டி எடுத்து அரசாங்கத்திற்கு தெரியாமல் பல அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார் விதார்த்தின் தந்தை.

கனிமவளங்களை வெட்டி எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறியாமல் தன் தந்தை தவறு செய்து கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணத்துடன் தந்தையிடம் ஓடினான்.

தந்தையின் முன் வந்ததும் “அப்பா முதல்ல இது எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க” என்று கத்தினான்

அவனது குரலில் அருகே இருந்த நபர்கள் லேசான சலசலப்புடன் விதார்த் புறம் திரும்பினார்கள். மகனை முறைத்தவர் “இங்க என்ன வேடிக்கை வேலைய பாருங்க” என்றார்.

பின் மகனை தனியே அழைத்துச் சென்றவர் “எதுக்குடா கத்துற?” எனக் கேட்டார்.

“அப்பா பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கீங்க இப்படி நீங்க செய்ற காரியத்தால எவ்வளவு பெரிய ஆபத்து வரும்னு தெரியுமா? நான் உங்களுக்கு எடுத்து சொல்றேன் உங்களுக்கு நிச்சயம் புரியும் அப்புறம் இதை கண்டிப்பா நிறுத்திடுவீங்க” என்று நம்பிக்கையுடன் பேசினான் விதார்த்

“எனக்கு எல்லாம் தெரியும்டா, என்ன ஆயிடப்போகுது குடிநீர் மொத்தமும் கெட்டு விஷமா மாறிடும் பாறை வெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு வரும் அதான” என்றார்.

அவன் தந்தையை நம்ப இயலாமல் பார்த்தான் “அப்பா எல்லாம் தெரிஞ்சு தான் இது எல்லாத்தையும் பண்றீங்களா?” என கலங்கும் விழிகளுடன் கேட்டான்.

“ஆமாடா பின்ன ஆழம் தெரியாம உன் அப்பா ஒரு காரியத்துல இறங்கிடுவேனா சொல்லு”

“அப்பா இதனால கொஞ்ச வருஷத்துல மலைக்கு கீழ இருக்குற நம்மளோட கிராமமே அழிஞ்சு போயிரும்”

“அழியிது விடுடா. அப்பா நிறைய சொத்து சேர்த்து வச்சுருக்கேன் நாம வேற பக்கம் போயிடலாம் நீ என் வாரிசுடா எனக்கு அப்புறம் நீ தான இதை எல்லாம் பார்க்கனும். கூட இருந்து எல்லாத்தையும் கத்துக்க”

“முடியாதுபா நான் மைனிங் இன்ஜீனியர் இதுல இருக்குற ஆபத்து பத்தி என் படிப்பு எனக்கு நிறையவே அடையாளம் காட்டி இருக்கு என்னால அந்த படிப்புக்கு துரோகம் பண்ண முடியாது”

கலகலவென சிரித்தவர் “என்னடா பொல்லாத படிப்பு உன்னை இந்த படிப்பு படிக்க வச்சதே எனக்கு இந்த தொழில்ல உதவியா இருப்பனு தான் ஏன் உன்னை படிக்க வைக்க தேவையான பணமும் இதுல இருந்து கிடச்சது தான் இல்லனா சாதரண ஊர் தலைவனான உன் அப்பாவுக்கு அவ்வளவு பெரிய காலேஜ்ல உன்னை படிக்க வைக்க ஏது காசு சொல்லு?” என்றார்

அவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க “சரிடா முகத்தை இப்படி வச்சுக்காத உனக்கு இது எல்லாம் புதுசுல அதான் அதிர்ச்சியா இருக்கும் ரொம்ப யோசிக்காம வீட்டுக்கு கிளம்பு அப்பா வந்ததும் மற்றதை பத்தி பேசிக்கலாம் என்ன?” என்றவர் அருகில் இருந்த டிரைவரை அழைத்து “தம்பிய மலைக்கு கீழ பத்திரமா விட்டுட்டு வந்துரு” என்றார்.

அவனும் விதார்த்தை அழைத்துக் கொண்டு சென்றார். தன் மகனும் தன்னை போல் தான் சிந்திப்பான் என அவர் ஆழமாக நம்பிக் கொண்டிருந்தார்.

ஜீப்பில் பயணம் செய்யும் பொழுது “ஏன் அண்ணன் மேல அப்பா செய்ற விஷயம் பத்தி அரசாங்கத்துக்கு தெரியுமா?” என டிரைவரிடம் கேட்டான் விதார்த்

“அரசாங்கம்னா எதை சொல்றீங்க தம்பி இங்க நம்ம ஊர்ல அரசாங்கம்னா அது ஐயா தான்” முதலாளியின் மகனிடம் அவரை பற்றி பெருமையாக கூறினால் தனக்கு வேண்டியது கிடைக்கும் என்ற எண்ணத்தில் கூறினான். மீண்டும் கூற ஆரம்பித்தான்.

“ சில போலிஸ் அதிகாரிகள் ரேஞ்சர் ஆபிசர்கள் அரசியல்வாதிகள்னு ஐயாக்கு நிறைய லிங் இருக்கு அவங்களை எல்லாம் மீறி நீங்க சொல்ற அரசாங்கம் நம்மள எதுவும் பண்ணிட முடியுமா சொல்லுங்க” இவ்வாறாக அவனது ஐயாவின் புகழ் பாடிக் கொண்டே வந்தான்.

மலை அடிவாரத்தில் அவனை இறக்கிவிட்டு ஜீப் மீண்டும் மேல் நோக்கி சென்றது. ஏரியின் கரையில் நடந்து வந்தவன் வீட்டிற்கு செல்லும் பாதையில் செல்லாது மரவீட்டை நோக்கி சென்றான்.

அங்கே பணிகள் நடந்து கொண்டிருக்க வேலையாட்களுக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த ஆதிரை விதார்த் சோர்வாக நடந்து வருவதை பார்த்து புருவம் சுருக்கினாள்.

“ஹாய் விதார்த்” என அவள் கை அசைக்க அதை கருத்தில் கொள்ளாமல் அவளை கடந்து வீட்டிற்குள் சென்றான்.

இவளும் பின்னோடு ஓட பணி செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். அவை மகேந்திரனின் காதில் விழுந்துவிட “வேலைய மட்டும் பார்த்தால் எல்லாருக்கும் நல்லது” என குரல் உயர்த்தி கத்தினான்.

அவனது தோற்றத்தில் அஞ்சி நடுங்கி பணியாட்கள் தங்களது வாய்க்கு பசை போட்டு ஒட்டியது போல் அமைதியாகிவிட்டனர்.

மரபலகையில் அமர்ந்து கால் முட்டியில் முழங்கையை ஊன்றி உள்ளங்கையில் தலையை தாங்கி தரையை பார்த்து சோர்ந்து அமர்ந்திருந்தான்.

அவனது நிலை கண்டு துடித்தவள் “என்னாச்சுபா ஏன் ஒருமாதிரி இருக்க?” என வினவினாள்.

நிமிர்ந்து முகம் பார்த்தவன் சற்று முன் நடந்த நிகழ்வை பற்றி கூறினான்.

“உன் அப்பா தப்பு பண்றாருனு கவலை உனக்குள்ள இருக்கும் புரிஞ்சுக்குறேன் ஆனால் இதுனால சுற்றுசூழல் பாதிக்கப்படும்னு எப்படி சொல்ற அரசாங்கமே நிறைய மலை பகுதிகள்ல கனிம வளங்களை வெட்டி எடுக்க அனுமதி கொடுத்து இருக்கு சுரங்க தொழில் மூலமா நம்ம நாட்டோட வணிக தரம் எவ்வளவோ உயர்ந்து இருக்குல அப்புறம் என்ன?”

“உனக்கும் நான் சொல்ல வருவது புரியல ஆதிரை. அரசாங்கம் செய்றது லீகல் என் அப்பா பண்றது இல்லீகல் அதுமட்டும் இல்லாம அவங்களுக்கு எவ்வளவு எடுக்கனும்னு அளவு தெரியும் ஆனால் என் அப்பா செய்றது அப்படி இல்லையே”

“சரி இப்போ என்ன செய்யலாம்னு இருக்க”

அவன் தன் திட்டத்தை கூற இவளும் ஒப்புக் கொண்டாள். அதன்படி ஆதிரை மகேந்திரன் உதவியுடன் அவள் தங்கியிருந்த வீட்டின் அலமாரிக்கு பின்னே ஒரு ரகசிய அறையை உருவாக்கினாள்.

அவன்கேட்ட பிற கணினி மற்றும் இதர பொருட்களை யாருக்கும் தெரியாமல் மெட்டிரியல் வரும் வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்தாள்.

விதார்த் தந்தையிடம் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தவன் பிறகு அவரது செயலுக்கு ஒப்புக் கொண்டது போல் நடித்தான்.

தந்தையுடன் அடிக்கடி சுரங்கம் இருந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் தந்தைக்கு தெரியாமல் அங்கே யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை ஆராய ஆரம்பித்தான்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தவன் தந்தைக்கு தன் மேல் சந்தேகம் துளியும் வராமல் பார்த்துக் கொண்டான்.

ஒருமுறை அவனது தந்தை அங்கிருந்த அவரது நம்பிக்கைக்குரிய வேலையாள் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்ததை கவனிக்க நேர்ந்தான்.

“ஐயா நம்ம தம்பி அடிக்கடி அந்த மரவீட்டுக்கு போய்டு வராருங்களே”

“ஆமாடா அந்த பொண்ணு ஆதிரைய விரும்புறான் அவளை பார்க்க போயிருப்பான்”

“என்னங்க ஐயா சொல்றீங்க அப்போ உங்களுக்கு இதுல சம்மதம்ங்களா?”

“என்னடா பண்ண சொல்ற எனக்கு விருப்பம் இல்லதான் அப்பவே மறுத்து இருந்தால் இன்னைக்கு இந்த தொழில்கு உதவியா இருந்து இருப்பானா? அவன் காதலை நான் நிராகரிச்ச கோபம் அவன் கண்ணை மறைச்சு இருக்காது? என்னப்பத்தி வெளிய போட்டுக் கொடுத்து இருக்க மாட்டான்”

“என்னங்க ஐயா சொல்றீங்க புரியலையே”

“டேய் முட்டாய் பயலே முதல் முறையா அந்த ரேஞ்சர் ஆபிசர் விஷயம் தெரிஞ்சதும் நம்மகிட்ட வீம்பு பிடிச்சனே பணத்தை கொடுத்து சரிகட்டலையா? அதுபோல தான்டா இதுவும் அவனுக்கு பணம்னா என் பையனுக்கு அந்த பொண்ணு அவ்வளவு தான்”

“அப்போ கல்யாணத் தேதிய எப்போ குறிக்க போறீங்க?”

“என்னடா சொல்ற? காதலுக்கு தான் ஒத்துகிட்டேன் கல்யாணத்துக்கு இல்ல”

“அப்புறம் என்ன செய்ய போறீங்க”

“இந்த அமாவாசைக்கு பலி கொடுக்கனும்ல அதுக்கு அந்த பொண்ணை ஏற்பாடு பண்ணிடு”

“அசத்துறீங்க ஐயா நல்ல யோசனை போங்க”

இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட விதார்த்தின் மனம் சுக்கல் சுக்கலாக உடைந்தது. தந்தை இத்தனை பெரிய கொடுரன் என்பது புரியவும் அவரது மகன் என்ற நினைப்பே அவனுக்கு அருவருப்பை தோற்றுவித்தது.

இதற்கு மேலும் தாமதப்படுத்த கூடாது என்பதை புரிந்து கொண்டவன் ஆதிரையிடம் வந்தான். நடந்ததை பற்றி ஒன்றுவிடாமல் ஏன் நரபலியை பற்றியும் கூறியவன் ஆதிரையை பழி கொடுக்க உள்ளார் என்பதை மட்டும் மறைத்துவிட்டான்.

“எனக்கு என்ன நடந்தாலும் சரி அவருக்கு நான் தண்டனை வாங்கி கொடுக்காம விடமாட்டேன். இத்தனை நாள் வெறும் கனிம வளங்களை மட்டுமே வெட்டி எடுக்குறாருனு நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் இவரு இப்போ மனுசங்களையும் வெட்டுறாருனு புரிஞ்சுக்கிட்டேன்”

“என்ன சொல்ற நீ? நரபலியா? ஆனா எதுக்கு?”

“மலைக்கு மேல அரசாங்கத்தோட எந்த ஒரு இடஞ்சலும் இல்லாம அவரோட காரியம் நல்லபடியா நடக்குறதுக்கு இந்த நரபலி தான் காரணம்னு நம்புறாரு”

“கடவுளே எனக்கு பயமா இருக்கு விதார்த் இதை பத்தி நாம போலீஸ்கிட்ட சொல்லிடலாம் மத்ததை அவங்க பார்த்துப்பாங்க உனக்கு இதனால எதாவது ஆச்சுனா? ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தோணுது”

அவனும் யோசித்து பார்த்தான் அவனது தந்தைக்கு தண்டனை பெற்று கொடுக்க அவன் சேகரித்து வைத்த ஆதரங்களே போதும்

“நாம சீக்கிரமா இதை பத்தி போலீஸ்கிட்ட சொல்லுவோம் இப்போ நான் கிளம்புறேன்” என்றவன் கதவு வரை சென்றுவிட்டு திரும்பி வந்தான்.

இருவரது கண்களும் ஒரே நேர்கோட்டில் இருக்க ஒருமுறை அவளை இறுக அணைத்து விடுவித்தான். அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை. அவனது செயல்களை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தைரியமா இருக்கனும் எப்பவும் சரியா?” என்றான் ஆதிரையின் தலை தானாக சரி என்பது போல் அசைந்தது.

அது தான் ஆதிரை அவனை கடைசியாக சந்தித்தது. அதன்பிறகு அவன் பிணமாக ஏரியின் மேற்கு புறம் கிடந்தான். விஷயம் அறிந்ததும் பதறிக் கொண்டு மேற்கு திசை நோக்கி ஓடினாள் ஆதிரை.

தொடரும்..