• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழல் ஆனது ஏனோ? - 8

MK27

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
13
3
3
thanjavur

அத்தியாயம் - 8



விதார்த் இறந்து கிடக்கிறான் என்ற செய்தி கிடைத்ததும் வேகமாக ஏரியின் மேற்கு கரைக்கு ஓடினாள் ஆதிரை. அங்கே கூடியிருந்த கூட்டத்தை விலக்கி சென்று பார்க்க புலி நகங்களால் கீறப்பட்டு இரத்தம் உறைந்து போய் இறந்துகிடந்தான் விதார்த்

போலீஸ் அவனின் உடல் அருகே யாரையும் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தனர். கூட்டத்தின் ஒர் ஓரத்தில் பூமிகாவும் அவளது தாயும் கதறி அழுது கொண்டிருந்தனர். விதார்த்தின் தந்தை தனது தோளில் இருந்த துண்டால் வாயை மூடி அழுது கொண்டிருந்தார். ஊரில் இருக்கும் சிலர் அவரை தேற்றிக் கொண்டிருந்தனர்.

அவரை பார்க்க பார்க்க ஆதிரைக்கு ஆத்திரம் பொங்கியது. அவர் அவனை மலைக்கு மேல் அழைத்து சென்றதால் தான் குற்றம் பற்றி அவனுக்கு தெரிய வந்தது. அதனால் தான் அவன் ஆதாரங்களை சேகரிக்க அடிக்கடி மலைக்கு மேல் சென்று கொண்டிருந்தான். அப்படி செல்லும் போது தான் இவனுக்கு இப்படி நேர்ந்துவிட்டது. அவன் புலியிடம் அடிபட்டு இறப்பதற்கு மூலக்காரணம் அவனது தந்தை என்ற கோபம் அவளை ஆத்திரம் அடைய செய்து அறிவையும் இழக்க வைத்தது.



ஆதிரையும் விதார்த் புலி அடித்து இறந்துவிட்டான் என்பதை நம்பிவிட்டாள். அனைவரின் முன்னிலையிலும் “போதும் நடிச்சு அழுகுறதை நிறுத்து உன்னால தான் என் விதார்த் இறந்து போயிருக்கான். நீ செய்ற தப்புகள் இந்த கிராமத்து ஆட்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனால் எனக்கு தெரியும் நீ சட்ட விரோதி ஜெயிலுக்கு போக வேண்டியவன் உன்னை சும்மா விடமாட்டேன்” என கத்தினாள்.

அப்பொழுது மகேந்திரன் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றான். அவளை சமாதானம் செய்வது மகேந்திரனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. சரியாக தூங்காமல் சாப்பிடாமல் வேலை எதையும் செய்திடாமல் எந்த நேரமும் விதார்த்தை எண்ணி அழுது கொண்டே இருந்தாள். அவளது வீட்டினருக்கும் அழைத்து பேசவில்லை. அவர்களது அழைப்பையும் ஏற்கவில்லை.

எப்பொழுது அவர்கள் தொடர்பு கொண்டாலும் வேலை பழு அதிகமாக இருக்கிறது இப்பொழுது பேசிட இயலாது என செய்தியை அனுப்பிவிட்டு அழுக தொடங்கிவிடுவாள்.

எந்தநேரமும் விதார்த்தின் இறப்பை பற்றி வந்த செய்திதாள் துணுக்கை கையில் வைத்துக் கொண்டு பார்த்திருப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழுகை ஓய்ந்து போனது ஆதிரை மெளனத்தை தத்தெடுத்து கொண்டாள்.

அவளது இந்த அமைதி மகேந்திரனுக்கு உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. விதார்த் இறந்த சோகம் அவனையும் வெகுவாக தாக்கியிருந்தது. ஆதிரை தேற்ற மகேந்திரன் இருந்தான். ஆனால் அவனை தேற்ற? சிறு வயதில் இருந்து அவன் பார்த்து வளர்ந்த பிள்ளை விதார்த். ஆதிரையும் அவனது மகள் ஸ்தானத்திற்கு எப்போதோ வந்துவிட்டாள். அவர்களது வாழ்வில் நடந்த சோகத்தை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதற்கிடையில் ஊர்தலைவரின் விசுவாசி ஒருவன் அவரது கட்டளைக்கு இணங்க ஆதிரையை பற்றியும் மகேந்திரனை பற்றியும் தவறாக திரித்து கூறினான். மேலும் ஊருக்கு சம்மந்தம் இல்லாத ஒரு பெண்ணை ஊர் தலைவர் தன் வீட்டில் சேர்த்து கொண்டு வழிவழியாக பின்பற்றிய பழக்க வழக்கத்தை மாற்றியதால் அவர்கள் வீட்டில் ஒரு பலி ஏற்பட்டுவிட்டதாக புரளியை பரப்பிவிட்டான்.

நாழிகை குறிஞ்சியில் வெளி ஆட்களை எப்பொழுதும் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். காலம் காலமாக ஏனோ அதனை கடைபிடித்து வருகின்றனர்.

ஏற்கனவே மூடநம்பிக்கையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த ஊர்மக்கள் இதனை வெகுசுலபமாக நம்பிவிட்டனர்.

அதன்பிறகு ஆதிரை ஊருக்குள் செல்ல யாரும் அனுமதிக்கவில்லை. அனைவரும் அவளை தூற்ற ஆரம்பித்தனர். வேலை முடிந்ததா இல்லையா என அடிக்கடி அவளது கம்பெனியில் இருந்தும் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.

ஊர் தலைவரும் அவள் புறம் இருந்து எந்த எதிர்ப்பும் வராததால் ஏதோ அரைகுறையாக கேட்டு அன்று துக்கத்தில் அப்படி பேசிவிட்டாள் என எண்ணிக் கொண்டிருந்தார்.

ஊருக்குள் யாரும் அனுமதிக்காததால் ரிசவ் ஃபாரஸ்ட் ஏரியாவின் அனுமதியில்லா பாதையின் வழியாக கடிகார கூண்டின் பின்புற பகுதியை அடைந்து அங்கேயே அமர்ந்து கொள்வாள்.

இது யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு முறை அதுபோல் அமர்ந்து கொண்டிருந்த பொழுது ஊர்தலைவரின் குரல் காதில் கேட்க நேர்ந்தது. மெல்ல மறைந்திருந்து சத்தம் வந்த திசையை கவனித்தாள்.

“ஏய் அவன் வாயில இருக்குற கட்டை அவிழ்த்து விடுங்கடா”

மகேந்திரன் அவர் முன் கயிறால் கட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். வாய்கட்டை நீக்கியதும் “ஏன் ஐயா இப்படி தப்புக்கு மேல தப்பு பண்றீங்க? விதார்த் தம்பிய இப்படி கொன்னுட்டீங்களே” என கேட்டு அழுதார்.

ஆதிரைக்கு பேர் அதிர்ச்சி இப்படி நடந்திருக்காது சொந்த மகனை நிச்சயம் இப்படி செய்திருக்கமாட்டார் ஏதோ காட்சிபிழை எனக்கு தோன்றுகிறது என தனக்கும் தனது மூளைக்கும் இடையே சண்டையிட்டு கொண்டிருந்தாள் ஆதிரை

ஆனால் காட்சிபிழைக்கு இடம் இல்லை என்பது போல் ஊர் தலைவரின் குரல் ஒலித்தது.

“ஆமாடா கொலை தான் பண்ணுனேன் என்ன இப்போ? என் ரத்தம் என் வாரிசா இருப்பானு நினைச்சேன் என்னையும் நான் உருவாக்குன சாம்ராஜ்யத்தையும் அழிக்க நினைச்சால் சும்மா விட சொல்றீயா? எத்தனை வருஷ உழைப்புனு தெரியுமாடா?

எனக்கு எதிரா இருந்தது என் புள்ளை மட்டும் தான் எனக்கு எதிரா அவன் எடுத்து வச்சிருந்த ஆதாரங்கள் அத்தனையும் அவனோட போன்ல இருந்து அழிச்சுட்டேன் இனி எதுவும் இல்லை என்னை பற்றி யாருக்கும் இனி தெரிய வராது என்றவர் கொடூரமாக சிரித்தார்.

மகேந்திரன் கைகளை பிடித்துக் கொண்டிருந்த அவரது கையாளிடம் திரும்பியவர் “டேய் ரொம்ப கண் திருஷ்டியா இருக்குடா அந்த பொண்ணு ஆதிரைய பேசி வச்சது போல அம்மாவாசை அன்னைக்கு பலி கொடுத்துருங்க” என்றார்.

“நரபலி முடிஞ்சதும் வழக்கம் போல எதாவது ஒரு கதைய ஊருக்குள்ள பரப்பிவிட்டுடுங்க அப்புறம் அவளோட பிணத்தை அந்த ஏரிகரை வீடு இருக்குல அங்கையே போட்டு வச்சுடுங்க புலி அடிச்ச மாதிரி செட் பண்ணிடுங்க நாம எந்த விதத்திலும் மாட்டிரக் கூடாது” என்றவர் “ஐயா வேண்டாம் ஐயா” என கதறிக் கொண்டிருந்த மகேந்திரனை கண்டுகொள்ளாமல் “இவனை கொல்ல வேண்டாம் பைத்தியமாக்கி விட்டுடுங்க ரொம்ப வருஷமா கூடவே இருந்தவன் அதுமட்டும் இல்லாம அந்த ஆதிரைய நெருங்க இவன் துருப்பு சீட்டு” என்றார் பின் அவ்விடத்தைவிட்டு சென்றுவிட்டார்.

அவரது கையாட்கள் மகேந்திரனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை வாயை மூடி அழுது தீர்த்தாள்.

எப்படியாவது இவர்களை பற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் விதார்த் ஆசைப்பட்டது போல் கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும் என முடிவு செய்தவள் மரவீட்டிற்கு சென்றாள்.

அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என எண்ணியவளுக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை.

தான் ஒரு சதாரண ஆள் இவ்வளவு பெரிய குற்றத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்றால் எதாவது பெரிய ஆட்களின் துணை இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்தவள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

பின் நினைவு வந்தவளாக தனது கம்பெனியின் எம் டி யை தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் கூறினாள். அது சம்மந்தமாக விதார்த் சேர்த்து வைத்த ஆதாரங்கள் அனைத்தையும் அவருக்கு மெயில் அனுப்பினாள்.

அவரும் ஒரு போலீஸ் அதிகாரியின் துணையோடு நாழிகை குறிஞ்சி வந்து சேர்ந்தார். ஊர் தலைவரிடம் அதுபற்றி விசாரிக்க அவரோ பணத்தால் மீண்டும் காரியம் சாதித்தார்.

இதற்கு மேலும் ஆதிரையை விட்டு வைக்க கூடாது என முடிவு செய்தவர் தனது ஆட்களுடன் அவளது கம்பெனி எம்டி யையும் அழைத்துக் கொண்டு மரவீட்டிற்கு சென்றனர்.

கதவு தட்டப்படும் ஓசையில் வெளியே வந்த ஆதிரையை உள்ளே அடித்து இழுத்து சென்றனர். “எங்கடி வச்சு இருக்க ஆதாரம் எல்லாத்தையும்?” என கேட்டு தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர்.
அவள் பதில் கூறவே இல்லை.

“உன்னை பத்தி தெளிவா சொல்ல வேண்டிய இடத்துல சொல்லியாச்சு சீக்கிரத்திலே கம்பி எண்ண போற மணிவண்ணன்” என்றாள் ஆக்ரோசமாக.

காதை குடைந்து கொண்டவர் “ஐயோ மணிவண்ணன் என் பெயர் தான் இதுவரைக்கும் ஐயா தலைவரே இப்படியே எல்லாரும் கூப்பிட்டு என் பேரே எனக்கு மறந்து போச்சு போ” என்றவர் சரி சீக்கிரம் சொல்லு ஆதாரங்கள் எல்லாம் எங்க இருக்கு

“அதான் சொன்னேன்ல போய் சேர வேண்டிய இடத்துக்கு போயாச்சு”

“இவள் ஒருத்தி லூசு மாதிரியே பேசிக்கிட்டு” என சலித்தவர் “சார் உள்ள வாங்க” என வாசல் புறம் பார்த்து கத்தினார்.

அங்கிருந்து அவளது கம்பெனி எம்.டி உள்ளே நுழைந்தார். அவரை பார்த்து உடைந்தே போய்விட்டாள் ஆதிரை. அவளுக்கு விஷயம் விளங்கிட வெகுநேரம் எடுக்கவில்லை. அவரை தன் கண்ணால் கண்ட நொடியே என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது. தனது கடைசி நம்பிக்கையும் பொய்யாய் போனதும் பலம் இழந்தாள். அவளுள் இருந்த தைரியம் கடைசி வரை ஆதாரங்கள் இருக்கும் இடத்தை சொல்லவிடாமல் தடுத்தது.

“சுத்தி தேடுங்க” என அங்கிருந்தவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படவும் வீட்டை சல்லடை போட்டு தேடினர். ஆனால் ரகசிய அறை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் அலமாரியை கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆதிரையின் இதயம் ரயிலின் வேகத்தை ஒத்தது போல் துடித்தது.

அந்த மரவீட்டின் புளு பிரிண்டை வைத்திருந்த எம்.டி யும் “இங்க இருக்குற எந்த அறையிலும் ஆதாரம் இல்ல சார் எனக்கு தெரிஞ்சு இவள் அதை எங்கையோ இடம் மாத்தி இருப்பானு நினைக்குறேன்” என்றார்.

ஆதாரம் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த மணிவண்ணன் ஆதிரையின் தலையில் கையில் இருந்த கட்டையால் ஓங்கி அடித்தார்.

கீழே விழுந்த ஆதிரையை மிதித்தவர் “எங்க வச்சு இருக்கனு சொல்லி தொலைடி” என்றார்.

ஆனால் அவளிடம் அசைவு ஏதும் இல்லை. எம்.டி அவளை பரிசோதித்து பார்க்க அவள் இறந்து போயிருந்தாள்.

“ஐயோ சார் செத்துட்டா”

“செத்துட்டாளா? சரிவிடுங்க இனி பிரச்சனை இல்லனு நினைக்குறேன் எதுக்கும் அந்த கணினி பொட்டி எங்கனு தேடுங்க கிடைக்கலனாலும் பரவா இல்ல இவளே செத்துட்டா இனி என்னாகிட போகுது.”

அனைவரும் கலைந்து சென்றுவிட வழக்கமான பாணியான புலி அடித்து இறந்துவிட்டது போல் அவளது உடலை மாற்றி வீட்டிற்குள்ளேயே போட்டுவிட்டு சென்றனர்.

பிரேத பரிசோதனை நடைபெறும் பொழுது தனது மகனின் சாவிற்கான காரணத்தை எப்படி பணத்தால் மறைத்தாரோ அதே போல் இதையும் மறைத்துவிட்டார்.

நடந்த அனைத்தையும் தான்வியிடம் கூறிய பூமிகா தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் பூமி?”

“மகேந்திரன் மாமா தான் சொன்னாரு. அவரு பைத்தியம் இல்ல அக்கா உயிரை காப்பாத்திக்கவும் இந்த உண்மைய வெளிய கொண்டு வரவும் பைத்தியம் மாதிரி நடிச்சாரு.”

“மகேந்திரன் யாரு? தினமும் ஏரிகரைக்கு மீன் பிடிக்க வருவாரே அவரா?”

“ஆமா அக்கா அவருக்கு குடும்பம் எதுவும் இல்ல ஆதிரை அண்ணி அவருக்கு மகளை போல அவங்க நினைவா தினமும் அந்த வீட்டுக்கு வருவது வழக்கம் இரண்டு நாள் முன்னாடி கூட நம்ம விதார்த் ஆதிரை சாவுக்கு நியாயம் கிடைக்க போகுதுனு சொன்னாரு ஆனால் இப்போ அவரையும் எங்க அப்பா கொன்னுட்டாரு அக்கா”

ஐயோ என பதறிய தான்வியை நிமிர்ந்து பார்த்த பூமிகா “என் கண்ணால அப்பா அவரை அடிச்சு கொலை செஞ்சதை பார்த்தேன் அக்கா”

“என்னடி சொல்ற உன் அப்பா இவ்வளவு கெட்டவரா?”

“ம்.. எனக்கு என் அண்ணாவ ரொம்ப புடிக்கும் அக்கா ஆனால் அந்தாளு கொன்னுட்டான் நான் சின்னப் பொண்ணு அக்கா என்னால என்ன செய்ய முடியும் யார்கிட்ட உதவி கேட்குறதுனே தெரியல தினம் தினம் தவிச்சுட்டு இருக்கேன்கா. எனக்கு இந்த நாழிகை குறிஞ்சிய தவிர வேற எதுவும் தெரியாது. என் அண்ணன் சாவுக்கு என்னால நியாயம் வாங்கி கொடுக்கவே முடியாது போல இருந்த ஒரு நம்பிக்கையான மகேந்திரன் மாமாவும் இப்போ இல்ல”

“அழுகாத பூமி உனக்கு நான் இருக்கேன் எனக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. யார் மேல நம்பிக்கை வச்சேனே அவங்களே என்னை ஏமாத்திட்டாங்க எனக்கும் உன்னோட வலி புரியுது நான் செத்தாலும் பரவா இல்ல கண்டிப்பா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் இப்போ நீ வீட்டுக்கு போ”

பூமிகா வீட்டிற்கு சென்றதும் தான்வி ஏரிகரைக்கு வந்தாள். அப்பொழுது ஏரியின் மேற்கு புறம் இருந்து திகழ்முகிலன் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவளுக்கு ஏனோ சந்தேகம் வந்தது. பூமிகா கூறிய உண்மைகளை பற்றி அறிந்தவுடன் யாரையும் நம்ப அவளால் முடியவில்லை.

வீட்டிற்கு வந்தவள் தன்னால் என்ன செய்ய முடியும் எப்படி இந்த விஷயத்தை அனுகுவது என்பது பற்றி யோசிக்கலானாள்.

இப்படியே அன்றைய நாளும் கழிந்தது. பகல் முழுவதும் விதார்த் ஆதிரை பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட தலைவலியின் காரணத்தால் படுத்ததும் உறங்கிவிட்டாள் தான்வி

இங்கே குடிலுக்கு வெளியே அமர்ந்திருந்த திகழ்முகிலன் தனது கைபேசியில் இருந்த குடும்ப புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் நாற்காலியின் நடுவில் அவனது தாய் தந்தை இருக்க தரையில் அவனது தங்கையும் தந்தையின் புறம் திகழ்முகிலனும் தாயின் புறம் ஆதிரையும் அமர்ந்திருந்தனர்.

ஆதிரையின் புகைப்படத்தை வருடியவன் நிர்மலமான முகத்துடன் தனக்கு முன் இருந்த வீட்டை பார்த்தான். அவனது எண்ண அலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பயணித்தது.


தொடரும்..