• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசத் தூறல்கள் 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 15

முழுதாய் மூன்று நாள் முடிந்துவிட்டது. அவள் எழுந்த பாடும் இல்லை, சிவா அந்த இடத்தை விட்டு அகன்ற பாடும் இல்லை.

யாரும் தன்னிடம் வந்து பேசினார்களா? தான் எதாவது சாப்பிட்டோமா? அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. ஆனால் ஹேமா கண் விழிக்கும் வரை அவன் அசைய போவதில்லை.

அவளாவது நினைவில்லாமல் படுக்கையில்.. இவன் நினைவு மட்டும் இருக்கும் பிணமாய்...

அந்த நாள்... குழந்தைக்கு டாட்டா காட்டி, தன்னவனை கண்டு கொண்ட ஹேமா காரில் இருந்து இறங்கி, நான்கு மாதப்பிரிவில் ஏற்பட்ட அத்தனை கவலைகளையும் மறந்து அவனை நோக்கி ஓடினாள்.

அவள் சுற்றம் மறந்து ஓட, வலது புறம் வந்த லாரி ட்ரைவர் அவளை கவனித்து விட்டு, நின்றுவிட்டான். அதை கூட கவனிக்காமல் சென்றவளை இடது புறம் வளைவில் இருந்து வந்த பஸ் மோதிட, அந்த பைபாஸ்ஸில் வந்த வேகத்திற்கு தூக்கி எதிரே நின்ற லாரி மேல் வீசப்பட்டாள்.

லாரி கண்ணாடி உடைந்து ஹேமா கீழே விழ, அருகிலிருந்த அனைவரும் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர். தொலைவில் இருந்து பார்த்த சிவா யாரோ எவரோ என்ற எண்ணத்தில் தான் விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்தான்.

கூட்டத்தை கடந்து உள்ளே சென்றவன் பார்த்தது ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹேமாவை தான்.

கண் பார்த்ததை கண்டு அதிர்ச்சியில் "ஹேமா....." என கத்தியவன் அவளை மடி தாங்க, சத்தியமாய் அவன் மூளை அதன்பின் வேலை செய்யவில்லை.

எப்படி ஹாஸ்பிடல் வந்தார்கள்? யார் அழைத்து வந்தது? ஹேமாவிற்கு இதெல்லாம் தெரியாவிட்டால் சரி ஆனால் சிவாவிற்கும் தெரியாது என்றால்?

"யோவ் நான் நேரா தான் வந்தேன் அந்த பொண்ணு வேணும்னு தான் வந்து விழுந்துது"

"ஆமாங்க! அது வந்த வேகத்தை பார்த்து நான் லாரிய நிப்பாட்டிட்டேன். அது எதிர்ல வந்த பஸ்ல மோதிட்டு"

அந்த கூட்டத்தில் இந்த குரல்கள் சிவா காதில் விழுந்தது. ஆனால் அப்போது நிறுத்தம் செய்த மூளை அதன் வேலையை சில மணி நேரங்களுக்கு பின் தொடர்ந்து சிவா காதில் கேட்டுக் கொண்டே இருக்க, அதையும் அதன் பின்னான சில மணி நேரங்களுக்கு பிறகே புரிந்து கொண்டான்.

அவளே வந்து விழுந்தாளா? ஏன்? என யோசிக்க, லாரி டிரைவர் சொன்னதும் ஞாபகம் வர, அவன் தெரிந்து கொண்டான் தன்னை அவள் பார்த்ததினாள் வந்த வினை தான் இது என்று.

அவ்வளவு தான் எங்கிருந்து தான் அவ்வளவு கோபமும் ஆத்திரமும் வந்ததோ. ஹாஸ்பிடல் என்பதையும் மறந்து கத்தினான் சிவா. ஆனால் கோபம் அனைத்தும் அவனுக்கு அவன் மீதே தான்.

ICU வார்டில் ஹேமா சிகிச்சை நடந்து கொண்டிருக்க, யார் இருக்கிறார்? எங்கே இருக்கிறோம் எதுவும் நினைவில் இல்லாமல் கத்தினான். இல்லை அவன் காதலை உளறினான் ஆவேசமாக!

"ஹேமாஆஆ" அலறிய அவன் குரலில் அருகில் அழுது கொண்டிருந்த ரேகாவும் ராஜ் குமாரும் அவனை வித்யாசமாய் பார்க்க, அர்ஜுன் சுஜி இருவரும் அவனருகே வேகமாய் வர, அதற்குள் கார்த்திக் அவன் கைகளை பிடித்திருந்தான்.

ஒரே உதறலில் கார்த்திக் கைகளை விட்டு தன் கைகளை விடுவித்தவன் "நான் தானா? அவளோட இந்த நிலைமைக்கும் காரணம் நான்தானா?" கண்ணீர் வடிய வடிய சிவா பேச,

சுஜி "அண்ணா" என கதறியபடி அவனை அணைத்து கொண்டாள்.

தன் தங்கை தன் பக்கம் நிற்பதை கூட உணர முடியாத நிலையில், அவன் புலம்பல் தொடர்ந்தது.

"ஏண்டி இப்படி பண்ணின? என்னையும் ஒருத்தனா மதிச்சு ஏண்டி என் பின்னாடி வந்த? நான் உனக்குன்னு என்ன தான்டி பண்ணினேன்? என்னை விட்டு தூரமா தானே போக சொன்னேன். மொத்தமாவா போக சொன்னேன்?" எங்கோ பார்த்து அவன் கதற,

"மாமா! மாமா ப்ளீஸ்! ஹேமாக்கு ஒன்னும் ஆகாது மாமா" அர்ஜுன் அவனை உலுக்கினான்.

"ஆகக்கூடாது" என அர்ஜுன் சட்டையை பிடித்து அவன் கத்தியதில் ஹாஸ்பிடலே அதிர, ரேகாவும் கூட அந்த அலறலில் அதிர்ந்து விட்டார்.

"எதுவும் ஆக கூடாது அவளுக்கு. அவ என்னோட ஹேமா! என் உயிர் அவ. என்னை விட்டு போகணும்னு அவ எப்படி முடிவெடுக்கலாம்? போய்டுவாளா?.. போய்டுவாளா?" என்றவன் ஒற்றை விரலை அர்ஜுனை நோக்கி நீட்ட, சிவாவின் நிலையை புரிந்து கொண்ட கார்த்திக் டாக்டரை அழைத்து வர சென்றான்.

"நான் மட்டும் தான் உலகம்னு இருந்தா அர்ஜுன்... ஒருநாளைக்கு பத்து முறை கூப்பிட்டா... பேசிட்டே இருந்தா... என்னை விட மாட்டேன்னு சொன்னா அர்ஜுன்..." என்றவன் குலுங்கி அழ, அர்ஜுன் சிவாவை அணைத்து கொள்ள, அங்கிருந்த அனைவர் கண்களும் கலங்கியது. அது ஹேமாவிற்காக மட்டுமா?

சட்டென அர்ஜுன் அணைப்பில் இருந்து விலகியவன், "வர சொல்லு சுஜி! அவள வர சொல்லு... இப்ப சொல்றேன்... சத்தியமா அவளை யாருக்கும் குடுக்க மாட்டேன். நானே கண்ணுக்குள்ள வச்சுக்குறேன். வர சொல்லு சுஜி... வர சொல்லு" குரல் உயர்ந்து கொண்டே செல்ல, அவன் கண்ணீரும் வடிந்து கொண்டே தான் இருந்தது.

கார்த்திக் சிவாவின் நிலையை சொல்லி டாக்டரை அழைத்து வர, சிவாவை பார்த்த டாக்டர் அந்த சூழ்நிலை புரிந்து அவனை அமைதியாக்கவே மயக்க ஊசியை செலுத்தினார்.

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத போது இன்னொருவர் தாங்க முடியாமல் இதுபோல நடந்து கொள்வது நடப்பது தான். ஆனால் சிவாவை அமைதிப்படுத்த முடியாது என்ற நிலையில் தான் இந்த முடிவு. அதை அறிந்தே தான் டாக்டர் செய்ததும்.

இதோ! ஹேமா ICU வில் தொடர்ந்து மூன்று நாட்களாய் கோமா என்ற அழைப்பில். சிவா அதே ஹாஸ்பிடல் ICU முன் தரையில்.

யார் வந்து அழைத்தாலும் இழுத்தாலும் அவன் நகரவில்லை. அவள் எழுந்து கொள்வாள். அவள் எழும் வரை நான் எழ மாட்டேன் என்ற உறுதியில்.

அர்ஜுன் சோர்ந்து போய் சிவாவிற்கு எதிரான இருக்கையில் இருக்க, ரேகாவும் அவன் அருகில் தான்.

சுஜி ராஜ் குமாருடன் வீட்டிற்கு சென்றிருந்தாள். டாக்டர் வந்து அர்ஜுன் தோள் தொட, வேகமாக நிமிர்ந்தான் அர்ஜுன்.

"டாக்டர்.."

"சாரி அர்ஜுன்.. உங்க நிலைமை புரியுது. பட் நான் சொல்லி தான் ஆகணும்" டாக்டர் பேசுவதை கேட்க அர்ஜுனிற்கு கைகள் நடுங்கியது.

"என்..னாச்சு.. டாக்டர்?" அர்ஜுன் கேட்க, அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் ரேகா.

சிவா இருந்த இடத்தை விட்டு எழவில்லை. அவர்கள் பேச்சும் கேட்கும் தூரம் தான். ஆனால் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.

"அச்சிடேன்ட் நடந்த அதிர்ச்சியில அவங்க ஹார்ட் கொஞ்சம் பலவீனமாகி இருக்கு, தொடர்ந்து தலையிலயும் அடிபட்டதால மூளையில இருந்து போற ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா உறஞ்சுட்டு இருக்கு... சீக்கிரமா ஆபரேஷன் பண்ணனும். ஆல்ரெடி 3 நாள் ஆச்சு.."

"அய்யோ டாக்டர் ஆபரேஷன் எவ்வளவு செலவானாலும் நான் பொறுப்பு.. ஆபரேஷன்க்கு ரெடி பண்ணுங்க டாக்டர்"

"அது பிரச்சனை இல்ல அர்ஜுன். முதல்ல அவங்க கோமால இருந்து வெளி வரணும். ரொம்ப கிரிட்டிகள் சிடுவேஷன்ல இருகாங்க. அது மட்டும் இல்ல..."

ஏற்கனவே சொன்ன விஷயத்திற்கே அனைவரும் உறைந்து போயிருக்க, மேலும் எதையோ சொல்ல வந்து பின் தயங்கினார் அவர்.

அவரிடம் வேண்டாம் என தலையசைத்த அர்ஜுன் அம்மாவை கண்காட்ட டாக்டரும் எதுவும் சொல்லாமல் நகர்ந்தார்.

3 நாட்களுக்கு பிறகு எதுவும் சொல்லாமல் யாரிடமும் பேசாமல் எழுந்து டாக்டர் அறைக்குள் சென்றான் அவன் சிவா.

அன்று அவன் அழுத அழுகையில் யாரும் சொல்லாமலே மொத்த விஷயமும் புரிந்தது ராஜ் குமார் ரேகாவிற்கு. அவரும் தன் மகள் பிழைத்து தன்னிடம் வந்துவிட்டால் போதும் என்று கடவுளை மட்டுமே நம்பி அங்கு அமர்ந்தார்.

சிவா செல்வதை பார்த்த அர்ஜுன் அம்மாவை அமர வைத்துவிட்டு அவன் பின்னே டாக்டர் அறைக்கு ஓட,

"எனக்கு என் ஹேமாவை பத்தி முழுசா தெரியணும். சொல்லுங்க! என்ன பிரச்சனை என் ஹேமாக்கு?" என டாக்டரை மிரட்டிக் கொண்டிருந்தான்.

"மாமா ப்ளீஸ் அமைதியா இருங்க. சொல்லுங்க டாக்டர்" என அர்ஜுனும் கேட்க, சிவாவை பார்த்துக் கொண்டே டாக்டர் பேசினார்.

"உடைஞ்ச கண்ணாடி குத்தின வேகத்துல.. ஹேமாவோட.. வயிறு உள்ள வரையுமே கண்ணாடி போயிருக்கு.. கற்பப்பையை எடுக்க வேண்டிய நிலைமைகூட வரலாம். அதை முதல் நாளே உங்களுக்கு சொல்லி இருக்கனும்.. ஆனால் அன்னைக்கு அவங்கள காப்பாத்த தான் நாங்க முழு முயற்சியும் பண்ணினோம். சோ இப்ப அவங்க கண் முழிச்சா தான் ஆபரேஷன் பண்ணலாம்" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஓடி வந்த நர்ஸ் ஹேமா கைகால்களில் அசைவிருப்பதாக சொல்ல, சிவாவை திரும்பி பார்க்க கூட தேவையில்லாமல் காற்றாய் பறந்து அவனுடைய உயிரை பார்க்க சென்றிருந்தான்.

ஆக்சிஜன் மாஸ்க் மாட்டப்பட்டு, சில உபகரணங்கள் அவள் உடலை இறுக்கி இருக்க, பார்த்தவனுக்கோ சிட்டாய் பறந்து கொண்டிருந்த பூ முகம் கண்களில் வந்து கண்ணீரை பொழிய வைத்தது.

"எனக்கு தெரியும்! நீ என்னை அவ்வளவு சீக்கிரம் விடமாட்ட. உனக்காக... உனக்காக மட்டும் காத்துட்டு இருக்கேன். சீக்கிரமா வா.. வந்து என்ன என்ன வேணா பண்ணிக்கோ. ஆனால் இந்த கைக்குள்ள வந்துடு" அவள் கேட்கிறாளா என தெரியாமலே அவள் முகம் பார்த்து அவன் பேச, லேசான அசைவு மட்டும் தொடர்ந்து அவளிடம்.

அதற்குள் டாக்டர் சொல்லின்படி சிவா வெளியேற்றப்பட, அவளை பரிசோதித்தனர்.

"நர்ஸ், ரிப்போர்ட் பார்த்து ஆபரேஷன்க்கு ஏற்பாடு பண்ணுங்க. அர்ஜுன் பேமிலிகிட்ட இன்ஃபார்ம் பண்ணி சைன் வாங்கிடுங்க.. பிப்டின் மினிட்ஸ்ல எல்லாம் ரெடியா இருக்கனும். கமான் குயிக்" என்று அவர்கள் அவசரப்படுத்த, வேலைகள் அனைத்தும் துரிதம் ஆனது.

மீண்டும் அதே இடத்தை ஆக்கிரமித்து அமர்ந்த சிவாவிற்கு நம்பிக்கை மட்டும் விட்டு போகவில்லை.

சுஜி ராஜ் குமார் கார்த்திக்குடன் வந்து அர்ஜுனிடம் விசாரித்தவள் கண் கலங்க அங்கேயே நின்றாள்.

முழு 4 மணி நேர போராட்டம்! அர்ஜுன் தன் அன்னையிடம் டாக்டர் கூறியதை சொல்லவில்லை. சொல்லும் தைரியமும் இல்லை. அவள் நல்லபடியாய் பிழைத்து வரட்டும் என கடவுளிடம் வேண்டியவன் கண்மூடி அமர்ந்தான்.

ஆபரேஷன் முடிந்து வந்த டாக்டரும் நல்ல செய்தியை தான் கூறினார். அவள் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லையென. ஆனாலும் அவர் சொன்னது போல தான் நடந்தது.

அனைவரும் அறையில் அவளை பார்த்து வர, இறுதியாய் உள்ளே நுழைந்தான் சிவா.

தேறி வந்தவளை அவன் பார்க்க சென்ற போது அவளிடம் ஒரு வெற்று பார்வை மட்டுமே!

அந்த பார்வையின் அர்த்தம் தான் என்ன?

நேசம் தொடரும்..
 
  • Like
Reactions: LAmmu