• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 11

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
25
36
13
Srilanka
நேசம் - 11

MEME-20240624-111949.jpg


"ம்ம்… என்னையும் கேட்கலாம் தானே மிரு சாப்பிட்டியா எண்டு?"


"ம்ம் சாப்பிட்டிங்களா?" இயந்திரம் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.


"சாப்பிடோணும். ஆனா உனக்குத் தான் மூட் சரியில்ல போல." மூக்கினால் கழுத்து வளைவில் உரசியவன் செயல், மர அட்டை ஊறுவதைப் போல் அருவெறுப்பாக இருந்தது.


உதறி எறிவது போல், உடலை நெளித்து அந்த இடத்தை விட்டு எழுந்தவள், "நீங்கள் சாப்பிடுறதுக்கும், என்ர மூட் சரியில்லாததுக்கும் என்ன சம்மந்தம்?" என்றாள் சற்று குரலில் கடுமையை காட்டி.


அவளது அந்த உதாசீனம் புதிதாக இருந்தாலும், அதற்கான காரணம் அறியாதவன், மீண்டும் அவளை நெருங்க நினைக்கையில், வெளிப்படையாகவே தள்ளி நின்று கொண்டாள்.


"ஏன் மிரு கிட்ட வந்தா அருவெறுக்கிற மாரி செய்யிற? என்னில ஏதாவது நாறுற மாரி இருக்கோ என்ன?" அவனைப் பொறுத்தவரைக்கும் முட்டையிலிருந்து வெளியே வராத குஞ்சு அவள் என்ற நினைப்பு.


"ஓம் நாறுது தான். உங்கட கதை நாறுது. நடு ரோட்டில வெள்ளைக்காரிய... ச்சீ..." சொல்லவே முடியாது முகத்தைச் சுழித்தவளும் எவ்வளவு நேரம் தான், தெரியாதது போல் நடிப்பாள்? நடிக்கும் அவளைச் சும்மா விட்டிருந்தாலும் இருந்திருப்பாளோ என்னமோ! அவளை வைத்துக் கொண்டு தன்னிடம் என்ன தேய்ப்பு வேண்டிக் கிடக்கின்றது. யாராக இருந்தாலும் இப்படி ஓர் கோபம் வரத் தானே செய்யும்.


"என்ன சொல்லுற மிரு?" என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி எதுவும் அறியா அப்பாவியாட்டம்.


"என்ன சொல்லோணும்... தெரியாமத் தான் கேக்குறன் என்னை என்ன விசர் எண்டு நினைச்சு இந்தக் கேள்வி கேக்குறீங்களோ... தொட்டு தாலி கட்டின மனுசன் என்ர கண்ணுக்கு நேரவே, நடு ரோட்டில நிண்டு, வெள்ளைக்காரின்ர சொண்டை சூப்பிட்டு இருந்தான் எண்டு என்ர வாயலயே சொல்லோணும் எண்டுறீங்களா? சொல்லீட்டன் கண்டதை அப்பிடியே சொல்லீட்டன் இப்ப திருப்தியா?


இங்க இப்பிடி ஒருத்திய வைச்சுக் கொண்டு, என்னை ஏன் கலியாணம் செய்தனீங்கள்? அதுவும் வெள்ளைகாரி. இவள் நல்லா உங்கட ஆசைய தீர்த்து வைப்பாள் தானே! பிறகு எதுக்கு இன்னொண்டு?" ஆதங்கம் ஆத்திரமாக மாற, கத்தவே ஆரம்பித்து விட்டாள்.


மிருதுளா உலகம் தெரியாதவள் தான், ஆனால் தன் வாழ்வு பறி போகிறது என்று தெரிந்தும், அமைதி காக்க அவள் முட்டாள் இல்லையே! அதுவும் கிராமத்தில் வளர்ந்தவளுக்கு சத்தமாகப் பேசவா தெரியாது.


"ஏன் இப்ப கத்துற? ஏதோ நானே உன்னை ஆசைப்பட்டு கலியாணம் கட்டினா மாதிரி சொல்லுற? வெளிநாட்டு மாப்பிள்ளை எண்டதும், பல்லை இளிச்சிக் கொண்டு வந்தது நீ தானே!" என்றான் அவனும் விடாமல். கொஞ்சம் மசிந்தால் அவன் கழுத்தில் அல்லவா கத்தி விழும்.


"யாரு...? நான் பல்லை இளிச்சனோ... உங்கட அப்பப்பாவும், அப்பம்மாவும் தான், படிச்சுக் கொண்டிருந்த என்ர படிப்பைக் கெடுத்து, உங்கட தலையில கட்டி வைச்சவ, நான் கேட்டது என்னைப் பற்றி இல்லை. எனக்கு மட்டும் என்ன! நீங்கள் இங்க செய்யிற திருகு தாளம் தெரியுமா என்ன? ஆனா நீங்கள் அவைக்கு சொல்லி இருக்கலாம் தானே! ஏற்கனவே ஒருத்திக்கும் எனக்கும் இங்க தொடர்பு இருக்கெண்டு" அவன் பேச்சில் ஆத்திரம் கூடிக் காெண்டே போனது.


"தொடர்போ... ஏய் அவள் என்ர மனுசி. இந்த நாட்டின்ர சட்டப்படி அவளை நான் கலியாணம் கட்டீட்டன்" என்றவன் பேச்சைக் கேட்டவள் வாயின் மேல் கை வைத்து அதிர்ந்தே போனாள்.


பின்னே சாதாரண உறவென்று பார்த்தால், கல்யாணமே செய்து விட்டேன் என்று குண்டைத் தூக்கிப் போட்டால் அதிர்ச்சியாய் இராதா?


"அவள் மனுசி என்டா... அப்ப நான்?" அதுவரை உச்சத்தில் ஒலித்த குரல் தளர்ந்திருந்தது.


"எங்கட நாட்டு பாசையில சொல்லோணும் எண்டா, உன்னை வைச்சிருக்கிறன் எண்டு அர்த்தம்." சிறு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்ற நெருடல் சிறிதும் இல்லை அவன் பேச்சில்.


"என்ன வைச்சிருக்கிருக்கிறீங்களோ? ஊர் அறிய அத்தனை பெரியவங்களுக்கு முன்னால தாலி கட்டின என்னைப் பாத்து வைச்சிருக்கிறன் எண்டுறீங்களே, வெக்கமா இல்லை?"


"நான் ஏன் வெக்கப்படோணும்.? இந்த நாட்டைப் பொறுத்தவரை அவள் தான் என்ர மனுசி. அதால தான் உன்னை இங்க கூப்பிட எந்த ஏற்பாடும் செய்யேல நான். அந்தக் கிழடுகளுக்கு வேற வேலை இல்லாம, உன்னை இங்க அனுப்பி வைச்சிட்டுதுகள்." இத்தனை மணிநேரம் தமக்கான உறவைத்தான் கொச்சைப்படுத்தினான், இப்போது தன் இரத்த உறவான தந்தை வழி பெரியவர்களையும் கொச்சைப்படுத்துவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


"கிழடுகளோ... பிறகு ஏன் அந்தக் கிழடுகள் சொன்னதெண்டு, என்னைக் கலியாணம் செய்யச் சம்மதிச்சனீங்கள்?" என்றாள் எரிச்சலை வெளிக்காட்டி.


"வேற என்ன செய்ய ஏலும்? அதுகளிட்ட ஒரு ஊரை ஆளுற சொத்திருக்குதே! இஞ்ச வெள்ளைக்காரிய கலியாணம் கட்டீட்டன் எண்டா, முழுசொத்தையும் ஏழை பாழையலுக்கு குடுத்திட்டு செத்துடுங்களே! அது என்ர அப்பாக்கு சேர வேண்டியது. அவர் இல்லாத இடத்தில எனக்குத்தான் சொந்தம்." என்றவனை அருவெறுக்கும் பார்வை பார்த்தாள் மிருதுளா.


பின்னே அற்ப பெருளுங்கு ஆசைப்பட்டு, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை நாசம் செய்யும் அளவிற்கு கேவலமானவனா அவள் கணவன்? இப்படி ஒருவருடன் வாழ்வதை காட்டிலும், எங்கேயாவது போய் இறந்து விடலாம்.


"ச்சீ நீயெல்லாம் ஒரு மனுசன்? உன்கூட கட்டிலை வேற பகிர்ந்துக்கிட்டனே!" ஆற்றமை கண்ணீராக மாற, "அய்யாே... இவனை நம்பி இவ்வளவு தூரம் வந்தனே!" ஓ...வெனப் பெரிதாகக் கத்தியவள் கன்னத்தில் ஓடிவந்து ஓர் அறை விட்டவன்,


"வாய மூர்றி... கத்தி அக்கம் பக்கத்தில இருக்கிறவய கூப்பிட பாக்குறீயா? இங்க பாருடி... வாயை மூடிக்கொண்டு இந்த வீட்டில இருக்கிறது எண்டா இரு. இல்லாட்டிக்கு இப்பவே வீட்டில இருந்து வெளிக்கிடு!" என்றான் இரைச்சலாக.


அவனுக்கு அவள் சத்தமிட்டால் பிரச்சினை. அக்கம் பக்கத்தினர், பொலிஸிற்கு தகவல் தந்தால், அவளை மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிப்பார்கள், பின்னர் இவன் கம்பி எண்ணப் போவதுடன், எதற்காக வெள்ளைக்காரியை காதலிப்பது போல் நடித்து, திருமணம் செய்தானோ, அந்த ஆசையும் நிராசை ஆகிவிடும் என்ற பயம் அவனுக்கு.


ஆம்! அவன் அவளுக்குமே உண்மையாக இல்லை. அவனைப் பொறுத்தவரை, காலம் முழுவதும் இந்த நாட்டிலேயே வாழ வேண்டும், அதற்கு இங்குள்ள மொழியினைப் படித்துத் தேர்வு எழுதிப் பிரஜா உரிமை வாங்குவது என்பது அவனுக்குக் குதிரைக் கொம்பான விடையம். அதனால் அதற்கும் ஓர் இலகுவான வழியினை தேர்ந்தெடு்தான்.


அது தான், அங்குள்ள நாட்டு பெண்ணைத் திருமணம் செய்தால், இலகுவாக அவனும் அந்த நாட்டுப் பிரயை ஆகி விடலாம். அதனால் தான், செரிக்கு வலை போட்டுக் காத்திருந்தவன் சதி தெரியாது, அதுவும் வந்து மாட்டிக் காெண்டது.


வாரம் ஒரு முறை மிருதுளாவை பார்க்க வரும்போது, நண்பனைப் பார்க்க வருவதாகக் கூறிவிட்டு வருபவன், இரண்டு நாட்கள் தங்கிவிட்டு செல்வான். காரணம் கேட்டால், தனிமையில் இருப்பவனுக்கு மன அழுத்தம், அதனால் இரண்டு நாட்கள் தங்கி, அவனைத் தேற்றிவிட்டு வருகிறேன் என்ற பொய் வேறு.


வெள்ளைக்காரி ஆயிற்றே... இவன் இங்கு என்ன திருகுதாளம் செய்யப் போகிறான் என்ற நம்பிககையில் அவளும் அவனைக் குடையவில்லை. அது அவனுக்குச் சாதகமாகிப் போனது.


அறைந்த அறையில் தலையில் ஓடும் நரம்புகள் எல்லாம் ஒரு வினாடி வேலை நிறுத்தம் செய்து இயங்க, கன்னத்தை அழுத்தியவாறு அவனையே பார்த்தாள் அவள்.


"என்னடி முறைக்கிற? போறதுக்கு போக்கிடம் இல்லையா? தெரியுது தானே! அப்ப எல்லாத்தையும் மூடிக் கொண்டு இருக்கிற... அதை விட்டுட்டு, அப்பப்பாட்ட சொல்லுறன், நொப்பப்பாட்ட சொல்லுறன் எண்டு எதாவது சத்தம் போட்டா எண்டு வை! இங்கயே வெட்டி புதைச்சாலும், ஏனெண்டு யாரும் கேட்க மாட்டினம்." என்றவன், வந்த வழியே திரும்பி விட்டான்.


பாவம் மிருதுளா தான் என்ன செய்வாள்? இங்கு இருக்க வேண்டாம் தான். இவன் செய்த துரோகத்திற்கு இவனுடன் யாராலும் இருக்க முடியாது தான், ஆனால் அவளுக்கு அங்கு யாரை தெரியும்? யாரிடம் போய் இப்படி ஓர் கொடூரமானவனிடம் சிக்கிக் கொண்டேன் என்று புகாரளிப்பது? என்ன செய்தாலும், அங்குத் தான் இருந்தாக வேண்டும். ஆனால் எப்படி?


பெற்றவளின் ஆராய்ச்சியற்ற அவசர புத்தியால் அவளல்லவா அனுபவிக்கின்றாள். அழுவதைத் தவிர வேறு ஆறுதல் அவளுக்கு என்ன? தேற்றுவோர் அற்று தன் நிலையினை நினைத்துக் கரைந்தவளை அந்த நிலையிலிருந்து மீட்க நினைத்ததோ அந்தப் போன், அது தன் இயக்கத்தை ஆரம்பித்தது. இருக்கும் நிலையில் இது இப்போது அவசியம், ஏற்கவில்லை அவள். அதுவும் அவளைப் போல், அழுது விட்டு ஓய்ந்து போனது.
 
  • Love
Reactions: ரமா

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
509
167
43
Dindugal
நெக்ஷ்ட் எபிசோட் எப்போ சிஸ்