• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
876
அத்தியாயம் -17

மனைவியின் அந்த கோலத்தை பார்த்தபடியே சிறிது நேரம் நின்று இருந்தவன் பின்னர் கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை சரி செய்துகொண்டு மெல்ல அவளின் அருகில் அமர்ந்தான். புயலில் சிக்கிய கொடிபோல் துவண்டு போய் கிடந்தவளை மெல்ல எடுத்து தனது மடியில் கிடத்தியவன் களைந்து கிடந்த முடிகளை மெல்ல சீர் படுத்தியவன் “ஏண்டி இப்படி பண்ற.....எல்லாமே பிடிவாதம் தான்.......பொறுமைனா உனக்கு என்னனு தெரியாதா...இப்போ என்ன நடந்திடுச்சு நீ இப்படி கண்ணீரோட படுத்திருக்க......நான் செய்யறது எல்லாம் உன் நன்மைக்குதான் ...அதை எப்போ நீ புரிஞ்சுக்க போற” என்றபடி அவளை ஏக்கமாக பார்த்தவன்

“ம்ம்ம்ம் ஆசை உனக்கு மட்டும் தானா.....எனக்கு இல்லையா......ஆனா நான் ..நான் இதை எப்படி உனக்கு சொல்லி புரிய வைப்பேன்....உங்களை பத்தி எல்லாம் எனக்கு தெரியும் ..எனக்கு தெரியும்னு எப்போ பார்த்தாலும் சொல்லுவியே ..... உனக்கு என்னடி தெரியும் ....அப்படி தெரிஞ்சிருந்தா நீ இப்படி அழுதுகிட்டு படுத்திருக்க மாட்ட...........” என அவனுக்குள்ளே சொல்லிகொண்டவன் அயர்ந்த பெருமூச்சுடன் அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.

மனம் நினைவுகளின் பிடியில் இருக்க மனைவியின் தலையை மெல்ல தடவியபடி அமர்ந்திருந்தவன் மலரோடு அவன் சண்டைபோடுவதை விட அவன் மனதோடு அவன் சண்டை போடும் நேரம் தான் அதிகமாக இருந்தது. பார்த்தவுடன் எளிதில் பழகி மற்றவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் மாதேஷின் மறுபக்கத்தை அவன் மட்டுமே அறிவான்.
. நினைத்ததை அடைய முடியாமல் கிடைத்ததை தான் நினைத்தபடி அவன் மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய அதற்காக தனக்குள்ளே ஒரு முகமூடி அணிந்து கொண்டு எடுக்கும் முயற்சிகள் யாவும் அவனுக்கு எதிராகவே அமைய என்ன செய்வது தடுமாறி நின்றான் இந்த மான்விழியாளின் மணாளன் .

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் அதற்குள் அவனது மனசாட்சி கண்விழித்து “ என்ன பச்சாதாபமா .........இதை தான் முன்பே சொன்னேன்......உனக்கு மன உறுதி கிடையாது..... நீ ஏமாந்து விடுவாய் என்று ... நீ தான் நான் அப்படி எல்லாம் மயங்கிவிடமாட்டேன்...என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றாய் ......ஆனால் இப்போது நடப்பது எல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லை.....அன்று நீ சொன்ன வார்த்தை இப்போது பொய்த்து விட்டதா ...இனி என்ன செய்யபோகிறாய்?”.....என கேலி செய்ய

“இல்லை இல்லை நான் ஏமாறமாட்டேன்......எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்” என்றபடி வேகமாக எழுந்தவன் சமையல் அறையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

ஜில்லென நீர் பட்டதும் வேகமாக எழுந்தவள் அழுது சிவந்திருந்த விழிகளின் இமைகளை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு விரித்து நிமிர்ந்து பார்க்க...... இடுப்பில் கை வைத்தபடி அவளை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான் மாதேஷ்.

முதலில் புரியாமல் விழித்தவள் “நீங்க ஆபிஸ் போகலையா ...மணி என்ன ஆச்சு” என்றபடி வேகமாக எழ முற்பட்டு காலையில் இருந்து சாப்பிடததால் தலை சுற்றுவது போல இருக்க தலையை பிடித்தபடி அதே இடத்தில அமர்ந்தாள்.

“ஏன் மகாராணிக்கு இன்னும் உறக்கம் தெளியலையோ “ என அவன் கிண்டல் தோனியில் கேட்கவும்

அவளோ சோர்ந்தபடி “இல்லைங்க அது வந்து...வந்து கொஞ்சம் அசந்துட்டேன்... இதோ இப்போ காலேஜ்க்கு கிளம்பனும்” என மீண்டும் எழ முயற்சித்தாள்.

“ஓ காலேஜ் போகணும்கிறது உனக்கு நியாபகம் இருக்கா...அப்படி இருந்திருந்தா இப்படிதான் ஒரு நாள் முழுவதும் குறட்டை விட்டு தூங்குவியா..கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா............ஒரு மனுஷன் வந்து வீட்டை திறந்து விளக்கு போடறது கூட தெரியாம நீ தூங்கிட்டு இருக்க”......என கோபமாய் கேட்க

அவளுக்கோ அந்த மனநிலையில் அவனது பேச்சு எரிச்சலை உண்டு பண்ண “சும்மா திட்டாதீங்க......நீங்க ஆபிஸ் போகாம இங்க என்ன பண்றீங்க..... எப்போ பார்த்தாலும் நொய் நொய்னு ஏதாவது சொல்லிகிட்டே இருக்கிறது” என்றவள் “அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும் தானா ........ நீங்க தான் கடமை கண்ணியம் கட்டுபாட்டிற்கு கசின் பிரதர் ஆச்சே ..............நீங்க முதல்ல ஆபிஸ் கிளம்புங்க ” என படபடவென பொரிந்து தள்ளியவள் “பெருசா என்னை சொல்ல வந்திட்டார். தள்ளுங்க நான் போய் குளிச்சுட்டு காலேஜ்க்கு கிளம்பனும் நேரமாச்சு “ என்றபடி நின்று இருந்தவனை இடித்து தள்ளியபடி வெளியே வந்தவள் கடிகாரத்தை பார்க்க அது இரவு ஏழு மணியை காட்டியது.

“அட சே இந்த வீட்ல கடிகாரம் கூட உருப்படியா இல்லை” என சலித்தபடி குளியல் அறைக்கு செல்ல அப்போது பால்காரர் “அம்மா பால்” என்றபடி வந்து நின்றார்.

“என்ன இப்போ பால் கொண்டு வந்திருக்கீங்க” என்றபடி வெளிவாசலுக்கு வந்தவள் அப்போது தான் இரவு நேரம் தெரிய “என்னது ராத்திரி ஆகிடுச்சா” என கேட்டபடி உள்ளே பார்க்க அங்கே அவள் அலம்பல்களை பார்த்து முறைத்தபடி நின்று இருந்தான் அவள் கணவன்.

பதட்டத்தில் வார்த்தை தந்தி அடிக்க “ஹிஹிஹிஹி நான் இன்னும் நேரம் இருக்கு” என உலரியவள் அதற்குள் பால்காரர் மீண்டும் அழைக்க மாதேஷ் பால் வாங்கி கொண்டு சென்றான்.


பால்காரர் சென்றதும் அவன் பின்னே பம்மிக்கொண்டு வந்தவள் “அது வந்துங்க அந்த புடவையை பார்த்ததும் அப்படியே பழசு எல்லாம் நியாபகம் வந்திடுச்சு ...அந்த நினைப்பிலே கொஞ்சம் ” என வார்த்தை முடிக்காமல் அவன் முகத்தை பார்க்க

அதைக்கேட்டதும் ஏற்கனவே தான் மனசாட்சியின் கேள்வியில் எரிச்சலில் இருந்தவன் மேலும் அவனது கோபம் அதிகமாக ஆத்திரத்தில் “என்னடி பழசு பழசுனு சொல்ற ....வேண்டாம் வேண்டாம்னு சொன்னவனை கட்டாயபடுத்தி கல்யணம் பண்ணி நினைச்சத சாதிச்சு நீ ஜெயிச்சு நான் தோத்து போனதை நினைச்சு சந்தோஷபட்டுகிட்டு இருந்தியாக்கும்” என வார்தைகளை அனலாக கக்கவும்

சட்டென அவள் முகம் சிறுத்து கண்களில் நீர் திரண்டு நிற்க, பற்களால் உதட்டை கடித்தபடி , கைகளை இறுக்க மூடியபடி தலைகுனிந்து நின்றாள்.. 1


. .
அவள் நிலை பார்த்து மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவன் மனதின் கோபம் வடியாமல் இருக்க “எப்போ பார்த்தாலும் கனவிலே வாழ்ந்துகிட்டு இரு......எதார்த்தமான வாழக்கைக்கு வராத.... நீ ஆசைப்பட்டது எல்லாம் உடனே நடக்கணும்...அதே மாதிரிதான மத்தவங்களும் ஆசைப்பட்டு இருப்பாங்க ....அதை நீ கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா” என ஆரம்பித்தவன் எப்போதும் போல் அவளை வார்த்தைகளால் வருத்து எடுக்க அவளும் எப்போதும் போல் தலையை கீழே போட்டபடி நின்று இருந்தாள்.

ஏற்கனவே உடலால் சோர்வுற்று இருந்தவள் அவனின் வார்த்தைகள் மனதையும் ரணமாக்க, அதற்கு ஏற்றார் போல் அவன் நிற்க வைத்து திட்டி கொண்டிருந்தான். அந்த நேரத்தில் மாதேஷின் அலைபேசி ஒலிக்கவும் அதை எடுத்து கொண்டு அவன் வெளியில் செல்லவும் தான் அவளால் மூச்சு விட முடிந்தது.

சில நொடிகளில் “அட கடவுளே நான் மறந்தே போயிட்டேன்” என புலம்பியபடி சமயலறைக்குள் வந்தான் மாதேஷ். இப்போது அவன் முகத்தில் கோபம் மறைந்து ஒரு பதட்டம் இருந்தது.

மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறானோ என்ற பயத்தில் அவள் திடுக்கிட்டு அவன் முகத்தை பார்க்க

“இப்போ எதுக்கு இந்த முட்டைகண்ணை உருட்டி எல்லாரையும் பயமுறுத்திற” என அவன் வேகமாக கேட்கவும்

அவளோ சட்டென விழிகளை தாழ்த்தி வேறு பக்கம் பார்த்தாள்.


“ஆமா அது எப்புடிடி எல்லாமே செஞ்சிட்டு அப்பாவி மாதிரி முகத்தை வச்சிருக்க” என்றவன் ..... “எல்லாம் உன்னாலதான் ...இப்போ நான் என்ன பண்றது” ............. ......உன்னை பார்த்ததும் கோபத்தில எல்லாம் மறந்திடுச்சு”......என அவன் சம்பந்தம் இல்லாமல் பேச

“இவன் இப்போ எதை பத்தி பேசறான்......என அவள் புரியாமல் அவனை பார்த்தவள் என்ன வேணும்...என்ன மறந்திடுச்சு” என கேட்டாள்.

“எங்க பெரியக்கா கொளுந்தானருக்கு கல்யாண ஜவுளி எடுக்க அம்மா ,அக்கா ,மாமா எல்லாம் வரேன்னு சொல்லி இருந்தாங்க.....இரண்டு நாளைக்கு இங்கதான் தங்க போறாங்கலாம். ....நைட் டிபன் ரெடி பண்ணிடுன்னு அம்மா மதியம் போன் பண்ணாங்க......அதுக்குள்ள ஒரு மீட்டிங் இருந்தது......அப்படியே மறந்திட்டேன்... வந்த உடனே சொல்லலாம்னு நினைச்சா நீ நாள் முழுசும் தூங்கிட்டு இருக்க...... இப்போ பஸ்டாண்டு வந்திட்டோம்......இன்னும் அரைமணி நேரத்தில வந்திடுவோம்னு போன் பண்றாங்க .... நான் என்ன பண்றது......எல்லாம் உன்னாலதான்” என ஏதோ அவள் மறந்து போனது போல அவள் மீது குற்றத்தை சுமத்தி திட்டி கொண்டிருந்தான்.

அதுவரை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தவள் அவன் இப்படி பேசியதும் “ எல்லாமே நீ பண்ணிட்டு அதற்கும் என் மேலயே பழிய போடறியா” என்பது போல் அவள் பார்க்கவும் மாதேஷிற்கும் அது புரிய

உடனே “என்னடி இப்போ எதுக்கு இந்த லுக்கு...சரி சரி தப்பு இரண்டு பேர் மேலதான்” என அப்போதும் அவளை தன்னுடன் சேர்த்து கொண்டவன் “இப்போ என்ன பண்றது அவங்க வேற வந்திடுவாங்க......அரைமணி நேரத்தில என்ன செய்ய முடியும்..... நீ தான் படிக்கிற புத்தகத்தில எல்லாம் பலகாரம் செய்வது எப்படின்னு எழுதிட்டு வருவியே.....இப்போ இதுக்கு ஒரு ஐடியா சொல்லு......காலையில இருந்து தூங்கியே அந்த மூளையை ப்ரீயா வச்சிருக்கா...இப்போதாவது அதை பயன்படுத்து” என இந்த நேரத்திலும் அவளை சீண்ட

அவனை சில வினாடிகள் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். சில நொடிகளுக்கு முன்தான் அவளை வார்த்தைகளால் வருத்து எடுத்தான். இப்போதோ சாதரணமாக வந்து பேசறான்.இவன் எப்போ மற்றவர்கள் மனதை புரிஞ்சுக்க போறான் என நினைக்கும்போதே அவளுக்கு ஆயாசமாக இருந்தது. ஆனால் மாதேஷோ அதை கண்டுகொள்ளாமல் புலம்பிகொண்டே நின்று இருந்தான்
பின்னர் அவன் பேச்சை காதில் போட்டு கொள்ளாமல் வேகமாக திரும்பி வேலை ஆரம்பித்தாள். அவனோ “ஏண்டி நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்...நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துகிட்டு இருக்க.....எங்க அம்மா வராங்க” என அந்த வார்த்தையில் அவன் அழுத்தம் கொடுத்து சொல்ல

அவளோ வேலை செய்தபடியே அவன் முகத்தை பார்க்காமல் “இப்போ எதுக்கு தொன தொணன்னு பேசறிங்க...உங்களுக்கு நைட் டிபன் செய்யணும்..அவளோதான....இட்லி தோசை, தயிர் சேமியா பண்ணிடறேன்.....நீங்க முதல்ல வரவங்க தங்க ஏற்பாடு பண்ணுங்க......நான் சமையல் வேலையை பார்த்துகிறேன்” என சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.

அவளது பேச்சில் சற்று நிதானமானவன் பின் “உன்னால முடியுமா......நான் கடையில வாங்கிட்டு வந்திடட்டுமா.....ஆனா அம்மா” என அவன் இழுக்கவும்

அவளோ “நான் பார்த்துகிறேன்......அவங்களுக்கு டிபன் நான் ரெடி பண்றேன்.....நீங்க கவலைபடாதீங்க” என்றாள்.

முகத்தில் சோர்வு அப்பட்டமாக தெரிய, அழுது அழுது கண்கள் வீங்கி இருக்க, அந்த நிலையிலும் சுறுசுறுப்பாக அவள் வேலை செய்வதை பார்க்கவும் அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி எழுந்தது.

அவன் பேச்சு அவளை எந்த அளவுக்கு வருத்தி இருக்கும் என்பது அவனுக்கே தெரியும். அந்த நேரத்தில் அவன் ஆத்திரத்தில் பேசிவிட்டான். ஆனால் அதன் பின் நினைத்து பார்க்க அவனுக்கே கஷ்டமாக இருந்தது. ....... மேலும் உறவினர்கள் வருவதை இவன் முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும்.....அதையும் செய்ய வில்லை...... எல்லா தவறும் தன் பக்கம் இருந்தாலும் அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் மலர் எப்போதும் போல் வேலை செய்வது அவனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இவள் என் மனைவி...நான் சொல்வதை அப்படியே கேட்கிறாள் என்ற கர்வம் வருவதை அவனால் தடுக்க முடியவில்லை.

பின்னர் கற்பகம், மாதேஷின் அக்கா, மாமா மற்று உறவினர் என ஏழு எட்டு பேர் வந்திருக்க .அனைவர்க்கும் தேவையானதை பார்த்து பார்த்து செய்தாள் மலர். அதற்குமே கற்பகம் “சம்பந்தி வீட்டுகாரங்க வந்திருக்காங்க ...வெறும் தோசை, இட்லின்னு செய்யாம வேற ஏதாவது செஞ்சு இருக்கலாம்” என குற்றம் சொல்ல “நாளைக்கு செஞ்சிடறேன் அத்தை” என்றாள் மலர். மாதேஷும் அதை கேட்டு கொண்டுதான் இருந்தான். 2

மறுநாள் அவர்கள் ஜவுளி எடுக்க அனைவரும் கிளம்ப மலர் சமையல் அறையில் வேலையாக இருந்தாள். .அப்போது அங்கு வந்த மாதேஷின் தமக்கை “மலரு எங்க வீட்டுகாரர் கவுச்சி இல்லாம சாப்பிடமாட்டார்...அதனால் நீ மட்டன் கறி,சிக்கன் குழம்பு அப்புறம் முடிஞ்சா பிரியாணி செஞ்சிடு” என்றார்.

இதை எதிர்பார்க்காத மலரோ திரு திருவென முழிக்க அப்போது அங்கு வந்த மாதேஷ் இதை கேட்டவன் அதற்கு மேல் அதிர்ச்சியானான்..

அவள் அசைவம் சாப்பிடமாட்டாள் ,சமைக்கவும் தெரியாது என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். இரவு உணவிற்கே கற்பகம் பொருமி தள்ளிவிட்டார். இனி அசைவமும் இவளுக்கு செய்ய தெரியாது என சொன்னால் அவ்ளோதான்.....கற்பகம் பொங்கி எழுந்து விடுவார். எனவே எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தான் மாதேஷ். மலரை பார்க்கவும் பாவமாக இருந்தது அவனுக்கு.

அவனது தமக்கை சென்றதும் கண்களில் பீதியுடன் நின்று கொண்டிருந்தவளின் அருகில் சென்றவன் “மலர் உன்னால சமைக்க முடியுமா?” என கேட்க

உடனே அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட

“ஏண்டி இந்த கண்ணுக்குள்ள டேம் கட்டி வச்சிருக்கியா என்ன? எத சொன்னாலும் தண்ணீர் வந்திடுது”......என அந்த நேரத்திலும் அவளிடம் கிண்டல் பேசினாலும் “நீ கவலை படாத ...நான் ஆபிஸ் போனதும் கடையில் வாங்கி கொடுத்து விடறேன்...இவங்க வெளியே போயிட்டு வரதுக்குள்ள நீ வீட்டு பாத்திரத்துல ஊத்தி வைச்சிடு” என சொல்லவும் அவள் முகத்தில் அப்போதுதான் ஒரு நிம்மதி வந்தது.

“சீக்கிரம் வாங்கி அனுப்பிடுங்க”..... என அவள் கெஞ்சலாக சொல்லவும்

“நீ கவலைபடாத நான் பார்த்துகிறேன்” என அவளுக்கு நம்பிக்கை அளித்தான்.

அதற்குள் அங்கு வந்த கற்பகம் “என்ன இன்னும் சலசலன்னு பேச்சு...........இங்க பாரு மலரு நம்ம வீட்டு மாப்பிள்ளைக்கு எப்பவும் மரியாதை குறைய கூடாது.உன்னால முடிஞ்சா நண்டு வறுவலும் சேர்த்து செஞ்சு வச்சிடு” என அதிகாரமாக சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் “வாடா மாதேஷ்.....நேரமாச்சு...எங்களை கடையில இறக்கி விட்டுட்டு நீ ஆபிஸ் போ” என அவனையும் இழுத்து சென்றார்.


அலுவலகத்திற்கு சென்றவனுக்கு மனமெல்லாம் வீட்டிலே இருந்தது. நேற்று இரவு எல்லா வேலையும் முடித்துவிட்டு மலர் வந்து உறங்க இரவு ஒரு மணி ஆகிவிட்டாது.....மேலும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விருந்தினர்களுக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்து விட்டாள்.. அவள் இப்படி வேலை செய்வாள் என்பதை மாதேஷ் இப்போது தான் பார்கிறான். கற்பகம் வேறு பூரி போடு... குருமா செய், இடியாப்பம் செய் என அவளை வாட்டி எடுத்துவிட்டார். இதை எல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தான் மாதேஷ். அவனால் அது மட்டுமே முடிந்தது.


ஏனெனெனில் திருமணம் முடிந்து முதன் முறை உறவினர்கள் வந்து இருக்கிறார்கள். மேலும் மாதேஷ் குடும்பத்தில் எப்போதும் உறவினர்களுக்கு மரியாதை அதிகம். பாதி நாட்கள் அவர்கள் வீட்டில் விருந்தாகத்தான் இருக்கும். அது இவர்கள் குடும்ப வழக்கம். ஆனால் மலருக்கு இது எல்லாம் புதிது. அதை மாதேஷும் உணர்ந்து இருந்தான்.

உறவினர்களை கடைவீதியில் இறக்கி விட்டுவிட்டு தனது அலுவலகம் வந்தான். உள்ளே நுழைந்ததும் ஆபிஸ் பையனை தேட அவன் வெளியே சென்று இருந்தததால் வந்துவுடன் சொல்லி கொள்ளலாம் என நினைத்து வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் ஆடிட்டிங் சம்பந்தமாக பேச அதிகாரிகள் அவனது அறைக்குள் வர காலை பத்து முப்பதிற்கு நுழைந்தவர்கள் மாலை ஆறு மணிக்குதான் வேலை முடித்து வெளியில் சென்றனர். அதுவரை அவனது அலைபேசியும் உயிரற்று கிடந்தது.


ஆடிட்டிங் முடித்து அனைவரும் சென்ற பின்தான் அவனுக்கு வீட்டு நியாபகமே வந்தது. வேகமாக வந்து செல்போனை உயிர்பித்தவன் அதில் வீட்டில் இருந்து எண்ணற்ற அழைப்புகள் வந்து இருந்தன.

அதை பார்த்ததும் அவனுக்கு பயத்தில் உள்காய்ச்சல் வருவது போல் இருந்தது. “ஆஹா மாதேஷ் உன் வீட்ல இன்னைக்கு தீபாவளி தாண்டா” என போனை பார்த்தபடி பேசி கொண்டிருக்க

அப்போது அந்த பக்கம் வந்த கோபி “என்ன மச்சான் செல்போனை பார்த்து பேசிட்டு இருக்க......DUBMASH பண்றியா.......என்னம்மா இப்பிடி பண்ட்றீங்க்லேமா டயலாக்கா” என்றபடி அவன் அருகில் வந்தான்.

அதை கேட்டதும் அவனை முறைத்தபடி “ஏண்டா என் நிலைமை உனக்கு கேலியா தெரியுது......எல்லாம் என் நேரம்”.....என அவன் சலித்தபடி சொல்லவும்

“ஏன் மச்சான் இவ்ளோ பீலிங்கா பேசற.....உனக்கும் மலருக்கும் சண்டையா” என்றவன் அப்படியே இருந்தாலும் நீ கைபிள்ளை பரம்பரை ஆச்சே........ அதுக்கு எல்லாம் அசறமாட்டியே .........இப்போ என்ன இம்புட்டு சோகம் “ என சூழ்நிலை தெரியாமல் அவன் மேலும் கிண்டல் பண்ண

“கடுப்பு ஏத்தாதடா வீட்டுக்கு போறதுக்கே பயமா இருக்கு” என்றான் மாதேஷ்.

“ம்ம்ம்ம் ஏன் மச்சான் என்னாச்சு” என்றான் கோபி.

“வீட்ல அம்மா ,அக்கா சொந்தகாரங்க எல்லாரும் வந்து இருக்காங்க” என சொல்லவும்


“அப்படியா அம்மாவை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..... நானும் உங்க வீட்டுக்கு வரேன் மச்சான்” என்றான் கோபி .

“நான் போறதுக்கே யோசிச்சிட்டு இருக்கேன்......இவன் தானா வந்து தலைய கொடுக்கிரானே” என நினைத்தவன் “போலாம் மச்சான் ஆனா ஒரு சிக்கல்” என நடந்ததை சொன்னவன் “அவளுக்கு அசைவம் சமைக்க தெரியாது. என்னை நம்பி இருந்திருப்பா...... இன்னைக்குன்னு இந்த ஆடிட்டிங் வந்து எல்லாமே சொதப்பிடுச்சு....மதியம் எல்லாரும் வீட்டுக்கு வந்து இருப்பாங்க.....சாப்பாடு இருந்திருக்காது......எல்லாம் தெரிஞ்சிருக்கும்.........பாவம் மலர் .....என அவன் சொல்ல


“என்னடா சொல்ற ....அப்போ இன்னைக்கு வறுவல் மலர்...சுக்கா நீ தானா ” என கோபி கிண்டலாக கேட்க

“மாதேஷோ கடுப்புடன் ....... “அட போடா ஆடிட்டிங் இருந்தததால போன் ஆப்ல இருந்தது. இப்போதான் ஆன் பண்ணேன்.....இங்க பாரு இருபத்தி அஞ்சு கால் வந்திருக்கு......அங்க என்ன நடந்திருக்குமுன்னு நீயே கற்பனை பண்ணிக்கோ” என்றான் அவன். 3.

“அடடா இது ரொம்ப கஷ்டமா தான்......இப்போ என்னடா பண்ண போற....உங்க அம்மா சாதாரணமாவே ரொம்பாஆஆஅ அமைதியா பேசுவாங்க....இப்படி இரு காரணம் கிடச்சா அவ்ளோதான் சலங்கை கட்டி ஆடுவாங்களேடா” என கோபி மேலும் அவனை பயமுறுத்த

“அதான் மச்சான் யோசிச்சிட்டு இருக்கேன்....இந்நேரம் வீட்ல ஒரு பெரிய புயல் அடிச்சு ஓய்ந்திருக்கும் என்றவன் ஓய்ந்திருக்குமா ?” என கேள்வியோடு நண்பன் முகத்தை பார்க்க

அவனோ “சரி மச்சான் ...இது உங்க குடும்ப விஷியம்.....உங்க அக்கா வந்திருக்காக , ........உங்க மாமா வந்திருக்காக மற்றும் உன் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக....நீ போய் அவங்களோட குதூகலாமா கும்மி அடிச்சு” என அந்த வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன் “கொண்டாடு ....நான் கிளம்பறேன் மச்சான்” என சூழ்நிலையின் தீவிரம் புரிய வேகமாக அங்கிருந்து நழுவ முயல

மாதேஷோ அவன் சட்டையை பிடித்து இழுத்து “எங்கடா ஓடற......நீயும் என் கூட வர” என பாதுகாப்பிற்கு அவனையும் இழுத்து சென்றான்.

ஆனால் செல்லும் வழி எல்லாம் மலர் பற்றிய பேச்சுதான்..... “நான் எதிர்பார்க்கவே இல்ல மச்சான்......இந்த முறை நான் மலர கொஞ்சம் அதிகமாவே திட்டிட்டேன்...... .....எங்களுக்குள்ள சண்டை வந்திட்டா மூஞ்சுறு மாதிரி முகத்தை தூக்கி வச்சுகிட்டு சுத்துவா.....என்கிட்ட பேசகூட மாட்டா.....


ஆனா நேத்து அத்தனை பிரச்சனைக்கு பிறகும் எங்க வீட்ல இருந்து வராங்கன்னு சொன்னதும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காம எல்லா வேலையும் படபடனு செஞ்சிட்டா மச்சான்..... அவகிட்ட நிறையா நல்ல குணம் இருக்கு.......கொஞ்சம் பிடிவாதம் இருக்கு என அவளை பற்றியே அவன் சிலாகித்து சொல்லி கொண்டிருக்க அவன் பின்னே அமர்ந்து கேட்டுக்கொண்டு வந்த கோபியின் காதில் ரத்தம் வந்துவிட்டது.

வீடு வந்ததும் பயந்துகொண்டே நுழைந்தவன் அங்கு உறவினர்கள் அமர்ந்து ஏதோ காரசாரமாக பேசிகொண்டிருந்தனர்.

“ஆனாலும் ஒரு பொண்ணுக்கு இந்த அழுத்தம் ஆகாதுமா.....எவ்ளோ பெரிய விஷியத்தை மறைச்சிருக்கா “ என அங்கிருந்து ஒருவர் சொல்லவும்

“ஆமாம் ஆமாம் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு இதுக்கு எல்லாம் சொல்லியா தரனும்” என கற்பகம் முகத்தை கோணியபடி சொல்லி கொண்டிருக்க

அதை கேட்ட கோபி ஆஹா மச்சான் எல்லாரும் ஒரு மார்க்கமா தான் பேசிட்டு இருக்காங்க.....மவனே சிக்குன சிக்கன் சுக்கா நீ தாண்டி” என அவன் காதில் முனுமுனுக்க அவனிடம் திரும்பி “ நீயும் ஏண்டா பீதிய கிளப்பிற” என்றபடி மெதுவாக உள்ளே நுழைந்தான் மாதேஷ்.
.

வீட்டிற்குள் ஒரு பெரிய விவாதம் நடந்துகொண்டிருக்க உள்ளே நுழைந்தவன் அந்த கும்பலில் முதலில் கண்கள் தன் மனைவியை தான் தேடியது. அவள் அங்கு இல்லாமலிருக்க அதற்குள் அவனை பார்த்ததும் கற்பகம் “வேகமாக ஏண்டா இப்படிதான் பண்ணுவியா” என கேட்டவர் பின்னால் கோபியை பார்த்ததும் “அட நம்ம கோபி தம்பியும் வந்திருக்கா ...வா வா தம்பி” என அவனை வரவேற்றார்.

உடனே கோபி “வரேன்மா.....நீங்க எப்படி இருக்கீங்க... வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க.....அது சும்மா உங்களை பார்த்திட்டு போலாம்னு வந்தேன்............ சரி நான் கிளம்பறேன்...நீங்க உங்க கச்சேரிய ஆரம்பிங்க...மச்சான் எல்லாத்துக்கும் தய்ராதான் இருக்கான்” என மாதேஷை பார்த்து கேலி சிரிப்புடன் அவன் சொல்ல

அதற்குள் மாதேஷ் “ நீங்க எல்லாம் சாப்டிங்களா ......எந்த பிரச்னையும் இல்லையே .....அது வந்து அவளுக்கு அசைவம் எல்லாம் “ என உண்மைய சொல்ல முற்பட

“ஏண்டா மதியம் இரண்டு மணிக்கு சாப்பிடரதை நைட் ஏழு மணிக்கு வந்து கேட்கிற.......எங்க மேல எவ்ளோ அக்கறை” என அவனின் தமக்கை இடித்துரைக்க

“இல்லைக்கா அது வந்து ஆபிஸ்ல ஆடிட்டிங் ...அதான் போன் எடுக்க முடியலை” என்றவன் வாய் பேசிகொண்டிருக்க கண்களோ அவன் மனைவியை தேடி கொண்டு இருந்தது.

“விடுடி....அவனுக்கும் வேலை இருக்குமுல்ல” என அவனின் மாமா அவனுக்கு உதவிக்கு வந்தார்.

“ஆமாம் மாமா......அதான் வரமுடியலை..... சாரி மாமா நீங்க சாப்ட்டிங்கலா...மலருக்கு மட்டன், சிக்கன் எல்லாம் சமைக்க தெரியாது” என அவன் முடிக்கும் முன்

“ம்ம்க்கும் அதான் நாங்களே பார்த்திட்டமே ......... உன் பொண்டாட்டி கோழி குழம்பு வைக்க சொன்னா கோழி சூப் வச்சு ஊத்றா ....... அது இலையில ஓடுது.....மட்டன் வறுவல் வைக்க சொன்னா முட்டை பொறியல் மாதிரி இத்துணுண்டு வைக்கிறா......இப்படிதான் உனக்கு சோறு போட்றாலா......அவளை மாதிரியே உன்னையும் நோஞ்சானா மாத்திட போறா” என கற்பகம் இடித்து பேச


கேட்ட அவனுக்கோ தலையே சுற்றுவது போலிருந்தது. “மலர் மட்டன் செய்தாளா ” என அவன் அதிர்ச்சியுடன் கேட்க


“ஏண்டா உன் வீட்ல உன் பொண்டாட்டிய தவிர வேற யாரு செய்வா .....அதும் இந்த மாதிரி சமைக்க உன் பொண்டாட்டினால மட்டும் தான் முடியும்”.....என அவர் நக்கலாக பதில் சொல்லவும்

அவனோ கேட்பது எல்லாம் கனவா நினைவா என தெரியாமல் முழித்து கொண்டு நின்றான்.


“.சரி சரி சீக்கிரம் முகம்கழுவிட்டு விட்டு வா சாப்பாடு போடறேன் என்றவர் “கோபி தம்பி நீயும் வாப்பா ........ நாங்க பட்ட அவஸ்தைய நீயும் படு” என கற்பகம் சொல்லவும்


“அம்மா மலர் எங்க” என அதற்கு மேல் தாங்க முடியாமல் கேட்டுவிட்டான்.

“ஏண்டா இத்தனை பேரு உட்கார்ந்து இருக்கோம்......அப்பவும் உன் பொண்டாட்டிய தான் தேடுற......அவளை நாங்க ஏதும் பண்ணலை.... .....அவ இங்க தான் “ என சொல்லி முடிக்கும் முன்

முகமெல்லாம் சிவந்திருக்க கண்களில் வந்துகொண்டிருந்த கண்ணீரை துடைத்து கொண்டு “அத்தை “ என்றபடி சமையல் அறையிலிருந்து வெளியில் வந்தாள் மலர்.


அவளை பார்த்தும் அவன் மனம் பதற ஆனால் அவர்களுக்கு முன்னால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றான். என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் சற்றும் ஊகிக்க முடியவில்லை. பேச்சற்று அவன் நின்று இருக்க

அவளோ “அத்தை வடைக்கு இவ்ளோ வெங்காயம் போதுமா” என கண்களை துடைத்தபடி கேட்க

“போதும் போதும் ...தம்பி வந்திட்டான் பாரு...இத வச்சிட்டு அவனுக்கு சாப்பாடு எடுத்து வை” என கற்பகம் சொன்ன பிறகே அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர்.
 
Top