• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 4

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
நேசம் - 4



இதோ இதோ என்று வரக் கூடாது என்றிருந்த நாளும் வந்து விட்டிருந்தது.


எயார்ப்போட்டில் அழவே கூடாது என்று வைராக்கியமாக நின்றிருந்தவள் கண்கள் எங்கே அவளது கட்டுக்கு அடங்கியது? இமை தாண்டிக் கன்னம் தொட்டிருந்த கண்ணீரைக்கண்ட சியாம்,


"அழாதயும் மிருதுளா... எங்க போகப் போறன்... இன்னும் ஒரு வருசத்துக்குள்ள உம்மையும் கூப்பிட்டுடுவன். பேந்து நீரும் என்னோட தானே வந்து இருக்கப் போறீர்... அப்ப நான் தான் அழோணும்..." கேலி செய்தவன் கேலிக்கு அவள் சிரிப்பது போல் தெரியவில்லை.


"சொல்லுறன் எல்லே... அழாதையும்... எல்லாரும் எங்களையே பாக்கினம்..." என்று அவன் தேற்றியதும் தான், அதுவரை ஊமையாக அழுதவள், வெடித்து அழ ஆரம்பித்தாள். கூட அவனை வழியனுப்ப வந்திருந்த முதியவர் இருவருக்கும் அவள் நிலமையினைக் காணச் சங்கடமாக இருந்தது.


ஓடி வந்து நெஞ்சோடு அவள் தலையினை அணைத்து உச்சியில் முத்தம் வைத்த சியாம்.


"என்னப்பா நீர்...? சின்னக்குழந்தையே உம்மளிட்ட தோத்துடும்... நீர் இப்பிடியே அழுதா நான் எப்பிடி போகேலும்...? வேண்டாம் அப்பப்பா.... இவா இப்பிடியே அழுதா நான் போகேல... பெட்டிய தூக்கிக் கொண்டு நடவுங்காே, வீட்ட போவம்..." என்றான்.


அவனது பேச்சில் சட்டென அவனது நெஞ்சின் மேல் இருந்து எழுந்தவள்,

"இல்ல நான் அழேல..." பரபரவெனக் கண்ணீரின் தடம் தெரியாது துடைத்து எடுத்தவள்,


"இல்ல நான் அழேல... நீங்கள் போட்டு வாங்கோ..." என்றாள். எங்குத் தன்னால் அவன் பயணம் தடைப்பட்டு விடுமோ என்று பயந்து.


"இப்பிடி முகத்தை வச்சு கொண்டு சொன்னா, போக எங்க மனம் வரும்... நான் போகேல..." சின்னக்குழந்தை போல் அடம் பிடிப்பது அவன் முறையானது. புதுத் தம்பதிகளிடம் இந்தளவு ஊடல் கூட இல்லை என்றால் எப்படி?


அவனது அடம் அவளையே அறியாது கீற்றாய் புன்னகையினை உதட்டில் தவழ விட,

"உண்மையா நான் அழேல... இதெல்லாம் பழக்கமில்ல அதான் அழுக வருது. இனி அழமாட்டன். நீங்கச் சந்தோசமா போட்டு வாங்கோ... போனோன்ன போயிட்டன் எண்டு கோல் எடுத்துச் சொல்லுங்கோ... உங்கட கோலுக்காகப் பார்த்துக் கொண்டிருப்பன்..." மூக்கினை உறிஞ்சியவாறு அக்கறையாய் கூறியவள் கழுத்தை வளைத்து, நெற்றியில் மீண்டும் முத்தம் வைத்தவன்,


"ஒண்டுக்கும் யோசிக்காதையும்... இறங்கின உடனம் முதல் கோல் உமக்குத் தான்... அப்ப நான் போட்டு வாறன் என, அப்பப்பா... அப்பம்மா... என்ர மனிசிய பத்திரமா பாருங்கோ... அவளை யோசிக்க விடாதைங்கோ... ஒரு வருசத்துக்குள்ள அவளைக் கூப்பிட்டுடுவன். மாமிக்கும் சொல்லுங்கோ..." கூறியவாறே பிளேனுக்கு நேரம் வர, கைக்காட்டியவாறு உள்ளே ஓடியவனை அனுப்பி விட்டு, மனமே இல்லாது திரும்பினார்கள் மூவரும்.


அவன் கூறியது போல அங்கு இறங்கியதும் முதல் கோல் அவளுக்குத் தான் எடுத்தான். அதன் பின் வேலை வேலை என்று ஓடுபவனை தொலைப்பேசியில் பிடிப்பது கூடக் கடினமானது.

ஆனால் நாளுக்கு ஒரு வேளையாவது அவளுடன் பேசாது அவனது நாள் முடிந்ததில்லை. அதே சமயம் விடுமுறை என்று கிடைத்து விட்டால், அந்த நாளின் மொத்த நேரமும் மிருதுளாவிற்கு என்றே அர்ப்பணித்து விடுவான்.


கிட்டத்தட்ட இப்படியே மூன்று வருடங்கள் ஓடியிருந்தது. ஒரு வருடத்தில் அவளை அழைக்கின்றேன் எனக் கூறினான் தான், ஆனால் அங்கிருந்த கெடுபிடி சட்டங்களினால் சொன்ன நேரத்துக்குள் அவளை அழைக்க முடியாது போயிருந்தது. அப்பப்பாவும், அப்பம்மாவும் அடிக்கடி,


"எப்பயடா என்ர பேத்திய கூப்பிட பாேற....? அவனவன் உடன உடன மனிசிய எடுத்துடுறான். உன்னால தான் எடுக்கேலாம இருக்கோ..." என்று ஊரவர் பேச்சினைக் கேட்டுச் சத்தம் போட, அவனிருக்கும் டென்சனில் அவனும் கத்தி விடுவான். பின்னர் மூன்று நாட்களுக்கு அவனிடமிருந்து எந்த அழைப்பும் வராது. கோபம் தீர்ந்ததும் தானே அழைப்பான்.


அதுவரை கணவன் அழைப்பை எதிர் பார்த்திருப்பவள் தான், ஏங்கிப்போவாள். இதற்கு எல்லாம் முடிவு கட்ட நினைத்த பெரியவரான செல்வநாயகம், எத்தனை இலட்சம் செலவழித்தாலும் சரி, மிருதுளாவை பேரனுடன் சேர்த்து வைப்பதென்று தீர்மானித்து விட்டார்.


எங்கெங்கோ தெரிந்தவர், தெரியாதவர் அலுவலகம் எல்லாம் ஏறி இறங்கி, பல இலட்சம் செலவு செய்து விசாவை வாங்கியவர், அதுவரை விசாவிற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன் என்று ஓர் வார்த்தை பேரனிடம் கூறவில்லை. பிளேன் ரிக்கெட்டினையும் போட்டு விட்டே சியாமிற்கு அழைப்பினைத் தொடுத்தார்.


இவர்கள் நினைத்த நேரத்தில் அழைத்தால் எடுத்து விடுவானா? அதற்கு அவன் வேலை வெட்டி இல்லாது இருக்க வேண்டுமே!


நான்காவது நாள் பிளேன். இரண்டு நாட்கள் ஓயாது அவன் இலக்கத்துக்கு முயன்றவருக்குக் கோபம் ஒரு புறம் என்றால், அவசரப்பட்டு விட்டோமோ என்ற பயம் இன்னாெரு புறம் அவரை ஆட்டிப்படைத்தது.


"இவனிட்ட எத்தினையோ தரம் சொல்லீட்டன் தனம்... ஒரு மனுசர் கோல் எடுத்தா, என்ன ஏதெண்டு எடுத்துக் கேள் எண்டு. நாளைக்கு நாங்கள் செத்துட்டம் எண்டு யாரும் கூப்டாலும், இந்த மாதிரி தான் செய்வான் போல... அதுக்குள்ள பிணம் அழுகிப் போடும். எல்லாம் அந்த நாய் கூட்டத்தின்ர வளப்பு." எரிஞ்சு விளவே ஆரம்பித்து விட்டார்.


"தேவையில்லாத கதை கதைக்காதங்கோ... அவன் என்ன வேலேல நிக்கிறானோ. அவனே எடுப்பான் பொறுங்கோ..." என்றார் அவரைத் தேற்றுவதாய் தனலச்சுமி.


"எப்ப எடுப்பான் எண்டுற...? ரெண்டு நாள்ல பிளேன். இவன் எடுக்காட்டிக்கு என்ர பேத்தீன்ர நிலமைய நினைச்சு பார்த்தியே நீ? இறங்கின உடன எங்க போவா...? யாரை அவளுக்குத் தெரியும்? நானும் மடையன் மாதிரி ரிக்கெட்ட போட்டுட்டன்..." அவசரப்பட்டது தவறோ என்று புலம்பினார்.


"அப்பப்பா கவலை படாதங்கோ... இவர் எப்பிடியும் இன்டைக்கு இல்லாட்டி நாளைக்கு எடுப்பார்... அப்ப எல்லாம் சொல்லுவம்... இப்ப வாங்கோ கொண்டு போகத் தேவையான சாமான சூக்கேஸ்ல அடுக்குவம்..." வயசு போனவர்களை இதற்குமேல் யோசிக்க விடக் கூடாது என்று கதையினை மாற்றி அழைத்துச் சென்றாள் மிருதுளா.


உண்மை தான். அவளை அவர்கள் இருவரும் இன்னொரு வீட்டிலிருந்து வந்தவள் என்ற எண்ணத்தோடு ஒரு நாள் கூடப் பார்த்ததில்லை. தன் வயிற்றுப் பிள்ளையை எப்படிக் குறையில்லாது பார்ப்பார்களோ, அதோ போல் தான் பார்ப்பார்கள். இத்தனை ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்தவர்கள் ஆயிற்றே! உறவின் மதிப்பு என்னவென்று இந்தத் தனிமை உணர்த்தி இருக்காதா என்ன?


மிருதுளாவின் நம்பிக்கையோ, இல்லை என்றால் செல்வநாயகத்தின் அழைப்பின் எண்ணிக்கையோ சியாமை அவர்களிடம் இழுத்து வந்தது.


அழைப்பு ஒலி கேட்டதும், வயதினையும் மறந்து ஓடிச் சென்று கைப்பேசியினை எடுத்துக் காதில் வைக்கவில்லை,


"ஏன் அப்பப்பா இவ்வளவு கோல்...? அங்க ஒருத்தருக்கும் ஒண்டும் இல்ல தானே...!" என்றான் அவர்களுக்குத் தான் ஏதாே என்று பயந்து.


"எங்களுக்கு ஒண்டும் இல்லயடா தம்பி... நீ ஏன் இவ்வளவு நாளும் எடுக்கேல... நாங்கள் எடுத்தாலும் எடுக்கிற இல்ல..."


"சரியான வேல அப்பப்பா... அதான் போன் பக்கமே வரேலாம போச்சு. இப்ப தான் கொஞ்சம் ப்ரீ ஆனன். சரி சொல்லுங்காே என்ன விஷயம்… ஏன் இத்தனை கோல்?"


"இல்லடா... உன்ர மனிசிக்கி விசா எடுத்து ரிக்கெற்றும் போட்டுட்டம். நாளாண்டைக்கு பிளேன்... அதான் உனக்குச் சொல்லுவம் எண்டு கூப்பட்டன்."


"என்ன...?" அதிர்ந்தவனிடம் சிறு வினாடி அமைதி.


"ஓமடா.... உன்னை இதுக்கு மேல எதிர் பாக்கேலாது... பாவம் சின்னப் பெட்டை... எத்தினை நாளைக்குத் தான் புருசன விட்டுட்டு தனியவே இருப்பா... அதோட நாட்டு நிலமையும் தெரியும் தானே! அதான் நானே தெரிஞ்சவேன்ர காலைக் கைய புடிச்சு விசாவ வாங்கிட்டன்..."


"ஏன் அப்பப்பா அவசரப் பட்டனீங்கள்... இப்ப நான் என்ன செய்வன்...?" என்றான் இன்னமும் அதிர்ச்சி விலகாது.


"நீ என்ன செய்யோனும்...? நீ செய்யிற வேலய நான் செய்திட்டன் எண்டு சந்தோச படாம, அவசர பட்டுட்டன் எண்டுற..." அவர் பேசி முடிப்பதற்குள் புலம்பியவன் பேச்சது சரியாகப் படவில்லை அவருக்கு. அதனால் உண்டான கோபத்தை மறைக்காது திட்டவே செய்து விட்டார் அவர்.


"அது அப்பப்பா நான் என்ன... சொல்ல வந்ததைப் பிழையா விளங்கீட்டிங்கள்... நீங்கள் விசா எடுத்தது சந்தோசம் தான், ஆனா ரிக்கெட் போடக்கு முன்னம் எனக்குச் சொல்லியிருக்கோணும். எனக்கு நாளாண்டைக்கு லீவு எடுக்க ஏலாது… முக்கியமான ஒரு மீட்டிங்க்... இருக்கு..." என்க,


"பொண்டாட்டிய கூட்டிக்காெண்டு போறத விட உனக்கு என்ன வேல...? வேல போனாலும் பரவாயில்ல... இவளைக் கூட்டிக்காெண்டு போற... அவ்வளவு தான்..." கண்டிப்பாேடு சொன்னவர்,


"தனம் இந்தா கதைச்சு போட்டு வா... எனக்கு நிறைய வேலை இருக்கு. மிரு நீயும் என்னோட வா... நேர்ல தான் போய்க் கதைக்க போறியே... அங்கயே போய் நல்லா கதை…" கோபத்தில் அவளைப் பேச விடவில்லை அவர்.


தனத்துடன் பேசி வைத்து விட்டான். அவசர கதியில் பெட்டிகளை அடுக்கித் தயாராகி இருந்தவள் எதிர்பார்த்த நாளும் வந்தது.
 
Last edited:

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
185
201
43
Salem
நான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேண்ல இவன்கிட்ட ஏதோ தப்பா இருக்குன்னு
 
  • Like
Reactions: Gowri Yathavan

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
மூணே நாள் பொண்டாட்டியோட இருந்துட்டு மூணு வருஷமா அவள ஃபிரான்ஸ்க்கு கூப்பிடாம இருந்துட்டானே?😬

புதுப்பொண்டாட்டிய எவ்வளவு சீக்கிரம் தன்கிட்ட அழைச்சுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அழைச்சுப்பாங்க... ஆனா இவன்... ?🤨

இவனுக்கு பதிலா அப்பப்பா பணம் செலவு பண்ணி எல்லா ப்ரொசீஜர்ஸ் முடிச்சு விசா எடுத்து டிக்கெட்டும் போட்டு இன்னும் 2 நாள்ல மிருது அங்க வரான்னு சொன்னா சந்தோஷப்படாம திக்கித் திணறுறானே... ஹ்ம்ம் என்னவோ டவுட்டா இருக்கு இவன் மேல... 🙄🧐
 
Last edited:

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
மூணே நாள் பொண்டாட்டியோட இருந்துட்டு மூணு வருஷமா அவள ஃபிரான்ஸ்க்கு கூப்பிடாம இருந்துட்டானே?😬

புதுப்பொண்டாட்டிய எவ்வளவு சீக்கிரம் தன்கிட்ட அழைச்சுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அழைச்சுப்பாங்க... ஆனா இவன்... ?🤨

இவனுக்கு பதிலா அப்பப்பா பணம் செலவு பண்ணி எல்லா ப்ரொசீஜர்ஸ் முடிச்சு விசா எடுத்து டிக்கெட்டும் போட்டு இன்னும் 2 நாள்ல மிருது அங்க வரான்னு சொன்னா சந்தோஷப்படாம திக்கித் திணறுறானே... ஹ்ம்ம் என்னவோ டவுட்டா இருக்கு இவன் மேல... 🙄🧐
நன்றி சிஸ்