• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 5

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
நேசம் - 5




"என்ன அப்பப்பா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... நான் நெடுவ போடுற உடுப்பையே போடுறனே!" சங்கடத்தில் அணிந்திருந்த ரொப்பினை இழுத்து விட்டவாறு கூறியவள் கையினைத் தட்டிவிட்ட தனலச்சுமி…


"உனக்குத்தான் வெக்கம்... அங்க பார்! இதைவிட எப்பிடி எல்லாம் கேவலமா உடுப்பு போட்டிருக்கினம் எண்டு. எல்லாம் மறைக்கிற மாதிரி உடுப்ப போட்டும் உனக்கு வெக்கம்..." என அந்த எயார்ப்போட்டில் நின்றவர்கள் அனைவரது உடையினையும் சுட்டிக்காட்டிக் கூறினார்.


ஆம் அது இலங்கையின் முக்கியமான விமான நிலையமுள்ள நீர் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் தான். அங்கு வந்த பின்பும் அவளது உடுப்புக்கான குடைச்சல் தாளவில்லை பெரியவர்களுக்கு.


"அவயலுக்கு அது பழக்கமா இருக்கும் அப்பம்மா..." சிணுங்கவே ஆரம்பித்தாள்.


"நீயும் இனி பழகோணும் மிரும்மா... அவயலும் பிறக்கேக்கயே இதெல்லாம் போட்டுக்கொண்டு பிறக்கேல... இனி நீ அங்க தான் இருக்க போற... இஞ்சத்த உடுப்பெல்லாம் அங்க போட்டா... விசரி எண்டு தான் உன்னை நினைப்பினம். அதால இங்க இருந்தே அதைப் போடப் பழகு..." என்றார் கண்டிப்பதைப் போல.


"அம்மா.... " என்று மிருதுளா தாயின் புறம் திரும்ப,


"பெரியாக்கள் சொன்னா சரியா இருக்கும்மா... இஞ்ச தான் உனக்குக் கஷ்டமா இருக்கும். அங்க போனா எதுவும் தெரியாது." இதுவரை அடக்கம் ஒடுக்கம் என்று கூறி, கண்ணறை உடையினைக் கூடப் போடவிடாது கண்டிப்பவருக்கு, இன்று அவள் உடுத்திருக்கும் உடைபற்றிய எந்தக் கவலையும் இல்லை. பதிலாக இன்றோடு மகளைப் பிரியப்போகிறோம் என்ற கவலையே பெரிதாய் தலை தூக்கும்போது, இதுவா பெரிதாகத் தெரியும்.


ஏக்கமாக மகளையே பார்த்து நின்ற நேரம்,

"தம்பி இஞ்ச ஒருக்கா வாங்கோ...." என்றார் செல்வநாயகம், அங்கும் இங்குமாய் ஓடித்திரிந்த உதவியாளரை அழைக்கும் பொருட்டு.


"சொல்லுங்கோய்யா... என்ன வேணும். ஏன் கூப்பிட்டனீங்கள்." சிங்களவன் என்று நினைத்துத் தான் சும்மா கூப்பிட்டுப் பார்த்தார். ஆனால் அவனிடமிருந்து பதில் தமிழில் வர, கொஞ்சம் திருப்தியானவர்,


"பிரான்சுக்கு போற பிளேன் ஒரு மணிக்கு எண்டு ரிக்கெட்டில போட்டிருக்கு. இவாவுக்கு பிளேன் எல்லாம் ஏறிப் பழக்கமில்ல. உங்களால இவாவுக்கு உதவி செய்ய ஏலுமே..." என்றார்.


"யாருக்கு...?" என்பதாய் திரும்பியவன் அங்குக் கழுத்தில் பெரிய தாலிக்கொடி மின்ன, வகிட்டிலும், நெற்றியிலும் கஞ்சத்தனம் பாராது அள்ளி மெழுகிய குங்குமத்தையும், தலையினை ஒன்றாக வாரி, பின்னியிருந்தவள், உடுத்திருந்த ஜீன்ஸ்க்கும் ரொப்பிற்கும் சற்றுமே சம்பந்தமே இல்லை. நல்லவேளை பூ வைக்கும் பழக்கமில்லை. இல்லை என்றால், அதையும் தழையத் தழைய சொருவிக் கொண்டு வந்திருப்பாள்.


அவளையே சிறு நொடி உன்னிப்பாகப் பார்த்தவன் பார்வையில் உள்ள வித்தியாசத்தைக் கண்டவள்,


"பாருங்கோ அப்பம்மா… அவரே வித்தியாசமா பாக்கிறார்... இப்பயும் ஒண்டும் இல்ல அப்பம்மா... பஞ்சாபி இந்தச் சூக்கேசில தான் இருக்கு. வெளியால இருக்கிற பாத்ரூம்ல மாத்திக் கொண்டு வாரன்..." என உடையை எடுக்கக் குனிந்தவள் முதுகில் செல்லமாக ஒன்று வைத்தவர்,


"நீ தான் உலகத்தில இல்லாத புது நாணமான பொம்பள மாதிரி நடக்காத... இப்பிடியே நீ செய்யிறாதால தான், இத்தனை வருசம் அவனும் கூப்பிடேல போல... போற நேரத்தில அப்பம்மாட்ட பேச்சு வாங்கிக் கொண்டு போகாம, சொல்லுக் கேள்! நான் சொல்லுறது சரி தானே பரிமளா..." என்று அவளது அன்னையையும் தன்னுடன் கூட்டுக்கு அழைத்தார் தனலச்சுமி.


"ங்ஞ..." எனச் சிறு குழந்தையாட்டம் சிணுங்கியவாறு நின்ற இடத்திலேயே சுற்றியவள், பின்னால் வந்தவர்களைக் கவனிக்கத் தவறியது தான் பரிதாபம்.


யாரோ ஒருவருடன் மோதியதன் பின்னர் தான், அதை உணர்ந்தவளாக மோதியவர் யாரெனத் திரும்புகையில்.


"பார்தோம்..." தடுமாறி விழாது சுதாரித்தவனும் அப்போது தான் அவளைக் கண்டான் போல, விழியினை அகல விரித்து ஆச்சரியம் காட்டிய நேரம்,


"கென்ரி... அலே சீ..." குடும்பத்தோடு வந்திருந்த தமிழரில் ஒருவன் அவனைப் பார்த்து அப்படிக் கூவ,


"ஜு அறீவ்..." என்றவன் மீண்டும் அவளிடம் திரும்பி, "பார்தோம்" என்று கூறிவிட்டு அவனிடம் ஓடினான்.


அவன் கூறியதன் அர்த்தம் புரியாது அவனையே அவள் பார்த்து நிற்க,

"நல்ல காலம்... மோதினது வெள்ளைக்காரனா இருந்ததால தப்பீட்ட. இதுவே எங்கட ஆக்கள் எண்டா, காது கிழிஞ்சிருக்கும். விளையாடினது காணும் மிரும்மா. பிளேன் உன்னை விட்டுட்டு போகப் போகுது. தம்பி நீங்கள் பெட்டிய எடுத்துக் கொண்டு நடவுங்கோ... இவாவ பின்னால அனுப்புறம்… சரி... நீயும் அவரோட நட..." என்றதும்,


"ம்... என்று மனமே இல்லாது தலையசைத்தவளுக்கு, அதுவரை உடையின் மேல் இருந்த கவனம் மாறி, வீட்டினரைப் பிரியப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கியது.


"அம்மா..." தாவி வந்து இறுக்கிக் கட்டிக் காெண்டவள்,

"என்னை மறந்திடாதங்கோம்மா... நான் திரும்ப வருவன். தங்கச்சியாக்களிட்டையும் போட்டு வாரன் எண்டு சொல்லுங்கோ... அப்பப்ப அப்பம்மாவையும், அப்பப்பாவையும் போய்ப் பாருங்கோ. இவ்ளோ நாள் நான் இருந்தில, அவைக்கு ஆறுதலா இருந்திருக்கும். நான் இ்ல்லாட்டிக்கு தனிச்சு போடுவினம். அப்பம்மா... அப்பப்பா..." என அவர்கள் கையிலும் குழந்தையாகத் தவழ்ந்தவளைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்கப் போதும் போதும் என்றானது அவர்களுக்கு.


பிளேனில் ஏறியும் அவள் தேம்பல் நின்ற பாடில்லை. கேவிக் கேவியே அயர்ந்து போனவள், கண் விழிக்கையில் பிரான்சும் வந்திருந்தது.


வரும்போது உதவியுடன் வந்துவிட்டாள். இப்போது எங்கே போய்த் தன் பெட்டியினை எடுப்பது எந்த வழியாக வெளியேறுவது என்று தெரியாது முழித்தவளுக்கு, தன் அருகில் இருந்த வெள்ளைக்காரி நினைவில் வர, அவள் கண்ணில் தென்படுகிறாளா எனத் தேடியவளின் நேரம் நல்ல நேரமாக இருந்திருக்க வேண்டும். அப்போது தான் அவளும் பிளைட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள்.


வேக நடையுடன் தன்னை கடந்து சென்றவள் பின் ஓடாத குறையாக ஓடிச் சென்று பெட்டியினை எடுத்துச் செக் அவுட் செய்து வருதற்குள் போதும் போதும் என்றாக, வெளியே வந்தவளை வரவேற்பது போல் பூங்கொத்தாேடு நின்றான் அவளவன்.


"ஏய் மிரு..." வாய் நிறையப் பல்லாகப் பூங்கொத்தினை அவளை நோக்கி நீட்டியவன்,

"வெல்கம் பிரான்ஸ்" என்று கூறிட,

அவனைக் கண்ட சந்தோசத்தோடு, அவனது உற்சாக வரவேற்பும் அவளையும் உற்சாகப்படுத்தியது.


"தாங்க் கியூ..." என்று அந்தப் பூங்கொத்தினை வாங்கிக் கொண்டவளை, அணைத்து கன்னத்தில் முத்தம் பதித்தவன் செயல், அவளுக்குச் சங்கடமாக இருந்தது.


இது இங்கு வாழ்பவர்களுக்குச் சாதாரணம். ஆனால் ஏதாே ஓர் மூலையில் இருக்கும் கிராமத்தில் வாழ்ந்தவளுக்கு, இந்த நாகரீகம் ஒன்றும் தெரியாதே! மற்றவர்கள் கண்களுக்கு விருந்தாகக் கூடாதென்று நினைத்தவளுக்கும், இதை எல்லாம் யாரும் தமது நேரத்தைச் செலவு செய்து பார்க்கமாட்டார்கள் என்பதுவும் தெரியாது.


"விடுங்கோப்பா... இது என்ன வீடே கட்டிப்பிடிக்கிறீங்கள்..." தள்ளி விட்டாள்.


"ஓம்... இஞ்ச உம்மைத் தான் எல்லாரும் பாக்க போயினம். இதெல்லாம் இஞ்ச சகயமப்பா... வந்த உடனம் விளங்காது, கொஞ்சக் காலம் போனா உமக்கும் விளங்கும். சரி வாரும் போவம்..." என்று காரில் அழைத்துச் சென்றான்.


கார் போகும் இடம் எல்லாம் பூஞ்சோலைகளோ என்பது போல், வீதியின் இரு புறங்களும் எங்கும் பார்த்திராத வித்தியாசமான மலர் கன்றுகள். சிறு இடம் கிடைத்தாலும், அதை வீணடிக்காது ஒரு தொட்டியினை வைத்து, மரமோ இல்லை மலர்ச் செடிகளையோ நட்டு, அதையும் நேர்த்தியாக வெட்டியிருக்கும் அழகினைப் பார்க்கப் பார்க்க, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தான் இருந்தது.


"இதெல்லாம் இவ்வளவு வடிவா இருக்கே! இந்தக் கண்டென்டல்லாம் யார் வைக்கிறது?" என்றாள்.


"மேரி..." என்று பதில் தந்தவன் மறந்து போனான். அவளுக்கு மேரி என்றால் என்னவென்று தெரியாது என்பதை.


"மேரியாே... அது ஆர்... அவாவிட்ட தான், இந்த ரோட்டின்ர பொறுப்பை எல்லாம் குடுத்திருக்கானமோ...?" என்றாள். அவள் கேட்ட கேள்வியில் சிரிப்பு வந்துவிட, கீற்றாய் உதட்டைப் பிரித்து நகைத்தவன்,


"மேரி எண்டுறது ஆளின்ர பேரில்ல மிரு... எங்கட ஊரில ஒவ்வொரு கிராமத்துக்கு எண்டு ஒரு பிரதேசச் செயலகம் இருக்கு தானே. அதை இஞ்ச மேரி எண்டுவம். இந்த மொத்தக் கிராமத்தோட சுத்ததில இருந்து, ஒவ்வொரு நபரா கணக்கு எடுக்கிற வரை, மொத்தப் பொறுப்பும் மேரி தான் பாக்கும். இப்ப நீ இஞ்ச வந்திருக்கிறத நான் போய்ப் பிரான்சின்ர மெயின் ஒபீஸ்ல பதிஞ்சா, இவைக்கு அவயல் தெரியப்படுத்துவினம்." விளக்கமாகச் சொன்னவன் கதை அவள் மண்டையில் சற்றும் ஏறவில்லை... காதுக்குள்ளிருந்து புகை வருவது போலிருந்தது. இருந்தும் ஓ... போட்டாள்.


இப்படியே துடுக்குத்தனமாக ஏதேதோ கேட்டுக்கொண்டு வந்தவளுக்கு, சலிக்காமல் பதில் தந்து கொண்டிருந்தவன் தூரத்தே தெரிந்த ஓர் அடுக்குமாடி தொகுதியைக் காட்டி,


"அங்க தெரியுது பாரும்... அதுக்குள்ள தான் வீடிருக்கு" என்றான்.


"என்ன? அந்தளவு மாடியும் எங்கடயா...?" வாயைப் பிளந்தாள்.


"உங்கட தான்... நல்லா சொல்லிடுவன்... அதில பதினாறு வீடிருக்கு... அதில ஒரு வீடுதான் எங்கட... அதுவும் சொந்த வீடில்ல... வாடகை தான்..." என்றான் பெருமூச்சொன்றை எறிந்து.


"ஓ..." என்றவாறு அந்தக் கட்டடத்தையே அவள் பார்த்திருக்க, காரானது குகை பாேல் அமைக்கப்பட்டிருந்த ஒரு பள்ளமான ஓடையின் வாயிலில் சறுக்கிக் கொண்டு போனதும், தானாகத் திறந்து கொண்ட கதவினையே வாய் பிளந்து பார்த்திருந்தவள்,


"கார் வருது எண்டு கதவுக்கு எப்பிடி தெரியும்? தானாத் திறக்குது..." என்றாள் இமைகளைச் சுருக்கி. அவளது குழந்தைத் தனமான கேள்வி, மீண்டும் கீற்றாய் புன்னகையினை பிரசவிக்க,


"அதுவே திறக்கேல மிரு... இஞ்ச பாரும்... இந்தக் கார் திறப்போட ஒரு பட்டன் இருக்கு. அதை நான் வாசல்ல வரேக்கையே அமத்தீட்டான் அதான் திறக்குது..." என்றான்.


"ஓ... இவ்வளவு இருக்கோ..." ஆச்சரியமாகிப் போனது.


"இவ்வளவு மட்டும் இல்ல மிரு… கனக்க இருக்கு... ஒன்டொன்டா நீரே பழகலாம்..." கூறிக் கொண்டே தனக்கான கார் பார்க்கிங்கில் காரை விட்டவன்,


"இறங்கும் போவம்..." என்றான்.


நில மட்டத்திலிருந்து கீழே தான் பார்க்கிங். ஆனால் தானாக இயங்கும் மின் குமிழ்களால் அந்த இடம் முழுவதும் வெளியே உள்ளது போல் வெளிச்சம் பரவ, கார் உள்ளே வந்த பாதையின் புறம் திரும்பி நடந்த மிருதுளாவின் கையினை வரமாகப் பற்றி இழுத்தவன்,


"எங்க போறீர்...?" என்றான்.


"வீட்ட போவேண்டாமா...? இது தானே பாதை" அப்பாவியாய் கூறினாள்.


"அது கார் மட்டும் தான் போற பாதை..."


"அப்ப நாங்கள்...?" குழந்தை போலவே கண்ணை மின்னினாள்.


"எங்களுக்கு இந்தப் பக்கம் பாதை இருக்கு… இதால போனா, வீட்டு வாசல்ல போய் நிக்கலாம்..." என்றான்.



"ஓ..." என்றவளுக்கு எதுவுமே புரியவில்லை. தெரிந்தவன் கூறுகையில் கேட்டுதானே ஆக வேண்டும். ஓடாத குறையாக அவன் பின்னே ஓடினாள்.
 
Last edited:
  • Love
Reactions: ரமா