• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 7

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
நேசம் - 7




இதமாய் வெய்யோனின் கதிர்கள் மென்மையாக அவன் உடல் தழுவ, அதுவரை போர்வைக்குள் தன்னைக் குறுக்கிப் படுத்திருந்தவன், பெரும் கொட்டாவி ஒன்றினை விட்டுக்கொண்டு எழுந்தமர்ந்தான்.


சில மாதங்களாக அவன் அறையினை வெயில் தொட்டதே இல்லை. தொடுவதற்கு வெயில் என்று ஒன்று வரவேண்டுமே! அப்படி வந்தாலும், அங்கு அடிக்கும் குளிருக்கு அது வந்த தடம் தெரியாமலே மறைந்து போய் விடும்.


பனிக்காலம் இப்போது தான் சற்று குறைந்து கொண்டே போகின்றது. அதனால் தான் கண்ணாடி யன்னல்களை தாண்டி இன்றைய வெயில் இதம் சேர்த்தது.


சூழல் இதம் சேர்த்தால் போதுமா? அதை இரசிப்பதற்கான மனமும் வேண்டும் அல்லவா? அந்த மனதைத் தான் மொத்தமாக அவள் களவாடிச் சென்றுவிட்டாளே!


அவளைச் சந்தித்த முதல் நாளில் வந்து நின்றது அவனது நினைவுள்.


அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அவன் காரானது கை விரித்துவிட, காரைத் தன் கடையிலேயே விட்டுவிட்டு, ரெயிலில் போகலாம் என்று அடித்துப்பிடித்து ஸ்டேஷனுக்கு ஓடினான் அவன்.


அவன் வேறு யாருமல்ல. அவன் பெயர் கென்றி. ஆறடிக்கு சற்றே உயரமானவன் நடந்து வரும் அழகிற்கு ஈடு கொடுக்கும் நிகர் யாருக்கும் இல்லை என்று தான் கூற வேண்டும். அலையலையாய் அந்தரத்தில் மிதந்து வரும் கேசமும், சின்ன வெயில் பட்டாலே சிவந்து விடும் தேகமும், காண்பவரை எல்லாம் மோக முறச் செய்யும் நீல விழிப் பார்வையும், நிழலைக் கூட மிதித்திடத் தாேன்றாத அவன் பேசுகையில் சிந்திடும் வார்த்தைகளின் மென்மையும், ஒரு முறை பார்த்து விட்டால் மறு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் தேகவாக்கும் என அவ்வளவு அழகனாக இருந்தான் அவன்.


அது எப்போதுமே சனம் நெருங்கி வழியும் பாரிஸின் ஒரு முக்கியமான நகரம். தமிழரின் சின்ன யாழ்ப்பாணம் என்று கூட அதைக் கூறுவதுண்டு. அங்குத் தான் அவனும் ஒரு கடையினை நடத்தி வருகிறான்.


எக்ஸ்கலட்டர் படிகளில் ஏறி நின்றவன் பின்னால் கேட்ட சிரிப்பொலி அந்த இடம் முழுவதும் நிரம்பி வழிய, அதைப் பொருட்படுத்தவில்லை அவன்.


இங்குத் தான் அது யார்? எதற்காகச் சிரிக்கின்றனர் என்று ஆராய்ச்சியில் இறங்குவோம். ஆனால் இயந்திர கதியில் வாழும் மனித உலகத்தில் அதை எல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. அதற்கு நேரமும் இருக்க வேண்டுமே!


எங்கே பஸ்ஸிற்காகக் காத்திருந்தால், அந்த நேரம் கூட வீண் என்று நினைப்பவர்கள், தம் பயணத்தை நடந்தே அடைவதுண்டு. அத்தனை வேகம் அவர்கள் நடையில். அப்படிப் பட்டவர்கள் இதை எல்லாமா பாெருட் படுத்துவார்கள்? முன்னே நகர்ந்த படிகளிலிருந்து நிலத்துக்குத் தாவியவன், வேக நடையுடன் மெட்ரோ ரெயில் நிற்கும் இடத்திற்கு வந்திருந்தான்.


இன்னும் இரண்டு நிமிடங்களில் ரெயில் வரும் என அங்குப் பாெருத்தப்பட்டிருந்த திரையில் தெரிய, சற்று நிதானமா மூச்செடுத்து விட்டவனின் காதில் விழுந்தது பின்னாலிருந்து வந்த அதே சிரிப்பொலி. தன்னைத்தான் கேலி செய்து நகைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழ, அதை அறியும் ஆவலில் திரும்பிப் பார்த்தான்.


முழுநீளப் பாவாடை தாணியில், அதன் நிறத்துக்கு ஏற்றால் போல், ஆபரணங்கள் அணிந்திருந்தவள், முடியினை விரித்து விட்டாலும், முடியின் அளவிற்குக் கமகமக்கும் மல்லிகைச் சரத்தினையும் வைத்திருந்தாள். அவளுடன் இன்னும் சில பெண்களும். அது அவள் தோழிகளாகத் தான் இருக்க வேண்டும். அவர்களுடன் ஏதோ சுவாரசியமாகக் கதைத்துச் சிரித்தவள் அசைவுக்கு ஏற்றாற் போல், முன் வந்து நின்ற முடியின் தொந்தரவு தான் தாளவில்லை.


அது முன் வருவதும், இவள் எடுத்து விடுவதும் என அதையே மாறி மாறிச் செய்தவளுக்கு, கதையின் சுவாரசியத்தில் அது ஒரு பாெருட்டாக விழவில்லை போலும்,


அவளை அந்தக் கோலத்தில் கண்டவன் தான், அவளது அழகில் மயங்கிப் போனான்.

சாதாரணமாக அந்த நாட்டில் யாரும் இப்படி உடுத்துவதில்லை. எங்கு மற்றவர்கள் மத்தியில் தாம் மாத்திரம் புறம்பாகத் தெரிவோமாே, தம்மையே மற்றையவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்களோ என்ற எண்ணத்தில், அந்த நாட்டின் கலாச்சாரத்துக்குத் தான் நம்மவர்கள் மாறுவதுண்டு.


இன்று அந்த நகரத்தில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவில் தேர் என்பதால், பிரான்ஸின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் அந்தத் தேரினைக் காண வருவது வழமை. அப்படி வந்தவளைக் கண்டதும் தான் தன்னைத் தொலைத்தான் கென்றி.


அவனுக்கு ஏனோ நம் நாட்டின் கலாச்சாரத்தின் மீது அளவு கடந்த பற்று.


ஆம்! அவன் தமிழன் கிடையாது. அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த வெள்ளைக்கார குடிமகன். அந்த நாட்டின் குடிமகன் மாத்திரமே தவிர, அவர்களது ஏனோ தானோ என்ற கலாச்சாரத்தை அடியோடு வெறுப்பவன். அதைப் பின்பற்றவும் மறுப்பவன்.


அவனது கடையிலும் தமிழன் ஒருவனைத் தான் வேலைக்கு வைத்துள்ளான். அவனுடன் கென்றி ஒரு நாளும் முதலாளி என்றது போல் பழகியது இல்ல. நண்பனைப் போலத் தான் பழகுவான்.


படிக்கும் போதே அவனது நண்பர்களில் சிலர் தமிழ் என்ற படியினால், அவர்கள் வீட்டுக் கொண்டாட்டங்களுக்குச் சென்றதில், அவர்களது மரபையும் பண்பாட்டையும் கண்டு ஆச்சரியம் கொண்டதோடு, அவர்களுள் தானும் ஒருவனாய் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கச் செய்த நாட்கள் பல உண்டு.



இன்று தன் ரசனைக்குத் தகுந்தாற் போல், ஒருத்தியைக் கண்டதும், அவளையே அவன் விழிகள் சுற்றிச் சுற்றி வந்தது.


அவளும் அழகில் குறைந்தவளில்லை. இங்கேயே பிறந்து வளர்ந்திருப்பாள் போல, ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த அவளது நாகரீகத் தோற்றத்தில் அது வெளிப்படையாகவேத் தெரிந்தது. கதைத்துக் கொண்டே அங்கும் இங்கும் விழிகளைச் சுட்டியவள் கண்களில் எதிர்பார்த்திருந்த புகையிரதம் வருவது தெரிய,


"மெத்ரோ வந்திட்டு... அலே" தமிழையும் பிரஞ்சையும் சேர்த்துச் சொன்னவள் குரலில் சுத்தமான தேன் கூடத் தோற்றுப் போகும். அத்தனை இனிமை அந்தக் குரலில்.


அவளது ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து நின்றானே அன்றி, தானும் அந்த ரெயிலில் தான் ஏற வேண்டும் என்பதே மறந்து போனது.


"எஸ் குச் முவா..." மிக அருகில் கேட்டதும் தான், பித்தம் தெளிந்தவன் போல், உடல் உலுக்கி நினைவுக்குத் திரும்பியவன், அவள் தான் தன் அருகில் நிற்கிறாள் என்றதும்.


"பார்தோம்... பார்தோம்..." அவசரமாகச் சொன்னவனுக்கு, ஏனென்றே தெரியாது பதற்றம் தொற்றிக் கொள்ள, சற்றே விலகி நின்றவனைக் கடந்து சென்றவள் பின்னே தானும் ஏறிக் கொண்டான்.


எதிரெதிர் இருக்கைகள் தான், மனம் என்னவோ அவளை ரசித்திடத்தான் ஏங்கியது. ஆனால் ஒரு முறை பல்ப்பு வாங்கியவன் மூளை தான் மறுத்தது.


பார்ப்பதற்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் வருமாே தெரியாது. ஒரு தடவை பார்ப்போம் என நிமிர்ந்த வேளை, அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது போல, இருக்கையை விட்டு எழுந்தவள் பின்புறத்தை தான் அவனால் பார்க்க முடிந்தது.


தன்னை ரசிக்க விடாது தடுத்த மூளையினைச் சாடிக்கொண்டே மீதிப்பணத்தைத் தொடர்ந்தவன், எதிர்பார்க்கவில்லை தன்னை அவளே தேடி வருவாள் என்று!


இங்கு மிருதுளாவால் தனிமையில் இருக்க முடியவில்லை. நீண்ட நேரமாக யன்னலின் அருகே நின்று வேடிக்கை பார்த்தவளுக்கு, அதுவும் சலித்துப் பாேயிற்று. சலிக்காதா பின்னே! பார்ப்பதற்கு அங்கு என்ன இருக்கிறது? சுற்றவும் அவள் இருக்கும் கட்டிடம்போல் பல அடுக்குமாடிக் கட்டடத்தைத் தவிர, அத்தனையும் புறாக் கூண்டினைப் போல் பூட்டப்பட்டுத் தான் இருந்தது.


"இதுகள் வெளியாலயே வராதுகளா...? பூட்டின வீட்டுக்குள்ளயே எப்பிடி நாள் பூரா இருக்குதுகளோ? இதுவே எங்கட நாடென்டா, ஒரு நிமிஷம் கிடைச்சாலே பக்கத்து வீட்டக்காரரோட ஞாயம் பறையாட்டி பொழுது போகாது. இதுகள் வீட்டுக்குள்ள தான் இருக்குதுகள் எண்டே தெரியுதில்ல... " முணுமுணுத்தவாறு அங்கிருந்த கதிரையை இழுத்து அமர்ந்தவளுக்கு வீட்டினர் நினைவு தான் வந்தது.


வந்து என்ன பயன்? பேசுவதற்குத் தான் செல் இல்லையே! வரும்போது கையில் ஒரு செல்லினை எடுத்து வந்தாள் தான், தன்னுடைய போனில் ஏதோ கோளாறு, புதுப் போன் வாங்கும் வரைக்கும் உன்னுடையத தா, என்று சியாம் வாங்கிக் கொண்டான். வீட்டில் ஒரு போன் இருக்கின்றது தான், ஆனால் அது லான் லைன். ஐரோப்பா நாடுகளுக்குள் மாத்திரமே மாதம் செலுத்தும் சிறு கட்டணத்தில் கதைக்க முடியும். ஐராேப்பா தவிர்ந்த வேறு நாடுகளுக்குக் கதைக்க வேண்டும் என்றால், கட்டும் தொகையிலிருந்து, பல மடங்கு அபராதம் எடுத்துக் கொள்வார்கள்.


அதனால் சியாம் தன்னுடன் மட்டும் இந்தப் போன்ல கதை என்று எச்சரித்துத் தான் சென்றிருக்கிறான். அதனால் பொழுது போகாது யன்னலின் அருகே நின்றவாறு அங்கும் இங்கும் அலைந்தவள் வீட்டு லான் போன் அழைத்ததும் அதிர்ந்தே போனாள்.


அமைதியாக இருந்த வீட்டில் திடீரென அலறல் கேட்டால் யாருக்குத்தான் பதறாது. போனிலிருந்து தான் சத்தம் வருகிறது என்பது தெரிந்ததும், நெஞ்சை நீவி விட்டவாறு போன் அருகில் வந்தவளுக்கு, அழைப்பது சியாம் என்ற எண்ணம்.


பின்னே அவளுக்கு அவனைத் தவிர அங்கு யாரைத் தெரியும்.?


"ஹலோ..."


"......" எதிர்புறம் மூச்சுக் காற்றினைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை.


"அப்பா... இருக்கிறீங்களா?"


"...." என்ன கேட்டாலும் பதில் தந்திடுவேனா என்பது போல் அமைதியே எதிர்புறம். போனை காதிலிருந்து விலக்கிப் பார்த்தாள். அழைப்பில் தான் இருக்கிறார்கள். ஆனால் யாரும் கதைப்பதற்குத் தயாராக இல்லை.


"ஏதோ றோங்க் நம்பர் போல..." சொல்லியவளாய் ரிசீவரை அதனிடத்தில் வைத்துவிட்டுத் திரும்பவில்லை, மிண்டும் அழைப்பு மணி,


"ப்ச்..." சினந்தவாறு போனை இயக்கிக் காதில் வைத்தவள்.


"இஞ்ச பாருங்கோ... எனக்குப் பிரஞ்ச் தெரியாது. அதால இது றோங்க் நம்பர் எண்டுஉங்களுக்குச் சொல்லுறது சொல்லுறது எண்டும் எனக்குத் தெரியேலல... அதால நான் கதைச்சது விளங்குதோ விளங்கேலயோ, அதைப் பற்றி எனக்குக் கவலை இல்ல. தயவு செய்து இனி இந்த நம்பருக்கு எடுக்காதிங்காே..." படபட என்று பொரிந்தவள் போனை வைத்து விட்டாள்.


அவள் பொரிந்தது எதிர்புறம் அழைத்தவருக்கு விளங்கியதோ என்னமோ, அதன் பிறகு எந்த அழைப்பும் இல்லை.
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
என்ன மிருவ சிறை வெச்சகருக்கானா? ஒரு மொபைல் கூடவா வாங்க முடியாது?🙄
ஒரு வாரமா வரலன்னா, அவளுக்கு ஏதாவது தேவைன்னா என்ன பண்ணுவா அதுவும் மொழி கூட தெரியாத நாட்டுல? 😬
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
மிருவை ப்ளான் பண்ணி ப்ளாக் பண்ண செஞ்ச மாதிரி இருக்கே..
இவனை ஏன் எனக்கு ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல..