• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 10,11,12

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 10



அந்த கறுப்பு நிற கார் வழுக்கி கொண்டு வந்து வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டினுள் சென்ற நிலவனின் காதில் விழுந்தது தமிழின் குரல்.சமையல் அறையில் தாயிடம் உரத்த குரலில் அம்மா பெரியத்தை சொன்னார்கள் நாளைக்கு காலை பதினொரு மணிக்கு வினி அக்கா வந்துவிடுவார்களாம். என்று உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தாள்.



வேகமாக மாடி ஏறப்போன நிலவனின் கால்கள் ஒருகணம் தயங்கி பின் அதிவேகமாக படிகளில் ஏறியது.கார் வந்த சத்தம் கேட்டதே நிலவன் வந்துவிட்டானா என்று பார்க்க கூடத்துக்கு வந்த சாந்தா கண்டது வேகமாக தனது அறையில் நுழையும் நிலவனின் முதுகைத்தான்.



அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.ஏன் இவன் இப்படி மாறிப்போனான்.ஒரே தொழில் தொழில் என்று தன்னை அதிலேயே முழு நேரமும் மூழ்கடித்து இப்படி இயந்திரத்தனமாய் மாறிவிட்டானே.அவனின் இந்த கடின உழைப்பால் அவர்களின் தொழில் உன்னத நிலையை அடைந்து சிகரம் தொட்டது உண்மைதான்.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா????



நிலவனுக்கு தொழிலில் ஆர்வம் தான்.அதுவும் கடந்த நான்காண்டுகள் அவனின் வாழ்க்கையே இந்த தொழில் தான் என்று ஆகிப்போனது.அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட தொழிற்சாலையிலோ அலுவலகத்திலேயோ தான் அதிகம் நேரத்தை செலவிட்டான்.உண்பதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே வீடு என்று ஆகிப்போனது.



இவையெல்லாவற்றையும் விட அவனின் பேச்சு சிரிப்பு எல்லாமே குறைந்து முகத்தில் எப்போதுமே ஒரு இறுக்கம் குடியேறி விட்டது.நிலவன் எப்போதுமே சற்று அழுத்தமானவன் தான் என்றாலும் அவன் கண்களில் ஒரு துள்ளல் இருக்கும் ஆனால் இப்போது அந்த துள்ளல் துடிப்பு எதுவுமே இல்லையே.எதனால் இப்படி மாறிப்போனான். இவனின் இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்குமா?? இல்லை அவனின் வம்சத்தின் தொழில் இரத்தம் அவன் உடலில் ஓடுவதால் இப்படி தொழில் தொழில் என அதிலேயே மூழ்கி இப்படி மாறிவிட்டானா?? அந்த தாய் மனம் மகனை எண்ணிக்கலங்கியது.



மேலே சென்ற நிலவன் குளித்து உடைமாற்றிவிட்டு கீழே வந்து கூடத்தில் உள்ள மெத்திருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.சாந்தா அவனுக்கு தேநீர் தயாரித்து மகளிடம் கொடுத்துவிட்டு தான் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.



அண்ணா இந்தாங்க.என்று தேநீரை தமையனிடம் நீட்டினாள் தமிழ்.ஒரு பாசமான சிறு முறுவலுடன் பெற்றுக்கொண்டவன் முன்பு சிற்றுண்டி தட்டை வைத்துவிட்டு அவன் எதிரே அமர்ந்தார் சாந்தா.தாயை பார்த்து நீங்கள் சாப்பிட்டாச்சா அம்மா.என்றான்.



ம்ம்ம்.. நானும் இவளும் எப்போதோ சாப்பிட்டுவிட்டோம். இல்லாவிட்டால் தான் அப்பாவும் மகனும் திட்டுவீர்களே நாங்கள் வரும் வரை எதற்கு காத்திருக்கிறீர்கள் என்று.என்றார் சாந்தா சிறு குறையுடன்.



தாயின் பேச்சைக் கேட்டவன் பின்னே என்ன அம்மா.நாங்கள் எப்போது வருவோம் என்று சொல்ல முடியாது.சிலநேரம் சீக்கிரம் வருவோம் பல நேரங்களில் தாமதமும் ஆகும்.அப்படி தாமதம் ஆகும் நேரங்களில் நாங்கள் வெளியே சிற்றுண்டியோ உணவோ எடுத்துக்கொள்வோம்.எங்களுக்காக நீங்கள் பசியுடன் காத்திருந்தால் கோவம் வரத்தானே செய்யும்.





சாந்தாவின் முகத்தில் ஒரு பாசமான முறுவல் மலர்ந்தது.ஹ்ம்ம்..அதனால் தான் நாங்கள் இப்போது உங்களுக்காக காத்திருப்பதில்லை.அப்பாவுக்கும் மகனுக்கும் தொழிற்சாலைக்கு சென்றால் வேறு நினைப்பே வராதே.அதிலும் நீ ஆக மோசம் நிலவா.உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும்.அப்போது தான் உனக்கு வீடு என்று ஒன்று உள்ளதே நினைவு வரும்.என்று கூறிக்கொண்டு போனவர் ஆ... சொல்லமறந்துவிட்டேன் நிலவா.நாளைக்கு நம்ம பூவினி வருகிறாளாம்.நாளைக்கு மதியம் எல்லோருக்கும் அங்குதான் சாப்பாடாம்.நாளைக்கு நீயும் விடுமுறை எடுத்துவிடு.எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள்.அதிலும் சின்னதுகள் எல்லாம் ஒரே அமர்க்களம் பண்ணிக்கொண்டு இருக்குதுகள்.



வினிக்காக்கு அது பிடிக்கும் இதுபிடிக்கும்.என்று என்னென்னவோ வாங்கி வைத்திருக்குதுகள்.மேகலாவுக்கும் வினி அப்பாவுக்கும் தலைகால் புரியாத சந்தோசம்.உன் பாட்டி தாத்தாவை கேட்க வேண்டுமே.நாளைக்கு வினி வரும் போது தாங்கள் அங்கிருக்க வேண்டுமாம்.தங்கள் செல்லப் பேத்தியை இனி ஒருகணம் கூட பார்க்காமல் இருக்க முடியாது என்று இன்றே மேகலா வீட்டுக்கு சென்று அங்கே தங்கிவிட்டனர்.என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சென்றார் சாந்தா.



தாயின் இவ்வளவு பேச்சிற்கும் நிலவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.அவன் நேரெதிரே தொலைக்காட்சியை வெறித்தபடி இருந்தான்.





அண்ணா...



ம்ம்ம்..



என்னண்ணா.அம்மா இவ்வளவு சொல்கிறார்கள். நீங்கள் எதுவுமே சொல்லாமல் இருக்கிறீங்கள்?? வினி அக்கா வருவதில் உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தோசமே இல்லையா? என்றாள் தமிழ் சற்று மனத்தாங்கலுடன்.



ஒருகணம் முகம் இறுக விழிமூடித் திறந்தவன்.

சற்று தொண்டையை செருமி சீர் செய்துகொண்டு .ஹே ..தமிழ் என்னடா குட்டி இப்படி பேசிக்கொண்டே போகிறாய்.உன் வினி அக்கா வருவது எல்லோருக்குமே சந்தோசம் தான்.இன்று அலுவலகத்தில் சற்று வேலை அதிகம் டா.அதனால் சற்று களைப்பாக இருக்கிறது.அது தான் எதுவும் பேசாமல் அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன். என்றான்.



உடனே மனம் கனிந்த தமிழ் தமையனின் கையைப்பற்றி

ஒ மன்னிச்சிடுங்க அண்ணா.ரொம்ப களைப்பாய் இருக்கா அண்ணா.இதிலேயே சற்று காலை நீட்டிப் படுத்து ஓய்வெடுங்கள்.என்று கரிசனத்துடன் கூறி தனது இருக்கையில் இருந்து எழுந்து அவன் படுப்பதற்கு வசதி செய்து கொடுத்தாள்.



என்னப்பா நிலவா.இப்படி ஒரேயடியாய் வேலை வேலை என்று ஓடினால் உடம்பு என்னத்துக்காகும்.என்று கூறி மேகலாவும் பாசத்துடன் அவன் நெற்றியை வருடினார்.



சற்று நேரம் எதுவும் பேசாமல் கண்மூடி அமர்ந்தவன்.அம்மா நான் மேலே சென்று சற்று நேரம் ஓய்வெடுக்கிறேனே. என்று சோர்ந்த குரலில் கூறி தங்கையின் தலையை வருடிவிட்டு மேலே சென்றான்.





தனது அறையினுள் சென்று கட்டிலில் விழுந்த நிலவன் ஒரு கையை தலைக்கு அடியில் மடித்து வைத்து மேல் கூரையை வெறித்தான். அவன் மனம் நிலையில்லாமல் தவித்தது. இதுவரை மனம் முழுவதையும் தொழிலில் செலுத்தி வேறு சிந்தனைக்கு இடங்கொடாமல் கிட்டத்தட்ட இயந்திரத்தனமாய் வாழப் பழகியிருந்த நிலவனின் காதில் எப்போது பூவினி வருகிறாளாம் என்ற செய்தி விழுந்ததோ அப்போதே அவனின் மனம் அலைபாயத்தொடங்கி விட்டது.கேட்ட மாத்திரத்திலேயே அவனின் மனக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறியும் சக்தி பூவினி என்ற அந்த மூன்று எழுத்து பெயருக்கு மட்டுமே உண்டு என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தான் நிலவன்.





பூவினி.. செம்பூவினி ..என் பூவினி...அவன் மனம் அவள் பெயரை மந்திரமாய் உச்சரித்தது.அவனுக்கு சிறுவயதில் இருந்தே பூவினியை பிடிக்கும்.மிகவும் பிடிக்கும்.ஒரு குட்டிப் பூக்குவியலாய் அவள் பிறக்கும் போது இவனுக்கு வயது ஐந்து.அதுவரை தனியொருத்தனாய் இருந்த அவனுக்கு பூவினி பிறந்ததும் தனக்கு ஒரு விளையாட்டுத்துணை கிடைத்த மகிழ்வு.பூவினி பிறந்ததில் இருந்து நிலவன் தன் வீட்டில் இருந்ததை விட அவள் வீட்டில் இருந்தது தான் அதிகம்.பூவினியின் ஒவ்வொரு வளர்சிப்படியிலும் அவன் கூடவே இருந்தான்.பூவினி வளர வளர அவள் ஏதோ அவனுடைய சொத்து அவளை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது தன் கடமை என்ற உணர்வு அவன் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது.





ஒவ்வொரு விடயத்திலும் பூவினிக்கு அவன் நல்லதொரு வழிகாட்டியாக இருந்தான்.பூவினியும் அவன் வழிகாட்டுதலையே விரும்பினாள்.அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருந்த நெருக்கம் அதிகரித்தது. நிலவன் எப்போதும் தன் மனதுக்கு நெருக்கமானவளாக உணர்வது பூவினியை தான்.பூவினியின் ஒவ்வொரு அசைவுக்கும் அவனுக்கு அர்த்தம் தெரியும்.பூவினியின் மீது தான் கொண்டிருப்பது பாசம் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்த நிலவனுக்கு அது வெறும் பாசம் மட்டும் இல்லை அதற்கும் மேலே காதலும் தான் என்று ஐயம் திரிபற தெரியவந்தது அவள் தனக்கு ஒருத்தன் காதல் கடிதம் கொடுத்துவிட்டான் என்று கூறி அவனிடம் வந்து நின்றபோதுதான்.





அதைக்கேட்ட மாத்திரத்தில் என் பூவினிக்கு இன்னொருத்தன் காதல் கடிதம் கொடுப்பதா என்று உள்ளே எழுந்த கோபத்தீ அவனின் மனதில் ஒளிந்திருந்த பூவினி மீதான காதலை வெளிச்சம் போட்டுக்காட்டியது.அன்று தான் தன் காதலை உணர்ந்தான் நிலவன்.அப்போது அவன் கல்லூரி மாணவன்.பூவினியோ பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி.அவளின் பிஞ்சு மனதை காதல் என்ற பெயரில் கெடுக்க அவன் விரும்பவில்லை.அதனால் அவள் மீதான தன் காதலை தன் நெஞ்சுக்குள்ளேயே பொத்தி வைத்தான்.





பூவினியின் வளர்ச்சியுடன் கூடவே அவள் மீதான நிலவனின் காதலும் வளர்ந்துகொண்டே சென்றது.பூவினி கல்லூரிப்படிப்பை முடிக்கும் வரை தன் காதலை அவளிடம் வெளிப்படுத்துவதில்லை என மனதுக்குள்ளேயே சபதம் போட்டான் அவன். ஆனாலும் அவனையும் மீறி சில தருணங்களில் அவன் பார்வையிலும் பேச்சிலும் அவன் காதல் வெளிப்பட முனையும் போது மிகவும் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொள்வான் நிலவன்.





காலம் இப்படியே ஓடிக்கொண்டிருந்த போது தான் நிலவனுக்கு பூவினியும் தன்னை நேசிக்கின்றாளோ என்ற ஐயம் எழுந்தது.அதன் பின் பூவினியை சற்று உன்னிப்பாக கவனித்தான்.சிறுவயதில் இருந்து அவனது முகம் பார்த்து விழிபார்த்து பேசும் பூவினி இப்போதெல்லாம் அவனது முகத்தை பார்பதையே தவிர்ப்பது அவன் கவனத்தில் பட்டது.அப்படியே தட்டித்தவறி அவன் பார்வையை நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் தொடர்ந்து அவன் பார்வையை சந்திக்க முடியாமல் முகம் லேசாக சிவக்க விழிகளைத் தாழ்த்துவதையும் கவனித்தான்.இன்னும் அவளின் ஒருசில பார்வைகளும் அவளின் மனநிலையை அவனுக்கு தெளிவாக்கியது.நிலவன் நெஞ்சில் பூஞ்சாரல் தூவியது.ஆகா நம்ம ஆளுக்கும் ஏதோ பொறி பற்றியிருக்கிறது போலவே. என்று எண்ணியவன் சரி எப்படி இருந்தாலும் அவள் கல்லூரிப்படிப்பு முடிய இன்னும் சில மாதங்கள் தானே உள்ளது.ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்காதா என்ன என்று எண்ணி அவள் பரீட்சைகள் முடிவதற்காக வண்ணக் கனவுகளுடன் காத்திருந்தான்.



அச் சமயத்தில் தான் ஒருநாள் தொழிற்சாலையில் இருந்து மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த வேளையில் மேகலா இவனை அழைத்தார்.அங்கு சென்றால் கண்மணி உடனே ஊருக்கு புறப்பட வேண்டுமாம். பத்மன் தொழிற்சாலைக்கு சென்றிருப்பதால் அவரை பேரூந்து நிலையத்தில் நிலவனால் கொண்டுபோய் விட முடியுமா?? என்று கேட்டார்.கண்மணிக்காக இல்லாவிடிலும் தன் அன்பு அத்தைக்காக செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்கு சம்மதம் என்றால் வரச்சொல்லுங்கள் அத்தை என்றான்.





இப்போது எண்ணும் போது அன்று முடியாது என்று மறுத்திருந்தால் இந்த கஷ்டம் தனக்கு வந்திருக்காதோ என்ற எண்ணம் வந்தது.கூடவே அந்த வாய்ப்பு தவறிப்போய் இருந்தால் கண்மணி இன்னொரு வாய்ப்பை உருவாக்கியிருப்பார் என்ற உண்மையும் புரிந்தது.



எது எப்படியோ அந்த பயணத்தால் தன் வாழ்க்கையே மாறிப்போய் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்கப் போகிறேன் எனத் தெரியாமலேயே கண்மணியை அழைத்துக்கொண்டு சென்றான் அவன்.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:-11



நிலவனிடம் இருந்து நீண்டதொரு பெருமூச்சு கிளம்பியது.அன்று கண்மணியை அழைத்துச்செல்லும் போது அந்த பயணம் தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.பேரூந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு பூங்காவின் முன் வண்டியை நிறுத்தச் சொல்லி நான் உன்னுடன் சற்று பேசவேண்டும் என்று கூறி பூங்காவினுள் கண்மணி அழைத்துச் சென்ற போதும் அப்படி என்ன பேசப்போகிறார் என்ற குழப்பத்துடன் தான் அவருடன் சென்றானே தவிர நிச்சயம் அவர் அப்படி ஒரு இடியை தன் தலையில் இறக்குவார் என அவன் நினைத்துக்கூட பார்க்கவே இல்லை.



ஆனால் கண்மணி ஓர் வன்மத்துடன் அந்த இடியை அவன் தலையில் இறக்கிய போது முதலில் அவர் கூறியதை அவனால் நம்பவே முடியவில்லை. தன் மேல் உள்ள வெறுப்பில் தன்னை வேதனைப் படுத்துவதற்காகவே அவர் இப்படி ஒரு கொடூரமான பொய்யை கூறுகிறார் என்று தான் நினைத்தான் ஆனால் ஒரு ஏளனச் சிரிப்புடன் கண்மணி ஆதாரத்துடன் அதை நிரூபிக்கவும் அவன் அதிர்ந்துவிட்டான். அவன் உள்ளம் சுக்குநூறாக உடைந்தது. தன் வாழ்க்கையில் கற்பனை கூட பண்ணியிராத இப்படி ஒரு இருண்ட பகுதி இருக்கும் என அவன் கொஞ்சம் கூட நினைத்தே பார்த்ததில்லை. தான் ஒரு ஆண்மகன் எந்த சூழ்நிலையிலும் மனம் தளரக்கூடாது என்பதையெல்லாம் மறந்து கண்கள் இருட்டிக்கொண்டு வர அந்த கல் இருக்கையில் தளர்ந்து சரிந்தான்.



சற்று நேரம் அவனை சுற்றியுள்ள உலகமே ஸ்தம்பித்ததாய் தோன்றியது அவனுக்கு.மனம் மட்டும் இல்லை இது எப்படி சாத்தியம். இது உண்மையில்லை பொய் பொய் பொய்யாகத்தான் இருக்கும்.என்று புலம்பிக்கொண்டே இருந்தது. சட்டென அது தான் காணும் துஷ்ட கனவோ என்ற ஐயம் தோன்ற தன் கையில் கிள்ளிப் பார்த்தான்.அவன் அடைந்த அதிர்ச்சியின் விளைவால் அவன் மூளை கூட மரத்துப் போனது போலும்.வலிக்கவே இல்லை.நிஜமாகவே இது கனவு தானோ என்று மகிழ்ந்து சற்று பலமாக கன்னத்தில் அறைந்து பார்த்தான்.கன்னம் வலித்தது.கூடவே இது கனவு அல்ல அப்பட்டமான நிஜம் என்ற உண்மையும் நெஞ்சில் அறைந்தது. அன்று அவன் தவித்த தவிப்பு துடித்த துடிப்பு.



கடவுளே ஏன்?? ஏன்???



சட்டென படுக்கையில் இருந்து எழுந்தான் நிலவன்.அந்த நாள் நினைவின் வலி அவன் நெஞ்சை உலுக்க எழுந்து சென்று ஜன்னலின் வழியே வெளியே வெறித்தான்.தோட்டத்தில் உள்ள மாமரத்தில் இரண்டு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தன.மெல்ல பார்வையை திருப்பினான். பூவினி வீட்டின் தோட்டம் தெரிந்தது.அந்த தோட்டத்தில் ஊஞ்சல் ஒன்று தொங்கியது. அந்த ஊஞ்சலின் வெறுமை அவன் உள்ளத்தைச் சுட்டது.அந்த ஊஞ்சலில் ஆடும் செம்பூவை காணவில்லை.கடந்த நான்கு வருடங்களாக அந்த ஊஞ்சல் தனிமையிலே வாடுகின்றது அவனைப்போல. அந்த ஊஞ்சலின் தனிமை நாளை நீங்கிவிடும் அவனது தனிமை??? ஹ்ம்ம்... ஆயுள்வரை தொடரப் போகிறது.



அது பூவினியின் ஊஞ்சல்.அந்த தோட்டத்திலேயே அவளுக்கு மிகவும் பிடித்த இடம் அது.அவள் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி துக்கமாக இருந்தாலும் சரி உடனே சரணடைவது அந்த ஊஞ்சலில் தான்.அவள் ஊஞ்சலில் ஆடும் விதத்தை வைத்தே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை அவன் கணித்துவிடுவான்.அவள் மகிழ்ச்சியாய் இருந்தால் ஊஞ்சல் வானத்துக்கு பறக்கும்.மாறாக ஏதேனும் வருத்தமாக இருந்தால் லேசாக காலை உன்னிக்கொண்டு அந்த ஊஞ்சல் கயிற்றில் கன்னத்தை சாய்த்திருப்பாள்.அவள் அப்படி அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டால் நிலவன் அடுத்த கணம் அவள் முன் சென்று நின்றுவிடுவான்.அவளின் சோகத்திற்கான காரணத்தை அறிந்து அதை சீர் செய்து அவள் மனநிலையை இலகுவாக மாற்றிய பிறகே அவ் இடத்தைவிட்டு நகருவான். அவள் சற்று நேரம் சோகமாய் இருப்பதை கூட தாங்க முடியாத தானே அவளின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுவோம் என அவன் அப்போது எண்ணிப்பார்க்கவே இல்லை.



ஆனால் அதை செய்தான்.அவன் மேல் கொண்ட காதலை நாணத்துடன் அவள் வெளிப்படுத்திய போது பனிச் சாரலாய் குளிர்ந்த மனதை மறைத்து நெருப்புத்துண்டங்களாய் வார்த்தைகளை வீசி அவளைத் துடிக்கவைத்தான். அது அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் வலிதான்.உயிர்வலிதான்.ஆனால் அவன் அதை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.



உன்னிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை பூவினி.நீயா இப்படி என்று இருக்கிறது. ச்சே..என்ற

அவனின் வெறுப்பில் குளித்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து விழித்து அத்தான்??? என்று காற்றாகிவிட்ட குரலில் அவள் அழைத்தபோது சட்டென அவளை அணைத்து நானும் உன்னை காதலிக்கிறேனடி வினுக்குட்டி.நீ என் உயிர்.என் வாழ்வே நீயடி.என்று கூறத்துடித்த மனதை அடக்க அன்று அவன் எவ்வளவு சிரமப்பட்டான் என்று அவனுக்குத்தான் தெரியும். தன் மன உணர்வுகளை எங்கே தன் பார்வையிலேயே படித்துவிடுவாளோ என பயந்து சட்டென மறுபுறம் திரும்பி நின்றவன்.முயன்று குரலை இயல்பாக்கி அதில் கோபத்தை பூசி



இதோ பார் பூவினி.எனக்கு உன் மேல் பாசம் இருக்கிறது.நிறையவே இருக்கிறது.ஆனால் நன்றாக தெரிந்து கொள் அது பாசம் மட்டும் தான். உன்னைப் போல் வேறுவிதமான எண்ணம் எதுவுமே உன்னைக்குறித்து என் மனதில் இருந்ததில்லை.என்று தன் நெஞ்சறியவே பொய்யுரைத்தான்.



அவன் பேச்சினால் அவமானத்தில் அவள் முகம் கன்றியது இருந்தும் சமாளித்துக்கொண்டு. அப்படி ஒரு எண்ணம் இல்லாதவர் எதற்கு அன்று நான் உன் அத்தானே தான் செல்லம் என்று கூறினீர்கள்.அதற்கு உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் அத்தான்?? உங்கள் ஒரு சில பேச்சுக்களும் பார்வைகளும் கூட என் எண்ணத்திற்கு வலு சேர்த்தது உண்மை.என்று உடைந்த குரலில் பேசிக்கொண்டு போனவளை



உன் முட்டாள்த்தனமான பேச்சை சற்று நிறுத்து பூவினி என அதட்டியவன்.தொடர்ந்து சினிமா கதாநாயகி போல வசனம் பேசாதே.பார்வையாம் பேச்சாம் மண்ணாங்கட்டியாம்.உனக்கே உன் பேச்சுக்கள் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லை என்று பொரிந்தவன் தொடர்ந்து நான் உன் அத்தானே தான் என்று சொன்னேனா?? எப்போது சொன்னேன்?? என்று நன்றாக நினைவில் இருந்த அவன் காதல் அவனை மீறி வெளிப்பட்ட அவனால் மறக்கவே முடியாத அந்த தருணத்தை மறந்துவிட்டவன் போல பாவனை செய்து நினைவுபடுத்திக்கொண்டவன்.



ஒ ..அன்று உன் பாட்டி பேசியபோது சொன்னது தானே.அதில் நீ தப்பாக அர்த்தம் கொள்ள என்ன இருக்கிறது பூவினி??? நீயே சிந்தித்துப் பார் அன்று உன் பாட்டி அப்படி பேசியபோது எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என்று.அப்படி அவமானப்பட்டு நான் நிக்கும் போது நீ “என் அத்தான்” என்று கூறி எனக்காக பேசியதும் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அந்த மகிழ்ச்சியில் தான் அப்படி கூறினேன்.அதை நீ இப்படி அர்த்தம் கற்பிப்பாய் என நினைத்துக்கூட பார்க்கவில்லை பூவினி என்றவன் தொடர்ந்து.என் மனைவியைப் பற்றி எனக்கு சில கற்பனைகள் இருக்கின்றது பூவினி அந்த கற்பனை உருவத்திற்கு கிட்ட நெருங்க கூட உன்னால் முடியாது என்று அவள் நெஞ்சில் வெந்நீரைப் பாய்ச்சினான்.



அவனின் அந்த வார்த்தைகளை கேட்ட அவனின் வினு துடித்து நிமிர்ந்து அவனை ஓர் அடிபட்ட பார்வை பார்த்தாள்.அந்த பார்வை அவனின் இதயத்தில் தைத்தது.எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு என் வினுவை மட்டும் அழைத்துக்கொண்டு எங்காவது கண்காணாத தேசத்திற்கு சென்று விடுவோமா என்ற எண்ணம் அவனுள் வேகமாய் எழுந்தது.ஆனால் அவனின் காதினுள் ஒலித்த கண்மணியின் குரல் அவன் எண்ணத்தை அழித்தது.



எதுவும் பேசாமல் அலட்சிய பாவத்தை முகத்தில் கொண்டுவந்து அவளைப் பார்த்து உன்னிடம் இன்னொன்று சொல்லவேண்டும் பூவினி.நான் மறுத்ததால் நீ நினைத்ததை சாதிக்க வீட்டு பெரியவர்களிடம் சொல்லி ஏதாவது செய்யலாம் என்று திட்டம் போடாதே யார் என்ன சொன்னாலும் ஏன் உன் அப்பாவே என் காலில் விழுந்து கதறினாலும் கூட நான் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டே....என்றவனின் பேச்சு பாதியில் நின்றது பூவினியின் “போதும் “ என்ற அழுத்தமான வார்த்தையை கேட்டு.





முகம் சிவந்து இறுகியிருக்க கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கூட கண்களோடு உறைந்திருக்க அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தாள்.அந்த பார்வை.அவளின் அந்த பார்வை ஆயுள் உள்ளவரை மறக்காது அவனுக்கு.ஒரு நொடி அவனை இமைக்காது வெறித்தவள்.மேலே பேசாதீர்கள். இதற்கு மேலும் நீங்கள் பேசும் எதையும் தாங்க என் மனதில் வலு இல்லை. பிடிக்காத என்னை மணக்கும் கொடுமை உங்களுக்கு எப்போதும் வராது. என்று இறுகிய குரலில் கூறிவிட்டு திரும்பி நடந்தவள் ஒரு கணம் நின்று என்னைப் பற்றி முழுதாக புரிந்துவைத்திருப்பது நீங்கள் தான் என்று நினைத்தேன் அதுவும் தவறு என்று தெரிந்துவிட்டது.இந்த பூவினி எதையும் யாரிடமும் யாசிக்க மாட்டாள்.எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது நீங்கள் இப்போது நிராகரிப்பின் வலியையும் கற்றுத்தந்து விட்டீர்கள் நன்றி என்று வெறுத்த குரலில் கூறியவள் அதன் பிறகு ஒருகணமும் தாமதிக்காமல் சென்றுவிட்டாள்.





நிலவனின் இதழ்களில் விரக்திப் புன்னகை ஒன்று மலர்ந்தது.உன்னைப்பற்றி முழுதாக தெரிந்ததால் தானடி அப்படிப் பேசினேன்.எனக்கு தெரியும் உனக்கு ரோசம் மிக மிக அதிகம் என்று.எதையும் பொறுத்துக் கொள்ளும் உனக்கு உன் தன்மானத்தை யாரும் சீண்டினால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.அப்படி உன் தன்மானத்தை சீண்டும் விதமாக நான் பேசிய பேச்சு தான் உன்னை வேறு எதையும் சிந்திக்கவிடாது என் மேல் கோபம் கொள்ள வைத்து என்னைவிட்டு விலக வைத்தது. என் கண்முன்னால் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வேகத்தை கொடுத்தது.



இதுவே நான் உண்மையை கூறி உன்னைவிட்டு விலகி இருந்தால் நீ நொறுங்கியிருப்பாய். உன்னால் அதை தாங்கியே இருக்க முடியாது.இந்த குடும்பமா நம் காதலா என்று முடிவெடுக்க முடியாது நீ இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்திருப்பாயடி. அப்படி ஒரு நிலை உனக்கு வர எப்படி நானே காரணமாவேன்.அதனால் தான் என் உயிருக்கு உயிரான உன்னை வெறுப்பதாய் நடித்தேன்.வார்த்தை அம்புகளால் உன்னை வதைத்தேன்.



என் வார்த்தைகள் உனக்கு கொடுத்த வலியை நான் அறிவேனடி.என்னைப் பார்ப்பதையே தவிர்க்கவே நீ நாட்டை விட்டே சென்றாய் என்று எனக்கு தெரியும்.நான்கு வருடங்கள்.இந்த கால அவகாசம் நிச்சயம் உன் மனக்காயத்தை சற்று ஆற்றியிருக்கும்.இனி உனக்கென்று ஒரு வாழ்க்கையை நீ அமைத்து மகிழ்ச்சியாய் வாழவேண்டுமடி.உனக்காகவும் இந்த குடும்பத்திற்காகவும் நான் எதுவும் செய்வேன்.செய்ய வேண்டியது என் கடமையும் கூட.



நீண்டதொரு பெருமூச்சு கிளம்பியது நிலவனிடம் இருந்து.அவனின் முகத்தில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு வந்திருந்தது.



திட்டம் போட்டு காதலை அழிக்க முடியாது.முகமூடி போட்டு மனதை மறைக்கவும் முடியாது. உண்மைக் காதல் என்றும் தோற்றுப் போகாது என்பதை இவர்களுக்கு காலம் உணர்த்துமா ???
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 12



அந்த உலோகப் பறவை பத்திரமாக தரையிறங்கி தன் வயிற்றுக்குள் பொத்தி வைத்திருந்தவர்களை மெல்ல வெளியேற்றியது. பூவினி உள்ளத்தின் மகிழ்ச்சி உதடுகளில் புன்னகையாய் நெளிய தாய்நாட்டுக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தவாறே உற்சாகத்துடன் வெளியேறினாள்.

தன் உடமைகளை சரி பார்த்து எடுத்துக்கொண்டு வாயில் நோக்கி நகர்ந்தாள்.அவள் விழிகள் இரண்டும் தன்னவர்களின் முகம் தேடி அலைய மெல்ல நகர்ந்தவளின் பின்னால் இருந்து இரு மென்மையான கைகள் கண்ணைப் பொத்தியது.



இதழ்களில் புன்னகை விரிய மெல்ல அக்கரங்களைப் பற்றிக் கொண்டு என் செல்ல தருக்குட்டி என்றாள்.வினிக்கா என்று கத்திக்கொண்டு அவள் முதுகின்மேல் சாய்ந்து கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டாள் தாரணி.இருவரின் கண்களும் பாச மிகுதியில் கலங்கியது. மெல்ல சமாளித்துக்கொண்டு நிமிர்ந்த தாரணி வினிக்கா அங்கே பாருங்கள் என்றாள். சற்று தள்ளி தந்தையும் சிற்றப்பாவும் மாமன்களும் நிற்பதைக் கண்டவள் விரைந்து அவர்களிடம் நெருங்கினாள்.அதுவரை சகோதரிகளின் பாசத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டு நின்றவர்களும் அவளிடம் நெருங்கி அவள் தலையை வருடி நலம் விசாரித்தனர். அவர்களிடம் புன்னகையுடன் பதில் சொன்னவள் தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து அப்பா எப்படிப்பா இருக்கீங்கள்?? ரொம்பவும் மெலிந்துவிட்டீர்களே அப்பா ?? என்றாள்.அதுவரை எதுவும் பேசாமல் மகளைக் கண்களிலே நிறைத்துக் கொள்பவர் போல இமைகூட வெட்டாது பார்த்து அவள் தலையையும் கையையும் வருடியபடியே இருந்தவர் அவள் கேள்வியில் உடைந்தார்.





நீ இல்லாமல் எப்படிடா இந்த அப்பா நல்லாய் இருப்பேன்.எப்போதும் சாப்பிட அமர்ந்தால் முதல்வாய் வாங்க ஓடிவரும் என் செல்லக்குட்டி இல்லாமல் அப்பாவுக்கு எப்படிடா சாப்பாடு தொண்டையில் இறங்கும்.எங்களை நாலு வருஷம் தவிக்க விட்டுடியேடா.என்று உடைந்த குரலில் பத்மன் பேசவும் பூவினியின் கண்கள் நிறைந்துவிட்டது. இனி எதற்காகவும் பெற்றவர்களை இப்படி தவிக்க விடுவதில்லை என மனதில் முடிவெடுத்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்தவள் அப்பா நானும் அங்கே தனியே இருந்து உங்களையெல்லாம் பார்க்க முடியாது ரொம்பவே தவித்தேன் அப்பா.இனி எக் காரணம் கொண்டும் உங்களை பிரியவே மாட்டேன்பா.என்றாள் கண்ணீருடன். அந்த தந்தை மகள் பாசபோராட்டத்தை பார்த்த அனைவரின் கண்ணும் கலங்கியது.





அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்கும் பொருட்டு தொண்டையை செருமிய ஜெகநாதன்.சரி கிளம்புவோமா?? அங்கே எல்லோரும் ரொம்ப ஆவலாக காத்திருப்பார்கள் என்றார்.



சட்டென ஒருவனைத்தவிர என்று தோன்றியது பூவினிக்கு.உடனேயே அவனை எல்லாம் நாம் எதற்கு கணக்கில் எடுக்கவேண்டும் என்று அலட்சியமாக எண்ணியபடி ம்ம் பாட்டி தாத்தா அம்மா சித்தி அத்தைகள் மற்ற வானரங்கள் எல்லோரையும் உடனேயே பார்க்க வேண்டும் சீக்கிரம் போவோம் என குதித்தாள் பூவினி. பெரியவர்களும் அவள் உற்சாகத்தைப் பார்த்து சிரித்தபடி அவளின் உடமைகளை ஆளுக்கொன்றாக சுமந்தபடி நடந்தனர்.





வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது கேட்டாள்.ஏன் மாமா மற்ற சின்னதுகளை எல்லாம் விட்டுவிட்டு இவளை மட்டும் அழைத்துவந்தீர்கள் என்று.



அதற்கு சிரித்தவாறே அவர் இவளையும் அழைத்துவருவதாக இருக்கவில்லைம்மா.பெரியவர்கள் நாங்கள் நால்வரும் வருவதாகத்தான் ஏற்பாடு. இவள் யாருக்கும் தெரியாமல் எறி பின் சீட்டின் அடியில் ஒளிந்து இருந்துவிட்டாள் சற்று தூரம் வந்ததும் தான் புஸ் புஸ் என்று சத்தம் கேட்டது.நாங்கள் பாம்பு ஏதும் வாகனத்துக்குள் புகுந்துவிட்டதோ என்று பார்த்தால் இந்த கழுதை கையையும் காலையும் சுருட்டிக்கொண்டு பதுங்கி இருந்து மூச்சு வாங்குகிறது.ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டால் தன்னுடைய வினி அக்காவை சீக்கிரமே பார்க்கவேண்டுமாம். வீடு வரும்வரை காத்திருக்க பொறுமை இல்லையாம் என்கிறது.



அதன் பிறகு என்ன செய்வது சரி ஒழுங்காகவே அமர்ந்துவா என்று கூட்டி வந்தோம் என்று கூறி சிரித்தார்.அவர் பேச்சைக் கேட்ட எல்லோரும் நகைக்க. ஏண்டி ..நீ திருந்தவே மாட்டியா??? என்று பூவினியும் நகைத்தாலும் தங்கையின் தலையை வாஞ்சையாய் தடவி தோளில் சாய்த்துக்கொண்டாள்.



வாகனம் வீட்டை நெருங்க நெருங்க பூவினியின் பரபரப்பு கூடியது.வீட்டு வாயிலிலேயே அனைவரும் காத்திருப்பது புரிய வாகனம் நின்றவுடன் துள்ளிக்கொண்டு இறங்கி ஓடினாள். இவளைக் கண்டதும் தமிழ் வினிக்கா என்று ஓடி வந்து அணைத்துக்கொள்ள தம்பிமார்களும் அவள் கையை பற்றி மகிழ்ச்சியுடன் புன்னகைத்தனர். அவர்களின் தலையை வருடி புன்னகைத்தவள்.கரகரத்த குரலில் தமிழ் , நிவே , சுவே , செந்தூ எல்லோரும் எப்டிடா இருக்கீங்கள்?? இந்த வினிக்காவ மறந்துட்டீங்களா?? என்றாள்.



போங்க வினிக்கா நாங்க ஒன்றும் மறக்கல.நீங்கள் தான் எங்கள மறந்து நாலு வருஷம் தனிய இருந்தீங்கள்.உங்களை நாங்கள் எவ்ளோ மிஸ் பண்ணோம் தெரியுமா?? நீங்க போனதில இருந்து நாங்கள் சேர்ந்து விளையாடுறது கூட குறைஞ்சு போச்சு.நீங்களும் இல்ல நிலவத்தானும் ஒரே வேலை வேலை என்று அதிலேயே மூழ்கிட்டார். அந்த வாராந்திர சந்திப்புகள் கூட குறைஞ்சு போச்சு தெரியுமா?? எல்லோருக்கும் படிப்பு வேலையென்று அதிலேயே பொழுது ஓடியே போச்சு.நீங்கள் இல்லாம எதையும் கொண்டாடவும் மனசே வரல.போனவாரம் வந்த செந்து ஓட பிறந்தநாள் கூட கொண்டாடவே இல்லை. என்று வருத்தமாக மாறி மாறி பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு மற்றதை எல்லாம் பின்னுக்கு தள்ள ஹேய்ய்ய் ....இப்போதான் இந்த வினிக்கா வந்துட்டன்ல. இனி விட்டதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு எல்லாத்தையும் ஜமாய்ச்சுடுவோம் டன் ?? என்றாள் உற்சாகமாக



அதே உற்சாகத்துடன் இத இத இததான் எதிர்பார்த்தோம். டன் வினிக்கா என்றனர் கோரசாக.அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு தாயை நோக்கி ஓடினாள்.அவளை தடுத்த கல்யாணி ஏய் கொஞ்சம் நில்லுடா என்று கூறி அவளுக்கு திருஷ்டி சுத்திப் போட்டார்.அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தாயிடம் சென்றாள்.அதுவரை கண்களில் நீருடன் அவளையே பார்த்தபடி நின்ற மேகலா செல்லம் என்று கூறி அவளை இழுத்து அணைத்துக்கொண்டார்.தாயின் அணைப்பில் கட்டுண்டு சிறு பறவையாய் அவர் தோளில் முகம் புதைத்தாள்.இருவரும் எதுவுமே பேசவில்லை ஆனால் அந்த அணைப்பும் கண்களில் இருந்து பெருகிய கண்ணீரும் அவர்களின் மனவுணர்வுகளை வெளிப்படுத்தியது.





அத்தைமார் சித்தி என்று எல்லோரிடமும் வாசலில் நின்றே செல்லம் கொஞ்சியவள்.தாத்தா பாட்டி எங்கே அத்தை என்று தேடினாள்.தாத்தா நீ நல்ல படியாக வந்துசேரவேண்டும் என்று கோவிலில் அர்ச்சனை பண்ணப் போயிருக்கிறார்டா.இப்போ வந்துடுவார்.பாட்டி நீண்ட நேரம் நிற்க முடியாததால் உள்ளே உட்கார்ந்திருக்கிறார். போய்ப்பாருடா உன்னைப் பார்க்க ரொம்ப ஆவலாக காத்திருக்கிறார். என்றாள் சாந்தா.





அவர் பேசி முடிக்க முதலே பாட்டி என்று அழைத்துக்கொண்டு உள்ளே ஓடினாள்.உள்ளே ஓர் மெத்திருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்திருந்த அவரைப் பார்க்க அவள் கண்களில் நீர் அரும்பியது.பாட்டி என்று தழுதழுத்த குரலில் அழைத்து அவர் அருகில் சென்று காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்.



அந்த சுருக்கம் விழுந்த முகத்தில் புன்னகை மலர பூக்குட்டி என்று அழைத்து தலையை வருடிய பாட்டியின் மடியில் முகம் புதைத்தாள்.இவ்வளவுநாள் இந்த பாட்டியை தவிக்கவிட்டுடியே ராசாத்தி.உன்னைப்பார்க்காமல் போயிடுவனோ என்று கவலைப்பட்டுட்டே இருந்தேன்.நல்ல வேளை நீ வந்துட்டே இனி செத்தாலும் ....என்று ஏதோ கூறப்போன பாட்டியின் வாயைப் பொத்தியவள் அப்படி எல்லாம் பேசாதீர்கள் பாட்டி.நீங்கள் இன்னும் நீண்ட நாள் ஆரோக்கியமா இருப்பீங்கள்.இனி எப்போதும் நான் உங்களைவிட்டு போகவே மாட்டேன் என்று அழுகையுடன் கூறியவள் மனம் குற்றவுணர்ச்சியில் தவித்தது.





அங்கே படித்ததை இங்கேயே படித்திருந்தால் இந்த பிரிவுக்கு அவசியமே இருந்திருக்காதே.நான் என் மன உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுத்து இத்தனை பேரை வேதனைப் படுத்திவிட்டேனே ச்சே.. அவனால் எனக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்ற இவர்களை விட்டு பிரிந்து இவர்களுக்கு எவ்வளவு வேதனையை கொடுத்துவிட்டேன்.என்று மனதுக்குள்ளே வருந்தினாள் பூவினி.



அப்போது பார்த்து அவள் தாத்தாவும் வந்துவிட நாலுவருடங்களில் அவரிடம் தெரிந்த மூப்பும் இவளை வாட்டியது அருகில் சென்றவளின் நெற்றியில் விபூதி இட்டு வாஞ்சையாய் தலையை வருடியவர்.இந்த கிழவனின் கண்ணைப் பூக்கவைசுட்டியேமா என்று தழுதழுத்த குரலில் கூறவும் பூவினி உடைந்து அழுதே விட்டாள்.மன்னிச்சுடுங்க தாத்தா இனி எக் காரணம் கொண்டும் உங்களைவிட்டு பிரியவே மாட்டேன்.இந்த நாலுவருசம் உங்களை எல்லாம் பார்க்காமல் நானும் ரொம்ப கஷ்டப்பட்டேன். என்றாள் அழுகையினூடே.



அவளின் வருத்தத்தை கவனித்த மேனகா சரி விடுங்கள் அவள் படிக்க தானே போனாள்.நல்லபடியாக அதை முடித்து திரும்பியும் வந்துவிட்டாள்.இனி எதற்கு வருத்தப்படவேண்டும். இனி இங்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்க வேண்டும்.என்று கூற கல்யாணியும் ஆமாடா வினி எங்களுக்கு பழைய குறும்புக்கார வினிதான் வேண்டும். இந்த அழுமூஞ்சி வினி வேண்டாம் என்று கூற அனைவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.



உணர்சிப்போராட்டங்கள் எல்லாம் முடிந்து அனைவரும் இலகுவாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மேகலா எங்கே அண்ணி நிலவனைக் காணோம்??? வினி இன்று வருவது அவனுக்கு தெரியும் தானே??இன்று இங்கே தான் சாப்பாடு என்று அவனிடம் கூறினீர்களா இல்லையா??



ம்ம் நேற்றே சொன்னேன் மேகலா.இன்று காலையில் ஏதோ அவசர வேலையாம் அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று போனான் இன்னும் காணோம்.



தாரணிக்கும் தமிழுக்கும் நடுவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பூவினியின் உடல் அவன் பெயரைக் கேட்டதும் இறுகியது.அவன் வரமாட்டான்.என்னை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவே இல்லாத வேலையை இருப்பதாக சொல்லி சென்றிருப்பான்.திமிர் பிடித்தவன்.அவனைக்கான இங்கு யாரும் ஏங்கிக் கொண்டு இருக்கவில்லை.என்று மனதில் பொருமினாள்.என்னதான் அவள் மனம் அலட்சியமாக எண்ணமிட்டாலும் நெஞ்சின் ஏதோ ஓர் மூலையில் சிறு வலி எழுந்தது நிஜம்.அதை அவளின் ரோஷம் மறுத்தது.



அருகில் உடல் இறுக அமர்ந்திருந்த தமக்கையை பார்த்த தாரணியின் மனம் குழம்பியது.இவர்கள் இருவருக்குள்ளும் அப்படி என்னதான் நடந்தது.அத்தானின் பெயரைக் கேட்டாலே பூவாய் மலரும் அவள் அக்காவின் முகம் இப்போது சுருங்கி இறுகுவதன் காரணம் என்ன????





தாரணிக்கு அவர்கள் இருவருக்குள் நடந்த எதுவுமே தெரியாது.பூவினியின் பரீட்சை முடிந்த பின் உற்சாகமாகத்தான் இருந்தாள்.இடையில் ஒருவாரம் தாரணி ஒரு சுற்றுலாவிற்கு சென்று வந்தாள்.அவள் சுற்றுலா முடித்து வந்ததும் தமக்கையை காண சென்றபோது பூவினி மிகவும் சோர்ந்து உடல் மெலிந்து களையிழந்து இருந்தாள்.இவள் பதறி என்னாச்சு ஏன்? என்று விசாரித்த போது ஒருவாரம் காய்ச்சலில் அவதிப்பட்டாள் என்று தெரியவந்தது.சரி அந்த சோர்வு தான் போல என்று எண்ணி விட்டுவிட்டாள்.





ஆனால் அதன் பிறகு பூவினியின் பழைய உற்சாகம் திரும்பவே இல்லை.யார் கேட்டாலும் காய்ச்சல் வந்த உடம்பு சோர்வாகவே இருக்கிறது என்று கூறினாள்.எந்த நேரமும் தன் அறைக்குள்ளேயே முடங்கி இருந்தாள்.மற்றவர்களும் பரீட்சைக்கு கண்விழித்து படித்த அசதி அதோடு காய்ச்சலும் சேர்ந்து அவளை வாட்டிவிட்டது போலும் நன்றாக ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று எண்ணி அவளை தொந்தரவு செய்யாமல் அவள் போக்கிலேயே விட்டனர்.



திடீரென்று ஒருநாள் வினி தான் கனடா போகப்போவதாக அறிவித்தாள்.எல்லோரும் அதிர்ந்து ஏன் என்று விசாரித்தபோது அங்கு போய் படிக்க போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும் கூறினாள்.அங்கே சென்று தனியே சமாளிக்க மாட்டாய் என்ன படிக்க வேண்டுமோ அதை இங்கிருந்தே படி என்று எல்லோரும் மாறி மாறி எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.



தந்தையின் தொழில் வாரிசு தான் தான்.அதை சிறப்பாக நடத்த தனக்கு வெளியுலக அனுபவம் அவசியம் தேவை இங்கேயே இருந்தால் தனக்கான தெளிவு திடம் வராது என்று கூறி பூவினி தான் சென்றே ஆகவேண்டும் என்று தன் முடிவில் உறுதியாய் இருக்கவே கூடவே கண்மணியும் அவளுக்கு ஆதரவாக பேசவும் வேறு வழியின்றி கல்யாணியின் சகோதரனுடன் பேசி அவள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின் அவள் செல்ல அனுமதித்தனர்.





அதுவரை தாரணிக்கு பூவினியுடன் தனியே பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.அல்லது அப்படி சந்தர்ப்பம் அமையாதவாறு பூவினி பார்த்துக் கொண்டாளோ!!!!!!!

அவள் கனடா போகும் நாள் நெருங்கவும் ஒருநாள் மிகவும் முயற்சி செய்து அவளைத் தனியே சந்தித்தாள் தாரணி.அப்போது சோர்ந்த முகத்தோடு ஒரு மெல்லிய புன்னகையுடன் வரவேற்ற தமக்கையின் அருகில் சென்றவள்



ஏன் வினிக்கா இந்த முடிவு.எங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து உங்களால் தனியே நாலு வருடங்கள் இருக்க முடியுமா?? முக்கியமாக அத்தானை?? அத்தானிடம் கேட்டீர்களா? அவர் உங்களை போகவேண்டாம் என்று தடுக்கவில்லையா??



அதுவரை வெறுமையாக காட்சியளித்த பூவினியின் முகம் சட்டென கோபத்தில் இறுகிச் சிவந்தது.முடியும் நிச்சயமாக முடியும்.என்று அழுத்தமாக சொன்னவள் இனி தேவையில்லாத எதையும் யாரைப்பற்றியும் கதைக்காதே தாரணி என்றாள்.



அன்று தாரணி திகைத்துவிட்டாள்.அவள் பூவினியின் இந்த கோபத்தை எதிர்பார்க்கவே இல்லை.அப்போது தான் வினிக்கும் நிலவனுக்கும் இடையில் ஏதேனும் பிரச்சனையோ என்ற ஐயம் தோன்றியது.தமக்கையிடமே கேட்டாள்.



வினிக்கா உங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனையா??? அத்தானிடம் பேசினீர்களா??? உங்கள் காத....



தாரணி ........... உன்னுடைய வினிக்கா உனக்கு உயிருடன் வேண்டுமென்றால் இனி அவரைப் பற்றியோ அவர் சம்பந்தமான வேறு எதைப்பற்றியோ என்னிடம் பேசாதே. நான் முட்டாள்த் தனமாக நினைத்து உளறிய விடயத்தையும் இப்பொழுதே மறந்துவிடு.இனி என் காதில் அந்த பெயர் விழுவதைக் கூட நான் விரும்பவில்லை.



இறுகிய குரலில் அன்று பூவினி பேசியதைக் கேட்டு தாரணியின் பேச்சு தடைப்பட்டது.அவளால் தமக்கையின் கோபத்துக்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவே இல்லை.ஆனால் அதைக்குறித்து பூவினியிடம் மேலே எதுவும் பேசவும் அவளால் முடியவில்லை.காரணம் அவளது கோபம் இல்லை.பேசும் போது அவளது வினி அக்காவின் குரலில் தெரிந்த வலி.அந்த வலி தாரணியை மேலே எதுவும் பேசவிடவில்லை.எவ்வளவு யோசித்தும் அவர்கள் இருவருக்குமிடையில் என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் ஊகிக்க கூட முடியவில்லை.



அதன் பிறகு தாரணி பூவினியிடம் நிலவன் குறித்து வேறு எதுவுமே பேசவில்லை.இந்த நான்கு வருடத்தில் அவ்வப்போது தொலைபேசி, ஸ்கைப், சாட்டிங் என்று பேசும் போது கூட பூவினி தாரணியிடம் என்ன நடந்தது என்று எதுவுமே கூறவில்லை.தட்டித்தவறி தாரணியின் பேச்சில் நிலவனின் பெயர் வந்தாலே பூவினி பேச்சைக் குறைத்து தொடர்பை துண்டித்துவிடுவாள்.அதனால் தாரணியும் அவளுக்கு வருத்தம் தரும் விடயத்தை எதற்க்கு பேச வேண்டும் என்று விட்டுவிட்டாள்.ஆனால் அவள் மனதில் அந்த குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.



அப்படி என்ன வேலை அவனுக்கு?? இருங்கள் நான் தொலைபேசியில் அழைத்துப்பார்க்கிறேன்.குடும்பமே இங்கே ஒன்றாக இருக்கும் போது அவன் இல்லாவிட்டால் எப்படி என்ற பத்மனின் பேச்சில் தாரணி கலைந்தாள்.



அவர் தொலைபேசியை எடுக்கவும்



சட்டென எழுந்த பூவினி உடம்பு ஒரே அசதியாக இருக்கிறது நான் குளித்துவிட்டு வருகிறேன் என்றாள்.



சரி டா சீக்கிரம் குளித்துவிட்டு வா எல்லோரும் சாப்பிடலாம்.எல்லாமே உனக்கு பிடித்ததாகவே செய்து வைத்திருக்கிறேன் என்றார் மேகலா கனிவுடன்



ம்ம்ம் சரிம்மா என்றபடி மாடிக்கு விரைந்தாள் பூவினி.



விரைந்து செல்லும் தன் தமக்கையையே சிந்தனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் தாரணி.
 
  • Like
Reactions: Joss uby