• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 10

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
பகுதி – 10


சென்னையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள இரண்டு படுகையறைகளைக் கொண்ட பிளாட்டின் பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்து எங்கோ இலக்கற்று தொடுவானின் தூரத்துப் புள்ளியை வெறித்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட சிவகாமியின் மனது ஊமையாய் அழுதது.



பாவிப்பெண்!! இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டாளே!!! அவர் மனது மகளை சாடியது.


அவருக்கு தெரியுமே கணவன் மகள் மேல் கொண்ட பாசம் ..அதுவும் மூத்த பெண்ணாய் தன் அன்னையே வந்ததாக அன்றோ அவளைக் கொண்டாடினார்.


ஹ்ம்ம்..தந்தையின் மனமறிந்தும் அவர் அந்த குடும்பத்தின் மீது கொண்ட வெறுப்பு தெரிந்தும் சுபாங்கி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தாள்.



ஹ்ம்ம்.. அவள் இன்றி வீடே வெறிச்சோடியதைப் போல் அல்லவா இருக்கிறது. என்னதான் வீட்டில் இயல்பாக வளைய வருவதைப் போல் காட்டிக் கொண்டாலும் சின்னவர்கள் இருவரின் முகத்திலும் அவளின் பிரிவின் தவிப்பு அப்பட்டமாய் தெரிகிறதே!!! எப்படி அவர்களைக் கூட பிரிந்து செல்ல முடிந்தது அவளால்...அந்தளவு தூரம் அவனின் காதல் அவளுக்கு முக்கியமாய்ப் போய் விட்டதா...




ஹ்ம்ம்..அவள் தன் காதல் தான் முக்கியம் என்று போயிருக்கலாம்..ஆனால் அவர் பெற்றவள் ஆயிற்றே!!! எப்படி மகள் எப்படியோ போகட்டும் என்று விட முடியும்...கணவன் என்னதான் மகள் மீது கோபமாய் இருந்தாலும் அவள் பிரிவு அவரையும் வாட்டுவது மனைவிக்கு புரிந்தது.....ஹ்ம்ம்...சின்னதுகள் இரண்டும் கூட வீட்டில் இல்லை...சுபி குறித்து கணவனிடம் பேசுவதற்கு இதுதான் சரியான நேரம்....




ஆழ்ந்து ஒரு முறை மூச்சை எடுத்து தன்னை பேசுவதற்கு தயார்ப் படுத்தியவர் கணவன் அருகில் சென்று அமர்ந்தார்.மனைவி அருகில் அமர்ந்தது கூட தெரியாமல் சிந்தனையில் இருந்தவரின் தோளை மெல்லத் தொட்டு “என்னங்க சுபி ஞாபகமா..??” என மென் குரலில் வினவினார்.




அதிர்ந்தாற் போல உடல் தூக்கிப் போட திரும்பிய தர்மராஜின் பார்வை மனைவியை கோபத்துடன் முறைக்க அந்த ஓடுகாலியைப் பற்றி நான் ஏண்டி நினைக்கப் போகிறேன் .?? என்று சீறினார்.




அத்தனை வருடங்களை அவருடன் ஒன்றாக கழித்த மனைவிக்கு தெரியாதா கணவனின் மனது ..எதுவுமே கூறாமல் அமைதியாக சிவகாமி கணவனையே சிலகணங்கள் இமைக்காது பார்த்திருக்க தர்மராஜின் பார்வை மெல்லத் தாழ்ந்தது. கூடவே “அவ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடி..’ என்றார் கலங்கிய குரலில்...




கணவனின் வலியை தானும் உணர்பவர் போல சற்று நேரம் அமைதியாய் இருந்தவர் பின் மெல்ல அத்தனை நாட்களாய் தன் மனதை உறுத்திக்கொண்டிருந்த விடயத்தைக் கேட்டார்.



என்னங்க!! நான் ஒன்று சொல்கிறேன் என்று கோபிக்காதீங்க..


என்ன..சொல்லு..




ஏங்க நீங்க ஒன்றும் படிக்காத தற்குறி இல்லை. நன்றாக படித்து சென்னையில் கௌரவமான வேலை பார்க்கும் ஒருத்தர். பல்வேறு பட்ட உலக அனுபவம் உங்களுக்கு நிறையவே உண்டு. அப்படி இருக்கும் போது காதல் திருமணம் புரிவது ஒன்றும் இந்தக் காலத்தில் அவ்வளவு தவறான விடயம் இல்லை என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.




முன்பு உங்கள் தங்கை காதல் மணம் புரிந்தார்கள் என்று அடியோடு அவர்களை வெறுத்து ஒதுக்கினீர்கள் சரி அன்றைய காலம் அது பெரும் பிழையாகவே இருந்திருக்க கூடும். ஆனால் இப்போது அப்படி இல்லையேங்க?? இந்த காலத்தில் காதல் திருமணம் எல்லாம் வெகு சாதாரணமான ஒரு விடயம் ஆகிவிட்டதே!!!




அதோடு நம்ம பொண்ணு ஒன்றும் ஊர் பேர் தெரியாத ஒருத்தனை திருமணம் செய்யவில்லையே!! மாறாக சொந்த அத்தை பையனைத் தானே!!



நிறுத்து சிவகாமி!! தர்மராஜின் அதட்டலில் அதிர்ந்து விழித்தார் மனைவி.


எ..என்னங்க..??


நீ நினைப்பது போல அன்றும் சரி இன்றும் சரி நான் காதலுக்கு எதிரி இல்லை. நான் என் தங்கையை வெறுத்து ஒதுக்கியது அவள் காதல் திருமணம் செய்ததற்காக இல்லடி.. அவள் செய்தது துரோகம்..நம்பிக்கைத் துரோகம்...அதோடு அவளின் தெரிவும் மிகத் தவறான ஒன்று...ஹ்ம்ம்..அதே தவறைத் தானே இன்று உன் பெண்ணும் செய்திருக்கிறாள்....



அவன்..அந்த தனஞ்சயன் ஒன்றும் நல்லவன் இல்லை..அப்படியே அவன் அப்பனின் மறுபதிப்பு அவன்..பொறுக்கி சுத்தப் பொறுக்கி...உன் பெண் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறாள்.



என்னங்க சொல்றீங்க...??


ஹ்ம்ம்...உனக்கு இதுவரை எதையுமே யாரைப் பற்றியுமே தெளிவாக சொன்னதில்லை அல்லவா..?? ஹ்ம்ம்...எங்கே அந்தப் பேச்சினை எடுக்கவே தான் எனக்கு பிடிப்பதில்லையே!!! ..இப்போது சொல்கிறேன் கேள்.


தர்மராஜின் மனம் வேகமான பஸ் வண்டிப் பயணத்தின் மரங்களாய் பின்னே நகர அவர் கண் முன்பே பூம்பொழில் விரிந்தது.



பூம்பொழில்

அது தான் தர்மராஜின் பூர்வீகம். தாய் , தங்கை , அவர் என மிகவும் சிறிய குடும்பம் தான் என்றாலும் மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. அவர்கள் ஒன்றும் பெரும் பணக்காரர்கள் இல்லை என்றாலும் யாரிடமும் கைநீட்டிப் பிழைக்கவும் இல்லை. அந்த கிராமத்துப் பெண்களின் தலையெழுத்துப்படியே பிரபாவதியின் படிப்பு அவர் பருவம் அடைந்ததுடன் நிறைவுபெற தர்மா சென்னைக்கு சென்று கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.


தர்மராஜ் போலவே தனஞ்சயனின் தந்தை விஜயனின் பூர்வீகமும் அதுவே!! விஜயன் பெரும் பணக்காரர். பண்ணையின் ஒரே வாரிசு. அந்த கிராமத்தில் பாதி அவர்கள் சொத்தே!! விஜயனின் சிறு வயதிலேயே தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராய் அவரை விட்டு போய்விட அவர் இளமைப் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் போதே கேட்பார் அற்ற சுதந்திரத்துடனும் கைநிறையப் பணத்துடனும் தான் அடியெடுத்து வைத்தார்.