• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
பார்த்த பார்வையில்.. 01

பனி பொழியும் மார்கழி மாதத்து முன்காலை பொழுது.! ஒன்று. இரண்டு. மூன்று என தன் நடைப்பயிற்சியை முடித்தவள் வழக்கமாய் அமரும் அந்த மேடையில் அமர்ந்து எதிரே தெரிந்த அடுக்கு மாடி குடியிருப்பை பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யவாணி.

பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்ல முடியாது. வெறித்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாம். கடந்த ஆறு மாதங்களாக அவளது தற்காலிக வாசஸ்தலம் அதுதான்.

எண்ணங்கள் வழக்கம்போல எங்கோ பயணிக்க ஆரம்பிக்க போக, அதை போராடி தடுத்து மீண்டும் பார்வையை அந்த பூங்காவிற்குள் சுழற்றினாள் சத்யா.

அப்போதுதான் அவள் கண்ணில் விழுந்தது அந்த ப்ளாக் கலர் டவேரா. இப்போதெல்லாம் அடிக்கடி அவள் கண்ணில் விழுகிறது அந்த டவேராவும், அதன் உரிமையாளனும்.

இடையில் சில நாட்கள் ஆளையே பார்க்க முடியவில்லை.

மீண்டும் இன்று அவள் கண்ணில் பட்டிருக்கிறான்.

உரிமையாளன் என்றதும் மீண்டும் மனம் தறிகெட்டு ஓட பார்க்க, ‘ம்ச்’ என எரிச்சலாக தலையை அசைத்துவிட்டு தன் மொபைலை எடுத்து மணியைப் பார்க்க, மணி ஆறரையை நெருங்கியிருந்தது.

அதுவரை காலை சூரியனாய் மலர்ந்திருந்த சத்யாவின் முகம் சட்டென்று அஸ்தமனமாய் மாறிப் போனது.

கண்ணை மூடி ஒரு பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், மொபைலை எடுத்து தன் தாய் காமாட்சிக்கு அழைத்தாள்.

அவர் போன் எடுக்க எடுத்துக்கொண்ட நொடிகளில் இங்கு சத்யா தவித்துப் போய்விட்டாள்.

“சத்திம்மா” என்ற தாயின் குரலில் பெண்ணவளின் ஜீவன் ஒரு நொடி துடித்துத்தான் அடங்கியது.

“சத்திம்மா..” என அவர் மீண்டும் அதேநேரம் சற்று பதட்டமாகவும் அழைக்க,

“ஒன்னுமில்லம்மா… வழக்கமா வர வாக்கிங்க்தான். இனி வீட்டுக்கு கிளம்பனும்.” என்றவளின் குரலில் சுரத்தே இல்லை.

“சத்திம்மா… இன்னும் என்னத்தா.. எல்லாம் சரியாகும். இப்படி சங்கடமா பேசும் போது மனசே ஆறலத்தா. நாங்க வந்து போற தொலைவுலயா நீ இருக்க.. இப்படி சங்கடப்படாத சாமி..” என்ற காமாட்சியின் குரல் தழுதழுக்க..

“ம்மா அதெல்லாம் ஒன்னுமில்ல. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும். அதுவரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன் உனக்கேத் தெரியும். நானே சரியாகிடுவேன். சரி என்னைவிடு தம்பி எழுந்துட்டானா.?” என்றாள் சலிப்பு முற்றிலும் குறைந்த ஒரு ஆர்வக் குரலில்.

சிதிலமடைந்த அவள் மனதிற்கு உயிர் கொடுக்கப்போகும் தாயின் பதிலுக்காக ஆவலுடன் தன் செவியை தீட்டிக்கொண்டாள்.

“இப்போதான் எழுந்தான் ஆத்தா. இன்னும் பல்லு கூட விளக்கல. உங்க அப்பா கூட ஏதோ மல்லுக்கட்டிட்டு இருக்கான்..” என சிறு சிரிப்புடன் கூற, கேட்டவளுக்கும் இதழில் இதமான புன்னகைதான்.

“ம்ம்..” என ரசனையாக அதை கேட்டவள், “இன்னைக்கு பரீட்சை இருக்கும்மா. புக்கு எல்லாம் சரியா எடுத்து வச்சிடு. நான் சொன்னா கேட்கமாட்டான். இன்னும் என்மேல கோபம் போகல.” என அதே ரசனையுடன் கூற

“அவன் கிடக்குறான் பொடிப்பய. அவனுக்கு ரொம்பத்தான் பயம். மொழைச்சு மூனு இலை விடல என் பொண்ணை மிரட்டுவானா.? இரு அவனை நான் என்னான்னு கேட்குறேன்..” என காமாட்சி சற்று சத்தமாக பேச, அதைக் கேட்டு சத்யாவின் முகத்தில் விரிந்த புன்னகை.

அவர் நினைத்தது போலவே “எம்மா இப்போ நீ யார பொடிப்பயன்னு சொல்ற.. என்னையவா.?” சண்டைக்கு வருவது போல சீறிக்கொண்டு வந்தான் பொடிப்பையன் என்றழைக்கப்பட்ட பரணிதரன்.

“ஆமாடா.. உன்னைத்தான் சொல்றேன். ஏன் எனக்கென்ன பயமா.? நேத்து பொறந்துட்டு இன்னைக்கு வந்து என் பொண்ணை மிரட்டினா நான் உன்னை சும்மா விடனுமா.?” என அவரும் பதிலுக்கு சீறுவது போல் பேச,

“நான் ஒன்னும் உன் பொண்ணை மிரட்டல, என் அம்மாவைத்தான் மிரட்டுறேன். நீ இதிலெல்லாம் தலையிடாத அம்மத்தா, நான் இன்னும் கோவமாத்தான் இருக்கேன்.” என சிலிர்த்துக்கொண்டு பேச,

“ஏன் சாமி இப்படி சொல்ற, அம்மா பாவமில்ல. அவளுக்கும் இங்க வர ஆசைதான். ஆனா அங்க லீவு கிடைக்கலையாம்..” என பேரனை சமாதானம் செய்ய ஆரம்பிக்க,

“ம்ச் அம்மத்தா… எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு. சீக்கிரம் உன் மகக்கிட்ட பேசிட்டு வா..” என முகத்தை சுளித்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல

“டேய் கண்ணு… சாமி..” எனத் தவிப்பாக பேரனை அழைக்க, “ம்மா விடும்மா ரெண்டு நாள்ல அவனே சரியாகிடுவான். நீ டென்சன் ஆகாம அவனை கிளப்பிவிடு..” என்றவளின் குரலும் தளர்ந்துதான் போனது.

“கண்ணு தம்பியைப்பத்தி நீ கவலைப்படாத. அவன் சரியாகிடுவான். நீ சீக்கிரம் லீவு கேட்டு ஊருக்கு வந்து சேரு. உன் கவலையை மறக்க வேலைக்கு போன, நாங்களும் விட்டோம். இப்போ நீ எங்களையே மறந்துடுவ போலையே கண்ணு. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு. என்னதான் நாங்க எல்லாம் கூட இருந்தாலும், அவனுக்கு நீதான் எல்லாம். உனக்கு அவன்தான் எல்லாம். அவனுக்கும் உன்னைத் தேடுமில்ல. சீக்கிரம் வா சத்திம்மா.” என்றவர் மேலும் சிலதை பேசிவிட்டு வைத்துவிட்டார்.

தாயிடம் பேசியதிலிருந்து மகனின் நினைவாகவே இருந்தது சத்யாவிற்கு. இங்கு வந்த ஆரம்பத்தில் மாதமொரு முறை என சரியாக ஊருக்கு சென்று வந்தவளுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக போக முடியவில்லை.

சத்யாவின் ஊர் தேனி மாவட்டத்தின் மலை கிராமமான கம்பம் அடுத்து கூடலூர். இது கேரளா மாநிலத்தின் எல்லையில் இருப்பதால், இங்குள்ள மக்கள் பெரும்பாலும் குழந்தைகளை பெரியவர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கேரளாவின், மூணார், குமுளி, வண்டிப்பெரியார் போன்ற ஊர்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கும், காபித் தோட்டங்களுக்கும், ஏலக்காய் தோட்டங்களுக்கும் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால் சத்யாவின் பெற்றோர் அப்படி செல்லவில்லை. அவர்களுக்கு சொந்தமாக இருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் திராட்சை மற்றும் வாழையை பயிரிட்டு விவசாயம் பார்த்து வந்தனர்.

சத்யாவின் பெற்றோர் வரதராஜன் மற்றும் காமாட்சி. அவர்களுக்கு தமிழ்ச்செல்வன் மற்றும் அருள்பாண்டி என இரண்டு ஆண் பிள்ளைகளும், சத்தியவாணி என்ற ஒரு பெண்ணும் தான்.

எத்தனையோ கஷ்டங்கள் வந்து போயிருந்தாலும், அவர்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஏன் சத்யாவின் திருமணம் வரைக்குமே எந்த பிரச்சினையும் இருந்ததில்லை.

ஆனால் அவளுக்கு அமைந்த கணவனும், கணவன் சார்ந்த குடும்பமும் சத்யாவை நிம்மதியாக இருக்க விடவில்லை.

கடந்து போன வாழ்க்கையை ஒரு நொடி யோசித்த சத்யாவின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது.

அலைபேசியின் சத்தத்தில், நினைவுக்கு வந்த சத்யா, வேகமாக தலையை தட்டிக் கொண்டு அதை ஆன் செய்து காதில் வைத்தபடியே, அந்த அப்பார்ட்மெண்டை நோக்கி வேகமாக நடந்தாள்.

“அக்கா வாக்கிங் முடிச்சிட்டேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன்.” என பதட்டமாக சொல்ல,

“ஒன்னும் பிரச்சனை இல்ல சத்யா அப்பா இப்பதான் எழுந்திரிச்சார். எழுந்ததும் உன்னதான் தேடுவார் அதனால தான் கால் பண்ணேன்.” என எதிரில் இருந்தவர் பதில் கூற,

“வந்துட்டேன்க்கா வந்துட்டேன்க்கா நீங்க பயப்படாதீங்க” என்றவள் தன்னுடையை நடையை மேலும் வேகமாக்கினாள்.

சத்யா இப்போது இருப்பது சென்னையில். புடித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அதோடு குடும்ப சூழ்நிலையும் மோசமாக போக, இங்கு ஒரு வயதான முதியவரை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு சேர்ந்து விட்டாள்.

முதலில் பழக்கம் இல்லாத வேலையில் மிகவும் சிரமப்பட்டாள்தான். ஆனால் இப்போது அந்த வேலையில் கை தேர்ந்தவளாகிவிட்டாள்.

அந்த முதியவருக்கு மாயா என்று ஒரே பெண், அவரும் கணவரை இழந்தவர். அதோடு மாயாவிற்கும் அவரது தந்தைக்கும் இடையில் சிறு மன சுணக்கம் என்பதால், பேச்சுவார்த்தை என்பது சத்யாவின் மூலம்தான். அதனால் இருவருக்கும் சத்யா மிகவும் அத்தியாவசியமாகிப் போனாள்.

சத்யா வீட்டிற்குள் வரவும் தாத்தாவின் சத்யா என்ற குரல் வரவும் சரியாக இருந்தது.

“வந்துட்டேன் தாத்தா..” என சிரித்தபடியே அவரின் அறைக்குள் நுழைய, சத்யாவை பார்த்தபிறகுதான் மாயாவிற்கு மூச்சே வந்தது.

‘ஷப்பா’ என பெருமூச்சோடு சோபாவில் அமர, அவருக்கு காப்பியை நீட்டியடிபடியே பூங்கோதையும் சிரித்தாள்.

“ஏன் கோதை என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா?” எனக்கேட்ட மாயாவிற்கும் சிரிப்புதான்.

“ஏன் மாயாம்மா நம்ம ஐயாவை பார்த்து கொள்வதற்கு எத்தனையோ பேர் வந்து போயிட்டாங்க, ஆனா சத்யா வந்து இந்த ஆறு மாசத்துல ஐயாக்கிட்ட எவ்வளவோ மாற்றம், உங்ககிட்டயும் முன்ன மாதிரி முகத்தை திருப்புறது இல்ல. இந்தப் பொண்ணு உண்மையிலேயே ஏதோ மாயம் செஞ்சவதான் போல,” என சத்யாவை பற்றி பெருமையாக பேச,

“உண்மைதான் கோதை. சத்யா வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சமாவது, மனசுக்குள்ள நிம்மதியும் சந்தோசமா இருக்கு. அப்பாவை பத்தின கவலையும் குறைஞ்சிருக்கு.” இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பெரியவரை தயார் செய்து ஹாலுக்கு அழைத்து வந்தாள் சத்யா.

முன்னமெல்லாம் மாயா இருந்த இடத்தில், பெரியவர் நிற்ககூட மாட்டார். ஆனால் சத்யா வந்த பிறகு அனைத்திலும் மாற்றம். பேச்சுவார்த்தை மட்டும் தான் இல்லையே தவிர பார்வை பரிமாற்றங்கள் உண்டு. மாயாவிற்கு அதுவே போதும் என்பது போல் தான் எண்ணம்.

சோபாவில் அவரை அமர வைத்துவிட்டு, கிச்சனுக்கு சென்று அவருக்குத் தேவையான கஞ்சியை கலந்து எடுத்து வந்து, குழந்தைக்கு ஊட்டுவது போல அவருக்கு ஊட்டி விட்டாள்.

அவர் குடித்து முடிக்கும் வரை காத்திருந்த மாயா, “அச்சா இன்னைக்கு சுபா அத்தை வர்ரதா சொல்லி இருக்காங்க. எப்போ வர சொல்லட்டும்” என்று கேட்க,

மகளின் பேச்சை கேட்ட பெரியவரின் பார்வை ஒரு நொடி சத்யாவின் மேல் படிந்து மீண்டது.

அவர் பார்வையை உணர்ந்த சத்யா மாயாவை கேள்வியாகப் பார்க்க,

“இளங்கோ நேத்துதான் ஜெர்மனியில் இருந்து வந்திருப்பான் போல, அவனைப்பத்தி பேசுறதுக்காக வராங்க” என்றதும் பெரியவரின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

மற்ற இருவரும் பெரியவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, இளங்கோ என்ற பெயரைக் கேட்டதும் சத்யாவின் முகம் பேயறைந்தது போல் ஆனது.
*
“ப்பா.. ப்பா..” என ஒரு பிஞ்சுக் குரல் தன் காதருகே ஒலிக்க, “ம்ம்.. ம்ம்ம்..” என முனங்கி மீண்டும் உறங்க ஆரம்பித்தவனின் காதை கடித்து வைத்தது அந்தப் பிஞ்சு.

“ஷ்ஷ்ஷ், குட்டிமா என்ன பண்றீங்க, அப்பா பாவமில்ல, கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன், ப்ளீஸ் என் செல்லம் இல்ல..” என மகளிடம் கெஞ்சியவனுக்கு தூக்கம் தொலைதூரம் போயிருந்தது.

தகப்பனின் பேச்சு காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்ளாத சின்ன சிட்டோ “ப்பா ப்பா” என அவன் முடியையும், காதையும் பிடித்து ஒருவழி செய்து கொண்டிருந்தது.

இனி படுத்தால் மகள் விடமாட்டாள் என்று தெரிய, அவளைத் தூக்கி தன் மார்பில் போட்டு, கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேர விளையாட்டிற்கு பிறகு, மகளையும் கிளப்பி, தானும் கிளம்பி கீழே வந்தான்.

அங்கு ஹாலில் அமர்ந்து அன்றைய செய்தி தலைவா வாசித்துக் கொண்டிருந்தார் சுபா.

மகனையும் பேத்தியையும் பார்த்து சிரித்த சுபா மகனிடம், “இளங்கோ இன்னைக்கு வெளியே எங்கேயும் போக வேண்டாம், நாம போய் மாமாவை பார்த்துட்டு வந்துடலாம்.” என்றதும்,

“ஓகேம்மா மாமாக்கிட்ட டைம் மட்டும் கேட்டு வச்சுக்கோங்க, போயிட்டு வந்துடலாம்.” என்றவனின் மனதில் மெல்லிய மழைச்சாரல்.

பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே









 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
119
53
28
Tirupur
ஆரம்பமே அமர்க்களமா சத்யாவோட சைட்டிங்ல... 🤩
 
  • Haha
Reactions: Vathani