• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை -04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
பார்த்த பார்வையில் - 04

“என்னங்க சொல்றீங்க? நான் எவ்வளவு நேரம் உசுர கொடுத்து பேசிருக்கேன். எதுக்கு சொன்னீங்கன்னு கேக்குறீங்க? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா?” என அந்த அதிர்ச்சி விலகாமலே கேட்டான் இளங்கோ.

“என்ன பிரச்சனை உங்களுக்கு? நான் இதெல்லாம் தெரிஞ்சி என்ன செய்யப் போறேன்? இது உங்க குடும்ப பிரச்சனை? இதுல நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கிறிங்க? அடுத்தவங்க பிரச்சனையில் மூக்க நுழைக்கிறது எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது, என் பிரச்சனையே ஏகப்பட்டது இருக்கு இதுல அடுத்தவங்க பிரச்சனையே வேற நான் பார்க்கணுமா?” என சத்யா கடுகடுவென பேச,

“மாயா சொல்லும் போது கூட நான் நம்பளங்க, ஆனா இப்போ உங்க பேச்சைக் கேட்ட பிறகு முழுசா நம்புறேங்க, அதுவும் நூறு சதவீதம் முழுசா நம்புறேன்” என சம்பந்தமே இல்லாமல் இளங்கோ பேச,

“ம்ச் என்ன..?” என சத்யா எரிச்சலாக கேட்க,

“நீங்க சாதாரண பொண்ணு இல்லன்னு மாயா சொன்னா, அது நிஜம்தான்..” என்றதும் நிஜமாகவே சத்யாவிற்கு தலைவலியே வந்துவிட்டது.

ஏற்கனவே இவனால் இன்று மகனிடம் பேச முடியாமல் போய்விட்டது. அந்த கோபமும் வேறு ஏற, எக்குத்தப்பாக எதுவும் வார்த்தைகளை விட்டு விடுவோமோ என்று பயமே வந்துவிட்டது அவளுக்கு.

“வேற எதுவும் பேசனுமா சார்..?” என்றாள் தலையைத் தடவியபடி,

“நாலு பேருக்கு நல்லது செஞ்சா, அந்த நல்லது எல்லாம் சேர்த்து நம்மள வாழ வைக்கும்ன்னு சொல்வாங்க” என அவன் முடிக்கும் முன்னே

“யார் சொன்னா?” ஈட்டியின் வேகத்தோடு வந்தது சத்யாவிடமிருந்து கேள்வி.

“ஹான்..” என இளங்கோ அதிர்ந்து பார்க்க,

“இதெல்லாம் யார் சொன்னது?” என்றாள் நிதானமாக.

“அது அதெல்லாம் தெரில, ஏன் யார் சொன்னா என்ன? அனுபவிக்கனும். இப்படி பொசுக்கு பொசுக்குன்னு ஆராயக்கூடாது. இப்போ எனக்கு ப்லோ மிஸ் ஆகுதில்ல..” என இளங்கோவும் எரிச்சலாக சொல்ல

“யார் சொல்லிருப்பாங்க தெரியுமா? வேலை வெட்டிக்கு போகாம, அடுத்தவங்களோட உழைப்பை உறிஞ்சி, மெத்தனமா சுத்திட்டு இருக்குறவங்க தான் இப்படியெல்லாம் சொல்லுவாங்க.” என சத்யா கூறவும்,

அவளின் பதிலில் நிஜமாகவே இளங்கோவிற்கு தலை சுற்றி போனது.

‘எம்மாடி எம்மா.. இது சரியான பைத்தியம் இல்ல, சரியாகாத பைத்தியம். இதுகிட்ட பேசி நம்ம டென்ஷன் ஆகுறதுக்கு, மூடிட்டு வீட்டுலயே தூங்கிருக்கலாம்.’ என மனதுக்குள் அவளை வறுத்தெடுத்தவன், “நிஜமாவே சாரிங்க, என்னோட வேலைக்கு தப்பான ஒரு ஆளை செலக்ட் பண்ணிட்டேன்னு இப்போதான் புரியுது, ரொம்பவேவ்சாரிங்க. நீங்க கிளம்புங்க.” என கடுப்பாகி கூற,

எழுந்து நின்று அவனை மேலும் கீழும் பார்த்தவள் “அதுவே உங்களுக்கு இப்போதான் புரியுதா.? ஓகே..” என்றுவிட்டு நடக்க ஆரம்பிக்க,

‘மெண்டல் மெண்டல் அரை மெண்டல், எப்படித்தான் இதையெல்லாம் வீட்டுல சமாளிச்சாங்களோ தெரில.’ என புலம்பியப்படியே தலையில் கைவைத்து அமந்துவிட்டான் இளங்கோ.

இப்படி ஒருவனை டென்சன் செய்து புலம்பவிட்டு வந்தோம் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், தன் அன்றாட வேலைகளில் தன்னை நுழைத்துக்கொண்டாள் சத்யா.

அன்று முழுவதும் கூட மாயா அறையைவிட்டு வெளியில் வரவில்லை. பெரியவருமே மிகவும் அமைதியாகத்தான் இருந்தார்.

கோதைக்கு அழைத்து நடப்பதை தெரிந்து கொண்ட இளங்கோ, மாயாவை பார்க்க, தன் தாயை அனுப்பி வைத்திருந்தான்.

மதிய நேரமிருக்கும், காலிங்க் பெல் சத்தத்தில் கதவை திறந்த சத்யா, ஒரு வயதான பெண்மணி குழந்தையை இடுப்பில் வைத்தபடி மூச்சு வாங்க நின்றிருக்க, யார் என்ன என்றெல்லாம் கேட்க வேண்டியதே இல்லாமல் ஜாடையில் அப்படியே மாயாவை போன்றே இருந்தார் அவர்.

‘மாயாவிற்கு வயதானால் இப்படித்தான் இருப்பார்’ என்று அவரைப் பார்த்ததுமே சத்யாவிற்கு புரிந்தது.

‘வாங்க மேடம்’ என வரவேற்றவளின் பார்வை இப்போது அந்த குழந்தையிடம் இருந்தது.

கைகள் தன்னால் அவளைத் தூக்க உயர, சட்டென்று தன்னிலை உணர்ந்து கையை இறக்கும் முன் குழந்தையும் அவளிடம் தாவியிருந்தது.

வேகமாக குழந்தையை வாங்கித் தன் இடுப்பில் வைத்துக் கொண்டே உள்ளே நடக்க, சுபாவின் பார்வை இப்போது சத்யாவையே தொடர்ந்தது.

‘மகன் சொன்னது என்ன? இவ செய்றது என்ன? எவ்வளவு அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கா? இந்த பொண்ணுக்கிட்ட எங்க திமிர் இருக்கு? அப்படி என்ன திமிரை பார்த்தான்?’ என யோசித்துக்கொண்டே சுபாவும் உள்ளே சென்றார்.

அவர் அங்கிருந்த நேரமெல்லாம் குழந்தையை இடுப்பில் வைத்தபடியேதான் தன் வேலைகளை செய்தாள் சத்யா. குழந்தையும் அவளைவிட்டு இறங்கவே இல்லை. பெரியவர் கூட ஒரு கட்டத்தில் அவளை கூப்பிடுவதை நிறுத்திக்கொண்டார்.

சத்யா தன் மகனை அவனிடம் தேடினாளோ, அந்த குழந்தை தன் தாயை அவளிடம் தேடியதோ? ஆனால் இருவருக்குள்ளும் ஒரு அழகான பந்தம் உண்டானது உண்மை.

பெரியவரையும், மாயாவையும் மதிய உணவை ஒன்றாக உண்ன வைத்த சுபா, மாயாவின் அறையில் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பேச்சுவாக்கில் சத்யாவை பற்றியும் வர, தனக்கு தெரிந்த வரை சத்யாவைப்பற்றி மாயா கூற, கேட்ட சுபாவிற்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது.

அவள் தன் மகனிடம் நடந்த முறையில் கொஞ்சம் கூட தப்பே இல்லை என்று அவருக்கு புரிந்தது.

“பையனை விட்டு இருக்குறது இதுதான் முதல் தடவை மாமி சத்யாவுக்கு. பாவம் ரொம்பவே வேதனைப்படுறா, பார்க்கவே கஷ்டமா இருக்கு. இப்போ லீவுதான். இங்க கூட்டிட்டு வர சொன்னேன். அச்சாக்கு இஷ்டம் இல்ல போல. கேட்டதுக்கு அவர் ஒன்னும் சொல்லல. அவளும் அப்படியே விட்டுட்டா..” என மாயா வருத்தமாக கூற,

“அது அப்படியில்ல மோளே, நீ அந்த பையனை பார்த்து ஏங்கிடக்கூடாதுன்னு தான் யோசிச்சிருப்பார்..” என சுபா தன் அண்ணனின் மனநிலையை கூற,

“புரிஞ்சது மாமி..” என்ற மாயா, மீண்டும் அமைதியாகி விட

“மோளே இளாவுக்கு கால் பண்ணிட்டு இங்க வர சொல்லு, நைட் டிபன் இங்கேயே முடிச்சிட்டு கிளம்பறோம்..” என்றதும்,

“சரி மாமி, நீங்க ரெஸ்ட் எடுங்க. பாப்பாவை நான் எடுத்துக்குறேன். சத்யா இன்னும் சாப்பிட்டுருக்க மாட்டா.” என அவரை அங்கேயே விட்டு விட்டு வெளியில் வந்த மாயாவின் கண்ணில் பட்டது குழந்தையை தோளில் போட்டு தட்டியபடி நடந்து கொண்டிருந்த சத்யா தான்.

மாயா கண்ணில் மட்டுமல்ல, அப்போதுதான் உள்ளே வந்த இளங்கோவின் கண்ணிலும் அந்த காட்சிதான் விழுந்தது.

அதை பார்த்த இருவரின் மனதிலும் சொல்ல முடியாத வேதனை. அந்த சூழலை இருவராலுமே கடக்க முடியவில்லை. அப்படியே சிலையென நின்றிருக்க,

தேவதைகள் தேரினில்
போகிற நேரம்
தாமரைகள் ஆயிரம்
பாதையில் பூக்கும்
தேகம் தினம் பாடும்
பாவம் அதில் போகும்
நீ ஓடி வா
வாழ்க்கை என்னும் காவியம்
காலம் அன்பின் ஆலயம்
வா வா வா
மந்திர புன்னைகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே

என சத்யாவின் தாலாட்டில் குழந்தை சுகமாக அவள் தோளில் உறங்கியிருந்தது.

பாட்டு சத்தம் நின்றதுமே நிகழ்வுக்கு வந்தது இளங்கோதான். வேகமாக தலையை அசைத்து தன் வருத்தத்தை மறைத்து, இப்போது சத்யாவை பார்க்க அவள் விழிகளில் நீர் நிறைந்து விழ நிற்க, கரங்களோ குழந்தையின் முதுகை மிகவும் மென்மையாக வருடிக் கொடுத்தது.

சத்யாவின் இந்த நிலையை உடனே போக்க வேண்டும் போல் ஒரு வெறி வந்தது இளங்கோவிடம். ஏன் இந்த பெண் இவ்வளவு வேதனைப்படுகிறாள் என்ற கேள்வியும் உடனே வந்தது.

‘டேய் டேய் நீ ஒரு விடோவர் அதை அடிக்கடி மறந்துடுற’ என மனசு அவனை அதட்ட, “ம்ம்” என ஒரு பெருமூச்சைவிட்டு தன்னை சமன் செய்தவனுக்கு அப்போதுதான் இருவரையும் ஆசையும் அழுகையுமாக பார்த்தபடி நின்றிருந்த மாயா கண்ணில் பட, அதை பார்க்காதவன் போல “ஹாய் சத்யா..” என தன்னை உற்சாகம் போல காட்டிக்கொண்டு உள்ளே வர,

அவன் சத்தத்தில் திடுக்கிட்ட சத்யா “ஷ்ஷ்ஷ்… சத்தம் போடக்கூடாது. பாப்பா தூங்குறாங்க. கண்ணு எங்க இருக்கு? என்ன வேணும் உங்களுக்கு..” என பல்லைக்கடித்து மெதுவாக என்றாலும் கோபமாக கேட்க,

“குழந்தை வேணும்..” என அவனும் பட்டென்று கேட்க

“என்ன.?” என அதிர்ச்சியாக கேட்க, அதேநேரம் மாயாவும் தன் மன உளைச்சலில் இருந்து வெளியில் வந்திருக்க, இருவரின் பேச்சையும் சுவாரஸ்யமாக கேட்க ஆரம்பித்தார்.

“குழந்தைங்க.. குழந்தை வேணும்.. உங்ககிட்ட இருக்குற குழந்தை..” என சிரித்துக்கொண்டே கூற

“ஊப்ப்ஸ்..” என தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள், “ஒழுங்காவே பேசத் தெரியாதா.? பாப்பா தூங்குறாங்க, நான் பெட்ல விடுறேன். எழுந்ததும் தூக்குங்க. இப்பவே உங்க பாசத்தை காட்டனும்னு அவசியமில்ல.” என கடுகடுவென பேசியபடி மாயாவின் அறைக்குள் சென்றுவிட,

அப்போதுதான் மாயாவை பார்ப்பது போல் பார்த்தவன் “ஓ… இதெல்லாம் உன்னோட ட்ரெயினிங்கா.. இப்படித்தான் கெஸ்டுக்கிட்ட பிகேவ் பண்ணனும்னு சொல்லிக் கொடுத்துருக்கியா.?” என அவளிடம் செல்ல,

“ஏண்டா இப்படி இருக்க.? அவக்கிட்ட வம்பு பண்றதை நிறுத்திக்கோ, உங்க மாமாவைப் பத்தி தெரியுமில்ல? வச்சு செஞ்சிடுவார்.” என சிரிக்க,

“பேபி நீ புதுசா எதையும் ஆரம்பிக்காத.? டாகுமென்ட் ஒன்னு வீட்டுல விட்டுட்டு போயிட்டேன். அதை எடுக்க வந்தா, வீடு பூட்டியிருக்கு. பாட்டிக்கும் பேத்திக்கும் மட்டும்தான் சோறு போடுவியா? மிச்சம் கிச்சம் இருந்தா எனக்கும் போடு, சாப்பிட்டு கிளம்பறேன்..” என டைனிங்க் சேரில் அமர,

“கோதையக்கா இன்னைக்கு லீவுடா, சமையல் எல்லாம் சத்யாதான். இரு எடுத்து வைக்கிறேன்..” என கிச்சன் செல்ல முயல,

“என்ன வேணும் அக்கா? சொல்லுங்க எடுத்துட்டு வரேன்..” என சத்யா வர,

“நீ ரெஸ்ட் எடு சத்யா.. இன்னைக்கு முழுக்க உனக்கு வேலை. இதுல பாப்பாவும் உன்னை போட்டு படுத்திட்டா, நான் பார்த்துக்குறேன்..” என சாப்பாட்டை எடுத்து வர,

“அக்கா இதெல்லாம் ஒரு வேலையா.? பரணியை வச்சுக்கிட்டு நான் செய்யாத வேலையே இல்லை. நிறைமாசமா இருக்கும் போதே காட்டு வேலை செஞ்சவக்கா நான். இதெல்லாம் எனக்கு கஷ்டமே இல்ல. அதுவும் பரணி மாதிரி பாப்பா சேட்டையே பண்ணல, எவ்ளோ சமத்தா இருந்தா பார்த்தீங்கள்ள..” என முகம் முழுவதும் புன்னகையுடன் மீதி பாத்திரத்தை கொண்டு வந்து வைத்து, இளங்கோவிற்கு பரிமாற ஆரம்பித்தாள்.

“பரணி பத்தி தெரியாது. ஆனா பாப்பா ரொம்பவே சமத்து. இன்னைக்குதான் அவ இவ்ளோ சத்தம் போட்டு, விளையாடினதையே நான் பார்த்துருக்கேன்.” என மாயா கூற,

“ம்ம்.. பாப்பாவுக்கு விளையாட ஆள் இல்லயில்ல அதான் அப்படி இருக்கா, ஆனா இப்படியே இருக்குறதும் சரியில்லக்கா, ஸ்கூல் எல்லாம் போனாலும் இப்படி தனியாவேதான் இருக்க ஆரம்பிப்பா. அதனால அவளை கொஞ்சம் கேரிங்கா பார்க்கனும் க்கா..” என தன் பாட்டுக்கு பேசிக்கொண்டே சென்றவள் இருவரும் பதில் பேசாமல் அமைதியாக இருக்கவும் என்ன என்பது போல் பார்க்க, சாதத்தை பிசைந்தபடி தலையை நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தான் இளங்கோ.

அதில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாமல் மாயாவை பார்க்க, ‘ஒன்னுமில்ல’ என்பது போல் கண்ணை மூடி திறந்த மாயா, “இளா.. பி ஸ்ட்ராங்க் டா. மாமி பார்த்தா உடைஞ்சு போய்டுவாங்க.” என இளங்கோவை தேற்றும்படி மெல்லியக்குரலில் பேச,

தன் பேச்சுதான் அவனை வருத்தப்படுத்திவிட்டது என்று சத்யாவிற்கு புரிய “ஸாரி.. நான்தான் ஏதோ நீங்க வருத்தப்படுற மாதிரி தப்பா பேசிட்டேன் போல. ப்ளீஸ் ஸாரி..” என இளங்கோவிடம் கூறியவள், வேகமாக பெரியவரின் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

“இளா.. வர்ஷினியை நினைக்கிறியா.?” என்றதும்,

“ம்ச்.. அவளுக்கு அப்படி என்னதான் அவசரம். எங்களை இப்படி தவிக்கவிட்டு போயிட்டா.?” என்றவனின் குரல் உடைந்தே போனது.

என்னதான் எல்லோருக்காகவும் சிரித்து, பேசி, விளையாடி என இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் வலியை உணர்ந்த ஒரே ஆள் மாயா மட்டும்தான். மாயாவிற்கு மட்டுமே இளங்கோவின் வேதனை புரியும். மற்றவர்களுக்காக தன் வருத்தத்தை மறைத்து நடிக்கிறான் என்றும் தெரியும்.

“இளா… நீ உடைஞ்சிட்டா அப்புறம் நாங்க என்ன செய்ய.?” என்ற மாயாவின் குரலும் உடைய தொடங்க,

“ம்ச் ச்சே நிம்மதியா ஃபீல் பண்ணக்கூட விடமாட்டியா? பைத்தியக்காரி! சும்மா அழுது தொலைக்காம அந்த சாம்பாரை எடுத்துக் கொட்டு..” என அவள் தலையில் கொட்ட, இருவருக்கும் ஒரே நேரத்தில் சிரிப்பு வந்துவிட்டது.

 
  • Like
Reactions: shanmugasree