• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பார்வை - 07

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
949
434
93
Tirupur
பார்வை - 07

அடுத்த சில நொடிகள் அதுல்யாவின் வாக்கர் சத்தம் மட்டுமே அந்த ஹாலில் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் அவரவர் யோசனையில் இருக்க, ‘டம்’ என்ற சத்தத்தில் தான் நிகழ்வுக்கு வந்தனர் இருவரும்.

வாக்கரில் சுற்றிக் கொண்டிருந்த அதுல்யா சரியாக சோபாவின் முனையில் இடித்திருக்க, வாக்கர் அப்படியே சாய, அதற்குள் பரணி அவளைப் பிடித்திருந்தான்.

‘அச்சோ பாப்பா’ என பரணி அவளைத் தூக்கிக்கொள்ள, அதுவோ அவனை வித்தியாசமாக பார்த்தது. அப்போதுதான் அவனுமே உணர்ந்தான். அதுல்யா அழவில்லை என்று.!

சட்டென்று திரும்பி இளங்கோவைப் பார்க்க, அவனோ இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஸார் பாப்பா கீழ விழுந்துட்டா, நீங்க சிரிக்கிறீங்க. பொம்மையும் அழவே இல்ல.” என அதுல்யாவை மீண்டும் திருப்பி திருப்பி பார்த்தான்.

“பரணி ஃபர்ஸ்ட் இந்த சார்னு கூப்பிடுறதை நிறுத்து, அங்கிள்ன்னு கூப்பிடு. அதுதான் சரி..” எனவும்,

“அதெல்லாம் வேண்டாம் சார், அம்மாவுக்கு பிடிக்காது. அதோட சார்தான் சரி..” என திணற,

“ம்ச் பரணி.. உனக்கு சத்யாவை நினைச்சு பயமா.? நான் அவங்ககிட்ட பேசுறேன்.. உனக்கு அப்படி கூப்பிட பிடிக்கலயா.?” என மிகவும் மென்மையாக கேட்க,

“இல்ல இல்ல.. அதெல்லாம் இல்ல. ஆனா இப்போ வேண்டாம். நான் அப்புறம் கூப்பிடுறேனே. இப்போ ஏன் பொம்ம அழல அதை சொல்லுங்க..” என பேச்சை மாற்ற,

ஒரே நாளில் அனைத்தையும் அவனிடம் திணிக்க முடியாது என புரிந்த இளங்கோவும், “ஓக்கே.. உனக்கு எப்போ, எப்படி கூப்பிடனும்னு தோனுதோ அப்படியே கூப்பிடு. பேபி இப்படி அடிக்கடி கீழ விழுவா, அப்படி விழுந்தா அடிபடாத மாதிரிதான் வாக்கர் செட் பண்ணிருக்கோம். அதனால அவளுக்கு எங்கேயும் அடிபடாது..” என வாக்கரை சுற்றி காட்டியவன், “இப்போ வெளியே போய்ட்டு வரலாம்..” என்றதும்,

பரணி முதலில் தயங்கினாலும் பிறகு, அதுல்யாவை தூக்கிக்கொண்டு வெளியில் வர, வீட்டைப் பூட்டி வந்த இளங்கோ தனது என்ஃபீல்டை எடுக்க, ஆச்சரியமாக விழி விரித்தான் பரணி.

என்ஃபீல்டில் இளங்கோவைப் பார்த்ததும் அதுல்யா குதிக்க ஆரம்பிக்க, பரணியின் பார்வையை உள்வாங்கியபடியே மகளை முன்னே உட்காரவைத்தவன், பரணியைப் பார்க்க அவனோ தயங்கி தயங்கி பின்னே அமர்ந்தான்.

அந்த வீதியிலிருந்து வெளியில் வந்தவன், சற்று தள்ளியிருந்த பிக்பாஸ்கெட் மார்க்கெட்டில் வண்டியை நிறுத்த, அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்தபடியே இளங்கோவின் பின்னிருந்து இறங்கினான் பரணி.

அதுல்யாவை தூக்கி பரணியிடம் கொடுத்த இளங்கோ மணியைப் பார்த்தான். அது ஏழரையைக் காட்ட சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

சத்யாவிடம் பரணியைப்பற்றி பேசினால் இன்று தனக்கு ஏழரைதான் என நினைத்துதான் அந்த சிரிப்பு.

இருவரையும் ஒரு டேபிள் பார்த்து அமரவைத்துவிட்டு, அதுல்யாவிற்கு ஒரு மில்க் மெய்ட் புட்டிங்கையும், பரணிக்கு ஒரு ப்ளாக் ஃபாரஸ்டையும் வாங்கி வந்தான்.

“சார் இதெல்லாம் வேண்டாம். நான் இதெல்லாம் சாப்பிட்டது இல்லையே. அம்மாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க.” என்ற பரணியை வெகுவாக சமாதானம் செய்து சாப்பிட வைத்தான்.

பிறகு அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த பார்க்கிற்கு சென்று இருவரையும் விளையாட விட்டான்.

பரணிக்கு அத்தனையும் மிகவும் வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும், அதேநேரம் சந்தோசமாகவும் இருந்தது. அவன் விளையாடினானோ இல்லையோ, அதுல்யாவை நன்றாக விளையாடவிட்டான்.

அதுவும் அவன் பின்னாடியே சுற்றி சுற்றி வந்தது.

மணி எட்டரையைக் காட்ட இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான், அங்கிருந்த இளநீர் கடையில் இளநீர் வாங்கி கொடுத்து, நேராக மாயாவின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

சரியாக இவர்கள் வீட்டிற்குள் நுழையும் நேரம் சத்யாவும் அழைத்தாள்.

அவளின் போனை அட்டென்ட் செய்த இளங்கோ, “சத்யா பரணியோட டிரஸ் ஒரு செட் எடுத்துட்டு வாங்க, நாங்க வெளியே தான் நிற்கிறோம்” என்றான்.

“இல்ல சார் அதெல்லாம் வேண்டாம் அவன் இங்கேயே ரெடி ஆகட்டும்..” என்றதும்,

“சத்யா அவனே ரொம்ப கூச்சப்படுறான், பாப்பா கூட இருந்தா கொஞ்சம் பீல் பிரீ ஆகுறான். ஃபர்ஸ்ட் டே தானே போக போக சரியாகிவடும், நீங்க எடுத்துட்டு வாங்க.” என சற்று அழுத்தமாக கூற,

ஏனோ இளங்கோவின் இந்த குரலுக்கு அவளால் எதிர்த்து பேச முடியவில்லை.

பரணியின் துணிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள், மூவரும் அந்த என்ஃபில்டில் அமர்ந்திருப்பதை பார்த்ததும், ஒரு நொடி உறைந்தே போனாள்.

அவள் வந்ததை முதலில் பார்த்தது அதுல்யா தான். சத்யாவை பார்த்து கையை அசைக்க, குழந்தையின் பார்வை சென்ற திசையில் இளங்கோவும் நிமிர்ந்து பார்த்தான்.

சத்யாவின் உறைந்த பார்வையில் என்ன கண்டானோ, “சத்யா” என சத்தமாக அழைத்தான்.

இளங்கோவின் குரலில் நிதானத்திற்கு வந்தவள், தன்னை மறந்து நின்ற இந்த நிலையை முற்றிலும் வெறுத்தவளாக, இளங்கோவை முறைத்துப் பார்த்தாள்.

‘மாரியாத்தா மலை ஏறிட்டா, சாமியாடுறதுக்குள்ள ஓடிரனும்’ என மனதுக்குள் கவுண்டர் கொடுத்தவன், சத்யாவின் கையிலிருந்த பையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, பிள்ளைகளோடு கிளம்பி விட்டான்.

இளங்கோவின் இடையைச் சுற்றி கை போட்டு அமர்ந்திருந்த மகனின் முகத்தையே பார்த்தாள் சத்யா.

இத்தனை வருடத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் பரணியின் முகத்தில் பார்த்ததே இல்லை.

தன் அண்ணன்கள் இருவரோடும் பரணி பைக்கில் சென்றிருக்கிறான்தான். ஆனால் அப்போதெல்லாம் இத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில் வந்ததே இல்லை.

ஏன் சத்யாவுமே அவனை பள்ளியில் விடும்போது, ஸ்கூட்டியில்தான் அழைத்துச் செல்வாள். அப்போதும் அவன் முகத்தில் இப்படி ஒரு மலர்ச்சியை அவள் பார்த்ததே இல்லை.

‘எப்படி எப்படி’ என்று யோசித்தவளுக்கு கிடைத்த விடையோ அவள் உயிரையே உலுக்கிவிட்டது.

‘அய்யோ இது சரி இல்லையே, பரணியின் மனதில் இப்படியான எண்ணங்களை வளர விடக்கூடாதே, குழந்தை ஏங்கி போய்விடுமே, தேவையில்லாமல் இங்கு அழைத்து வந்து விட்டோமோ, இந்த பாசம் எல்லாம் கானல் நீர் என்று எப்படி அவனுக்கு புரிய வைப்பது’ என மகனை நினைத்து, சத்யாவிற்கு உள்ளுக்குள் பயப்பந்து சூழல ஆரம்பித்தது.

இன்று தன் தாய் கிளம்பும் போதே மகனையும் கூடவே அனுப்பி வைத்து விடலாமா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

இதே யோசனையோடு அனைத்து வேலையையும் முடித்து குளித்து வந்தாள்.

“சத்திம்மா சத்திம்மா.” என்ற காமாட்சியின் அழைப்பு அவள் காதுகளை சென்றடையவே இல்லை.

மகளின் யோசனையான முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த காமாட்சி “என்ன சத்திம்மா ஏன் ஒரு மாதிரி இருக்க, நாங்க வந்தது எதுவும் பிரச்சனையா? உன்னை எதுவும் பேசிட்டாங்களா?” என தோளைத் தொட்டு வருத்தமாக கேட்க,

“அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல, இவங்க அப்படி பேசுற ஆட்களும் இல்ல, நான் யோசிச்சது நம்ம பரணியைப் பத்திதான். இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?” என ஆரம்பித்து காலையிலிருந்து நடந்தது அனைத்தையும் கூற, “ஓ.. “ என்றவர் பதில் ஏதும் கூறவில்லை.

பேரனின் ஆசையையும் ஏக்கத்தையும் உணர்ந்த அவரால், அதெல்லாம் தப்பென்று தடுக்க முடியாதே.

எத்தனையோ நாட்கள் தன் பேரனின் நிலையை நினைத்து கண்ணீர் சிந்தி கடவுளிடம் வேண்டியிருக்கிறார்.

ஆறு வயது சிறுவன், தன் வயதுக்கே உரிய, குழந்தைத்தனங்கள் எதுவுமே இல்லாமல், பெரிய மனித தோரணையில் சுற்றுவதைப் பார்த்து எத்தனையோ நாட்கள் தூங்காமல் தவித்திருக்கிறார்.

இன்று அந்த இரும்பு கூட்டிலிருந்து சற்றே மாறி, தன் இயல்பிற்கு வந்திருக்கிறான் என்று கேட்கும் போது, அவருக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஆனால் மகளின் இந்த கவலையை நினைக்கும் போது, அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று கூட தெரியவில்லை.

“எனக்கு ரொம்ப பயமா இருக்குமா, இதெல்லாம் பார்த்து பழகி, அவனும் வேணும்னு கேட்டா என்ன செய்ய?” என தன்னால் முடியாதே என்ற இயலாமையால் கேட்டாள் சத்யா.

அந்தக் குரல், அதில் இருந்த வருத்தம், இயலாமை என அனைத்தும் பெற்றவரை கலங்க வைத்தது.

“கண்ணு நீ தேவையில்லாம எல்லாத்துக்கும் பயப்படற, உன்ன மீறி நடக்கிற எதுக்கும் நீ பொறுப்பில்ல. முதல்ல நீ அதை புரிஞ்சுக்கோ. கண்டதையும் நினைச்சு கவலைப்படாம இந்த ஒரு வாரம் நீ பரணி கூட சந்தோஷமா இரு. மீதியை நீ அங்க வா பேசிக்கலாம். அதுக்குள்ள பரணியை பத்தி நீயும் ஒரு முடிவுக்கு வந்துடலாம்” என்ற தாயின் பேச்சை ஏற்க முடியவில்லை என்றாலும், மறுக்க வேறு வழியும் இல்லை சத்யாவிற்கு. அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் இளங்கோ.

தோளில் அதுல்யாவும், கையில் பரணியும் என உள்ளே வந்தவனை பார்த்த சுபாவிற்கும் காமாட்சிக்கும் நெஞ்சமெல்லாம் வேதனை கூடியது.

மருமகளின் இறப்பிற்கு பிறகு, தாய்க்காகவும், தன் மகளுக்காகவும் துக்கத்தை மறைத்து சிரித்து, சிரிக்க வைத்து என மகிழ்ச்சியாக வைத்திருப்பான்.

ஆனால் அவன் சந்தோசமாக இருக்கிறானா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லுவார் சுபா.

மற்றவர்களுக்காக சிரித்து பேசி, மகிழ்வாக காட்டிக்கொண்டாலும், அவன் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் இலையோடிக் கொண்டே இருக்கும்.

ஆனால் இப்போது அதன் சுவடுகூட அவன் முகத்தில் இல்லை. சுபா மகனையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். தன் மகனை இப்படி பார்க்க எத்தனை நாள் ஏங்கிப் போயிருப்பார். மகனின் மனைவியோடே அவனின் மகிழ்வும் போய்விட்டதோ என்று அவர் பலநாள் எண்ணியிருக்கிறார். ஆனால் அப்படியில்லை. அவன் மகிழ்வு இந்த சிறு பையனிடம் இருக்கிறது என்று புரிந்து போனது. ஆனால் அதை எப்படி நேர் செய்வது என்றுதான் புரியவில்லை.

உள்ளே வந்ததுமே அதுல்யா சத்யாவிடம் தாவ, அதை இடுப்பில் வைத்துக்கொண்டே அனைவருக்கும் சாப்பாட்டை வைத்த மகளை பார்த்தது பார்த்தபடி இருந்தார் காமாட்சி.

“ஏன் சத்யாவையே பார்க்குறீங்க, இப்படி பார்த்தா வருத்தப்படுவா.” என மாயா அவருக்கு மட்டும் கேட்கும்படி கூற,

“அந்த குழந்தை பிறந்திருந்தா பாப்பா மாதிரிதான் இருந்திருக்கும். அதை நினைக்கவும் தாங்கமுடியல கண்ணு. என் பொண்ணு ஒரு நல்ல இடத்துல இருக்கான்றது மட்டும்தான் இப்போ எங்களுக்கு நிம்மதி. கல்யாணம் என்ற பேர்ல அவளுக்கு நாங்க ஒரு பெரிய கொடுமையை செஞ்சிட்டோம். அதுக்கான பலன்தான் இப்போ அனுபவிக்கிறோம்..” என்றவருக்கு வார்த்தைகள் உடைய தொடங்கியது.

தண்ணீரை எடுத்து அவரிடம் நீட்டிய மாயா “கடந்து போனது, போனதாகவே இருக்கட்டும்மா. கொஞ்ச நாள் அவளை அவ போக்குல விடுங்க. எல்லாம் சரியாகிடும்..” என மெல்ல எடுத்து சொல்ல,

“ம்ம் புரியுதுமா. மத்த வீட்டு புள்ளைங்க மாதிரி, ஒரு இடத்துலயும் எங்களை கலங்க வச்சது இல்ல. யாரையும் கஷ்டப்படுத்தினது இல்ல. ஆனா அவ வாழ்க்கையில கஷ்டத்தை தவிர ஒன்னையும் பார்த்தது இல்லை..” என்றவர், “என் பொண்ணு வாழ்க்கை சரியாகிட்டா போதும் சாமி, அவ நல்லா வாழுறதைப் பார்த்தாதான் எங்க கட்டை நிம்மதியா போகும்..” என குனிந்தபடியே கண்ணீரைத் துடைத்தார்.

அவர் பேசியது மாயாவின் அருகில் இருந்த சுபாவிற்கும் கேட்டது, அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்த இளங்கோவிற்கும் கேட்டது.

இவளை முதலில் எப்படி சரிசெய்வது என்ற கவலை இளங்கோவிடம். அவன் பேசலாம் என்றாலும், அதை முதலில் காது கொடுத்து கேட்க வேண்டுமே.

“அம்மா சாருக்கு இடியாப்பம் வை, ரொம்ப நேரமா வெறும் தட்டுதான் வச்சிருக்கார்..” என்ற பரணியின் பேச்சில் தன் எண்ணத்தில் இருந்து வெளியில் வந்தான் இளங்கோ.

“என்ன வேணும்னு வாயை திறந்து சொல்லனும். ரெண்டு தடவை கேட்டுட்டேன், ஒன்னுமே சொல்லலன்னா நான் என்ன செய்ய.?” என மகனுக்கு பதில் சொன்னவள், இளங்கோவை முறைத்துக்கொண்டே இடியாப்பத்தை வைக்க,

“வொர்க் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்..” என இருவரையும் பார்த்து வலிந்தவன், மாயாவின் குறுகுறு பார்வையில் கண்ணை சிமிட்ட,

“சத்யா இளங்கோவுக்கு உப்புமாதான் வேணுமாம். நேத்து செஞ்சது இருக்குல்ல, அதைக் கொண்டு வந்து கொட்டு..” என சிரிக்க,

“ஹேய் கொலைகாரி.. உனக்கு ஏன் இவ்ளோ வன்மம்.. உப்புமாவைப்போட்டு கொஞ்சம் கொஞ்சமா போறதுக்கு, கொஞ்சம் விசம் இருந்தா கொடு, சாப்பிடுறேன். மொத்தமா போயிடுறேன்..” என சிரிக்கவும், கிச்சனில் டம்மென்று ஒரு பாத்திரம் உருளவும் சரியாக இருந்தது.

‘ஏன்டி சூனியக்காரி இப்படி’ என மாயாவை பார்த்து முறைத்தவனின் வாய் அடுத்து சாப்பிட மட்டும்தான் திறந்தது.
 
  • Like
Reactions: shanmugasree