• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரிந்து சென்ற என் பிம்பம்

Santirathevan_Kadhali

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 10, 2021
Messages
7
சுட்டிக்காட்ட இஷ்டப்பட்டவன் போல் சித்திரா பௌர்ணமி தினத்தின் அந்த மாலை நேரத்தில் கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்பாகவே தன் பால் நிறத்தை வெளிக்குக் காட்டாமல் ஏதோ பெருங்கோபத்துடன் விழிப்பவன் போல் சிவந்தப் பந்தாக முழுச் சந்திரனும் மெள்ள வானவெளியில் தோன்றினான்.

ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் அவள் மனதை சுட்டெரித்துக் கொண்டிருந்தன. ஆற்றாங்கரை ஓரமாக ஒரு பாறை மீது அமர்ந்தவளாய் தன் எதிரே இருந்த இயற்கைக் காட்சிகளை இரசிக்கலானாள்.

செதுக்கி வைத்தப் பாவை போன்று அழகுபடைத்த அவள் கண் இமைகளைக் கூட சிமிட்டாது எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அந்த அஞ்சனை விழியாளின் கண்களில் ஏக்கம் நிறைந்திருந்ததைக் கண்ட அவள் தோழி கோசராவோ அவளின் தனிமையைக் கலைக்க முற்பட்டாள்.

"அகல்யா ! என்னடி ஆச்சி ?. ஏன்டி முகத்த உம்ன்னு வச்சிருக்க ? என்னா, நடந்ததை நெனச்சி கவலைப்படுறியா ? " என்று வார்த்தைக் கணைகளைத் தொடுத்தாள்.

அகல்யாவின் விழியோரத்திலிருந்து கண்ணீர் அருவியாக ஊற்ற ஆரம்பித்தது. தன் தோழி பார்க்கா வண்ணம் கண்ணீரைத் தன் சேலை முந்தானையைக் கொண்டு துடைத்தாள். ஆனால், அவளின் கண்ணீரில் கரைந்த மையோ அவள் எதையோ மறைக்கிறாள் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

"இல்ல கோசரா.... எனக்கு மனசு சரியில்ல", அகல்யா பதிலளித்தாள்.

"என்னாச்சி டி ?", கோசரா.

"அது வந்து அப்பா...", என்று நிறுத்தினாள்.

"நிழலின் அருமை வெயிலில் தெரியும் டி, இப்போ பீல் பண்ணி என்னா இருக்கு ? சொல்லு. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. இந்த விஷயத்துல நான் உன்ன பாவம்னே சொல்லமாட்டேன்", என்றாள்.

அகல்யா மௌனமானாள். அவள் கோசராவுக்கு தன் நிலையைப் புரிய வைக்க முயன்றும் அந்த முயற்சி விழலுக்கு இறைத்த நீரானது. அகல்யா தன் நிலையை கோசராவிற்கு விளக்க அதற்கு மேல் அவள் நா மறுப்புத் தெரிவித்துவிட்டது. அகல்யாவின் எண்ண அலைகள் பின்நோக்கிப் பாய ஆரம்பித்தன. மகிழ்ச்சியுடன் தன் பெற்றோருடன் கழித்தப் பொன்னான நாட்களை நினைவு கூர்ந்தாள்.

அகல்யா எனும் அழகு மங்கை அருணா−ரமேஷ் தம்பதியருக்கு ஆறு வருட தவப்பலனாகப் பிறந்தவள். ஆறு வருடக் காலம் தன் தாயின் ஏக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பிறந்த அழகியப் பெண் குழந்தை அவள்.

அகல்யாவின் கெட்ட நேரமோ அவள் பிறந்த மூன்று வருடத்திலே அவளின் தாயார் இறைவனடி சேர்ந்தார். அன்றைய தினம் முதல் அகல்யாவை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பினை அவளின் தந்தை ரமேஷ் எடுத்துக் கொண்டார்.

வறுமையின் கொடுமை அகல்யாவின் வீட்டில் கோரத் தாண்டவம் ஆடினாலும், அவளின் தந்தை ரமேஷ் தன் மகளின் நலத்திற்காக அதனை எதிர்த்துப் போராடினார். ரமேஷின் உடன்பிறப்புகள் அவரை மறுமணம் செய்யும்படி பல கோரிக்கைகளை விடுத்தும் அவர் அதனை நிராகரித்தார்.

"சீதைக்கு உரிய இராமனா தான் நான் வாழ்வேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் அகல்யாவ நல்லப்படியா கரை சேர்த்துட்டாலே போதும். அவ ஒருத்தி தான் எனக்கு உயிர்", என்று மனதில் எண்ணியவர் தன் வேலையிலும் தன் மகளின் வளர்ச்சியில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தார்.

நாட்கள் மெல்ல உருண்டோடின. அகல்யாவும் தன் வாழ்வில் பல மாற்றங்களைச் சந்திக்கலானாள். ஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படித்துத் தேர்ச்சிப் பெற்ற அவள் இடைநிலைப் பள்ளியில் கல்வியில் குறைந்த ஆர்வத்தைச் செலுத்தினாள். கல்வியில் பின் தங்கினாள். இடைநிலைப்பள்ளியின் தன்னுடன் ஒன்றாகப் பயிலும் மாணவன் மீது ஒரு தலைக் காதல் வளர்த்தாள்.

அவனைப் பற்றி முழுதும் அறியாமல் மனம் போன போக்கில் அவனிடம் தன் காதலைத் தெரிவித்தாள். அவனும் அவளின் அழகில் மயங்கி அவளின் காதலை ஏற்றுக் கொண்டான். இருவருமே கல்வியில் கவனம் செலுத்துவதைக் குறைத்தனர். தனியாக வெளி இடங்களுங்குச் சென்று பொழுதைக் கழித்து வந்தனர். ஆனால், அகல்யாவோ தன் தந்தை வீடு திரும்பும் முன்னே வீடு வந்து சேர்ந்துவிடுவாள். தன் தந்தையை ஏமாற்றி வந்தாள்.

நாட்கள் மெல்ல உருண்டோடின. ரமேஷ் விவசாயம் செய்து, கடுமையாக உழைத்து தன் மகள் அகல்யாவை சிரமப்பட்டு படிக்க வைத்தார். ஊதியம் பற்றாக்குறையால் இரவில் வீடுகளைக் காவல் காக்கும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். தான் நல்ல நிலையில் இல்லாவிட்டாலும் தன் மகள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுமென்று மனக்கோட்டை கட்டினார். தன் மகள் தன்னைப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

தன் தந்தை இரவு வேலைக்குச் சென்றுவிட்டார் என்று எண்ணி மகிழ்ந்தவள் தன் காதலனை வீட்டிற்கு அழைக்க ஆரம்பித்தாள். படிப்பதைக் கைவிட்டு விட்டு தன் காதலனுடன் கும்மாளம் போட்டாள். தன் தந்தையின் நிலையை எண்ணி அவள் சிறிதும் வருந்தவில்லை. தன் தந்தையிடம் பொய் கூறி காசு வாங்கி காதலனுடன் ஊர் சுற்றினாள். அவ்வாறே அவள் தன் தந்தையை ஏமாற்றி தன் நாட்களைக் கழித்து வந்தாள்.

இரண்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று ஒருநாள் அகல்யாவின் இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ்க்குத் தொடர்பு கொண்டு அகல்யா தேர்வுக்கு வரவில்லை என்று கூறி காரணம் கேட்டார்.

"சார் உங்க பொன்ன ஏன் ஸ்கூல்க்கு அனுப்பல. இன்னிக்கு தேர்வுன்னு அவளுக்குத் தெரியாதா?", என்று வினவினார்.

அவரின் பேச்சைக் கேட்டு பதறிப்போன ரமேஷோ "மேடம் நான் அவள ஸ்கூல்க்குக் காலையிலே அனுப்பிட்டேன். அவ ஏன் வரல?", என்று கூறியவர் தன் மகள் காணாதச் செய்தியைக் கேட்டு பதறிப் போனார்.

"என்னா சார் சொல்றிங்க? இப்போவே நாங்க ஆள அனுப்புறோம். நீங்களும் தேடுங்க", என்றவர் விரைவாக அகல்யாவைத் தேடும் பணியை மேற்கொண்டார்.

மறுபுறம் ரமேஷும் அகல்யாவைத் தேடினார். பல மணி நேரம் தேடல் பயணம் தொடர்ந்தது. அகல்யாவைக் காணவில்லை. ரமேஷ் அழ ஆரம்பித்தார். தன் மகள் எவராலோ கடத்தப்பட்டுவிட்டாள் என்று மனம் வருந்தினார். காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க அவர் தன் பைக்கை எடுத்து புறப்பட்டப்போது அவருக்கு ஓர் அதிர்ச்சி சம்பவம் காத்துக் கொண்டிருந்தது.

அகல்யா தன் காதலனுடன் எங்கிருந்தோ நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அவள் காதலனோ மிகுந்த உரிமையுடன் அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான். அதைக் கண்ட ரமேஷுக்குக் கடுங்கோபம் வந்தது.

படிக்க அனுப்பினால், காதலனோடு சுற்றிவிட்டா வருகிறாள் என்று எண்ணியவர் தன்நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார். அவருக்குக் கோபம் பூர்ணமாக ஒலிக்க ஆரம்பித்தது. கண்டிப்பு தொனித்தக் குரலில் அவர் "அகல்யா" என்று உரக்கக் கத்தியதும் அவ்விடத்தில் ஒர் அமளி துமளி ஏற்பட்டது.

அகல்யா அதிர்ந்தாள். அவளின் கூர்விழிகள் தன் தந்தையை நோக்கிப் பாய்ந்தன. தோளில் மீது கைப்போட்டிருந்த காதலன் அஸ்வின் தன் கையை எடுத்தான். இனி நடக்கப் போவதை எண்ணி இருவரும் அஞ்சினர். அவர்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

கோபமடைந்த ரமேஷ் பைக்கிலிருந்து இறங்கி தன் மகளைத் தரதரவென இழுத்து வந்து வண்டியில் அமர வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அஸ்வினை அகல்யா பக்கம் வர வேண்டாம் என்று எச்சரித்தார்.

வீட்டில்....

"படிக்க அனுப்புனா என்னா பண்ணிட்டு வர ?", ரமேஷ்.

"மன்னிச்சிருங்க அப்பா இனிமே இப்படி பண்ணமாட்டேன்", அகல்யா.

"என்னா பண்ண மாட்ட? ஹா. உன்னலாம் அப்போவே மூக்கனாங்கயிறு போட்டு துரத்திருக்கனும். வைத்துல புளியகரச்சிக்கிட்டு உன்ன படிக்க வச்சேன்ல...என்ன சொல்லனும்", என்று திட்டினார்.

அஸ்வின் இனி அகல்யாவைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணியவர் அகல்யாவைப் பள்ளியை விட்டு நிறுத்தினார்.

"என் மானத்த வாங்குனது போதும். இதுவரை நீ படிச்சி கிழிச்சதும் போதும். மாப்பிள்ளைய பாத்து இனி உன்னக் கட்டி வைக்கனும். அவ்ளோதான்", ரமேஷ்.

"அப்பா நான் அஸ்வின தான் காதலிக்கிறேன்", என்று கூறியவள் கண்ணத்தில் பளார் என்று ஓர் அறை விழுந்தது.

"அவன பத்தி உனக்கு என்னா தெரியும் அவன் பல பொண்ணுங்க கூடத் தொடர்பு வச்சிருக்கான். மது பானம் அருந்துவான். போதைப் பொருள் சாப்பிடுவான். அவனக் கல்யாணம் பண்ணி பாழாங்கிணத்துல விழ போறியா? நான் உன் அப்பா உன்ன எவ்வளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சிருப்பேன்", என்று அகல்யாவைத் திட்டினார்.

அறையில் சென்று தன்னைச் சிறைபடுத்திக் கொண்டவள் கையிற்றை காற்றாடியில் மாட்டி அதில் தொங்க முயன்றவளை எப்படியோ ரமேஷ் காப்பாற்றிவிட்டார். இதற்கு மேல் இவளை வீட்டில் வைத்திருப்பது சரியல்ல என்று உணர்ந்தவர் தன் அக்காவின் மகனை அகல்யாவுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார்.

எப்படியோ தன் அக்காவின் சம்மதத்துடன் அகல்யாவின் திருமணம் தன் மாமாவோடு நிச்சயிக்கப்பட்டது. இருப்பினும், அகல்யாவுக்கு அஸ்வின் மீது மட்டுமே எண்ணம் இருந்தது. தன் மாமாவைச் சொற்களால் வதைத்தாள். அவள் மாமா குமரனும் தன் வருங்கால மனைவி என்ற எண்ணத்தில் சமாதானமாகிப் போனான்.

திருமணநாளும் வந்தது. திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்தன. அகல்யா எனும் மோகன பிம்பத்தின் வருகைக்காக மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். வெகு நேரம் ஆகியும் அவள் அங்கு வரவில்லை. ரமேஷ்க்கு மனம் சங்கடமாக இருந்தது. அகல்யா வருகைப் புரியாததை எண்ணி அனைவரும் புறம்பேச ஆரம்பித்தனர்.

முகூர்த்த நேரம் முடியும் நேரம் வந்தது. மணப்பெண்ணின் தோழி கோசரா பதற்றத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்தவள் அகல்யா வீட்டை விட்டு அஸ்வினுடன் ஓடிவிட்டாள் என்ற துக்கச் செய்தியைக் கூறினாள்.

ரமேஷிற்குத் தன் மகள் செய்தக் காரியம் பெரும் அவமானத்தைத் தந்தது. குமரன் கோபத்துடன் மணவறையைக் கலைத்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினான். பலர் அவனுக்கு ஆறுதல் கூற முன் வந்தும் அவன் அதனைக் கேட்டப்பாடில்லை.


அஸ்வின் வீட்டில்.

அஸ்வினும் அகல்யாவும் வானில் உள்ள நிலவினை இரசித்துக் கொண்டிருந்தனர். அஸ்வினுக்கு அந்த அஞ்சன விழியாள் மனைவியாகத் தெரியவில்லை. விளையாட்டுப் பொருளாகவேத் தெரிந்தாள். ரமேஷ் அஸ்வின் வீட்டிற்கு வந்து அகல்யாவை அழைத்தும் அவள் வர மறுத்தாள். தன் தந்தையின் மனம் புண்படும்படி சொற்களை உதித்தாள்.

தன் உழைப்பு அனைத்தும் வீண் என்று எண்ணியவர் அவளை அஸ்வின் வீட்டிலே விட்டுவிட்டு வீடு திரும்பினார். ரமேஷ் மிகவும் உடைந்து போனார். அகல்யா இவ்வாறு செய்வாள் என்று அவர் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் அக்காவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் அகல்யாவின் செயலால் ஏற்பட்டது. ரமேஷின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. அகல்யாவின் வருங்காலத்தை நினைத்துப் பித்துப் பிடித்தவர் போல் ஆனார்.

ஒரு மாதம் கழிந்தது.

அகல்யா கர்ப்பமுற்றாள். இதற்கு மேல் தனக்குப் பயன்படமாட்டாள் என்பதை அறிந்த அஸ்வின் அகல்யாவைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். வீட்டை விட்டு துரத்தி அடித்தான்.

இது அகல்யாவுக்குப் பெரிய ஏமாற்றத்தை தந்தது. தன்னை வெறும் காமத்திற்குப் பயன்படுத்திய அஸ்வினின் உண்மை குணத்தை எண்ணி வருந்தினாள். அகல்யாவுக்கு இனி இருக்கும் ஒரே உறவு தன் தந்தை மட்டுமே. அக்கணம் அவள் காதுகளில் ஓர் அசரீரி ஒலித்தது.

"அஸ்வின் நல்லவன் இல்ல. அவனப்பத்தி உனக்குத் தெரியல",என்று அவள் தந்தை அவளிடம் கூறிய அதே வார்த்தைகள் வேறு குரலில் ஒலித்தது.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்தாள். தன் தந்தை கூறியதைக் கேட்டிருக்கலாமே என்றெண்ணினாள்.

தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்னு எண்ணினாள். பேருந்தில் ஏறி தான் பிறந்த ஊருக்குத் திரும்பினாள். அவள் தந்தையின் வீட்டின் முன்பு "ஓம் நமச்சிவாய" மந்திரம் ஒலித்தது. மக்கள் கூட்டம் கூடியிருந்தது. மரண ஓலங்கள் காதைத் துளைத்தன.

அகல்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் முந்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கே அவள் கண் எதிரே ரமேஷ். நிஜத்தில் இல்லை. மாலையிடப்பட்ட படத்தில் புன்னகை சிந்திய வண்ணம் காட்சியளித்தார்.

"உங்க அப்பாக்கு சின்ன வயசுலே இருந்தே இதயத்தில் ஓட்டைமா. உங்க அம்மா முன்னாடி அவர் போக வேண்டியவர். இறையருளால் உயிர் பிழைத்தார். நீ அவருக்குக் கடைசிவரை துணையா இருப்பன்னு ரொம்ப நம்பினார். உன்கிட்ட அவர் இதயத்துல ஓட்டை இருக்கறத சொல்ல வேணாம்ன்னு சொன்னார். பெற்ற மனம் பித்து பிள்ளை மணம் கல்லுன்னு சொல்வாங்க இல்லையா?", என்று குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள்.

அங்கே அவளின் அண்டைவீட்டுக்கார பாட்டி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தார். தன் தந்தையின் மரணத்திற்கானக் காரணத்தை ஆராய்ந்தாள். பாட்டி கூறிய அதே வார்தை. அப்படியென்றால்.....பாட்டி கூறியது உண்மைத்தான் என்பதை உணர்ந்தாள்.

அகல்யா தன் தலையில் கைவைத்த வண்ணம் தன் தந்தையாரின் காலில் விழுந்து அழுது மன்னிப்புக் கோரினாள். தனது நன்றிக்கெட்டத் தனமான செயலை எண்ணி வெட்கி தலைகுனிந்தாள். அவள் கண்டவுடன் அவளின் தந்தையாரின் உடல் பாடையில் ஏற்றப்பட்டது.

அகல்யா கடந்த கால நினைவுகளையெல்லாம் நினைத்து ஆற்றாங்கரை ஒரத்திலே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.தன் தந்தை தூக்கத்தையும் உடல் நலத்தையும் தியாகம் செய்து; உழைத்து ; அவளை வளர்த்தெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைத்து வருந்தினாள்.

திடீரென்று, அவள் எதிரே அவளின் தந்தையின் பிம்பம் அவளுக்குத் தோன்ற அவரைநோக்கி ஓடியவள் அருகே இருந்தப் பாறையைக் கவணிக்காது தடுக்கிக் கீழே விழுந்து மயங்கினாள்.

சில மணி நேரம் கழிந்தது.

மருத்துமனையில் கண்விழித்தவளுக்கு ஒரு நற்செய்தி காத்திருந்தது. அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. அது அவளின் தந்தையின் சாயலிலே இருந்ததால் தன் மகனுக்கு தன் தந்தையின் ரமேஷ் என்றப் பெயரையேச் சூட்டினாள்.

"தந்தையை தான் இழந்தோம். என் மகனை என் தந்தையாகவே நினைத்து வளர்கிறேன்", என்று எண்ணியவள் மௌன புன்னகையுடன் தன் குழந்தைக்கு முத்தமிட்டாள்.

"அன்பான தந்தையே உனது அருமை அறியாது செய்த குற்றத்தால், நான் இன்று வாழ்வை இழந்து அனாதையாக நிற்கிறேன்", என்று மனதில் கூறிக் கொண்டாள்.


இரவு பகல் உனக்குப் பெரிதில்லை..
தூக்கத்தையும் துச்சமாகமாக கருதி..
உடல் நலத்தைத் தூசியாகக் கருதி...
தன் நலம் கருதாதது என் நலத்தை முதன்மையாகக் கருதிய..
எனது பிம்பம் இன்று என்னைப் பிரிந்து சென்றது....

என்று கூறியவளின் விழிகளில் கண்ணீர் கசிந்தது.



அதாவது இந்தக் கதை மூலம் நான் சொல்ல வர்றது என்னான்னா...அப்பா நமக்குச் செய்கின்ற தியாகம் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நம்ம மீது அதிக அளவு பாசம் வச்சிருக்கிறதால அவங்க நாம கவலைப்படக் கூடாதுன்னு பல கஷ்டங்கள மறச்சிருவாங்க. அத நாம புரிஞ்சிட்டு செய்லபட்டோம்னா அப்பாவோட அருமை நமக்குத் தெள்ளத் தெளிவா தெரியவரும். அகல்யா போன்ற பெண்களின் நிலையை நாம தவிர்க்கலாம்.
ஆகவே, தந்தை சொல் கேட்டு நடப்போமாக!!

முற்றும்.
 
Top