• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
684
512
93
Chennai
அத்தியாயம் 1

"கல்பனா! அந்த வடையை எடுத்துட்டு வா.." மருமகளை மகேஸ்வரி அழைக்க,

"வரேன் த்த!" என்ற குரலோடு கையில் பாத்திரத்துடன் வந்தாள் கல்பனா.

"ம்மா! போதும்.. லேட் ஆச்சு.." அன்னை அதிகமாய் வைக்கும் பொங்கலில் போதும் என்று அகிலன் கூற,

"சாப்பிடு டா!" என்று மருமகள் கொண்டு வந்த வடையையும் வைத்தார் மகேஸ்வரி.

"ம்ம்க்கும்ம்.. நல்லா வயிறு முட்ட குடுத்து அனுப்புங்க.. பேங்க்ல போய் கேஷ் எண்ணும் போது தூங்கி விழட்டும்.." என்று கல்பனா கிண்டல் செய்ய,

"இட்லி போட சொன்னேனே.. நீ தானே பாத்திரம் கழுவ முடியாதுன்னு பொங்கல் பண்ணலாம்னு சொன்ன.." என்ற மகேஸ்வரிக்கு,

"அப்படி சொன்னா பாத்திரம் நான் கழுவிக்குறேன்னு சொல்லுவீங்க நினச்சேன்.. நீங்க பொங்கலே போதும்னு சொல்லி என் வாயை அடைச்சுட்டீங்க!" என்றாள் கல்பனாவும்.

"அம்மா தாயே! உன்னை எனக்கு நல்லா தெரியும்.. கிளம்புற நேரத்துல உன் அலப்பறையை ஆரம்பிக்காத.." என்றவன் வேகமாய் உண்ண,

"மெதுவா டா.. பேங்க் அங்க தான் இருக்க போவுது.. ஓடிறாது!" என்றார் மகேஸ்வரி.

"நேர்மை, கடமை, எருமை எல்லாம் இல்ல த்த.. புதுசா பிரமிளானு ஒரு பொண்ணு பேங்க்ல ஜாயின் பண்ணி இருக்காம்.. அதை பார்க்க தான் ஐயா ஓடோடி போறார்.. இல்லைங்க.." கல்பனா.

"அடிங்... காலையிலே வம்புக்கு நிக்குற.. ஒன்னே ஒன்னுன்னு உன்னை என் தலையில கட்டி வச்சாங்க.. அதுக்கே நாக்கு தள்ளுதாம்.. இதுல இன்னொன்னுக்கு வேற ஆசை வருதாம் ஏரோபிளேன்ல.. போ டி!" என்றவன்,

சிரித்துக் கொண்டிருந்த அன்னையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

"உங்க மவன் என்னை திட்டிற கூடாதே! கொட்டின ரெண்டு பல்லு போக முப்பது பல்லும் தெரிய சிரிக்கிறீங்க.." கல்பனா முறைத்துக் கொள்ள,

"அவன் திட்டி நீ கோச்சிட்டு வீட்டுக்கு பெட்டியை கட்டிட்டியா? போய் வேலைய பாரு டி.. எதாவது பேசிட்டே நேரத்தை கடத்துறது.. இதுல நான் பாத்திரத்தை கழுவிக்கனுமாம்.. எப்படி தான் உன்னை என் மகன் சமாளிக்கிறனோ!" என்ற மகேஸ்வரிக்கு,

"ஆமாமா! பார்க்க தான் போறேன் த்த.. ஒத்த மருமகளுக்கு இந்த புலம்பலு.. இன்னொருத்தி வருவா இல்ல.. அப்ப தெரியும் உங்க பவுசு!" என்றாள் கல்பனா.

"அப்படி தெரிஞ்சாலும் பரவாயில்ல.. அந்த இன்னொருத்திய தான் வர சொல்லேன்.. எங்க என்ன பண்ணிட்டு இருக்காளோ இவ்வளவு நாளா? ஹ்ம்ம்!" என்று ஏக்கப் பெருமூச்சோடு சாப்பாட்டு மேஜையில் அமர,

"அவளை சொன்னதும் பெல் அடிச்சா மாதிரி வந்துர போறா.. அட போங்க த்த.. உங்க மூத்த மகனை எல்லாம் நான் தூசா தட்டி விட்ருவேன்.. ஆனா உங்க இளைய மகனுக்கு வாக்கப்பட்டு வர போறவ மாதிரி பாவப்பட்ட ஒரு ஜீவன் நிச்சயமா இந்த உலகத்துலயே..." என்று கூற வந்தவளை முடிக்க விடாமல் மகேஸ்வரி வாயை மூடிவிட்டார் வேகமாய் எழுந்து.

"ஏதாச்சும் சொல்லி வச்சுறாத.. வெளுத்து கட்டிருவேன் பார்த்துக்க.. நானே அவனுக்கு ஒரு பொண்ணு கிடைகலையேனு கவலைல கிடக்கேன்..!" என்று புலம்ப துவங்க,

"மன்னிக்கவும் அத்த.. பொண்ணு கிடைச்சாலும் உங்க மகன் தலை ஆட்டிட்டாலும்.." என்று கூறியவளை,

"ஓடிரு டி.. என் மகன் அடிக்காம போயிட்டான்.. அந்த அடிய என்கிட்ட வாங்கிராத!" என்று கூறிக் கொண்டிருக்க, மேலிருந்து படிகளில் இறங்கி வந்தான் ரகு ராம். மகேஸ்வரியின் இரண்டாம் மகன்..

"இவனுக்கு என்ன டி குறை? ஏன் கல்யாணமே கூடி வர மாட்டுது?" மகனைப் பார்த்து மீண்டும் ஆற்றாமையாய் மகேஸ்வரி ஆரம்பிக்க,

"அத்த! முக ராசி எல்லாம் ஓகே தான்.. ஆனா மூஞ்சி ஏன் எப்பவும் விறைப்பா வச்சிட்டு யாரையோ அடிக்க போற மாதிரியே இருக்கு.. கொஞ்சம் அதை மாத்திக்க சொன்னா கூட நாலு பொண்ணுங்க திரும்பி பார்க்க வாய்ப்பு இருக்கு!" என்றாள் அத்தை காதருகில் வந்து கல்பனா.

"உன்னைய...!" என கரண்டியை தூக்கவும் கல்பனா சமையலறைக்குள் ஓட, அதைப் பார்த்து தெரிந்தும் தெரியாமலுமாய் சிறு மென்னகையோடு வந்தமர்ந்தான் ரகு ராம்.

அமைதியாய் அன்னை எடுத்து வைக்க, "என்னவோ கலாட்டா நடந்த சத்தம் கேட்டுது.. இப்ப என்ன அமைதி?" என்றவன் சாப்பிட ஆரம்பிக்க,

"சேட் மோட்க்கு போய்ட்டாங்களாம் உங்க அம்மா.. அப்ப தான நீங்க ஏன் ம்மானு கேட்க, அவங்க மருமக வேணும் சொல்ல, நீங்க வேண்டாம்னு சொல்ல.. டாபிக் எல்லாம் ஒன்னொன்னா வரணும்ல.. அதுக்கு தான் இந்த கேப்'உ இல்ல த்த.." என்று மீண்டும் கல்பனா வெளிவர,

"ம்ம்ஹும்! நீ சரிப்பட மாட்ட.. உன் அம்மாக்கு போன் பண்ணி பேக்கப் பண்ணினா தான் சரியா வருவ..!" மகேஸ்வரி கூற,

"அதுக்கு முன்னாடி நான் உங்க மகளுக்கு போன் பண்ணி உங்களையே பேக்கப் பண்ணிருவேன்.. யாருகிட்ட!" என்று பெருமையாற்றினாள் கல்பனா.

"டேய்! தாங்க முடியல டா.. இதுக்காகவாச்சும் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.. அவளும் இவளும் அடிச்சிக்கட்டும்.. நான் நிம்மதியா இருப்பேன்ல?" என்று ரகுவிடம் வந்தார் மகேஸ்வரி.

"இந்தா ஆரம்பிச்சுட்டாங்க இல்ல.." என்றவளை மீண்டும் கரண்டியை காட்டி உள்ளே அனுப்பிவிட்டார்.

"என்ன டா அமைதியாகிட்ட.. வயசும் முப்பது ஆக போகுது.. சாமியாராக போறினா இப்பவே சொல்லிரு.. நான் எதாவது கோயில் குளம்னு போய் உட்கார்ந்துக்குறேன்!" என்றார் கோபமாய்.

கைகழுவி எழுந்தவன், "வயசாகுதுன்னு கல்யாணம் பண்ண முடியுமா ம்மா? பிடிக்க வேண்டாமா?" என்றான் கைகளை துடைத்தபடி.

"காட்டுற போட்டோவை கூட பார்க்க மாட்டுக்க.. பின்ன எப்படி டா பிடிக்கும்? பார்த்து பேசி பழகினு ஒண்ணுமே இல்ல.. சும்மா என்கிட்ட பேசி என்னை ஏமாத்தி என்ன தான் பண்ண போற?" அன்னை கேட்க,

"மிஸ்டர் நார்! உங்க அம்மா ஸ்பெஷல் ஆஃபர் குடுத்துருக்காங்க உங்களுக்கு.. பார்த்து பேசி பழகினு ஒரு நாளைக்கு ஒண்ணுன்னா கூட ஒரு மாசத்துல முப்பது பொண்ணாச்சு.. அதுல ஒன்னை ஈசியா செலக்ட் பண்ண முடியாதா? செம்ம ஆஃபர்.. அத்த! நீங்க எங்கேயோ போயிட்டீங்க!" என்று கல்பனா குறுக்கே வர,

"டேய்! உனக்கு பொண்ணு பாக்குறதுக்கு முன்ன இவ பேசுற பேச்சுக்கு அகிக்கு இன்னொரு பொண்ணை பார்த்துடுவேன் போல.. இம்சை பண்றா டா.." என அதற்கும் மகனிடம் குற்றம் சாட்ட,

"நினைப்பு தான்! வாராங்க வரிசையில.." என்ற கல்பனாவிற்கு மீண்டும் அதே வெளியில் தெரியாத ஒரு புன்னகையுடன் மணியைப் பார்த்தவன்,

"சரி ம்மா! டைம் ஆகிடுச்சு.. கிளம்புறேன்.. லஞ்ச் குடுத்து அனுப்புங்க" என்று வேக நடையுடன் கிளம்ப,

"கொஞ்சமாவது கரைஞ்சு வாரானா பாரு.. என்னனு தான் இவனை பெத்து வளர்த்தேனோ!" என்று நின்றவர் அருகே,

"நீங்களும் புலம்புறதை நிறுத்த போறது இல்ல.. அவரும் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ற மாதிரி தெரியல.. பேசாம சென்னை டு டில்லினு உங்க பொண்ணுக்கு போன் பண்ணி வர சொல்லி எதாவது ஐடியா பண்ணுங்க த்தை.. எனக்கும் உங்ககிட்ட மட்டும் சண்டை போட்டு போர் அடிக்குது.." என்று கூறி பிபியை ஏற்றிவிட்டு உள்ளே சென்றாள் கல்பனா.

"அவ நேத்தே திருச்சி வந்துட்டா.. நாத்தனார் அவ ஊருக்கு வந்தது கூட தெரியல.. நல்ல அண்ணி தான் நீ!" என பொய்யாய் குறைப்பட்டவர் ரகுவை நினைத்து மீண்டும் கவலையாய் அமர்ந்தார்.

மகேஸ்வரி ஈஸ்வரனுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன் ஒரு மகள்.

ஈஸ்வரன் இறைவனடி சேர்ந்து பல வருடங்கள் கடந்திருக்க, மூத்த மகன் அகிலனுக்கு மகேஸ்வரி பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கல்பனாவை திருமணம் செய்து ஐந்து வருடங்கள் ஆகிறது.

இரண்டாவது மகள் தர்ஷினியை திருச்சியில் குடும்பமும் டில்லியில் வேலையும் என பார்க்கும் மாப்பிள்ளை நந்தகுமாருக்கு திருமணம் செய்து வைத்து மூன்று வருடங்கள் கடந்து தர்ஷினி இப்பொழுது ஏழு மாத குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள்.

கடைக்குட்டியாய் இறுதியில் வந்து நிற்பவன் தான் ரகு ராம். தர்ஷினி திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே ரகுவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்த அன்னையிடம் ஒவ்வொரு பெண்ணையும் வேண்டாம் என மறுத்து மறுத்து பின்,

'நான் சொல்ற வரை எனக்கு பொண்ணு பாக்குறதை முதல்ல ஸ்டாப் பண்ணுங்க!' என்று கூறியும் வருடம் ஓடி விட, மகனை நினைத்து கோபம், வருத்தம், வேதனை என சுற்றி வரும் மகேஸ்வரிக்கு ஆறுதல் என்றால் அது கல்பனா தான்.

ஒரு இடத்தில் அமர்ந்து கொஞ்சம் கவலை கொண்டு மனதை ஆற்றிக் கொள்ளலாம் என்று மகேஸ்வரி நினைத்தால் அப்படி அவரை முடக்கி இருக்க விடாது கூடவே சுற்றி வருவாள் மருமகள்.

நான்காவது மாடியில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த ரகுராம் காரை அதனிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு உள்ளேயே அமர்ந்திருந்தான்.

காரின் ஜன்னல்கள் திறந்திருக்க, மிக தீவிரமாய் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சில நிமிடங்களுக்கு பின் காரின் முன் இருக்கும் கண்ணாடியை பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.

கருப்பு நிற கண்ணாடி அணிந்திருக்கும் ரகுவின் கண்கள் சில நொடிகளில் என்னென்ன வர்ண ஜாலங்களை காட்டியது என்பதை அந்த கண்களில் இருக்கும் கண்ணாடி மட்டுமே அறியும்.

அவ்வளவு தான்.. மொத்தம் பத்தே நிமிடங்கள்.. இது தினமும் நடக்கும் ஒன்று.. இன்னும் யாரும் கண்டறியாத ஒன்று.

கார் கதவை திறந்து கொண்டவன் எப்பொழுதும் போல வேக நடையில் அந்த பார்க்கிங்கை கடந்து லிப்ட்டை நோக்கி செல்ல, கூடவே வந்த நான்கு பேர் கொண்ட குழுவும் அதில் ஏறிக் கொண்டது.

அவன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தான் நால்வருமே.. அவர்கள் செலுத்திய வணக்கத்திற்கு பதில் அளித்தவன் அமைதியாய் நிற்க, மற்றவர்களும் அங்கே அமைதியாகி விட வேண்டிய நிலை.

லிப்ட் அதன் தளத்தில் நிற்கவும் முதலில் வெளிவந்து அலுவலகத்தினுள் வேகமாய் நுழைந்து அறைக்கு சென்றுவிட்டான் ரகுராம்.

"என்ன மனுஷன் டா இவர்? எப்ப பாரு டெரர் லுக்கு.. சுமாரா இருந்தாலும் வாய் ஓயாம பேசுறதால தான் என்னை எல்லாம் நாலு பொண்ணு பார்க்குது.. இவருக்கெல்லாம் எப்படி கல்யாணம் நடக்கும்?" லிப்ட்டில் உடன் வந்த ஒருவன் கேட்க,

"சார் வந்து உன்கிட்ட பொண்ணு ரெடியானு கேட்டாரா? சும்மா நீயா உளராத! பணம் உள்ள இடம்.. யார் எப்படி என்னனு நமக்கு எப்படி தெரியும்? நல்லதோ கெட்டதோ அவரோட கேரக்டர் என்னனு தெரியாம சும்மா எதுவும் பேச வேண்டாம்!" என்றாள் அதே கூட்டத்தை சேர்ந்த மற்றொரு பெண்.

அவரவர் இடத்தில் வந்து அமர, அலுவலகம் காலை நேர வேலையில் பம்பரமாய் சுழல துவங்கியது.

தொடரும்.