• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 23

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 23

வாழவந்தான், கருப்பையா மற்றும் கருப்பையாவின் தம்பி ஒருவர் உடன் கனகவள்ளி சிவா.

ஐந்து பேர் சேர்ந்து வினோதன் வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்க, வாழவந்தான் அங்கே இங்கே என எங்கேயும் பார்க்காமல் பார்க்கவும் முடியாமல் தயக்கமாய் தான் அங்கே அமர்ந்திருந்தார். ஈஸ்வரியை வள்ளி அழைத்த போதும் தான் வர மறுத்துவிட்டார் அவர்.

"வாங்க பாட்டி! நீங்க வரலைனா தான் எனக்கு கஷ்டம்!" என சிவாவுமே அழைத்துப் பார்த்தான்.

அந்த வீட்டிற்கு செல்ல பிடித்தமில்லை என்பது ஒருபுறம். பேரனுக்கான நல்ல நாளில் தான் ஏன் என்ற ஒரு எண்ணம் ஒருபுறம் இருக்க,

"இருக்கட்டும் டா. நீ போய்ட்டு வா. கல்யாணத்துக்கு வராம இருக்க மாட்டேன்ல!" என்று அனுப்பி வைத்திருந்தார்.

முழுதாய் ஏழு நாட்கள் முடிந்திருந்தது சிவாவின் ஜாதகம் வினோதன் கைகளுக்கு சென்று. அதை சரிபார்த்து பொருத்தம் பார்த்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் தான் பெண் பார்க்க வர சொல்லி வாழவந்தானுக்கு அழைப்பு கருப்பையா மூலம் சென்று சேர்ந்தது.

அதற்கு மேல் முரண்டு பிடிக்க முடியவில்லை மகனிடம் வாழவந்தானால். இதோ கிளம்பி வந்தாகிவிட்டது.

"அண்ணி காபி!" என முகமெல்லாம் புன்னகையாக கனகவள்ளிக்கு மாலா காபியை கொடுக்க, அவரைப் பார்த்து சிரித்தபடி எடுத்துக் கொண்டார் கனகவள்ளியும்.

"காபி மகி கொண்டு வர மாட்டாளா ம்மா?" உதடு மடித்து புன்னகையை அடக்கி சிவா மெதுவாய் அன்னையிடம் கேட்க,

"பச்ச புள்ளல்ல? கீழ எதுவும் போட்டுடுச்சுன்னா?" என்று மருமகளுக்காய் பேசி வைத்தார் கனகவள்ளி.

சிவாவிற்கு கொடுக்கும் பொழுதும் அதே புன்னகை தான் மாலாவிடம்.

"அத்தை முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதுல்ல ம்மா?" என அதற்க்கும் சிவா கிண்டல் பேச, அவனின் மலர்ச்சியை கவனிக்க வைத்தது சிவாவின் இந்த பேச்சுக்கள்.

வாழவந்தான் காபியை எடுக்காமல் இருக்க,

"அண்ணே!" என்று மாலா அழைக்கவும் அப்பொழுதும் எடுத்தபாடில்லை.

"இவரை..." என வள்ளி பல்லைக் கடிக்க,

"என்ன வாழவந்தான். அதான் சம்மந்தம் பண்ண போறியே! எடுத்துக்க" என்றார் கருப்பையா.

வினோதனும் நடந்ததை பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார். வினோதன் வீட்டில் அவர்களை தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. மூத்த மகள் வனிதாவும் அவள் கணவன் திவாகரும் உடன் இருந்தனர்.

தயங்கி தான் காபியை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டார் வாழவந்தான்.

அத்தனை ஆவல் சிவாவிற்கு மகிமாவை இந்த நிமிடம் காண. ஒரு இடத்தில் ஒரு நிமிடம் கைகளை கட்டிக் கொண்டு நிற்க சொன்னால் அவளால் முடியாது என்பதை இவன் அறிவான்.

இத்தனை பேரின் முன் தன்னை அவள் காண பெரிதாய் ஒரு எதிர்பார்ப்பு அவனிடம். சட்டையை மீண்டுமாய் ஒருமுறை நீவிவிட்டுக் கொண்டான்.

ஹால்ஃப் வைட் சட்டையின் முழுக்கையினை இரண்டே மடிப்பு மட்டும் மேலேடுத்து வைத்திருந்தான்.

அதை பார்க்க பார்க்க அவனுக்கே சிரிப்பு தாளவில்லை. இதில் தன்னை அவள் கண்டாள் எப்படி விழிப்பாள் என்பதில் தான் இருந்தது சிவாவின் எண்ணமெல்லாம்.

ஜாதகம் பார்க்க சென்ற அன்று மகிமா நண்பர்களுடன் வெளியே சென்றவள் மூன்று மணி அளவில் முதலில் சென்ற ரெஸ்டாரண்டில் அமர்ந்து அவளுக்கு முன் பர்கர் இருக்க அதை அவள் பார்த்தபடி இருந்த புகைபடத்தை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் அலைபேசி சத்தத்தில் எடுத்துப் பார்த்ததும் ஒரு புன்னகை.

அதை பார்த்தபின் அவள் ஸ்டேட்டஸ் வைத்ததன் அடையாளம் முகப்பில் தெரிய, அதை தொடவும் தான் தெரிந்தது அவள் முன் பர்கரோடு இருந்த மற்ற ஐட்டங்களும். அதில் அவள் புகைப்படம் இல்லை. உணவுகள் மட்டுமே!

"உணவோடு ஒருநாள்!" என்ற தலைப்பில் கொஞ்சம் அதிகமாய் சிரித்தவன் "சாப்பிடன்னே பிரண்ட்ஸ் வச்சிருக்கா!" சொல்லியபடி கிளம்பிவிட்டான் வீட்டிற்கு.

அன்றைய தினம் மாலா கணவன் சொல்லும் பதிலுக்காக எதிர்பார்ப்போடு இருக்க, அன்று முழுதும் வாயே திறக்கவில்லை அவர்.

அடுத்தநாள் காலை ஆறு முப்பதுக்கெல்லாம் மகிமாவிடம் இருந்து அழைப்பு சிவாவிற்கு.

ஏழு மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டி குளித்து தயாராகிக் கொண்டிருந்த சிவா "என்ன இந்நேரம்!" என விழிகளை சுருக்கியவன்,

"மாமா எதாவது சொல்லிருப்பாங்களோ?" என பதட்டத்தோடு தான் அழைப்பை ஏற்றான்.

"மாமா ஆபீஸ் கிளம்பிட்டிங்களா?" என்றாள் எடுத்ததும்.

"இல்ல அம்மு! இன்னும் பத்து நிமிஷம் ஆகும். என்ன இந்நேரம் கூப்பிட்டிருக்க? எதுவும் பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லயே!" என்றவள் சொல்லில் நன்றாய் மூச்சு விட்டுக் கொண்டவன்,

"கொஞ்சம் டென்ஷனாகிட்டேன். சொல்லு!" என்றான் என்னவாக இருக்கும் என நினைத்தபடி.

"கோவிலுக்கு வர்றிங்களா?" என்றாள்.

"இப்போவா? அத்தை வர்றாங்களா?" சிவா கேட்க,

"அத்தையை பார்க்க தான் வருவீங்களா? அத்தை பொண்ணு வேண்டாமா?" என்று கிண்டலாய் அவள் கேட்க, அதில் புன்னகை பூத்தவன்,

"வேணுமே!" என்றான் உடனே!

"அது!" என்றவள்,

"சரி நான் வெயிட் பன்றேன். நீங்க வாங்க!" என்றாள்.

"மகி! மாமா வீட்டுல இல்ல? கேட்க மாட்டாங்களா?"

"அச்சோ! வாங்க மாமா!" என்றவள் உடனே வைத்துவிட்டாள் பதில் கூறாமல்.

அவள் வீட்டிலிருந்து கிளம்பும் அவசரமாய் இருக்க கூடும் என நினைத்துக் கொண்டவனுக்கு காலை அவளின் அலைபேசி பேச்சும் இந்த அழைப்பும் என புத்துணர்வை கொடுத்திருக்க, அன்னையிடம் சொல்வதா வேண்டாமா என சிந்தித்தவன்,

"ம்ம்ஹும் இவளை நம்ப முடியாது. போனதும் எதாவது பல்பு குடுத்து அனுப்புவா! போய்ட்டு வந்தே சொல்லுவோம்!" என தனக்குள் சொல்லிக் கொண்டே கிளம்பி இருந்தான்.

இவனுக்கு முன் அங்கே வந்து எப்பொழுதும் மாலா வள்ளி என இருக்குமிடத்தில் காத்திருக்க, அவளருகே சென்றவன் அலுவலகம் கிளம்பியே வந்திருந்தான்.

"இவ்வளவு காலைல நீ எழுந்துப்பியா என்ன?" என்று கேட்டபடி தான் அவளருகே அமர்ந்தான்.

"குட் மார்னிங் மாமா!" என்றவள்,

"கிண்டலா? நேத்து வெளில போனேன்ல? அங்க உங்களுக்கு ஒரு ஷர்ட் வாங்கினேன்!" என்று சொல்லியபடியே கவரில் இருந்து அதை எடுத்து அவன் கைகளில் கொடுத்தவள்,

"எப்படி இருக்கு மாமா?" என்று கேட்க, அதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை அவன்.

"ஹேய்! இதென்ன மகி!" என்றவன் கைகளில் அவள் வைத்திருக்க அதை முன்னும் பின்னுமாய் திருப்பிப் பார்த்து அவளையும் பார்த்தான்.

"இப்ப எதுக்கு?"

"நமக்கு கல்யாணம்ல? ஃபர்ஸ்ட் கிப்ட் என்னோடது. எப்பவும் மறக்க கூடாது!" என்றவள் கண்களை அவன் காண, புதிதாய் அவன் கண்களுக்கு எதுவும் அதில் அகப்படவில்லை.

"அசால்ட்டா எல்லாம் பண்ற நீ!" என்று சிரித்தவன்,

"நல்லாருக்கு. ஆனா இது ஒன்னும் நீ கேட்ட பெர்மிஸ்ஸன்க்கு நான் ஓகே சொல்லிட்டேன்னு எனக்கு ஐஸ் வைக்குறதுக்காக வாங்கலையே?" என்று சொல்ல,

"மாமா!" என்றவள் முகம் சுருங்க,

"நிஜமா உங்களுக்கு வாங்கனும்ன்னு எனக்கு தோணிச்சு மாமா. பிரண்ட் ட்ரெஸ் எடுக்கணும்னு கடைக்கு கூட்டிட்டு போனா. நான் என்ன வாங்குறதுன்னு யோசிக்கும் போது தான் உங்களுக்கு வாங்கலாம்னு தோணுச்சு. நான் நீங்க சொன்ன அப்படிலாம் நினைக்கவே இல்ல!" என்று முகம் வாடி சொல்ல,

"சும்மா கேட்டேன் மகி." என்று அவள் முக பாவத்தை கவனித்தவன் சொல்லி,

"இப்ப நான் இதை எப்ப போடறது?" என்று அவளிடமே கேட்க,

"இப்பவே ஆபீஸ்க்கு போட்டாலும் ஓகே தான்!" என பழையபடிக்கு மீண்டிருந்தாள்.

"ப்ச் வேணாம்! ஃபர்ஸ்ட் கிப்ட்னு சொல்லி தந்தியே! சோ ஸ்பெஷல் அக்கேஷன்க்கு யூஸ் பண்ணிக்கலாம். ம்ம்?"

"ம்ம் ஓகே!" என்று புன்னகைத்தவள் "அப்ப கிளம்பவா? காலைலே இதுக்காக தான் கிளம்பி வந்தேன்!"

"ஏன் அம்மு? ஆபீஸ்ல தந்திருக்களாம்ல?"

"நீங்க தான் ஆபீஸ்ல யாருக்கும் இன்னும் நம்ம மேரேஜ் இன்ஃபார்ம் பண்ணலையே! அங்க நான் ஓவரா கத்திட்டேன்னா? அது உங்களுக்கு கஷ்டமாகிடும்ல?" என்று அவள் சொல்ல என்னவோ போலாகியது சிவாவிற்கு.

"மாமா சம்மதம் சொல்லட்டும் நானும் ஆபீஸ்ல சொல்லிடுறேன்? ஓகே?" என்று சொல்ல, அதற்கும் வாடா புன்னகை தான் அவளிடம்.

"தேங்க்ஸ் அம்மு!" என்றவன் அவளை பாதாதிகேசப் பார்வை பார்க்க, அதில் கண்களை சுருக்கியவள் என்னவென்ற தலையாட்டலுக்கு புன்னகையுடன் ஒன்றுமில்லை என தலையசைத்தவன் இனி அவளுடனான நேரத்தை கொஞ்சம் அதிகரிக்க நினைத்தான்.

அவளுக்கு தெரிந்திருப்பதை அவள் புரிந்திருக்க வேண்டுமே எனும் எண்ணம். அவளிடம் ஒரு தேடல் உருவாகி இருக்க, அதை உணர்த்திட தான் தெரியவில்லை.

அடுத்த நாளே பெண் பார்க்க வர சொல்லி அழைப்பு வர, சட்டென தோன்றியது என்னவோ அவள் வாங்கி கொடுத்த பரிசு தான்.

முதல் பரிசினை முதல் பார்வைக்கு கொடுத்தால் என்ன என்று தோன்றிய நொடி அந்த சட்டையை எடுத்து பிரித்தவன் இதழ்கள் புன்னகையால் விரிந்தது. அதை நீவி கொடுத்தவன் மனம் குறுகுறுப்படைய அத்தோடு எடுத்து அணிந்து கொண்டான்.

இதோ அவள் வீட்டில் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தவன் இந்த நொடி அவள் வரவினையும் அவள் பார்வையையும் எதிர்பார்த்து காத்திருந்தான்.

"எல்லாம் சரி தானே? என்ன வினோதா வர சொல்லிட்டு அமைதியா இருக்க?" கருப்பையா இரு வீட்டார்க்கும் சேர்த்து அவரே பேசிக் கொண்டிருந்தார்.

வினோதன் வாழவந்தான் விரும்பி வந்ததாய் நினைத்துக் கொண்டிருப்பவர் அவரே பேச காத்திருக்க, வாழவந்தான் வினோதன் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற எண்ணத்திலும் அனைத்தும் தன்னை மீறி நடப்பதிலும் அமைதியாய் இருந்தார்.

"மாமா! தாத்தா உங்ககிட்ட தான் கேக்குறாங்க!" தன் நினைவில் இருந்தவரை அழைத்தான் திவாகர்.

"பொருத்தம் எல்லாம் பார்த்து ஒத்து வந்த பின்ன தான வர சொல்லி இருக்கு. வேற என்ன இருக்கு சொல்ல? என் பக்கத்துல எல்லாம் சரியா தான் இருக்கு!"

தனக்கு சம்மதம் என்பதை தன் பாணியில் சொல்லிவிட்டு வாழவந்தானை ஒரு பார்வை பார்த்தார் வினோதன்.

"அதுவும் சரி தான். அப்போ பொண்ணை வர சொல்லுங்க. பார்த்துட்டு உன் தங்கச்சி குடும்பமும் தான் முடிவை சொல்லட்டும்!" என்று கூறவும்,

"மாலா!" என்று வினோதன் அழைக்க, அதற்காகவே காத்திருந்தவர்,

"வனிதா! மகியை கூட்டிட்டு வா!" என்றார் பெரும்குரலில்.

சிவாவின் மனமெங்கும் சட்டென்று ஒரு படபடப்பு. தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண். தன்முன் தானாய் வந்து நிற்கும் பட்டாம்பூச்சி. இன்று தனக்கென தன்னவளுக்கு தனியாய் ஒரு அழைப்பு.

நினைக்கவே மனம் தித்திக்க, உள்ளத்தின் எண்ணம் கொண்டு வந்த புன்னகையை அடக்க பெரும்பாடுபட்டவன் இதழ் மடித்து நெற்றியின் ஓரம் நீவிவிட்டபடி தன்னை சமன் செய்ய போராடிக் கொண்டிருந்த நேரம் அவளின் வருகை அமைய, கண்கள் முழுதும் சரணடைந்தது அவளிடம்.


தொடரும்..
 
Last edited:

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
168
111
43
Dindigul
வாவ் இந்த எபி..
ஒரு குட்டி சிரிப்போடவே படிச்சேன். செம்ம ஃபீல் ப்பா
 
  • Love
Reactions: Rithi