• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 33

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 33

"உங்ககிட்ட தான் மாமா!" மகிமா அவன் தோள்களைத் தட்ட,

"ஹ்ம்ம்" என்றவன் மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பிக்கவும்,

"நான் கேட்டேனே மாமா!" என்றவள் பின் தான் கவனித்தாள், அவன் கேமராவை ஆன் செய்து இருவரும் தெரியும்படிக்கு வைத்து செல்ஃபீக்கு தெளிவாய் இருவரையும் இணைத்து அருகில் நெருங்கி வந்ததை.

பார்த்ததும் அழகாய் ஒரு புன்னகை மகிமாவிடம்.

"ம்ம்ம் இது மட்டும் தான் மிஸ் ஆச்சு! இப்ப நைஸ்!" என்றவன் தோள்கள் உரசும் அளவுக்கு அமர்ந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டான்.

"ஹ்ம்ம் என்னவோ கேட்டியே!" சிவா கேட்க, திருதிருவென விழித்தாள்.

உளறிவிட்டோமோ என யோசித்துப் பார்த்தால் என்ன கூறினோம் என்றே நியாபகம் வரவில்லை.

"சாப்பிடு! போலாம்!" என்றவன் வேறெதுவும் கேட்கவில்லை.

வீட்டின் முன் இறங்கியவள் "உள்ள வாங்க மாமா!" என அழைக்க,

"லேட் ஆச்சே! இன்னொரு நாள் வர்றேன்!" என்றவன்,

"உனக்கு ப்ராஞ்ச் மாத்தினா ஓகேவா அம்மு?" என்று கேட்க,

"ஏன் மாமா?" என்றவள் பயந்துவிட்டாள். நண்பர்கள் பற்றி எல்லாம் எண்ணமில்லை. திடீரென என்ன கேள்வி இது என்று தான் பதட்டம்.

"என்ன ஏன்? கொஞ்சம் முன்ன கேட்டியே ஒரு நான்சென்ஸ் க்வேஸ்டின்!" என்றவன் தன் கோபத்தை அடகுவதும் புரிய, விழிகளை விரித்தவள் இப்பொழுதும் வாயை திறக்கவில்லை.

"எதுவும் சொல்லிடாத! அவங்க சொல்றதெல்லாம் செஞ்சுட்டு அதே பிளேஸ்ல அப்படியே இருந்துக்கோ!" என்றவன்,

"ப்ச்! கிளம்புறேன்!" என்று சொல்ல பதில் சொல்லாமல் நின்றவளைப் பார்க்கவும் பாவமாய் இருந்தது.

"கிளம்புறேன் சொன்னேன்!"

"கிளம்புறேன்னு மட்டும் தான் சொன்னிங்க!" முகம் சுருக்கி அவள் சொல்லிவிட,

"லேட் ஆச்சு! ஆபீஸ் போனுமா வேண்டாமா நான்?" என்றவன் கோபம் நன்றாய் புரிந்தது.

இவ்வளவு கேட்டும் தன்னிடம் அவள் சொல்லவில்லை தானே? அத்தனை முக்கியமா இப்படிப்பட்டவர்கள் இவளுக்கு? என்றொரு கோபம்.

"வீட்டுல எதாவது சொல்ல போறாங்க! நீ உள்ள போ மகி!"

"போறேன் மாமா! ஆனா இப்படி கோவமா போகாதீங்க! கஷ்டமா இருக்கு!"

"நீ இப்படி இருக்குறது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. சொன்னா கேட்குறீயா? இல்ல தானே?" என்றவன் நேரமாவதையும் உணர்ந்தான்.

"சரி நான் கிளம்புறேன்! பை!" என்று சொல்ல, தலை கூட அசையவில்லை அவளுக்கு.

"இப்ப என்ன டி பண்ணனும்?" என்றவன் பைக்கை அமர்த்திவிட,

"மாமா!...." என்றவள் கண்களை அகல விரித்தாள் அவன் வார்த்தைகளைக் கண்டு.

"கிளம்புறேன் அம்மு!" என்று பொறுமையை இழுத்து பிடித்து அவன் சொல்ல, அதுவே போதுமானதாய் இருந்தது மகிமாவிற்கு.

"சரி மாமா! பார்த்து! அவங்களை நான் பார்த்துக்குவேன்!" என்றவள் சமாதானம் செய்ய நினைக்க,

"ப்ச் போடி!" என்றவன் கிளம்பியேவிட்டான்.

வருத்தம் இருந்தாலும் அவன் தனக்காக பார்த்து பார்த்து நின்றதும் அவன் வார்த்தைகளும் என மனதில் ஒரு இதம் தந்து தான் நின்றது மகிமாவிற்கு.

அலுவலகம் வந்து சேர்ந்த போது அதிகமாய் ஆட்கள் இல்லை. மதியம் வருபவர்கள் எல்லாம் மிகக் குறைவு தான். மொத்தமே ஏழு எட்டு பேர் என்று தான் இருக்க கூடும். இவன் மேலதிகாரியுமே ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிட, நிதானமாய் வந்து தன் இடத்தில் அமர்ந்தவன்,

"ரீச்டு!" என்றோரு செய்தியையும் அனுப்பி வைக்கவும் தவறவில்லை.

'ஆட்டி வைக்குற நீ!' என்று நினைத்துக் கொள்ளவும் தவறவில்லை.

எத்தனை எளிதாய் ஒருவரை மனம் தளர்வடைய செய்துவிடுகிறார்கள் வார்த்தைகள் மூலம். தன் பேச்சு அடுத்தவரை காயப்படுத்துவது கூட தெரியவில்லையா இல்லை அவர்களுக்கு பரவாயில்லையா? என நினைக்க நினைக்க சிவாவிற்கு மகிமாவை நினைத்தும் அத்தனை ஆதங்கம்.

இப்படிப்பட்ட நட்பு இவளுக்கு தேவை தானா? என நினைத்தவனுக்கு இன்னமும் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்றெல்லாம் தெரியாது.

நிச்சயம் முதல் திருமண தேதி வரை குறித்து, தன்னுடன் பேசி பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து பேசி அத்தனை உற்சாகமாய் இருந்த பெண், அவளுக்கானவனிடமே திடீரென நான் உனக்கு பொருத்தமா என்று குழம்பி தவித்து கேட்ட நொடி நண்பர்களானவர்களின் பேச்சு எந்தளவுக்கு அவளுக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருக்கும் என்று புரிந்து சிவாவிற்கு அத்தனை கோபம் வந்தது தான் உண்மை.

அதையும் விட அதை தன்னிடம் அவள் மறைப்பதும் அவர்களுக்கு இவள் இடம் கொடுப்பது போல தானே என்றொரு கோபம்.

போனில் செய்தி வந்ததற்கான ஒலியில் சிந்தனை கலைந்து எடுத்துப் பார்க்க,

"எத்தனை மணியானாலும் பிரீயாயிட்டு கால் பண்ணுங்க மாமா!" என்றொரு செய்தி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

"கோவமா இருந்தாலும் கால் பண்ணுங்க. நான் தூங்க மாட்டேன். வெயிட் பண்ணுவேன்!" என்றவள் அன்பில் மனம் உருகினாலும், அவள் தன்னிடம் கேட்ட அந்த கேள்வியின் தாக்கமும் குறையவில்லை அவனிடம்.

"கல்யாணம் முடியட்டும்!" என்று நினைத்த நொடி தான் சிறுபுன்னகையும் மனம் கொஞ்சம் அமைதியையும் தேடிக் கொண்டது.

அன்று இரவே அவனை சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவளடித்த குட்டிக் கரணங்களில் எல்லாம் தனக்குள் சிரித்துக் கொண்டவன், தானே அவளுக்கு இடமளித்து அவள்வழிக்கு சென்று அவளை கொண்டாடிக் கொண்டான்.

இடையே தான் வினோதனுக்கு மகிமா, சிவா ஒரே அலுவலகம் என்பது மனைவி மூலம் தெரிய வர,

"அதெப்படி மாலா?" என்றவர்க்கு முதலில் வந்தது என்னவோ அதிர்ச்சி தான்.

வாய் தவறி கூறிவிட்டு பதறி போனார் மாலா.

"இல்லங்க! அவளுக்கே தெரியாது. அவ இப்ப தானே சேர்ந்தது? சிவா.. அதான் மாப்பிள்ளை ரெண்டு மூணு வருஷமா அங்க தான் வேலையே பாக்குறாங்க!" என்று சொல்ல, சிவாவின் வேலையை வினோதன் எப்படிப்பட்ட வேலை என விசாரித்தவர் மகள் அங்கே தான் வேலையில் இருக்கிறாள் என அப்பொழுது தெரிந்து வைத்திருக்கவில்லை.

"ஆனாலும் ஒரே ஆபீஸா?" என்றவர் மனம் சுரண்ட,

"இல்லைங்க! ஒரே கம்பெனி! வேற வேற ஆபீஸ்! இத்தோட ப்ராஞ்ச் தான் இன்னொன்னு இருக்கே? அங்க தான். இப்போ மாத்தி இருப்பாங்க போல!" என என்னவெல்லாமோ சொல்லி வைக்க,

"உனக்கு முன்னாடியே தெரியுமா சிவா அங்க வேலை பாக்குறது?" என்றார் மகளிடம் தந்தை.

"தெரியும் ப்பா!" என்று மகிமா சொல்லவும் எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல வந்தது மாலாவிற்கு.

"கேள்விபட்டிருக்கேன் ப்பா. பாத்திருக்கேன்! அவ்வளவு தான்!" என்று சமாளித்த மகிமா அதை சிவாவிடமே சொல்லி சிரிக்க,

"இரு இரு! கல்யாணம் முடியட்டும்! நீ சொன்னதை எல்லாம் உன் அப்பாகிட்ட சொல்றேன்!" என்று சிரித்தான் சிவாவும்.

"அதுக்கப்புறம் தெரிஞ்சா என்ன? சொல்லிக்கோங்களேன்!" என்றுவிட்டாள்.

"அவ்ளோ அசால்ட்டு நீ?" என்று அவள் தலையில் கொட்டு வைத்திருந்தான்.

காலையில் அழைப்பிதழ் கொடுக்க செல்வது முதல் நிச்சயம் திருமணம் என்ற வேலைகளில் சிவா தானுமாய் தந்தையுடன் நின்றவன் மதியமாய் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டான்.

நிச்சயத்திற்கு புடவை யார் கடையில் எடுப்பது என்றொரு பிரச்சனையில் வாழவந்தான் வினோதன் இருவரும் மீண்டுமாய் முட்டிக் கொண்டனர்.

"இவ்வளவு பெரிய கடை! அதுவும் எல்லாம் புது சரக்கா இறக்கி வச்சிருக்கேன்! அவன் கடையில எடுக்கவா?" என்று வாழவந்தான் சொல்ல,

"அம்புட்டு சரக்கும் பிளைட்ல வந்தது. எல்லாமே கல்யாணத்துக்குன்னு கேட்டு விலையை பார்த்து பார்த்து கொண்டு வந்து வச்சிருக்கேன்! நம்ம கடையில தான் கல்யாணத்துக்கு எல்லாமே வாங்குனதா இருக்கனும்!" என்றார் வினோதன்.

"அம்மு! உனக்கு புடவை நீயே செலக்ட் பண்ணனுமா?" என்று சிவா மகிமாவிடம் கேட்க, யோசித்தவள்,

"அப்படியெல்லாம் இல்லை மாமா! எனக்கான ஃபன்க்ஷன்னா அம்மா அத்தை யாரா இருந்தாலும் கல்யாணப் பொண்ணுக்குன்னு கிராண்டா நல்லா தானே செலக்ட் பண்ணுவாங்க? அவங்களே எடுக்கட்டும்! ஆனா எதாவது ஒரு சாரீ மட்டும் என்னோட சாய்ஸ் இருந்தா நல்லா தான் இருக்கும். பட் பரவால்ல மாமா!" என்று சொல்ல,

"அப்ப ஓகே டா!" என்றவன்,

"ம்மா! மாப்பிள்ளையோட மாப்பிள்ளை வீட்டுக்கும் ட்ரெஸ் பர்ச்சேஸ் வினோதன் மாமா பொறுப்புல விட்ருங்க! பொண்ணுக்கும் பொண்ணோட வீட்டுக்கும் அப்பா பொறுப்புல விட்டுடுங்க!" என்று தீர்வை சொல்லியவன், மகிமாவை அழைத்துக் கொண்டு வேறொரு கடைக்கு சென்றுவிட்டான்.

"அப்பாக்கு தெரிஞ்சுது! தோலை உரிச்சுடுவாங்க மாமா!" என்று கண்ணை உருட்டினாள் மகிமா.

"அதெல்லாம் பார்த்துக்கலாம்! நீ உனக்கு வேணும்ன்றதை வாங்கிக்கோ!" என்று சொல்ல, ஏற்கனவே புது புடவை என்றால் அத்தனை பிரியப்படுபவள் தேடித்தேடி எடுத்தாள்.

"பட்டு வேண்டாம் அம்மு!" என்று சிவா சொல்ல!"

"அப்ப கல்யாணத்துக்கு இல்லையா?" என்றாள்.

"கல்யாணத்துக்கு இங்க வந்து எடுத்தோம் தெரிஞ்சா உன் அப்பா தோலை உரிக்க மாட்டாரா?" என்று அவன் சிரிக்க,

"ஆமால்ல!" என்றவள்,

"அப்ப எதுக்காக மாமா?" என்றவளைப் பார்த்து நமட்டுப் புன்னகைக் கொடுத்தவனை அப்பொழுது அவள் கவனிக்கவில்லை.

"இந்த பிங்க் அம்மு?" என்றவன் காட்டிய புடவையை கண்டவள்,

"நல்லாருக்கு! ஆனா என்கிட்ட பிங்க் நிறைய இருக்கே!" என்றாள் அவன் என்ன நினைக்கிறான் என கணிக்க முயன்று.

"ஓஹ்! ஓகே ஓகே!" என்றவன்,

அதன்பின் அவள் தேர்வினை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் விலையையும் பார்க்கக் கண்டு,

"உனக்கு பிடிச்சிருந்தா எடு அம்மு!" என்றுவிட்டான். மனதுக்கு திருப்தியான பின் தான் அவளும் ஒன்றை எடுத்துக் கொண்டது.

"நிஜமா உங்களுக்கு ஓகே தானே?" என பலமுறை கேட்டு அவன் திருப்தியா என தெரிந்து கொண்டு தான் எடுத்ததே!

"உங்களுக்கும் ஷர்ட் எடுக்கலாமா மாமா?"

"எதுக்கு?"

"ப்ச்! மேட்சிங் மேட்சிங்! ஒரே நாள் ஒரே மாதிரி போட்டுக்கலாம் தானே?" என்று சொல்லவும் பொங்கி வந்த புன்னகையை இதழ் மடக்கி அடக்கிக் கொண்டவன்,

"அதெல்லாம் இன்னொரு நாள் வாங்கிக்கலாம் அம்மு!" என்று புன்னகையை அடக்கிய முகத்துடனே கூறி அழைத்து வந்துவிட்டான்.

"இதை கல்யாணத்துக்கு அப்புறம் ஸ்டிச் பண்ணிக்கவா?"

"ஏன் அதுவரை பூஜை பண்ண போறியா?" என்றவன் உடனே அவளோடு சென்று அவள் எப்பொழுதும் கொடுக்குமிடத்தில் தைக்கவும் கொடுத்துவிட, அதன்பின் திருமணம் வரை அதை மறந்தே போய்விட்டாள் மகிமா.

நிச்சயத்திற்கு இரண்டு நாட்கள் முன்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டாள் மகிமா. சிவாவிற்கு அது தேவை இல்லை என்றும் திருமணத்திற்கு பின் எடுத்துக் கொள்வதாகவும் கூறிவிட்டான்.

நிச்சயத்தின் பின் திருமணம் வரை மகிமாவை வேலைக்கு செல்ல வேண்டாம் கண் திருஷ்டி ஆகும் என வினோதன் தடுக்க,

"அவ்வளவு நாள் லீவ் கஷ்டம் மாமா! பத்து நாள் போகட்டும்! கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு அஞ்சு நாள் அதோட கல்யாணத்துக்கு அப்புறமும் வேணும்!" என்று சிவா அழுத்தமாய் கூறிய பின் தான் அமைதியானார் வினோதன்.

நிச்சயம் காலை பதினோரு மணிக்கு ஏற்பாடாகி இருக்க, அலுவலகத்தில் இருந்து கார்த்திக் தனியே முதலாம் ஆளாய் வந்துவிட்டான்.

"மகி பாப்பா! இனிமேல் இந்த அண்ணன்கிட்ட வட்டிக்கு எல்லாம் காசு தர கூடாது சரியா?" என்று கார்த்திக் கேட்க,

"அவ தர்றது இருக்கட்டும்! அதுக்கு முதல்ல நீ கேட்க கூடாது டா!" என்று சிரித்த சிவா,

"அதென்ன பாப்பா! புதுசா?" என்றான்.

"ஏற்கனவே தங்கச்சி தான். இப்ப அஃபிஸியல்லி தங்கச்சியா போச்சு. உனக்கு அம்மு மாதிரி எனக்கு பாப்பா!" என்றவன்,

"அந்த வட்டியை மட்டும் மறக்க சொல்லிடு!" என்று விளையாடினான்.

சிவாவின் உயர்பதவியில் இருப்பவரும் வந்து வாழ்த்துக்கள் கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

மற்றவர்கள் எல்லாம் திருமணத்திற்கு வருவதாய் கூறிவிட, "உன் பிரண்ட்ஸ் கூடவா வர்ல?" என்றான் சிவா மகிமாவிடம்.

"தெரில மாமா!" என்றவள் ஏற்கனவே கொஞ்சம் அவர்களிடம் பேச்சைக் குறைத்திருக்க, இன்று வராததும் அவளை யோசிக்க வைத்தது.

அன்றைய தினம் வெகு அழகாய் நிறைவேறி இருக்க, ஏற்கனவே சிவா கொடுத்த மோதிரம் மகிமாவின் விரலை அலங்கரித்திருக்க, இதோ இப்பொழுது மற்றொன்று அவன் கைகளால் இன்றும்.

அதே போலவே சிவாவின் மோதிரமும் மகிமா அணிவிக்க நிச்சய விழா அத்தனை சிறப்பாய் நடந்தேறி திருமண வேலைகள் தடபுடலாய் ஆரம்பமானது.

தொடரும்..