• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 39

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 39

"நான் என் புள்ளை அவன் பொண்டாட்டின்னு இன்னைக்கே இந்த வீட்டை விட்டு கிளம்புறோம்! என்ன பண்ண போறீங்க?" ஈஸ்வரியிடம் கனகவள்ளி கேட்க,

"அவன் தான் சின்ன பையன் புரியாம பேசிட்டு போறான்னா.. உனக்கென்ன டி? இதெல்லாம் பழங்காலமா இருக்குறது தான். அதுக்கு ஒரு பரிகாரம் சொன்னேன். இது தப்புன்னு அந்த குதி குதிக்குறான். நீயும் சேர்ந்து அழுது அவனை ஏத்தி விடுற?" என்றார் ஈஸ்வரி.

அவருக்கும் பேரன் பேசி சென்றதில் சிறு உறுத்தல் இருந்தது தான். ஆனாலும் தான் சொல்வதை செய்யாமல் போக நினைக்கிறானே என்ற எண்ணமும் அவரை ஆட்டிப் படைத்து அனுபவிக்க வைத்தது.

"இங்க பாருங்க த்த! அன்னைக்கு அவ்வளவு பேசின உங்ககிட்ட திருப்பி கேட்க எனக்கு எவ்வளவு நேரமாகும்? ஆனா அப்படி கூட உங்ககிட்ட பேசிர கூடாதுன்னு தான் ஒதுங்கிப் போனேன். இப்போ என் பையன்கிட்ட அதுவும் கல்யாணம் ஆன அடுத்த நாளே அவன் பொண்டாட்டியை இப்படி பேசினா அவனுக்கு கோவம் வராதா? உங்களுக்கு பூஜை பண்ணனும்னா பண்ணிக்கோங்கனு நான் விட்ருப்பேன். ஆனா அதுக்கு காரணம் வாரிசுன்னு எப்படி த்த சொல்லலாம் நீங்க? ஊர்ல வேற யாருமே அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு கல்யாணம் பண்ணிக்கலையா? என் பையனை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?" என்று கேட்க,

"இப்போ என்ன டி? அதான் அவன் இவ்வளவு பேசிட்டு போறானே! கலைச்சு விட்டுட்ட தானே? பூஜையும் இல்ல ஒன்னும் இல்ல. எனக்கென்ன வந்திச்சு.. உன் புள்ளைக்கு தான்....." என்றவர் அடுத்த வார்த்தை பேசும் முன்,

"இந்தா வாயை மூடும்மா!" என வந்திருந்தார் வாழவந்தான்.

"என் பையன என்னனு சொல்லிட்டு இருக்க நீ?" என்று வாழவந்தான் கேட்க,

"இங்க பாரு டா உன் பொண்டாட்டியை. பூஜை வேண்டாம்னு சொல்ல வச்சுட்டா!" என குறைபடித்தார்.

"கேட்டுட்டு தான் இருந்தேன்! உறவுக்குள்ள கல்யாணம் வச்சா பகை ஆகிப் போவும்னு சொன்ன. சரினு பூஜை வச்சுக்க சொன்னேன். இப்போ நீ என்ன பண்ணி வச்சிருக்க? அதுவும் அதையே சிவாகிட்டயும் சொன்னா அவன் என்ன தலையாட்டிட்டு போவணுமா? அவன் வாழவந்தான் பையன். அப்படி எல்லாம் ஆவுமா? பிறவு எதுக்கு சாமி எல்லாம்? அவ்வளவு கவலை இருந்தா தினத்துக்கும் சாமிகிட்ட வேண்டுதல் வச்சு சாமி முன்னாடி உக்காரு. சின்ன பையன்கிட்ட போய் உன் பொண்டாட்டிக்கு ஆகாது வாரிசு குறை வரும்னு சொன்னா அவன் மனசு கசங்காது? பெரியவங்கனு உன் மேல அவனுக்கு இருந்த மரியாதையே போயிருக்கும் அவனுக்கு. பெரிய மனுஷத் தனம் இல்லைனாலும் மனுஷத் தனமுமா இல்லாம போச்சு உனக்கு?" என்று கேட்க கேட்க ஈஸ்வரி மொத்தமாய் அமைதியாகிவிட்டார்.

"அவனை பெத்தவன் நான் இருக்கேன். தினமும் சாமி முன்னாடி உக்காந்து அவனுக்காக வேண்டி வேண்டி ஒரு பொண்ணை பார்த்து முடிச்ச என் பொண்டாட்டி இருக்கா அம்மான்னு. எங்களுக்கு இல்லாத அக்கறை தான் உனக்கா? எனக்கும் அந்த பொண்ணை கட்ட முதல்ல விருப்பம் இல்ல தான். ஆனா கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் நீ சும்மா இருக்காம வாரிசு அது இதுன்னு பேசி வச்சா பொண்ணோட அம்மா அப்பா காதுக்கு விசயம் போச்சுன்னா சும்மா இருப்பாங்களா? இல்ல உறவு தான் நிலைக்குமா?" என்ற வாழவந்தான் பேச்சை வள்ளியே எதிர்பார்க்கவில்லை.

தான் பேச நினைத்ததெல்லாம் தனக்கு பக்கமாய் நின்று யோசித்து தன் கணவன் கேட்க, மனம் கொஞ்சமாய் ஆசுவாசத்தை தேடிப் பெற்றுக் கொண்டது கனகவள்ளிக்கு.

"அவ சொல்றதோட நிறுத்திகுவான்னு நினைக்காத! இப்படியே பேசிட்டு இருந்தா மவனையும் மருமவளையும் கூட்டிட்டு நிஜமாவே தனிக் குடித்தனம் போறேன்னு போயிருவா. அவ்வளவு தான் சொல்லுதேன். ஆளைப் பாரு!"

"அய்யோ! மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து தான் டா இந்த பரிகார பூஜையே! அதை தான் அவன்கிட்டயும் சொன்னேன்" ஈஸ்வரி சொல்ல,

"சும்மா இரும்மா! வயசாக வயசாக புத்தி குறையும் போல தான் இருக்கு. இனி வாயை திறக்காம இரு. இனியும் என்னத்தையும் பேசி வைக்காம இரு!" என்றவர்,

"இது பேசினத எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம்னு உன் மவன் வந்ததுன் சொல்லு!" என்ற கனகவள்ளியிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான் உள்ளே சென்றார் வாழவந்தான்.

**************************

"நான் கேட்க மாட்டேன். இன்னைக்கு மட்டும் இல்ல இனிமே உங்ககிட்ட எப்பவுமே கேட்க மாட்டேன். எனக்கு தெரிஞ்ச பதிலுக்கு உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கணுமா நான்? முடியாது. நான் சொல்ல தான் செய்வேன்! உங்களுக்கு என்னை பிடிக்கும்!" என்று அதை மட்டுமே அத்தனை புலம்பினாள் அவனிடம்.

"போதும் அம்மு! ரிலாக்ஸ்!" என அவனுமே பலமுறை தன்னை அணைத்து அரற்றிக் கொண்டிருந்தவளிடம் சொல்லிப் பார்த்துவிட்டான்.

தான் ஒன்று நினைத்து கோபத்தில் சொல்லியது அவளை இத்தனை பாதிக்கும் என நினைக்கவில்லை. இதற்கே இப்படி என்றால் பாட்டி கூறியது தெரிந்தால் என நினைக்கும் பொழுதே மனம் கலங்கியது அவனுக்கு.

மகிமாவை அவர்களுக்கு என்னவென்று தெரியும்? பேசி பார்த்து பழகி இராத ஒரு பெண்ணைப் பற்றி உறவின் முறையில் திருமணம் என்றதற்காக இப்படியெல்லாம் பேசலாமா? என அத்தனை ஆதங்கமும்.

அதுவும் அத்தனை உறுதியாய் பெண்ணுக்கு தான் பிரச்சனை இருக்குமாம் என கூறுகிறாரே! கூடவே வாரிசு வரை! நினைக்க நினைக்க மனம் வெதும்பியது.

இன்னமும் தனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தவளை கைகளைப் பிடித்து தன்னில் இருந்து பிரித்தவன்,

"சாரி! வேற என்ன சொல்ல? தெரியாம சொல்லிட்டேன்!" என்று சொல்ல,

"இனி தெரியாம கூட சொல்ல கூடாது!" என்று கோபமாய் பார்த்தவள் சில நொடிகள் பார்த்துவிட்டு,

"இங்க வாங்க! இப்படி நில்லுங்க!" என அவனை கண்ணாடி முன் தனக்குப் பின்னே நிற்கவிட்டு அவன் கைகளை தானே எடுத்து தன் இடையை சுற்றி தன் கைகளோடு கட்டிக் கொண்டவள்,

"நேத்து இப்படி நின்னு என்ன சொன்னிங்க? மறந்து போச்சா? பிடிக்காதவங்க நிக்குற போஸா இது?" என்று கோபமாய் கேட்க, சிறு புன்னகை அரும்பியது சிவாவிடம்.

அதே நிலையில் நின்றவன் அவள் தோளில் சாய்ந்து கன்னத்தோடு கன்னம் இழைந்து "பிடிக்கலைனு நான் எப்ப கண்ணம்மா சொன்னேன்?" என்றான் கொஞ்சும் குரலில்.

"இந்த மயக்கி பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்!"

"வேற யார்கிட்ட பேசவாம்?"

"ப்ச்! நான் கோவமா இருக்கேன்!"

"ஏய்! அசையாத டி!" என இடையில் இருந்த தன் கைகளை எடுத்து அவள் தோள்களில் மாலையாய் இட்டுக் கொண்டான்.

"கீழ எவ்வளவு பெரிய பிரச்சனை போய்ட்டு இருக்கு தெரியுமா? நீ இதுக்கு போய் குதிக்குற?" என்று கேட்க,

"என்ன பிரச்சனை? அவங்க என்ன பேசினாலும் நீங்க நான் பேசினதை அங்க சொல்லுவிங்களா?"

"ஷ்ஷ்! கத்தாத அம்மு! நீயும் தான என்னை பிடிக்கும்னு எல்லார் முன்னயும் சொன்ன?" என்றான் சின்னதாய் அவள் கழுத்தில் முத்தம் வைத்து.

அதில் சுருண்டவள் மயங்காமல் இருக்க தான் போராடினாள்.

"நான் சொல்றதும் நீங்க சொல்றதும் ஒண்ணா?"

"இல்லையா? சரி! நீ சொன்னது நிஜம் தான். பெரிய உண்மை தான். இனிமேல் யார்கிட்டயும் அந்த உண்மையை சொல்ல மாட்டேன் போதுமா?"

"சொல்லி தான் பாருங்களேன்!"

"என்ன பண்ணுவ?"

"நாளைக்கே பெட்டியை தூக்கிட்டு வீட்டுக்கு போய்டுவேன்!"

"ஏன் இன்னைக்கு என்ன?" என்றான் சிரிப்பை அடக்கி.

"இன்னைக்கு இருட்டிட்டு இல்ல? கொஞ்சம் பயமா இருக்கு. நாளைக்கு போறேன்!" என்றதில் நெற்றி முட்டி சிரித்தக் கொண்டவன்,

"கீழேயும் அதை தான் சொல்லிட்டு இருகாங்க. நீ நாளைக்கு போணுமாம்!"

"நீங்களும் தானே?"

"ம்ம் நானும் தான். ஆனா நீ மட்டும் ஒரு வாரம் அங்க இருக்கணுமாம்!"

"ஏன்?" என்றவள் புரியாமல் விழிக்க, அவளை அழைத்து வந்து அமர வைத்தவன் அவள் மடியினில் தலை சாய்த்துக் கொண்டான்.

"என்னவோ பேசிக்குறாங்க. இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும்!" என்றவன் பார்வை அவளிடம் இல்லை.

"என்னனு சொல்லுங்க மாமா!"

"ப்ச்! ரிலேஷன்ஸ் மேரேஜ் பண்ணிக்க கூடாதாம் அம்மு!" என்றவன் சொல்லில் சில நொடிகளுக்கு பின்,

"ஏன் என்னவாகுமாம்?" என்றாள் முதலில் புரியாமல் மட்டும்.

"வேண்டாம் விடு! அதெல்லாம் நமக்கு எதுக்கு? அவங்க வழக்கம் அது தான்னு விட வேண்டியது தான்!"

"அப்போ என்ன பிரச்சனை மாமா?"

"அது தான் டி பிரச்சனையே! பூஜை பண்ணினா அப்படியெல்லாம் ஆகாதாம். பாட்டி தான் கண்டுபிடிச்சிருப்பாங்க போல!" என்றான் கோபமாய்.

"அப்ப பண்ண வேண்டியது தானே?" என்றவளை அவன் முறைக்க,

"இதுக்கா நீங்க அவ்வளவு பேசினீங்க?" என்றாள் பதிலுக்கு முறைத்து.

"ப்ச்! உனக்கு புரியல அம்மு!"

"அப்ப புரியுற மாதிரி சொல்லுங்க. இல்ல நான் கீழ போய் ஈஸுகிட்டயே கேட்டுக்குறேன்!" என்றவளிடம் என்னவென்று சொல்ல என அவன் யோசிக்க,

"பொண்ணுக்கு பிரச்சனைனு எதுவோ என் காதுல விழுந்துச்சு மாமா. அது எனக்கா? நான் தான் அந்த பொண்ணா?" மகிமா யோசித்தவள் கேட்க, அமைதிக்கு பின்,

"ஹ்ம்!" என்ற குரல் மட்டும் அவனிடம்.

"இதுக்கு தான் உங்களுக்கு கோவமா?" என்றவள்,

"என்ன பிரச்சனை?" என்றவளுக்கு சில சிந்தனைகளுக்கு பின் புரிவது போல இருக்க,

"மாமா! பேபி பத்தியா பேசினாங்க?" என அவனிடமே கண்களை விரித்துக் கேட்க,

"டேய்! வாய மூடு அம்மு!" என்றான் அந்த பேச்சே வேண்டாம் என்பதாய். அதுவும் சில நொடிகளுக்கு தான்.

"ஆனா எனக்கொரு டவுட் மாமா!" என்றவளை அவன் என்னவென்று பார்த்தான்.

"ரிலேஷன்ஸ் மேரேஜ் பண்ணினா அப்படி ஒரு பிரச்சனை வருமா?" அவனிடமே கேட்க,

"இப்ப தான பேசாதன்னு சொன்னேன்!" என்றவன் மடியில் அவள்புறமாய் திரும்பிப் படுத்து அவள் இடையில் முகத்தை வைத்து கட்டிக் கொள்ள,

"ஷ்ஷ்!" என நெளிந்தவள்,

"மாமா! ஆனா புருஷன் பொண்டாட்டியை தானே கல்யாணம் பன்றாங்க? அப்ப அவங்க ரிலேஷன் ஆயிடுறாங்க இல்ல? ஆனா அவங்களுக்கு குழந்தை பிறக்குது தானே?" என்றவள் சொல்லில் சட்டென நிமிர்ந்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

"அம்மு! உன் அறிவுக்கு...." என்றவன் அவளை சாய்த்து அணைத்து இன்னும் சிரித்தவன்,

"இப்படியே இரு டி நீ! லவ் யூ அம்மு!" என கொஞ்சம் கொஞ்சமாய் முத்தம் வைக்க, கூசி சிலிர்த்து அவனோடு அடங்கிக் கொண்டாள்.

தொடரும்..