• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 42

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 42

தர்ஷினி நந்தா வந்தும் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. கைக் குழந்தையின் அழுகை சத்தம் அந்த அறையை நிறைத்த போதும் ஆராத்யா அசைந்தாள் இல்லை.

திருச்சிக்கு சென்று கொண்டிருந்த பாதி வழியிலேயே தகவல் வரவும் திரும்பி வந்துவிட்டனர் தர்ஷினி, நந்தா, நந்தாவின் பெற்றோர் என.

"பாப்பாவை பாரு தர்ஷி!" நந்தா வந்து மனைவியிடம் சொல்ல,

"எனக்கு பயமா இருக்கு நந்து.. எனக்கு ரகுவும் ஆராவும் ஒன்னு தான்.. இப்படி இவளை பார்க்க முடியலையே!" என அழ,

"ரகுக்கு ஒன்னும் ஆகாது.. நீ தான் அம்மாக்கு தைரியம் சொல்லணும்.. ஆராத்யாகிட்ட நீ தான் பேசணும்.. அவ இப்ப நார்மலா இல்ல.. ரகு திரும்பி வரும் போது ஆரா இப்படி இருக்க கூடாது தர்ஷி.. பீ பாசிட்டிவ்.. போய் பாப்பாக்கு பீட் பண்ணிட்டு வா.. வந்து ஆராவையும் அம்மாவையும் பாரு!" நந்தா எடுத்து சொல்ல, கல்பனாவிடம் இருந்த தன் மகளை வாங்கிக் கொண்டவளுக்கு கல்பனாவை நினைத்துமே பயம் தான்.

'இது தானே அண்ணி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய நேரம்?' நினைக்கவும் அழுகை முட்டி வர, அங்கிருக்கும் ஒவ்வொருவரையுமே தேற்ற வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்பதை அறிந்து குழந்தைக்கு பசியாற்றி வந்தாள்.

ஆராத்யா வருவதற்கு அரை மணி நேரம் முன்பு ஐசியூ என்ற அறையின் வெளியில் இருந்தே ரகுவை ஆராத்யா கண்கள் அகல பார்த்தவள் கண்கள் அவனை அவன் முகத்தை விட்டு எங்கும் அகலவில்லை.

அறுவை சிகிச்சை முடிந்து தலையை சுற்றிலும் பெரிதாய் கட்டுப் போடப்படிருக்க, வலது காலிலும் பலத்த அடி என்பதை போல தான் இருந்தது அந்த வெள்ளை நிற கட்டுடன் இருந்த அவனது கால்.

ஆக்ஸிஜன் மாஸ்க் மூலம் அவனுக்கு சுவாசம் கொடுக்கப்பட்டு அவன் முகம் சரியாய் தெரியாமல் மூச்சு விடும் அவனின் நெஞ்சம் ஏறி இறங்க கண்டவள் கண்களை அங்கேயே சுழற்றி வந்தது ஆராத்யாவிற்கு.

அப்பொழுது வந்து தனியாய் அமர்ந்தவள் தான். தர்ஷினி வந்து அழுது அவளைக் கட்டிக் கொண்ட பொழுதும் அசையவில்லை.

"ஆரா! இங்க பாரு ஆரா! என்னை பாரேன்!" என தர்ஷினி அவள் கன்னம் பிடித்து தன் பக்கம் திருப்ப, கண்கள் தர்ஷினியை பார்த்தாலும் அதில் எந்த உணர்வும் இல்லாமல் இருந்தவளைப் பார்த்து இன்னுமே கதறி அழுதாள் தர்ஷினி.

தலையில் பலத்த அடி விழுந்த வேகத்தில் பட்டிருக்க அதற்கான அறுவை சிகிச்சை முடித்து மூன்று மணி நேரம் ஆகி இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது மருத்துவர் கூறி இருந்த நேரம் முடிய.

வந்ததும் அழுது அரற்றி என இருந்தவளை ரகுவை காணவே விடவில்லை மற்றவர்கள்.

"அவனுக்கு ஆபரேஷன் முடியட்டும் டா ஆரா!" என அகிலன் சொல்ல,

"ஆபரேஷனா?" என அதிர்ந்தவள் ரகுவை பார்த்தே ஆக வேண்டும் என கதறி அழுது, ஆர்ப்பாட்டம் செய்தவளை யாராலும் சமாளிக்க முடியாமல் கண்ணீர் வடிய அனைவரும் பார்த்து நிற்க, அம்பிகா தனக்குள் தன் கைகளுக்குள் அவளை கொண்டு வந்து அணைத்துக் கொண்டார்.

அதில் அடங்கி இருந்தவள் ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் வரும் நேரம் அங்கிருந்தே அவரைப் பார்க்க, அகிலனிடம் தான் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

"ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சது.. ஆனா அவரோட கண்டிஷன் சொல்லனும்னா குறைஞ்சது நாலு மணி நேரம் ஆகணும்.. சோ வெயிட் பண்ணுவோம்!" என்று எதுவுமே உறுதியாய் இல்லாமல் சொல்லி செல்ல, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் அகிலன்.

நேரம் செல்ல செல்ல ரகுவோடு ஆராத்யாவின் அசையா தன்மையுமே அனைவரையும் பயம் கவ்வ வைத்திருந்தது.

கண்கள் ஓரிடத்தில் நிலைபெற்றிருக்க, யார் அழைப்புக்கும் செவி சாய்க்காமல் ராம் என்ற ஒற்றை சொல்லை மட்டும் ஓராயிரம் முறை சொல்லி அமர்ந்திருந்தவளின் நிலையில் யாரை நினைத்து அழ என்று தவித்து போயினர் குடும்பத்தினர்.

அடுத்த சில நிமிடங்களில் ஐசியூவை திறந்து கொண்டு ஓடி வந்த நர்ஸ் மருத்துவரை அழைக்க செல்ல ஓட, அகிலனோடு நந்தாவும் அந்த அறையை எட்டிப் பார்த்த போது மூச்சுக்கு தவித்துக் கொண்டிருந்தான் ரகு.

"ரகு!" என்று அகிலன் அதிர்ந்து சத்தமிட, உடல் தூக்கிப் போட விழித்த ஆராத்யா சுற்றிலும் பார்த்து அந்த அறை நோக்கி செல்ல, தர்ஷினி, கல்பனா, நந்தா, அகிலன் என எவரையும் உள்ளே விடாமல் அங்கிருந்த நர்ஸ் தடுத்திருக்க, மருத்துவரும் உள்ளே சென்றிருந்தார் வேகமாய்.

"என்னங்க! ரகுவுக்கு என்ன? ஏன் இப்படி துடிக்குறான்?" என்று தர்ஷினி ஆராத்யா வருவதை கவனிக்காமல் சொல்லி அழ, மகேஸ்வரி நிலை சொல்லவும் வேண்டாம் என்பதாய் இருந்தது. அத்தனை செல்லம்.. அத்தனை பிடித்தம் என அவனை வளர்த்திருக்க, தாளாமல் அமர்ந்திருந்தவர் கடவுளை மட்டுமே நம்பி அமர்ந்திருந்தார்.

"ஆரா!" என்ற நந்தா ரகுவை அவள் பார்க்க வேண்டாம் என தடுக்க அவளை பிடிக்க, அனைவரையும் உதறிக் கொண்டு தர்ஷினியையும் பிடிக்க விடாமல் முன்னேறி அந்த கண்ணாடி கதவின் வழி பார்த்தவள் விழிகள் தெறிக்க, ரகுவின் சீரற்ற சுவாசத்தைக் கண்டு "அம்மாஆஆஆ" என்ற பெரும் அலறல் அவளிடம்.

தர்ஷி வந்து அணைத்துக் கொள்ளப் பார்க்க காதுகளை மூடிக் கொண்டு உடலைக் குறுக்கி அவ்விடத்தில் மடங்கி அமர்ந்தவள் நிலையில் அனைவருமே அதிர்ந்தனர் அவளின் செயலில்.

இதே போன்ற நிலையில் தானே இறுதியாய் தன் தாயைக் கண்டாள் அவள். அந்த காட்சி தானே தினமும் இவளை உறங்கவிடாமல் தவிக்க செய்யும்.

"ஆரா!" என்று மீண்டும் தர்ஷினி அவளை அணைக்க வர, அவளை தள்ளிக் கொண்டு எழுந்தாள் ஆராத்யா.

"சொன்னேனே கேட்டீங்களா? எவ்வளவு சொன்னேன்.." என்று ஆவேசமாய் ஆராத்யா பேச, புரியாமல் அதிர்ந்து நின்றனர் அனைவரும்.

"எனக்கு தெரியும்.. எனக்கு யாருமே நிரந்தரம் இல்லைனு எனக்கு தெரியும்.. அவ்வளவு படிச்சு படிச்சு சொன்னேனே.. உள்ள இருக்கவன்கிட்ட என்னை விட்டுருனு சொன்னேனே.." என அழ அழ நந்தா, அகிலன் என்ற ஆண்களுக்குமே கண்ணீர் வர,

"தப்பு தப்பு! ஏன் டி அவனை பார்த்த? ஏன் டி அவனை நினச்ச? உன்னால தான்.. உன்னால தான் ராம் இப்படி இருக்கான்!" என தன்னையே கன்னத்தில் பலமாய் அடித்துக் கொண்டு ஆராத்யா பேச,

"ஆரா!" என ஓடி வந்து அணைத்தனர் அம்பிகா, கல்பனா, தர்ஷினி என.

"யாரும் வேண்டாம் போங்க!" என்றவளின் சத்தம் அந்த ஐசியூவின் முன் பக்கம் முழுதும் எதிரொலிக்க,

"யாரும் கிட்ட வராதீங்க.." என்று மூச்சு வாங்க கத்தியவள்,

"நான் போயிடுறேன்.. அவரை எந்திரிக்க சொல்லுங்க.. ராமை வர சொல்லுங்க.." என்று அழுதபடி பேசி ஒரு கட்டத்தில் அங்கேயே மயக்கமாகிவிட, உடனே அவளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை.

கல்பனா, அம்பிகா இருவரும் உடன் செல்ல பக்கத்து அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் ஆராத்யா.

மருத்துவர் ஐசியூவில் இருந்து வெளியே வர, அகிலன், நந்தா என அனைவரும் அவர் அருகில் செல்ல,

"ப்ரோப்லேம் எதுவும் இல்ல.. பழைய நினைவுகளை அவருக்கு திருப்பி தர தான் அந்த போராட்டம்.. அதுவும் தலையில பலமா அடிப்பட்டதால ஆபரேஷன் முடியவும் எதுவும் சொல்லிட முடியாதே! இப்ப அவருக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நினைவு திரும்பிடுச்சு.. பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்ல.. முழுசா குணமாக சில மாசம் ஆகும்.. கவனமா பார்த்துக்கணும்.. இப்ப மயக்கமாகிட்டார்.. கொஞ்சம் நேரம் எடுக்கலாம் முழிக்குறதுக்கு.. இன்னும் ரெண்டு இல்ல மூணு நாள் இங்கேயே இருக்கட்டும்.. ஹெல்த் இன்னும் இம்ப்ரூவ் ஆனதும் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடலாம்.. ஒவ்வொருத்தரா மட்டும் இப்ப போய் பாருங்க.." என்று சொல்லி அனைவரின் நன்றியையும் புன்னகை தாங்கி வாங்கிக் கொண்டு அவர் செல்ல,

"ம்மா! நீங்க போய் பாருங்க!" என்ற தர்ஷினி ஆராத்யாவிடம் மகிழ்ச்சியாய் சொல்ல ஓடினாள்.

"டாக்டர் என்ன சொன்னாங்க தர்ஷி?" கல்பனா கேட்க, அவர்களிடம் கூறிய தர்ஷினி மயக்கத்தில் இருக்கும் ஆராத்யாவை வலிக்க வலிக்கப் பார்த்தாள்.

"ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி பிரஷர் அதிகமானதால மயங்கி இருக்கா.. ஸ்லீப்பிங் டோஸ் குடுத்தும் அமைதியான தூக்கம் இல்ல அவளுக்கு.. எதுவோ சொல்ல வர்றா.. கண்ணை முழிச்சுக்க தான் பாக்குறா.. ஆனாலும் அவளால முடியல.." கல்பனா சொல்ல,

"இந்த பொண்ணை ஏன் இப்படி ஆண்டவன் சோதிக்குறானோ.. இந்த கல்யாணம் முடிவான பின்னாடி தான் அவளும் நிம்மதியா இருந்தா.." அம்பிகா புலம்ப,

"ரொம்ப பயந்துட்டா போல தர்ஷி.. ரகுக்கு ஒன்னும் இல்லைனு தெரிஞ்சா தான் இவ நார்மல் ஆக முடியும்.." என்றாள் கல்பனாவும்.

"சரி ஆகிடுவா அண்ணி!" என்ற தர்ஷினி,

"ஆரா இல்லைனா ரகு என்னாவான்னு கவலைப்பட்டிருக்கேன்.. இன்னைக்கு தான் ஆராவை முழுசா புரியுது.. இவளுக்காகவே அவனும் திரும்பி வருவான்.. அவன் வந்தா இவளும் முழுசா நமக்கு வந்திடுவா.." என்று சொல்லி,

"முழிச்சுக்கோ ஆரா! அவன் கண்ணு முழிச்சதும் உன்னை தான் தேடுவான்!" என்று கண்ணீர் வடிய சொல்லி சென்றாள்.
 
  • Love
  • Sad
Reactions: prikar and sivaguru