• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 43

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 43

ரகு கண் விழித்து மூன்று நாட்கள் கடந்திருக்க, அன்று காலை தான் அவனை வேறு அறைக்கு மாற்றி இருந்தனர்.

வீட்டிற்கு அழைத்து செல்ல அகிலன் கேட்க, "சில டெஸ்ட் மட்டும் பார்த்துடலாம்.. தலையில எந்த பாதிப்பும் இல்லைனா ரெண்டு நாள்ல நீங்க தாராளமா வீட்டுல வச்சு பார்த்துக்கலாம்!" என்றிருந்தார் மருத்துவர்.

முதல் நாள் முழுதும் கண் விழித்து பார்ப்பவன் சில நொடிகளில் மீண்டும் உறக்கத்திற்கு செல்ல, பயந்தவர்களிடம், "எல்லாத்தையும் அவர் கடந்து வரனும்.. அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.. வெயிட் பண்ணுவோம்" என்றிருக்க, நடு இரவிற்கு பிறகு ரகுவிடம் நல்ல மாற்றம்.

அனைவரையும் பார்ப்பதும் புன்னகைக்க முயல்வதும் என ரகுவைப் பார்த்தவர்களுக்கு கண்ணீரைக் கொடுக்க, "பேச முயற்சி பண்ண வேண்டாம்.. தலையில தையல் இருக்குறதால கொஞ்ச நாள் போகட்டும்!" என்று சொல்லி இருக்க, ரகுவின் பார்வை அத்தனை பேரையும் ஆறுதலாய் பார்த்துவிட்டு ஆராத்யாவை தேடி சுழன்றது.

"ரொம்ப பயந்துட்டா அவ.. இப்ப தான் அழுது அழுது தூங்கினா.. காலையில பாரு!" என அவனருகில் சென்று தர்ஷினி கூற, ரகு அருகே வந்து அமர்ந்து கொண்டார் அன்னை.

"பார்த்து போயிருக்கலாமே பா.. என்ன டா இதெல்லாம்?" என்றவர் அழுகையை விழுங்க முயன்றாலும் முடியாமல் கேவி அழ,

"ம்மா! அவன் முன்னாடி அழுதுட்டு.." என்று தர்ஷினி தான் பார்த்துக் கொண்டாள்.

"அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் தர்ஷி! எல்லாரும் வெளில வாங்க.." நந்தா சொல்லி ரகுவைப் பார்க்க, ரகுவின் பார்வையும் நந்தாவிடம் தான்.

நந்தாவின் மனம் கலங்க விழிகளிலும் அதன் பிரதிபலிப்பு தெரிய, ரகு லேசாய் கண்களை மூடித் திறந்தான் நந்தாவைப் பார்த்து.

தலையசைத்துக் கொண்ட நந்தாவும் அனைவருடனும் வெளியேற மகேஸ்வரி மட்டும் உடனிருந்தார் சிறிது நேரம்.

அகிலன், கல்பனா, அம்பிகா, நந்தா பெற்றோர் என ரகுவை பார்த்துவிட்டு வெளியேறிவிட, ஆராத்யாவும் அடுத்த நாள் காலையில் தான் தெளிந்தாள் கொடுக்கப்பட்ட மருந்தின் வீரியத்தில் இருந்து.

"ராம்!" கண் விழித்த அடுத்த நொடி அவள் அழைத்து எழுந்து கொள்ள, அருகினில் இருந்தது கல்பனா தான்.

"ஆரா! ரகு எழுந்துட்டான்.. உன்னை கேட்டான்.. வா!" என்று கைப் பிடிக்க, அத்தனை வேகம் ஆராத்யாவின் நடையினில்.

ஆராத்யாவோடு கல்பனா வருவதை கண்ட தர்ஷினி முகம் ஒளிர அவர்கள் அருகில் செல்ல, அதை எல்லாம் கவனிக்கும் நிலை இல்லை ஆராத்யாவிடம்.

இப்பொழுதும் ராம் என்ற பெயர் மட்டும் தான் அவள் இதழ்கள் உச்சரிக்க, கல்பனா அந்த அறையினுள் கைகாட்டி திறக்க, பரிதவித்த மனதை கொண்டு உள்ளே சென்ற கால்கள் மெதுவாய் அவன் இருக்குமிடம் நகர, உறக்கத்தில் இருந்தவனை கண்டு கண்ணீர் சிந்தியவள் அவனருகில் சென்று நின்றாள்.

கைகளில் சிறிது சிறிதாய் சிராய்ப்புக்கள், கால்கள் அசையா வண்ணம் கட்டுடன், தலையிலும் பலத்த கட்டு என பார்த்து அழுதவள் அவன் கை விரல்களைப் பற்றிட, அந்த உணர்வினில் மெல்லமாய் விழித்தான் ரகு.

அவன் விழித்து பார்த்தது தான் தாமதம் "ராம்!" என்றவள் அவன் விரல்களை மட்டும் பற்றியபடி உடல் குலுங்க அழுதிட, மிக சிறிதாய் தலையசைப்பு அவனிடம்.

மனதில் அத்தனை எண்ணங்கள்.. மொத்தமாய் கொட்டி விட வேண்டும் என தவிப்பு.. அவன் மடி சாய சேயாய் தேடும் மனது என வார்த்தையோடு எண்ணங்களும் முட்டி நிற்க, அதற்கான ஒத்துழைப்பிற்கு இன்னும் அவன் மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை என்பதில் கைகளால் வாய் மூடி அழுதாள் பெண் அவள்.

நீண்ட நேரம் விழிப்பிற்கு ரகுவினால் முடியாமல் போக, மெது மெதுவாய் அவன் கண்கள் சோர்வுடன் விழி மூட, அறிந்தவள் சத்தமே இல்லாமல் பார்த்திருந்தாள் நிமிடங்கள் கடந்தும் அவனை மட்டுமாய்.

மூன்று நாட்களும் இப்படி தான் கடந்து கொண்டிருந்தது. யாரேனும் ஒருவர் அவனை கண்காணித்து இருக்க, பெரும்பாலான நேரங்களை ஆராத்யா தான் எடுத்திருந்தாள்.

வாய் திறந்து ஒரு வார்த்தை அவனிடம் பேசிடவில்லை. தன்னால் பேச முடியவிட்டாலும் அவள் பேச இவன் கேட்க என ரகு நினைத்து அவளைப் பார்க்க, அது புரிந்தாலும் அமைதி மட்டுமே அவளிடம். அவனுக்கான தேவையை கூட அமைதியாய் அவளே பார்த்துக் கொண்டாள்.

ஐந்தாம் நாள் காலை எழுந்து ஆராத்யா கோவிலுக்கு சென்றுவிட்டு மருத்துவமனை வர, அப்பொழுது தான் மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு சென்றிருந்தார்.

"இப்ப தான் தெளிவா இருக்கான்.. சீக்கிரமே தேறி வந்துடுவான்னு சொன்னாங்க.." மகேஸ்வரி வெளியில் நின்றவர் சொல்ல,

"நிச்சயமா வந்துடுவாங்க!" என்று சிறு புன்னகை தந்தவள் உறவின் அழைப்பை தவிர்த்திருந்தாள்.

"முழிச்சு தான் இருக்கான்.. பால் குடுத்தேன்.. வேற எதுவும் வேணுமானு கேளு நான் தர்ஷி, கல்பனா என்ன பன்றாங்கனு போன் பண்ணிட்டு வர்றேன்!" என்று சொல்ல, சரி என தலையசைத்து கதவை திறந்தாள்.

தலையணையை வைத்து அதில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் ரகு. கதவு திறக்கும் சத்தத்தில் விழித்துப் பார்க்க, அவனவள் தான்.

புன்னகைத்தவன் அருகில் வந்து அவன் நெற்றியில் திருநீற்றை வைக்க, "ஆரா பொண்ணு மெலிஞ்சுடுச்சு!" என்றவன் மெல்லிய குரலில் அவனிடம் வைத்த கையை எடுக்க தோன்றாமல் அவனைப் பார்த்தபடி நின்றுவிட,

"சாப்பிடவே இல்லையா நீ?" என்றான் ஒற்றை கையால் அவள் கன்னம் பற்றி.

"ராம்!" என்றவள் கண்கள் கலங்க,

"அம்மாவும் இப்படி தான் இருக்காங்க.. எனக்கு தான் ஒன்னும் இல்லையே.. பின்ன என்ன?" என்று கடிந்தவன் குரலோடு சொற்களும் மெதுவாய் வர,

"உங்களுக்கு வலி இருக்குதா? பேசறீங்களே! தலை வலிக்குதா?" என அவளும் தலையில் கை வைக்க,

"ரொம்ப இல்ல.. ஸ்ட்ரையின் பண்ணாம பேசலாம்னு சொன்னாங்க.."

"அப்ப வலி இருக்கு தான? பேசாதீங்க.. எதாவது வேணும்னா மட்டும் கேளுங்க.. தலை வலி வர வாய்ப்பிருக்குன்னு சொல்லி இருக்காங்க.. உங்களுக்கு சரியானா தான் வீட்டுக்கு அணுப்புவாங்க.. வீட்டுக்கு போய் கொஞ்சம் கொஞ்சமா பேசிக்கலாம்.. இப்ப என்ன அவசரம்.." என்றவள்,

"கைக்கு ஏன் மருந்து போடலை?" என்று கேட்டு மருந்திணை கையில் எடுக்க,

"நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல ஆரா!" என்றான்.

"என்ன கேட்டீங்க?" அவன் முகம் பார்த்து யோசித்தவள்,

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீங்க சரியானா போதும்.. இனி ஏதாச்சும் வேணும்னா மட்டும் தான் வாயை திறக்கணும்!" என்றவள் மருந்தினை பூசிட, சிறு எரிச்சல் பரவியது ரகுவிற்கு.

"வலிச்சுடுச்சா? சரி ஆகிடும்!" என்றவள் ஊதிவிட, சிரித்தவன்

"ரொம்ப பயந்துட்டியா ஆரா?" என்றான்.

இல்லை என தலை மட்டும் அசைத்தவள், "பேசாதீங்க!" என்றாள் அந்த நாளை நினைக்கவே வேண்டாம் எனும் விதமாய்.

"நேரம் ஆகிட்டே! சாப்பிடணும்ல.. என்ன குடுக்கலாம்?" என அங்கிருந்ததை பார்த்தவள்,

"இன்னும் ஒரு வாரம் இப்படி தான்.. வேணும் உங்களுக்கு.." என்று சொல்லி ஆப்பிளை கையில் எடுக்க,

"இப்ப வேண்டாம் டா!" என்றான்.

"வேற என்ன வேணும்?"

"நீ தான்!" என்றதும் அவள் முறைக்க,

"கொஞ்சம் பக்கத்துல வாயேன்!" என்றான்.

"உங்க மேல அவ்ளோ கோபத்துல இருக்கேன்.. சரியாகட்டும்னு தான் பார்த்துட்டு இருக்கேன்.." கோபத்தை காட்டி அவள் சொல்ல,

"பாவம்ல! ஒரே ஒரு வாட்டி இங்க வா!" என்று அழைக்க,

"பேசாதீங்க ராம்! பயமா இருக்கு.. கொஞ்ச நேரம் தூங்குங்க.. அப்ப தான் பசிக்கும்.. இல்லைனா நான் வெளில போய்டுவேன்!"

"மிரட்டுறியா ஆரா?" என அதற்கும் சிரிக்க,

"நீங்க சிரிச்சா எனக்கு அழுகை வருது.. சொல்றேன்ல.. அமைதியா இருங்க.. எனக்கு எவ்ளோ இருக்கு தெரியுமா? ஏன் அச்சிடேன்ட்? அப்படி என்ன கவனம் இல்லாம போகணும்னு அவ்ளோ கொஸ்டின் இருக்கு.. உங்களுக்கு சரியாகணும்ல.. அதுக்காக தான் பாக்குறேன்.. எல்லாரையும் கொன்னுட்டிங்க நீங்க தெரியுமா?" என்றவள் அழ ஆரம்பமாக,

"ஆரா!" என்றவனுக்கு புரிந்தாலும் என்ன சொல்லிட என்று தெரியவில்லை.

எதிர்பாராத விதமாய் நடந்து முடிந்தும் இருக்க, இனி அதை பேசி என்ன? என்று தான் நினைத்தான்.

வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பும் வழியின் நெடுஞ்சாலையில் தனது கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று எதிரே வர, லாவகமாய் அதில் இருந்து தப்பிய ரகுவின் பைக்கை வந்து மோதியது பின்னிருந்து வந்து கொண்டிருந்த கார்.

அந்த கார் ஓட்டுநர் கூட லாரியின் பாதையில் இருந்து தப்பிக்க முயன்று தான் வேகமாய் செலுத்தி இருக்க கூடும் என்பது ரகுவின் அனுமானம்.

அகிலன் தான் ரகுவின் நண்பன் ஹரிஷ் இன்ஸ்பெக்டர் மூலம் பேசி இவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத அளவுக்கு விசாரணையும் சென்று கொண்டு தான் இருந்தது.

"சாரி ஆரா! எப்ப பாரு உன்னை அழ வச்சுட்டு இருக்கேன்ல?"

"ம்ம்ஹும்ம்! நான் தான் உங்களை கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்! இன்னும் கொஞ்ச நாள்.." என்றவள் தன் யோசனையில் சொல்லி இருக்க,

"அப்புறம்?" என்றான் அவள் எண்ணத்தை அறியாது. அதில் சுதாரித்தவள்,

"பேசாம ரெஸ்ட் எடுங்க ராம்..!" என்றவள் கெஞ்சலில், கைகளை அவள் புறம் நீட்ட, தானே அதில் வந்து நின்று கொண்டவள் அவன் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்துக் கொண்டாள்.

"இனி உங்களுக்கு எதுவும் ஆகாது.. ஆனா நீங்க உங்களை பார்த்துக்கணும்.. ம்ம்?"

"ஏன் நீ பார்த்துக்க மாட்டியா ஆரா? ப்ச்! எல்லாம் சரியா நடந்திருந்தா இன்னும் ஒரு வாரத்துல நம்ம கல்யாணம்.." என்று கவலை கொண்டவனின் சொல்லில் முகம் கறுத்துவிட,

"அதான் நடக்கலை.." என்று சொல்லி,

"எவ்வளவு சொன்னேன்.. யாரும் நம்பலை.. இப்ப சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிங்க.." என்று எங்கோ பார்த்து ஏக்கமாய் பேச,

"கிட்ட இருந்தும் நீ பேசுறது கேட்கலை.. சத்தமா பேசு ஆரா!" என்றவன், லேசாய் முகம் சுருக்கி தலையில் கைவைக்க,

"இதை தான் சொன்னேன்.. இப்ப ரெஸ்ட் எடுக்கறதை மட்டும் தான் நினைக்கணும்.. வேண்டாத எண்ணம் எப்பவும் வேண்டாம்.." என்று கூற,

"ரொம்ப மிரட்டுற!" என்றவன் அவள் கைபிடித்து மெதுவாய் சாய்ந்து கொள்ள, அவனுக்கு தலையணையை இறக்கி வைத்தாள் தூங்க ஏதுவாய்.

நேற்று தான் கார்த்திகா நண்பர்கள், விஷால் மற்றும் அலுவலகத்தில் சிலர் என வந்து சென்றிருந்தனர். எதையும் அவனிடம் கூறவில்லை. எதையும் அவன் மனதில் ஏற்றவும் விடவில்லை. அருகிலேயே இருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள். கூடவே சிந்தித்தும் கொண்டிருந்தாள்.
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru