• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 44

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 44

அறைக்கு மாற்றிய இரண்டாம் நாளே மருத்துவர் நல்ல முன்னேற்றம் இருப்பதாய் கூறி சில தேவையான மருத்துவ டெஸ்ட்டினையும் அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொள்ள, மகேஸ்வரி, ஆராத்யா இருவரும் முழுதாய் மருத்துவ வாசம் தான்.

அகிலன், நந்தா இருவரும் உடன் இருந்து பார்த்துக் கொண்டனர் என்றால் மிகையில்லை.

குழந்தையோடு தர்ஷினியையும் அதிகமாய் அலைய வைக்க முடியாது என்றாலும் தினமும் தமையனை பார்க்கவந்து விடுவாள் தர்ஷினி.

நாளாக நாளாக கல்பனாவிற்கும் வாந்தி மயக்கம் என அதிகமாக பெரும்பாலான நேரங்களில் சுருண்டு கிடந்தாள் அவள்.

அகிலன் தான் திண்டாடி விட்டான். அம்பிகா மட்டும் உதவியாய் இல்லாமல் போயிருந்தால்! நினைக்கவே முடியவில்லை அகிலனுக்கு.

மருத்துவமனைக்கு ரகு அலுவலகத்தில் பணிபுரியும் இன்னும் இரண்டு பெண்கள் ரகுவைப் பார்க்க வேண்டும் என்று கூறியதால் கார்த்திகா அழைத்து வந்திருக்க, ஆராத்யாவும் அங்கே தான் இருந்தாள்.

"ட்ரிப்ஸ் முடிஞ்சது.. இதை மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க!" என்று நர்ஸ் சொல்லி செல்ல, ஆராத்யா சென்றுவிடவும் கார்த்திகா அந்த பெண்களோடு வெளியில் வந்து அமர்ந்திருந்தாள்.

"ரொம்ப பாவம் டி.. எப்படி இருப்பார் நம்ம சார்.. இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு!" என கார்த்திகாவோடு வந்த பவித்ரா சொல்ல,

"ம்ம் பாவம் தான்.. நல்லவேளை எதுவும் ஆகல.." என்ற இன்னொரு பெண்,

"இப்ப தான் நிச்சயதார்த்தம் முடிஞ்சது.. அதுக்குள்ள இப்படி.. எங்கம்மா சொல்லுவாங்க.. நல்லது நடக்க போற நேரம் இப்படி கெட்டது நடந்தா அபசகுனம்னு.. சார்க்கு புடிச்சிருக்குன்னு ஜாதகம் எதுவும் பார்க்காமலே அவங்க வீட்டுல ஆராத்யாக்கு ஓகே சொல்லிட்டாங்க போல.." என்று சொல்லிக் கொண்டு இருக்க,

"வாய மூடு ஜெனி!" என எழுந்திருந்தாள் கார்த்திகா.

"நான் நிஜத்தை தான் டி சொல்றேன்.. உன் பிரண்ட்டுனு நீ சப்போர்ட் பண்ணலாம்.. ஆனா நினச்சு பாரு.. ஒருவேளை ஜாதகக் கோளாறா கூட இருக்கலாம் இல்ல?" என்று அவள் சொல்ல,

"உன்னை வாய மூடுனு சொன்னேன்.. இதுக்கு தான் வந்தியா? உன்னை பத்தி தெரிஞ்சும் நீ கேட்டன்னு கூட்டிட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும்.. கிளம்புங்க.. இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது!" என்று கார்த்திகா சத்தமிட,

"சும்மா இருக்க மாட்டியா ஜெனி! உண்மையோ பொய்யோ சொல்றதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு.. இப்ப தேவையா இதெல்லாம்.. பேசாம இரு டி.." என்ற பவித்ரா,

"சாரி கார்த்தி! இவ இரு லூசு.. ஆராகிட்ட எதுவும் சொல்லிடாத!" என்று சொல்ல,

"அம்மா தாய்ங்களே! நீங்க எதுவும் சொல்லாம கிளம்பினாலே சந்தோசம்.. போங்க ப்ளீஸ்!" என்று கும்பிடு வைக்க, இருவருமாய் எழுந்து சென்றுவிட, அங்கே ஆராத்யா நின்றதை கவனிக்கவில்லை மூவருமே.

ஏற்கனவே தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தவளை இவர்களின் பேச்சு இன்னுமே தீவிரப்படுத்தி இருந்தது.

கார்த்திகாவுமே ஆராத்யா வந்ததை கவனிக்கவில்லை.. அவளும் தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் கார்த்திகாவையும் அனுப்பி வைத்தாள்.

நந்தாவோடு மகேஸ்வரியும் வீடு வரை சென்றிருந்தார். கல்பனாவிற்கு சுத்தமாய் முடியவில்லை என்று அகிலன் கூறி இருக்க, அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றவும் நந்தாவோடு ஆராத்யாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தார்.

"நீங்க அவங்களை பார்த்துக்கோங்க.. நைட் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு கூட வாங்க!" என்று ஆராத்யா சொல்லி இருந்தாள்.

இன்னும் இரண்டு நாட்களில் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறிய மருத்துவர், தெளிவாய் இல்லை என்றாலும் ரகுவிடம் நல்ல மாற்றம் இருக்கவே இரண்டு நாட்களில் தேவையான அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு பின்னர் சொல்வதாக கூறி இருக்க, ரகுவுமே மனதளவில் பலமாய் இருந்தது தான் இன்னொரு காரணம். அது வீட்டினற்கும் பெரும் நிம்மதி தான்.

"ஏன் எப்பவும் டல்லா இருக்க ஆரா?" அறைக்குள் வந்தவளைக் கண்டு ரகு கேட்க,

"இல்லையே! இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்.. நீங்க வீட்டுக்கு வந்துட்டா இன்னும் சந்தோசமாகிடுவேன்!" என புன்னகைத்தாள் ஆராத்யா.

"அப்படின்ற? ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங் இந்த முகத்துல! கொஞ்சம் கிட்டவாயேன் பார்க்கலாம்!"

"அடி விழும்! இன்னும் ரெண்டு நாள் தான்.." என்றவள் இரவு உணவாய் நந்தா கொண்டு வந்திருந்த இட்லியை எடுத்துக் கொண்டு வர,

"ஏன் ரெண்டு நாளுக்கு அப்புறம் என்ன?" என்றான்.

"வீட்டுக்கு போய்டலாம்.. வீட்டுல கவனிப்பு இன்னும் நல்லாருக்குமே.. சீக்கிரமே பழைய ரகுராம் வந்திடலாம்.." என்றாள் தலை சாய்த்து.

"நீ இந்த பக்கம் வந்து பேசு ஆரா! அந்த பக்கம் ட்ரிப்ஸ் போட்ருக்காங்க இல்ல?" ரகு அழைக்க,

"வேண்டாமே! தெரிஞ்சே தான் இந்த பக்கமா இருந்து தர்றேன்!" என்றவள் இட்லியை அவனுக்கு ஊட்ட,

"நான் எதுவும் பண்ண மாட்டேன்.. வா இந்த பக்கம்!" என்றான் சிரிப்புடன்.

"பேசாம சாப்பிடுங்க ராம்.. நான் இருந்தாலே பேசிட்டே இருக்கீங்க.. இதுக்கு தான் அத்தையை சாப்பாடு குடுக்க சொல்லுறேன்!"

"அதானே பார்த்தேன்.. அப்ப நேத்து உன்னால தான் அம்மா குடுத்தாங்களா எனக்கு?" என அவன் முறைக்க,

"பின்ன! அந்த பக்கம் வா இந்த பக்கம் வானு சொல்லி கையை பிடிக்குறது.. அதோட சும்மா இருக்கறதும் இல்ல.. அவ்ளோ பேச்சு.. தலைவலி வருமோனு எனக்கு தான் பதறுது!" என்றாள் அவனை பார்த்து முறைத்து.

"ப்ச்! ரொம்ப டென்ஷன் எடுத்துக்குற நீ.. நானே நார்மல் ஆகிட்டேன்.. நீங்க தான் ரொம்ப யோசிக்குறீங்க.. கமான் ஆரா.. நான் இவ்வளவு பேசுறேனே அப்பவே உனக்கு தெரிலையா நான் நார்மல்னு.."

"ம்ம்ஹும்.. டாக்டர் சொல்லட்டும் அதை.. உங்க ஹெல்த் ரொம்ப ரொம்ப முக்கியம்.." என்றவள் அவனுக்கு ஊட்டுவதையும் நிறுத்தவில்லை.

"அவ்வளவு சீக்கிரம் எனக்கு எதுவும் ஆகாது.. இன்னும் என்னோட ஏஞ்சல் கூடவே இந்த பிரின்ஸஸ்னு என்னோட வாழ்க்கை எவ்வளவு பெருசு? அதை எல்லாம் பார்க்காம போய்டுவேனா என்ன?" என்றவன்,

"ரெண்டு வருஷம் பேசாம இருந்துட்டேன்.. அப்பவே உன்கிட்ட வந்திருக்கணும்.. உனக்கு எல்லாம் புரிய வச்சு கல்யாணம் பண்ணி இருக்கனும்..!" என்று சொல்லிக் கொண்டு வந்தவன்,

"ஓய்! அப்படி மட்டும் கல்யாணம் நடந்திருந்தா இப்ப நமக்கு ஒரு பேபி கூட இருந்திருக்கும்ல?" என்று சொல்லி சிரித்து,

"செகண்ட் பேபி கூட வந்திருக்கலாம்!" என்று வம்பாய் பேச,

"ப்ளீஸ் ராம்! என்ன பண்றிங்க நீங்க!" என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

'என்ன செய்வான் இவன்? எப்படி தாங்குவான்?' ரகு பேச பேச இப்படி தான் தோன்றியது.

"அப்ப நீயும் இப்படி இருக்காத! ப்ச்! என்னென்னவோ நினைச்சுட்டு இருந்தேன்.. இந்த காலை வச்சுட்டு... எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்கு சரியா நடக்க முடியாது இல்ல?" என்று கேட்க,

"அதுக்குள்ள சரி ஆகணும்.. நீங்க தான் ஸ்ட்ரோங்கா இருக்கனும்!" என்றாள் விழிகள் கலங்க.

"அதான் நீ இருக்கியே! மார்னிங் ஈவ்னிங் ரெண்டு டைம் நான் வாக் பண்ண நீ ஹெல்ப் பண்ணு.. ஒன் வீக் போதும் எனக்கு!" என்று அவன் கண்ணடிக்க,

"போதும் போதும்.. விஷால் சார் வந்தாங்க.. ப்ராஜெக்ட் நல்லபடியா போய்ட்டு இருக்காம்.. அல்மோஸ்ட் எல்லாம் சக்ஸஸ் தான்னு சொல்ல சொன்னாங்க.. " என்று வேறு பேச்சினை எடுக்க,

"ம்ம்!" என்றவன்,

"ஆமா ஆபீஸ்லேர்ந்து வேற யாரும் வந்தாங்களா ஆரா?" என்றான் சிந்தனையோடு.

"ம்ம் எல்லாருமே மோஸ்ட்லி வந்துட்டாங்க.. இன்னைக்கு கூட பவி, ஜெனி ரெண்டு பேரும் கார்த்திகா கூட வந்தாங்க.. நீங்க தூங்கிட்டு இருந்திங்க.." என்று சொல்லி மாத்திரையை கொடுக்க, அவளை பார்த்தபடி அதனை வாங்கி போட்டுக் கொண்டான்.

"ம்ம் எல்லாரும் வருவாங்க போவாங்க.. அவங்க என்ன பேசினாலும் காது குடுக்க கூடாது.. அவங்க நம்மோட லாஸ்ட் வரை வர போறதில்ல!" அவனாய் மட்டுமே நினைத்து கணித்து ரகு சொல்ல, புரிந்தது போல நின்றாலும் ஆராத்யா மனம் அடித்துக் கொண்டு தான் இருந்தது.

அடுத்த நாள் காலையே ஹரிஷ் வந்துவிட்டான் ரகுவைப் பார்க்க.

"வா ஹரி!" என ரகு புன்னகைக்க,

"என்ன ரகு?" என்றான் கவலை கொண்டு ஹரிஷ்.

"அன்எக்ஸ்பெக்டட் டா.. ஐம் ஓகே நொவ்!" ரகு கூற,

"அகிலன் அண்ணா எங்க? கம்பளைண்ட் குடுத்திருந்தார்.. வீட்டுக்கு போகலாம்னு தான் நினச்சேன்.. உன்னையும் பாக்கணுமே.. அதான் இங்க வந்தேன்!" என்றான் ஹரிஷ்.

"கம்பளைண்ட்டா?" ரகு கேட்க,

"ம்ம் டா.. அன்னைக்கு உன்னை ஹாஸ்பிடல்ல சேர்க்கவே ரொம்ப யோசிச்சாங்க.. நல்லவேளை நான் உடனே வந்தேன்.. அவ்ளோ பிளாட் லாஸ் உனக்கு.. நானே பயந்துட்டேன்னா பார்த்துக்கொயேன்.. அச்சிடேன்ட் பண்ணின கார் டிரைவர் ஸ்பாட்லேயே அவுட்!" ஹரிஷ் கூற,

"ஓஹ்! ஆனா பாவம் டா.. வேணும்னா அச்சிடேன்ட் பண்ணுவாங்க.. விட்டுடு!" என்று ரகு சொல்ல, ஆராத்யா மகேஸ்வரியுடன் அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்தாள்.

"ஹாய் ம்மா!" என்றவன்,

"ஹெலோ சிஸ்டர்!" என்று ஆராத்யாவையும் அழைக்க,

"வாங்க சார்!" என்றாள் ஆராத்யா.

"நீ எப்ப வந்த ஹரிஷ்?" என்றார் மகேஸ்வரி.

"இப்ப தான் ம்மா.. அகி அண்ணா வர்ல?"

"இல்ல பா.. அப்புறமா வருவான்.. கல்பனாக்கு கொஞ்சம் முடியல.. அதான் கூட இருக்கான்.. பேங்க் கூட போகல.. நான் மாப்பிள்ளையோட இப்ப தான் வர்றேன்.. அவர் டாக்டரை பார்க்க போயிருக்கார்.. ஆரா தான் ரகுவை கூட இருந்து பார்த்துக்குறா!" என்று விரிவாய் விளக்கம் கொடுக்க,

"தர்ஷினி அக்கா எப்படி இருக்காங்க? பேபியை கூட பார்க்க வர டைம் இல்ல எனக்கு.." என்று பேசிக் கொண்டு இருக்க, நந்தாவும் வந்துவிட்டான்.

"ஆரா! உனக்கு போன் வந்திருக்கு.. ஹாஸ்பிடல் நம்பர் யாருக்கு குடுத்த?" என்று வந்ததும் நந்தா கேட்க, சட்டென மாட்டிக் கொண்ட பார்வை பார்த்த ஆராத்யா இரு நொடிகள் ஆனது சுதாரிக்க,

"அம்பிகாம்மாவா தான் இருக்கும்.. என் போன்க்கு ரீச் ஆகலைனு அங்க பண்ணி இருப்பாங்க.. நான் போய் பேசிட்டு வர்றேன்!" என்று ரகுவைப் பாராமல் வேகமாய் செல்ல, ரகு அவளை தான் பார்த்திருந்தான்.

அவளின் அதிர்ந்த பார்வை என்னவோ கூற சரியாய் கணிக்க முடியவில்லை ரகுவிற்கு.

கூடவே நந்தா வந்து ரகு அருகில் அமர்ந்து விசாரிக்க, பேச்சு மாறியதில் அதை மறந்தும் போனான் அவன்.

"ஏன் டா கேஸ் வேணாம்னு சொல்ற?" நந்தா கேட்க,

"மாமா இது வேணும்னு நடந்த அச்சிடேன்ட் இல்ல.. அவங்களும் பாவம் தானே? எனக்கு இப்ப எதுவும் இல்ல.. ஆனா அங்க டிரைவ் பண்ணவர் உயிரோட இல்லைனா அது பெரிய இழப்பு இல்லையா? விட்டுடலாம்.. நமக்கு இருக்குற பிரச்சனைல இதையும் சேர்த்துக்க வேண்டாம்.. அகிகிட்ட நான் சொன்னேன்னு வாபஸ் வாங்க சொல்லுங்க!" என்று ரகு கூறிவிட்டான்.

"ரொம்ப நல்லவன் டா நீ.. உனக்கெல்லாம் எதுவும் ஆகாது!" லேசாய் ரகு தலை கலைத்து நிஜமாய் உணர்ந்து நந்தா சொல்ல,

"அப்ப எனக்கு வேலை இல்லைனு சொல்றிங்க.. ஓகே! எதுக்கும் ஒரு டைம் தெரியாம நடந்த அச்சிடேன்ட் தானான்னு நான் கன்ஃபார்ம் பண்ணிக்குறேன்.. இது என் தொழிலுக்கு நான் குடுக்குற மரியாதை.." என்ற ஹரிஷும்.

"என்ன ஒன்னு அடுத்து கல்யாண மாப்பிள்ளையா தான் உன்னை பார்க்கணும்னு நினச்சேன்.. பட் இட்ஸ் ஓகே மேன்.. சீக்கிரம் க்யூர் ஆகி இன்விடேஷனோட வா.." என்று சொல்லி கிளம்பி இருந்தான்.
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru