• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 45

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 45

பத்து நாட்களுக்கு மேலாய் மருத்துவமனையில் இருந்த ரகு நான்கு நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பி இருந்தான்.

ரகு வீடு திரும்பி இருந்த போதும் வீட்டில் இருந்த யாருமே இன்னும் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.

தர்ஷினியின் கவலை புரிந்து சில நாட்களுக்கு மீண்டுமாய் அவளை அங்கேயேவிட்டு தான் மட்டும் என நந்தா டில்லி கிளம்பி இருந்தான் ரகு வீடு வந்து சேர்ந்த அன்றே.

மருத்துவமனையில் கூடவே இருந்த ஆராத்யா இப்பொழுது காலை மதியம் மாலை என நேரம் பார்த்து வர,

"ஆரா தான் பித்து பிடிச்ச மாதிரி இருக்குறா.. சரியா பேசுறது இல்ல.. சாப்பிடுறியானு கேட்டா ஆச்சுனு சொல்றா.. ஆனா ஆளை பார்த்தா அப்படி தெரியல.. என்னவோ டா ரகு.. நீ சரியாகி நீ தான் அவளைப் பாத்துக்கணும்.." என்றார் மகேஸ்வரி.

"எல்லாம் என்னால தான் ம்மா.. அன்னைக்கு நான் தான் பிளான் பண்ணினேன்.. அதுவும் ஆரா அவளை புரிச்சுக்கணும்னு தான்.. சும்மா தான்னு தெரிஞ்ச அப்புறமும் கூட அப்பவே ரொம்ப துடிச்சு போய்ட்டா.. இப்ப நிஜமாவே ரகுவுக்கு நடக்கவும் அவளால தாங்கிக்க முடியல!" என்றாள் தர்ஷினியும் கவலையாய்.

"நான் பார்த்துக்குறேன் க்கா.. விடு.. அவ எதாவது யோசிச்சு யோசிச்சே அவளை அவளே கெடுத்துக்குறா.." என்றான் ரகுவும் ஆராத்யா நினைவில்.

"ம்ம் நிஜம் தான்.. வளந்திருந்தாலும் அவ இப்பவும் குழந்தை தான் டா.. நாங்க சொன்னாலும் வார்த்தையா தெரியும்.. நீ பேசு அவகிட்ட.." என்று தர்ஷினி சொல்ல, தலையசைத்தான் ரகுவும்.

"எல்லாம் ஓகே தானே ஆரா? நீ ரெடி தானே?" அலைபேசியில் தோழி ஒருத்தி கேட்க,

"ம்ம் ரெடி தான்.. நான் வந்துடுவேன்!" என்று சொல்ல,

"பாஸ்போர்ட் விசா எல்லாம் வந்துடுச்சு இல்ல? தனியா இவ்வளவு தூரம் வர்ற.. பார்த்து வா.. என் பிரதர் உன்னை பிக்கப் பண்ண வந்துடுவார்.. இங்க ஆபீஸ்ல ஜாயின் பண்ண எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேன்!" என்றாள் அவள்.

"ம்ம் சரி டா.. நான் வரும் போது கால் பண்றேன்.." என்று கூறி வைத்துவிட்டு சோர்வாய் கட்டிலில் சாய்ந்தாள் ஆராத்யா.

அவள் நினைத்தபடி எல்லாம் கைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் மனம் தான் சோர்ந்து போனது.

"நான் போனும் ராம்.. ப்ளீஸ்! நான் போயிடுறேன் ராம்.. எமோஷனல் பாண்டிங் வேண்டாம்னு சொன்னேன்.. யாருமே கேட்கல.. நான் சொன்னாலும் நீங்க யாரும் புரிஞ்சிக்க போறதில்ல.. என்னோட வாழ்க்கை இப்படி தான்னு கடவுள் விதிச்சதை மாத்த முடியாது.. மாத்திக்க நினச்ச நான் தான் முட்டாள்.." இத்தோடு பலமுறை ரகுவின் எண்ணை எடுத்து இதனை எழுதிவிட்டு அனுப்ப முடியாமல் அழித்து விடுபவள் இப்பொழுதும் முடியாமல் கைகள் பின் வாங்க அந்த செய்தி அழிக்கப்படாமல் அவள் அலைபேசியில் சேமிக்கப்பட்டது.

"ம்ம்ஹும் உங்ககிட்ட சொல்லிட்டு போற தைரியம் எனக்கு இல்ல.. சொன்னா விடவும் மாட்டிங்க தானே? என்னை திட்டினாலும் நான் இல்லாம எப்படி இருப்பிங்க ராம்? நீங்க சிரிச்சு பேசி பார்த்து உங்களை ரசிச்ச நான் உங்களுக்கு வேண்டாம்.. நீங்க என்னை பார்த்துருக்கவே கூடாது.. ஏன் என்னை உங்களுக்கு பிடிச்சது?" என்று தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தவள் கண்கள் அலைபேசியின் முதற்ப்பக்கமான அவன் புகைப்படத்தில் நிலைத்து இருக்க,

"இனி அதை உங்ககிட்ட கேட்கவே முடியாதுல? வேண்டாம் கேட்கவும் வேண்டாம்.. நான் தான் சொன்னேனே.. நான் எப்படி உங்களுக்கு?.." என்றவள் கண்களில் கண்ணீர் வடிய, அதை துடைக்கவும் தோன்றாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஆராத்யா ஒண்ணுமே இல்ல.. அவளை போய் உங்ககிட்ட வச்சீங்க இல்ல.. அதான் இப்படி எல்லாம் நடக்குது.." என்றவள் நினைவுகள் ரகுவை சுற்றி வர,

அலுவலகத்தில் அத்தனை வேகமாய் கதவை திறந்து உள்ளே நுழையும் ராம், அறைக்குள் அத்தனை பேர் முன் நின்று ப்ராஜெக்ட்டினை விளக்கும் ராம், அனைவரின் கேள்விக்கும் சலிக்காமல் பதில் கூறும் ராம் என தொடர்ந்த நினைவுகள் அடுத்து அவள் அறிந்து அவளை அவன் காணும் நாட்களுக்கு வந்து நின்றது.

தனக்காக என காவல் நிலையத்தில் அவன் பேசிய பேச்சுக்கள், கூடவே நீ நினைக்குறது சரி தான் என்ற குரலோடு கண் சிமிட்டல், இவளின் பிழை கண்டு கோபமாய் அன்று கூறினானே போடி என்ற அந்த உரிமை குரல், அனைவரின் முன்பும் நின்று மிஸ்ஸஸ் ஆராத்யா ரகுராம் என்று அவன் கூறிய பொழுது அவன் உதடுகளில் உறைந்து நின்ற புன்னகை முகம், அவன் அறையில் அவளை கைபிடித்து இழுத்து 'மேரேஜ் டேட் எப்பனு கேட்க மாட்டியா ஆரா' என்றவனின் ஆசை குரலோடு காதலாய் வந்த அவன் தொடுகை நினைக்க நினைக்க மனம் பிசைய மொத்தமாய் அவள் அனைத்தையும் இழந்த உணர்வு.

'ஆரா என்கிட்ட வர எனக்கு எதாவது ஆகணுமா?' அன்று அவன் கேட்ட கேள்வி இப்பொழுது மண்டைக்குள் உதிக்க, "ஆரா உங்ககிட்ட வந்தா தான் உங்களுக்கு எதாவது ஆகும்.. அவ வேண்டாம் உங்களுக்கு!" மீண்டும் தெளிவாய் அவன் முகம் பார்த்து கூறிய பொழுது, முழுதாய் அவன் முகம் திரையில் விழ அழைத்திருந்தான் ரகு.

மனம் அதிர, கண்களை துடைத்து குரலை செருமிக் கொண்டு அலைபேசியை காதில் வைத்தாள்..

"என்ன பண்ற ஆரா?" என்ற ரகுவின் குரலில் முகம் கலங்க,

"ஆரா பொண்ணே!" என்ற மற்றொரு அழைப்பில்,

"ஹான்! இதோ வர்றேன் ராம்!" என்று கூறி வைத்தவள் முகம் கழுவி தன்னை சீற்படுத்திக் கொண்டு கிளம்பினாள் அவனை காண.

"அம்பிகா ஆண்ட்டியை இனி சமைக்க வேண்டாம்னு சொல்லிடலாம்.. அவங்களும் ஸ்ருதி கிளம்பின அப்புறம் சரியா சாப்பிடுற மாதிரி தெரியல.. இனி ஆராவும் அம்பிகா ஆண்ட்டியும் இங்க தான் சாப்பிடணும்.. " என்று கல்பனா மகேஸ்வரியிடம் சொல்லிக் கொண்டே சமையலுக்கு தாளிக்க,

"இப்ப வாமிட் வருதுன்னு ஓட போற.. பின்னாடியே வந்து கரண்டியால ரெண்டு குடுக்க போறேன்.. முடியலைன்னா போய் உட்காரேன் டி.." என்று சொல்லி மகேஸ்வரி திட்டினார்.

"இப்ப பரவால்ல த்த.. தாளிக்குற ஸ்மெல் புடிச்சிருக்கு.." என்றவள் கையில் இருந்து கரண்டியை பிடுங்கியவர்,

"என்ன டேஸ்டா போ! நான் எல்லாம் எடுத்துட்டு வர்றேன் னே போய் சாப்பிட உட்காரு!" என்று சொல்ல, சரி என தலையசைத்து வெளியே வர ஆராவும் வந்திருந்தாள்.

"வா ஆரா சாப்பிடலாம்!" என்று கல்பனா அழைக்க,

"நான் சாப்பிட்டேன்.. தர்ஷ் எங்க?" என்று கேட்க,

"வா ஆரா! கல்பனா ரெண்டு பேருமா சாப்பிடுங்க.. நான் அப்பளம் கொண்டு வர்றேன்!" என்று கூறி மகேஸ்வரி உள்ளே சென்றார்.

"தர்ஷி வருவா.. பாப்பாவை தூங்க வைக்குறா.. நீ வா.. என்னோட கொஞ்சமா சாப்பிடு!" என்று அழைக்க, கீழே மாற்றப்பட்டிருந்த ரகு அறை பக்கம் பார்த்தாள் அவள்.

"அடடா! இத மறந்துட்டேனே! சரி ஓகே.. ரெண்டு பேருக்கும் தர்றேன்.. அங்கேயே சாப்பிடு!" என எடுத்து வைக்க, அமைதியாய் பார்த்தபடி நின்றாள்.

"ஆமா! அக்கா வேண்டாம் கல்பனானு கூப்பிட சொன்னேன்.. கேட்காம அக்கா அக்கானு கூப்பிட்ட.. இப்ப கொஞ்ச நாளா அக்காவும் காணாம போச்சு.. என்னாச்சு உனக்கு?" சாதத்தை எடுத்து வைத்தபடி சாதாரணமாய் கல்பனா கேட்க, கல்பனா கேள்வியில் திடுக்கிட்டாள் ஆராத்யா.

"ஹேய் ஆரா! என்ன டென்ஷன் ஆகுற? சும்மா தான் கேட்டேன்.. ரகு கூட தேறி வர்றான்.. நீ தான் இப்பலாம் அப்நார்மலா இருக்குற.. நீ உன்னையும் கவனி ஆரா!" என்று சொல்லி அனுப்பி வைக்க, அதை நினைத்தபடி ரகு இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

"வாங்க மேடம்! கால் பண்ணினா தான் வாருவியா? அவ்ளோ பிஸி என்ன? அப்படி என்ன தான் பண்ற ரூம்ல?" என்று ரகு கேட்க, புன்னகைத்தவள் அவனுக்கானதை எடுத்து வைத்தாள்.

"ஆபீஸ் போனு சொன்னாலும் கேட்க மாட்டுற.. சும்மா இருந்தா இப்படி தான் எதாவது நினச்சு மனசு ஒரு இடத்துல இருக்காது.. எவ்ளோ சொல்ல உன்கிட்ட?" என்றான் அவள் செய்கையை கவனித்துக் கொண்டே.

"நான் சரியா தான் இருக்கேன்.. நீங்க சரியாகி வாங்க.." என்றவள் அவனுக்கு ஊட்ட கையில் எடுக்க,

"முதல்ல நீ சாப்பிடு!" என்றான்.

"நான் சாப்பிட்டேன்.." என்றவள் அவன் புறம் நீட்ட,

"நிஜமாவா?" என்றதும் ஆம் என்று தலையசைக்க,

"ஓகே!" என்றவன் மொபைலை எடுத்து அம்பிகாவிற்கு அவள் பார்க்கும்படிக்கு அழைக்க, என்னவோ என பார்த்தவள் சட்டென பிடுங்கி கட் செய்தாள்.

"சேட்டை பண்ணாதீங்க!" என்றவள் கோபத்தில் சிரித்தவன்,

"எனக்கும் கோபம் வரும்.. இப்ப சாப்பிடலைனா.. இதென்ன பழக்கம் சாப்பிடாம சாப்பிட்டேன்றது? விரதமா? நீ எவ்ளோ மெலிஞ்சுட்ட தெரியுமா?" என்றவன் பேச்சில் அவள் அவனை பார்த்தபடி இருக்க,

"நான் சரியாகி வந்து உன்னை ஹக் பண்ணினா என் கைக்குள்ள நீ இருக்க வேண்டாமா? இப்ப பாரு காத்து தான் இருக்கும்!" என்று கூறி கண் சிமிட்டி சிரிக்க, நெஞ்சை அடைத்து வந்தது அவளுக்கு.

இவனை கடந்து தான் வருவது எப்படி என்றெல்லாம் நினைக்கவில்லை.. இவன் தன்னை மறந்து எப்படி வாழ்ந்திடுவான் என்று தோன்றிய எண்ணங்கள் கண்களுக்குள் சூழல அமர்ந்திருந்தவளுக்கு அவனே உணவினை எடுத்து ஊட்ட, போதவே போதாது என்பதை போல காலம் முழுதும் கேட்டது நெஞ்சம் இந்த தருணத்தை.

காலம் என்ற ஒன்று சுழலும் வரை எந்த நேரம் யாருக்கு என்ன நேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதை கொஞ்சம் யோசித்திருந்தால் புரிந்திருப்பாளோ என்னவோ!

இங்கே அவனுக்கு நடப்பது எல்லாம் தன்னைக் கொண்டு என்னும் எண்ணம் அவளுள் ஆழமாய் பரவி இருக்க, அவனுகக்கவே அவனைவிட்டு தூர தேசம் செல்ல முடிவெடுத்து இதோ கிளம்பியும் விட்டாள்.

அவள் மனதை அவளே சமாளித்து அவள் கிளம்பும் நாளும் வந்துவிட்டது.

ஆசை ஆசையாய் மதியம் மகேஸ்வரி வீட்டிற்கு சென்று அனைவரையும் பார்த்து பேசியவள் சாதாரணம் போல காட்டிக் கொண்டு ரகுவிடம் சென்றாள்.

அவ்வளவு தான் இறுதியாய் ஒருமுறை.. கண்களில் அவனை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று சென்று நின்றவள் அதற்கு மேல் நடந்தது கனவோ எனும் விதமாய் கன்னத்தில் கைவைத்து நிற்க,

"என் முன்னாடி என்னைக்கும் வந்துடாத.. போயிடு.." என்றவனின் வார்த்தைகளில் கண்கள் கலங்க மங்களாய் தெரிந்த அவனின் முகத்தினை பார்த்தவள், அப்பொழுதும் தன் மனதை மாற்றிக் கொள்ளாது கணத்த இதயத்துடன் திரும்பினாள்.
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru