• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 47

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
670
505
93
Chennai
அத்தியாயம் 47

விழுந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ளாமல் எழுந்து கொள்ளவும் தோன்றாமல் ஆராத்யா இருக்க,

"ஒரு தடவை புரிய வைக்கலாம்.. ஒவ்வொரு தடவையும் புரிய வைக்கணும்னா அங்க காதல் எங்க இருக்கு?" என்றவன் பேச்சில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் சொல்லொன்னா வேதனை.

"கொஞ்சமாவது என்னை யோசிச்சு இருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பியா? இந்த லெட்டர் இல்லைனா நீ என்ன சொல்லி இருந்தாலும் நம்பி உனக்காக நான் இருந்துருப்பேன்.. நீ டாட்டா காமிச்சு போயிருப்ப. இல்ல?"

"என் மூஞ்சிலயே முழிக்காத.. போ! எந்த நாட்டுக்கு வேணா போ.. இனி சத்தியமா உன்னை தேடி வரமாட்டேன்!" என்றவன் வார்த்தைகளை அவள் உயிர் வலிக்க கேட்டுக் கொண்டிருக்க,

"கடைசில உன்னை மிரட்டி தான் கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தேனோனு என்னை நினைக்க வச்சுட்ட இல்ல?" என்றவன் அவன் பக்கமாய் இருந்த கண்ணாடி குடுவையை டேபிள் மேலேயே உடைக்க, அது தெறித்து அவன் நெற்றியை பதம் பார்க்கும் நேரம் ஆராத்யா அலறும் நேரம் என அதே நேரத்தில் தர்ஷினியோடு கல்பனாவும் ஆராத்யா வாங்கிக் கொடுத்த பரிசுகளோடு விளையாட்டாய் அந்த அறையை எட்டிப் பார்திருக்க, பார்த்தவர்கள் அதிர்ந்து கதவை நன்றாய் திறந்து உள்ளே வந்திருந்தனர்.

"என்ன காரியம் பண்ணிட்டு இருக்க நீ ரகு?" என ரகு அருகே வேகமாய் தர்ஷினி வர, கல்பனா கீழே அமர்ந்திருந்த ஆராத்யாவின் அருகே விரைந்தாள்.

"என்ன நடக்குது இங்க? ஏன் டா இப்படி பண்ற?" என்ற தர்ஷினி எதுவும் புரியாமல் சில நிமிடங்களுக்கு முன் தங்களிடம் மகிழ்ச்சியாய் பேசி சென்ற ஆராத்யாவின் மேல் தவறு இருக்கும் என துளியும் எண்ணாமல் ரகுவை மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

"உனக்கு என்ன பிரச்சனை ரகு? கோபம் வந்தா என்ன வேணும்னா பண்ணுவியா? அவ பாவம் டா.. இப்ப தான் கொஞ்ச நாளா..." என்று கூற வந்தவளையும் முடிக்க விடவில்லை ரகு.

"அக்கா இவளை பத்தி தெரியாம பேசிட்டு இருக்க நீ!" என்று பல்லை கடித்து பேசியவன் பேச்சில் தர்ஷினி அதிர்ந்து நிற்க,

"ரகு! ஆராவை அடிச்சீங்களா?" என்றாள் அதற்கு மேல் அதிர்ந்து கல்பனா.

ஆராத்யா பேசவில்லை. கல்பனா தன் அருகே வரவுமே எழுந்து நின்று கொள்ள, அவள் கன்னத்தின் செவ்வரி ஓடிய தடம் நன்றாய் காட்டி கொடுத்தது அவள் அடி வாங்கியதை.

"வாட்?" என்ற தர்ஷினியும் அப்போது தான் ஆராத்யாவைப் பார்த்துவிட்டு தம்பியை தீயாய் முறைக்க,

"ஆமா! அந்த பாவத்தையும் நான் தான் பண்ணினேன்.. எல்லாம் என் தலையெழுத்து.." என்ற ரகு ஆராத்யா அதிர்ந்து கீழே விட்டிருந்த லெட்டரை எடுத்து தர்ஷினியிடம் நீட்ட, வாய் திறக்க முடியவில்லை தர்ஷினிக்கும் அதை படித்த பின்பு.

"சொல்லு க்கா! என்ன பண்ணணும் நான்? என்ன பண்ண? எதுவும் பண்ண முடியாது.. வாங்க எல்லாருமா போய் சென்ட் ஆஃப் பண்ணிட்டு வரலாம்.. வா க்கா.. வாங்க அண்ணி.." என்றவனின் பேச்சில் அத்தனை கோபம் நிறைந்திருக்க, தர்ஷினி, கல்பனா இருவருமே அதிர்ச்சியோடு ஆயாசமாய் உணர்ந்தனர் ஆராத்யாவின் செயலில்.

"தயவு செஞ்சு அவளை என் முன்னாடி நிக்க சொல்லாத.. அவளை பார்க்க பார்க்க எனக்கு..." என்றவன் கைகளை இறுக்கி பல்லை கடித்து காலை உதைத்து ஆஆஹ் என்று கத்தி என தன் கோபத்தை எல்லாம் காட்ட,

"ரகு!" என தர்ஷினி வந்து அவனைப் பிடித்துக் கொண்டாள் எங்கே விழுந்து விடுவானோ என பயந்து.

"என்னதிது ஆரா? இதுக்காக தான் எங்களுக்கு இந்த கிப்ட் எல்லாமா?" என்று அவர்கள் கொண்டு வந்ததை எடுத்து காண்பிக்க,

"ஓஹ்! இது வேறயா? எனக்கு என்ன வாங்கிட்டு வந்த? போ போய் ஒரு பாட்டில் விஷம் இருந்தா வாங்கிட்டு வா.. நிம்மதியா போய் சேர்ந்துடுறேன்!" என்றவன் தர்ஷினி பிடித்திருந்த கைகளை விலக்கிக் கொண்டு,

"விடு க்கா! என்னைக்கோ போயிருக்க வேண்டியது.." என்றவன் பேச்சுக்கள் ஓயாமல் இருக்க, அவன் கடைசி வார்த்தைக்கு பிறகும் பேசாமல் இருக்க முடியவில்லை ஆராத்யாவால்.

"நானும் தான் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கேன்.. நான் சொல்ல சொல்ல கேட்காம விலக விலக ஆசை காட்டினது நீங்க எல்லாரும் தான்.." என்றவள் பேச்சில் தர்ஷினி கல்பனா இருவரும் அதிர, ரகுவிற்கு தலைக்குள் ஏறியது பிரஷர் மொத்தமும் அவள் பேச்சினில்.

"எவ்வளவு சொன்னேன். நான் வேண்டாம் இந்த குடும்பத்துக்கு என்னால யாருக்கும் நிம்மதி இருக்காதுன்னு.. சொன்னேனே யார் கேட்டீங்க? நிச்சயம் முடிஞ்ச உடனேயே இதோ என்ன நடந்துச்சுன்னு பார்த்தீங்க தான?" என்றவள் பேச்சில் தர்ஷினி தலையில் கைவைத்து விட, அவள் விளக்கத்தில் இன்னும் இன்னும் சீற்றம் கொண்டான் ரகு.

"நான் சொன்னப்ப யாரும் நம்பல.. கூடவே இருந்தவங்க சொல்றாங்க.. நிச்சயம் முடிஞ்ச ராசி சரி இல்ல, ஜாதகம் பார்க்கலனா இப்படி தான் நடக்கும், பொண்ணுக்கு என்னவோனு.. என் காதுபட பேசும் போது என் உயிரா நினைக்குற ராம் நல்லாருக்கணும்னு தானே எனக்கும் தோணும்?" என்றவளின் நியாயமான பேச்சு புரிந்தாலும் அயர்ச்சி தான் வந்தது கல்பனா தர்ஷினிக்கு.

"வெறும் நிச்சயம் முடிஞ்சதுக்கே இப்படின்னா கல்யாணம் நடந்தா?" என்றவள் விழிகள் நிலைகுத்தி நிற்க,

"நான் காலம் முழுக்க தீர்க்க முடியாத பாவி ஆகணுமா? என் ராம் எனக்கு முக்கியம் இல்லையா?" என்றவள் உடல் குலுங்க அழுது தரையில் அமர,

"அக்கா! இந்த பைத்தியத்தை தயவு செஞ்சு வெளில போக சொல்லு.. போ!" என்றவன் வீடதிற கத்த,

"அய்யோ அத்தைக்கு கேட்டுட போகுது ரகு!" என்ற கல்பனா கதவை நன்றாய் சாற்றினாள்.

"அவங்களுக்கும் தெரியட்டும் அண்ணி! அன்னைக்கு சொன்னாங்க தான நந்து மாதிரி தான் எனக்கு ஆராத்யாவும்னு.. அந்த ஆராத்யா அவங்களுக்கு என்ன செஞ்சுட்டு போக போறான்னு அவங்களுக்கும் தெரியட்டும்!" என்றான் ரகு.

கொஞ்சமும் கோபம் மட்டுப்படவில்லை. தலை வேறு விண்விண்னென்று தெறிக்க, கோபமும் குறையாமல் நிற்க தள்ளாடியவன் ஆராத்யாவை பார்வையால் துளைத்து மூச்சு வாங்க நின்றான்.

"எனக்கு உங்க யார்கிட்டவும் சொல்லிட்டு போக தைரியம் இல்ல.. சொன்னா நீங்க அனுப்பவும் போறதில்ல.. ஆனா எனக்கு நல்லா தெரிஞ்சும் இவர் வாழ்க்கைல விளையாட நான் தயாரில்ல.. நான் போறேன்.. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க!" என்றவள் தனது பையை எடுத்துக் கொண்டு ஏங்கியபடி கிளம்ப தயாரானாள்.

"ஆரா ப்ளீஸ்! நாங்க என்ன சொல்றோம் நீ என்ன பண்ற?" என்ற தர்ஷினிக்கு ஆராவின் செயல் சுத்தமாய் ஏற்க முடியவில்லை.

"ஆமா ஆரா! விதினு ஒன்னு இருக்கு.. எல்லாத்துக்கும் நீ உன் மேலேயே பழி போட்டுக்குறது சரி இல்லை!" என்றாள் கல்பனாவும்.

"இதை தான் நான் சொல்றேன்.. நான் நினைக்குறது உங்களுக்கு எல்லாம் புரியாது.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க!" என்று கையெடுத்து கும்பிட,

அதற்குமேல் பெரியதாய் கையெடுத்து கும்பிட்ட ரகு, "கிளம்பிடு! இதுக்கு மேல நீ பேச எதுவும் இல்ல.. யாராவது வாயை திறந்திங்க..." என்றவன் பேச்சில் துக்கத்தை விழுங்கி வாசல் வரை ஆராத்யா நகர,

"க்கா! நான் செத்து போய்ட்டா என்ன பண்ணனு பயந்து ஒதுங்கி ஒளிஞ்சு போறவளுக்கு நான் நாளைக்கு காலைல உயிரோட இல்லைன்ற செய்தி போக கூடாது.. அவ விருப்பப்படி எங்கேயோ போகட்டும்." என்றவன் பேச்சில் அவள் நின்று விட,

"லூசா டா நீ? என்ன பேசுற?" என்றாள் தர்ஷினி அவனை.

கையில் இருந்த பையை தூக்கி எறிந்து அங்கேயே பலமிழந்து தொய்ந்து அமர்ந்துவிட்டாள் ஆராத்யா.

"நிஜமா க்கா! அவளோட ஒரு நாள் நான் வாழ்ந்தா கூட போதும்.. அந்த சந்தோசம் எனக்கு போதும்னு நான் சொல்றேன்.." என்றவன்,

"அவ இல்லாத ஒரு லைஃப் எனக்கு எப்பவுமே வேண்டாம்.. இது நான் இன்னைக்கு முடிவு பண்ணினது இல்ல.. ஏன் அவ என்னை வேண்டாம்னு சொன்னப்ப கூட அவளா வந்தா வரட்டும் இல்லைனா நான் இப்படியே இருந்துடுறேன்னு தானே சொன்னேன்.. இப்பவும் அது தான்.. அவ என்னை புடிச்சு புரிஞ்சு என்கிட்ட வந்த அப்புறமும் பயத்துனால விலகி போறானா அப்ப நான் வாழ்ந்து என்ன? வாழ்ந்தது தான் என்ன?" என்றவன் அங்கே ஆராத்யா இருப்பதை அறிந்தாலும் அவள் புறம் திரும்பிடவில்லை.

"ரகு! நீ கொஞ்சம் அமைதியா இரு.. டேய் அவ ஒரு குழந்தை மாதி...."

"போதும் க்கா! குழந்தை குழந்தைன்னு சொல்லி.. பார்த்தீங்கள்ள? குழந்தை பண்ற வேலையா இது? கொஞ்சமாவது யோசிக்கனும்.." என்றவன்,

"சரி நான் ஒன்னு கேட்குறேன் பதில் சொல்லுங்க.. எனக்கு நடந்த மாதிரி இவளுக்கு ஆகி இருந்தா? நான் இப்படி தான் விட்டுட்டு போயிருப்பேனா? சொல்லு.. அப்படி போனா தான் இவ என்னை விட்டுடுவாளா?" என்று கேட்க, விழிகள் மட்டும் சுழற்றியது பேச்சை கேட்ட ஆராத்யாவிற்கு.

"போதும்! எல்லாம் போதும்! என்னோட காதல் என்னோடவே போகட்டும்.. அவ என்னை பிரிஞ்சி போனா என் உயிர் போனதுக்கு சமம்.. அப்புறம் வெறும் இந்த கூடு மட்டும் எதுக்கு?" என்று தன்னை தொட்டுக் காண்பித்தவன்,

"காதலெல்லாம் சொல்லாமலே புரியவும் உணரவும் செய்யணும்.. ஒவ்வொரு டைமும் விளக்கம் சொல்றதுல காதல், அன்பு, பாசம் எல்லாம் எங்க இருக்கு? அது நான் அவளை இறுக்கி புடிக்கிறதுக்கு சமம்.. நான் பறக்க விட தான் நினச்சேன்.." என்றவன் ஆயாசமாய் மேல் நோக்கி தலை சாய்த்தான்.

"என்ன சொன்னா? ராசி, ஜாதகம்..." என்று சிரித்துக் கொண்டவன்,

"எப்பவுமே அவளுக்கு அடுத்தவங்க பேசுறது தான் முக்கியம்.. வா ஆரா நாம வாழ்ந்து பார்ப்போம்னு நான் சொன்னதெல்லாம்...." என்றவன் கைவிரிக்க தர்ஷினி அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.

"அவளுக்கு நான் இல்லாம வாழ முடியும்.. அதுக்கு வேறொரு இடம் வேணும்.. ஆனா நான் ஆரா இல்லை இல்ல.. என்னால முடியாது க்கா" என்றவன் கண்கள் கலங்கிட,

"போகட்டும்.. எப்பவும் போல இப்பவும் பறக்க விடுறேன்.." என்று சொல்லி அமர்ந்துவிட்டான்.

இதற்கு மேல் இவர்களுக்கு இடையே தாங்கள் என்ன பேசிட முடியும் என்று தெரியாமல் தர்ஷினியும் கல்பனாவும் விழித்து நிற்க, ரகு ஒரு புறமும் ஆராத்யா ஒரு புறமுமாய் அமர்ந்திருந்தனர் இலக்கின்றி வெறித்து.

ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் அன்பு மட்டுமே இங்கு வெளிப்பட்டிருக்க, யாரை குறை சொல்லிட?
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru