• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 51

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 51

“ம்மா! கல்பனா அண்ணி எங்க காணும்?” தர்ஷினி அன்னையிடம் கேட்க,

“இப்ப தான் ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சுட்டு வர்றேன்.” என்றார் மகேஸ்வரி.

“நல்ல வேலை பண்ணீங்க ம்மா! அகியை அனுப்பி விடுங்க கூட இருக்கட்டும். இந்த கூட்டத்துல அவங்களுக்கும் நசநசன்னு தானே இருக்கும்!” தர்ஷினி சொல்லவும்,

“எது அவளுக்கா?” என்ற மகேஸ்வரி,

“மண்டபத்துல வந்து ஒரு ஓரமா உக்காந்துக்குறேன் த்தனு சொன்னா. அதை நம்பி தான் அவளை வர சொன்னேன். இங்க வந்து நான் எங்க திரும்பினாலும் அவ தான் நிக்குறா. கேட்டா நம்ம வீட்டு ஃபன்க்ஷன்ல நான் ஒதுங்கி நிக்கவானு கேள்வி வேற!” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

“நானும் கவனிச்சேன் ம்மா. அகி சொல்லியும் அண்ணி கேட்கல. ஆனா அகி அப்பப்ப ஜூஸ் சாப்பாடுன்னு அவங்களை பார்த்துகிட்டான். அண்ணியும் இந்த மாதிரி டைம்மை மிஸ் பண்ண விரும்ப மாட்டாங்களே! அதான் நான் ஒன்னும் சொல்லல!” என்றாள் தர்ஷினி.

“அதுக்கு ஒரு அளவு வேண்டாமா? மணி பத்தாகுது இன்னும் தூங்க போகாம அரட்டை ஆரா கூட சேர்ந்து. அதான் துரத்தி விட்டேன். நீ உன் மாப்பிள்ளை எங்கனு பார்த்து கூட்டிட்டு போ. சீக்கிரமா தூங்கினா தான் காலையில அலப்பறை இல்லாம எல்லாம் கிளம்பி வருவீங்க!” என்று சொல்லிக் கொண்டே மாடிப்படியினில் ஏறி சென்றார்.

“ம்மா! ரகு ரூம்ல தான் நந்து இருப்பாங்க. அப்படியே கீழ நான் இருக்கேன்னு சொல்லி வர சொல்லிடுங்க!” என்று சத்தமாய் தர்ஷினி சொல்லி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அப்போது தான் கொஞ்சம் கூட்டம் மட்டுப்படவே ஆரம்பித்து இருந்தது.

விடிந்தால் ரகு ஆராத்யா திருமணம். இன்று மாலை வரவேற்பு முடிந்திருக்க, அத்தனை களைப்பிலும் உற்சாகமாய் தான் இருந்தனர் ரகு குடும்பத்தினர்.

ரகு கூறியது போல எளிதாய் எல்லாம் இல்லை. ரகு கேட்ட அடுத்த நாளே மகேஸ்வரி ஜோசியரிடம் சென்று பார்த்து பேசிவிட்டு வந்துவிட்டார்.

“ஒரு திருஷ்டி ஒன்னு சின்னதா கழிஞ்சிருக்கும். இனி எல்லாம் நல்லது தான் நடக்கும் அந்த வீட்டுல!” என்று சொல்லி, அம்மனுக்கு பூஜை வைத்துவிட்டு திருமண வேலையை தொடரும்படிக்கு தேதியை குறித்து கொடுத்திருந்தார் ஜோசியர்.

எளிதாய் வைக்க சுத்தமாய் விருப்பம் இல்லை மகேஸ்வரிக்கு. தன் மகனின் திருமணம். அனைவரின் ஆசியோடு கண் குளிர காண ஆசை கொண்டவர், அதை மகளிடம் சொல்லி, தர்ஷினி நந்தாவிடம் பேச, நந்தா கூறிய பின் தான் பல பேச்சுக்களுக்கு பிறகு அன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து இப்படியான திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தான் ரகு.

வரவேற்பிற்கு வந்தவர்களில் நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் மண்டபதிலேயே தங்கும் படி ஏற்பாடு செய்திருக்க, அங்கேயே ஒரு அறையில் அகிலன் கல்பனாவிற்கு ஒரு அறை கொடுத்து அலையவே கூடாது என கட்டளையாய் சொல்லி கட்டிவைத்து விட்டார் மகேஸ்வரி.

நந்தா வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆராத்யாவை ரகு குணமடையும் வரை இருக்க சொல்லி சென்றவன் பின் அவனின் திருமணமும் முடியட்டும் என்று சொல்லிவிட, தர்ஷினியுமே கொண்டாட்டமாய் சரி என்று சொல்லி இருந்து கொண்டாள்.

“ரகு!” என்று மணமகன் அறை கதவை தட்டவும்,

“வாங்கம்மா!” என்று ரகு குரல் கொடுக்க உள்ளே வந்தவர்,

“இங்க இருக்கீங்களா மாப்பிள்ளை. பாப்பா தூங்கிட்டாளா?” என நந்தாவிடம் பேசியவர்,

“தர்ஷி கிளம்பிட்டா கீழ இருக்கா. உங்க அம்மா அப்பா அப்பவே நம்ம வீட்டுக்கு போய்ட்டாங்க.. நீங்களும் போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வாங்க.” என்று சொல்ல,

“அப்ப ரகு?” என்றான் நந்தா.

“ரகுவும் நானும் இங்க இருக்கவங்களை கவனிச்சுக்குறோம். ஆராவும் அம்பிகாவும் இங்க தான் பக்கத்து ரூம்ல இருக்காங்க. அவங்களயும் பாக்கணுமே! நீங்க காலையில சீக்கிரமே கிளம்பி வந்துடுங்க!” என்று சொல்ல, ரகுவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான் நந்தா.

“சாப்பிட்டியா ரகு? வந்தவங்களை கவனிச்சதுல உன்னை மறந்துட்டேன்!” என்று நந்தா சென்றதும் ரகு அருகே அமர்ந்து மகேஸ்வரி கேட்க, அவர் மடியினில் தலை சாய்த்தான்.

“அக்கா, மாமா, ஆரா எல்லாரும் ஒன்னா தான் சாப்பிட்டோம் ம்மா.” என்றவன்,

“நீங்க எப்ப சாப்பிட்டீங்க?”

“கல்பனா கூட ஆச்சு டா. ஆரா என்ன சொல்றா?” என்று மகேஸ்வரி கேட்க,

“வேற என்ன சொல்லுவா ம்மா?” என்று சிரித்தவன்,

“அக்கா ரொம்ப பண்ணிட்டா. ஆராவால முடியல!” என்று மீண்டும் எழுந்த நினைவில் சிரித்தான்.

“சின்ன பொண்ணு. இன்னும் உலகம் தெரியாத வெகுளி. அவளை எல்லாம் கல்பனா கூட சேரவே விட கூடாது டா!” என்று சிரித்தபடி சொல்ல,

“ம்மா!” என்று சிரித்தவன்,

“நோட்டட். நாளைக்கு மார்னிங் முதல் வேலை அண்ணிகிட்ட இதை சொல்றது தான்.” என்று சொல்லி சிரித்து எழுந்து கொள்ள,

“உன் வீட்டுக்காரி பாவமேனு நான் நினச்சேன். சொல்லணும்னா சொல்லிக்கோ!” என்றார் அவரும்.

“சரி தான்!” என்றவன் இன்னும் தர்ஷினி ஆராத்யாவை கலாய்த்ததையும் பதிலுக்கு ஆரா பழிப்பு காட்டி நின்றதையும் நினைத்து சிரிக்க,

“இப்படியே சிரிச்சு சந்தோசமா இரு. சும்மா சும்மா இனி ஆராகிட்ட எல்லாம் கோபத்தை காட்டிட்டு இருக்காத!” என்று பாடமெடுத்தார்.

“அதுக்கு அவளும் சும்மா இருக்கணுமே ம்மா. அவ கையில தான் இருக்கு!” என்றான்.

“அதெல்லாம் ஆரா பார்த்துப்பா. நீ தூங்கு. நான் அப்படியே ஒருவாட்டி கீழே போய் எல்லாரும் தூங்கியாச்சா என்னனு பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று சொல்லி செல்ல, கட்டிலில் வந்து சாய்ந்து கொண்டவன் கடந்த இந்த ஒரு மாதத்தினை நினைத்துப் பார்த்தான்.

ஆராத்யாவிடம் ஒதுக்கம் எல்லாம் காட்டிடவில்லை. ஆனாலும் சிறு சுணக்கம். அது பழைய ரகுவாய் அவனை மாற விடாமல் தடுத்திருந்தது.

இந்த நாட்களில் ஆராத்யாவை அதிகமாய் ரகு புரிந்து கொண்டு நாட்கள் எனலாம். காதல் என்ற ஒன்று இருவருக்குள்ளும் கண்ணாம்பூச்சி ஆடுவதற்கு முன்பு வரை ஆராத்யா முற்றிலுமாய் வேறு.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்து வந்தாள். அனைவரோடும் சிரித்து பேசி பழகி என இருந்தாலும் அதே அளவு ஒதுக்கமும் இருக்கும் அவளிடம்.

இப்பொழுது இருக்கும் ஆராத்யா முழுக்க முழுக்க ரகுவின் காதல் தேவதை எனலாம். காலை எழுந்ததும் முதல் அழைப்பு ரகுவிற்கு தான் வரும் அவளிடம் இருந்து.

அதுவும் அன்று அறைக்குள் ரகு பேசிய பேச்சில் மொத்தமாய் மாறி போயிருந்தாள்.

“குட் மார்னிங் ஆரா!” என்று சொல்லும் படி அவனின் தூக்கத்தை கலைப்பவள், “குட் நைட் ஆரா!” என்று இரவு முடிப்பதும் அவள் அழைப்பில் தான்.

“முன்னாடி பேசாததுக்கெல்லாம் சேர்த்து இப்ப பேசுற நீ!” ரகு அவளிடம் சொல்ல,

“நீங்க முன்ன மாதிரி பேசினா நான் ஏன் இவ்வளவு மெனக்கெடுறேன்!” என்பாள்.

“நான் வேணும்னு பண்ணல ஆரா! என்னவோ சின்னதா ஒரு உறுத்தல்!” மனதில் இருப்பதை ரகு சொல்லி இருக்க,

“எனக்கு புரியுது ராம். ஆனா நான் இப்ப வேணும்னு தான் பண்றேன். இப்ப நான் சொல்றது தான் நிஜம். இப்ப உங்களுக்கே புரியுது தான ராம் இல்லைனா ஆரா என்ன ஆகுவான்னு?” என்று பதில் கேள்வி வரும்.

நிஜமே தான். ரகு இல்லாமல் அவளிடம் ஒரு செயலும் இருக்காது. இப்பொழுதெல்லாம் அவளின் அத்தனையிலும் நிறைந்திருப்பான் அவன்.

திருமணத்திற்கு என ஒவ்வொன்றும் இருவரும் சேர்ந்தே பார்த்து பார்த்து வாங்கி இருந்தனர்.

“என் கூட வாங்க!” என தாலி வாங்க சென்ற இடத்தில் தனியாய் ரகுவை அழைத்து வந்தாள் ஆராத்யா.

“சொல்லு ஆரா!” ரகு கேட்க,

“நான் ஒன்னு தருவேன். அதை நீங்க வாங்கிக்கணும்!” ஆராத்யா.

“இவ்வளவு பேர் முன்னயா?” கடையை சுற்றிப் பார்த்து ரகு கேட்க, முதலில் புரியாது விழித்தவள், அவன் பார்வையின் சிரிப்பில் அவன் பேச்சை கண்டு கொண்டாள்.

“ராம்!” என்று சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் சிணுங்கியவளை தலையில் தட்டியவன்,

“என்னனு சொல்லு!” என்று புன்னகை கொண்டு கேட்க,

“வாங்க!” என்று சொல்லி கூட்டி சென்று அமர வைத்து, அவனுக்கு என அவள் கேட்டதை கொண்டு வர சொல்ல,

“இது எதுக்கு ஆரா? நான் நோஸ் ரிங் வாங்கி குடுத்தேனே அதுக்கு பதிலா?” என்றவன் பேச்சில் சட்டென அவன் முகம் திரும்பிப் பார்த்தாள் கோபமோ என்று.

அவள் சுத்தமாய் அப்படி நினைக்கவே இல்லையே. அவன் கேள்வியில் அவன் அப்படி நினைத்து விட்டானோ என பதறி பார்க்க,

“ஹே! டென்ஷன் ஆகாத! ஜஸ்ட் கேட்டேன்!” என்றான்.

“இல்ல இல்ல. இப்ப வேண்டாம். இன்னோர் நாள் வாங்கிக்கலாம். போலாம் வாங்க!” என்றவள் முகமே சுருங்கிவிட்டது.

அதில் ரகுவுமே தன் தலையில் தட்டிக் கொண்டவன், “ஆரா! சும்மா கேட்டத்துக்கெல்லாம் ரியாக்ட் ஆகாத. வா!” என்றவன் அவள் தயங்கி நிற்க கண்டு,

“வா டா!” என்று சொல்லி,

“ப்ச்! ஆரா நான் சும்மா கேட்டேன். எனக்கு தெரியும் உன்னை. வா நீயே எனக்கு எது நல்லா இருக்கும்னு செலக்ட் பண்ணு. நிச்சயமா கழட்டவே மாட்டேன்!” என்று உத்திரவாதம் கொடுத்த பின்பே அவனருகில் அமர்ந்தவள்,

அழகான பெரிதாய் இல்லாமல் கண்களை உறுத்தாத வகையிலான கையில் அணியும் சங்கிலியை அவனுக்கு ஆராத்யா தேர்ந்தெடுத்து இருக்க, அவளையே அணிவித்து விட சொல்லி, அதை அவளிடமும் காட்டி அவள் மகிழ்ச்சியில் தானுமாய் மகிழ்ந்து நின்றான்.

இன்றும் கூட அப்படி தான். மேடையில் ரகுவின் அருகே அவனின் சரிபாதி ஆக இருக்கும் நினைவில் அத்தனை மகிழ்ச்சியுடம் அவனுக்கு இணையாய் ஆராத்யா நிற்க,

“ஆரா மா! செம்மயா இருக்க போ!” என்றவனின் சொல்லில் கீழ் வானமாய் சிவந்து நின்றவளை தர்ஷினி பேசி பேசியே இன்னும் சிவக்க வைத்தாள்.

அத்தனையையும் நினைத்துப் பார்த்து அமர்ந்திருந்தவன் அந்த இரவு வேளையில் “கல்யாணம் பண்ணிக்கலாம் தானே ஆரா?” என்ற செய்தியை அவளுக்கு அனுப்பி வைக்க,

“பண்ணிக்கலாம் பண்ணிக்கலாம். நான் ரெடியா தான் இருக்கேன்.” என்ற பதில் உடனே அவளிடம் இருந்து வர, சிரித்துக் கொண்டவன்,

“தூங்கு டி அழகு பொண்ணே! காலையில கல்யாணம் பண்ணி கடத்திக்குறேன்!” என்று அனுப்பிய செய்தியில் மொபைலை நெற்றியில் தட்டி சிரித்துக் கொண்டவள், கண்களில் இதயம் சுமக்கும் பொம்மையை அனுப்பி வைக்க, இரு மனங்களும் தங்களுக்கான சிறப்பான நாளை எதிர்பார்த்து வெகு ஆர்வமாய் காத்திருக்க,

இதோ அவர்களின் தேடல் ஒரு புள்ளியில் சந்தித்து இருக்க, சுற்றி இருந்த அனைவரின் ஆசியோடு ஆராத்யாவின் கழுத்தினில் தன் கரங்களால் மூன்று முடிச்சிட்டு ஆராத்யாவை தனக்கானவளாய் உறுதி செய்திருந்தான் ரகுராம்.
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru