• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 52

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
670
505
93
Chennai
அத்தியாயம் 52

திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. தர்ஷினி நந்தா இருவரும் குழந்தையுடன் இன்று டெல்லி கிளம்புகின்றனர்.

கல்பனா, அகிலன், தர்ஷி, நந்தா என சாப்பிட அமர்ந்திருக்க, மகேஸ்வரியோடு ஆராத்யா அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பரிமாற.

“நான் வச்சுக்குறேன் ஆரா! அவனை இன்னும் காணும் பாரு. போய் கூட்டிட்டு வா!” என்று மகேஸ்வரி சொல்ல, சரி என்று சொல்லி அறைக்கு சென்றாள்.

வெள்ளை நிற சட்டையின் கையை பாதி மடித்திருக்க, அலைமோதும் முடிகளை கைகளால் சரி செய்தபடி நிறைவாய் கிளம்பி படுக்கையில் சாய்ந்து அமர்ந்து ரகு மொபைலை பார்த்துக் கொண்டிருக்க, வந்ததும் அவனை ரசனையாய் பார்த்து வைத்தவள்,

“கிளம்பி தானே இருக்கீங்க! கீழ வரலாம்ல. எல்லாரும் சாப்பிட இருக்காங்க!” என்று சொல்லி அருகில் வரவும் அவள் பார்வை கண்டு கண்கள் மின்ன புன்னகை கொடுத்தவன்,

“கிளம்பிட்டா வந்துடணுமா ஆரா? எங்க என்னோட லஞ்சம்?” என்றவன் கேள்வியில் தன் தலையில் தட்டி கண்களை இறுக்கமாய் மூடி திறந்தவள் பாவனையில் இவன் ரசித்து பார்த்திருக்க,

“ராம்! உங்களை என்ன பண்றது?” என்றாள் கோபம் போல.

“நீ தான என் கோபம் போகணும்னா என்ன வேணா தர்றேன்னு சொன்ன? தினமும் கிளம்பும் முன்னாடி ஒரு கிஸ். அவ்வளவு தான் நான் கேட்டது” என்றான் தோள்களை குலுக்கி.

“அதுக்கு முதல்ல கோவமா இருக்கனுமே!” என்று தலைசாய்த்துப் பார்த்து கண்களால் மீண்டும் அவள் கேட்க, அதிலேயே சாய்ந்தான் ரகு.

ஒரு வாரமும் இப்படி கூடவே இருந்து பார்த்து பார்த்து சந்தோஷித்து மற்றவர்கள் முன் மாட்டி விழித்து என அழகாய் ஓடிக் கொண்டிருந்தது நாட்கள்.

திருமணம் முடிந்த அன்று இரவு சம்பிராதயங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்க, ஆராத்யா மனம் எங்கும் ஒருவித அலைக்கழிப்பு.

திருமணமான முதல் நாள் படபடப்பு வெட்கம் என எல்லாம் இருந்த போதும் மனதில் ஒரு வித பயம் என்ற சஞ்சலமும் இல்லாமல் இல்லை.

கடவுளின் முன் இருவருமாய் வணங்கி அன்னையை வணங்கி என ரகு அறைக்கு சென்றிருக்க, நல்ல நேரமாய் பார்த்து கல்பனா, தர்ஷினியோடு ஆராத்யாவை அவளறைக்கு அனுப்பி வைத்தார் மகேஸ்வரி.

ஆராத்யாவிற்கு அத்தனை அத்தனை பேச்சுக்கள் தர்ஷினியும் கல்பனாவும் என கிளப்பி அறைக்குள் அனுப்புவதற்குள் மூச்சு முட்டிப் போனவள், கதவருகே வந்ததும் தர்ஷினி ஆராத்யாவின் காதினுள் என்னவோ சொல்லி உடனே கிளம்பிவிட, விழிவிரித்து நின்றவள் முகம் முழுதிழும் ரத்தம் பாய்ந்தோட சிவந்து நின்றவளைக் கண்டவன் சிரித்தபடி கண்களால் உள்ளே அழைக்க, கால்கள் வேறு அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்றது.

“ஆரா! கீழ திரும்பி பாரேன் தர்ஷி, அண்ணி உன்னை பார்த்துட்டு நிப்பாங்க!” என்று ரகு சொல்ல,

‘இருக்குமோ?’ என நினைத்தவள் சட்டென உள்ளே நுழைந்து கதவையும் அடைத்துக் கொண்டாள்.

அதில் பலமாய் சிரித்துக் கொண்டு, “என்ன சொன்னாலும் நம்பிடுறது! பின்ன திரும்பினா என்ன தெரியும்? மேல வந்ததும் லெப்ட் கட் பண்ணினா தான நம்ம ரூம்?” என்று சொல்லி இன்னும் சிரித்தவன்,

“இன்னொரு நல்லது என்னன்னா...” என்று இழுத்தவன்,

“சொல்லாமலே டோர் க்ளோஸ் பண்ணிட்ட.. தட்ஸ் குட்!” என்று சொல்லி ரகு மௌனத்தோடு அர்த்தமாய் புன்னகைக்க,

படபடப்பில் எதையுமே தான் கவனிக்கவில்லை என்பதும் அவன் முகமும் என சேர்த்து அவளை இன்னுமே முகத்தை அமிழ்த்த போதுமானதாய் இருந்தது.

இந்த அறைக்குள் வந்தது ஒரே ஒரு முறைதான். மறக்க முடியுமா அந்த நாளினை. இப்பொழுது மீண்டும் அது நியாபகம் வர, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“டென்ஷன் குறைச்சுக்கோ. என்கிட்ட எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆரா?” என்று எளிதாய் கூறி, அங்கிருந்த பாலை கப்பில் ஊற்றி அவளிடம் ரகு நீட்டிட, தானுமே நிதானத்துக்கு வர நினைத்தவள் தன்னை அமைதிப்படுத்தி அவன் புறம் திரும்பினாள்.

“என்ன லுக் இது?” என்றவன் அமர வைத்து குடி என பாலை நீட்டி கண்களால் காட்ட,

“ம்ம்ஹும் வேண்டாம்.” என்று சொல்ல, ஓகே என்று கீழே வைத்துவிட்டான்.

“ம்ம் சொல்லு! என்னாச்சு? தர்ஷி டென்ஷன் பண்ணிட்டாளா?” என்று கேட்டவன், இப்பொழுதும் சாதாரணமாய் அருகில் அமர்ந்து அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ள, மீண்டும் அதே மூச்சைடைக்கும் உணர்வில் பாஷை மறந்து போனது ஆராத்யாவிற்கு.

அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் இங்கே தன்னிலை தடுமாறி அதை மறைக்க பேசி என சமாளித்துக் கொண்டிருந்தவன் “ஹே! ஆராத்யா பொண்ணே!” என்று தோளில் கையிட்டு இழுத்தவன் தன் வலதுபுற தோளோடு சாய்த்துக் கொண்டான்.

“ஷ்ஷ்! என்ன பண்ற நீ?” என்று சிரித்தவன்,

“இங்க பாரு! நீ நார்மலா இருந்தா தான் நானும் நார்மலா பேச முடியும். இப்படி லுக்கை மாத்திட்டே இருக்க கூடாது ஓகே!” என்று கேட்டு நிமிர்ந்து பார்த்தவளை பார்த்து என்னவென்று தலையசைக்க,

“பேசணும்!” என்றாள் குரலே வெளி வராமல்.

“அப்ப பேசு! இப்படி பார்த்து வைக்காத.” என்றதும் அவனில் இருந்து எழுந்தவள் கைகளை விலக்கப் பார்க்க,

“அது என்கிட்ட இருக்கட்டும். நீ பேசு!” என்றான்.

“உங்க கோபம் எல்லாம் போயிடுச்சா?” என்று கேட்க,

“கோபமா? எனக்கா? எதுக்கு?” என்றான்.

“விளையாடாம நிஜமா சொல்லுங்க ராம். எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு. எவ்ளோ படுத்திட்டேன் உங்களை? இதோ இந்த ரூம்ல இங்க தான என் மேல இருந்த கோவத்துல போனை தூக்கி போட்டீங்க முதல்ல? அப்பவும் புரியல.. அடுத்தும் அந்த ரூம்ல.. உங்களை நான் புரிஞ்சிக்கவே இல்ல தான?”

“இல்லையே! இந்த ரூம்ல தூக்கி போட்டது என்னோட போன். பத்திரமா பெட்ல தான் போட்டேன்.. அங்க உடைச்சது உன்னோட போன்!” என்றவன் பேச்சில் இவள் முறைத்தாள்.

“ஆரா என்ன இது? இன்னைக்கு என்ன நாள்? இன்னைக்கும் இப்படி தான் பண்ணுவியா நீ? உன்னை என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல!” என்றவன் அவள் கையை இழுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தான் அதன்மேல்.

“ச்சோ! இப்படி பண்ணினா நான் எப்படி பேச?” என்றவள் நெளிய,

“அதானே? நாளைக்கு பேசுவோமா?” என்றான் சட்டென்று.

“உங்களை...” என்று நிஜமாய் அவள் முறைக்க,

“பின்ன என்ன பண்ணிட்டு இருக்க நீ? நான் அதையெல்லாம் கிராஸ் பண்ணி வந்தாச்சு. கோபம், வருத்தம், அழுகை இதெல்லாம் யார்கிட்ட காட்ட முடியும்? நீ என்கிட்ட நான் உன்கிட்ட.. இது தான் நிஜம். அதையே நினைச்சுட்டு இருந்தா நாம எப்ப அடுத்த ஸ்டேஜ் மூவாக சொல்லு?”

“நிஜம் தான். ஆனா நான் உங்களுக்கு உண்மையா இல்லையோனு எனக்கு கஷ்டமா இருக்கே! நீங்க என்னை எவ்ளோ விரும்புறீங்கனு ஒவ்வொரு நாளும் கூட இருந்து பார்த்திருக்கேன். ஆனா நான் என்னோட லவ்வை உங்களுக்கு எப்படி உணர்த்த? எப்படி உங்களை நம்ப வைக்க?” என்றாள் பாவம் போல பார்த்து.

“சரியா போச்சு! மத்த பேச்சு பார்வை தான் குழந்தை மாதிரினு பார்த்தா.. நீ முழு பாப்பாவா தான் இருந்திருக்க.” என்றவனை புரியாமல் அவள் பார்க்க,

“லவ்வை எத வச்சு அளக்க முடியும் உன்னோடது என்னோடதுன்னு? உனக்கு என்னை புரிஞ்சிக்க முடியுது தானே? அப்ப என்னால உன்னை புரிஞ்சிக்க முடியாதா?” என்றவன்,

“முதல்ல இந்த மாதிரி நினைக்குறதை விடு. நான் கோவப்பட்டாலும் சரி வருத்தப்பட்டாலும் சரி என்னோட காதல் உன்மேல என்னைக்கும் குறையாது. உன்னை பார்த்த முதல் நாள்ல இருந்து இப்ப வரை ஏன் இனியுமே என்னோட பாசம் நேசம் எல்லாம் அதிகமாகுமே தவிர குறையாது. நமக்குள்ள சண்டை வரலாம். நானோ நீயோ கோவமா பேசிக்கலாம். அதுக்காக அதையே நினைச்சுட்டு இருந்துட முடியுமா? உன் அப்பா அம்மா மேல கோபப்பட்டது இல்லையா? அப்புறம் சமாதானம் ஆனது இல்லையா? ம்ம்!” என்று நீளமாய் பேச, அவன் தனக்கு கொடுத்திருக்கும் இடம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்தது ஆராத்யாவிற்கு.

“சரி கோபம்னே வச்சுக்கோ! காலையில தினமும் நான் கிளம்பும் முன்னாடி இப்படி ஒன்னே ஒன்னு குடு” என்றவன் அவள் எதிர்பாராத நேரமாய் கைகளை இழுத்து கன்னத்தில் முத்தம் வைக்க, பேச்சச்சு போனாள் பேதை.

அதில் கள்ளமாய் புன்னகை சிந்தியவன் “இது போதும் எனக்கு. அப்புறம் எங்க கோவத்தை புடிச்சு இழுக்க?” என்று கேட்டு அவளை உலுக்க,

“அச்சோ!” என்றவள் ஒரு புறமாய் அணைத்திருந்தவன் நெஞ்சத்தில் சாய்ந்திருந்தாள்.

“போதும் ஆரா! டீப் திங்கிங் வேண்டாம். அப்பப்ப நடக்குறதை அப்பப்ப ஃபேஸ் பண்ணிக்கலாம். ம்ம்!” என்று சொல்லி இறுக்கமாய் அணைத்தவன் வார்த்தையோடு கண் பாஷை, உடல்மொழி என அனைத்திலும் வித்தியாசம் தெரிய, அதன்பின் எல்லாம் ரகுவின் கைவசம் தான் அங்கே.

அவன் ஆட்டி வைக்கும் பொம்மையாய் அவள் இருக்க, அவளுள் புதைந்து அவளுள் தேடி அவளுள்ளே தொலைந்தும் போயிருந்தான்.

அடுத்தடுத்த நாட்களும் அழகாய் விடிந்து மலர்ந்து அவர்களுக்காய் ஒளி வீசியது.

தினமும் காலையில் அவனுக்கான லஞ்சத்தை பேசி பேசியே பெற்று கொள்ளுபவனை ரகசியமாய் தனக்குள் ரசித்துக் கொள்வாள் அவள்.

இன்றும் அதை கேட்டு அவன் புன்னகை எழுந்து கொள்ளாமல் அமர்ந்திருக்க,

“தர்ஷ் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறாங்க.. தெரியும்ல?” என்று கேட்க,

“நான் கிளம்பி ரெடியா இருக்கேன்.. வர வேண்டியது வந்தா நானும் வருவேன்!” என பாட்டு பாடி சட்டமாய் அமர்ந்திருப்பவனை என்னவென்று சொல்ல.

“உங்களை...” என்று பக்கமாய் வந்தவளை அவனே தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“காலையில எனக்கு முன்னாடி எழுந்து போய்ட்டா என்னால வாங்க முடியாதுன்னு நினைச்சியா?” என்று வம்பு பேச்சு பேசி அவனுக்கு வேண்டியதிற்கும் அதிகமாய் பெற்றுக் கொண்டு தான் அவளை விட்டதே!

மீண்டுமாய் தன்னை சரி செய்து அவனை கோபமாய் செல்லமாய் என முறைத்து அடித்து திட்டி என அவன் ரசிக்க ரசிக்க நின்றவள்,

“முதல்ல நான் போவேன். பத்து நிமிஷத்துக்கு அப்புறம் தான் வரணும்!” என விரல் நீட்டி அவள் சொல்லி படிகளில் இறங்க, பின்னோடே வந்து தர்ஷினிக்கு கன்டென்ட் கொடுத்து முகம் சிவந்தவளின் முறைப்பை மீண்டுமாய் பரிசாய் வாங்கிக் கொண்டான்.
 
  • Like
  • Love
Reactions: prikar and sivaguru