• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 8

எப்பொழுதடா கணவர் வீட்டை விட்டு வெளியே கிளம்புவார் என வெளியறையில் ஒரு கண்ணும் சமையலில் ஒரு கண்ணுமாய் நின்றிருந்தார் மாலா.

"ம்மா! அவர்கிட்ட பேசிட்டேன்.. பெங்களூர் ட்ராபிக்ல மாட்டிட்டாங்க போல. பஸ் ஏறிட்டு கால் பண்றதா சொன்னாங்க!" என்று கணவன் கூறியதை வனிதா மாலாவிடம் கூற,

"இனி மெதுவாவே வரட்டும் டி. பத்திரமா வர சொல்லு. இவர் அவசரத்துக்கு எல்லாரும் வந்து நிக்க முடியுமா? அதான் எல்லாரும் வந்துட்டு போய்ட்டாங்க இல்ல? உன் அத்தை மாமா வந்திருந்தாங்க இல்ல. அது போதும்!" என்ற மாலா மீண்டும் வெளியே எட்டிப் பார்த்தார்.

வனிதா கணவர் வேலை சம்மந்தமாக நேற்று காலை பெங்களூர் சென்றது. இன்று காலையே வர வேண்டியது தான். அங்கே மழை அதிகமாய் இருப்பதால் பேருந்து நேரத்தை மாற்றி இருக்க, கூடவே ட்ராபிக் வேறு!

"என்னாச்சு ம்மா?" அன்னை பார்ப்பதை கண்டு வனிதா கேட்க,

"மணி ஆறு ஆகுது. இன்னும் உங்க அப்பா வெளில போகாம இருக்காரு.. சாயந்திரம் ஆறு மணி ஆச்சுன்னா வீட்டுல கால் தங்காதே!"

"துரத்தி விட்ருவீங்க போல!" என வனிதா சிரிக்க,

"தண்ணி கொண்டு வா மாலா!" என்ற வினோதனின் சத்தம்.

"கிளம்பிட்டார் போல! இதை கொண்டு குடு!" என வனிதாவை அனுப்பி வைத்தார் மாலா.

"அம்மா எங்க?" என்று கேட்டு வினோதன் வாங்கிக் கொள்ள,

"பால் சூடு பன்றாங்க ப்பா. மகி கேட்டா!" என்றாள்.

"உன் புருசன் எப்ப வரராம்?"

"காலையில வந்துருவாங்க ப்பா!"

"ம்ம்! எல்லாம் சொல்லிட்டியா? காலையில இங்க வர சொல்லு. பேசுதேன்!" என்றவர் வெளியே சென்றுவிட்டார்.

"ஏன்? மாப்பிள்ளை தான? மரியாதை குடுத்து அவர் வீட்டுல போய் சொல்லிட்டு வர மாட்டாரா? அவரா தான் வரணுமா?" என்று மாலா கோபம் கொள்ள,

"இதுல என்னம்மா இருக்கு! நான் காலையில அவரோட வர்றேன். நீ மகியை பார்த்துக்கோ!" என்றாள் வனிதா.

"இப்ப கிளம்ப போறியா? அவர் வரட்டும்.. காலையில போ டி!"

"இருக்கட்டும் ம்மா. அத்தைகிட்ட வந்துடறதா சொல்லி தான் அனுப்பி வச்சேன் இங்க இருந்து அவங்க கிளம்பும் போதே!" என்றாள்.

"ஹ்ம்! உன் புருஷன் இல்லாம நீ இருந்துட்டாலும்!" என்று அலுத்துக் கொண்டவர்,

"இந்த மகிக்கு உன்னைல இருந்து பாதி பொறுப்பாவது கொஞ்சம் வந்திருக்கலாம்.. என்னனு கல்யாணம் பண்ணி வச்சு பாக்க போறேனோ!" என்ற புலம்பல் கொண்டவர்,

"சரி நேரமாச்சு இருட்டும் முன்னாடி கிளம்பு. மறக்காம வீட்டுக்கு போய் வள்ளி அண்ணிக்கு போன் பண்ணி பேசு. இங்க நடந்ததை இன்னும் நான் சொல்லல. ஏற்கனவே கவலைல இருப்பாங்க. நானும் இனி தான் பேச போறேன்!" என்று அலைபேசியை கையில் எடுத்துவிட்டார்.

"அதுக்கு தான் அப்பா எப்ப போவார்னு பாத்துட்டு இருந்திங்களா ம்மா?" என்று கிண்டல் செய்தவள் அன்னையிடமும் தங்கையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

வள்ளிக்கு அழைத்தபடி தனதறையில் இருந்த மகிமா அருகில் வந்து அமர்து பாலை அவளிடம் நீட்டினார் மாலா.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் பேசிவிட்டு விடைபெற்று கிளம்பும் பொழுது வினோதனின் பெரியப்பா ஒருவர் விஷேஷத்திற்கு வந்தவர் கிளம்பும் நேரம் சொல்லி தான் தெரியும் சிவா பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்தது.

அவர் இரு பக்கத்திற்கும் நெருங்கிய உறவு. வினோதனுக்கும் வாழவந்தானுக்கும் பேச்சுக்கள் ஆகாது என்று அவருக்கு தெரியும். இங்கு நடந்ததைப் பற்றி பேசும் பொழுது பொதுவாய்,

"இங்க பரவால்ல. ஆறு மாசம் முடிஞ்சி வரோம்னுட்டு போறாங்க. அங்க உன் தங்கச்சி வீட்டுல பொண்ணு பாக்க போன இடத்துல அந்த பொண்ணு வெளிய வந்து தலை காட்டவே மாட்டேன்னு சொல்லி ஒரே சண்டையா போச்சு. மாப்பிள்ளை பையன் கூட ஒன்னும் சொல்லாம போய்ட்டான். வாழவந்தானுக்கு தான் ரொம்ப கோவம். கன்னாபின்னானு பேசிட்டு தான் வந்தான்!" என்று சொல்ல, எதையும் கேட்டுக் கொள்ளவில்லை வினோதன்.

மாலாவிற்கு தான் பதறியது. என்ன நடந்ததோ சிவா என்ன செய்கிறானோ என கலங்கியவர் உடனே அவர்களிடம் பேசவும் முடியவில்லை.

வள்ளி நிச்சயம் துவண்டிருப்பார். தானாவது அழைத்து பேசி இருக்கலாம் என அத்தனை வருந்தி கணவன் வெளியேறும் வரை காத்திருந்து வனிதாவையும் அனுப்பி வைத்துவிட்டு மகிமா அருகில் வந்து அமர்ந்து வள்ளிக்கு அழைக்க,

"சொல்லு த்தை!" என்று எடுத்தது சிவா தான்.

"சிவா! என்ன டா பண்ற? சிவநேசன் மாமா என்னென்னவோ சொன்னாரு. என்ன டா ஆச்சு? அண்ணி எப்படி இருக்காங்க?" என்று கேட்க,

"பதறாத த்த! இப்ப ஒண்ணுமில்ல. அம்மா மேல துணி எடுக்க போயிருக்காங்க!" என்றான் நிதானமாய்.

"நீ அமைதியா வந்துட்டியா? உனக்கு எப்ப தான் டா கோவம் வரும்? அப்படிப்பட்ட அப்பாக்கு இப்படி ஒரு புள்ளை. உன்னை வர சொல்லி இப்படி செஞ்சவங்கள அண்ணி ஒன்னும் சொல்லலையா?" என்று மாலா கேட்க, வள்ளியும் வந்துவிட்டார்.

"சண்டை போட்டு கத்தி கூப்பாடு போட்டா எல்லாம் சரியா போச்சா? அம்மா மாதிரியே பேசுற போ!" என்று சிரித்தவன்,

"அதெல்லாம் முடிஞ்சு கடந்து, ரெண்டு பிரியாணி சாப்பிட்டு நானும் அம்மாவும் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டோம்!" என்று சொல்ல,

"போனை குடுடா!" என்று பறித்துவிட்டார் வள்ளி.

"மாலா!" என்று சொல்லவுமே,

"அண்ணி! என்ன அண்ணி! அந்த பொண்ணை பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு வந்திருக்கலாம்ல? எங்க யாருன்னு சொல்லுங்க!" என்று கோபமாய் கேட்க, மகி இப்பொழுது தான் அன்னை பேசுவதை கேட்டாள்.

அவளுக்கு இன்னும் தெரியாதே! அவள் நினைவு முழுதும் அடுத்து என்ன என்ற சிந்தனையில் தான் இருக்கிறது கடந்த இரண்டு மணி நேரங்களாக.

"அட போ மாலா! அதெல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு!" என்றார் நொந்துபோய் வள்ளி.

"எனக்கு சிவநேசன் மாமா சொல்லி தான் தெரியும்.. இங்கயும் மகிக்கு பூ வைக்குறோம்னு திடிர்னு வர்றதா சொல்லிட்டாங்க. அதான் உங்ககிட்ட பேச முடியல!" என்று சொல்ல,

"அப்படியா? மகிக்கு பூ வச்சாச்சா?" என்று மகிழ்ச்சியுடன் கூறி மகனைப் பார்க்க, அவனுமே "ஓஹ்!" என்றான் சிரித்தபடி.

"இல்ல அண்ணி! அப்படி சொல்லி தான் வந்தாங்க. ஆனா மாப்பிள்ளை ஊருக்கு போய் ஆறு மாசம் கழிச்சு லீவ் போட்டு வந்த பின்னாடி கல்யாணம்னு சொல்லவும் மகி அப்பா ஒத்துக்கல! பெரியவங்க கூட இன்னும் ஊருக்கு திரும்ப இருவது நாள் இருக்கே அதுக்குள்ள கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லி பார்த்தும் மாப்பிள்ளை வீட்டுல ஒத்துக்கல!"

"அப்ப என்ன தான் ஆச்சு?"

"என்ன ஆக? இவர் தான் வீம்பு புடிச்சவர்னு பார்த்தா மாப்பிள்ளையோட அம்மாவும் அப்படியே இருக்கு. எல்லாரும் பேசி கடைசியா கல்யாணத்துக்கு முன்னவே பூ வச்சுக்கலாம். அவர் ஊருக்கு போய்ட்டு வந்த பின்னாடி பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க!" என்று சொல்ல,

"அப்படியா?" என்றார் வள்ளியும் வருத்தமாய்.

"இதுல கவலைப்பட ஒண்ணுமில்ல அண்ணி! கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும். பூ வைக்க வரேன்னு சொல்லும் போதே என்ன யாதுன்னு இவர் ரெண்டு வார்த்தை முன்னாடி பேசி இருக்கனும். வந்த பின்னாடி பார்த்துக்கலாம்னு இருந்தா இப்படி தான். இப்பவும் அவங்க கண்டிப்பா ஆறு மாசத்துல வருவோம்னுட்டு தான் போயிருக்காங்க. அந்த தம்பியும் அம்முகிட்ட தனியா பேசிட்டு தான் போச்சு" என்றவர்,

"நம்ம சிவாவை நினச்சா தான் கவலையா இருக்கு. ரொம்ப வருத்தப்பட்டிருப்பான் இல்ல?" என்று கவலையாய் கேட்க,

"வருத்தப்பட்டாலும் காமிச்சிருவானா அவன்? இப்பவும் நீ சொல்றதை கேட்டு சிரிக்கிறான். அது தான் மனசை பிரட்டுது!" என்ற அன்னை தலையில் வலிக்காமல் கொட்டு வைத்தான்.

"நாளபின்ன கடைகன்னியில பாக்காமலா போவேன் அவளை. அப்போ இருக்கு!" என்று வசைபாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை மாலா.

"விடு மாலா! வெள்ளிக் கிழமை கோவிலுக்கு வா. முடிஞ்சா அம்முவையும் கூட்டிட்டு வா.. பாக்கணும் போல இருக்கு!" என்று கூறி வைத்தார்.

"சிவா மாமாக்கு என்ன ம்மா?" மகி கேட்க,

"நீயே பரவால்லன்னு சொல்ற மாதிரி அங்க ஒருத்தி பண்ணி வச்சிருக்கா!" என்ற மாலா நடந்ததை கூற,

"பாவம்ல மாமா!" என்றாள்.

"ம்ம்ம்! ஒரு கல்யாணத்தை பண்றதுக்குள்ள நாங்க படுற பாடு!" என்றவர்,

"ஆமா அதான் ஆறு மாசத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு போய்ட்டாங்க இல்ல. அப்புறம் ஏன் இப்படி உர்ருன்னு இருக்க அம்மு?" என்றார் மகளிடம்.

"ஆனா ஆறு மாசத்துக்கு அப்புறம் வருவாங்களே!" என்றாள் உதடு சுழித்து.

"உன்னைய திருத்த முடியாது டி!! என்று எழுந்து கொள்ள பார்க்க,

"ம்மா!" என்று அன்னை மடியில் படுத்துக் கொண்டாள்.

"என்ன அம்மு?"

"எனக்கு டெல்லி வேண்டாம். நான் போக மாட்டேன்!" என்றாள் சிறிய குரலில்.

"ஹ்ம்! முதல்ல கல்யாணம் வேண்டாம்னு சொன்ன. இப்ப பார்த்தியா டெல்லி வேண்டாம்னு சொல்ற!" என்று அவள் தலை கோதியவர்,

"அடுத்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா உனக்கே தெரியும் எல்லாம் புரியும். சும்மா எதாவது நினைச்சுட்டு இருக்காத!" என்றார்.

"அதில்ல ம்மா! எனக்கு டெல்லி மாப்பிள்ளை வேண்டாம்!" என்றதும் மாலாவிற்கு புரிந்து பதறியது.

"ஏன் டி? எதாவது சொல்லிச்சா அந்த தம்பி? இல்ல நீ எதாவது பேசினியா?" என்று கேட்க,

சொல்லிடலாம் என்று தோன்றிய அதே சமயம் இது தான் நிதர்சனம் என தன்னையே தான் சமாதானம் செய்வார்கள் என்று புரிய அமைதியானாள்.

"சொல்லு டி!"

"ப்ச்! ம்மா! நான் கல்யாணம் பண்ணிக்குறேன். ஆனா அந்த மாப்பிள்ள வேண்டாம். எனக்கு பிடிக்கல. நீ அப்பாகிட்ட சொல்லிடு!" என்றவள்,

"இல்ல நான் கல்யாணத்தன்னைக்கு ஓடி போயிடுவேன்!" என்று சொல்ல, நறுக்கென ஒரு கொட்டு விழுந்தது மகிமாவிற்கு.

"இந்த வாய் தான் டி! இன்னும் ஆறு மாசம் இருக்கு. இந்த வாயை வச்சுட்டு சும்மா இரு. நடக்குறது நடக்கட்டும். நீயா எதாவது பேசி உன் அப்பாகிட்ட அடி வாங்கிட்டு இருக்காத. புரியுதா?" என்று கேட்க,

'எதுவும் சொல்லாமலே இத்தனை காரமாய் ஒரு சமாதானப் பேச்சு. பேசியதை கூறினால்?' என்று நினைத்தவள் முடிவிற்கே வந்துவிட்டாள் அடுத்த கட்டத்தை யோசிப்பது என்று.

அதில் அமைதியாய் இரண்டு நாட்களை கழித்தவளுக்கு மூன்றாம் நாள் தான் தோன்றியது அந்த எண்ணம்.

தொடரும்..