• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 11

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 11

அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, “சரிப்பா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் புகழேந்தி அங்கிளை பார்த்துட்டு வரேன்.”

“அவன் உன்கிட்ட என்னைப் பத்தி ரொம்ப போட்டுக் குடுப்பான். நம்பாதே. ஐயாம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் நௌ...”புன்னகைத்தார்.

“அதை அங்கிள் சொல்லட்டும்...”

டாக்டர் புகழேந்தி நேராக விஷயத்துக்கு வந்தார். “அரவிந்த். அப்பாவுக்கு வந்திருப்பது சிவியர் அட்டாக். இனி அவன் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீ வந்து அப்பாவுக்கு ஓய்வு கொடு. அதோடு உன் அம்மாவுக்கு பிரஷரும் சுகரும் அதிகமா இருக்கு. அவங்களும் கொஞ்சம் கவனமா இருக்கணும். அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஒழுங்கா சாப்பிடாம, டேப்லட்ஸ் எடுத்துக்காம உடம்பை கெடுத்துக்கறாங்க. உனக்கு எப்போ கோர்ஸ் முடியுது?”

“இனி வைவா, பிராக்ட்டிக்கல்ஸ் அப்புறமா செமஸ்டர் தான். ஒன்றரை மாசத்திலே முடிஞ்சிடும்.”

“சரி... இப்போதைக்கு பயப்பட ஒண்ணுமில்லைன்னாலும் கேஃபுல்லா இருக்கணும். பிசினஸ்ல ஏதோ பிரச்னைன்னு நினைக்கறேன். ஆனா இது பத்தி அவங்ககிட்ட எதுவும் பேச வேண்டாம். நீ வர்றவரை நான் பார்த்துக்கறேன். நோ பிராப்ளம். இன்னும் டென்டேஸ் அவங்களை வீட்டுக்கு அனுப்பறதா இல்லை. டோண்ட் வொர்ரி. நீ எக்ஸாம் நல்லா பண்ணிட்டு வா...”

“தேங்க்ஸ் அங்கிள்... அப்பாவுக்கு....”

“இப்ப ஓ.கே. பட் குட் ன்னு சொல்ல முடியாது..”

“அங்கிள் நான் வேணா ஒரு டென்டேஸ் லீவ் போட்டுட்டு கூட இருக்கேன்.”

“நாட் நெசஸரி. நீ கிளம்பு. தினமும் நான் உனக்கு போன் பண்றேன்..”

தன் பிரச்னையிலேயே உழன்று கொண்டு இருந்ததால், சுனிலுக்கு போன் பண்ணத் தோன்றவேயில்லை.

சுனில், “டேய் என்னடா நீ போனதும் போன் செய்வேன்னு எதிர்பார்த்தேன்.. என்னடா ஆச்சு.”

“ச்சு. அப்பா ஐ.சி.யூ.ல இருக்கார்டா. அம்மா ரொம்ப கலங்கிப் போயிருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலைடா. வசு எப்படிடா இருக்கா? அந்த விஷயம் வேற மண்டை காயுது. எனக்கு அப்பாவை விட்டுட்டு ஊருக்கு வரவே இஷ்டமில்லை. குழப்பமா இருக்கு சுனில். என்ன பண்ணட்டும்..? எனக்கு மனசே சரியில்லை” டாக்டர் அங்கிள் சொன்னதை கவலையோடு நண்பனிடம் பகிர்ந்து கொண்டான்.

“நமக்கு இந்த வாரம் ‘வைவா’ வேற இருக்கே டா. அதைவிட முடியாதே. டாக்டர்கிட்ட சொல்லிட்டு கிளம்பி வா. ‘வைவா’ முடிஞ்சு மறுபடி நாலு நாள் வந்து அங்க இரு. வசு காலேஜ் வர்றா. ஆனா அவ சிரிப்பே தொலைஞ்சு போச்சு. காயூ கிட்ட அழுதே கரையுறா. நீ வந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும் ல.”

“இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு வரேன். அம்மாவுக்கும் அப்பதான் ஆறுதலா இருக்கும். இன்சுலின் எடுத்துக்கற அளவு அவங்க சுகர் லெவல் எகிறியிருக்கு.ரொம்ப ஓய்ந்து போயிட்டாங்க டா. மனசே சரியில்லை சுனில்.”

“சரியாயிடும்டா. அம்மாவை கேட்டதா சொல்லு. காயூ, வாஸந்தி கூடவே தான் இருக்கா. அவங்க வீட்ல செக்யூரிட்டியா ஒருத்தன் வந்து உட்கார்ந்திருக்கான். நானும் காயூவும் எங்க அம்மா, அப்பா கிட்ட பேசி எதாவது செய்ய முடியுதான்னு பார்க்கலாம். நான் பார்த்துக்கறேன். மெதுவா வா. ஏறக்குறைய ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி அந்த ராஸ்கல் அவங்களை வெச்சிருக்கான்.ரெண்டு பேரும் ரொம்ப பயந்து போயிருக்காங்க.”

“காயூகிட்ட வசுவை ஒழுங்கா சாப்பிட வைக்கச் சொல்லு. இந்த சமயத்தில் அம்மா கிட்ட நான் இது பத்தி எதுவும் பேச முடியாது. மீதியை அங்க வந்து பேசிக்கலாம். நான் அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு போறேன். மறுபடி நாளைக்கு கால் பண்றேன். வசுவை பார்த்துக்கடா. பை.”

காயூவும் சுனிலும் காயூவின் வீட்டில் இதைப் பற்றி பேசினார்கள். காயூவின் அம்மா சிறுவயதிலிருந்தே மாலதியின் பள்ளித் தோழி. பிளான் செய்தபடி காயூவே பேச்சை ஆரம்பித்தாள்.

“அம்மா..! மாலதி ஆண்ட்டி உங்க கிட்ட பேசினாங்களா..? என் கிட்ட அழுதுட்டாங்க. உங்களை அவங்க நேரில் வந்து பார்க்க முடியாத சூழல். அதனால என் கிட்ட சொல்லி அனுப்பியிருக்காங்க. வாஸுவுக்கு உடனே மேரேஜ் பண்ண நினைக்கறாங்க. உங்க கிட்ட உதவி கேட்கச் சொன்னாங்க..”

காயூவின் அப்பா, “பாவம். தங்கச்சி. ரொம்ப நல்ல மாதிரி. அவளும் தான் எத்தனை கஷ்டத்தை அனுபவிப்பா. இப்ப தான் ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருந்தா. சரி விடு. நம்ம பக்கம் நல்ல மாப்பிள்ளைக்கா பஞ்சம். தரகரைப் பார்த்து நாளைக்கு சொல்லிட்டு வரேன். எதுக்கும் நம்ம புள்ளையோட ஜாதகத்தை மாலதியை காயு கிட்ட கொடுத்து விடச் சொல்லு.”

சுனில் திடுக்கிட்டுப் போனான். காயூவோ, “அது சரிப்பா... வாஸு டாக்டருக்கு படிக்கறா. அந்த அளவு படிச்ச மாப்பிள்ளையா பார்க்கணும். முக்கியமா கல்யாணம் முடிஞ்சு, இவளை மேலே படிக்க அனுமதிக்கணும். எம்.பி.பி.எஸ். முடிக்கவே இன்னும் மூணு வருஷம். அதுக்குப் பிறகு மாஸ்டர் டிகிரி... இதுக்கும் ஒத்துக்கணும் இல்லையா?”

“இதுக்கெல்லாம் நம் ஜனங்க ஒத்துக்க மாட்டாங்க. தவிர இத்தனை படிச்ச மாப்பிள்ளை எங்க கிடக்கு” என்றார் காயுவின் அப்பத்தா...

சுனில், “அத்தை... எனக்கொரு யோசனை தோணுது. அரவிந்த் இருக்கானே அவங்கம்மா போன வாரம் என்கிட்ட பேசும்போது புலம்பினாங்க. ‘அரவிந்த் எனக்கு இப்ப கல்யாணம் வேண்டான்னு சொல்றான். நீ எப்படியாவது சம்மதிக்க வைப்பா. அவனுக்கு பிடிச்சிருந்தா போதும். எந்தப் பொண்ணா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம்.னு சொன்னாங்க. ஏன் நாம அரவிந்தை வாஸூவுக்கு பார்க்கக் கூடாது?. அவனைப் பத்தி உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும். யோசனை பண்ணுங்க.

காயூவின் தந்தையோ, “இதில யோசிக்க என்ன இருக்கு? அரவிந்த் உத்தமமான பையன்.. ரொம்ப மரியாதை. பந்தா அறவே கிடையாது. ஒழுக்கமான, அடக்கமான குணம். வாஸந்திக்கும் பொருத்தமா இருப்பான். மாலதி கிட்ட கேட்டுட்டு இப்பவே அவங்கம்மா அப்பாகிட்ட பேசலாம். எனக்கு ரொம்ப திருப்தி.இதுவே நல்ல யோசனையாத்தான் தெரியுது.

நம்ம சுனில் இப்பதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லியிருக்கான். ஏன் மேகலா நீ என்ன சொல்ற?” என்று மனைவியிடம் வினவினார்.

மேகலாவிற்கு பரம சந்தோஷம். அவருக்கு எப்போதுமே அரவிந்தை மிகவும் பிடிக்கும். அதனால் உடனே இதற்கு சம்மதித்தார். எனவே, திட்டமிட்டபடி சுனிலும் காயூவும் இந்த திருமணத்தை அரேஞ்ச் மேரேஜ் ஆக மாற்ற தங்களால் ஆன அத்தனை முயற்சிகளும் மேற்கொண்டனர்.

காயூ, “அம்மா...! இதில் ஒரு சிக்கல். அரவிந்த் அண்ணாவோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கார். அண்ணனும் கூட இருக்கார். அவங்க பேரண்ட்ஸ் கிட்ட இப்ப இதுபத்தி எதுவும் பேச முடியாது. அண்ணா வரட்டும்.. பேசலாம். வாஸூவை பிடிச்சிருந்தா அப்புறமா மீதியை பார்த்துக்கலாம் என்றதும் சுனில் காயூவைப் பார்த்து கண்ணடித்து, “செம ஆக்டிங் செல்லம். உனக்கு .ஆஸ்காரே கொடுக்கலாம் தான்.ஆனால் என்னால் இப்போதைக்கு மாருதி கார் கூட வாங்கிக் கொடுக்க முடியாது!” என்றான்.. காயூ முறைத்தாள்.

மேகலா, “சுனில் அரவிந்த் வரும்போது அவன் ஜாதகத்தை கொண்டு வரச் சொல்லு. பொருத்தம் முதலில் பார்க்கலாம். மாலதிக்கு ஒரே பொண்ணு. அவளுக்கு துணையாக நாமதான் முன்னால நின்னு எல்லாம் செய்யணும்.”

கடவுளை வணங்கி, இருவரின் ஜாகத்தையும் ஒரு நல்ல நாள் பார்த்து ஜோசியரிடம் கொடுத்தனர். அதற்கு முன்பே மேகலா, தன் தோழி மாலதியிடம் அரவிந்த் பற்றி விபரமாக கூறியிருந்தாள்.

கடவுளின் சித்தமாக, இருவரின் ஜாகமும் அம்சமாகப் பொருந்தியது.

ஜோசியரோ, “இந்தப் பையனுக்கு இந்தப் பொண்ணு தாங்கறது இறைவன் போட்ட முடிச்சு. அதை யாராலும் மாத்த முடியாது. பேஷா கல்யாணத்தை நடத்தலாம். பொண்ணுக்குத் தான் கொஞ்சம் நேரம் சரியில்லை. அதனால முகூர்த்தம் சீக்கிரமா வையுங்கோ. நானே நாள் குறிச்சித் தரேன். நம்ம கோயில் சாட்டியிருக்கறதால, திருவிழா முடிஞ்சு நாலாம் நாள் திவ்யமா இருக்கு. பேசி முடிவு பண்ணுங்க..” என்று நாளும் குறித்துக் கொடுத்தார். ஸ்கூலுக்கு லீவ் போட்டு விட்டு வந்த மாலதிக்கு இதைக் கேட்டதும் சந்தோஷத்தில் கண்களில் நீர் நிறைய,

“மேகலா, அண்ணா. எனக்கும் உங்களை விட்டா யாருமில்லை. துணிஞ்சு தைரியமா வீட்லயே எல்லாம் செய்ய முடியாத சூழ்நிலை. நீங்கதான் நல்லபடியா கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும். பையனைப் பத்தி நீங்க நல்லபடியாக பேசறதால நிம்மதியாக இருக்கு.எனக்காக இன்னொரு முறை விசாரித்து சொல்லுங்க ணா. சுனில் தம்பி அவர் கூடவே இருக்குறதால அவரைப் பத்தி ஓரளவு நம்பறேன். எல்லாமே உங்க வீட்லயே வெச்சுக்கலாம். இங்க நாங்க மூச்சு விட்டாக் கூட அவனுக்கு தெரிஞ்சிடும்.

மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாக்கணும். வாஸூ என் உயிர். அவ கல்யாணத்துக்குப் பின்னால கண் கலங்கினா என்னால தாங்க முடியாது. நீங்க சொல்றதால மாப்பிள்ளை பத்தி...”

“தங்கச்சி... அரவிந்த் குணத்துக்கு நான் கேரண்டி. அவன் குணம் சொக்கத் தங்கம். ஆறு வருஷமா எனக்குத் தெரியும். சுனில் அவனோட தான் அவங்க வீட்டில இருக்கான். நல்ல வசதியான குடும்பம். அவங்கம்மா, அப்பா கூட நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. பெருந்தன்மையானவங்கக. வாஸந்தியும் காயூ மாதிரி தான் எனக்கு... உன் திருப்திக்கு மறுபடி விசாரிக்கறேன்.

அடுத்த வாரம் நம்ம ஊர்ல திருவிழா வருதில்ல. அதுக்கு நீங்க இரண்டு நாளைக்கு முன்னடியே கண்டிப்பா இங்க வந்திடுங்க. குல தெய்வம் கோயில்ல பொங்கல் வைக்கறோம். அந்த சமயத்தில அரவிந்த் தம்பியை இங்க வரச் சொல்லிடலாம். நம்ம வாஸூவை அவரும் பார்க்கணுமில்லை.நீயும் தம்பியை பாரு. உனக்கும் அப்பதான் நிம்மதியாகவும் இருக்கும். நாங்க திருவிழாவுக்கு முறையா வந்து உன் வீட்ல அழைக்கறோம்.”

“சரிண்ணா. நான் பர்மிஷன் தான் போட்டுட்டு வந்தேன். ஸ்கூலுக்கு போகணும். பப்ளிக் எக்ஸாம் வருதில்ல. வேலை அதிகம்.”

“சுனில். மாலதியை நம்ம கார்ல கொண்டு போய் விட்டுட்டு வா...”

“சரிங்க மாமா... அம்மா வாங்க கிளம்பலாம்.” கார் ஓட்டிக்கொண்டே, “அம்மா... அரவிந்த் பத்தி கவலையே வேண்டாம். வாஸூவுக்கு பொருத்தமான மாப்பிள்ளை. நல்லா பார்த்துக்குவான். நாளைக்கு ஊர்லயிருந்து வந்திடுவான். அவன் கிட்டயும் பேசிடறேன். அவளை கண்டிப்பா படிக்க வைப்பான். நீங்க கவலையே படாதீங்க. என்று அரவிந்த் பற்றி நல்லவிதமாக அவர் காதில் போட்டு வைத்தான்.

மாலதியும் வாளாயிராமல் சந்தோஷியின் கணவர் முரளிதரன் மூலமாகவும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டார். தன் முன்னாள் மாணவன் சென்னையில் வேலையில் இருந்தான். அவன் உதவியையும் நாடினார்.

அனைவருடைய பதிலும் ஒன்றே தான், ’அருமையான ஃபேமிலி. பையன் சொக்கத் தங்கம். கௌசல்யா உன் பொண்ணை மகளா பார்த்துக்குவாங்க. தாராளமா வாஸூவை அரவிந்துக்கு கொடுக்கலாம்.. இதைவிட அருமையான மாப்பிள்ளை கிடைக்காது” என்பதை.மாலதியின் மனம் நிம்மதியானது...

காயூவின் பெற்றோர் மாலதியின் வீட்டுக்குச் சென்று திருவிழாவுக்கு முறையாக அழைப்பு விடுத்தனர். செக்யூரிட்டி மூலம் யோகேஷிக்கு தகவல் போனது. உடனே வீட்டுக்கு வந்தான்.

இன்று மாலதியே அவனை வரவேற்று ஹாலில் அமரச் செய்தார். வாஸந்தியும் அங்குதான் இருந்தாள்.

“வாஸந்தி... மாலதி அக்கா உன்னை கண்லயே காட்ட மாட்டேங்குது... ஆமா உனக்கு இந்த வருஷம் பரிட்சை எப்ப முடியுது...”

“மே ... மா...சம்...”

“அப்ப சரி. ஜூன்ல கல்யாணத்தை வெச்சுக்கலாம். நீ படிக்கறதைப் பற்றி அப்புறமா யோசிக்கறேன். உன் ப்ஃரண்ட் வீட்ல வந்து திருவிழாவுக்கு அழைச்சாங்களா? இது என்ன புதுசா?”

மாலதி, “இது ஒண்ணும் புதுப் பழக்கம் இல்லை தம்பீ. இங்க வந்ததில இருந்து ஒவ்வொரு வருஷமும் நாங்க போயிட்டு தான் இருக்கோம். என்னோட பிறந்த ஊரும் அதுதான்... அவ அம்மா மேகலாவும் நானும் ஃப்ரண்ட்ஸ்.ஒண்ணா சேர்ந்தே வளர்ந்தவங்க.. எங்க குல தெய்வமும் அங்கதான் இருக்கு.

இந்த வருஷம் சுனில் - காயூ கல்யாணம் உறுதியாயிருக்கு. அதனால நிறைய பேரை அழைச்சு விருந்து வைக்கிறாங்க. இதிலயெல்லம் நீ தலையிடாத தம்பி. எங்க பக்கம் - னு இருக்கிற ஒரே ஆதரவு அவங்கதான். அதனால கண்டிப்பா மூன்று நாள் நாங்க அங்க கண்டிப்பா போகணும்”. குரலில் சற்றே நீ கண்டிப்பு.

“ஓ. அப்ப சரி எங்களுக்கும் தானே மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. நானும் வரேன். சேர்ந்து போகலாம்... உங்க குலதெய்வத்துக்கு நம்ப செலவில பூசை, படையல், விருந்துன்னு ஜமாய்ச்சுடலாம். நம்ம பசங்ககிட்ட ஒத்த வார்த்தை சொன்னா போதும். வெட்டிட்டு வாடான்னா கட்டிட்டு வந்திடுவாங்க. அத்தனை ஃபாஸ்ட்.” சாவகாசமாகவும் தீர்மானமாகவும் பேசியவனைப் பார்த்து வாஸந்தியின் முகம் வெளிறிவிட்டது.

அவள் கையை ஆதரவாகப் பற்றிய மாலதி, “வாஸு உனக்கு மாடல் எக்ஸாம் நடக்குது. போய் படி. இனி நான் பேசிக்கிறேன். யோகேஷ் தம்பி இங்க பாரு... உன்னை திடுதிப்புன்னு நான் கூட்டிட்டுப் போக முடியாது. அது கிராமம்.. யார் என்னன்னு கேள்வி வரும். என்னால பதில் சொல்ல முடியாது.

எக்ஸாம் முடியற வரை நான் உன்னைப்பத்தி வெளியே யார்கிட்டயும் சொல்ல விரும்பல. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா பேசுவாங்க. அதே மாதிரி உன் ஆளை அங்க கூடவே அனுப்பற வேலையெல்லாம் வேண்டாம். நான் அந்த ஊர்க்காரியா இருந்தாலும் ஒரு பெரிய ஸ்கூல்ல பிரின்ஸிபாலா இருக்கேன். எனக்குன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கு. அதனால நாங்க மட்டும்தான் போகப் போறோம்”. கட் அண்ட் ரைட்டராகப் பேசினாலும் உள்ளூர உதறலாகத்தான் இருந்தது. சற்று நேரம் யோசித்துவிட்டு “நீ சொல்றதிலேயும் ஒரு நியாயம் இருக்கு. சரி ... மூணு நாள் தானே இருந்துட்டு வா. நாங்க கூட வரல.” பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டான். திருவிழாவுக்கு முன்பாகவே

சொன்னபடியே லீவு எடுத்துக்கொண்டு, இருவரும் கிளம்பினர். இவர்களுக்குத் தெரியாமல் யோகேஷின் ஆள் கிராமத்துக்கு வந்து உண்மையாகவே திருவிழா நடக்கிறதா என்று நேரில் பார்த்து விட்டுச் சென்றான். சுனில்.. காயத்ரி கல்யாண விஷயமும் உண்மை யா என்று விசாரித்து அறிந்து கொண்டான். அதன் பிறகே யோகேஷ் முழு மனதோடு இவர்கள் இருவரையும் செல்ல அனுமதித்தான்.

ஒரு நாள் விட்டு மறுநாள் சுனில் அரவிந்தை அழைத்து வந்தான். அரவிந்த் முதலில் இதற்கு சம்மதிக்கவில்லை. “என் அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும்போது எப்படிடா நான் இதற்கு சம்மதிப்பேன்.? இன்னும் ஒரு மாதம் சமாளிச்சுட்டா, நான் அவங்களோடவே முறையா பொண்ணு பார்க்க வரேன். அவங்க கிட்ட சொல்லிடேன். ப்ளீஸ்.”

சுனில், “ஆமாடா... அது வரைக்கும் அந்த யோகேஷ் கையைக் கட்டிட்டு சும்மா இருப்பானா..? அவனை ஏமாத்தறதும் சமாளிக்கறதும் ரொம்ப கஷ்டம் அரவிந்த்.நேத்து, நம்பிக்கையில்லாம இங்க ஆளை அனுப்பி, எல்லாத்தையும் உண்மையான்னு விசாரிச்சிருக்கான். ரொம்ப கிளவரா இருக்கான். விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான். நீ சொல்ற மாதிரி விஷயம் தெரியாத மாதிரி பார்த்துக்கறது கஷ்டம் அரவிந்த்...

உன்னை வாஸூ கூட சேர்த்து வைக்க இதவிட நல்ல சான்ஸ் இனி கிடைக்காதுடா.”

“என்னமோ எனக்கு இந்த ஏற்பாடே பிடிக்கலை.நான் செய்யறது ரொம்ப சுயநலமா தெரியுது. அப்பா ஐ.சி.யூல இருக்கார்டா. நீ எல்லா ஏற்பாடும் என்னைக் கேட்காமலே செஞ்சு என்னை சிக்கல்ல மாட்டி விட்டிருக்க. இனி நான் மறுத்துப் பேசினா என் மேல ஒரு பேட் இம்ப்ரஷன் கிரியேட் ஆயிடும். ஆனா முழுமனதா நான் வரலை. இத்தனை முயற்சி எடுத்து நீங்க இத ஏற்பாடு பண்ணியதால தான் வரேன்.” என்று அவனை முறைத்தான். மறுநாள் சுனிலோடு

வீட்டிற்குள் நுழைந்ததும், அனைவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்த அரவிந்தைப் பார்த்ததுமே மாலதிக்குப் பிடித்து விட்டது.சுனிலின் நண்பனாக ஏற்கனவே சிலமுறை இங்கு வந்து போனதால் எல்லாருக்குமே அரவிந்தை தெரிந்திருந்தது. காயூ, வாஸந்தியை அழைத்து வந்தாள். பட்டுப்புடவையில் எளிய ஒப்பனையில் வந்து கரம் குவித்த வாஸ்ந்தியை ஏறிட்டவன், திகைத்து ஏன் அதிர்ந்தும் கூடப்போனான்.

சுனிலிடம்” சுனில்..! நான் வசு கூட தனியா பேசணும். சொல்லி ஏற்பாடு செய்.என் வசுவாடா இது!”புலம்பினான்.

பெரியவர்களிடம் சம்மதம் வாங்கி, வாஸந்தி காத்திருந்த அறைக்குள் அரவிந்தை அனுப்பிவிட்டு சுனிலும் காயத்ரியும் வெளியே காத்திருந்தனர்.

உடல் பாதியாக மெலிந்திருக்க, சோர்ந்து போய் கண்களில் மட்டுமே உயிரைத் தேக்கி வைத்திருந்த வசுவைப் பார்த்ததும், உயிர் துடிக்க தன் இரு கைகளையும் விரித்தான். அவனிடம் வந்து தஞ்சமடைந்த வசு... கண்களில் நீர் வழிய அரவிந்தை இறுக அணைத்துக் கொண்டாள்.

இதுவரை அவன் மனதில் சுழன்று வந்த பெற்றோரின் ஞாபகம் புறந்தள்ளப்பட்டு, வாஸந்தியே முழுவதுமாக அவனை ஆக்கிரமித்தாள்..

“வசு..! மை லவ். ஏண்டா இப்படி இருக்க..? உன்னை அடையாளமே தெரியாத அளவு இளைச்சு போயிருக்க? அதான் நான் வந்திட்டனில்ல. இனி எல்லாம் நான் பார்த்துக்கறேன்”. குரல் கரகரத்தது.

வசு அவன் மார்பில் சாய்ந்து விசும்பினாள். “அர்வி. நம்ம மேரேஜ் நல்லபடியா நடக்கும்தானே. எனக்கு பயமா இருக்கு. உங்களைப் பார்க்கவே முடியாதோன்னு தவிச்சு போனேன் தெரியுமா... நீங்க இல்லேன்னா செத்திருவேன் அர்வி.”
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,121
679
113
Ariyalur
சூப்பர் சூப்பர் சுனில், காயூ ,. அவங்க ஐடியா செம, இதில் ஜாதக பொருத்தம் extraordinary, அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️