• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 12

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 12

வசு அவன் மார்பில் சாய்ந்து விசும்பினாள். “அர்வி. நம்ம மேரேஜ் நல்லபடியா நடக்கும்தானே. எனக்கு பயமா இருக்கு. உங்களைப் பார்க்கவே முடியாதோன்னு தவிச்சு போனேன் தெரியுமா... நீங்க இல்லேன்னா செத்திருவேன் அர்வி.”

தன் விரல்காளால் அவன் இதழ்களை மூடி, கண்டிப்போடு “ஷ் . என்ன பேச்சு வசும்மா... சாகறதுக்கா லவ் பண்ணிணோம். அழாதே... நான் இருக்கேன் உனக்கு... யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ எப்பவும் போல வந்து எக்ஸாம் எழுது ... என்னிக்கு முடியுது..?

“ஏப்ரல் தேர்ட். ஆனா அந்த யோகேஷ் கிட்ட ‘மே’ ன்னு சொல்லிருக்கேன்.

“நல்லது. நான் பாத்துக்கறேன். நீ ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கனும். இல்லேன்னா, நான் பொண்ணு ரொம்ப நோஞ்சானா இருக்கு.எனக்கு வேண்டான்னு சொல்லிருவேன்.” அவளின் இடுப்பை வளைத்து அணைத்து நெற்றியில் முட்டினான்.

விரலை நீட்டி எச்சரித்த வாஸந்தி, “ஒ. சொல்லிடுவீங்களா... சொல்லுங்க பார்க்கலாம்.கொன்னுடுவேன்…!” கண்களில் நீர் வழிய சிரித்தாள்.

“இது தான் என் வசு. அந்த யோகேஷைப் பத்தி விசாரிச்சேன். ஹார்ம்லெஸ் தான்... உங்க அப்பா இருக்கும் போதே நாலு ரவுடிகளை சேர்த்துக் கிட்டு கொஞ்சம் கோல் மால் எல்லாம் பண்ணி, பெரிய ஆளா ஆயிட்டான். பெண்கள் பழக்கமே அறவே கிடையாது. அதனாலே நீ பயப்பட வேண்டாம்..

சீக்கிரமா நீ மிஸஸ். அரவிந்த் ஆயிடுவ. அதுக்கு நான் பொறுப்பு. என் வசு சிரிச்சுக்கிட்டே இருந்தாதான் பிடிக்கும். அடுத்த வாரம் வழக்கம்போல கான்டீனில் சந்திக்கலாம். அது சரி உனக்கு மாப்பிள்ளைப் பிடிச்சிருக்கானு சொல்லவேயில்லையே” கண் சிமிட்டினான்.

வெட்கத்தில் முகம் சிவக்க அவன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொண்டாள் அவனுடைய வசு…!.

காயூ “ஏய் வாஸு. அண்ணாவை வெளியே அனுப்பு. இதுக்கு மேலே சமாளிக்க முடியல. இங்க எல்லோருடைய கண்ணும் மூடின கதவு மேலேதான் இருக்கு. உன் ரொமான்சை இதோட நிறுத்து. இங்க என் சுனில் மாமா காதுல புகை வருது.” என்றதும் அரவிந்த்

“சரிடா ஒழுங்கா படிக்கணும்” அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தவனின் முகம் புன்னகையில் மலர்ந்து இருந்தது. தன்னவளின் விழி நீரும் ஓய்ந்த தோற்றமும் அவன் முதலில் தீர்மானித்த முடிவையே புரட்டிப் போட்டது.

மாலதியோ பதற்றத்தோடு, “சுனில் வாசீ. மாப்பிள்ளைகூட ஒழுங்கா பேசினாளோ என்னவோ. அவர்கிட்ட போய் பிடிச்சிருக்கான்று கேளு.” என்றதும் சுனில் சிரிப்பைஅடக்கிக் கொண்டு மாலதியை பரிதாபமாகப் பார்த்தான்.

அரவிந்திடம், “எல்லாம் உனக்கு நேரண்டா…! உனக்கு மாப்பிள்ளை அந்தஸ்து ! நீ என்னவெல்லாம் சொல்லணுமோ அதை உன் திருவாயாலேயே அவங்கிட்ட சொல்லிடு” என்று கடுகடுத்தான்.

“அத்தை உங்க பொண்ணு வாஸந்தியை எனக்குப்பிடிச்சிருக்கு. எதுக்கும் அவங்ககிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுருங்க..! உங்க எல்லோருக்கும் சம்மதம்னா எனக்கும் சந்தோசம். அம்மா அப்பாகிட்ட பேசணும்.அவங்களுக்கு கூட சொல்லாமத்தான் இன்னைக்கு இங்கே வந்திருக்கேன். இப்ப எனக்கு எக்ஸாம் தொடங்கப் போவுது. .. அது முடிஞ்சதும் ஊர்ல என் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லி அவங்களோட வந்து டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன். அவங்களுக்கு நான் ஒரே பையன் இப்ப அவங்க இருக்கிற நிலையில என்னால் மேரேஜ் பத்தி பேசமுடியாது. கொஞ்சம் டைம் குடுங்க.”

என் படிப்பை முடிச்சுட்டு, என் அப்பாவோட பிஸினசை நான் ஏற்று நடத்தப்போறேன். நாங்க மிஷின் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிறோம். அது இல்லாம எனக்குத் தனியா நானே ஒரு பிஸினஸ் ஆரம்பிக்கற ஒரு ஐடியாவும் இருக்கு. வாஸந்தி கல்யாணம் முடிந்து என்ன படிக்க ஆசைப்படறாங்களோ படிக்கட்டும். அது என் பொறுப்பு.எனக்கு பெரிய ஹாஸ்பிடல் ஒண்ணு கட்டி, இல்லாதவங்களுக்கு இலவசமா உயர்தர சிகிச்சை குடுக்கணும்னு ரொம்ப ஆசை.

வாஸந்தி டாக்டர் ஆயிட்டா அவங்களே அதைப் பாத்துக்குவாங்க. என் அப்பா கொஞ்சம் தேறிட்டா, மேரேஜ்க்கு நாள் குறிச்சுடலாம். என் விருப்பத்துக்கு மாறா அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க. எனக்கு நூறு சதவித நம்பிக்கை இருக்கு. நான் கிளம்பறேன்.” மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவித்தான். அதே சமயம் சுனில், காயூ பெற்றோரின் சம்மதத்தையும் கேட்கத் தவறவில்லை.

வாய் பிளந்து அவன் பேச்சைக் க«ட்ட சுனில், “உலக நடிப்புடா சாமி. நான் லேசா கோடு போட்டேன். ஆனா அதுல 4 லேன் என். ஹெச் சே போட்டுட்டே. கில்லாடிடா நீ. எப்படிடா.?”மாய்ந்து போனான் அரவிந்த் மௌனமாக ஒரு வசீகர புன்னகையை சிதறவிட்டு, சுனிலை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

“மை டியர் ஃபிரண்ட் ... உன் கேள்வி எல்லாத்துக்கும் ஒரே பதில். லவ். ,.. பியூர் லவ். அது எல்லாத்தையும் சாதிக்கும்டா. நான் முதல்ல இப்ப மேரேஜ் வேண்டாம்னு சொல்லத்தான் இங்க வந்தேன். ஆனா என் வசு முகத்தைப் பார்த்ததும் என் தீர்மானத்தை மாத்திக்கிட்டேன். அவ எனக்கு வேணுண்டா. இப்ப சந்தோஷமான அவ முகத்தைப் பார்க்க நிறைவா இருக்கு.

ஆனா இதுக்கு முழு தேங்க்ஸும் உனக்கும் காயூக்கும் தான் சொல்லணும். அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கீங்க. நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். ஆனா இப்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் சுனில்” உணர்ச்சி வசப்பட்டான்.

“நண்பேண்டா ...!” சுனிலும் சிரித்தான். “நாங்க முழு பூசணிக்காயை ஒரே ஒரு சோத்துப் பருக்கையில மறைச்சுட்டோமில்ல….! எனக்கு ரிஸ்க்னா ரஸ்க் சாப்பிடற மாதிரி தம்பி. என்ன நான் சொல்றது சரிதானே காயூ.” என்று காயூவைப் பார்த்து கண் சிமிட்டினான்.

அதன்பிறகு வந்த நாட்கள் காற்றாய்ப் பறக்க, மாலதியும் வாஸந்தியும் முழுவதுமாக யோகேஷின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். வாஸந்தி எங்கு சென்றாலும் யோகேஷின் கார் தினமும் அவளை பின் தொடர்ந்தது. மதியம் கேன்டீனில் மட்டுமே அரவிந்தால் அவளிடம் பேச முடிந்தது. மாலதியின் சம்மதத்தோடு அரவிந்த், வாஸந்திக்கு செல்போன் பரிசளித்தான். அவனுக்கு படிப்பதற்கு நிறைய இருந்ததால் செல்போனில் மட்டுமே பேச முடிந்தது. அரவிந்த் தன் தாயிடம் விஷயத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ஆனால், கடந்த மூன்று மாத காலமாகவே அவர் கவலையோடும் எப்போதும் ஏதோ யோசனையிலே இருப்பதாக தோன்றியது. தன் தந்தையிடமும் தெளிவில்லை. கௌசல்யாவிடம் கேட்டபோது,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கண்ணா. இந்த ஒரு வருஷமா அப்பா என்னையும் ஆபீஸ் கூட்டிட்டுப் போறார். காலைலை மட்டும் கூடப்போவேன். அவருக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்தானே. அதனால கொஞ்சம் டயர்டா இருக்கும் அதுவும் இப்ப இரண்டு பேருமே போறதில்ல. நம்ம ஜி.எம். ரொம்ப விசுவாசமானவர். இருந்தாலும் நாம போறது மாதிரி வராதில்ல. அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு. உனக்குதான் இந்த மாசம் படிப்பு முடிஞ்சிடுமே. அப்புறம் நீ வந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டா எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். இப்போதைக்கு உன் கவனம் முழுக்க படிப்பபில் மட்டும்தான் இருக்கணும்.” என்று தலையை வருடிய தாயை அணைத்துக்கொண்டான். இந்த முறையும் அவனால் வாஸந்தியைப் பற்றி பேச முடியாமலே போனது. இனிமேல் அவளைப்பற்றி பேச சந்தர்ப்பமே வரப்போவதில்லை என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை பேசியிருக்கக்கூடுமோ என்னவோ….?

அதன்பிறகு நான்கு பேரின் கவனமும் படிப்பில் குவிந்தது. வாஸந்தியின் படிப்பு ஆர்வம் அறிந்த யோகேஷ் தன் பாதுகாப்பை தளர்த்திக்கொண்டான். வாஸந்தியின் பின்னே சென்றது நின்று போனது.

அன்று வீட்டுக்கு வந்த யோகேஷ், “மாலதி அக்கா ... நம்ம வாஸந்திக்கு எக்ஸாம் எப்ப முடியுது?”

“மே கடைசியிலே”

“அப்ப சரி... நான் ஜூன் முதல் வாரமே அக்கா யாமினியோட வந்து பரிசம் போடறேன். உடனே கல்யாணத்தையும் அந்த மாசமே வர்ற மாதிரி நான் பாக்கறேன். எங்க போனாலும் வேலையே ஓடமாட்டேங்குது. நம்ம சொத்து நம்ம கிட்ட வந்துட்டாதான் நிம்மதி. இந்த வருஷம் நல்லா படிச்சு பரிட்சை எழுதட்டும். அடுத்த வருஷப்படிப்பு தேவையான்னு யோசிக்கறேன். ஏஞ்சொல்றேன்னா ... என் வூட்டுக்கு வந்தப்புறம் வாஸந்தி மகாராணி இருப்பா. அவ இன்னொருத்தன்கிட்ட வேல செஞ்சா என் கௌரவம் என்னாகிறது? நல்லா பெரிசா நாலு ஹாஸ்பிடல் கட்டிப்போட்டா பத்து, நூறு டாக்டருங்களை வேலை வாங்கி, கால் மேலே கால் போட்டுகிட்டு அதிகாரம் பண்ணினா தான் ஜம்முன்னு இருக்கும். அதான் யோசனையா இருக்கு. அதைப் பின்ன பார்த்துக்கலாம்.

நான் எதுக்கு வந்தேன்னா, இந்தா இதுல பத்து லட்ச ரூபா இருக்கு. கையில வாங்கு மொதல்ல. வாஸந்தி எதெல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்றாளோ அதெல்லாம் வாங்கிடு. புடவை, நகை, சுடிதார்னு எது கேட்டலும். உனக்கு புடிச்சதையும் வாங்கு. இனி கணக்குப்பார்த்து செலவு செய்ய வேண்டாம். என் ரேஞ்சுக்கு நானும் கொஞ்சம் நகை வாங்குறேன். என்ன? இன்னும் ஐம்பது நாள்கூட இல்லை. ஜூன் நாலு நல்ல முகூர்த்தம்னு ஜோசியக்காரன் சொன்னான். சீக்கிரமா வேலையாகணும் பாரு. என்ன.. நான் சொல்றது சரிதானே?” என்றதும் மாலதி பயந்து போனார். அவனது வேகமும் விவேகமும் கலவரமூட்டியது. நம்ம வேலை முடியற வரை இவனிடம் பணிந்துதான் போக வேண்டும் என்று இவரின் அனுபவம் அறிவுறுத்த,” தம்பி! உன் ஆசை புரியுது.ஆனா, இப்ப பணத்தை எடுத்து உள்ள வை. வாஸு எக்ஸாமுக்கு படிக்கறா.வெளியே கடை கண்ணிக்கெல்லாம் போக நேரம் கிடையாது.ஸ்கூல்ல டென்த், ப்ளஸ் டூ பரிட்சை வரப்போகுது. என்னாலும் நகர முடியாது. இத்தனை பணத்தை வீட்ல வெச்சிருக்க எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ்..புரிஞ்சுக்க.” கெஞ்சினார்.யோகேஷுக்கு பெருமையாக இருந்தது.

“அதுக்கு ஏன்க்கா இத்தனை கெஞ்சற. சரி விடு. நானே அப்புறமா எல்லா கடைக்கும் உங்களை கூட்டிட்டு போறேன்.சரியா? இதுக்கே இப்படி பயந்தா உன்னை என்னதான் பண்றது.?நல்லா செலவு பண்ண பழகிக்க.இனி இது தான் உன் லைஃப்.கல்யாணத்துக்கு பிறகு உன்னையும் என் கூட கூட்டிட்டு போகப் போறேன்.என்ன பாக்கற?வாஸந்தி சந்தோஷப் படுவாங்கறதுக்காக மட்டும் இல்ல.நானும் ரொம்ப சந்தோஷப்படுவேன். பாசமும்,பிரியமுமா இருக்கற மனுஷங்களோட சேர்ந்து இருந்த ஞாபகம் கூட எனக்கு இல்லை.

என் அக்கா பணத்துக்கு அடிமையாகி ,அது பின்னால போயிட்டா.அவளும் என் மேல பணமழை பொழிஞ்ச அளவு பாச மழை பொழியலை. அவளோட உலகமே தனி. எனக்கு விபரம் தெரியறதுக்கு முன்னாலயே என் அம்மா, அப்பாவை இழந்துட்டேன். வறுமையிலயே புரண்டு எழுந்த எனக்கு, உன் புருஷன் அத்தானா வந்ததும், கையில பணம் கொழிச்சுது.புதுசா பணம் கிடைச்ச பிறகு புத்தி பிரண்டிருச்சு. அத்தான் கூட, ‘நல்லாப் படிடா –ஒழுக்கமா இரு’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. நான் தான் கேட்கலை.பணத்தை துரத்தி ஓடிகிட்டே இருக்கேன். இன்னும் ஓட்டம் நிக்கலை. அப்பதான் தேவதையாட்டம் வாஸந்தி என் கண்ல பட்டா.மனசில சின்னதா ஒரு சலனம்.பணத்தையும் தாண்டி, எனக்கு புடிக்கற விஷயம் ஒண்ணு இருக்குன்னு புரிஞ்சுது.



என் மனசு இவகூட சேருடான்னு அதட்டுச்சு. நீ அவ மேல பாசத்த கொட்ற. இனி அதான் எனக்கும் இருக்கற மிச்ச காலமாவது நல்ல மனுஷங்களோட வாழற யோகம் கிடைக்கட்டுமேன்னுதான் ஆசைப்படறேன். ஆனா ஒண்ணுமட்டும் சத்தியமா சொல்றேன். எப்பவுமே பொண்ணுங்க பின்னாடி மனசு போனதே இல்லை. மொத என் கவனத்தில பட்டது வாஸந்திதான். எங்க கல்யாணத்துக்கு பிறகு நீயும் எங்களோட வரத்தான் வேணும் இப்ப நான் குடிக்கிறதைக்கூட கொறைச்சுகிட்டேன். கொஞ்ச நாள்ல விட்டுருவேன். என் மேலே நம்பிக்கை வை. எல்லாம் உன் மனசு போலவே நடக்கும்” என்று நீளமாகப் பேசியதில் அவனின் இன்னொரு பரிணாமம் புலனானது..

மாலதி திகைத்துப் போய் அவனையே பார்த்தார். “என்ன அக்கா அப்படி பார்க்கற.. இத்தனை பெரிய ரவுடி கிட்டயிருந்து இந்த மாதிரி பேச்சான்னு தோணுதா? நானும் கொஞ்சம் நல்லவன் தான். நான் பாசத்துக்காக ரொம்ப ஏங்கினவன் அக்கா. அது கிடைக்கல..! ஒரு சின்ன உதவி செஞ்சதுக்காக ஒருத்தன் என்னை புகழ்ந்து பேசினான். மனசார வாழ்த்தினான்.எனக்கு புடிச்சிருச்சு. அதனால அப்படி இருக்கற பத்து பேரை நானா சேர்த்து, என் கூட வெச்சிருக்கேன். என் கிட்ட நிறைய பணம் இருக்கு. அதில கொஞ்சம் எடுத்து அவங்களுக்கு கொடுக்கிறேன்.. அவங்க என்னை புகழறதோட மட்டுமில்லாம என்கிட்ட விசுவாசமாகவும் இருக்காங்க. எனக்கும் இப்படி இருக்கறதுதான் புடிச்சிருக்கு.. அப்படியே பதினஞ்சு வருஷம் ஓடிப் போச்சு.. சரிக்கா.. எஞ்சோக கதையை உன் கிட்ட சொல்லி போரடிச்சுட்டனா.. அதை மறந்திடு. இப்ப யோகேஷ் ரொம்ப ஹேப்பி... சரி வரட்டா.. பரிட்சை முடிஞ்சுட்டா சொல்லு. மறுபடி வரேன்.”

அவன் பேசப் பேச மாலதியின் மனம் கனத்தது.. அவளையறியாமலேயே “இரு தம்பி, டிபன் கொண்டு வரேன். சாப்பிட்டுட்டு,காப்பி குடிச்சிட்டு போகலாம்.. “ வேகமாக சமையலைக்குள் புகுந்தார்.. உள்ளிருந்து யோகேஷ் பேசுவதைக் கேட்ட வாஸந்தியும் குற்றவுணர்ச்சியில் தவித்துப் போனாள்

டிபனோடு வந்த மாலதியிடம். “என்னக்கா, டிபன்...புதுசா இருக்கு. என் மேல வந்த பரிதாபத்தினாலா.. இல்ல இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு மரியாதை செய்யவா..” என்று கிண்டலடித்துக் கொண்டே டிபனை மிச்சம் வைக்காமல் காலி செய்தான்.

சற்றே புன்னகை மலர, மாலதியும், “இரண்டுமே இல்லை... அக்கான்னு வாய் நிறைய கூப்பிடறியே அதுக்காகத் தான் டிபன்” என்று முதன் முறையாக அவனிடம் சகஜமாகப் பேசினார்.

அவன் கிளம்பிச் சென்றதும், அவர் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.. இத்தனை நாள் இவன் வெளித் தோற்றத்தைப் பார்த்து நாமே இவனைப் பற்றி ரவுடி என்று தவறாகக் கணித்து விட்டோம் பாவம்.. இவன் மனதில் எத்தனை வேதனையைப் போட்டு அடக்கி வைத்திருக்கிறான் இன்று என்னிடம் பேசியப்போது அத்தனையும் எரிமலையாய் எவடித்துச் சிதறி விட்டது. பாவம்... ஒரு அனுபவம் வாய்ந்த ஆசிரியராக என்னால் யோகேஷின் மனநிலையை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. பாவம்... இவன் கெட்டவன் அல்ல. சூழ்நிலையால் அதுபோல ஆக்கப்பட்டவன்.

என் மகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்த முடிவு சரியா..? இவனிடம் எத்தனை விஷயத்தை மறைத்து விட்டோம். அவன் எங்களை அதட்டி அதிகாரம் செய்ததை விட வேறு எந்த தீங்கும் நினைக்கவில்லையே..!

ஒரு முழுமையான வாட்டசாட்டமான ஆண்மகனை ஏமாற்றி துரோகம் செய்வது சரியா’ என்ற குற்றவுணர்வு மாலதியை ஆட்டிப் படைத்து. அவன் பேசிச் சென்ற பிறகு யோகேஷை மோசமானவனாக உருவகிக்கவே முடியவில்லை.. ஆனாலும் விஷயம் தெரிந்தால் திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்ற பயம் ,அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. வாஸந்தியின் மனதில் அரவிந்தின் உருவம் பதிந்து போய், உற்சாகமாக வளைய வருபவளை ஏமாற்றவும் வழியில்லாமல் தவித்தார். தினமும் மாப்பிள்ளையோடு பேசும் போது புன்னகையில் மலரும் விழிகளை கண்ணீரில் மூழ்க விட மனம் வரவில்லை. இரவு மூழுவதும் யோசித்து விடிந்ததுமே காயூவை அழைத்தார்.

“காயூ..! யோகேஷ் நேற்றுதான் வந்துட்டு போனான். ஜூன் நாலாம் தேவி முகூர்த்தம் வைக்கப் போறாதா சொல்றான். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. அவனோட பண பலத்துக்கும், படை பலத்துக்கும் முன்னால நாம ஒண்ணுமே இல்லை. அதனால சுனிலை மாப்பிள்ளை கிட்ட பேச்ச சொல்லு. அவர் எக்ஸாம் ஆரம்பிக்கறத்துக்குள்ள மேரேஜ் முடியணும். இனிமேல தள்ளிப்போட முடியாது. ஒரு கோயில்ல வச்சு தாலி மட்டும் கட்டினா போதும்.. இவ நம்ம வீட்டிலேயே இருக்கட்டும். அவங்க பேரண்ட்ஸ் சம்மதத்தோட வந்து முறையா எப்ப வேணா கூட்டிட்டு போகட்டும்.. எப்படியாவது பேசி சம்மதிக்க வை.. இங்க வீட்ல வைச்சு பேச முடியாது. நீயும் சுனிலும் தான் பேசணும்.

அவர் வீட்டில் இன்னும் சொல்லக் கூட இல்லை. ஆனாலும் எனக்கு வேற வழி தெரியலை.”

“புரியுது ஆண்ட்டி.. கண்டிப்பா பேசறோம்.. நைட் செல்போனுக்கு கூப்பிடறேன்.. தைரியமா இருங்க.”

மறுபடி அரவிந்தின் வீட்டிலேயே ஒரு குட்டி மாநாடு நடந்தது.

சுனில், “அரவிந்தா... ஒரு அம்மாவா அவங்க கவலைப்படறதில நியாயம் இருக்குடா. யோசிச்சுப் பாரு... வாஸந்தியும் காயூ கிட்ட தினமும் புலம்பறா. சரியா சாப்பிடறதில்லை. பாவம்தானேடா.”

“எல்லாம் சரிதான் சுனில். ஆனா மேரேஜுங்கிறது நம்ம லைஃப்ல ஒரே ஒரு முறை நடக்கற விஷயம். உடனே முடிவெடுக்க முடியலை. எங்கப்பா நல்லா இருந்தா இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்கும்., என் நிலைமையும் யோசிச்சுப் பாருடா... அப்பாவை ஐ.சி.யூ.ல வச்சிகிட்டு என்னால எப்படிடா சம்மதிக்க முடியும்.? என் மேரேஜ் பத்தி அம்மா பெரிய கனவே கண்டுகிட்டு இருக்காங்க. இப்ப எப்படி நான்… ப்ளீஸ் டா... ஒரு பத்து நிமிஷம் டைம் குடு.கணேஷ் அண்ணா சூடா டீ கொண்டு வசாங்க...”

இந்த மாதம் இருபதாம் தேதி வரை அரவிந்துக்கு எக்ஸாம் இருக்கிறது. அதன் பிறகு உடனே ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை. அங்கோ தந்தையின் நிலைமை சரியில்லை என்று அவன் உள் மனது எச்சரித்துக் கொண்டேயிருந்தது... சூடான டீ யை அருந்தியபின் மூளை சுறுசுறுப்படைய அவனால் யோசித்து தெளிவான முடிவை எடுக்க முடிந்தது.
தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,121
679
113
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️யோகேஷும் நல்ல பையன் அர்வியும் நல்ல பையன், என்ன பண்றது காதல் ன்னு வந்துட்டா எல்லாமே மாறிடுதே 🙄🙄🙄🙄🙄🙄