• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 2

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India
அத்தியாயம் 2

மறுத்து ஏதோ சொல்ல முயன்றவளை அவனின் கண்டிப்பு கலந்த ஒரே பார்வை அடக்கியது.

“வா...”

காரை நெருங்கியதும், போர்ட்டரிமிருந்து லக்கேஜை டிரைவர் வாங்கி டிக்கியில் அடுக்கினார். வாஸந்தியோடு பின் சீட்டில் ஏறி அமர்ந்து, அவளை தன் தோளில் சாயத்துக் கொண்டான்.

“அண்ணா... கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்..”

“சரிங்க தம்பி... போயிடலாம்” என்றதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை. கார் சாலையில் சீறிப் பாய்ந்தது.

நகரின் நடுவே எழும்பியிருந்த பங்களாவின் போர்ட்டிகோவில் கார் நின்றதுமே, டிரைவர் மாணிக்கம் ஓடி வந்து கதவை திறந்தார். காரிலிருந்து இறங்கிய அரவிந்த், வாஸந்தியை ஒரு குழந்தையைப் போல தன் இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

கீழே இருந்த விருந்தினர் அறையில் அவளைப் பூப்போல படுக்க வைத்தான். திரைச் சீலைகளை இழுத்து மூடி, ஃபேனை ஓட விட்டு, இரவு விளக்கையும் ஒளிரச் செய்தவன், சத்தம் செய்யாமல் அறைக் கதவை சாத்திவிட்டு அவளருகில் அமர்ந்தான்.

ஐந்தரை மணியாகியும் இன்னும் ஆதவனின் கதிர்கள் முழுவதுமாக வெளிவராமல், இருள் சூழ்ந்திருந்தது. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்ட அரவிந்த், “வாஸந்தி.. ஸாரி ஃபார் எவ்ரி திங். இனி எல்லாம் சரியாயிடும். நீ நம்ம வீட்டுக்குத் தான் வந்திருக்க. உன்னை அம்மா பார்த்துக் குவாங்க.” என்று மெதுவாக முணு முணுத்து விட்டு, அவளுக்கு போர்த்தி விட்டு வெளியே வந்தான். சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த கமலாவிடம்,

“அக்கா!” அம்மா தூங்கறாங்களா? அவங்க தானாக எழுந்துக்கட்டும். எழுப்ப வேண்டாம். நான் பிரஷ் பண்ணிட்டு வந்திடறேன். அஞ்சே நிமிஷம். சூடா ஒரு கப் காப்பி மட்டும் போடுங்கக்கா...” இரண்டிரண்டு படிகளாகத் தாவி மாடியேறி தன் அறைக்குள் நுழைந்தான். ஹீட்டரைட் போட்டு, பல் துலக்கி, குளித்தும் முடித்து விட்டு, லுங்கி டீ ஷர்ட்டுடன் தலையை துவட்டிக் கொண்டே கீழிறங்கினான்.

பூஜையறைக்குள் நுழைந்து கண் மூடி நின்றவனின் மனம் லேசானது. கமலாம்மா கொடுத்த காபியை பருகியவாறு,

“அக்கா! ஒரு கப் பால் ப்ளீஸ். கொஞ்சம் சூடு குறைவா கொண்டு வாங்களேன்.

வாஸந்தியின் அருகில் அமர்ந்து, அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, பாலை பருகச் செய்தான். விடிந்த பிறகும் கூட தான் கொடுத்த தூக்க மாத்திரையின் வீரியம் குறையாமல், அவளை ஆழ்ந்த நித்திரைக்கு இட்டுக் சென்றிருந்தது. டிஷ்யூவால் அவள் வாய் துடைத்து, நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஒற்றியெடுத்தவன், அவளை மீண்டும் படுக்கையில் கிடத்தினான். அவள் இருந்த மனநிலையில் இந்த தூக்கம் அவசியம் என்று தான் அவள் கைப்பையில் இருந்த தூக்க மாத்திரை ஒன்றை அவளுக்கு கொடுத்திருந்தான். இதுவரை அவனிடமிருந்த குழப்பங்கள் விலகி ஓடியிருந்தன. இனி எடுக்க வேண்டிய முடிவுகளை மனம் பட்டியலிட, தெளிவானான். தன் அன்னையை பார்த்து பேச வேண்டியதை முடிவு செய்தவனாய் வெளியே வந்தான்.

மணி ஏழானதும் தங்கள் ஃபேமலி டாக்டர் புகழேந்திக்கு போன் செய்து மெல்லிய குரலில் பேசினான். தாயின் அறையில் ஒலித்த இசையைக் கேட்டதும், அவர் அறைக்குள் நுழைந்தான். எம்.எஸ். சின் குரலில் தன்னை மறந்து வயித்து இருந்த கௌசல்யா தன் மகனைப் பார்த்தும் முகம் மலர்ந்தவராய்.

“அர்வி கண்ணா..! வந்தாச்சா.. ரொம்ப நேரம் நான் தூங்கிட்டேன் போல. குளிச்சிட்டியா? இங்க வந்ததும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமேப்பா.. என்ன அவசரம்? என்னை ஏன் எழுப்பலை. காபி குடிச்சியா?” உன் ஃப்ரண்ட்ஸ் என்ன சொன்னாங்க. சுனில் எப்படி இருக்கான்? வீட்டுக்கு வரச் சொன்னியா? அவனை பேசவே விடாமல் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனவரைப் பார்த்து சிரித்த அரவிந்த், அவரை தோளோடு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

“ஸ்டாப்... ஸ்டாப்.. அம்மா நான் அஞ்சு மணிக்கு தான் வந்தேன். அப்ப நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. எழுப்ப மனசு வரலை. எனக்கு தூக்கம் வராததால, கமலாக்கா கிட்ட சூடா காபி வாங்கி குடிச்சாச்சு. உங்களுக்கும் கொண்டு வரச் சொல்றேன். சுனில் பத்தி பேச நிறைய இருக்கும்மா. நிறைய போட்டோஸ் இருக்கு பார்க்க.. மெதுவா காண்பிக்கிறேன். விளக்கம் போதுமா?”, சிரித்தான்….

கமலா கொண்டு வந்த காபியில் அவனும் ஒரு கப் எடுத்துக் கொண்டான். அமைதியாக யோசித்து விட்டு, எப்படி ஆரம்பிப்பது என்பதை தீர்மானம் செய்தவனாய், அவர் காலடியில் வந்து அமர்ந்தான். அதன் பின் அரவிந்துக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கௌசல்யாவை ஏறிட்டவன்.

“அம்மா! உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். நான் ஒரு பெரிய தப்பு செஞ்சிட்டேம்மா. என்ற குரலில் கௌசல்யா கலங்கித் தான் போனார். தழுதழுத்த அவள் குரலிலிருந்தே விஷயம் பெரிது என்றும் புரிந்து கொண்டார்.

அரவிந்த பேசப் பேச அதிர்ச்சியில் உறைந்து போனவரால் எதுவுமே பேச இயலவில்லை. திகைத்துப் போய் அவனையே உறுத்து விழித்தார். அவன் பேசி முடித்ததும்,

“கண்ணப்பா.. நீயா.! நீயா இப்படி செஞ்சே... நான் ...எ..ன் காதில் விழுந்ததெல்லாம் உண்மையா... என் பையன் ரொம்ப ஒழுக்கமானவன்னு நினைச்சேனே. அவனுக்கு ஒருசின்ன தப்பு கூட செய்யத் தெரியாதுன்னு பெருமையா இருந்தேனே. அதெல்லாம் பொய்யா... இத்தனை பெரிய கொடுமையை... நீயா... அந்த... பொண்ணு இப்ப எங்க இருக்கா?” என்றவரின் குரலில் இருந்த வலி அவனை சுட்டுப் பொசுக்கியது.

தன்னை அறைந்திருந்தால் கூட மனதில் இத்தனை பாரம் ஏறியிருக்காது. கொஞ்சமாவது ஆறுதலாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்தவனால் அவரை ஏறிட்டுப் பார்க்கவும் துணிவில்லாமல் போனது.

“கீழே இருக்க கெஸ்ட் ரூமில் தூங்கிட்டு இருக்காம்மா. டாக்டர் அங்கிள் எட்டு மணிக்கு வர்றதா சொன்னார். ஃபீவர் குறையவே இல்லம்மா. நைட் ரொம்ப அனத்தி

கிட்டே இருந்தா. கண்ணே விழிக்கல. தப்பு செய்து தாயிடம் மாட்டிக் கொண்ட சிறுவனைப் போல குரல் மெலிந்து ஒலித்தது. கௌசல்யாவோ சற்றும் இளகாமல் கண்டிக்கும் குரலில்,

“அரவிந்த்... நீ அந்தப் பொண்ணு கிட்ட நடந்துகிட்டதை நியாயப் படுத்தவே முடியாது. பெண்களோட பிறக்காததால உனக்கு அந்த வலி தெரியலை. உன் கூடப் பிறந்தவளுக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருந்தா, நீ அவனை வெட்டிப் போட்டிருப்பதான?? ம்.. சொல்லு. அதிலயும் உடம்பு சரியில்லாம பலவீனமா இருக்க பொண்ணு கிட்ட உன் வீரத்தை காட்டினது மிருகத்தனமான செயல். மன்னிக்கவே முடியாத குற்றம். அவங்க வீட்டில இவளப் பத்தின தகவல் தெரியாம எப்படி துடிச்சிருப்பாங்க. முன்னப் பின்ன தெரியாத ஒரு பெண் பிள்ளையை. ச்சீ. தேர்ட் ரேட் பொறுக்கிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்... ம்?” என்றதும் துடித்துப் போனவனாய்,

“அ..ம்..மா.. ஒரு நிமிஷம். நான் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கு. ப்ளீஸ். நான் பேசி முடிக்கிற வரை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. வாஸந்தியை டிரெய்னில் பார்த்தும். நான் கொஞ்சம் தடுமாறிட்டேன். ஏன்னா….” பேச ஆரம்பித்ததுமே கை உய்ர்த்தி தடுத்த கௌசல்யா.

“போதும் அர்வி... இந்த வீட்டில எந்த ஒரு விஷயத்தையும் முடிவு செய்யற அதிகாரமும் உரிமையும் இன்னும் என் கிட்ட தான இருக்கு? அதில ஒண்ணும் மாற்றம் இல்லையே? விஷயத்தை என் கிட்ட சொல்லியாச்சுல்ல. போதும்.. இனி நீ எதுவும் பேச வேண்டாம். என் வளர்ப்பு தப்பா போனதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. டாக்டர் அங்கிள் வந்தா ஹாலில் உட்கார வை.. நான் வரேன்.”

“ அம்மா..! நான்.. நான் இப்படி நடக்கும்னு நினைச்சே பார்க்கலை அவளைப் பார்த்துமே...” என்பதைக் கேட்க அவர் அங்கே இல்லை. கட்டிலில் தலை சாய்த்து கண் மூடி மௌனத்தில் அழ்ந்து போனான் அரவிந்த்.

குளித்து விட்டு நேராக கமலாவிடம் சென்று கஞ்சி ரெடி செய்யச் சொன்னார். பத்து நிமிடம் கழித்து ரூமுக்கு கொண்டு வரச் சொல்லி விட்டு, வாஸந்தியின் அறைக்குள் நுழைந்தார். சோர்ந்து போய் உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தவனைப் பார்த்தும் மனம் கனிந்தது.

பால் போல மாசு மருவற்ற களங்கமில்லாத முகம் அவளது நிர்மலமாக உள்ளத்தைக் காட்டியது. இந்தப் பெண்ணிடம் தவறு என்பதே இருக்காது என்பது துலாம் பாரமாகத் தெரிந்தது. அவருக்கு.

“வாஸந்தி... அம்மா வாஸந்தி. இங்க பாரு.” கௌசல்யா கன்னத்தை வருடினார்.காய்ச்சல் குறைந்திருப்பது புரிந்தது. உறக்கம் கலைந்து கண் விழித்து, கௌசல்யாவைப் பார்த்தும் பதறிப் போனவளாய் வேகமாக எழ முயற்சி செய்தாள்.

“மெல்ல.... பயம் வேண்டாம். நம்ம வீடு தான். உட்கார முடியுதா பார். இப்ப எப்படி இருக்கு? இந்த ஓட்ஸ் கஞ்சியை ஊட்டறேன். குடிச்சு முடிச்சிடு. தெம்பா இருக்கும்.” கௌசல்யா ஸ்பூனால் எடுத்து கொடுத்து அவளை விழுங்கச் செய்தார். அவரின் மென்மையான அணுகு முறையிலும் கனிவான பேச்சிலும் அயர்ந்து போனவளுக்கு பேச நா எழவில்லை.

தன்னை எந்தக் கேள்வியும் கேட்காமல் பரிவாகப் பேசிய அம் முதியவளின் கருணை பொங்கும் முகத்தைப் பார்த்ததுமே ஏதோ ஒரு வகையில் நிம்மதி சூழ, அவர் ஊட்ட ஊட்ட மறுக்காமல் கஞ்சியை முழுவதுமாக குடித்து முடித்தாள். அவள் பார்வையிலேயே அவன் மனதில் ஒடும் எண்ணங்களை படித்தவராய்,

“வாஸ்ந்தி! இப்ப எதுவும் பேச வேண்டாம். முதல்ல உன் உடம்பு தேறட்டும். நல்லா ஓய்வெடுத்துக்க. இது உன் வீடு. நிம்மதியா தூங்கு. உடம்பு சரியானதும் பேசலாம். டாக்டர் வந்ததும் அவரை கூட்டிட்டு வரேன்.”

அவரின் வார்த்தைகள் வாஸந்தியை உருக்க, தன்னையறியாமலேயே அவளின் இரு கரங்களும் சேர்ந்து குவிந்தன. அதோடு கீழே இறங்கி அவர் பாதம் பணிந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அவரின் பரிவில் அவளுக்கு தன் தாயின் நினைவு பீறிட்டு எழ கண்கள் கசிந்தது. அவரது அணைப்பில் ஒடுங்கிக் கொண்டாள்.

அதே சமயம் அரவிந்த் தவிப்போடு அவள் அறைவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் தாய் உள்ளே சென்று வெகு நேரமானதால் ‘என்ன ஆச்சோ’ என்ற பதட்டத்தில் வேகமாக அவள் அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் மருண்டு போய் உடல் நடுங்க வாஸந்தி கௌசல்யவின் தோளில் தஞ்சமடைந்தாள். அதைப் பார்த்து வேதனையில் முகம் சுளித்த அரவிந்த், தன் தாயைப் பார்த்தான்.

நொடியில் நிலைமையை புரிந்து கொண்ட கௌசல்யா, “என்ன அரவிந்த், நீ ரெடியா...? சாப்பிடப் போகலாமா.. வாஸந்தி கஞ்சி குடிச்சாச்சு. கமலாவை டேபிளில் டிபன் எடுத்து வைக்கச் சொல்லு. இதே வந்திடறேன்.” நிலைமையை சமாளித்தார். முகம் முழுக்க வலியும் வேதனையுமாக வாஸந்தியை பார்த்து விட்டு வெளியேறிய அரவிந்தைக் கண்டு அவருக்கும் வருத்தம் மண்டியது.

அவளைப் படுக்க வைத்து போர்த்தி விட்டவர், வாஸந்தியின் நெற்றியை வருடி, “மறுபடியும் சூடு வர ஆரம்பிக்குது கண்ணம்மா... டாக்டர் இப்ப வந்திடுவார். நீ எதையும் போட்டு மனசை உழப்பிக்காதே. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. தீர்க்க முடியாத விஷயம்னு எதுவுமே உலகத்தில இல்லை. புரியுதா.. அமைதியா தூங்கு. உனக்கு நான் இருக்கேன். என்னை நம்ப முடியுதுல்ல...? நான் எல்லாத்தையும் சரிபண்றேன்”. ஆறுதலாகப் பேசி அவளை உறங்கச் சொல்லி விட்டு வந்தார்.

டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, இன்ஜக்ஷன் பண்ணி, மருந்து எழுதிக் கொடுத்தார். அரவிந்தை அழைத்து, “இந்த மெடிசின்ஸ் எல்லாமே வேளை தவறாமல் கொடுக்கணும் அரவிந்த். மெடிசின்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லு. பொண்ணு ரொம்ப வீக்கா இருக்கா.

ஏதோ ஒரு சம்பவத்தினால மனசளவில ரொம்ப பாதிச்சிருக்கா. மெதுவாகத் தான் சரியாகும். அவ ரொம்ப சாஃப்ட் நேச்சர்ட். பயந்திருக்கா. கேர்ஃபுல்லா பார்த்துக்கணும். ஒரு வாரம் வெளியே எங்கேயும் போக வேண்டாம். கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை. கவலைப் படத் தேவையில்லை. சரியாயிரும்”.

“அரவிந்த்... வாஸந்தி கூட இரு. டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்..”

டாக்டர், “பீவர் குறைய ஊசி போட்டிருக்கேன் மா. நல்லா தூங்கிடுவா. மனசளவிலே ரொம்ப தளர்ந்து போயிருக்கா. மதியம் கஞ்சி, ரசம் சாதம் போதும். நைட் பிரட், இட்லி கொடுங்க. வாமிட் வரலைன்னா பால் கொடுக்கலாம். நைட் பசிச்சா, சுடுதண்ணியில ஹார்லிக்ஸ் கலந்து குடிக்க கொடுங்க. ஹை ஃபீவர் வந்தா எந்த நேரமா இருந்தாலும் என்னை கூப்பிடும்மா. வீசிங் இருக்கு. கவனமா பார்த்துக்கணு ஆமா இந்தப் பொண்ணு...?” என்றவரிடம் கௌசல்யா

எந்தவிதமான தயக்கமும் இன்றி, “வாஸந்தி என் மருமகள். கௌதமின் மனைவியாகப் போறவ...” என்றார் அமைதியாக.

வாஸந்தியின் அருகே அமர்ந்து, அவளையே பார்த்து கொண்டிருந்த, அரவிந்தைப் பார்த்ததும் மனம் கனிந்தார்.

“அரவிந்த், வெளியே வா. அவ தூங்கட்டும். நீயும் கொஞ்சம் தூங்கு. ரொம்ப சோர்வா தெரியற. நான் ஜி.யெம் கிட்ட பேசிடறேன். அவர் பார்த்துக்குவார். பதில் எதுவும் பேசாமல், அவரை கைபற்றி அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து, மடியில் படுத்து அவரின் வயிற்றில் முகம் புதைத்தான்.

ஆதங்கம் பொங்க - கௌசல்யா, ”அரவிந்த்... யோசிக்காம நீ செஞ்ச தப்பு எத்தனை பேருக்கு துயரத்தை கொடுக்குது பார். இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னு உனக்குத் தெரியுமா...?” என்ற கேள்வியில் துடித்துப் போனவனாய்.

“ஐய்யோ... அம்மா... அப்படி நினைக்காதீங்க... வாஸந்தி எனக்கு மட்டும் தான் சொந்தம். எனக்காகவே பிறந்தவ. அந்த நினைப்பில தான். “என்றதற்கு மேல் பேச முடியாமல் அவர் இடையை இறுகக் கட்டிக் கொண்டான். அந்தத் தாயின் கனிவு அவர் விரல்களின் வழியே முதுகை வருடிய போது, தன் மனதில் போட்டு அடக்கி வைத்த குற்ற உணர்ச்சி, துயரம், கலக்கம், தவிப்பு அனைத்துமே அவன் விழி வழியே பொங்கி எழுந்து அந்தத் தாய் மடியை நனைத்தது.

பதறிப் போய், அவன் கேசத்தை கோதி, தன் முந்தானையில் கண்களைத் துடைத்து விட்டார். கௌசல்யா.

“அர்விந்த். எழுந்திரு. போதும். போய் படு. தூங்கி எழுந்தா மனசு தெளிவாகும். இனி என்ன பண்ணணும். னு யோசிச்சு முடிவெடுக்கலாம்.”

“அம்மா. சாரிம்மா... ரியல்லி சாரி... நான் இன்னொரு ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட பேசணும்”.

“பேசலாம்... மெதுவா பேசலாம். நீ இப்ப போய் படு”. அரவிந்தைப் பார்த்த கௌசல்யாவுக்கு தங்களின் தொழில் சாம் ராஜ்யத்தில் புதிது புதிதாக தொழில்களை நிறுவிய, வெற்றிகரமான தொழிலதிபராகத் தெரியவில்லை. யாரிடமோ அடி வாங்கி விட்டு, ஆறுதலைத் தேடி மடியில் படுத்து அழும் பத்து வயதுச் சிறுவனாகவே தோன்றியது. தாய்மை பொங்க அவரின் விரல்கள் அரவிந்தின் கேசத்தை வருடியது.

இரண்டு மணியளவில் கண் விழித்த வாஸந்திக்கு ரசம் சாதம் கரைத்து கொடுத்து விட்டு, “கண்ணம்மா... உன் வீட்டில் தகவல் சொல்ணுமேடா... நம்பர் கொடு.

நான் பேசறேன்..”

கண்களில் வழிந்த துயரத்தோடு, “அது போல எனக்கு யாருமே இல்லாததால தான் நான்... தனியா.. வந்து... நான் அனாதைம்மா. எனக்கு யாருமில்லை. என் அம்மா தவறி மூணு வருஷமாச்சு...” தாயின் நினைவில் கண் கலங்கி விசும்பியவளை வேறு எதுவும் கேட்டு காயப்படுத்தாமல் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

“வேண்டாம் ராஜாத்தி... அழாதே.. உனக்கு அம்மாவா நானிருக்கேன். இனி அனாதைங்கற வார்த்தையே உன் வாயிலிருந்து வரக் கூடாது. சரியா. இந்த மாத்திரையை முழுங்கிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு. அப்புறமா படுக்கலாம். செல்லமாக கண்டித்து விட்டு, அவள் அருகிலேயே அமர்ந்தார். கனிவான அவர் முகம் ஆறுதலைத் தர, புன்னகையைப் படர விட்டபடியே மருந்தின் தாக்கத்தால் மறுபடி உறக்கத்தை தழுவினாள். வாஸந்தி.

மாலையில் வாஸந்தி கண் விழித்ததும் கமலா வெந்நீரில் உடம்பு துடைத்து, வேறு உடை அணியச் செய்தார். அவளின் நீண்ட கூந்தலைப் பிரித்து, சிக்கெடுத்து தளர்வாக பின்னலிட்டார். அரவிந்த் உள்ளே நுழைந்ததும்.

“தம்பி... குடிக்க...” வேண்டாம் என தலை தலையசைத்ததும் கமலா வெளியேறினார். அவனைக் கண்டதுமே பயத்தில் மருண்ட விழிகள் தாமாகவே மூடிக் கொண்டன. கண்ணீர் முத்துக்கள் மூடிய இமைகளின் வழியே தெறிந்து உருண்டோடின. எதுவுமே பேச வகையற்றவனாய் அறையை விட்டு வெளியேறினாள். அவனின் அழுத்தமான காலடிகள் தேய்ந்து அவன் விலகிச் செல்வதை உணர்த்திய பிறகும், விழிகளைத் திறக்க மனமின்றி, கண் மூடியே படுத்திருந்தாள். அவன் முகத்தில் தெரிந்த அந்த வேதனையும் வலியும் அவளை மெல்ல அசைத்துப் பார்த்தது. மனம் கடந்த காலத்தில் உழல, நடந்ததை நினைத்து முகம் இறுதிப் போனது.

மறுநாள் காலை எழுந்தவனின் முகம் தெளிந்திருந்தது. டாக்டர் வந்து பரிசோதித்த பிறகு, குளிக்க அனுமதி கொடுத்தார்.

“ஹலோ... மேடம்... ஹவ் ஆர் யூ...? ஃபீலிங் பெட்டர்.?”

“யெஸ் டாக்டர். வெரி மச்.”

“குட்... உன் பேர்.”

“வாஸந்தி...”

“அருமையான பெயர். உடம்பு சரியாயிடுச்சு. ஃபீவர், இல்ல. கொஞ்சம் வீக்கா இருக்க. அவ்வளவு தான். ரெஸ்ட் எடுத்து, நல்லா சாப்பிட்டா சரியாயிடும். சளி குறைய ஒரு கோர்ஸ் டேப்லட் குடுக்கறேன். சரியா. அரவிந்த் அருமையான பையன். அவன் மனைவியா வர கொடுத்து வெச்சிருக்கணும். கௌசல்யா ரொம்ப நல்ல மாதிரி. அரவிந்த் அப்பாவும் நானும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ். அதனால இவங்களை எனக்கு நல்லா தெரியும். மருந்து எப்படி சாப்பிடறதுன்னு சொல்றேன்.

புன்னகை தவழ, நான் பார்த்துக்கறேன் அங்கிள். நானும் டாக்டர் தான். வியப்பில் விழிகளை விரித்த டாக்டர் “ஹௌ நைஸ்...” ஆனா பார்க்க ரொம்ப சின்னப் பொண்ணா தெரியற. அம்மா வாஸந்தி. நான் முப்பது வருஷமா இவங்க. ஃபேமலி டாக்டரா இருக்கேன். நீ எனக்கு வேலையில்லன்னு துரத்திடாதம்மா. இவங்களை நம்பி தான் என் புது கிளினிக்கை கட்ட ஆரம்பிச்சி

ருக்கேன்.” என்று ஜோக்கடித்தார்.

முகத்தில் புன்னகை உறைய, “எந்த விதத்திலும் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் அங்கிள். நீங்க எப்பவும் போல வந்து உங்க சேவையத் தொடரலாம்” என்றவளின் குரலில் என்ன இருந்தது...?

டாக்டரோ... “கௌசல்யாம்மா. வாஸந்தி ரொம்ப ஸ்மார்ட். இனி அவளே பார்த்துக்குவா. அவ டாக்டர்னு நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே..?”

கௌசல்யாவுக்கும் இது புதிய செய்தி தான்! அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் என்ன பேசுவது என்ற குழப்பத்தில் வெறுமே தலையை மட்டும் ஆட்டி வழியனுப்பி வைத்தார்.
தொடரும்...