• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 3

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India
அத்தியாயம் 3

கௌசல்யாவுக்கும் இது புதிய செய்தி தான்! அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் என்ன பேசுவது என்ற குழப்பத்தில் வெறுமே தலையை மட்டும் ஆட்டி வழியனுப்பி வைத்தார்.

குளிக்கத் தயாரான வாஸந்தியைப் பார்த்து, “இப்ப பரவாயில்லையாம்மா? நீயே குளிச்சிட்டு வந்திடுவியா? கமலாவை உதவிக்கு வரச் சொல்லவா? உடம்புக்கு மட்டும் குளி போதும்.

“சரிம்மா. நான் இப்ப ரொம்ப நல்லா இருக்கேன். ஹீட்டர் போட்டிருக்கேன். நானே குளிச்சிட்டு வரேன்.

தலையசைத்து விட்டு ஒரு செட் உடையை பேகிலிருந்து எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அவள் மனம் குழம்பித் தவித்தது. குளித்து முடித்ததும், உடலிலுள்ள சோர்வெல்லாம் நீங்க, மிகவும் ஃப்ரஷாக உணர்ந்தாள். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்து விட்டு ஒரு பெரிய டவலால் கூந்தலை இறுகக் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

புத்துணர்ச்சியோடு தந்தம் போல பளபளத்த அந்த குழந்தைத் தனமான முகத்தையும், பாலில் விழுந்த கருந்திராட்சையாய் மின்னிய கண்களையும் பார்த்து கௌசல்யாவே ஒரு கணம் திகைத்துப் போனார்.

“தலைக்கா குளித்தாய்? ஜீரம் மறுபடி திரும்பிட்டா என்ன கண்ணம்மா செய்வது? அதனால் தான் வேண்டான்னு சொன்னேன். நல்லா தலை துவட்டலைன்னா நீர் கோத்துக்கும், தலைவலி வந்திடும். வா நான் துவட்டி விடறேன்”.

அவருடைய தூய்மையான அன்பில் பேச்சிழந்து, அவரருகில் சென்றாள். சோபாவில் தன்னருகில் அவளை அமர வைத்து, ஈரம் போக தலையை துவட்டினார். விரித்து விட்ட கூந்தல் கருமேகம் போல இடையையும் தாண்டி சோபாவில் படர்ந்தது. பெண் குழந்தைகள் மீது மிகுந்த நேசம் கொண்ட கௌசல்யாவோ ஆசையோடு,

“என்ன அழகான பட்டான கூந்தல். எத்தனை நீளம்! வாரா வாரம் எண்ணெய் தேய்த்து தலை குளிப்பதே ரொம்ப கஷ்டமாச்சே. உன் அம்மா தான் உனக்கு எல்லாம் செய்வாங்களா?”. வருத்தத்தில் முகம் வாட,

“அம்மாங்கிற பாக்கியத்தை இழந்து அனாதையாகி மூணு வருஷம் ஆச்சும்மா. “என்னும் போதே வாஸந்தியின் கண்களில் ஈரம் படர்ந்தது விம்மலை அடக்க முடியாமல், மூன்று வருடங்களாக தனிமையில் தான் அனுபவித்த துயரங்கள் எல்லாம் மேலெழுந்து கிளம்ப, அவர் மடியில் விழுந்து கதற ஆரம்பித்தாள்.

அவள் முதுகை வருடிய கௌசல்யா,” அழுதுடு கண்ணம்மா, நல்லா அழுதுடு. இனி மனசில எந்த சுமையும் தேக்கி வைக்காம அழுது தீர்த்திடு. இனி உன் கண்களில் இருந்து கண்ணீரே வரக்கூடாது. உனக்கு அம்மாவா, ஏன் அதை விட அருமையா நான் பார்த்துக்றேன்டா.

நீ என் மருமகளா இருந்தாலும், மகளா தான் நினைக்கிறேன் உன்னை சந்தோஷமா வச்சுக்க தான், ஆண்டவன் என் கையில ஒப்படைச்சிருக்கான். துயரத்தோட நிழல் கூட உன்மேல் படிய விடமாட்டேன்.

ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க. அரவிந்த் ரொம்ப அருமையான பையன். ஒழுக்கமா தான் அவனை வளர்த்தியிருக்கேன். மனதறிஞ்சு ஒரு தப்பு கூட செஞ்சதில்ல. இப்ப அவன் உனக்கு செஞ்சது கண்டிப்பா மன்னிக்க முடியாத தப்பு தான். நான் கனவில கூட நினைச்சுப் பார்க்காத விஷயம் இது. அதுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்”.

“அம்மா....”

“இருடா. முழுசா நான் சொல்லி முடிக்கிறேன். அவன் உனக்கு பெரிய துரோகத்தை செஞ்சிருந்தா கூட எனக்கு நன்மையா தான் முடிஞ்சிருக்கு. மஹாலட்சுமி மாதிரி நீ எனக்கு கிடைச்சிருக்க. கண்ணைத் துடை. இனி நீ அழவே கூடாது. எனக்காக அவனை மன்னிச்சிடு கண்ணம்மா.

சீக்கிரமா உங்க கல்யாணத்தை முடிச்சிடறேன். அரவிந்த் உன்னை பூ மாதிரி பார்த்துக்குவான். இத்தனை வருஷமா கல்யாணம்-னு சொன்னதுமே முகம் சுளித்து, எழுந்து போயிடுவான். நீ கண் திறக்காம அனத்தி கிட்டு, காய்ச்சல்ல கிடந்த போது, உன்னையே சுத்தி சுத்தி வந்தான். சரியாக சாப்பிடலை, தூங்கலை ஏன் ஆபீஸ் கூட போகலை.

அவன் அப்பா இறந்த போது தான் இந்த மாதிரி பித்து பிடிச்சுப் போய் இருந்ததை பார்த்தேன். நலிந்து கிடந்த பிசினசை தூக்கி நிறுத்தியது அவன் தான்மா. அந்த சமயத்தில அவன் சந்தித்த மிகப் பெரிய பிரச்சனையை சரி செய்ய ராத்திரி பகலா தூங்காம உழைச்சு குடும்ப கௌரவத்தை காப்பாத்தியிருக்கான்.

இன்னிக்கு வரை அவன் கிட்ட நான் பார்க்கிறது ஓயாத உழைப்பு... உழைப்பு... உழைப்பு தான். இதைத் தவிர வேற சிந்தனையே இல்லை. இனி அவனுக்காக வாழணும். உன் மூலமா அவன் இழந்த அத்தனை சந்தோஷத்தையும் திரும்ப பெறணும்.

காலேஜ்-ல படிக்கிற போது எப்படி இருப்பான் தெரியுமா? சின்னப் பையனா… கேலியும் கிண்டலுமா… அத்தனை குறும்பு பண்ணுவான். லீவுக்கு அவன் வீட்டுக்கு வரும் போது வீடே கலகலப்பா இருக்கும். அவன் அப்பா கிட்ட ரொம்ப நெருக்கமா ஒரு ஃப்ரண்ட் போல பேசி சிரிப்பான். ம்... எல்லாம் ஒரேநாளில் தலை கீழா மாறிடுச்சு. குருவி தலையில பனங்காயை வெச்ச மாதிரி, அத்தனை பாரத்தையும் இவன் மட்டுமே சுமந்து கரை சேர்ந்திருக்கான். பாவம். இனியாவது சந்தோஷமா இருக்கட்டும்.” எனும் போதே குரல் தழுதழுத்தது. வாஸந்து இமை சிமிட்டவும் மறந்து போய் சிலையாக அமர்ந்திருந்தாள்.

ஒரு வாரமாக வாஸந்தியிடமிருந்து அரவிந்த் சற்று விலகியே இருந்தான். அலுவலகத்திலும் வேலைப்பளு அதிகமாக இருந்தது. அவளின் முகச் சுளிப்பு அவனை வெகுவாக காயப்படுத்தியிருந்தது. அன்று மாலை சீக்கிரமாகவே வீடு திரும்பினான். வாஸந்தி ஏதோ சிந்தனையோடு தோட்டத்தில் அமந்திருப்பதைக் கண்டதும், தன்னிச்சையாக அவளருகில் சென்றான்.

அரவிந்தின் வருகையை உணராத வாஸந்தி, அவள் காதருகில் கிசு கிசுப்பாக ஒலித்த “வசு” என்ற மனதை மயக்கும் குரலால் சிந்தனை கலைந்து, திடுக்கிட்டு எழுந்தாள். மிக அருகே அரவிந்தைக் கண்டதும், உள்ளே ஓட எத்தனித்தவளின் கரம் பற்றி,

“வசு! ப்ளீஸ் உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே... உட்கார்.” என்றவனிடமிருந்து கையை உருவிக் கொண்டு, பதில் பேசாமல் ஒரே ஒட்டமாக உள்ளே சென்று விட்டாள். அரந்தின் முகம் இறுக, உள்ளே செல்லவும் மனமில்லாது, அங்கிருந்த பெஞ்சில் தளர்ந்து போய் சாய்ந்து அமர்ந்து கொண்டான். நடந்த அனைத்தனையும் உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யா கவலையில் ஆழ்ந்து போனார்.

அரவிந்திடம் எந்த அளவு விலகியிருந்தாளோ, அதை ஈடுகட்டுவது போல வாஸந்தி, விழித்திருக்கும்.

நேரம் முழுவதும் கௌசல்யாவையே சுற்றி சுற்றி வந்தாள். அவரிடம் கதை பேசினாள். தன் தாயைப் பற்றி மனம் விட்டு பகிர்ந்து கொண்டாள். தோட்டத்தில் ஆர்வம் கொண்டு அதை சீரமைத்தாள். சமையலில் தன் கை வண்ணத்தைக் காட்டினாள். வீட்டு அலங்காரம், வேலை

யாட்களுக்கு சின்ன சின்ன மருத்துவ உதவிகள் என்று தன்னை முழுவதுமாக வேலையில் ஆழ்த்திக் கொண்டாள்.

கௌசலயா அரவிந்தைப் பற்றி பேச ஆரம்பித்தால் மட்டும் அவளது வாய், பூட்டு போட்டுக் கொள்ளும். எந்த அபிப்ராயமும் சொல்லாமல் புன்னகையோடு சமாளித்து விடுவாள். மாலை அரவிந்தின் கார் சத்தம் கேட்டதுமே நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்குவது போல, தன் அறைக்குள் சென்று அடைந்து கொள்வாள். காலையில் கிளம்பிச் செல்லும் வரை அவன் கண்ணிலேயே படமாட்டாள். இதை உணர்ந்து கொண்ட அரவிந்தின் மனத்தில் வலியும் வெறுமையும் சூழ்ந்தது. சோர்ந்து போனான். வாஸந்தியை உயிராய் விரும்பும் அவன் மனம் அவளின் அண்மைக்காக ஏங்கியது.

இதே நிலை நீடிக்கவும், தினமும் நைட் லேட்டாக வர ஆரம்பித்தான். சாப்பாட்டிலும் கவனம் குறைந்தது. இந்த ஊமை நாடகத்தை பார்த்து, கவலை கொண்ட கௌசல்யாவும், விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதை உணர்ந்தார்.

மறுநாள் காலை, “கண்ணம்மா எனக்கு வெளியே ஒரு முக்கியமான வேலை. மதியம் லஞ்ச்சுக்குள வந்திடறேன். அரவிந்தையும் வரச் சொல்லியிருக்கேன். கமலாவை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணச் சொல்லு அவன் கொஞ்ச நாளா சரியா சாப்பிடறதில்லை. முடிஞ்சா சமையல்ல உன் திறமையையும் காட்டு பார்க்கலாம்” என்று வேடிக்கையாகப் பேசி வாஸந்தியின் கன்னத்தை வருடினார்.

முகம் சிவக்க, “சமையல் எனக்கும் நல்லாவே செய்யத் தெரியும்மா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாதபோது, நானே தான் செய்வேன். இன்னிக்கு ஏதாவது ஒரு டிஷ் நானே செய்யறேன் பாருங்க.

கௌசல்யா திரும்பி வந்த போது, சமையல் மணம் வீட்டையே நிறைத்தது. ஆவலுடன் சமையலறைக்குள் விரைந்தார். வாஸந்தி, குலோப ஜாமூனை நெய்யில் பொரித்து, சர்க்கரைப் பாகில் போட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அவருக்கு வாய் கொள்ளாத சிரிப்பு….!

“வசும்மா. இது தான் நீ செய்யற ஸ்பெஷல் ரெசிப்பியா..? வாசம் மூக்கைத் துளைக்குதே...!”

“நிஜமாவே இது ஸ்பெஷல் தான் மா. சாப்பிட்டு பாருங்க என்ன ஸ்பெஷன்னு உங்களுக்கே தெரியும்?” வாஸந்தி முதன் முதலில் தானாகவே ஸ்வீட் செய்திருப்பது சுபசகுனமாகப்பட்டது.

அப்போது தான் வீட்டில் நுழைந்த அரவிந்தும், நேராக சமையலறைக்கு வந்து, “அம்மா. என்ன நடக்குது ஏதோ ஸ்வீட் வாசம் வீட்டையே நிறைச்சிருக்கு. என்ன விசேஷம். இன்னிக்கு?” குழந்தை போல ஆர்வத்துடன் கேட்டாலும், பார்வை ஆசையோடு வாஸந்தியைத் தழுவியது.

“வா கண்ணா. நல்ல சமயத்தில் தான் வந்திருக்க. ஏதோ ஸ்பெஷல் ஸ்வீட்டாம். நம்ம வாஸந்தியே செஞ்சிருக்கா. கை, கால் கழுவிட்டு வந்து சாப்பிட்டு பார்த்து என்ன ஸ்பெஷல்னு சொல் பார்க்கலாம்...”

“அம்மா..! ப்ளீஸ் எனக்கு இப்பவே குடுங்க. ரொம்ப பசிக்குது. ஸ்பூன்ல தானே சாப்பிடப் போறேன். “சின்னப் பையனாக அடம் பிடித்தவனைப் பார்த்து முதன் முறையாக உள்ளுக்குள் ஏதோ உருக, ஒரு கிண்ணத்தில் நான்கு குலோப் ஜாமூனை சூடாக போட்டு அவனிடம் நீட்டினாள் வாஸந்தி.

நம்ப முடியாமல் அவளைப் பார்த்த அரவிந்த், முகம் முழுக்க மலர்ந்து போய், தேங்க்ஸ் வசு..” என்று மகிழ்ச்சியோடு அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவனின் ‘வசு’ என்ற அழைப்பில் இன்று ஏனோ மனம் தடதடத்தது.

“அம்மா... நிஜம்ம்மா ரொம்ப சூப்பரா இருக்கும்மா. உள்ளே குல்கந்தும் முந்திரியும் ஸ்டஃப் பண்ணி பொரிச்சிருக்கிறது வித்தியாசமா இருக்கு. ஐ லைக் இட்....” என்று கிண்ணத்தில் இருந்ததை நிமிடத்தில் காலி செய்தான்.

மதிய உணவிற்குப் பிறகு, கௌசல்யா, இருவரையும் அழைத்தார். சோபாவில் அவர்களை தன் இருபுறமும் அமரச் செய்தார். புன்னகையோடு இருவரின் கைகளையும் பற்றி,

“நாளைக்கு வட பழனியில் உங்க கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். மத்த ஏற்பாடும் செஞ்சுட்டேன். ஐந்து மணிக்கு முகூர்த்தம். சீக்கிரமா தயாராயிருங்க. இன்னிக்கு ஏழு மணிக்குள்ள இரண்டு பேரோட உடைகளும் தைத்து கொண்டு வந்திடுவாங்க. நம்ப குடும்ப ஜோசியர் நாளை பெரிய முகூர்த்தம் என்றதால், உங்க கிட்ட கூட பேச நேரமில்லாம எல்லா ஏற்பாடும் நானே பண்ணிட்டேன். ரொம்ப முக்கியமான இருபது பேரை மட்டும் போனில் கூப்பிடப் போறேன். நீங்க ரெண்டு பேரும், யாராவது முக்கியமானவங்களுக்கு சொல்ல நினைச்சா போனில் பேசி வரச் சொல்லுங்க. அப்புறமா மெதுவா தேவைப்பட்டா கிராண்ட் ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணிக்கலாம்.

வாஸந்தியின் விழிகள் ஒரே ஒரு நொடி அரவிந்தின் விழிகளை சந்தித்து மீண்டது. கண்களில் கலக்கத்தோடு கௌசல்யாவை ஏறிட்டாள். அவர் கரங்களில் சிறை பட்டுக் கிடந்த அவளின் பட்டுப் போன்ற கைகள் மெல்ல நடுங்கியது.

அதற்கு மாறாக அரவிந்தின் முகமோ மகிழ்ச்சியில் பளபளத்தது. அவனின் உலகமே வண்ணமயமாக, “தேங்க்யூமா” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் விழிகள் வாஸந்தியை மொய்க்க, அவளோ நிலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

“கண்ணப்பா! திருமணம் முடிஞ்சதும் அங்கேயே டிபன் அரேஞ்ச் பண்ணச் சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு கோவில்லயே திருமணத்தை பதிவு செய்யப் போறோம்.” என்றதும் இருவருமே அதிர்ந்து போனார்கள். அவசரமாக இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன.

அரவிந்த் தயக்கத்தோடு, “அம்மா! மேரேஜ் மட்டும் போதும். ரெஜிஸ்டர் பண்ண வேண்டாம்.

“அதிலென்ன சங்கடம் உனக்கு. இப்பவெல்லாம் இது சாதாரண விஷயமா போச்சே. அதுவுமில்லாம் எதுக்

கெடுத்தாலும் இப்ப இந்த சர்ட்டிபிகேட் தானே கேட்கறாங்க. ஒரு கையெழுத்துப் போட்டா வேலை முடிஞ்சுது. அதிலென்ன கஷ்டம் உனக்கு.” என்றவரின் குரலில் கண்டிப்பும் கலந்திருந்தது.

“அம்மா... ப்ளீஸ் வேண்டான்னா விடுங்கம்மா. இதை மட்டும் என் இஷ்டப்படி விட்டிடுங்க. எனக்காக…” இறைஞ்சியவனைப் பார்த்து,

“அம்மா சொன்னா எதுவுமே கேட்கறதில்லைன்னு முடிவே பண்ணிட்டியா அர்வி? இது என்ன புதுப்பழக்கம்…. எது சொன்னாலும் எதிர்த்து பேசறது.. ம்..?” என்றவரின் குரல் உயர்ந்தது.

எதுவுமே பேசாமல் முகம் இறுக எழுந்து நின்ற அரவிந்த், துளைப்பது போல ஒரு பார்வையை வாஸந்தி மேல் பதித்துவிட்டு, வேக நடையில் தன் அறைக்குள் புகுந்தான். முகம் இறுக, வெளியே வந்தவனின் கரங்களில் லேமினேட் செய்யப்பட்ட ஒரு ஷீட்.

“என்ன அர்வி... இது...”

“ஆமாம்மா. இது என்னோட திருமண பதிவு சான்றிதழ். எனக்கும் வசுக்கும் ஐந்து வருஷங்களுக்கு முன்னாடியே திருமணம் முடிஞ்சிருச்சு. வசு அப்பயிருந்தே சட்டபூர்வமான என் மனைவி தான். நான் காதலிச்சு அவளோட மனப்பூர்வமான சம்மதத்தோட நடந்த திருமணப் பதிவோட சான்றிதழ் தான் இது”. என்றான் அமைதியாக.

“அர்வி...” என்று கூவியவரின் முகத்தில் டன் டன்னாக அதிர்ச்சி.! நம்ப முடியாத திகைப்போடு வாஸந்தியை ஏறிட்டவரின் முகத்தில் வியர்வைப் பூக்கள். அதைப் பார்த்தும், சட்டென்று அறைக்குள் ஒடி ஒரு மாத்திரையை கையில் எடுத்து வந்த வாஸந்தி.

“அம்மா...! டென்ஷன் ஆகாதீங்க. முதல்ல இந்த டேப்லட்ட சாப்பிடுங்க... ” என்று அவர் வியர்வையை ஒற்றியெடுத்தாள்.

அவர் கையைப் பற்றிய அர்விந்த், “சாரிம்மா” ஒவ்வொரு முறையும் இதைத் தான் உங்க கிட்ட சொல்ல வந்தேன். என்னை ஒரு வார்த்தை கூட நீங்க பேசவே விடலை. எங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்முடிஞ்சு அஞ்சு வருஷமாகுது. இப்பவே வசு சட்டப்படி என் வொய்ஃப் தான் மா. நான் நீங்க பெத்த பிள்ளைம்மா.

நான் ஒழுக்கத்தை மீறுவனா? அந்த சந்தர்ப்பத்தில் நான் நடந்துகிட்டது முறையற்ற செயல் தான். ஒத்துக்கறேன். கணவனா இருந்தாலும் அவ சம்மதமில்லாம, அவளோட பலவீனத்தை பயன் படுத்தி....அதுவும் அங்கே… இப்ப ரொம்ப கேவலமாக ஃபீல் பண்றேன். சாரி... ரியல்லி சாரி மா... ஆனா அஞ்சு வருஷமா நான்... நான் அவளை தேடித் தேடி ஓய்ந்து போயிருந்தேன் மா. அந்த சமயத்தில் என் வசுவை எதிர்பாராம சந்திச்சதும், என் உணர்வுகள் என் கட்டுப் பாட்டுக்குள்ள வர மறுத்திடுச்சு. ஃப்ரண்ட்ஸ் கம்பல் பட்டதால் லைட்டா டிரிங்க் வேற எடுத்திருந்தேன்.எல்லாம் சேர்ந்து ...ச்சே ” என்றவனின் குரலில் விரக்தி கலந்த துயரம்.

அவனின் குரலில் கரைந்து போய் ஏதோ கேட்க விழைந்தவரிடம், “அம்மா ப்ளீஸ்” இப்ப என் கிட்ட எந்த பதிலும் இல்ல. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். ப்ளீஸ் மா...” மாடியேறிச் சென்று விட்டான்.

இந்த திடீர் திருப்பதை எதிர் கொள்ள முடியாமல் கௌசல்யா துவண்டு போய் சோபாவில் சரிந்தார்.

பதறிப் போன வாஸந்தி, “அம்மா... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கங்க...” என்று அவரை ஆசுவாசப் படுத்தினாள்.

“என்ன வாஸந்தி! என்ன நடக்குது இங்க? என்னால எதுவுமே நம்ப முடியல. எப்படி? உங்க மேரேஜ் முடிஞ்சு அஞ்சு வருஷமாச்சா...? அர்வியை உனக்கு முன்னாலயே தெரியுமா? ஏன் என் கிட்ட எதையும் சொல்லல. இத்தனை நாளா அப்ப நீ எங்க இருந்த? இவனை விட்டு எதுக்காக தனியா போன? இல்ல இவன் உன்னை ஏமாத்தி....”

“அம்மா.! அந்த மாதிரி போசதீங்க... நான் தான் யார் கிட்டயும் சொல்லாம பிரிஞ்சு போனேன். என்னை ட்ரைனில் தான் முதல்ல பார்த்தார். நாங்க சந்திச்சு அஞ்சு வருஷமாச்சு.

“என் அர்வியைப் பத்தி எனக்கும் நல்லா தெரியும் கண்ணம்மா. நீயும் அருமையான பொண்ணு. பின்ன ஏன் பிரிஞ்சீங்க? பொறுப்பை தட்டிக் கழிக்கற பையன் இல்ல அரவிந்த். ஏதோ ஒரு காரணம் இருக்கும். உன்னை இங்க கூட்டிட்டு வந்த பிறகு நிறைய முறை என் கிட்ட ஏதோ சொல்ல வந்தான். நான் தான் அவனை பேச விடலை. அவன் மோசமானவன் இல்லடா. நீ ஏதோ அவனை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க. அவன் கிட்ட மனம் விட்டு பேசு கண்ணம்மா. இல்ல உன் பிரச்சனை என்னன்னு சொல்லு. என் கிட்ட சொல்லு.”

கௌசல்யா பேசப் பேச கண்களில் மின்னும் கண்ணீரோடு, “அம்மா ப்ளீஸ். இப்ப என்னை எதுவும் கேட்காதீங்க. எனக்கு பயமா இருக்கு. இந்த மேரேஜ் வேண்டாம். நான் குழந்தைகள் மருத்துவத்தில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கேன். ஏதாவது ஒரு நல்ல ஹாஸ்பிடலில் வேலை வாங்கி கொடுங்க. அது போதும். நானும் காஞ்சிபுரம் ஜி. ஹெச்சில் ஜாயின் பண்ணதான் சென்னைக்கு கிளம்பி வந்தேன். இனி நான் அங்க போக முடியுமானு தெரியலை. எனக்கு இந்த மேரேஜ் பிடிக்கலை. ப்ளீஸ்.. நான் இப்படியே இருக்கேன்.” மெல்ல விசும்பியவளைப் பார்த்து,

“வாஸந்தி...! என்னம்மா பேசற... ஏன் எங்களை விட்டுட்டு போறதுக்கு துடிக்கற? உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரிய வேண்டாம். எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லு போதும். அது வரை நான் எதுவுமே கேட்கப் போறதில்லை. உங்க ப்ராப்ளத்தை நீங்களே பேசி சால்வ் பண்ணிக்கங்க. எனக்கு தெரிய வேண்டியது ஒண்ணு தான். உங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டும் தான் ஆகியிருக்கா, இல்லை தாலி கட்டி...”

“ஐயோ... இல்லம்மா...

“அப்ப சரி.. நாளைக்கு கோயில்ல கண்டிப்பா அர்வி உன் கழுத்தில் தாலி கட்டுவான். என் பேச்சை மதிக்கறதா இருந்தா, இனி எதுவும் பேசாதே... என் மகன் ரொம்பப் பெரிய தவறை செஞ்சுட்டாங்கற காயம் என் மனசில ஆறாத ரணமா இருந்தது.

உன் விருப்பமில்லாம நடந்தது சரி இல்லை தான். உன்னை கட்டாயப்படுத்தி, வலுக்கட்டாயமா கல்யாணம் செஞ்சானா...?” என்றவரின் குரலிலேயே வேதனை தொனித்தது.

“இல்லம்மா. நானும் அவரும் இரண்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பினோம். சொல்லப் போனா இந்த அவசரமான பதிவுத் திருமணத்தை வற்புறுத்தி அவரை சம்மதிக்க வெச்சதே நான் தான். என் சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு, எனக்காக உங்க கிட்ட சம்மதம் கூட கேட்காம இதற்கு ஒத்துகிட்டார்” என்றவளின் குரலில் பெருமிதம்.!

அப்ப சரி. உன்னோட தயக்கத்துக்கு அவசியமே இல்லை. அரவிந்த் உன்னை ரொம்ப விரும்பறான். அவன் உன்னை பார்க்கறதிலயே என்னால அதை புரிஞ்சுக்க முடியுது. நீ இல்லாம போனா அவன் கதி என்ன ஆகுமோ? சரி விடு. அவன் வேண்டான்னா விட்டுடலாம். அவன் அளவு எனக்கு நீயும் முக்கியம் தான். உன்னைப் பார்த்த நொடியே அதை புரிஞ்சுகிட்டேன். அரவிந்த் உனக்கு வேண்டாம். அவனோ ஏதோ ஒரு செயல் உன்னை வெகுவா காயப்படுததியிருக்குன்னு தெரியுது சரி வேற யாராவது உனக்கேத்த பையனா பார்த்து, நானே முன்னால நின்னு...... ”

பதறிப் போய் விரல் நடுங்க அவர் இதழ்களை மூடிய வாஸந்தி.... “ஐயோ அம்மா... இனி இது போல பேசாதீங்க. நீ...ங்...க சொல்றபடியே நடந்துக்கறேன்”. அவர் மடியில் முகம் புதைத்து கண்ணீர் உகுத்தவளை, அவர் கரம் ஆறுதலாக வருடியது.

“அசடு...! ஒருத்தர் மேல ஒருத்தர் இரண்டு பேருமே இத்தனை பிரியம் வெச்சுகிட்டு, ஏன் இத்தனை வேதனைப் படணும்?. விட்டுக் கொடுத்து வாழறதிலதான் சுகம் இருக்கும். யாராவது ஒருத்தராவது தணிஞ்சு போய் மனம் விட்டு பேசுங்க எல்லாம் சரியாயிடும். போ... போய் ரெஸ்ட் எடு. அழுது அழுது உன் முகமே வீங்கிப் போயிடுச்சு. ஈவினிங் பியூட்டி பார்லர்ல இருந்து மெஹந்தி போட ஆள் வரும். அதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கம் போட்டுடு...

உன் புருஷன் உனக்கு மேல கோபத்தில இருக்கான். அவனையும் போய் சமாதானப் படுத்தணும். இந்நேரம் மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு படுத்திருப்பான்” புன்முறுவலோடு எழுந்து சென்றார்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து தயாராகி வந்த இருவரையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். பூஜை செய்த திருமண உடைகளை எடுத்துக் கொடுத்து மாற்றி வரச் சொன்னார்.

அடர் சிவப்பில் கெட்டிக் கரையிட்ட பட்டுப்புடவையில் வைர நகைகள் மின்ன அழகோவியமாக நாணம் அந்த அழகுக்கு மெருகூட்ட தன் முன் நின்றவளைப் பார்த்து கௌசல்யாவே மலைத்துப் போனார் என்றால், அரவிந்தின் நிலையோ கேட்கவே வேண்டாம்.!!

அவள் மேல் படிந்த அவன் விழிகள் இமைக்க மறந்தன. அதைக் கண்டு மனதோடு நகைத்த கௌசல்யா, இருவருக்குள்ளும் திரையிட்டிருக்கும் மனவேறுபாடு விரைவில் மறைந்து விடும் என உறுதியாக நம்பினார்.

அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்த வாஸந்தி, பட்டு வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த அரவிந்தைக் கண்டு பல வருடங்களுக்குப் பிறகு தடுமாறிப் போனாள். அவனின் வசீகரத்தில் மனம் மயங்கியது. முகம் சிவக்க கண்களில் கனவு மிக்க நின்ற தன்னவளைப் பார்த்து, உற்சாகம் பொங்க அவளருகில் சென்றான்.

தன் மனதில் இது நாள் வரை மறைத்து வைத்த காதலையெல்லாம் கண்களில் தேக்கி, “வசு! மை லவ்....” என்று அவள் கரம் பற்றினான். அவனின் குழைந்த குரலில் விதிர்த்துப் போனவளாய், காபிக் கோப்பையை அவன் கரங்களில் திணித்து விட்டு, சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.​
தொடரும்..​