• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை - 5

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
பிழை - 5


உணர்வுகள் வடிய, கண்களை இறுக மூடி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படி ஒரு அவமானத்தை தாங்க முடியாமல் முகம் இறுக, அவளிடமிருந்து விலகி கட்டிலில் அமர்ந்தான்.
இந்த அளவு ஆவேசப்படும் படி, தான் என்ன தவறு செய்தோம் என்று புரியாமல் அமர்ந்தவனின் நிலை அவனுக்கே புதிராக இருந்தது.
ஏளனத்தோடு உதட்டைச் சுளித்த வாஸந்தி,
“உங்க பேச்சைக் கேட்டு, அப்படியே நம்பி உங்க கிட்ட சரணடைந்த அப்பாவி வாஸந்தி அஞ்சு வருஷத்துக்கு முன்பே செத்துப் போயிட்டா. இப்ப இருக்கிறவ வாழ்க்கைன்னா என்னன்னு நல்லா புரிஞ்சுகிட்டவ. நான் கத்துக்கிட்ட பாடங்களும், அனுபவங்களும் அதனால ஏற்பட்ட வலிகளும் என்னை கல்லா மாத்திருச்சு. இனி இந்த மாதிரி. சர்க்கரை பூசின பேச்சைப் பேசி என்னை ஏமாத்த முடியாது.
“என்ன சொல்ற...? ஏமாத்தறதா...? நானா....? என்ன உளர்ற....? புரியாம ஏதேதோ பேசற....?”
“இத்தனை நாள் புரியாம தான் இருந்தேன். ஆனா உங்களை இப்ப நல்லா புரிஞ்சுகிட்டேன்.”
“கிழிச்ச... ஏதோ மர்மமா பொடி வெச்சு பேசிகிட்டே இருந்தா என்ன அர்த்தம்...? உன் மனசில என்ன தான் இருக்கு? சொல்லித் தொலை. அப்ப தான எனக்கும் தெரியும்?”
“என்னை நீங்க தொலைச்சு தலை முழுகி தான் அஞ்சு வருஷமாகுதே. நான் போனதும் விட்டது சனியன்னு அப்படியே ஃப்ரீயாயிட்டீங்க. நான் உயிரோட இருக்கனா செத்தனான்னு கூட பார்க்க தோணலை இல்லை.
டிரெய்னில் பார்த்ததும் உடனே பாசம் பொங்குச்சுன்னு நீங்க சொன்ன உடனே நானும் நம்பணும். இல்ல.. என் பேராவது ஞாபகம் வெச்சிருந்தீங்களா? உங்களுக்கு என்ன தேவைன்னு டிரெய்ன்லயே புரிஞ்சு போச்சு...” ஆத்திரமும் அழுகையுமாக வார்த்தைகளை சாட்டையாய் சுழற்றினாள்.
அரவிந்தின் பொறுமை காற்றில் பறந்தது.
“ஏய்... அடிச்சு பல்லைப் பேத்துருவேன். என்ன… விட்டா சும்மா பேசிகிட்டே போற...? ம்.. ஜாக்கிரதை... யாருடி தேடலை? நான் தேடலைன்னு உனக்குத் தெரியுமா? பிச்சிருவேன். அவசரமா உயிர் போகிற சூழ்நிலையில் கூட நான் வர்ற வரைக்கும் பொறுமையா காத்திருன்னு உன்கிட்ட சொல்லிட்டு தானடி போனேன். நான் உன்னை ஏமாத்தின மாதிரியே பேசிகிட்டு இருக்க. அப்படி நான் போகும் போது கூட ஃப்ரண்ட் மூலமா உன்னை பத்திரமா பாத்துக்க எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டு தான போனேன். உனக்கே தெரியுமில்ல...?” சீறினான்.
“ஓஹோ...! கல்யாணம் பண்ணிகிட்டது நீங்களும் நானும் தானே சார். அவசரம்.. சூழ்நிலை அப்படி! சரி. ஊருக்கு போனீங்க. ஒத்துக்கறேன். அதை நான் தப்பே சொல்ல முடியாது. ஆனா இங்க அப்ப நான் என்ன மாதிரி இக்கட்டில இருந்தேன்னு உங்களுக்கும் தெரியும் தானே. ஆறு மாதத்தில ஒரு இரண்டு தடவை இல்லை மூணு தடவை போன் செஞ்சிருப்பீங்க. அதுக்குப் பிறகு ஒரு தடவை கூட நேர்ல வந்து பார்க்கக் கூட முடியல இல்ல. என்னைச் சுத்தி ஆபத்து இருந்தும் உங்களால வரமுடியல. ஏன்? அதற்குப் பிறகு போன் கூட பேசல.
ஊருக்குப் போன பிறகு என்னைப்பத்தின நினைப்பு துளியாவது இருந்திருந்தா நீங்க ஒரு முறையாவது என்னைப்பர்ர்க்க வந்திருப்பீங்க. உங்க வசதி புரியாம உங்ககூடப் பழகினது என் தப்புதான். ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட்ல, வசதி குறைவா , தனியா அம்மாவோட இருந்த என்னை எப்படி ஏத்துக்குவீங்க? நான்தான் இதெல்லாம் புரியாதவளா இருந்துட்டேன். அப்ப இருந்த வாஸந்திக்கு தெரிஞ்ச வெளியுலகமே நீங்க மட்டும்தான்.
அதுக்குப்பிறகு ஒவ்வொரு நிமிஷமும் நான் பட்ட வேதனை எனக்குமட்டும்தான் தெரியும்.நீங்க இத்தனை பணக்காரர்னு தெரிஞ்சிருந்தா உங்க கூட பேசியிருக்க மாட்டேன். காதலிச்சு .. பைத்தியம் மாதிரி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கெஞ்சியும் இருக்கமாட்டேன். என் தலையெழுத்து அவ்வளவுதான்னு உயிரையேகூட விட்டிருப்பேன்.
அவன் முகம் இறுக ஜன்னல் மேல் சாய்ந்து இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவள் பேசுவதை கண்கள் சிவக்க கேட்டுக்கொண்டிருந்தான்.
நடுவில் ஒரு முறை கூட அதைமறுத்துப் பேசவும் முயலவில்லை. எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்கவுமில்லை. கண்கள் கோவைப் பழமாய்ச் சிவந்திருக்க இறுகிய முகத்தோடு அவளையே உறுத்து விழித்தான். கை முஷ்டி இறுக அவன் நின்ற கோலம் பயமுறுத்தியது.
வாஸந்தி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே.. விடாமல் பேச்சைத் தொடர்ந்தாள்.
“யோகேஷ் உதவியோட தான் என் அம்மாவோட இறுதிச்சடங்கைச் செய்யமுடிந்தது. அது உங்களுக்கு தெரியுமா?” விசும்பினாள்.
அரவிந்தன் மனம் வலித்தது. வேதனையோடு ஏதோ சொல்ல வாயயைத் திறந்தவன் பின் எதுவும் பேசாமலேயே அமைதியாக அவளைப் பார்த்தான்.
“உங்ககிட்டடே இருந்து விலகிப்போய் எத்தனைக் கஷ்டப்பட்டுப் படிச்சேன் தெரியுமா? ஒரு நல்ல வேலை கிடைச்சும்கூட அதில சேரமுடியாதபடி பண்ணீட்டிங்க. இப்ப திருப்திதானே? என் மேல இருக்கிற காதல் எல்லாம் கரைஞ்சு போச்சு. உங்களுக்குத் தேவை என் உடலும் இளமையும்
தான்னு டிரெயினிலேயே தெளிவா புரிஞ்சுபோச்சு. இப்ப உங்க அம்மா பேரைச்சொல்லி கடமைக்காக குடும்பம் நடத்தவும் தயாராகிட்டீங்க. இல்லையா?”
அவளின் பேச்சு அரவிந்தை குன்றச் செட்ய்தது. தாளமுடியாத வேதனையோடு கண்களை மூடினான். பிறகு,
“வாஸந்தி நான் உன்னை காதலிக்கவே இல்லையா? நெஜமா தான் சொல்றாயா? ஒரு துளியாவது என்மேல உனக்கு நம்பிக்கை வரல. அப்படித்தானே...”
“ஆமாம் நீங்க கண்டிப்பா என்னை விரும்பவே இல்லை.”
“என் பேச்சை நீ நம்பவேயில்லை. அதில ஒரு துளி உண்மையாவது இருக்கும்னு தோணலையா? ”
“இல்லை தோணலை”
“உன் உடம்பு மேல மட்டும்தான் எனக்கு ஆசைன்னு உன் மனசு சொல்லுது .. அப்படித்தானே”.
“............”
“எதுக்காக எங்கிட்ட சொல்லாமகூட நீ ஓடி ஒளிஞ்சுகிட்டேன்னு இப்பவரை எனக்குத் தெரியல. அத்தனை வெறுப்பை மனசில வெச்சிகிட்டு அம்மா சொன்னதும் ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட ...?” குரலில் அத்தனை உஷ்ணம்.
“அம்... இல்ல அத்தைதான் காரணம். ஏன்னா அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்க மனசை நோகடிக்க விரும்பல. ... ” முதலிரவில் வெட்கத்தில சிவக்க வேண்டிய தேகம் ஆத்திரத்தில் சிவந்து போனது.
“ரொம்ப நல்லவர் மாதரி நடிக்காதீங்க. ஆறு மாசமா உங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோய், அப்பகூட மனசு கேட்காம உங்களைத் தேடி எத்தனை ஆசையா ஓடி வந்தேன். ஆனா... நீங்க...? அப்பதான் உங்க உண்மையான முகத்தை தெரிஞ்சுகிட்டேன். எத்தனை கோவமா உங்க செகரட்டரி கிட்ட , யாருன்னு தெரியாதவங்களை என் பர்மிஷன் இல்லாம எதுக்கு உள்ளே விட்டேன்னு ஆத்திரத்தோட என் கையைப்பிடிச்சு வெளியே தள்ளனீங்க... அப்பவே உங்க வசு செத்துப்போயிட்டா.... அத்தனை பேச்சையும் கேட்டு இன்னிக்கு வரை நான் எப்படி உயிரோட இருககேன்னு எனக்கே தெரியலை. அம்மாவுக்காக நடைபிணமாத்தான் நான் காயூகிட்ட கூட சொல்லாம ஊரைவிட்டு தொலைஞ்சேன். ஆனா இப்ப ......”
அரவிந்த் திகைத்துப்போய், “வசும்மா ... அன்னிக்கு நான் ஆபீசில் பேசிய பேச்சா நம்ப ஐந்து வருஷ பிரிவுக்கு காரணம் ...! கடவுளே... நான்தான் அப்பவே சொன்னேனே... நான் பேசறதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஊருக்குப் போனதும்... நேர்ல வந்து சொல்றேன்னு சுனிலும் உன்கிட்ட பேசியிருப்பானே.. இப்பவாவது என்ன நடந்துதுன்னு நான் சொல்றதைக் கேளேன். ...” அவளருகில் வந்தவனை கைநீட்டி தடுத்த வாஸந்தி,
“பிளீஸ். கிட்ட வராதீங்க. போதும். நடிக்காதீங்க. அதை நம்ப நான்தயாரா இல்லை. போதும்.. என்னை விட்டிருங்க. இனி ஒரு வார்த்தை கூட நீங்க பேச வேண்டாம்.”
முகம் இறுக கட்டிலில் அமர்ந்து கண்களை மூடினான். முகத்தில் பலவித பாவங்கள்.! நெற்றியில் ஏற்பட்ட சுருக்கம் அவன் பலத்த யோசனையில் இருப்பதைக் காட்டியது.
வார்த்தைகளை சுடு நெருப்பாய் அள்ளி வீசியவளும் நிம்மதியாய் இருக்கவில்லை. ’இவனுடைய நேசம் தானே பொய். நான் மனதாரத்தானே காதலித்தேன்’. அரவிந்தின் வேதனை அவளையும் வருத்தியது.
அரை மணிநேரம் மௌனத்தில் கரைய கண்விழித்த அரவிந்தின் கம்பீரம் மீண்டிருந்தது. தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று,
“ரைட்... ! வாஸந்தி... நீ சுமத்திய அத்தனை குற்றச்சாட்டுக்கும் நான் மறுப்பே சொல்லப்போறதில்லை. நோ யூஸ்.உன் மனசில நான் பொய்யானவன்னு பதிஞ்சு போயிருக்கு. அதை இனி மாத்தவே முடியாது. நான் என்ன விளக்கம் சொன்னாலும் உனக்கு இனிமேல் நம்பிக்கையும் வராது. ஆனா என்னோட நேசம் உண்மைன்னு சொல்லித்தான் ஆகணும். பரஸ்பரம் நமக்குள்ள முக்கியமா இருக்க வேண்டிய நட்பும் புரிதலும் நம்பிக்கையும் எப்ப இல்லையோ அப்பவே நம்ம காதலுக்கும் அர்த்தமே இல்லாம போச்சு.
நாள் என்ன சொல்ல வரேன்னு கேட்கக்கூட முடியாத அளவு பெரிய மனுஷியா ஆயிட்ட. சரி பரவாயில்ல. இனி என்னை ப்ரூவ் பண்ணிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த மாதிரி ஒரு லைஃப் எனக்கு தேவையுமில்லை. போதும். இதோட நமக்குள்ள எல்லாமும் முடிஞ்சு போச்சு.
டிரெயினில் நடந்ததுக்கும் நான் ரொம்ப வருத்தப்படறேன். அதை மட்டுமே அந்த ஒண்ணை மட்டுமே தான் என்னால சரிபண்ண முடியாது. சாரி சொலலி த் தப்பிக்கவோ அதை நியாயப்படுத்தவோ விரும்பல. அதுக்கு நான் என்ன செய்யட்டும்? நீயே சொல்லு. அதுபடியே கண்டிப்பா செய்யறேன்.
உனக்கு ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் வேலை வாங்கித் தரவேண்டியது என் பொறுப்பு. இனிமேல் உன் வாழ்க்கையில் என் நிழல்கூடப் படியாது. இட்ஸ் எ பிராமிஸ். சட்டப்படி பிரியவும் எந்தத் தடையுமிருக்காது. அதையும் சீக்கிரமே செய்திடறேன். ரைட்.
உன் எண்ணப்படி பார்த்தா அயோக்கியனான எனக்கு உன்னை இங்க தங்கச் சொல்ல எந்த யோக்கியதையும் கிடையாது. நீ எப்ப நினைச்சாலும் தாராளமா இந்த வீட்டை விட்டுப்போகலாம். அது சம்பந்தமா எந்த உதவியும் செய்யத் தயாரா இருக்கேன். இது நான் காதலிச்சதா நடிச்சதுக்கு இல்லை. உன் கழுத்தில் தாலி கட்டியதுக்கும் பிராயச்சித்தம்னு நினைச்சுக்க.
என் அம்மாவைப்பத்தி நீ யோசிக்கத் தேவையில்லை. அவங்க கண்டிப்பா என்னைப் புரிஞ்சுக்குவாங்க. எனக்காக எதையும் ஏத்துக்குவாங்க. நானே பக்குவமா பேசி சமாதானப்படுத்திடுவேன். ஆனா எங்கிட்ட பேசினதையெல்லாம் தயவு செய்து அம்மாகிட்ட பேசிடாதே. தாங்கமாட்டாங்க. அவங்களை இழக்க நான் விரும்பல. என் அம்மா எனக்கு வேணும்.
தேங்க்ஸ் வாஸந்தி. அம்மாவை நல்லவங்கன்னு சொன்னதுக்கும் அவங்களும் நடிக்கிறாங்கன்று சொல்லாததற்கும்! உனக்கு இன்னும ஒரு வாரத்துல வேலை ரெடி பண்றேன். அதுவரை என்னை சகிச்சுக்க. நீ என் ரூமுக்கு வர்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். அம்மா சொன்னாலும்கூட…” அழுத்தமா மொழிந்தான்
அவளை திரும்பியும் பாராது மற்றொரு அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டான். வாஸந்தி அவனிளன் பேச்சில் விக்கித்துப் போயிருந்தாள். உள்ளே ஏதோ நொறுங்கியது! ஏனோ ஏமாற்றமும்கூட….
அரவிந்தோ இந்த நிலைக்காகத் தன்னையே நொந்துகொண்டு உடைகூட மாற்றாமல் கட்டிலில் சரிந்தான். அவள் அடுக்கடுக்காய் தன்மிது அடுக்கிய குற்றச்சாட்டுகளில் மரித்துப் போயிருந்தான். அவள்மீது காதலால் கசிந்து உருகிய மனம் இன்று வறண்ட பாலைவனமாய் அவனையே சுட்டெரித்தது. அவளைத் தேடித் தேடி பைத்தியம்போல் தான் அலைந்ததெல்லாம் அர்த்தமில்லாமல் போனது. தன் மேலேயே வெறுப்பு எழ உறக்கத்தைத் துரத்திப் பிடிக்க முயன்று அதிலும் தோல்வியையே தழுவினான்.
இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்தவனாய் ஏதேதோ நினைவுகள் அவனை பாடாய்ப் படுத்த, எப்போது விடியும் என்று காத்திருந்து, அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தான். வெறுமையான மனநிலையோடு தலைவலியும் சேர ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்தான்.
எதுவும் போர்த்திக்கொள்ளாமல், குளிரால் கால்களைக் குறுக்கிக்கொண்டு படுத்துறங்கும் வாஸந்தியை பார்த்ததும் சினம் ஏற்படுவதற்குப் பதில் பரிதாபம்தான் வந்தது. எல்லாவற்றையும் தவறாகவே யோசித்து, தன் வாழ்க்கையைத் தானே மீண்டும் சிக்கலாக்கிக் கொள்பவளை என்ன சொல்லிப் புரியவைப்பது என்றே தெரியாது குழம்பினான். குழந்தையாய் உறங்கும் தன்னவளின் முகத்தைக் கனிவோடு பார்த்தான். முத்தமிடத் தவித்த உணர்வை முயன்று கட்டுப்
படுத்திக்கொண்டான்.
‘ராட்சசி’ என்ன பேச்சு பேசிவிட்டாள். அடுக்கடுக்காய் எத்தனை குற்றச்சாட்டு.. நான் காதலித்ததெல்லாம் நடிப்பாம்! என்ன பேசினாலும் இவள் மேல் எழும் கோபத்தை என்னால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே. இருக்கட்டும். இனி இவளாகவே என்னைப் புரிந்துகொண்டு என்னிடம் வரும்வரை விலகியே இருப்போம். எண்ணங்கள் பயணித்துக் கொண்டே இருக்க அன்று அணியப்போகும் உடைகளைத் தேர்வு செய்து கையில் எடுத்துக்கொண்டு வெளியேறினான். அவளுக்கு போர்த்திவிடவும் மறக்கவில்லை!
“அர்வி. கண்ணா! சீக்கிரமா எழுந்துட்டியா? கிளம்பி ரெடியா இருக்கியே. ஆபீஸ்போக வேண்டாம். வாஸந்தி தூங்கறாளா...? நீயும் நல்லா ரெஸ்ட் எடு”. தூக்கமின்றி சிவந்து களைத்திருந்த கண்களைப் பார்த்து வாஞ்சையுடன் பேசிய தாயை ஏறிட்டவனின் நெஞ்சம் விம்மியது. அவர் எதை நினைத்துப் பேசுகிறார் என்பது புரிந்ததும், முகம் கன்றியது. அதை மறைக்க தனது கேசத்தைக் கோதியபடியே,
“இல்லைமா இன்னிக்கு கண்டிப்பா நான் போயே ஆகணும் நம்ம புது யூனிட்டுக்கு மெஷினரீஸ் பர்ச்சேஸ் பண்ற விஷயமா ஒரு சின்ன மீட்டிங் இருக்கு. ஜி.எம் கிட்ட அதுபற்றி டிஸ்கஸ் பண்ணணும். அதுக்கப்புறம் நானும் அவரும் ஜெர்மன் போக வேண்டியிருக்கும். அங்க போய் பார்த்துட்டுதான் ஆர்டர் பண்ணனும். டிபன் வைக்ககிறீங்களா? நான் போயிட்டு முடிந்தவரை சீக்கிரமா வரப்பார்க்கிறேன்.” தாயின் முகம் பாராமல் முணுமுணுத்துவிட்டு டைனிங் டேபிள் முன் அமர்ந்தான்.
அமைதியாக சாப்பிட்டு முடிந்ததும், ”அம்மா வசு நல்லா தூங்கறா. நைட் சரியா தூங்கல அதனால அவளா எழுந்து வரட்டும். நீங்க டிபன் சாப்பிட்டுருங்க”. பதில் வராது போகவே நிமிர்ந்து தாயைப் பார்த்தான். நமுட்டுச் சிரிப்போடு தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவரின் மனதை காயப்படுத்த மனமின்றி முகம் சிவக்க ஹாலுக்கு விரைந்தான்.
”கஷ்டம்டா சாமி ...! பத்ரகாளி தானாகவே மலை இறங்கட்டும்னு நினைச்சு தப்பாபேசி சொதப்பிட்டேனே” என்று தன்னையே நொந்துகொண்டு காரிலேறினான்.
வெகு நேரம் கழித்து கதவைத் தட்டும் ஒலி சன்னமாக காதில் விழ, வாஸந்தி சிரமப்பட்டு இமைகளைப் பிரித்தெடுத்தாள். ஆதவனின் கிரணங்கள் முழுவதுமாக அறைக்குள் நுழைந்து வெளிச்சத்தை பரப்பியிருந்தன. விடிந்து போய் அதிக நேரம் கடந்துவிட்டிருப்பது புரிந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவசரமாக எழுந்தாள். உள்ளே நுழைந்த கமலாம்மாவை ஏறிட்டுப் பார்க்கவும் கூசியவளாய்,
“சாரி... கமலாம்மா.. ரொம்ப லேட்டாயிருச்சு. அமமா எழுந்தாச்சா. ஐந்தே நிமிஷம்...! குளிச்சிட்டு வந்திடறேன். அம்மா டிபன் சாப்பிட்டாங்களா... விடிஞ்ச பிறகு தான் தூங்கவே ஆரம்பிச்சேன்...” பேசத் துவங்கியதின் அர்த்தம் மூளையில் உறைக்க, முகம் சிவந்தவளாய், வாயை மூடிக் கொண்டு குறியலறைக்குள் புகுந்தாள்.
வெளியே வந்தபோது, அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவரை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கினாள். அவள் மனம் புரிந்து, கமலாம்மா, கன்னத்தை வருடி, “மெதுவா வா கண்ணு அவசரமில்லை. அம்மா நேரமே சாப்பிட்டாச்சு. வெறும் வயித்தோட தூங்க வேண்டாம்னுதான் டிபன் கொண்டாந்தேன். ஒரு வாய் சாப்பிட்டுட்டு அப்புறமா தூங்கு. தம்பியும் உன்னை எழுப்ப வேண்டாம்னு சொல்லுச்சு. தங்கம் ... இன்னிக்கு ஒரு சொம்பு தலைக்கு ஊத்திக்க. அம்மா சொல்லச் சொன்னாங்க. அவர் பேசியதும் வாஸந்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. நேத்து நடந்தது தெரிஞ்சா ... யோசித்துக்கொண்டே குளித்து முடித்தாள்.
இவள் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் மாடிப்படியையே பார்த்துக்கொண்டிருந்த கௌசல்யா
“வாடாம்மா ..! போய் பூஜை அறையில் விளக்கேத்தி சாமி கும்பிடு. உன் மாமாவையும் அப்படியே கும்பிட்டுக்க. இன்னிக்கு மாதிரியே ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அப்பதான் எனக்கு நிம்மதி. சீக்கிரமா ஒரு பேரனை பெத்து என் கையில கொடுத்துட்டு, அப்புறமா நீ வேலைக்குப்போ. நான் வளர்த்துக்கறேன். நீ படிச்ச படிப்பு வீணாப் போகக்ககூடாது.” கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
தாயன்பின் ருசியை ஏறக்குறை மறந்தே போயிருந்த வாஸந்திக்கு, கௌசல்யாவின் பேச்சு கண்ணீரை வரவழைத்தது. தன் தாய் கூட பாசத்தை இதுபோல வெளிப்படையாக காட்டியதே இல்லை . அவரது பரிவும் அக்கறையும் கூட எப்போதும் ஒரு கண்டிப்பு கலந்தே இருக்கும். தனது வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் தன் மகளை ஒரு போதும் தீண்டக் கூடாது என்பதால் வாஸந்திக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அவரது அக்கறை செயல்களில் மட்டுமே வெளிப்படுமேயன்றி, வார்த்தைகளால்அவளை என்றுமே அவர் அரவணைத்தது இல்லை. அதனால் இத்தனை கனிவான பேச்சைக் கேட்டு மனம் கசிந்தது. உரிமையோடு அவர் அருகே சென்று மடியில் தலைசாய்த்தாள். இரவு முழுவதும் சஞ்சலமடைந்த உள்ளம் ஏதோ ஒரு வகையில் ஆறுதலமைந்தது.
அவளின் தலையை வருடிய கௌசல்யா, “என்ன கண்ணா! போய் டிபன் சாப்பிடு. மணி பதினொன்று.. தலை ரொம்ப ஈரமா இருக்கு... டவல் எடுத்து வா நான் துவட்டி விடறேன். அர்வி உன்னை எழுப்ப வேண்டான்னு சொன்னான். எனக்கு தான் மனசு கேக்கலை. பசியோடு தூங்க வேண்டாம்.. சாப்பிட்டுட்டு போய் தூங்கு.. தம்பி முடிஞ்ச வரை சீக்கிரமே வருவதாக சொன்னான். வந்ததும், வெளியே போயிட்டு வாங்க.. மொதல்ல ஸ்வீட் சாப்பிடு... போடாம்மா”
அவர் பேசப் பேச கண்கள் கரித்தது. இந்த அளவு பாசம் பொழிபவரிடம் சந்தோஷமாக வாழ்வது போல தினமும் நடித்து ஏமாற்ற முடியாது. அவரின் அன்பு பலப்
பட்டு, தன் பிரிவை தாங்க முடியாத நிலை ஏற்படுமுன், இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
தன் அறைக்குள் நுழைந்து தலை சாய்த்துதும் , ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே உடனடியாக தீர்மானம் செய்ய வேண்டும். அம்மாவை இனியும் ஏமாற்றக் கூடாது சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டும் ..’ அரவிந்த் உடனடியாக அவளுக்கு ஒரு வேலை வாங்கித் தந்து அனுப்பி வைப்பதாகச் சொன்னதும், ஒரு நொடி ஏமாற்றம் அவளை சூழ்ந்தாலும், ‘ஒரு வேளை என் அரவிந்த்தின் ஐந்து வருட பாராமுகத்துக்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்...’ என்று கேள்வியும் எழுந்தது.. ‘எதுவாக இருந்தாலும் என்னைத் தேடி வந்து விளக்கம் சொல்லியிருக்க வேண்டும் அது இல்லை எனும் போது தவறு அரவிந்த் மேல் தான்’ என்று உறுதியாக நம்பினாள... யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டுக் கிளம்பியது வாஸந்தி தான் என்பதை மட்டும் மறந்தே போனாள்...!
இருவருக்குமிடையேயான இந்த ஊமை நாடகம் வெற்றிகரமாக பத்து நாட்களைக் கடந்தது.. அதை கௌசல்யா அறியாதபடி சாமர்த்தியமாக சமாளித்தும் வந்தனர். அன்று இரவு, தன்னறைக்குள் நுழையுமுன்பு, அரவிந்த்,
“வாஸந்தி... ஒரு நிமிஷம்...”
.......
“நான் இங்கே கங்கா ஹாஸ்பிடலில் உனக்கு வேலைக்கு சொல்லியிருக்கேன். அவங்களோட ஹாஸ்பிடல் தமிழ்நாட்டில் முக்கியமான எல்லா ஊர்களிலும் இருக்கு. சென்னையில் ஒரு ஃபார்மல் இன்டர்வியூ வைப்பாங்க. போஸ்டிங்ஸ் அனேகமா வெளியூரில் தான் இருக்கும்... இங்கே உனக்கு தேவையில்லாத பிரச்னை வரும்னு தான் வெளியே... முடிஞ்சா இங்க கோயமுத்தூர்லயே போட சொல்லியிருக்கேன்.” என்றதும் இருவரிடையேயும் பலத்த மௌனம். அரவிந்தே அதைக் கலைத்து ,”இங்கே நம்ம ஹாஸ்பிடலே இருக்கு. ஆனா என் மூஞ்சியையே
பார்க்க பிடிக்காத உன்னை கட்டுப்படுத்த விரும்பலை... நீ எப்ப வேணா கிளம்ப வேண்டியிருக்கும். அதனால ரெடியா இரு. நான் அவசரமா ஜெர்மன் போகணும். அதுவரை அம்மா கூட இரு. வந்த பிறகு எதாவது சொல்லி நான் சமாளிச்சுக்குவேன்... இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கோ. அதன் பிறகு நீ உன் விருப்பப்படி தனியா போகலாம்.” உணர்ச்சியற்ற குரலில் உரைத்து விட்டு, தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
வாஸந்திக்கு அவமானமாக இருந்தது... அரவிந்த இன்று வரை ஒருமுறை கூட அவளை சமாதானப்படுத்தும் விதமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது ஆத்திரத்தை கிளப்பியது. அதோடு கூட தன்னை வீட்டை விட்டு அனுப்புவதில் முனைப்போடு இருக்கிறான் என்பது கூடுதலாக ரோஷத்தை கிளர, அழுகை முட்டியது.. இவளின் பேச்சு தான அரவிந்தை வெறுத்துப் போகச் செய்தது என்பதே அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. புறங்கையால் கண்ணீரைத் துடைத்தவளுக்கு ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ‘போடா.! என்னை வீட்டை விட்டு துரத்த முடிவு பண்ணிட்டயில்ல... போ.. நீ யார் எனக்கு வேலை பார்த்து கொடுக்க.. என் தகுதிக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும். நானே எல்லாத்தையும் பார்த்துக்கறேன். நீ என்ன என்னை அனுப்பறது? நானே வீட்டை விட்டு போயிடறேன்..’ என்று மிகச் சரியாக தன் வாழ்க்கையில் மற்றுமொருமுறை தவறானதொரு முடிவையெடுத்து, அந்தப் பாதையில்’ அடியெடுத்து வைத்தாள்.
அரவிந்த் ஜெர்மன் கிளம்பிப் போகும் வரை அமைதியாக இருந்தாள். மறுநாள் காஞ்சிபுரத்தில் தான் சேரவிருந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டாள் இன்று வரை அவளிடமிருந்து எந்த தகவலும் போய்ச்சேராததால் வேறொரு மருத்துவர் பணியில் அமர்ந்து விட்டதாக தகவல் வந்தது.. வாஸந்தி சோர்ந்து போனாள்.
அன்று வழக்கம் போல செய்தித் தாளை படித்துக் கொண்டிருந்தவளின் விழிகள் அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் விரிந்தது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஊன்றிப் படித்து விபரங்களை சேகரித்துக் கொண்டாள். அதில் குறிப்பிட்டிருந்த செல்போனைத் தொடர்பு கொண்டு மேலும் தேவையான விபரங்களைப் பெற்று அதற்கு விண்ணப்பித்தாள்.. நான்கு நாட்களுக்குப் பிறகு அவளை இன்டர்வியூவிற்கு வருமாறு அழைத்து மருத்துவமனையிலிருந்து மெயில் வந்த போது கொஞ்சம் படபடத்துப் போனாள்.. தான் எடுத்த முடிவு சரியா தவறா என்ற குழப்பத்தோடு, கௌசல்யாவைப் பிரிவதும் வேதனையைத் தர தன் மனதோடு போராடி களைத்துப் போனாள். அவள் கிளம்பத் தோந்தெடுத்த நாளுக்கு மிகச்சரியாக நான்கு நாட்கள் முன்பாகவே அரவிந்த் ஜெர்மனியிலிருந்து திரும்பியிருந்தான். இருவரிடையேயும் எந்த விதமான பேச்சு வார்த்தையும் இன்றி நாட்கள் அமைதியாகக் கழிந்தன. அரவிந்தும் அவளை ஏறெடுத்தும் பாராமல் வந்தவுடன் தன் அறைக்குள் புகுந்து கொள்வான்.
கௌசல்யாவுக்கோ இருவரின் போக்கும் கவலையை அளிக்கவே வாஸந்தியிடம் விசாரித்தார். “இல்லை அத்தை.. அவர் புது ப்ராஜெக்டில் தீவிரமா வேலை செய்துகிட்டு இருக்கார். வேற எதுவும் இல்லை” என்று சமாதானப்படுத்தினாள்..
அன்று காலை சீக்கிரமே எழுந்து ரெடியாகி, “கமலாக்கா! இன்னிக்கு ஒரு நாள் டிபன் நான் செய்யறேன். எனக்கு நீங்க கூட கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று அரவிந்துக்கு பிடித்த சமையலை செய்து முடித்தாள்... வழக்கம் போல டிபனை ருசித்த அரவிந்த், ” கமலாம்மா ! டிபன் ஏ கிளாஸ். எல்லாமே சூப்பரா இருக்கு. ஸ்வீட் கூட செஞ்சிருக்கீங்க.. இன்னிக்கு என்ன விசேஷம்? ரொம்ப நாளைக்கு பிறகு செமகட்டு கட்டிட்டேன். தேங்க்ஸ்” புன்னகைத்தான்.
“தம்பி! டிபன் இன்னிக்கு நம்ப வாஸூம்மா தான் செஞ்சுது. அவங்களுக்குத் தான் உங்க தேங்கஸ் எல்லாம்” என்றார். முகத்தில் படர்ந்த புன்னகை மறைய, எழுந்து கைகழுவியவன் வாஸந்தியின் அருகே வந்து,
“எதுக்கு அனாவசியமா இந்த டிராமா எல்லாம் பண்ற. தேவையில்லை.உன் வேலை எதுவோ அதை மடடும் பாரு. உன் நளபாகத்தை இங்கே காட்டத் தேவையில்லை” பார்வையால் அவளை சுட்டெரித்து விட்டு கிளம்பிச் சென்றான். வாஸந்தி இதை துளியும் எதிர்பாராது விக்கித்துப் போனாள்.

அவன் பேசியதைக் கேட்டபடியே வந்த கௌசல்யா, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார். காயம் பட்ட இதயத்திற்கு அவரின் அணைப்பு நிம்மதியளித்தது.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,121
679
113
Ariyalur
அருமை அம்மா, ஒண்ணுமே புரியல வாஸந்தி கிட்ட, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது 🤔🤔🤔🤔🤔🤔