• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 6

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 6

அவன் பேசியதைக் கேட்டபடியே வந்த கௌசல்யா, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார். காயம் பட்ட இதயத்திற்கு அவரின் அணைப்பு நிம்மதியளித்தது.

அன்று மாலை வீடு திரும்பிய அரவிந்தின் மனமும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு தான் இருந்தது. தான் பேசியது அதிகப்படிதான் என்பதை உணர்ந்ததும், கண்கள் வாஸந்தியை தேட ஏமாற்றமே மிஞ்சியது.. சோபாவில் அமர்ந்திருந்த தாயின் மடியில் தலை சாய்த்தான்.

அவன் நெற்றியை மிருதுவாக வருடியபடி, “அர்வி கண்ணா.! நீயும் வாஸந்தியும் சந்தோஷமாகத் தானே இருக்கீங்க? காலையில் அவளை சமைக்க வேண்டான்னு நீ திட்டியதும் அவ முகமே வாடிப் போச்சு. உங்களுக்குள்ள என்ன பிரச்னைன்னு எனக்கு தெரிய வேண்டாம்.. ஆனா அதை எப்படி அதை சரிப்படுத்தறதுன்னு யோசனை பண்ணு. அவ உன்னை விட சின்னப் பொண்ணு தானே. இந்த வயசுக்கு நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா. இதுவரை எப்படியோ போகட்டும். நம்ம கிட்ட வந்து சேர்ந்த பிறகு அவ கண் கலங்கக் கூடாது. அவ கோபப்பட்டாலும் நீ பொறுத்துப் போ.. நீங்க சந்தோஷமா இருந்தா தானே கண்ணா” என்று கண் கலங்கியவரைப் பார்த்து துடித்துப் போனான். வேகமாக எழுந்து அவர் தோள்களை அணைத்து.

“அம்மா.! நீங்களா எதுவும் கற்பனை பண்ணிக்காதீங்க. நான் ஆபீஸ்ல கொஞ்சம் பிஸி. உங்களுக்கே தெரியும் நாம இப்ப இருக்கிற நிலைமைக்கு வர நான் எத்தனை பாடு பட்டிருக்கேன்னு. அதை தக்க வெச்சுக்க வேண்டாமா.? இந்த வேலை முடிஞ்சு, மெஷினரி செட் பண்ணிட்டா அப்புறம் ஃப்ரீதான். அதன் பிறகு அவளை ஃபாரின் கூட்டிட்டு போறேன். டோண்ட் வொர்ரி மா...

நான் என் வசுவை என் உயிரா நேசிக்கறேன் மா.. அவளை எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. இன்னும் பத்து நாளில் எல்லாப் பிரச்சனையும் சால்வ் ஆயிடும்” என்றவனின் குரலில் சற்றே கலக்கமும் சேர்ந்திருந்தது. இதையெல்லாம் உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த வாஸந்திக்கு உள்ளுர குளிரெடுத்தது. அரவிந்த் ஆபிஸ் கிளம்பினான்.

நாளை கிளம்பிவிட்டால் கௌசல்யா அதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாரோ என்ற வேதனை அவளை கொன்று தின்றது. இந்த அளவு அவர் மனதை காயப்படுத்தி

தான் வெளியேற வேண்டுமா என்ற கேள்வி கூட எழுந்தது. அரவிந்த் ஐந்து வருடங்களுக்கு முன் அத்தனை பேர் முன்னிலையில் தன் கைபிடித்து ஆபீசிலிருந்து வெளியேற்றியது திரைப்படமாக அவள் மனதில் ஓட, தன் முடிவில் திடமுற்றாள்.

கௌசல்யாவைப் பற்றி நினைத்த போது மட்டுமே மனதில் வலி! இத்தனை அன்பானவரை பிரிந்து செல்ல வேண்டுமே என்ற குற்றவுணர்ச்சி. ‘நம்மைப பார்த்து சில நாட்கள் தானே ஆகிறது. வீட்டைவிட்டு போனதும் சீக்கிரமே மறந்து விடுவார்’ என்று சமாதானம் செய்து கொண்டு கிளம்பத் தயாரானாள்.

கமலாம்மா வாட்ச்மேனின் துணையோடு கடைக்கு கிளம்பியதும், தான்கொண்டு வந்த பேகில் நான்கு செட் உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டாள். தான் கொண்டு வந்த சான்றிதழ்களோடு அரவிந்தின் லேமினேட் செய்யப்பட்ட போட்டோவும் அவள் பேகில் குடியேறியது.

கௌசல்யாவின் அறைக்குள் நுழைந்தவளின் கண்களை நீர்ப்படலம் மறைக்க, அறையே மங்கலானது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவரின் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு, ஒரு நொடியும் தாமதிக்காமல், வேகமாக வெளியேறினாள். அவர்கள் வீட்டு வாயிலின் அருகே காலியாக வந்த ஆட்டோவில் நிறுத்தி,” பஸ்டேண்ட் போகணும் அண்ணா” என்று அதில் அமர்ந்தாள்.

தான் எழுதிய கடிதத்தை எளிதில் கண்ணில் படுமாறு ஹாலில் உள்ள டேபிளில் வைத்து அதன் மேல் டி.வி. ரிமோட்டை வைத்திருந்தாள். மனம் முழுக்க ஏதோ ஒரு துயரம் ஊசியாய் துளைக்க,’இனி தன் எதிர்காலம் என்னவாகுமோ’ என்ற பயத்தில் மடியில் கிடந்த ஹேண்ட்பேகை ஆதரவாக தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அரவிந்தை வேண்டாம் என முடிவு செய்து விலகி வந்ததும் தான் வாஸந்தியின் மனம் அவனையே நாடியது. கண்கள் கரிக்க, அவன் பிரிவை தாள முடியாமல் பரிதவித்தாள்.. அன்று அவன் ஆபிசில் தான் பட்ட அவமானத்தையும் மீறி அவன் மேல் தான் கொண்ட காதலே மனம் முழுக்க நிறைந்து வழிவது கண்டு தன்னையே வெறுத்தாள்.

***********

வீட்டுக்குள் வந்த கமலாம்மாவோ, எந்த சந்தேகமும் இன்றி, வழக்கம் போல சமையலில் ஈடுபட்டார். மணி ஒன்றானதும், கௌசல்யாவை எழுப்பினார்.

“அம்மா... வாங்க சாப்பிடலாம். வாஸந்தி கீழே இறங்கி வரவே இல்லை. நல்லா தூங்குது போல.. போய் எழுப்பி கூட்டிட்டு வந்திடறேன்.”

“வேண்டாம் கமலா.. காலையிலேயே அவளுக்கு நல்ல தூக்கக் கலக்கம். எழுப்ப வேண்டாம்.. இரண்டு மணிக்கு மேல அவ வரலைன்னா பார்க்கலாம். எனக்கு தட்டு வை. முகம் கழுவிட்டு வரேன்..”

ஓய்வாக தன் அறையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்த கௌசல்யாவிடம் வந்து,

“அம்மா... நம்ம வாஸந்தி ரூம்ல இல்லை. கீழயும் தேடிப் பார்த்துட்டேன். அங்கேயும் இல்லை.. வீடு முழுக்க தேடிட்டேன்..”

“எங்க போகப் போறா.? நீ சரியா பார்த்திருக்க மாட்ட.. வெளியே போறதா சொன்னாளா.? இல்லையே... தனியா எங்கயும் போக மாட்டாளே.. அப்படியே போனாலும் எங்கிட்ட சொல்லாம போகவே மாட்டா...”

மறுபடியும் ஹாலுக்கு வந்த கமலாம்மா, “அம்ம்மா இங்க பாருங்களேன். ஏதோ பேப்பர் மாதிரி தெரியுது.. கடைக்கு எங்கியாவது போயிருக்கும் போல இருக்கு. நானும் மார்க்கெட் போயிட்டேன்.. அதான் எழுதி வெச்சிட்டு போயிருக்கு. படிச்சு சொல்லுங்க...”

கரங்களி,ல் மெலிதானதொரு நடுக்கத்தோடு, அதை வாங்கி , படிக்கப் படிக்க அதிர்ச்சியில் முகமெல்லாம் வியர்த்துப் போக, ஒரு கையால் மார்பைப் பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் சாய்ந்தார். பதறிப்போன கமலாம்மா, அவரை சரியாகப் படுக்க வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார். எழுந்ததுமே, கௌசல்யா

“வாஸந்தி... வாஸந்தி...” அரற்ற ஆரம்பித்தவரின் கண்களில் நீர்வழிய, “கமலா..! நெஞ்சு ரொம்ப வலிக்கிற மாதிரி இருக்கு.. டாக்டருக்கு போன் பண்ணு” கண்கள் தாமாக மூடிக் கொண்டன. ஐந்தே நிமிடத்தில் பறந்தோடி வந்த டாக்டர், அவரை முழுவதுமாக பரிசோதித்து விட்டு,

“பயப்பட தேவையில்லை.. ஏதோ அதிர்ச்சியில் கொஞ்சம் பிரஷர் ஏறியிருக்கு..என்னாச்சு? அரவிந்த் எங்கே? “

“டாக்டர்… தம்பி ஆபிஸ் போயிருக்கு. இன்னும் வரலை..”

“சரி.. நான் பேசிக்கறேன்.. அவங்க நல்லா ஓய்வெடுக்கட்டும்.. தூங்குவதற்கு ஊசி போட்டிருக்கேன் பத்திரமா பார்த்துக்கோங்க. நார்மல் டயட் தான்.. நான் கிளினிக் போகும் போது காலையில மறுபடி வந்து பார்க்கிறேன்.. ரெகுலரா சாப்பிடற மாத்திரையோட இதையும் ஒரு மூணு நாளைக்கு நைட் மட்டும் கொடுங்க. அதிகமா அவங்களை பேச விட வேண்டாம். அரவிந்தை சீக்கிரம் வரச் சொல்றேன்.”

சற்று நேரத்திலேயே அரவிந்திடமிருந்து அழைப்பு, “கமலாம்மா... அம்மாவுக்கு என்னாச்சு.? டாக்டர் போன் பண்ணினார். இப்ப எப்படி இருக்காங்க.? வாஸந்தியை அம்மா கூடவே இருக்கச் சொல்லுங்க. நான் கிளம்பிட்டேன்..” போனில் எதுவும் சொல்ல விரும்பாமல்,

“சரி தம்பி.. மெதுவா வா... நாங்க இருக்கோம். அம்மா து£ங்கறாங்க ஒண்ணும் பிரச்னையில்லை...” கௌசல்யாவின் அருகில் வந்து அமர்ந்த கமலாம்மாவினாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஓய்ந்து போய் உறங்கும் அவரைப் பார்த்து துயரம் பொங்கியது.

பறந்து வந்த அரவிந்த் பதற்றத்தோடு தன் தாயைத் தேடிச் சென்றான்.. ‘வாஸந்தி... அம்மா வாஸந்தி... என்று அரற்றிக் கொண்டிருந்தவரைப் பார்த்தும் திகைப்பும் அதிர்ச்சியுமாக கமலாம்மாவிடம்,

“வாஸந்தி எங்கே..?” என்றான்.

என்ன பதில் சொல்வது என யோசித்து அவனிடம் வாஸந்தியின் கடிதத்தை நீட்டினார்.. ஒன்றும் புரியாமல் அதை வாங்கி படித்தவனின் உணர்வுகளை சொல்லில் வடிக்க இயலவில்லை.. இது நாள் வரை மனதில் அடக்கி வைத்த அத்தனை துயரங்களும் வெடித்துச் சிதற, தன் தாயின் பாதங்களில் முகத்தைப் புதைத்து கொண்டான்.

“அம்மா... அம்மா... என்பதைத் தவிர வேறு அத்தனை வார்த்தைகளும் மறந்தே போயின.. தனது கால்களை எட்டி வைக்கக் கூட முடியாமல், வாஸந்தியின் கடிதத்தோடு தள்ளாடியபடியே தன் அறைக்குள் புகுந்து கட்டிலில் சாய்ந்தான்..

எத்தனை நேரம் ஆனதோ, கண்கள் கோவைப் பழமாய் சிவந்திருக்க, இறுகிய முகத்தோடு மறுபடி கடிதத்தை மெல்ல பிரித்தான்..

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அம்மாவுக்கு,

வாஸந்தி தாள முடியாத வேதனையோடு எழுதுவது. ஐந்து வருடங்களாக தாயின் அன்பிற்காக ஏங்கியிருந்த எனக்கு, தங்களின் அறிமுகம் அத்தனை ஏக்கத்தையும மறக்கச் செய்து விட்டது.. பெற்ற தாயை விட அதீத பாசத்தை என்மேல் மழையாகப் பொழிந்தீர்கள்.

அரவிந்த்... நான் உருகி உருகி காதலித்து என் மனதில் இன்னும் பொக்கிஷமாக பாதுகாக்கும் அற்புதமான மனிதர். கல்லூரிப் பருவத்தில் இரண்டு வருடங்கள் மனதார காதலித்தோம்.. அல்லது… நானே அப்படி நினைத்து என்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் அறிந்த அரவிந்த் தூய்மையான அன்பை மட்டுமே பொழிந்து, என்னை பூப்போல அரவணைத்து கொண்டவர்.

வழக்கம் போல என் துரதிர்ஷடம் எங்கும் என்னை விடவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாங்க ரெண்டு பேரும் என் அம்மாவின் ஆசிர்வாதத்தோடு பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதே நாளில் என்னைப் பிரிந்து சென்றவர்தான்... மனதாலும் நான் அவரை விட்டு வெகு தூரம் சென்று விட்டேன்.. அவரில்லாமல் கழித்த ஐந்து வருடங்களும் நரகத்தை மட்டுமே எனக்கு நினைவூட்டியது.. என் தாயையும் இழந்தேன்..

அதன் பிறகு அன்று ட்ரெய்னில் சந்தித்தது தான். அது என் அதிர்ஷ்டமா... இல்லை... ம்ம் ... எனக்கு தெரியவில்லை.. என்னை அன்று வரை ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்த்திராத என் அரவிந்த், உங்களோட வற்புறுத்தலினால் தான் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

அவரின் நேசத்தை புரிந்து அவர் மேல் பைத்தியமாக அன்பை வைத்திருப்பவள் நான்.. அவர் மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட வாழ்க்கையில் அவரோடு மனம் ஒப்பி வாழ்வதை என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இனிமேல் அவரிடம் காதல் மனைவியாய் நடிக்க முடியாதும்மா. என் சுயகௌரவமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னை மன்னிச்சிடுங்கமா.

மருத்துவம் மட்டுமே எனது இலட்சியம். என்பது நான் படிக்கும் போதே செய்து கொண்ட தீர்மானம். அதன் வழி செல்கிறேன். அரவிந்த் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. வருத்தம் மட்டுமே.. அதுவும் காலப் போக்கில் மறைந்து போகும். அவரோடு சேர்ந்து வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் என் மனதில் என் அர்வி மட்டும் தான். இது என் காதல் மீது சத்தியம்.

உங்கள் இருவரின் மகிழ்ச்சியும் நிலைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக நான் இந்த வீட்டை இல்லையில்லை என் கோயிலை விட்டு வெளியேறுகிறேன். உங்களுக்கு பிடித்த, உங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற, அவர் மனதுக்கும் பிடித்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். இனிமேலாவது அவர் வாழ்வு மலரட்டும்.

என்றுமே மனது ஒட்டாத வாழ்க்கையில் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. உங்களைப் பிரிந்து செல்வது என் உயிரையே பிரிவது போன்ற வலியைத் தருகிறது. வேறு வழியில்லை. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், தங்கள் மகளாகவே பிறந்து, உங்களின் மொத்தப் பிரியத்தையும் நானே அனுபவிக்க வேண்டும். மறுபடி ஒருமுறை மன்னிப்பை வேண்டுகிறேன்.

அம்மா..! நான் என் லட்சியத்தை நோக்கி மட்டுமே செல்கிறேன். சத்தியமாக உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன். இனி அவரின் வாழ்க்கையில் என் தலையீடு இருக்கவே இருக்காது. தயவு செய்து என்னைத் தேட முயற்சி செய்ய வேண்டாம்.

என்றும் உங்களை மறவாத

உங்கள் வாஸந்தி...

படித்து முடித்ததும் அவன் முகம் பாறாங்கல்லைப் போல இறுகியது. அவமானம் தாளாமல் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான். உள்ளத்தோடு சேர்ந்து உடலும் சூடானது.. காய்ச்சலோடு முகம் பளபளத்து ரத்தச் சிவப்பாய் மாறியது.. தாங்க முடியாத அவமானத்தில் மனம் துடிக்க, கண்கள் கலங்கின.

‘ஏண்டி...ஏண்டி... என்னை நம்பாம போன.. என் மேல ஒரு துளி கூட நம்பிக்கை வரலையா.? நாம லவ் பண்ண போது நான் உன் மேல காட்டின அக்கறையை நடிப்புன்னு சொல்லிட்டயேடி.. நீ என் உயிர் வசு.. என் காதல் பொய்..ன்னு எப்படி சொல்ல முடிஞ்சுது. இதைத்தான் என்னால் தாங்க முடியலை.

நீ என்னை விட்டுட்டு போனதும் பைத்தியம் மாதிரி உன்னைத் தேடி அலைஞ்சதையெல்லாம்’ நீ தான் சொல்லவே விடலையே.. என்னை ஒரு வார்த்தையாவது பேச விட்டயா.? இங்க நான் எத்தனை கஷ்டத்தை அனுபவிச்சேன்னு உனக்கு தெரியுமா.? அதையெல்லாம் இத்தனை நாளும் என் மனசுக்குள்ளேயே போட்டு போட்டு புதைச்சு வச்சிருந்தேன்டி. நம்ம கல்யாணம் முடிஞ்சதும், உன் மடியில படுத்து என் பாரத்தை உன் கிட்ட இறக்கி வைக்கணும்னு எத்தனை ஆசையா இருந்தேன். உன் வார்த்தையாலேயே என்னை பொசுக்கி என்னைப் பேச விடாம செஞ்சுட்ட. என் பக்கத்து நியாயத்தை கேட்கக் கூட மனசில்லாம எங்களை விட்டு போயிட்ட. உனக்கு ஏண்டி இந்த அவசர புத்தி.?’ மனதுக்குள்ளேயே அத்தனை வலிகளையும் தாங்கியவனது உடலில் அனல் பறந்தது.. அதோடு மயக்கம் அவனைச் சூழ்ந்தது..



மறுநாள் அரவிந்தின் குடும்ப டாக்டர் புகழேந்தியிடம் தன் மனதில் உள்ள துயரத்தை பகிர்ந்து கொண்டான். டாக்டர் அவனது தந்தையின் நெருங்கிய நண்பரும் கூட.. அவனை தோளோடு அணைத்து ஆறுதல் படுத்திய டாக்டர்,

“அரவிந்த்..! மனசுக்கு சங்கடமா தான் இருக்கு ஆனா என்ன செய்யறது.? வாஸந்தி தன்னையும் வருத்திகிட்டு, எல்லோரையும் வேதனைப் பட வெச்சுட்டா . அம்மாவுக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை. அவங்க முன்னால நீ தைரியமா இருக்கணும். அப்பதான் அவங்களும் சீக்கிரமா தேறி வருவாங்க.

உன் அம்மா அவ மேல ரொம்ப பிரியம் வெச்சுட்டாங்க. அதனால தான் அவ பிரிவைத் தாங்க முடியலை. ஒரு இரண்டு நாளாவது நீ அவங்க கூடவே இருந்து கவனிச்சுக்க. அவங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை.

அவளை நாமும் தேடிப் பார்க்கலாம். அவ திரும்பக் கிடைச்சிட்டா எல்லாம் சரியாப் போயிடும். உனக்கும் ஹை ஃபீவர் இருக்கு. வெளியே அலைய வேண்டாம்.. இந்த டேப்லட்ஸ் ஒழுங்கா சாப்பிடு. நான் வாஸந்தியை தேட ஏற்பாடு செய்யறேன். இது வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்.. நீ சாப்பிட்டயா?”

“ம்... இப்ப தான் அம்மாவுக்கு கொடுத்திட்டு இட்லி சாப்பிட்டேன்.. அம்மா ரொம்ப ஓய்ந்து போயிட்டாங்க. அங்கிள்.. அவளை தேட வேண்டாம். எப்ப என் மேல நம்பிக்கை

யில்லாம, வீட்டை விட்டு போனாளோ அப்புறம் எதுவும் இல்லை. என் மனது கல்லா இறுகிப் போயிடுச்சு. இனி நானா போய் அவளைக் கூப்பிட மாட்டேன். அவளுக்கே ஒரு நாள் எப்படியாவது என்னைப் பத்தி தெரிய வரும். அன்னிக்கு எனக்காக என்னைத் தேடி வருவா.. என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அங்கிள். வருவா... கண்டிப்பா வருவா..

அது வரைக்கும் என் மனசில வாஸந்தியோட நினைப்பே வராது. அம்மாவைத் தான் முதல்ல தேத்தணும். நான் பார்த்துக்கறேன்” அரவிந்தின் குரலில் திடமும் உறுதியும் கலந்திருந்தது. அதன் பிறகு கௌசல்யாவின் அருகில் சென்று அவர் கண்களை துடைத்தவன்,

“நான் இருக்கேன் மா... தூங்குங்க. உங்க பக்கத்திலேயே இருக்கேன்”

“கண்ணப்பா.. உன் கை ரொம்ப சுடுது. காய்ச்சல் குறையலை. மாத்திரை சாப்பிட்டாச்சா..”

“ஆச்சும்மா.. டிபனும் சாப்பிட்டேன்.. நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.” அவர் கைகளை வருடி உறங்க வைத்தான்.

மாலை கண் விழித்ததுமே அவர்.,”அர்வி கண்ணா வாஸந்தி வந்துட்டா தானே! என்னை விட்டுட்டு அவளால எங்கயும் போக முடியாது..” ஆசையும் ஆர்வமுமாக பேசிய

வரையே வேதனையுடன் பார்த்த அரவிந்த அவர் கரங்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்..

“இல்லம்மா.. அவ நம்மளப் பத்தி நினைக்கவே இல்லை. என்னைப் பத்தி தப்பா புரிஞ்சு வச்சிருக்காம்மா ஆனா புரியும்... என்னைப் பத்தி தெரிஞ்சுக்குவா.. அப்ப நிச்சயமா திரும்பி வருவா..

இனி உங்களுக்கு நான் இருக்கேம்மா. உங்களுக்கு நான் முக்கியம்னா இனி ஒரு வார்த்தை கூட அவளைப் பத்தி பேசாதீங்க. எனக்கும் நீங்க.. நீங்க மட்டும் போதும்மா,” என்றவனின் குரலில் இருந்த ஈரம், கண்களின் வழியே அந்தத் தாயின் கரங்களை ஸ்பரிசித்தது..

துடித்துப் போய் அவனை அணைத்துக் கொண்டு, “அழாதே கண்ணா.. வாஸந்தியும் நல்ல பொண்ணுதான். சந்தர்ப்ப சூழ்நிலையும் விதியும் சேர்ந்து விளையாடிடுச்சு. கண்டிப்பா இந்த அம்மாவைத் தேடி வந்திடுவா,” அரவிந்தின் கேசத்தை தோதியவர், தன்னையும் ஆறுதல் படுத்திக் கொண்டார்.

இரவு தன் அறையில் படுத்தவனின் நினைவுகள் பின்னோக்கிப் பயணிக்க, முதன் முதலாக தன்னவளைப் பார்த்தது காட்சியாய் விரிந்தது. அத்தனை வேதனையிலும் அவன் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது..

இப்பதான் கதையோட மெயின் பார்ட்டே வரப் போகுது...!!! அட்டென்ஷன் ப்ளீஸ்...

கோவை.! அந்த புகழ்பெற்ற கல்லூரியில் பி.டெக்., முடித்து விட்டு, அதே கல்லூரியில் எம்.டெக் சேர்ந்திருந்தான் அரவிந்த்.. முதல் செமஸ்டர் தேர்வுக்கு முன் ஸ்டடி ஹாலிடேஸ்.. தன் நண்பன் சுனிலுக்காக லேபுக்கு வர வேண்டியிருந்தது. பைக்கில் வந்துகொண்டிருந்தவன் கண்கள் பஸ்டேண்ட் அருகில் கிடந்த பொருளைப் பார்த்ததும் விரிந்தது... பைக்கை நிறுத்தி விட்டு அதைக் கையிலெடுத்தான்.

மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டின் ஹால் டிக்கெட்! முதலாம் ஆண்டு. குழந்தைத் தனம் மாறாத முகம், வெகுளியான பார்வை... போட்டோவில் லயித்துப் போய் பெயரைப் பார்த்தான். ‘வாஸந்தி’ அழகான பெயர்.. சுனிலின் அத்தை பெண் அங்கு தான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறாள்.. இன்று எக்ஸாம் என்று அவளை விஷ் பண்ணுவதற்காக அலாரம் வைத்து, எழுந்து அவன் செய்த கலாட்டா ஞாபகம் வர தானாகவே இதழ் விரிந்தது.

ஓ... இவளுக்கும் இன்று தான் எக்ஸாம் என்றால்... அவனுடைய காலேஜ் எதிரேயே மருத்துவக் கல்லூரி.. யோசிக்காமல் பைக் மெடிக்கல் காலேஜை நோக்கி பறந்தது. மணி ஒன்பது!

அவன் எதிர்பார்த்தது போலவே பேகை மார்போடு அணைத்துக் கொண்டு, மூக்கை உறிஞ்சிக் கொண்டே நடைபாதையில் தன் தோழியோடு சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தது வாஸந்தியேதான்!

எளிமையான லாவண்டர் வண்ண சுடிதாரில், போட்டோவில் பார்த்த குழந்தைத் தனம் நேரில் சற்றே அதிகமாகத் தெரிய, கண்களில் கலக்கமும், பதட்டமும் அவளைப் பார்த்ததும் மெல்ல ஒரு ஈர்ப்பு எழ அவர்களை நோக்கிச் சென்றான்.

அவளருகில் இருந்த தோழி வாய் ஓயாமல் அவளைத் திட்டிக் கொண்டிருந்தாள்!

“எக்ஸ்க்யூஸ் மீ...”

அவன் புறம் திரும்பி, பார்வையாலேயே அவனை சுட்டுப் பொசுக்கிய தோழி,

“போங்க சார்.. உங்க வேலையைப் பாருங்க. வந்து பேச நல்ல நேரம் பார்த்தீங்க போங்க. நாங்களே ரொம்ப டென்ஷனா இருக்கோம். இதில நீங்க வேற..” பொரிந்து தள்ளினாள்.

குறுஞ்சிரிப்பு முகத்தில் படர, “நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் உங்க கிட்ட பேச வரலை.. மிஸ்.வாஸந்தி..ஒரு நிமிஷம்..”

திடீரென பேர் சொல்லிக் கூப்பிட்டதும், கண்களை பயம் சூழ தோழியின் அருகே ஒட்டி நின்று,க்ஷட

“நான் வாஸந்தி இல்லையே.. யார் நீங்க.? உங்களை எனக்குத் தெரியாதே.. என் பேர் எப்படித் தெரியும்..” அவள் பேச்சில் இருந்த வெகுளித்தனம் காந்தமாய் இழுக்க, அவளை உற்று நோக்கினான்.

மாநிறத்துக்கும் சற்றே கூடுதலான நிறம், அழகான வட்ட முகம், பயம் விலகாத கருவண்டு விழிகள், குவிந்த ரோஜா இதழ்கள், குனிந்து தேடியதால் மார்பில் வந்து விழுந்த நீண்ட பின்னல், சற்று முன் தான் அழுதிருப்பாள் போல கண்ணீர்க் கறை காய்ந்து போய் கன்னத்தில் படிந்திருந்தது. ஒப்பனையற்ற அந்த தோற்றத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனான்.

அவனது பார்வையில் முகம் சுளித்த தோழி, வாஸந்தியை மறைத்து நின்று கொண்டு,

“என்ன சார்... எங்களை டீஸ் பண்ண வந்தீங்களா? என்ன வேணும்.? வாஸந்தின்னு இங்க யாரும் இல்லை. போங்க.. இல்லைன்னா கம்ப்ளைண்ட் பண்ணுவோம்” விரல் நீட்டி எச்சரித்தவளைப் பார்த்து சிரிப்பு கொப்பளித்தது.. இருவரையும் சற்றே சீண்டிப் பார்க்க ஆவல் எழ,

“சாரிம்மா... நான் யாரையும் டீஸ் பண்ண வரலை. நான் வாஸந்தியைத் தேடித் தான் வந்தேன். பார்த்தா இநதப் பொண்ணு கொஞ்சம் அதே சாயல்ல இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. அதான் கேட்கலான்னு வந்தேன். சாரி...”

“பார்த்தியாடி... பையன் நான் போட்ட போடுல அரண்டுட்டான்” என்று வாஸந்தியிடம் முணுமுணுத்தாள்...

அவனோ,”சரி... கிளம்பறேன். யாரோ பாவம் .. அந்த வாஸந்தி. ஹால் டிக்கட்டை மிஸ் பண்ணிடுச்சு போல. பஸ் ஸ்டாப்ல கிடந்தது.. எடுத்து கொடுக்கலான்னு தான் வந்தேன். அந்தப் பொண்ணுக்கு அதிர்ஷ்டமில்லை. டைம் வேற ஆச்சு. இனி எங்கே போய் தேடறது. நான் கிளம்பறேன். அவங்க பரிட்சை கோவிந்தா தான்.

என்னைப் போய் தப்பா நினைச்சுட்டீங்க. நல்லதுக்கே காலமில்லை. அதை எடுத்த எடத்திலேயே எறிஞ்சிட்டு போயிட வேண்டியது தான்” சத்தமாகப் புலம்பிக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான். மூச்சிரைக்க ஓடி வந்து இருவரும் வழிமறித்தனர். வாஸந்தியின் கண்களில் சந்தோஷ மின்னல்..

தோழிதான் மறுபடி வாய் திறந்தாள். “சாரி சார். வாஸந்தி இவ தான். ஹால் டிக்கெட் இவளுடையது தான். அதை மிஸ் பண்ணிட்டு தான் தேடிட்டு இருந்தோம் உங்க நல்ல மனசை புரிஞ்சுக்காம ஹார்ஷா பேசிட்டேன் சாரி ப்ளீஸ்... டைம் ஆச்சு.. கொடுத்தீங்கன்னா எக்ஸாம் எழுத போகணும். இன்னிக்கு தான் ஃபர்ஸ்ட் எக்ஸாம். இவ வேற ரொம்ப பயந்து போயிருக்கா.

வாஸந்தியின் தலை வேகமாக ஆமாம் என்றது. அதோடு,”ஆமா சார்.. இது மட்டும் கிடைக்காம நான் வீட்டுக்குப் போயிருந்தா எங்கம்மா என்னைக் கொன்னே போட்டு

ருவாங்க.” என்றவளின் கண்களில் அதீத கலவரம்.

அவளுக்கு ஹால் டிக்கெட் கிடைக்காமல் போனால் எக்ஸாம எழுத முடியாது என்ற கவலை கூட பின்னுக்குத் தள்ளப் பட்டது. அதைக் கண்டு, ”இவங்கம்மா டெரர் பார்ட்டி போல இருக்கு” என்று நினைத்தான்.

ஹால் டிக்கெட்டை கையில் எடுத்ததுமே வாஸந்தியின் கண்கள் ஒளிர, கை தானாக அவன் முன்னே நீண்டது.. மிக அழகான வெண்டைப் பிஞ்சு விரல்கள்...!

“ம்... அப்ப நான் இதை உங்களுக்கு கொடுக்கணும்னா நீங்க ரெண்டு பேரும் எனக்கு ட்ரீட் தரணும்..

வாஸந்தியின் இதயம் படபடத்தது. பேச வாயைத் திறந்த போது அவளை பார்வையாலேயே அடக்கிய தோழி,

“சார்..! ப்ளீஸ் சார்.. பேரம் பேசற நேரமா இது.. டைம் பாருங்க. எக்ஸாம் ஹால் போக பத்து நிமிஷம் தான் இருக்கு.. படிச்சதெல்லாம் டென்ஷன்ல மறந்தே போயிடும் போல இருக்கு.. மீதியெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் சார். முதல்ல எக்ஸாம் எழுதி முடிச்சிடறோம்.” வாஸந்தியை பார்த்து முறைத்து, அடிக்குரலில்,

“உன்னால் தாண்டி எல்லாமே.. எக்ஸாம் சமயத்தில் கூட ஊர் பேர் தெரியாத ஆள்கிட்ட கூட வழிய வேண்டியிருக்கு.. ம்.. பேசிப் பேசி என் தொண்டைத் தண்ணியே வத்திப் போச்சு. வீட்டுக்கு போறப்ப இருக்குடி உனக்கு” கடித்துத் துப்பினாள்.

பின் அரவிந்திடம் திரும்பி, “சார்... இதுக்கு மேல எங்க கம்பெனி தாங்காது. நீங்க பத்திரமா எடுத்து வெச்சு, பொறுப்பா எங்ககிட்ட ஒப்படைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” அவன் கையிலிருந்த ஹால் டிக்கெட்டை ஏறக்குறைய பறித்துக் கொண்டு, வாஸந்தியை இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.
தொடரும்...