• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 7

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 7

பின் அரவிந்திடம் திரும்பி, “சார்... இதுக்கு மேல எங்க கம்பெனி தாங்காது. நீங்க பத்திரமா எடுத்து வெச்சு, பொறுப்பா எங்ககிட்ட ஒப்படைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” அவன் கையிலிருந்த ஹால் டிக்கெட்டை ஏறக்குறைய பறித்துக் கொண்டு, வாஸந்தியை இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.

அந்த அவசரத்திலும் வாஸந்தியின் கண்கள் அவனிடம் ஒரு அவசர நன்றியை உதிர்க்கத் தவறவில்லை. அரவிந்திற்கு வாய் கொள்ளாத சிரிப்பு!.

“அப்பா.! இந்த ஃப்ரண்ட் கேரக்டருக்கு வாய் எத்தனை நீளம்.? எவன் மாட்டப் போறானோ.. செத்தாண்டா சேகரு..” என முகம் தெரியாத அப்பாவிக்காக பரிதாபப் பட்டுக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான்.. ஏனோ வாஸந்தியை நினைத்ததும் மழைச் சாரல் போல மனதில் இதம் பரவியது. தனக்காக காத்திருக்கும் சுனிலை நினைத்ததும் பைக் சீறிப் பாய்ந்தது.

சென்னையைச் சேர்ந்த அரவிந்த், தன் நண்பர்களுக்காகவே சென்னையை விடுத்து, கோவையில் படிக்க வந்தான். சென்னையில் வாகனங்களின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனத்தை நிர்வகித்து வரும் சிவசங்கரனின் ஒரே வாரிசு அரவிந்த். தாய் கௌசல்யாவிற்கோ மகனை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க சம்மதமே இல்லை. சிவசங்கரன் தான்,

“கௌசி! அரவிந்த் நம் கைக்குள்ளேயே வளர்ந்தா, உலக அனுபவமே இல்லாம போயிடும். கொஞ்ச காலம் தனியா இருந்து எல்லாத்தையும் சமாளிக்கப் பழகட்டும். ஃப்ளைட்ல அரை மணி நேர பயணம் தான். எப்ப வேணா போய் பார்த்துக்கலாம். அப்ப தான் அவனுக்கும் எந்தப் பிரச்னையையும் தனியா நின்று சமாளிக்கிற பக்குவம் வரும்.”

இளங்கலை முடியும் வரை ஹாஸ்டலில் தங்க அனுமதித்த கௌசல்யா, அதன் பின் “என்னங்க. இந்த நாலு வருஷத்தில பையன் ரொம்ப இளைச்சு போயிட்டான். கமலாவோட தம்பி கூட சமையல் வேலைக்கு தானே போறான். அவனை கூட அனுப்பி வைக்கலாம். துணைக்கும் ஆச்சு.. வீட்டு சமையலும் சாப்பிடலாம். காலேஜ் பக்கத்திலேயே வீடு பாருங்க.” அதற்கு சம்மதித்த சிவசங்கர், ஏர்போட் அருகில் வீடு பார்த்தார்.. தனிக் குடுத்தனமும் ஆரம்பமாகி, இப்போது அவன் உயிர் நண்பன் சுனிலும் துணை சேர.. வாழ்க்கை திருப்தியாக போய் கொண்டிருந்தது.

கணேஷ் அரவிந்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அரவிந்திடம் விளையாட்டுத் தனமும் குறும்பும் இருந்தாலும், ஒழுக்கம் தவறாதவன். சுனிலும் அப்படியே.. அவனைச் சுற்றி ஆரோக்கியமான நட்பு வட்டம் மட்டுமே சூழ்ந்திருந்ததால், நல்ல பழக்கங்களோடு படிப்பிலும் டாப்பராகத் திகழ்ந்தான். லீவு நாட்களில் தன் தந்தைக்கு தொழிலில் உதவி புரிந்து, அதன் நெளிவு சுளிவுகளை கற்று வந்தான்.

ஒரு மாதம் கழித்து சுனிலோடு அதிகாலைப் பொழுதில் ஜாகிங் செய்து கொண்டிருந்தான். இளம் சூரியனின் கதிர்கள் பட்டு மினு மினுத்த செயினை தெருவில் கண்டு கையில் எடுத்தான்.. ஓரிடத்தில் கட்டாகி இருந்தது. ஏனோ வாஸந்தியின் முகம் வந்து போனது.. மெல்லப் புன்னகைத்தவன். அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஓட்டத்தை தொடர்ந்தான். அதே பஸ் ஸ்டாப்பை கடக்கும் போது, யாரையோ அதட்டிக் கொண்டிருந்த குரல் கேட்டு அவன் கால்கள் தயங்கி நின்றன.

அவளே தான்.! திட்டு வாங்கிக் கொண்டிருந்ததும் சாட்சாத் வாஸந்தியே தான்.!!!

“உனக்கு எப்பவும் இதே பொழப்பாப் போச்சுடி. கழுத்தில இருந்த செயின் காணாம போறது கூட தெரியாம பராக்கு பாத்துட்டு வந்தியா.? ஆன்ட்டி சொல்றதிலயும் தப்பே இல்லை. ‘உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. கவனமா பாத்துக்க. தனியா விடாதே’ன்னு கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி சொல்லும்போது எரிச்சலா வரும். ஆனா அதோட அர்த்தம் இப்ப புரியுது. எங்க போய் தேடறதுன்னு சொல்லு? செயின் எத்தனை பவுன்.?”

அவள் திட்டிய எதுவுமே உரைக்காதவளாய், “அஞ்சு பவுன் பா.. அதான் ரொம்ப பயமா இருக்கு. இப்படியே எங்கியாவது ஓடிலடான்னு தோணுது. செயின் தொலைஞ்சு போச்சுன்னு சொன்னா, அம்மா என்னை தொலைச்சுக் கட்டிடுவாங்க. இப்ப என்ன பண்றது.? நீயே சொல்லேன்பா.. லைப்ரரி போய் ரெஃபரன்ஸ் எடுக்கணும்னு பொய் சொல்லி இன்னிக்கு சீக்கிரம் வந்தாச்சு.. நேத்து நைட் தூங்கற வரை என் கழுத்தில செயின் இல்லைன்னு அம்மா கண்டு பிடிச்சிருவாங்களோன்னு ரொம்ப ரொம்ப பயந்திட்டே இருந்தேன் தெரியுமா.? நல்ல வேளை .. தப்பிச்சேன். அதான் காலையில டிபன் கூட சாப்பிடாம கிளம்பி வந்திட்டேன். பசிக்குதுப்பா.. ப்ளீஸ். முறைக்காதே.. கண்டிப்பாக நான் எதுவும் பண்ணலை அதுவா தான் தொலைஞ்சுது.” என்று பரிதாபமாகப் பார்த்தவளை பஸ்பமாககும் முடிவோடு பார்வையால் சுட்டெரித்தாள்.

அரவிந்த் வாய் விட்டு சிரித்தான். இந்த முறையும் அவள் தொலைத்த செயின் தன்னிடமே வந்து சேர்ந்தது நினைத்து கூட பார்க்க முடியாத அளவு ஆச்சரியமாக இருந்தது.. அப்போது சுனிலிடமிருந்து போன்,

“எங்கடா போன.. என் கூட தான வந்த.?.”- அரவிந்த்

“இல்ல டா.. வழியில நம்ம வசந்தை பார்த்தேன்.. காஃபி ஷாப் போயிட்டேன். நான் நேரா வீட்டுக்கு வந்திடறேன்.. நீ எங்க இருக்க?”

“வீட்டுக்கு தான்டா வரேன்.. அரைமணியில் அங்க இருப்பேன்.” அலைபேசியை அணைத்து விட்டு, அவர்களை சீண்டிப் பார்க்கும் ஆவலில் உற்சாகமாக அவளருகில் சென்றான்.

“ஹலோ வாஸந்தி மேடம்! எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதினீங்களா.?”

குரல் வந்த திசையில் திரும்பியவளின் கண்கள் தாமாக ஒளிர, முகம் முழுக்க புன்னகையோடு,

“ஃபர்ஸ்ட் கிளாசா எழுதிட்டேன் சார். ரொம்ப தேங்க்ஸ்.”

“எனக்கெதுக்கு தாங்க்ஸ் எல்லாம். அதான் சொன்ன மாதிரியே எனக்கு பெரிய ட்ரீட் கொடுத்து அசத்தீட்டிங்களே..” என்றான் நக்கலாக..

குழப்பத்தோடு, ”ட்ரீட்டா... நான் தான் கொடுக்கவே இல்லையே.” என்றவள் சந்தேகமாக தோழியைப் பார்த்து,

“ஏம்ப்பா... எனக்கு தெரியாம சாருக்கு நீ ட்ரீட் ஏதும் கொடுத்தியா..” என்று வேறு கேட்டு மானத்தை வாங்கினாள்..

கொதிநிலைக்குப் போன அவள் தோழி, பல்லைக் கடித்து,

“ட்ரீட் தானே... வீட்டுக்குப் போ.. பெரிசா உங்கம்மா கொடுப்பாங்க.. சாரி சார்.. அன்னிக்கு அவசரத்தில உங்களைப் பத்தி எதுவுமே விசாரிக்காம போயிட்டோம். பின்ன எப்படி உங்களை கான்டாக்ட் பண்றது? அதான்...” என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டு அவனையே மடக்கினாள்.

“சரி... ஒகே.. என் பேர் அரவிந்தாக்ஷன். ஷார்ட்டா அரவிந்த்.. இன்னும் ஷார்ட்டா நீங்க எப்படி வேணா கூப்பிடலாம். இந்த காலேஜ்ல தான் எம்.டெக் பண்றேன். ஆமா மறுபடியும் எதுக்கு காலையிலயே அர்ச்சனை பண்றீங்க.. ஏதோ பேய் அடிச்சு, மந்திரிக்க கூட்டிட்டு போற மாதிரி இருக்கு”

வாஸந்தி.. முந்திக் கொண்டு, “இல்லல்ல. என் செயின் தொலைஞ்சு போச்சு. நேத்தே..! அதைத் தான் தேடறோம்..”

எரிச்சலடைந்த தோழி.. “ஆமா.. பெரிய துப்பறியும் சாம்பு.. பின்னாலயே வந்திட்டாரு.”

அரவிந்த் நமட்டுச் சிரிப்போடு,”ஏங்க வாஸந்தி.. ஏன் உங்க ஃப்ரண்ட் என் மேல பயங்கர காண்டா இருக்காங்க. காணாமப் போன பொருளை எடுத்து தேடி கண்டுபிடிச்சு உரியவங்க கிட்ட சேர்த்தது கூட தப்பா.. ஆனா ஒரு விதத்தில் நான் துப்பறியும் சாம்புவே தான். நிஜமாகவே உங்களைப் பார்த்துட்டு, அதுக்கு தான் வந்தேன்.. அதுவும் நீங்க திட்டு வாங்கறதை கேட்டதும் கன்ஃபர்ம் ஆயிடுச்சு.. இதுவா பாருங்க” செயினை எடுத்து நீட்டியதும்,

தோழியின் விழிகள் பிதுங்கி, அதிர்ச்சியில் வாய் பிளந்தது. வாஸந்தியின் முகமோ சந்தோஷத்தில் மலர்ந்து விகசித்தது.

“சார்.. நிஜமாகவே நீங்க தெய்வம் தான் சார். சத்தியமா நம்ப முடியலை. இங்க பாருப்பா... செயின் கட்டாகி இருக்கு. என் மேல எந்தத் தப்பும் இல்லை..” உணர்ச்சி வேகத்தில் வாஸந்தியின் குரல் நடுங்கியது.

“ரொம்ப ரொம்ப தேங்கஸ் சார்” உணர்ந்து சொன்னவளையே விழியிமைக்காமல் பார்த்த அரவிந்த், பதில் கூறாது மெல்ல தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வாஸந்தியே, “சார்.. இந்த தடவை கண்டிப்பா உங்களுக்கு ட்ரீட் தர்றோம். ஏம்ப்பா நான் சொல்றது சரிதானே... ஆனா சார் என் கிட்ட இப்ப வெறும் ஹன்ட்ரட் ருபீஸ் தான் இருக்கு. அதுக்குள்ள என்ன வேணும்னாலும் வாங்கிக்கலாம்” சலுகையை அள்ளி வீசியவளைப் பார்த்து திகைத்துப் போனான்.

அவள் ஃப்ரண்ட், “ஏய் வாஸூ.! வாயை மூடு.. அவர் இப்ப உன் கிட்ட ட்ரீட் கேட்டாரா.. இத்தனை விளக்கம் வேற.. நீ மெதுவா நட.. நான் இதோ வந்திடறேன்..”

“அரவிந்த் சார்.. தேங்க்ஸ். இவ ரொம்ப வெகுளி. மனுஷங்களை எடை போடத் தெரியாது. எல்லோரையும் பார்த்தவுடனே நம்பிடுவா. நாளைக்கு லஞ்ச் டைம்ல எங்க காலேஜ் காண்டீன் வந்திடுங்க. நாங்களும் வரோம். வெளியே போய் சாப்பிட இரண்டு பேர் வீட்லயும் பர்மிஷன் தரமாட்டாங்க. அவங்களுக்கு தெரியாம நாங்க போகவும் மாட்டோம். தப்பா நினைக்காதீங்க. இவ ரொம்ப இன்னசென்ட்டா இருக்கறதால தான் நான் ஸ்ட்ரிக்டா பேசிடறேன். அவங்கம்மாவையும் என்னையும் தவிர யாரும் அவளை புரிஞ்சுக்க மாட்டாங்க..” உணர்ந்து பேசியவளை வாஞ்சையும் மதிப்புமாகப் பார்த்த அரவிந்த்,

“புரியுதும்மா.. வாஸந்தி மாதிரி கூட, இந்தக் காலத்திலயும் இருக்காங்களான்னு ஆச்சரியமா இருக்கு. நீ அவ கூட இருக்கிறது அவளுக்கு ஒரு வரம். இரண்டு பேர் ஃப்ரண்ட்ஷிப்பும் பார்த்தா சந்தோஷமா இருக்கு.. உலகம்னா என்னன்னு அவளுக்கும் புரியவை.. பாதுகாப்பு கொடுத்தா மட்டும் போதாது. தனியா எந்த சிச்சுவேஷனையும் ஃபேஸ் பண்ணுனும் இல்லையா? எத்தனை நாளைக்கு நீ அவ கூடவே இருக்க முடியும்? சொல்லி புரியவை.. எனக்கு காலேஜ் கிளம்ப டைம் ஆயிடும். வீட்டுக்கு போய் ரெடியாகணும்.. நாளைக்கு வரேன் பத்திரமா போங்க”

“தேங்க்ஸ் அண்ணா... எங்களை புரிஞ்சுகிட்டதுக்கு.வரோம்” வாஸந்தியோடு இணைந்து நடந்தாள்.

சுனிலிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு, மறுநாள் மதியம் அவனையும் இழுத்துக் கொண்டு மெடிக்கல் காலேஜ் காண்டீனில் காத்திருந்தான். சுனில் புலம்பினான்.

“டேய் அரவிந்தா.. என் ஆளும் இங்க தான்டா படிக்கிறா.. ஆனா அவளைப் பார்க்க இங்க வரக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்கா. வாரம் ஒரு தடவை தான் பேச முடியுது. இதில இவ என் அத்தை பொண்ணு வேற.. இருடா.. நான் அப்படியே ஒரு ரவுண்ட் போய் அவ கண்ல படறாளான்னு பார்க்கறேன்.. மீதி ஆறு நாளும் கடலை போட வேற எதாவது ஃபிகர் மாட்டினாலும் மாட்டும்.. “கண்ணடித்து விட்டு கிளம்பினான்.

வாஸந்தி முழு வெண்மை நிற உடையில் தன் தோழியோடு அழகு தேவதையாக மிதந்து வந்தாள். அரவிந்தால் அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. நிஜத்தில் ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும் போதும் தன்னில் ஒன்று தொலைவதை உணர்ந்தான்.

ஃப்ரண்ட் “சாரிண்ணா.. லேட்டாயிருச்சு.. உங்களுக்கு என்ன வேணும்? நாங்க போய் வாங்கிட்டு வரோம்..”

“பரவாயில்லம்மா.. என் ஃப்ரண்டும் கூட வந்திருக்கான் அவனும் வரட்டும். வெயிட் பண்ணலாம்..

வாஸந்தி அவள் கையை சுரண்டி, ”டி... என் கிட்ட பணம் கம்மியா தான் இருக்கு. பத்துமான்னு தெரியலை.. என்னப்பா பண்றது?”

“உன் திருவாயைக் கொஞ்சம் மூடறியா.? எல்லாம் நான் பார்த்துக்கறேன்..” அவளைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள்.. அந்த நொடியே அரவிந்தின் மனம், ‘இவள் தான் உனக்கான தேவதை’ என்று கூவியது. தன்னில் தொலைந்தது அவன் இதயமே என்றும் அது பத்திரமாக அவளிடம் சென்று சேர்ந்ததையும் உணர்ந்து கொண்டான்.

அதன் பிறகு படிப்பைப் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். அரக்கப் பரக்க சுனில் வந்து சேர்ந்தான். இருவரையும் பார்த்து பதறிப் போய், “ஏண்டா இவ்வளவு பெரிய காலேஜ்ல உனக்கு கடலை போட வேற ஆளே கிடைக்கலையா.? என் ஆளு கிட்ட உனக்கென்னடா பேச்சு” என்றதும் அரவிந்த் திகைத்துப் போனான்..

சுனில் பரிதாபமாக அவனைப் பார்த்து விட்டு வாஸந்தியின் ஃப்ரண்டின் அருகில் அமர்ந்து,

“டேய்.. இவ தான் காயத்ரி.. என் காயூ.. அத்தை பொண்ணு.“ நான் சொல்லுவேனில்ல...” காயத்ரியைப் பார்த்து மிக நீண்ட புன்னகையைப் பரிசளித்தான்.. அவளோ சுனிலை முறைத்து விட்டு,

“அண்ணா... இவரா உங்க குளோஸ் ஃபிரண்ட்.? என்னைப் பார்க்கும் போதெல்லாம் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு பேசற அந்த அரவிந்த் நீங்க தானா.?.. எனக்கு தான் வேற வழியில்ல. இவர் கிட்ட மாட்டிகிட்டேன். நீங்க ஏண்ணா..? உங்க ஃப்ரண்டும் உங்களை மாதிரி நல்லவரா இருப்பார்னு நினைச்சேன். ஏமாத்தீட்டீங்களே...” பொய்யாய் அரவிந்தை முறைத்தாள்.. அரவிந்த் வாய் விட்டு சிரித்தான்.

“என் தங்கை கரெக்டா தான்டா உன்னை ஜட்ஜ் பண்ணி வெச்சுருக்கா.. நீ லைஃப்ல பண்ணிய ஒரே நல்ல விஷயம் காயத்ரியை லவ் பண்றது தான்.. ஆனா நீ ஏம்மா இப்படி ஒரு ராங் டிசிஷன் எடுத்த?” சிரிப்பை அடக்கிக் கொண்டு சுனிலை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

“நீயுமாடா..!! கிளம்பு போகலாம்.. இதுக்கு மேல டேமேஜ் ஆக என்கிட்ட ஒண்ணுமேயில்ல மச்சான். போலான்டா. பசியைக் கூட நான் பொறுத்துக்குவேன். ஆனா.. உன் துரோகத்தை தான் என்னால ஜீரணிக்கவே முடியலை...” நொந்து போனான்

காயத்ரியோ, “சும்மா அடங்குங்க. நடிக்காதீங்க. போதும். இத்தனை நேரம் அரவிந்த் அண்ணனை தனியா விட்டுட்டு எங்கே போனீங்க.? ம்.. எனக்குத் தெரியும். காலேஜ் முழுக்க சுத்திப் பார்த்து ஜொள்ளு விட்டிருப்பீங்க. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா.! அப்படி எதாவது எனக்குத் தெரிய வந்தது...!! கல்யாணம் கேன்சல்.! சொல்லிட்டேன்..” விரல் நீட்டி எச்சரித்தாள்.

அதுதான் சாக்கு என்று நீட்டிய விரல்களைப் பற்றிய சுனில், “காயூ செல்லம்..! நீயே என்னை தப்பா நினைக்கலாமா.? உன்னைத் தேடிக்கிட்டு தான் போனேன்டா.. கல்யாணம் கேன்சல்னு சொல்லி இந்த கன்னிப் பையன் மனசை கலங்கடிக்கறியே.. அப்புறம் காலம் பூராவும் உன் மாமா பிரம்மச்சாரியா இருக்க வேண்டியது தான். நிச்சயம் பண்ணிய கல்யாணம் நின்று போனா அப்புறம் யாரு என்னைக் கட்டிக்குவா..” வராத கண்ணீரை வழித்தெடுத்தவனின் முதுகில் ரெண்டு அடி அடித்த காயத்ரி,

“இந்த வாய் மட்டும் இல்லேன்னா உங்களை நரி தூக்கிட்டு போயிடும். வாஸூ இங்கேயே உட்கார்ந்திரு. இன்னிக்கு லஞ்ச் ஸ்பான்சர் பண்ணப் போறது சார் தான்.. நாங்க போய் வாங்கிட்டு வரோம்..” பேய் முழி முழித்தவனை கைபற்றி இழுத்துப் போனாள்.

“மச்சான்.! ஒசி சாப்பாடுன்னு சொல்லி கூட்டிட்டு வந்து கவுத்திட்டயேடா. என் பர்ஸீக்கு வேட்டு வெச்சுட்டியே…! இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் நம்ம வீட்லயே இருந்திருப்பேன். இன்னிக்கு கணேஷ் அண்ணா கிட்ட நாட்டுக்கோழி குழம்பும் வறுவலும் செய்யச் சொல்லியிருந்தேன். எல்லாம் போச்சு.. உன்னாலதான்டா. புலம்பிக்கொண்டே காயத்ரியை பின்தொடர்ந்தான்.

அரவிந்த் வாஸந்தியிடம், “அப்புறம்... நேத்து வீட்ல ரொம்ப திட்டிட்டாங்களா..” அக்கறையாக விசாரித்தான்.

“ம்...” என்றவளின் விழிகள் காயத்ரியைத் தேடி சுழன்றது..

“ரொம்ப இல்லை. கொஞ்சம் கம்மி தான்.. காயத்ரி தான் சமாளிச்சா.. தொலைஞ்சு போனதையே மறைச்சு கட் ஆயிடுச்சுன்னு மட்டும் சொல்லிட்டா.. அதனால ஜாக்கிரதையா இருன்னு அட்வைஸ் பண்ணிட்டு விட்டுட்டாங்க..”. அவள் விழிகளில் தன் தாயிடம் திட்டு வாங்காமல் தப்பித்த பெருமிதம் அப்பட்டமாகத் தெரிந்தது. வெகுளியான பேச்சு அவனை மேலும் ஈர்க்க, அந்த வளர்ந்த குழந்தையை ஆசையுடன் பார்த்தவன், ’இவளிடம் எப்படி காதல் சொல்வது’. காதல்ன்னா என்னவென்று இவளுக்குப் புரியுமா...’ என்ற கவலை புதிதாக முளைத்து அவனை ஆட்கொண்டது. என்ன பேசுவது என்று புரியாமல்,

“நீ... நீங்க அம்மா செல்லமா இல்லை அப்பா செல்லமா” இதை காதலியிடம் கேட்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து போனான்.

“அம்மா செல்லம் தான்.. அப்பா இல்லை.. ரொம்ப வருஷமா . நானும் அம்மாவும் தனியா தான் இருக்கோம். அப்ப நான் பிஃப்த் ஸ்டாண்டர்ட் தான் படிச்சுகிட்டு இருந்தேன்.. ஏதோ சண்டை. கோபமா பேசிட்டு அம்மா என்னை இங்க கூட்டிட்டு வந்திட்டாங்க. அதுக்கப்புறம் அப்பா பத்தி பேசினாக் கூட அம்மாவுக்கு பிடிக்காது.. இப்ப அவர் இறந்து போய் ஐந்து வருஷம் ஆச்சு..” என்றவளின் குரலில் வருத்தம் இழையோடியது

ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று அதைப் பற்றி பேச விரும்பாமல் பேச்சை மாற்றினாள். படிப்பைப் பற்றி பேச ஆரம்பித்ததுமே அவளது குழந்தைத் தனம் மாறிப் போனது.. காதில் போட்டிருந்த வளையங்கள் ஊஞ்சலாட, சுவாரஸ்யமாக மருத்துவம், தனது லட்சியம், கனவு என்று உற்சாகமாக பேச ஆரம்பித்தாள். ‘குழந்தை மருத்துவம்’ தான் என் கனவு என்றதுமே அரவிந்தின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

“எதுக்கு சார் சிரிக்கறீங்க ?”

“ம்.. ஒண்ணும் இல்லை.. எனக்கும் இது பத்தி ஒரு கனவு இருக்கு. நான் இன்ஜினியரிங் படிச்சதால, என் மனைவி டாக்டராக இருக்கணும்.. ஏன்னா ஏழைகளுக்கு இலவசமா வைத்திய வசதி செய்து கொடுக்கணுங்கறது என் தீராத ஆசை.. பிரபலமான மருத்துவமனைகளில் கிடைக்கும் உயர்தர சிகிச்சை, இலவச மருந்துகள், அறுவை சிகிச்சை எல்லாமே அவங்களுக்கும் தரமானதா இலவசமா கிடைக்கணும். தமிழ்நாடு முழுக்க செயின் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் மாதிரி பெரிய அளவில்நிறுவணும்... என் அப்பாவோட லட்சியம் இது... கண்டிப்பா நான் அதை நிறைவேற்றுவேன்.”

“நீங்க டாக்டரா இல்லாம இதை எப்படி சாதிக்க முடியும்.?”

“அது தான் என் வொய்ஃப் டாக்டரா வரப் போறாளே. நான் அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு குடுத்தா அவ பார்த்துக்குவா. மேரேஜூக்கு அப்புறம் இரண்டு பேரும் ஒண்ணு தானே.. என்ன... என் லட்சியத்தை நிறைவேத்த, நானே சொந்தமா உழைச்சு சம்பாதிக்கணும். என் அப்பாவோட உதவியை எதிர்பார்க்கக் கூடாது. அவரோட பிசினஸை பார்த்துக்கிட்டே நானும் சொந்தமா தொழில் தொடங்குவேன். அதில வர்ற வருமானம் முழுக்க இதுக்கு மட்டுமே செலவழிக்கப் போறேன்.” கண்களில் உண்மையான கனவு தெரிந்தது.

அவனை வியப்பும் ஆச்சரியமுமாகப் பார்த்த வாஸந்தி, “உங்க மனைவியா வரப் போறவங்க ரொம்ப லக்கி. அப்ப நானும் காயூவும் படிச்சு முடிச்சுட்டு உங்க ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணிக்கலாம் தானே.. சார்..”

“கண்டிப்பா.. உங்களுக்கு இல்லாத வேலையா.? யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்..”

“படிச்சு முடிச்சதும் சென்னை போயிடுவீங்களா.?”

“ம்.. பின்னே.. அப்பா அங்க தனியா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கார். கொஞ்சம் உடம்பு வேற சரியில்லை. அம்மாவும் பார்த்துக்கறாங்க. நான் போனா அப்பாவுக்கு ரெஸ்ட் குடுக்கலாம். என் பிசினஸ் பத்தி கூட ஸ்கெட்ச் போட்டு வெச்சிருக்கேன்.. அந்த வேலையும் ஸ்டார்ட் பண்ணனும்..”

“அப்ப உடனே வீட்ல பொண்ணு பார்த்துடுவாங்க..”

“ம்.. ஆனா நான் ஏற்கனவே எனக்கு வரப் போற மனைவி இவ தான்னு டிசைட் பண்ணிட்டேன்..”

திகைத்து அவனை நோக்கி, “லவ் பண்றீங்களா.? வீட்ல...”

“இல்லை வாஸந்தி.. வீட்ல இன்னும் சொல்லலை. ஏன் இன்னும் நான் லவ் பண்ற பொண்ணுக்கே விஷயம் தெரியாது. அவ படிப்பை முடிக்கிறதுக்காக காத்துகிட்டு இருக்கேன். அதுக்கு இன்னும் நாலைந்து வருஷம் ஆகும். அதுக்குள்ள பிசினஸ்ல நானும் கொஞ்சம் ஸ்டடி ஆயிடுவேன். அம்மா, அப்பா கண்டிப்பா என் காதலுக்கு ‘நோ’சொல்ல மாட்டாங்க. அவளை பார்த்தா அவங்களுக்கும் பிடிக்கும்..”

“ஓ... உங்க ரிலேஷனா...” அவள் குரலில் சுருதி குறைந்ததைக் கேட்டதும் ‘ஏது நம்மாளுக்கும் லைட்டா ஃபீலிங் ஸ்டார்ட் ஆகுது போல இருக்கே’ என்று சந்தோஷப்பட்டு,”ம் என்ன கேட்ட.. ஓ.. இனிமே தான் ரிலேஷனா ஆகப் போறாளே... என் படிப்பு முடியறதுக்குள்ள கண்டிப்பா ப்ரப்போஸ் பண்ணிடுவேன்”

லஞ்ச் பார்சலோடு சுனிலும் காயத்ரியும் வந்து சேரவே பேச்சு திசை திரும்பியது. கலகலப்பாக பேசியபடியே உணவு இடைவேளையும் கழிய, மன நிறைவோடு அரவிந்த் கிளம்பினான். அதன் பிறகு அதே கேன்டீனில் நால்வரும் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டனர்.​
தொடரும்...​