• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 8

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India
அத்தியாயம் 8

லஞ்ச் பார்சலோடு சுனிலும் காயத்ரியும் வந்து சேரவே பேச்சு திசை திரும்பியது. கலகலப்பாக பேசியபடியே உணவு இடைவேளையும் கழிய, மன நிறைவோடு அரவிந்த் கிளம்பினான். அதன் பிறகு அதே கேன்டீனில் நால்வரும் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டனர்.

சுனிலுக்கும் காயத்ரிக்கும் சென்ற மாதமே நிச்சய தார்த்தம் முடிந்திருந்தது. அதனால் இப்படி சந்திக்கும் சந்தர்ப்பங்களை வீணாக்காமல் தனி உலகில் சஞ்சரித்தனர். காயத்ரி எப்போதும் சுனிலை நக்கலடித்துப் பேசினாலும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். சுனிலும் அப்படியே.! இரு வீட்டிலும் சுனிலின் படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் என்று தீர்மானித்திருந்தனர். வீட்டில் இருவரும் பார்த்துக் கொள்ளவே தடை விதித்ததால், அரவிந்த் இங்கு இருவருக்கும் பேச தனிமை ஏற்படுத்திக் கொடுப்பான்.

அவர்கள் வரும் வரை வாஸந்தியிடம் வரம்பு மீறாமல் கண்ணியமாகப் பேசிக் கொண்டிருப்பான். அவன் குணம் புரிந்த காயத்ரியும் அதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. அரவிந்தின் நல்ல குணங்களும், மனதை வரும் மென்மையான பேச்சும், புத்திக் கூர்மையும் வாஸந்தியை மெல்ல மெல்ல அவன் பால் ஈர்த்தது.. ஒரு சில மாதங்களிலேயே அவள் இதயம் முழுவதும் அரவிந்தின் வசமானது.. குழந்தைத் தனம் மறைய, அவளின் பெண்மை மலர்ந்து மணம் வீசியது. தாயும் தோழியும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை அரவிந்தின் மென்மையான அணுகுமுறை சாதித்துக் காட்டியது... ஒரு வருடத்துக்குள் முழுமையான பெண்ணாக பரிணமித்தாள்.

அவள் பேச்சில் இருந்த வெகுளித்தனமும் படபடப்பும் போய் முதிர்ச்சி வந்திருந்தது.. நடையில் நிதானம். அவளின் ஒவ்வொரு செயலிலும் அவளின் புத்திசாலித்தனம் பளிச்சிட்டது. அவளின் இந்த மாற்றங்கள் காயத்ரியின் கண்களுக்கும் தப்பவில்லை. அதிசயித்துப் போனாள். வாஸந்தி, அரவிந்தைப் பார்க்கும் பார்வையில் வேறுபாட்டைக் கண்டாள். அரவிந்தை முழுமையாக நம்பினாலும், காயத்ரி அவனிடம் நேரடியாக தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினாள். சுனிலை அழைத்துக் கொண்டு போய் அரவிந்தை சந்தித்தாள்.

“அண்ணா.! வாஸந்தி பத்தி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..”

இதை என்றோ எதிர்பார்த்திருந்த அரவிந்த் அமைதியாக “சொல்லும்மா”என்றான்.

அவளோ ஒரு நிமிட தயக்கத்துக்குப் பின், “அண்ணா, வாஸந்தி கள்ளம் கபடமே இல்லாதவ. யார் சொல்றதையும் உடனே நம்பிடுவா. நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு அவளுக்கு புரிஞ்சுக்க தெரியாது...”

“ஆனா உனக்கு தெரியுமேம்மா...” அதே அமைதியோடு பதிலளித்தான்..

“நீங்க ரொம்ப நல்லவங்க தாண்ணா.. ஆனா அவளை பாதுகாக்க மட்டும் தான் எனக்கு ரைட்ஸ் இருக்கு.. அவ வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமை...” என்று பேசி முடிப்பதற்குள்ளேயே குறுக்கிட்ட அரவிந்த், ”அவங்கம்மாவைத் தவிர எனக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கும்மா. உனக்கே இது நலலாத் தெரிஞ்சதுதான். அதனால தான் என்னை இத்தனை கேள்வி கேட்கற? வாஸந்தியைப் பார்த்ததுமே ‘இவ எனக்கான தேவதை’ன்னு மனசு சொல்லிடுச்சு.. அந்த உரிமையோட தான் அவ கிட்ட பழகவே ஆரம்பிச்சேன்.

என் வீட்டில என் விருப்பம் தான் முக்கியம்னு என் பேரண்ட்ஸ் நினைப்பாங்க. வாஸந்தியை கண்டிப்பா இரண்டு பேருக்குமே ரொம்ப பிடிக்கும். அவங்களையே கூட்டிட்டு வந்து அவ அம்மா கிட்ட பேசச் சொல்றேன். நீ எதுக்குமே பயப்பட வேண்டாம். காயூ...”

“அண்ணா உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு. சொல்லப்போனா நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிகிட்டா முதல்ல நான் தான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா அவங்க வீட்ல நிறைய பிராப்ளம் இருக்கு. அவங்கம்மா லைஃப்ல நிறைய கஷ்டத்தை அனுபவிச்சவங்க. அதனால அவ்வளவு சீக்கிரமா அவங்க சம்மதம் சொல்ல மாட்டாங்க.

அதுவும் நீங்க வசதியானவங்கன்னா இன்னும் அதிகமா யோசிப்பாங்க. பணத்தையே அளவுக்கதிகமா வெறுக்கறவங்க வாஸூவோட அம்மா.. ஏன் தெரியுமா? வாஸந்தி மிகப் பெரிய கோடீஸ்வரரோட பொண்ணு. அவங்கப்பா பிபலமான அரசியல் புள்ளி.. ஒரு அரசியல் கட்சியோட தூணா இருந்தவர். தமிழ்நாட்டில அவங்களை தெரியாதவங்களே கிடையாது.. அத்தனை ஃபேமஸ்!

அவங்க யாருன்னு அவங்கம்மா தான் சொல்லணும். ஆன்ட்டி மேல ரொம்ப பிரியமா இருந்தார். வாஸந்தி அவங்க வீட்டு இளவரசி.. என்ன நடந்ததுன்னு தெரியலை.. பத்து வயசா இருக்கும்போது அவர் இன்னொருத்தங்களை கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டார்.

வாஸந்தியோட அம்மாவால இதை ஜீரணிக்க முடியலை. வாஸந்தியை கையைப் பிடிச்சு கூட்டிகிட்டு வெளியே வந்துட்டாங்க.. யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசலை. இரண்டு மனைவிங்கள்ள ஒருத்தரா இருக்க அவங்க சுய கௌரவம் இடம் கொடுக்கலை. தன் அம்மா வழி வந்த சொத்துகளை மட்டும் வித்து எடுத்து கிட்டு கோயமுத்தூர் வந்துட்டாங்க.

இந்த வீட்டை விலைக்கு வாங்கி, இங்கேயே செட்டிலாயிட்டாங்க. அவங்களோட கல்வித் தகுதி, ஒரு பெரிய தனியார் பள்ளியில வேலை கிடைக்க உதவியாயிருந்தது. அவங்க ஒரு இரும்பு மனுஷி அண்ணா.. மறுபடி அவங்கப்பா கிட்டயிருந்து தூது வந்த யாரையும் பேச விடவேயில்லை.. தன் சொந்த உழைப்பாலயும் திறமையாலயும் தான் இன்னிக்கு அதே ஸ்கூல்ல பிரின்சிபாலா உயர்ந்திருக்காங்க.

அவங்களுக்கு வாஸந்தின்னா உயிர்.. அவதான் அவங்க உலகமே. அத்தனை பாசத்தையும் கண்டிப்புங்கற போர்வையில மறைச்சு வெச்சிருக்காங்க. அவங்க கிட்ட பயந்து பயந்து தான் அவ நேச்சரே பயந்த சுபாவமா மாறிடுச்சு. கூடப் பிறந்தவங்களும் யாரும் இல்லை. அதனால் அவளுக்கு வெளியுலகத் தொடர்புன்னா அது நான் மட்டும் தான். ஃப்ரண்ட், பிலாசபர் அண்ட் கைட் எல்லாமே நான் தான்..”

அரவிந்த் நெகிழ்ந்துபோய், “அது தான் எனக்கும் தெரியுமேம்மா.. சொல்லப் போனா அவளை விட அவ மேல நீ காட்டற அக்கறை தான் என் கவனத்தை ஈர்த்ததே.. ஒரு தாயோட அன்பும் அரவணைப்பும் உன் கிட்ட முழுமையா தெரிஞ்சுது. எனக்கொரு தங்கை உன்னை மாதிரி இல்லையேங்கற ஏக்கம் இன்னியோட தீர்ந்தது..” சுனில் அவன் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“நிஜமா தான்டா.. காயூ என் தங்கை தான். நீ தான் என் கல்யாணத்துக்கு முதல்ல சம்மதம் தரணும் காயூ. அதுக்கு பிறகு தான் வாஸந்தி கிட்ட இது பத்தி நான் பேசப் போறேன்.”

“அண்ணா...! எனக்கு ரொம்ப சந்தோஷம்.. ஆனா நீங்க சொல்றதைக் கூட அவ புரிஞ்சுக்குவாளான்னு தெரியலை. அவ சின்னக் குழந்தை மாதிரிண்ணா...”

அரவிந்த் குறுஞ்சிரிப்போடு, “அங்கதாம்மா உன் கணிப்பு தவறா போகுது. என் கூட பழகிய பிறகு, அவளும் கொஞ்சம் பெரிய பொண்ணாகியிருக்கா... அவளுக்கும் என்னை இப்பல்லாம் ரொம்ப பிடிக்குது. அவ மனசிலயும் நான் இருக்கேன்னு நினைக்கிறேன். இந்த சண்டே எப்படியாவது அவளை வெளியே கூட்டிட்டு வா.. அவகிட்ட பேசணும். காலேஜ் கேண்டீன்ல வெச்சு பேச எனக்கு இஷ்டமில்லை. நீயும் சுனிலும் கூட வாங்க.”

“இரண்டு பேர் வீட்டிலயுமே வெளியே விட மாட்டாங்களே.. அதுவும் இவரும் கூட வர்றாருன்னு சொன்னா.. கண்டிப்பா தடா தான். அதனால அதை சொல்ல வேண்டாம்.

“நீ சொன்னா கூடவா காயூ...”

“ஆமாண்ணா.. வாஸூவோட அம்மாவும் எங்கம்மாவும் சின்ன வயசில பக்கத்து பக்கத்து வீட்டில ஒண்ணா வளர்ந்தவங்க. அந்த நட்பு தான் இன்னிக்கு வரை தொடருது. அதனால தான் எனக்கு இத்தனை சலுகையும் கூட. அந்த நம்பிக்கையை நானே எப்படி மிஸ் யூஸ் பண்றது.?”

“எனக்காக நீ இதைப் பண்ணித்தான் ஆகணும் காயூ.. நீங்களும் என் கூட வரப் போறீங்க தானே.! அப்புறம் என்ன? அவ கிட்ட பதிலை தெரிஞ்சு கிட்டு தான் அம்மா கிட்ட பேசணும். என் படிப்பும் முடியப் போகுது. இனி பேசக்கூட டைம் இருக்காது. எனக்கும் புராஜெக்ட், எக்ஸாம்னு சரியா போயிடும்.. உங்களுக்கும் செமஸ்டர் தொடங்கிடுமே... நான் இங்கயிருந்து கிளம்பறதுக்குள்ள மேரேஜை உறுதி பண்ணிகிட்டா போதும். அவ படிச்சு முடிச்ச பிறகு டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். அவசரமில்லை.. அவளோட சம்மதம் கிடைச்சா போதும். நான் ப்ரோசீட் பண்ணிடுவேன்”

“சரிண்ணா. சண்டே ஈவினிங் நாலுமணிக்கு வரப் பார்க்கறேன். ஆனா ஏழுமணிக்குள்ள திரும்பிடணும். ஒ.கே.வா... எதாவது சொல்லி சரிக்கட்டணும்.. எங்க இரண்டு வீட்லயும்.!”

இத்தனை சென்ட்டிமெண்டான பேச்சுக்கும் சுனிலுக்கும் சம்பந்தமே இல்லாததால், அருகே இருந்தும், ஸ்பீக்கரை ஆஃப் பண்ணி விட்டு, வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான்.. பேச்சு வார்த்தை முடிந்ததும் காயூவை காலேஜில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.

ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது. கொஞ்சம் அதிகப் படியான கவனம் எடுத்து டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்த அரவிந்தைப் பார்த்து விசிலடித்த சுனில்,

“கலக்கற சந்துரு...” விரல்களில் அபிநயம் பிடித்தான்.

“ச்சு... சும்மா இருடா...” கூச்சத்தில் முகம் சிவக்க, கீழே வந்தவனைப் பார்த்த கணேஷ் கூட,

“என்ன தம்பி... அதிசயமா இருக்கு.. சுனில் தம்பி எத்தனை தரம் கூப்பிட்டாலும் ‘சண்டே’ன்னா வெளியவே போக மாட்டீங்க. இன்னிக்கு ஜம்முன்னு கிளம்பிட்டிங்க”. “இல்லண்ணா.. மதியம் சாப்பிட்டது ரொம்ப ஹெவி.. அதான் வாக்கிங் போறோம். நைட் சாப்பிட வீட்டுக்குத் தான வருவோம்..”

சுனில் கிண்டலாக, “ஆமாம் கணேஷ் அண்ணா ரொம்ப ஹெவி. அதான் பைக்ல வாக்கிங் போறோம்.. டேய்.. வழியுது.! துடைச்சுகிட்டு பின்னால ஏறி உட்காரு...” ஆக்ஸிலேட்டரை முறுக்க வண்டி சீறிப் பாய்ந்தது.இருவரும்

மருதமலையில் காத்திருந்தனர்.. முதன் முதலாக தன் இதயத்தை... தன் அன்பை... நேசத்தை சொல்லும் இடம் தெய்வத்தின் சன்னிதியாக இருக்க வேண்டும் என்பது அரவிந்தின் விருப்பம்.. அவர்களும் இங்கு வந்து சேர்ந்தனர். ஐந்து மணிக்கு, ‘மாதுளை முத்துக்களின் நிறத்தில் சுடிதார் அணிந்து வந்தவளை பார்த்ததும் இமைக்கவே மறந்து போனான்.. அவனின் பார்வையில் குங்குமாக சிவந்த முகத்தை காயூவின் பின் நின்று மறைத்தாள்.. அதைப் பார்த்து வியந்து போன காயத்ரி...

“என்னாச்சுடி.. இத்தனை நேரம் ஒழுங்கா தானே இருந்த.? உனக்கு வெட்கம் கூட வருமா.? சரி வா.. முதல்ல சாமி கும்பிட்டுட்டு வந்திடலாம்..”

கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து ஜோடியாக வாஸந்தியின் அருகில் நின்று கொண்டான். அதனால் கன்னங்கள் சிவந்து பளபளக்க தலை குனிந்து நின்றவளைப் பார்த்து,

‘இவள் என்னவள்’ என்ற உரிமையோடு ரசித்தான். கண்களை மூடி மானசீகமாக கடவுளிடம் ஏதோ வேண்டியவளை பார்த்து ரசித்த அரவிந்த்,

“முருகா.! என் வசு வேண்டி நிற்கிற அத்தனையும் நிறைவேற்றி வை.. எனக்கு ஒண்ணே ஒண்ணு தான் வேணும்.. வசுவை மட்டும் எனக்கே எனக்குன்னு தந்திடு.. அவளை என் மனைவியா அடைய அருள் புரி” என்று மனதார வேண்டினான்.

முருகன் அவனைப் பார்த்து சிரித்து, ‘கேட்கும் வரத்தை நல்லா யோசிக்காம கேட்டு விட்டாயே..’ என்று அவனை பரிதாபமாக பார்த்தார்.!

வெளியே வந்ததும், “வாஸூ...! அரவிந்த் அண்ணா உன் கிட்ட ஏதோ பேசணுமாம் .. போ.. பேசு. நாங்க வெயிட் பண்றோம்..”

“எனக்கு பயமா இருக்குப்பா.. அவர் என்ன பேசப் போறார்.. நீயும் கூட வாயேன்.. ப்ளீஸ்”

“ச்சு.. என்னடி.. அவர் நமக்கு தெரியாதவரா... அவர் கிட்ட தனியா உட்கார்ந்து நீ பேசியதே இல்லையா.. ஜஸ்ட் அரை மணி நேரம் தான்.. உன்னை கடிச்சா முழுங்கப் போறார்..”

சற்று தள்ளி வசதியான இடத்தில அமர்ந்து. அவளிடம் பழத்தை பாதியாக கொடுத்து,

“சாப்பிடு”என்று மீதியை சாப்பிட ஆரம்பித்தான்.. மாலைச் சூரியன் அந்த இடத்தையே ஆரஞ்சு மயமாக்கியிருந்தது.

“அப்புறம் வாஸந்தி... உன் படிப்பு எப்படி போகுது.?” வழக்கம் போலவே சாதாரணமாகவே பேச்சை ஆரம்பித்தான்.

“ம்.. நான் தான் டாப்பர்..”

“குட்.. என் மேரேஜ் லைஃப் பத்தி அன்னிக்கு நாம பேசினது ஞாபகம் இருக்கா.?”

வாஸந்தி அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டாள்..

“அ...து... அந்த டா..க்.டர்.. பொண்ணு...”

“உனக்கு நல்ல மெமரி பவர் வாஸந்தி. நான் அன்னிக்கு பேசினதை கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கியே” காரணமேயில்லாம் அரவிந்த் மேல் சினம் பொங்க,

“ம்.. சரி.. அதுக்கென்ன வந்தது.”முறைத்தாள்.

“இந்த வருஷம் என் படிப்பு முடிஞ்சிடும். அதனால அவகிட்ட என் மனசில இருக்கிறதை சொல்லிடலான்னு முடிவு பண்ணிட்டேன்..”

“ம்ம்....”

“ஆனா பேச ரொம்ப தயக்கமா இருக்கு”

“ம்ம்..”

அவள் அருகில் சற்று நெருங்கி அமர்ந்தான்.. அதை உணரும் நிலையில் வாஸந்தி இல்லை. அவள் விரல்களில் நடுக்கம்.. தன்னிடமிருந்து எதையோ பறித்துக் கொண்ட வேதனை.. அவளுக்கு..

“இந்த் லெட்டர் தான்.. படிச்சு பாரேன்..”

அவன் கைகளிலிருந்து அதை வாங்கிப் படித்ததுமே கண்கள் பொங்கியது..

“வில் யூ மேரி மீ மை ஸ்வீட் ஹார்ட்...” என்ற ஒரே வாக்கியம்.. கண்கள் நீரைப் பொழிய அதை புறங்கையால் துடைத்துக் கொண்டே..

“இந்த லெட்டரை அவங்க... அந்த டா..க்.டர்... கிட்ட காண்பிச்சீங்களா..?” குரல் மெலிந்து ஒலிக்க,

அரவிந்தோ, “ஒ... காண்பிச்சிட்டேன்...”

“எ...எ..ன்..ன சொன்னாங்க..?”

“எங்க பேசினா.. ஒரே அழுகை தான்.. பதிலே சொல்லலை...”

“ஏன்...?”

“எனக்கென்ன தெரியும்.? ஒரு வேளை என்னைப் பிடிக்கலையோ என்னமோ..?”

“உங்களை யாருக்காவது பிடிக்காம போகுமா..?” ஏன்னு அவங்களையே கேட்க வேண்டியது தானே.!”

“கேட்கலாமே.... ஏன் வசு... இந்த லெட்டருக்கு நீ எதுவுமே பதில் சொல்லவே இல்லை...” அரவிந்தின் குரலில் அத்தனை மென்மை... அத்தனை நேசம்...

வாஸந்தி விக்கித்துப் போனாள்.. “அரவிந்த் சார்..??” குரலில் அத்தனை நடுக்கம்.. அவளையறியாமலேயே கண்ணீர் பெருக. அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளில் வழிந்த கண்ணீரை ஒற்றினான்..

“யெஸ் வசு... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்... உனக்கு..?” என்றதும் கூட அவள் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.

“வசு... வசும்மா... முதல்ல அழுகையை நிறுத்து எனக்கு தெரியாதவங்க யாராவது அழுதாலே பிடிக்காது. அதுவும் நீ... என் பேச்சைக் கேட்டு அழறதைப் பார்த்தா ஒரே ஒரு பதில் தான் தெரியுது.. உனக்கு என்னைப் பிடிக்கலை தானே... ஒ.கே... சாரி... நான் காயூவை கூப்பிடறேன்.. நீங்க மூணு பேரும் கிளம்புங்க சுனில் கால் - டாக்ஸியில் கொண்டு வந்து விடுவான்.. இனி இது பத்தி பேசவே மாட்டேன்...” தன் செல்லைக் கையில் எடுத்ததும், அவசரமாக அதைப் பிடுங்கினாள் அழுகையும் சிரிப்பும் கலந்து வர,

“கொஞ்ச நேரத்தில என்னை ரொம்பக் கலங்கடிச்சிட்டிங்க அரவிந்த் சார்..”

“எனக்கு சரியான பதில் வேணும்...”

முகம் தெளிவானது.. அதே குழந்தைத் தனம் மாறாமல், இதழ்களோடு கண்களும் சேர்ந்து சிரிக்க, தலையை சாய்த்து அந்த லெட்டரை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்..

அரவிந்தின் முகம் இறுகிப் போனது.. “இது தான் உன் பதிலா” கிழித்தெறியப் போனவனைத் தடுத்த வாஸந்தி..

“என்ன அரவிந்த சார்.. பிரிச்சு படிக்காமலே கிழிக்கப் பார்க்கறீங்க.. படிச்சா தானே என் பதில் என்னன்னு தெரியும்...” அவள் சொன்னது புரிந்ததும்

ஆனந்தம் பொங்க, தன் டென்ஷனெல்லாம் வடிய, அரவிந்த் வாய் விட்டு சிரித்தான்..

“சரியான வாலாயிட்ட வசு நீ...”
“என்னை டிரெய்ன் பண்ணியதே நீங்க தானே..” உதட்டைச் சுழித்து சிரித்தாள்.

அவள் கைகளைப் பற்றி தன்னுள் அடக்கிக் கொண்ட அரவிந்த்..

“தேங்க் யூ டியர்.. இன்னிக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். இந்த வருஷம் என் படிப்பு முடிஞ்சதும் நான் உடனே சென்னை கிளம்பியாகணும். அதுக்குள்ள நம்ம எங்கேஜ்மெண்டை முடிச்சுக்கலாம்.. என் பேரண்ட்ஸ் கண்டிப்பா சம்மதிப்பாங்க. உன் அம்மாகிட்ட அவங்களே வந்து பேசுவாங்க..

நம்ம மேரேஜ் முடியறது உன் கையில தான் இருக்கு.. கல்யாணத்துக்குப் பிறகு படிப்பை தொடர நீ சம்மதிச்சா... எங்க வீட்ல அதையும் சேர்த்து பேசிடுவாங்க.. அதை நீதான் டிசைட் பண்ணணும்.”

“அரவிந்த் சார்..!”

“நீ என் கிட்ட பேசவே வேண்டாம் வசு வா கிளம்பலாம்.. நான் நம்ம மேரேஜ் பத்தி பேசின பிறகும் கூட நீ சார்னு கூப்பிட்டு என்னை விட்டு விலகி நிற்கிற.. ஆனா காயூ என்னை மூணாவது தடவை பார்த்த போதே ‘அண்ணா’ன்னு உரிமையா கூப்பிட ஆரம்பிச்சுட்டா. உன் மனசு இன்னும் என்னை ஏத்துக்கலை தானே.. நான் கேட்டதுக்காக சும்மா தலையாட்டியிருக்க. சரிதானே..”

அவன் இதழ்களை தன் விரல்களால் மூடியவள், “இனிமே இதுமாதிரி பேசாதீங்க.. கஷ்டமா இருக்கு.. என்னால நம்பவே முடியலை. என் மனசே ‘உனக்கு இத்தனை அதிர்ஷ்டம் இருக்கா’ன்னு கேட்குது.. என் வீட்ல நிறைய சிக்கல் இருக்கு.. முதல்ல அந்த விஷயமெல்லாம் மறைக்காம உங்க கிட்ட சொல்லணும். அதுக்கு பிறகும் உங்க மனசில நான் இருந்தா, நான் ரொம்ப லக்கி... அர்வி”

அவள் இயல்பாக அர்வி என்று அழைத்ததுமே அவன் கண்களில் பிரகாசம்.. அவள் கைகளை இறுகப் பற்றினான். வாஸந்தி புரியாமல் விழித்தாள்.

“வசு டியர்..! ஐ யாம் சோ ஹேப்பி.. நீ என்னை ‘அர்வி’ன்னு கூப்பிட்டதும் எனக்கு அம்மா ஞாபகம் வந்திடுச்சு. என்னை அம்மா மட்டும் தான் அர்வின்னு கூப்பிடுவாங்க. அதுக்குப் பிறகு நீ... நீ மட்டும் தான் அப்படி கூப்படற. ஐ லவ் யூ டியர்..”

“என் அப்பா....”

“ஷ்... இறந்து போனவரைப் பற்றி பேச எதுவும் இல்லை. அது உங்க அம்மாவுக்கும் அவருக்குமான பர்சனல்.. அது நமக்கு தேவையுமில்லை. உன் அம்மா உன்னை எத்தனை அருமையா வளர்த்தியிருக்காங்க.. தனியா ஒரு பெண், கௌரவமா தன் மகளை வளர்க்க எத்தனை கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு புரிஞ்சுக்க முடியுது.. எனக்கு வேண்டியது அவங்க சம்மதம் தான். உன்னை சந்தோஷமா பார்த்துக்குவேன்னு நீ நம்பினா போதும். என் அம்மாவுக்கும் பெண் குழந்தைகள்.னா ரொம்ப பிரியம்.. உன்னை தன் கண்ணுக்குள்ள வெச்சு பொக்கிஷமா பார்த்துக்குவாங்க.. அவங்க ரொம்ப சாஃப்ட். உனக்கும் கண்டிப்பா பிடிக்கும்.. அப்பா பார்க்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கற மாதிரி தெரியும்.. ஆனா என்னோட வெல்விஷர் அண்ட் ஃப்ரண்ட் கைட் எல்லாம் அவர் தான். ரொம்ப கேர் பண்ணுவார். வெளியே தன்னோட அன்பை காண்பிக்கத் தெரியாது... மை ஸ்வீட் அப்பா...” அதன் பிறகு இருவரும் அவரவர் விருப்பு வெறுப்புகளை சின்ன சின்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்..

சுனிலிடமிருந்து போன்.. “டேய் மச்சான்.. என்னடா ஆன.? அரைமணி நேரம் கழிச்சு கூப்பிடுவேன்னு பார்த்தா மணி ஆறுக்கும் மேல ஆச்சு. இங்க என்னால காயூவை சமாளிக்க முடியலைடா. பத்து நிமிஷம் தான் சந்தோஷமா பேசினோம்.. அப்புறம் டபிள்யூ.. டபிள்யூ... எஃப் தான்!! சீக்கிரமா வந்து காப்பாத்து.. என் பர்ஸ்ல இருக்கிறதை எல்லாம் தின்னே தீர்க்கறாடா.. முடியலை.!

இனிமே மேரேஜ் முடியறவரை எங்கேயும் சேர்ந்து போகக் கூடாதுன்னு தைரியமா முடிவு பண்ணிட்டேன்டா. நீ எங்க இருக்க.?”

“வரேண்டா...”

வாஸந்தியை கைபற்றி எழுப்பிய அரவிந்த்,

“கிளம்பலாம் வசு.. சுனில் மூக்கால அழறான்.. என்ன ஆச்சுன்னு தெரியலை. இரண்டு பேருக்கும் சண்டை போல இருக்கு. லைட்டா எதாவது சாப்பிட்டுட்டு போகலாம்.. எனக்கும் பசிக்குது. டென்ஷன்ல மதியம் என்னால சரியாவே சாப்பிட முடியலை.”

“யார் கண்லயாவது பட்டுட்டா.. பயமா இருக்கு” வாஸந்தியின் கண்களில் கலவரம்..

“சொல்லட்டும்.. என்ன பயம் வசு. இனிமே நீ எதுக்கும் பயப்படவே தேவையில்லை. எப்படியும் சொல்லித் தானே ஆகணும். வேற யார் மூலமாகவாவது தெரிஞ்சா நம்ம வேலை ஈஸியா ஆயிடும்.... சரி.. வா..” அங்கே சுனிலும் காயத்ரியும் ஆளுக்கொரு திசை பார்த்து நின்றிருந்தார்கள். காயூ வாஸந்தியைப் பார்த்தும் எரிந்து விழுந்தாள்.

“எங்கடி போய்த் தொலைஞ்ச.? ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுவோம்னு சொல்லி தானே கிளம்பினோம் மணி ஆறரை.. இத்தனை நேரம் என்ன பண்ணிகிட்டு இருந்த..”

இதுவரை மனதில் பொங்கிய உற்சாகமெல்லாம் வடிய, குற்றவுணர்ச்சி மிக, “சாரிப்பா.. நான் டைம் பார்க்கவேயில்லை.. இவர்.. இ..வ..ர்.. என்னைக் கூட்டிட்டு போய் ப்ரபோஸ் பண்ணினார் காயூ.. அப்படியே பேசிகிட்டு இருந்து லேட் ஆயிடுச்சு.. சாரி.. சாரி... சாரி... ஆனா நீ ஏன் கோபமா இருக்க.? சுனில் அண்ணா முகமும் சரியில்லை. இத்தனை நேரம் அவர் பேசாம இருந்து நான் பார்த்ததே இல்லையே.. என்னாச்சுப்பா.? சண்டையா.?

தான் திட்டியதைக் கூட பொருட்படுத்தாமல் தன் துயரத்தை தீர்க்க துடிக்கும் வாஸந்தியைக் கண்டு உருகிப் போனாள். இன்று அவள் வாழ்வில் மிக முக்கியமான நாள். அரவிந்த் அண்ணாவிடம் சந்தோஷமாகப் பேசிவிட்டு வந்தவளை தன் சுடு சொற்களால் காயப்படுத்தி விட்டோமே என்ற கழிவிரக்கத்தில் அவளை அணைத்துக் கொண்டாள்.
தொடரும்...