• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிழை 9

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அத்தியாயம் 9

தான் திட்டியதைக் கூட பொருட்படுத்தாமல் தன் துயரத்தை தீர்க்க துடிக்கும் வாஸந்தியைக் கண்டு உருகிப் போனாள். இன்று அவள் வாழ்வில் மிக முக்கியமான நாள். அரவிந்த் அண்ணாவிடம் சந்தோஷமாகப் பேசிவிட்டு வந்தவளை தன் சுடு சொற்களால் காயப்படுத்தி விட்டோமே என்ற கழிவிரக்கத்தில் அவளை அணைத்துக் கொண்டாள்.

“சாரி வாஸூ.. எனக்கும் ஏதோ கோபம். அதான் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். இனி லேட்டானா ஆன்ட்டியை சமாளிக்கணும். இரு. வீட்டுக்கு போறதுக்குள்ள பேசிடறேன்.” அலைபேசியை உயிர்ப்பித்தாள்.

“ஹலோ ஆண்ட்டி.. நான் காயூ...”

“என்னம்மா.. உன் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சாச்சா.? வந்துட்டு இருக்கீங்களா..”

“இல்ல ஆண்ட்டி.. அதுக்குத் தான் போன் பண்ணினேன். இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டியிருக்கு. ப்ரூக் ஃபீல்ட்ஸ்ல இருக்கோம். கூட்டம் அதிகமா இருக்கு. அதான் லேட்.. நாங்க வேணா கிளம்பி வந்திடறோம்.. மீதியை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.. ஒரு பத்து நிமிஷம் போல லேட்டாகும்.. இதோ கிளம்பறோம்..”

“வேண்டாம் காயூ... இருந்து வாங்கிட்டே வந்துடுங்க. இதுக்காக இன்னொரு நாள் அலைய வேண்டாம். ஜாக்கிரதையா வாங்க. வாஸந்தி பசி தாங்க மாட்டா.. அதனால அங்கேயே சாப்பிட்டுட்டு வந்திடுங்க.. ஆனா ஒன்பது மணிக்குள்ள வீடு வந்து சேரணும். நீ கேட்டதால தான் அவளை வெளியே அனுப்பினதே. பத்திரமா வாங்க.”

“தேங்க்ஸ் ஆண்ட்டி.. கவலைப் படாதீங்க. நான் பத்திரமா அவளை கூட்டிட்டு வந்திடறேன். லேட்டானதால சுனில் மாமாவுக்கு போன் பண்ணி துணைக்கு வரச் சொல்லிட்டேன். அவர் கூட வந்திடுவோம். நீங்க சீக்கிரம் சாப்பிடுங்க. வாஸூ கிட்ட பேசறீங்களா?”

“இல்லை.. அவளை தனியா விடாதே.. சுனில் வந்துட்டா எனக்கு நிம்மதி.. சரிம்மா.. பை..”

‘அப்பாடா பிராப்ளம் சால்வ்ட்” என்று நிம்மதியானாள். சொன்ன பொய்யை காப்பாற்ற ப்ரூக் ஃபீல்ட்ஸ் சென்றனர். கால்-டாக்ஸி புக் பண்ணி சுனில் அவர்களோடு செல்ல, அரவிந்த் அவர்களை பின் தொடர்ந்தான்.

அரவிந்த் தன்னுடைய ட்ரீட்டாக அங்கிருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றான்.. வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு, சாப்பிட ஆரம்பித்து விட்டபிறகும் கூட சுனிலின் மௌனம், அரவிந்தை வியப்பில் ஆழ்த்தியது..

“என்னடா ஆச்சு.. இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்க. காயூவும் வேற மூஞ்சியை தூக்கி வெச்சுகிட்டு இருக்கா.. சண்டையா.? உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வர ரீசனே இல்லையே.. என்ன ஆச்சு.?”

“ச்சு.. போடா.. இந்த லேடீஸை புரிஞ்சுக்கவே முடியாது.. விடு.. உன் மூடையும் ஏன் ஸ்பாயில் பண்ணணும். வாஸந்தி ஒ.கே சொல்லிட்டாளா.?”

“ம்... அது இருக்கட்டும்.. என்னடா... சொல்லு..” என்று கைபற்றி அழுத்தியதும் சுனில் விரக்தியோடு,

“நான் காயூ கூட இன்னிக்குத் தான்டா ஃபர்ஸ்ட்டைம் வெளியே வரேன்.. சண்டே அவங்க வீட்டுக்குப் போனா கூட, என் மாமா எங்களை தனியா நின்று இரண்டு வார்த்தை பேச விடமாட்டார்.. பெரிசுங்களும் எப்பவும் அவ கூடவே இருக்கும்..

இன்னிக்கு பேசிகிட்டே ஆசையா உரிமையோட அவ தோளை சுத்தி கையைப் போட்டேன். அவ்வளவுதான் முறைச்சுகிட்டு கையை பட்டுன்னு தட்டி விடறா.. அதோட திட்டு வேற.. அவ என் காயூ தானேடா.. நான் என்ன மூணாவது மனுஷனா? பிறந்ததிலிருந்து ஒண்ணா வளர்ந்தவங்க தானே என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும், தேர்ட் ரேட் பொறுக்கி லெவல்ல பேசிட்டா. மனசுக்கு கஷ்டமாயிருச்சு..

இவ பொறந்ததும் எனக்குத்தான்னு முடிவு பண்ணியாச்சு.. எனக்கு விவரம் தெரிஞ்சதில இருந்து காயூ... உன் பொண்டாட்டின்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க. என் மனசில அவ நினைப்பு ஆழமா பதிஞ்சு போச்சு அரவிந்த். என் காயூ மேல நான் உயிரையே வெட்சசிருக்கேன். நிச்சயம் பண்ணிய பிறகும் கூட என்னைப் புரிஞ்ச்சுக்காம பேசினா எப்படிடா.? என்னை உனக்கு ஆறு வருஷமா தெரியும் தானே. நீயே சொல்லு. நான் மோசமானவனாடா.” அவன் மனதின் வலி குரலிலும் வெளிப்பட, அரவிந்த் சுனிலை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“டேய்.. இதெல்லாம் ஒரு பிரச்சனையாடா.? நீயே காயூவை புரிஞ்சுக்கலைன்னா எப்படி.? பெண்கள் இந்த விஷயத்தில எப்பவுமே காஷியஸா தான்டா இருப்பாங்க. உங்க வீட்டில இருக்கும் போதே உங்களை தனியா பேச அனுமதிக்க மாட்டாங்கன்னு சொன்ன தானே.. அதையும் மீறி உன்னோட தனியா வெளிய வந்திருக்காளே அதை யோசிச்சு பாரு.. உன் மேல கொள்ளை கொள்ளையா பிரியம் இல்லாம தான் வீட்ல சொல்லாம உன்னோட வந்திருக்காளா? நீயே யோசி.. அது தான்டா அவ உன் மேல வைச்சிருக்க நேசம்..

அந்தக் காதலுக்கு நீ மரியாதை குடுக்கணுமா வேண்டாமா? பப்ளிக் பிளேஸ்-ல இந்த மாதிரி பிஹேவ் பண்ற எத்தனை பேரை நாமளே கேவலமா பேசியிருக்கோம் உங்களுக்கு நிச்சயமாயிருச்சுன்னு பார்க்கறவங்களுக்கு எல்லாம் தெரியுமா.? நம்ம அவங்க மேல வெச்ச அன்பை அவங்களை கௌரவப்படுத்தற மாதரி நடந்து தான்டா காண்பிக்கணும். நம்ம நடத்தை அவங்க பேருக்கு எந்தக் களங்கத்தையும் உண்டாக்கக் கூடாது. போடா.. காயூ முகமே வாடிப் போயிருக்கு. சமாதானப்படுத்து “தோளை தட்டிக் கொடுத்தான்.

இருவரின் பேச்சையும் கேட்டு காயூ, வாஸந்தி இரண்டு பேருக்குமே கண்கள் நிரம்பியது.

காயூ, ‘பாவம்.. இத்தனை ஃபீல் பண்ற அளவுக்கு ரொம்ப திட்டிட்டேன். நான் ஒரு மடச்சி’ என்றும்

வாஸந்தி, “அர்வி தான் எத்தனை அருமையா அட்வைஸ் பண்றார்..” என்றும் நினைத்தனர்.

சுனில் தன் தவறை உணர்ந்து காயத்ரியின் அருகே சென்று அமர்ந்தான்.

“சாரி... காயூ... ரியல்லி சாரி...” பாவமாக காயத்ரியைப் பார்த்ததும்,

“இல்ல மாமா.. நான் தான் உங்ககிட்ட சாரி கேட்கணும். என் பேச்சு உங்களை ரொம்ப காயப் படுத்தியிருக்கு.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து இத்தனை நேரம் மௌனமா நீங்க இருந்ததே இல்லை. யாராவது பார்த்து வீட்ல சொன்னா என்ன ஆகுங்கற பயம் தான்.. அதான் ஹார்ஷா பேசிட்டேன்..”

மறுபடி முகத்தில் குறும்பு தாண்டவமாட, “ஒ.கே.. காயூ.. பப்ளிக் பேசில நான் செஞ்சது தப்பு தான்.. அதனால இந்த வாரம் உங்க வீட்டுக்கு வரும்போது மட்டும் எனக்கு நீ ஒரே ஒரு மு... மு... மு...”

“டேய் போடா... உன்னை திருத்தவே முடியாது. சரி போனாப் போகுது.. ஆனா எப்படி அரவிந்த் அண்ணா முன்னாடி உங்க கான்னத்தில்....” வெட்கப்பட்டு முகம் சிவந்த காயூவிடம்.. நம்ப முடியாத ஆனந்தத்தோடு, “அவன் கிடக்கறான்.. நீ கவலைப்படாதே...” ஆசையோடு கன்னத்தை திருப்பினான்.. காயத்ரியே அலட்டாமல், “இப்படி அண்ணா முன்னால உங்க கன்னத்தில நறுக்குன்னு கிள்ளணும்னு ஆசை” என்று வேகமாக எழுந்து வாஸூவிடம் சென்றாள்.

அதையும் மகிழ்வோடு ஏற்ற சுனில், “தேங்க்ஸ் டியர்.. இப்பதான் நீ என் காயூ” என்று அரவிந்தைப் பார்த்து அசடு வழிந்தான். வாய்விட்டு சிரித்த அரவிந்த், “டேய் மச்சான்..! என் பெட்ரூம்ல லைட் எரியல.. நீ காயூ கிட்ட வாங்கின பல்பை அங்க மாட்டிடு” என்று மேலும் அவன் காலை வாரினான். சுனிலோடு இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு, வீடு வந்து சேர்ந்து, மனம் முழுக்க சந்தோஷம் ததும்ப உறக்கத்தை தழுவினான்.

தன் திருமணத்திற்கு இனி எந்தத் தடையும் இல்லை என்று வாஸந்தி உற்சாகமாக வளைய வந்த அதே வேளையில் அவள் சந்தோஷத்தைக்குலைக்க வென்றே அந்த யோகேஷ் தன் சகாக்களோடு சதியாலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.

-9-

யோகேஷ்.... முரட்டு இளைஞன்.. பெற்றோரை இழந்து தன் சகோதரி வீட்டோடு தஞ்சம் அடைந்தவன். தன் மச்சானின் அரசியல் செல்வாக்கை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, முறையற்ற வழிகளில் பணம் சம்பாதித்து, அவரின் மறைவுக்குப் பிறகு... பணத்தை பலவகைகளில் முதலீடு செய்து குவித்துக் கொண்டிருப்பவன்.

டிகிரி முடித்திருந்தான். அடிப்படையில் சில நல்ல குணங்கள் இருந்தாலும், அளவற்ற செல்வம் தேடித் தந்த கூடா நட்பும், சில கெட்ட பழக்கங்களுக்கு அவனை அடிமையாக்கியிருந்தது. ஆனாலும் பெண்களின் சகவாசத்தை அறவே வெறுத்தான். அக்கா கணவர் உயிரோடிருந்த வரை அவரிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்டான். மகளின் பிரிவை நினைத்தே கவலைப் பட்டுக் கொண்டிருந்த அவருக்கு, யோகேஷின் அன்பு ஆறுதலைத் தந்தது.. ஆம்... வாஸந்தியின் தந்தை தான் யோகேஷின் அக்கா கணவர் ராமச்சந்திரன். அவரின் இரண்டாவது மனைவி யாமினியின் ஒரே தம்பி தான் இந்த யோகேஷ்.!

வாஸந்தியின் தாய் மாலதி... அன்று வீட்டை விட்டு வெளியேறிய போது வாஸந்திக்கு பத்து வயது. யோகேஷ் எட்டு வயது மூத்திருந்தான். இரட்டை சடையுடன் கொழு கொழுவென்று தன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு அவள் வெளியேறிய போது, எதுவும் நினைக்கத் தோன்றவில்லை. ‘தொல்லை விட்டது’ என்று மறந்தும் போயிருந்தான்.

ஏதோ ஒரு காண்ட்ராக்ட் விஷயமாக கோவை வந்தவன், மாலில் பேரழகோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த வாஸந்தியைப் பார்த்து அயர்ந்து போனான். இது வரை பெண்களையே மனதில் கூட அண்ட விடாத அவனிடம் சின்ன ஈர்ப்பு..! தனது அடியாட்கள் மூலமாக அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்தவனுக்கோ இன்ப அதிர்ச்சி.. வாஸந்தி தன் மச்சானின் ஒரே மகள்.. என்றதும் மகிழ்ந்து போனான்.

தன் அக்கா யாமினி, மாலதிக்கு செய்த துரோகமோ இல்லை எதுவோ ஒன்று அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது.. ராமச்சந்திரனுக்கு வாஸந்தி தான் ஒரே வாரிசு... பணத்தையும் மீறி மனம் வாஸந்தியை சொந்தமாக்கிக் கொள்ள விழைந்தது.

ஒரு நல்ல நாள் பார்த்து, பூ, பழம், இனிப்பு என்று கூடை கூடையாய் சுமந்து கொண்டு தன் சகாக்களுடன் வாஸந்தியின் வீட்டில் நுழைந்தான்..

வாஸந்தி குளிக்கச் சென்றதும், வேக வேகமாக சமையலை முடித்து பள்ளி செல்லும் அவசரத்தில் இருந்த மாலதி, ஆர்ப்பாட்டமாக ஒரு பெரும் படையுடன் உள்ளே நுழைந்த யோகேஷைக் கண்டு பதறிப் போனாள்.

“தம்பி.... யாரு நீங்க.? என்னதிது.. எதுக்கு உள்ள வர்றீங்க.? வீடு மாறி வந்திட்டீங்கன்னு நினைக்கறேன்” படபடத்துப் போனார்..

“அ..க்..கா... அக்கா..! எனக்கு நீங்க தான் வேணும். உங்களைப் பார்க்க தான் வந்தோம். வெறுங்கையோட வந்தா நல்லாயிருக்குமா.. அதான் ஏதோ கொஞ்சம் வாங்கிட்டு வந்திருக்கேன்..”

ஹாலை நிறைத்திருந்த பொருட்களைப் பார்த்து மேலும் பயந்து போய், “தம்பி... உங்களை எனக்கு யாருன்னே தெரியாது.. இதுவரை பார்த்ததா ஞாபகமும் இல்லை... நீங்க...”

கையுயர்த்தி அவர் பேச்சை தடை செய்த யோகேஷ், ஒற்றைப் பார்வையில் சுற்றி நின்றவர்களை வெளியேற்றினான்.

“நான் எல்லாம் கச்சிதமா விசாரித்து கரெக்டா தான் வந்திருக்கேன். நீங்க மாலதி அக்கா. பிரைவேட் ஸ்கூல்ல பிரின்சிபாலா இருக்கீங்க. உங்களுக்கு வாஸந்தின்னு லட்டு மாதிரி ஒரு பொண்ணு. டாக்டருக்கு படிக்குது¦. உங்க வீட்டுக்காரர் இரண்டாங்கல்யாணம் பண்ணினதுக்காக கோவிச்சுகிட்டு வீட்டை விட்டு வந்துட்டீங்க... என்ன..? திகைச்சுப் போயிட்டீங்க.. புள்ளி விபரம் எல்லாம் சரியா இருக்கு தானே..”

தூய வெண்ணிற வேட்டி சட்டையில், கெத்தாக, கால்மேல் கால் போட்டு சோபாவில் சட்டமாக உட்கார்ந்து கொண்டு வீட்டை அளந்தான்.

“மாலதி அக்கா..! இது சொந்த வீடு தானே.. சின்னதா இருந்தாலும் நீட்டா கச்சிதமா இருக்கு.. என்ன பயந்து போய் நிக்கற. உட்காரு.. ஓ... நான் ஒரு கூறு கெட்டவன். முதல்ல நான் யாருன்னு சொல்லாமலே பேசிகிட்டு இருக்கேன்.

நான் யோகேஷ்.நீ என்னைப் பார்த்து பத்து வருஷத்துக்கு மேல ஆகுது.. அதான் உனக்கு அடையாளம் தெரியலை.நான் உன் சக்களத்தி யாமினியோட தம்பி. இப்ப நல்லா புரிஞ்சிருக்குமே... அதை விட நெருக்கமா சொல்லணும்னா, உன் பொண்ணு வாஸந்திக்கு புருஷனா ஆகப் போறவன். இப்ப நல்லாவே விளங்கியிருக்கும்.. என்ன நாஞ் சொல்றது,” அமர்த்தலாகப் பேசியவனைப் பார்த்து மாலதி விக்கித்துப் போனார்.. தொண்டை வறண்டு, உள்ளுர ஒரு நடுக்கம் ஏற்பட்டது..

இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு ஆபத்து தேடி வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அதிர்ச்சியில் தலைசுற்ற, கீழே விழாமல் இருக்க சோபாவை பிடித்துக் கொண்டார்..

“மாலதி அக்கா..! அப்பவே உட்காரச் சொன்னேன். மருமகனுக்கு கொடுக்கற மரியாதை மனசில இருந்தா போதும். ஆமா நான் வந்து அரைமணி நேரமாகுது. எங்க வாஸந்தி? கண்லயே படலை.. காலேஜுக்கு கிளம்பி கிட்டு இருக்காளா? நான் அவளை அன்னிக்கு ஃபுட் கோர்ட்ல பார்த்ததில் இருந்தே நிதானத்தில் இல்லை. சும்மா ஆடிப் போயிட்டேன்.. கூட யாரு.. காரில் ஒரு பையனும் பொண்ணும் இருந்தாங்களே.... தெரிஞ்ச பையனா.. நாம கமிட் ஆயாச்சு.. இனி அவ எந்தப் பையனோடயும் பேசக் கூடாது.. புரிஞ்சுதா”... அவன் குரலில் மிரட்டல் கலந்த அதிகாரம்.

“யாரு அந்தப் பையன்னு கேட்டனில்ல?” நல்ல வேளையாக அரவிந்த அவன் பார்த்தபோது அருகில் இல்லை.

“அ... அது வந்து சுனில்.. கூட இருந்த பொண்ணுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை. இந்த வருஷக் கடைசியில் கல்யாணம்”.... சுனிலுக்கு இவனால் எந்த ஆபத்தும் வரக் கூடாது என்ற தவிப்பில் வார்த்தைகள் வேகமாக வெளிவந்தன..

“நல்லது.. அந்தப் பையனுக்கு ஆயுசு கெட்டி.. பொழச்சு போகட்டும். எனக்கும் முப்பது வயசாச்சு. மத்த விஷயத்தில எப்படியோ.... பொண்ணுங்க விஷயத்தில நான் ரொம்ப சுத்தமானவன்.. கல்யாணம்..னு ஒண்ணு நடந்தா இது தான் முதல்... கடைசி எல்லாம்.. உன் ஊட்டுக்காரர் மாதிரி இருப்பேன்னு பயந்துக்காத.. நான் நல்லவங்களுக்கு ரொம்ப நல்லவன். இனி எனக்கு வாஸந்தி சொல்றது தான் சட்டம்.. அவ சந்தோஷத்துக்கு நான் கியாரண்டி..

ஆளை பார்த்து படிக்காதவன்னு முடிவு கட்டிராத.. டிகிரி முடிச்சிருக்கேன்.. நான் பண்றது கந்து வட்டி, அப்புறம் கொஞ்சம் வேற மாதிரி கூட கோடிக்கணக்காக பணம் சேர்த்து வெச்சிருக்கேன். பண்ற பிசினஸுக்கு இந்த கெட்டப் வேண்டியிருக்கு.. நான் ரொம்ப கெட்டவன் இல்ல. கொஞ்சம் நல்லவனும் தான். என்ன... வாஸந்தியை பார்த்ததுமே ரொம்ப பிடிச்சு போச்சு... நம்ம பயலுகளை யார்னு கேட்டுட்டு வாங்கடான்னு சொன்னேன். நம்ம மாலதி அக்கா பொண்ணு தான்னு தெரிஞ்சதும் குஷியாயிருச்சு. உனக்கும் சந்தோஷம் தானே..!

இனி எல்லாமே நீ விரும்பற மாதிரி முறைப்படி நடக்கும்.... நடக்கணும்.. வாஸந்தி தான் பொண்ணுங்கறது மட்டும் தான் என் முடிவு. சரியா..

இனி உங்க பாதுகாப்பு என் பொறுப்பு. அதனால என் ஆள் ஒருத்தன் உங்களுக்கு துணையா இங்கேயே இருப்பான். எது வேணும்னாலும் அவன் செஞ்சு குடுப்பான். ஆமா... பார்த்தியா.. வீடு தேடி வந்த மாப்பிள்ளைக்கு ஒரு வாய் தண்ணி குடுக்க கூட மறந்து போயிட்ட. அத்தனை சந்தோஷம்... ம்... நம்ம வீடு.. நானே எடுத்து குடிக்கறேன்..” ஃபிரிஜை திறந்து வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரோடு வந்தமர்ந்தான்..

“வாஸந்தி கூப்பிடு.. நானே காலேஜ் கொண்டு போய் விடறேன்.” சட்டமாக அமர்ந்து கொண்டு, பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அவர்களை சிறை வைத்தான்.. அவனை மீறி இனி துரும்பைக் கூட அவர்களால் நகர்த்த முடியாது என்பதை மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தான்..

மாலதிக்கு அதிர்ச்சியில் மூளை மரத்துப் போனது. “வேண்டாம் தம்பி.. எங்களை விட்டுரு... திடீர்னு வந்து ஏதேதோ பேசற.. எனக்கும் ஸ்கூலுக்கு நேரமாச்சு.. வேலை முடிச்சிட்டு நாங்க கிளம்பிக்கறோம்.. நீங்க...” கை குவித்து மன்றாடினாள்..

“நல்ல தைரியம் தான் மாலதி அக்கா உனக்கு.. என்னை கிளம்புடான்னு சொல்லாம சொல்ற. அப்படித்தான. முதல் தடவையா நீ இப்படி பேசறேன்னு விட்டுடறேன்.. நீயும் கொஞ்சம் ஷாக்காயிட்ட.. ஆனா.. இதுவே கடைசி தடவையாவும் இருக்கட்டும் புரிஞ்சுதா.?

வாஸந்தியை பார்க்கவே இல்லை.. கட்டிக்கப் போறவனை பார்க்க அதுக்கும் ஆசையிருக்காதா..? சரி போ.. நான் முறையா யாமினி கூட வந்து பரிசம் போட்டு, நிச்சயம் பண்ணிக்கறேன். இந்த ஒரு வருஷம் பரிட்சை எழுதட்டும். சரியா.?

உன் வீட்ல முன்னால இருக்கற ரூம் சும்மா தான இருக்கு. என் ஆளுக்கு அது போதும். அதோட கதவு.. திண்ணைப் பக்கமா தான இருக்கு.அவன் உங்களை எந்த விதத்திலயும் டிஸ்டர்ப் பண்ண மாட்டான். கடை கண்ணிக்கு போறதெல்லாம் அவனே செய்வான். என்ன வரட்டா.?” அதே தெனாவெட்டான பேச்சோடு கிளம்பினான்.

மாலதி கால்கள் துவள வெளிக் கதவை அழுந்த தாளிட்டு வந்து சோபாவில் சரிந்தார். உள்ளேயிருந்து ஒடி வந்து தாயின் மடியில் விழுந்த வாஸந்தியின் உடலில் நடுக்கம். அதே நடுக்கம் மாலதியின் கைகயிலும் தெரிய, தன் செல்ல மகளை முதன் முறையாக அவளுக்கு தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். சிறிது நேரம் அப்படியே கழிய, அவளின் தலையை வருடி,

“இவனை நேத்து மால்ல பார்த்தியாடா..?” எப்போதும் கண்டிப்பையே காட்டும் தாயின் குரலில் ஈரமும் பரிவும் வாஸந்திக்கு அழுகையை வரவழைத்தது. அவரின் தோளில் சாய்ந்து விசும்பியவள், “இல்லையேம்மா. எங்களோடு சுனில் அண்ணா இருந்தார். நான் வேற யாரையும் கவனிக்கவே இல்லையேம்மா..” அப்போது ஒலித்த காலிங்பெல் சத்தத்தில் இருவருமே அதிர்ந்து போயினர். வாஸந்தியை சமையலறைக்குள் அனுப்பிவிட்டு கதவைத் திறந்தார்.. பக்கத்து வீட்டுப் பெண் சந்தோஷி... அவள் கணவர் தேசியமயமாக்கப் பட்ட வங்கியொன்றில் பணிபுரிகிறார். அவர்களின் பன்னிரண்டு வயது மகள் பூர்ணிமா.. டீசண்டான குடும்பம். மாலதி கொஞ்சம் மனது விட்டு நெருக்கமாகப் பழகும் ஒரே தோழி சந்தோஷி. ஒரு பெண்ணாக தனியே சமாளிக்க முடியாத பல சந்தர்ப்பங்களில் அவள் கணவர் சந்திரன் நேரம் காலம் பார்க்காமல் உதவியிருக்கிறார்.. வாஸந்தியின் ஒரே விளையாட்டு நட்பு பூர்ணிமாதான்.

“வா... சந்தோஷி”

“என்னக்கா... காலையிலேயே உங்க வீட்ல அத்தனை கார் வரிசை கட்டி நின்னுச்சு.. உறவுக் காரங்களா? இவரும் பூர்ணியும் கிளம்பற அவசரம்... அதான் அவங்களை அனுப்பிட்டு வரேன்.. உடம்பு சரியில்லையா.? முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. என்னாச்சுக்கா.?”

“என்ன சொல்றதுன்னே தெரியலை. சந்தோஷி... என்னோட சாபம் இப்ப என் மகளையும் துரத்துது. இத்தனை நாளா கொளரவமா என் பொண்ணை வளர்த்துட்டேன். அவளை ஒரு நல்லவன் கையில் ஒப்படைச்சிட்டா என் ஒரே பெரிய பொறுப்பு தீர்ந்திடும். அதுக்கு இப்ப ஒரு பெரிய சோதனை வந்திருக்கு சந்தோஷி. பத்து வருஷத்துக்கு முன்னால நான் வேண்டான்னு உதறிட்டு வந்த சொந்தம் மறுபடி வந்து பாம்பாட்டம் என் காலைச் சுத்துது.என்ற பண்றதுன்னே தெரியலை..” காலையில் நடந்த விஷயங்களை சுருக்கமாக சொன்னார்.

சந்தோஷி, “வருத்தப்படாதீங்க அக்கா. நான் பூரணி அப்பா கிட்ட சொல்றேன். என்ன பண்றதுன்னு பார்க்கலாம்...”

“நீங்கள்ளாம் கூட இருக்கிற தைரியத்தில தான் இருக்கேன். என் வாஸுவை காலம் பூராவும் கண் கலங்காம பார்த்துக்கிறவனா பார்த்து கல்யாணத்தை சீக்கிரமா முடிக்கணும் சந்தோஷி.. இந்த யோகேஷால் என் பொண்ணுக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு.. அவளை காலேஜ் அனுப்பக் கூட யோசனையா இருக்கும்மா.”

“அந்த மாதிரி நீங்க பயப்படத் தேவையில்லை.. அவன் வாசு மேல பிரியம் வைச்சிருக்கான். அதனால எந்தத் தொந்தரவும் தரமாட்டான்னு தோணுது. உங்க பின்னாலேயே சுத்தி டார்ச்சர் பண்ணுவான்.. அவ்வளவு தான்.”

“அதுதான்மா பிரச்னையே. தனியே சுதந்திரமா இவனுக்குத் தெரியாம இனிமே எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்புறம் எப்படி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க..? நாளைக்கு எங்களுக்கு காவலா செக்யூரிட்டியை அனுப்பறானாம்.. என்ன சொல்றது? இருபத்தி நாலு மணி நேரமும்.. அதைத் தாண்டி போகவே முடியாது...” அவர் குரல் தழுதழுத்தது..

வாஸந்தியின் முகம் பயத்தில் வெளிறியது. தன் எதிர்காலம் குறித்த பயம் கண்களில் அப்பட்டமாகத் தெரிய,

“அம்மா..! நான் இன்னிக்கு காலேஜ் போகலை. மனசு சரியில்லைமா...”

“சரிடா... போய் டிபன் சாப்பிடு... காயூ வீட்டில இருந்து அவ அம்மா கூட பேசணும். போன் பண்றேன்.. நானும் லீவ் போட வேண்டியது தான்.”

வாஸந்தி காலேஜ் வரவில்லை என்றதும் காயத்ரியை பதட்டம் சூழ, சுனிலிடம் தெரிவித்தாள்..

“விஷயம் தெரிஞ்சு போச்சோன்னு நினைக்கறேன் மாமா.. ஆண்ட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அவளை காலேஜை விட்டு நிறுத்தக் கூட தயங்க மாட்டாங்க..”

சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது காயூ.. உடம்பு சரியில்லையோ என்னமோ.? எதுக்கும் நீ போன் பண்ணிப் பாரேன்.”

“இல்லை சுனில். காய்ச்சலா இருந்தா கூட டேப்லட் போட்டுட்டு வந்திடுவா. அவளுக்கு தனியா செல்போன் எதுவும் கிடையாது. லேண்ட்லைன் தான்.. ஆண்ட்டி போன் எடுத்தா என்ன பேசறது.? பயமா இருக்கு..”

“உனக்கென்ன இதில பயம்? வாஸு ஏன் காலேஜ் வரலைன்னு கேள்.” அதுக்கப்புறம் அரவிந்த் கிட்ட சொல்லிக்கலாம்..”

வாஸந்தியின் வீட்டு நம்பரை அழுத்தியதும் காயூவின் பல்ஸ் எகிறியது. அவள் பயந்தது போலவே போனை எடுத்ததும் மாலதியேதான்!

“ஆண்ட்டி..! நீங்களும் ஸ்கூலுக்கு போகலையா? வாஸு வரலையேன்னு தான் போன் பண்ணினேன். ஏன் ஆண்ட்டி.”

“காயூ.. நல்லவேளைம்மா.. நானே உனக்கு போன் பண்ண நினைச்சேன்.. நியே பண்ணிட்ட. இப்ப எங்க இருக்க?”

“காலேஜ்ல தான். லஞ்ச் டைம். வாசு நல்லா இருக்கிறா தானே..” ஏனோ அவளுக்குள் பயப்பந்து உருண்டது..

“அவ விஷயம் தான். நேர்ல வா சொல்றேன். நேத்து நீங்க வெளியே போனதில தான் பிரச்னையே ஆரம்பம். முடிஞ்சா சுனிலை கூட்டிட்டு உடனே வா.. அவசரமா இன்னிக்கே பேசணும் நாளைக்கு பேச சந்தர்ப்பம் கிடைக்காது.. உன் அம்மா கிட்ட நான் சொல்லிடறேன்.. அர்ஜண்ட்..”

“மாமா... நான் பயந்தபடியே ஆயிருச்சு. அரவிந்த் அண்ணா மேட்டர் தான். இப்ப என்ன செய்யறது?”

“ஷ். வாயை மூடறியா.? இது வேற ஏதோ மேட்டர்னு தோணுது. இல்லேன்னா உன் கிட்ட சாதாரணமா பேசி இருக்க மாட்டாங்க. நீ போய் லீவ் சொல்லிட்டு கேட்ல வந்து நில்லு. நான் பைக்கை எடுத்துட்டு வரேன். என்ன சொல்றாங்கன்னு போனா தானே தெரியும். போயிட்டு வந்து, அரவிந்த் கிட்ட சொல்லிக்கலாம். இல்லேன்னா டென்ஷனாயிடுவான்.”

காயத்ரி அவள் அம்மாவை அழைப்பதற்கு முன்பே அவரிடமிருந்து போன்.

“காயூ. மாலதி என் கிட்ட பேசினா. ரொம்ப படபடப்பா பேசினா. நீ சுனிலோட உடனே அங்க போ... வேற எங்கேயும் ஊரைச் சுத்தக் கூடாது. என்ன? பேசி முடிச்சிட்டு நேரா வீடு வந்து சேரணும். தெரியுதா?”

“சரிம்மா. வாஸு வீட்டுக்கு போயிட்டு கிளம்பறப்ப போன் பண்றேன்”

காயத்ரியைப் பார்த்ததும் வாசுந்தி கண்ணீர் மல்க ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

மாலதியோ, “வாப்பா சுனில். உனக்கு ஸ்டடிஸ் இந்த வருஷம் முடியுதில்ல. அப்புறம் உன் பிளான் என்ன..?” என்று சாதாரணமாகப் பேசினாலும் அவர் கண்களிலிருந்த கலக்கம் சுனிலின் கண்களுக்கு தப்பவில்லை.

“என்னாச்சும்மா..?” என்று கேட்டது தான் தாமதம், வாஸந்தி காயத்ரியின் மடியில் விழுந்து கதறினாள். மாலதி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்த போது அவரின் கண்களும் கலங்கியிருந்தன. காயூ ஜுஸ் கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

“ஆண்ட்டி இதையாவது குடிங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா காலையிலிருந்த எதுவும் சாப்பிட்ட மாதிரியே தெரியலை. சமைச்சது ஒரு விள்ளல் கூட குறையாம அப்படியே இருக்கு. ஒரு ரௌடிக்கு பயந்து நீங்க இத்தனை நெர்வசாக வேண்டியதில்லை..

அவங்கிட்டயிருந்து தப்பிக்க ஏதாவது வழி பிறக்கும். நான் அப்பா, அம்மா கிட்டயும் சொல்றேன். ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க. அதுக்குள்ள எதாவது யோசிப்போம்.”

சுனில், “ஆமாம்மா.. நாங்க வீட்ல போய் பேசறோம்.” யோகேஷைப் பற்றி மேலும் சில விபரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டு, இருவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்து விட்டுக் கிளம்பினர். செல்லும் போது மௌனமாக ஏதோ யோசித்துக் கொண்டே வந்தாள். விஷயம் விபரீதமாகப் போவதை நினைத்து கலங்கிப் போனாள்.

சுனிலின் இடுப்பைச் சுற்றிக் கைகளை படர விட்டவள், “மாமா... உங்க கிட்ட பேசணும். எதாவது ரெஸ்டாரண்ட் போலாம்.” அவள் மனது புரிந்த சுனிலும் அவள் கைகளை ஆதரவாகப் பற்றி அழுத்தி விட்டு, லக்ஷ்மி காம்ளக்ஸில் பைக்கை நிறுத்தினான்..

அன்னபூர்ணாவில் லைட்டாக டிபன் ஆர்டர் செய்து விட்டு, “ஏதோ பேச வந்தியே சொல்லுடா” என்றான்.

“மாமா! இந்த யோகேஷ் இப்ப வீட்ல புகுந்து குழப்பறது. ஓரளவுக்கு நமக்கு சாதகமாக கூட இருக்கு.”

“பைத்தியமாடி நீ... என்ன பேசறேன்னு தெரியுதா.? அவங்களே வீட்டை விட்டு வெளியே வரவே அந்த பயம் பயக்கறாங்க.. உனக்கு கிண்டலா இருக்கா.”

“இல்ல மாமா.. ஆண்ட்டி உடனே வாஸுவுக்கு மேரேஜ் பண்ணனும்..னு சொல்றாங்கல்ல.. இந்த சமயத்தில அரவிந்த் அண்ணாவுக்கு ஒ.கே சொல்றமாதிரி ஆண்ட்டியை தயார் படுத்தணும்.. எதாவது யோசித்து பிளான் பண்ணலாம். யோகேஷ் முந்திக்கறதுக்குள்ள நாம உஷாராகணும்.. மேரேஜ் முடிஞ்ச பிறகு அரவிந்த் அண்ணா நிச்சயமா அவளை படிக்க வைப்பாங்க.” கண்கள் மின்ன பேசியவளையே ஆசையோடு பார்த்தவனுக்கு குறும்பு தலைதூக்கியது..
தொடரும்...