• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம்-1

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
அதிகாலைப் பொழுதில் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளின் உதவியால் அந்த இடமே ஜொலி ஜொலிக்க, நாதஸ்வர இசையில் அரங்கம் அதிர, புகைப்படக் கலைஞர் வருவோரை படம் பிடிப்பதா! இல்லை வண்ண வண்ண உடையில் வானவில் போல் நடனமிடும் சிறுவர் பட்டாளத்தை படம் பிடிப்பதா! இல்லை கண்ணிற்குக் குளிர்ச்சியாக லெஹங்கா என்ற பெயரில் பாவாடை தாவணியில் வலம் வரும் பருவ நங்கைகளை படம் பிடிப்பதா! இல்லை தங்கள் முறைப்பெண்ணைக் கவரும் வண்ணம் அவர்களுக்கு நிகராக கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்த காளையர்களை படம் பிடிப்பதா! என்று தெரியாமல் எல்லா பக்கமும் சுற்றி வந்து முடிந்த அளவு அனைவரையும் தன் புகைப்படக் கருவியில் கிளிக் செய்து கொண்டிருந்தார்.​

மாப்பிள்ளை வரவேற்பில் பட்டையைக் கிளப்பிய பட்டாசு சத்தம், அவ்வழியே செல்வோரை ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்கச் செய்து கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம். மூகூர்த்தப்பட்டு உடுத்தி அழகுப் பதுமையாய் அன்னனடையிட்டு வந்து அமர்ந்தாள் மணப்பெண். அருகில் இருப்பவனும் அவளின் அழகுக்கு சற்றும் சலைக்காதவனாய் ஆஜானுபாகுவாய் பட்டு வேஸ்டி சட்டையில் அமர்ந்திருந்தான்.

சில மணித்துளிகளில் தன்னை அவனுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடியவன் இன்னும் தன்னை நிமிர்ந்து பார்த்திடாமல் இருக்க, மாலைகளுக்கு நடுவே கையைவிட்டு அவனை கிள்ளிவைக்க நினைத்திட, சரியாக அவளின் செயலை ஊகித்து கையைப் பிடித்திருந்தான் அவளின் கள்வன்.

தன்னைக் கண்டு கொண்டதில் ஒருநொடி திக்குற்றவள், தன் கையை உருகிக் கொள்ள நினைக்க அது அவன் பிடியில் இருந்து வருவேனா என்றது. தன் கையில் நொடிக்கு நொடி அழுத்தம் அதிகரிப்பதை உணர்ந்தவள் அருகில் இருப்பவனை நிமிர்ந்து பார்த்திட, அவன் முகம் ரௌத்திரம் நிறைந்து பார்க்கவே பயமாக இருந்தது.

கடினப்பட்டு தன் கையை அவனிடம் இருந்து உருகிக் கொண்டாள். அவனை வம்பு வளர்க்க நினைத்ததற்கு இவ்வளவு கோபம் கொள்வானா!!! ஏன் இந்த கோபம்? என்று யோசித்துக் கொண்டே மீண்டும் அவன் முகத்தைக் காண இப்போது அதைவிட அதிகமாகவே முகம் சிடுசிடுத்திருந்தது.

அதற்குள் பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தங்கத் திருநாண் அவன் முன்னால் நீட்டப்பட, அதனை எடுத்தவன் பெண்ணவளின் கழுத்துவரை கொண்டு சென்று, ஏனோ அதனை அணிவிக்க மனம் இல்லாமல் மீண்டும் அர்ச்சதைத் தட்டில் வைத்துவிட்டு, மாலையை கழற்றி தான் அமர்ந்திருந்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்து கொண்டான்.

கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு எதுவும் இன்றி,
பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில் சற்றே திளைத்துருந்தேன்
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது

என்ற பாடலின் இசையில் திடுக்கிட்டு எழுந்த மிர்லா, சலிப்போடு

"ச்சே... இது என்ன டெய்லி சேம் ட்ரீம்... இரிட்டேட்டிங் ட்ரீம்...." என்று புலம்பியபடி எழுந்து குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அடுக்களை நுழைய, அங்கே ருக்மணியம்மா அவளுக்கு முன்னதாக எழுந்து காஃபி கலந்து கொண்டிருந்தார்.

"குட் மார்னிங் ஆன்டி... உங்களை எத்தனை முறை சொல்றேன்... காலைல நேரமே எழுந்துக்காதிங்க, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்கனு"

"தூக்கம் வரமாட்டிங்குது டா. சீக்கிரமா எழுந்து பழகிட்டேன் இல்லயா... சரி நீ தூங்கினேயா இல்லேயா? கண்ணெல்லாம் சிவந்திருக்கு!!!"

அவளிடம் எந்த பதிலும் இல்லை என்றவுடன், ஃபிலீடரில் காஃபியை வடிகட்டிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்க, அவளோ தன் உள்ளங்கையை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"என்ன மறுபடியும் கனவா? இதுக்கு வைத்தியம் பாக்க முடியாதாடா பாப்பா? நீயும் தினோமு கனவு கண்டுட்டு உன் தூக்கத்தை கெடுத்துக்குறே..." என்று அவளின் மேல் உள்ள அன்பின்பால் வினவினார்.

இதற்கு என்ன பதில் சொல்வாள் அவள், ஆழ்மனதின் தாக்கத்தால் கூட கனவு வருவதுண்டு என்று விடை தெரிந்துமே அதற்கு விடை தேட முடியுமா என்ன?

"எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுது ஆன்டி... நான் குளிச்சிட்டு வரேன்." என்று கூறி நகர்ந்தவளின் கைபிடித்து நிறுத்தி,

"இந்தா இதை குடிச்சிட்டு போ... நான் மொட்டைமாடில தூங்கிட்டு இருக்க அந்த தடிமாடை எழுப்பிட்டு வரேன்." என்று கூறி அவள் கையில் ஒரு டம்ளரை திணித்துவிட்டு மற்றொரு டம்ளருடன் மாடி ஏறிச் சென்றார்.

அங்கே முகம் முதற்கொண்டு மொத்தமாய் மூடிப்படுத்திருந்தவனைக் காண ருக்மணியம்மாவிற்கு கோபம் வந்தது.

'இந்த பையன் கிட்ட எத்தனவாட்டி சொல்றது. முகத்தை மூடிப்படுக்காதே, அது நல்லதுக்கு இல்லேனு.... சொன்னா கேட்டா தானே...' என்று திட்டிக் கொண்டே அவனை எழுப்பிவிட்டார்.

"டேய்... கபி... எந்திரி டா..."

"குட் மார்னிங் ம்மா... ஆஆஆவ்வ்வ்..." என்று கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் அவர் கொடுத்த காஃபியை, வாயைக் கூட கொப்பலிக்காமல் அப்படியே குடித்திட,

"நீ குடிச்ச டம்ளரை இனி தனியா தான் போடனும் டா... உன் வாயில இருக்க விஷம் எல்லாம் அந்த டம்ளர்ல தான் இறங்கிடுக்கும்... உனக்கெல்லாம் எப்படி டா மிர்லா ஃபரெண்டா கிடைச்சா!!! அவளுக்கும் உனக்கும் ஒரு ஒத்துமை கூட இல்ல... அந்த பொண்ணு பக்கா க்ளீன்... நீ சுத்த அழுக்கு..."

"ம்மா... டெய்லி சுப்ரபாதம் பாட கஷ்டமா இல்லேயா?" என்று காஃபியை மிடரிக் கொண்டே வினவினான்.

"உனக்கெல்லாம் என்னை மாதிரி வாய்ல சொல்ற பொண்ணு பொண்டாட்டியா வரக் கூடாது, தொடப்பக்கட்டையில அடிச்சு சொல்ற பொண்ணு தான் பொண்டாட்டியா வரனும்..." என்று பொய் கோபமாய் கூறிட,

"பாத்து சாபம் கொடுங்க... அந்த கஷ்டத்தை அனுபவிக்கப் போறது உங்க செல்லப் புள்ள மிர்லாவாக் கூட இருக்கலாம்..." என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு கீழிறங்கிச் சென்றான்.



-தொடரும்​