• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதினம் 9

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
கபியுடன் அலுவலகம் வந்து இறங்கிய மிர்லாவைப் பார்த்து உபேந்திரன் ரசித்தான். இல்லை ரசிப்பது போல் காட்டிக் கொண்டான்.

"நல்ல பேர்-ல(pair)?" என்று தன்னுடைய வலிகளை மறைத்து சிரித்தபடிக் கூறிட,

அருகில் இருந்த தாரா, யாரைச் சொல்கிறான் என்பதைப் போல் திரும்பிப் பார்த்தாள். இதற்கு முன் அவளும் கபியைக் கண்டதில்லை தான். ஆனால் மிர்லா இவ்வளவு உரிமையாக பைக்கில் வந்து இறங்குகிறாள் என்றால் அது நிச்சயம் கபிலனாகத் தான் இருக்க வேண்டும் என்றே நினைத்தாள்.

மிர்லாவின் வாய்மொழியாய் கபிலனைப் பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை கேட்டிருந்த தாராவிற்கும் அவனைப் பார்க்கும் ஆவல் பலமுறை தோன்றியிருக்கிறது. இருந்தாலும் தோழியிடம் இது பற்றி ஒருநாளும் கூறியதில்லை.

"இந்தர் ப்ரோ நீங்க ஏதோ தப்பாப் பாக்குறிங்கனு நெனைக்கிறேன். அவங்களுக்குள்ள காதல் இல்லே..." என்று தனக்கும் சேர்த்தே கூறிக் கொண்டாள்.

"லவ் இல்லாமலா மிர்லாவுக்காகவே கோவைல வேலை வேணும்னு பிடிவாதமா பணிமாற்றம் கேட்டு இங்கே வந்திருப்பார்!!!" என்று பெருமையாக் கூறினாலும் அதில் பொறாமை இருந்தது.

ஆனால் அருகில் இருந்தவளுக்கு அது எதுவும் புலப்படவில்லை. இத்தனை நாள் கபியின் மீது, அவன் மிர்லாவிடம் காட்டும் அக்கறையில் தனக்குள் ஒரு க்ரஷ் ஏற்பட்டுவிட்டதாகத் தான் நினைத்திருந்தாள். அது தான் அவனைக் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாகவும் நம்பினாள்.

ஆனால் அது எப்போது காதலாக மாறியது என்று அவளுக்கே தெரிந்திடவில்லை. இப்போது இதயத்தின் ஓரத்தில் எங்கோ ஒரு மூலையில் வலியெடுத்து, மூளையைத் தாக்கி அது உடல் முழுதும் பரவுவது போல் உணர்ந்தாள் தாரா.

ஏதோ ஒரு உந்துதலில் இந்தரின் முகத்தைத் திரும்பிப் பார்த்த தாரா, "நீங்களும் மிர்லாவை விரும்புனிங்க தானே!!' என்றிட,

கசந்த புன்னகை ஒன்றை பதிலாகக் கொடுத்தவன் சிறிது நேர மௌனத்திற்குப் பின், "நான்..." என்று ஆரம்பித்து வார்த்தை வராமல் தவித்தவன், தொண்டையைக் கணைத்து

"நான்... அவங்க தான் இருக்கிறதுலேயே ரெம்ப அமைதியா இருக்காங்களேனு வம்பு பண்ணுனேன்.... மத்தவடி ஒன்னு இல்லே..." என்றவனின் குரலில் அப்பட்டமாக அவனின் வலிகள் தெரிந்தது.

இப்போது அவன் புறம் முழுமையாகத் திரும்பிய தாரா, "பொய் சொல்றிங்க ப்ரோ... உங்க வாய்ஸும், கண்ணும் உண்மை என்னனு சொல்லுதே..." என்றாள்.

அதற்கு மேல் அங்கே நின்று தன்னை சமாளிக்க முடியாது என்று நினைத்தவன், "நான் உள்ள போறேன், நீங்க உங்க ஃப்ரெண்டு கூட வாங்க..." என்று கூறி விறுவிறுவென்று அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

தான் மட்டும் இங்கே நின்று என்ன செய்யப் போகிறோம், தனக்கும் அதே வலி தானே! என்று யோசித்த தாரா, கபியைப் பார்த்தவாறு அடுத்த யோசனைக்குத் தாவினாள். ஒருவேளை மிர்லா மனசுல ஆசையில்லாமல், கபி மட்டும் மிர்லாவை ஒன்சைட் லவ் பண்ணுவாறோ!!! என்ற யோசனையில் இருந்தவளுக்கு கபிலனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் மனதில் பதியவில்லை.

மிர்லாவின் "ஏய் எரும..." என்ற கத்தலில் நிகழ்வுக்கு வந்தவள், மிர்லாவைப் பார்க்க, "எத்தனை தடவை அழைக்கிறது. காது கேக்கலேயா!!! கண்ணுத் தொறந்து வெச்சிக்கிட்டே என்னடி கனவு கண்டுட்டு இருக்கே!!! இங்கே வா" என்று அழைத்திட,

தாரா கபியை மீண்டும் பார்த்தாள். அவனின் பார்வை தன்னை விசித்திரமாகப் பார்ப்பதை உணர்ந்தவள், 'இவ்வளவு நேரம் அவனை வெறிச்சு வெறிச்சு பார்த்ததை பார்த்துட்டான் போலவே' என்று உள்ளுக்குள் ஒருவிதமான பயப்பந்து உருள, அதனை வெளிக்காட்டாமல் சமாளித்து அவர்களை நெருங்கினாள்.

"கபி இது தாரா. தாரணி" என்று கபிக்கு அறிமுகம் செய்தவள், தாராவிற்கும் கபியை அறிமுகம் செய்து வைத்தாள்.

"தாரா இது தான் என் நண்பன் கபிலன்." என்று கூறி அவன் தோளில் கைபோட்டுக் கொண்டு "எனக்கு மட்டும் கபீஸ்......." என்று கூறி அடுத்த வார்த்தையை முழுங்கியிருந்தாள்.

தாரா முகமன்னுக்காக அவனுக்கு ஹலோ சொல்ல, அவனோ இன்னும் தாராவைத் தான் பார்வை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பதிலுக்கு ஹாய் கூட சொல்லாமல் தன்னையே வெறிப்பவனை எப்படி எதிர் கொண்டு பார்ப்பது என்று புரியாமல் தாரா மிர்லாவைப் பார்க்க,

"அவன் இப்படித்தான்... பழகுற வரைக்கும் பெருசா மெனக்கெட்டுக்கமாட்டான். பழகிட்டா உயிரா பாத்துப்பான்." என்று எப்போதும் போல் அவனைப் பற்றி ஜம்மமடிக்க,

தாராவின் பார்வை தன்னையும் அறியாமல் கபியின் மேல் ஒரு நொடி கனிவாய் படர்ந்திட, அப்போதும் அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் சற்றே அச்சம் கொண்ட தாரா,

"மிர்லா டைம் ஆகுது... நான் முன்னாடி போறேன் நீ சீக்கிரம் வா..." என்று கூறி, அவனிடம் விடைபெறும் துணிவுயின்றி, அப்படியே அங்கிருந்து நகர முயற்சிக்க, மிர்லா அவள் கையைப் பிடித்து நிறுத்தி,

"ஹேய் இரு... நானும் வரேன்..." என்று தோழியிடம் கூறிவிட்டு,

"ஓகே... கபி பைய்... நான் ஈவ்னிங் கேப் புக் பண்ணிக்கிறேன்... முடிஞ்சா வண்டிய சர்வீஸ் விடு, நான் ஈவ்னிங் எடுத்துக்கிறேன்... பைய்" என்று நண்பனிடம் விடைபெற்று அலுவலகம் நோக்கி நடக்க, மிர்லாவிற்கு ஒரு அடி பின்னால் வந்த தாரா, வண்டியை யூ-டர்ன் செய்து சென்று கொண்டிருக்கும் கபியைத் திரும்பிப் பார்த்தாள்.

கபியும் ரிவர் வியூ மிரரில் அவளைப் பார்த்திட, பாவம் அவளுக்குத் தான் அது தெரிந்திடவில்லை. ஒருநொடியே என்றாலும் தாராவின் அந்த கடைசிப் பார்வை கூட கபியை யோசிக்க வைத்தது.

இன்று தான் இவளை முதல்முறையாகப் பார்க்கிறேன், ஆனால் அவள் என்னை வெகுநாள் பழகியது போல் ஏன் பார்த்தாள்! அதுவும் அவள் கண்ணில் என்ன இருந்தது, தவிப்பா! ஏமாற்றமா! பயமா!!! ஏதோ ஒன்று அவள் என்னைப் பார்க்கும் போது உணர்கிறாள். அது என்னவாக இருக்கும்!!! ஏன் என்னைத் திரும்பிப் பார்த்தாள், அதுவும் இன்று ஒருநாள் மட்டும் உன்னை என் கண்களுக்குள் நிரப்பிக் கொள்கிறேன் என்பது போல்!!! என்று தாராவை மட்டுமே தன் சிந்தனையில் வைத்தபடி வீடு வந்து சேர்ந்தான்.

மறக்காமல் மிர்லாவின் பைக்-ஐ சர்வீஸ் விட்டுவிட்டு, மாலை வேலைக்குச் செல்லும் முன் அவனே எடுத்து வந்து வீட்டில் நிறுத்திவிட்டு தான் சென்றான்.

அன்றைய பணி எதையும் செய்ய முடியாமல் தவித்த தாரா, உபேந்திரனிடம் சென்று தலைவலி என்று கூறி மதியமே விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

மிர்லாவோ எரர் ஒன்றை சரி செய்வதில் முனைப்போடு கணினித் திரையில் மூழ்கிட, நேரம் போனதை மறந்தாள்.

என்றும் இல்லாமல் இன்பா இன்று அவளின் அருகில் வந்து அமர்ந்திட, திடுக்கிட்டவள் சுற்றிலும் பார்வையை சுழல விட அங்கே ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அதுவும் சற்று தொலைவில்... இப்போது தன் கேபினில் எந்த சத்தம் கேட்டாலும் மற்றவர்களுக்கு காட்சிப் பொருளாகத் தான் இருவரும் நிற்க வேண்டி வரும் என்று உணர்ந்து அச்சத்தோடு அவனை நோக்கினாள்.

அவனோ அவளின் பார்வையை அசைட்டை செய்துவிட்டு, "உன்னை என்னமோ ரெம்ப நல்லவனு நெனச்சேன். இன்னைக்கு தான் உன் தராதரம் என்னனு தெரிஞ்சது. ஆயிரம் பேர் வேலை பாக்குற ஆபிஸ் வாசல்ல நின்னுட்டு ஒரு வயசுப் பையன் தோள்ல கைபோட்டு போசுற நீயெல்லாம் என் லவ்-க்கு தகுதியே இல்லாதவ...

இத்தனை நாள் இங்கே இந்தர்-ஐ உன் பின்னாடி சுத்த விட்டுட்டு, இப்போ ஆபிஸ்ல பேர் கெட்டுப்போயிடும்னு பயந்து வெளிய ஒருத்தனைப் பிடுச்சுட்டியோ?" என்று நக்கலாக வினவிட,

"அவனை பத்தி பேச உனக்குத் தகுதியில்லே. அவன் எனக்கு ஃப்ரெண்டுக்கும் மேல... கெட் லாஸ்ட்" என்று அமைதியாக உறுமினாள்.

"ஓஓஓ... இப்போ பெஸ்டினு சொல்லிக்கிறது தான் ஃபேஷனோ!!! லவ்வர்னு தெரியாம சொல்லிட்டேன்." என்று மீண்டும் அவளை ஏளனமாகப் பார்த்து சிரித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அவன் பேச்சில் அழத்துடித்தக் கண்களை அடக்கிக் கொண்டு, அலுவலகத்தில் அழுது வடிந்திட விருப்பம் இன்றி, படபடவென தன் தோள்பையில் பாதி பொருளை தினித்தும் தினிக்காமலும் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தப்பின் தான் அவளுக்கு பைக் இன்று எடுத்து வரவில்லை என்று நினைவில் வந்தது.

தன் திறன்பேசியை எடுத்து கேப் புக் செய்ய அதுவோ குறுகலான சாலை என்று ஓட்டுனர் உள்ளே வர மறுத்து கேன்சல் செய்துவிட்டார். சரி நடந்து செல்லலாம் என நினைத்து சாலையில் திரும்பிப் பார்க்க யாருமே இல்லை. இன்று அந்த அமைதி அவளை அதிகமாகவே பயம்முறுத்தியது.

அப்போது அங்கே வந்த இந்தர், அவளின் கலங்கிய முகத்தைக் கண்டு,

"மிர்லா நான் உங்களை மெயின் ரோட்ல ட்ராப் பண்ணட்டுமா?" என்றிட

"வேண்டாம்" என்று கூறி துணிவை வரவைத்துக் கொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினாள்.

தன் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள் அவள் பாதித் தூரம் சென்றுவிடுவாள் என்று உணர்ந்து, அவள் பின்னால் விரைந்தான்.

தன் பின்னால் ஓடிவருபவனைக் கண்டு திரும்பிக்கூட பார்க்காமல், "நீ கெளம்பு... நான் போய்ப்பேன்..." என்று ஏகத்துக்கும் உரிமையாகக் கூறினாள்.

"இல்லை பரவாயில்லை... நான் ரோட்டுக்கு அந்த பக்கம் வரேன்.." என்று கூறி சட்டென்று சாலையைக் கடந்து மறுபக்கம் நடந்து வந்தான்.

பாதி வழியை இருவருமாகக் கடந்திருக்க, நடுவில் இரண்டு தெருநாய்கள் ஒன்றையொன்று பார்த்து உறுமிக் கொண்டிருந்தது. அதுவும் மிர்லா நடந்து கொண்டிருந்தப் பக்கம். அவைகளின் அருகே செல்லச் செல்ல அவள் நடையின் வேகம் குறையத் தொடங்கியது. அதனை உணர்ந்தவன் அவள் புறம் வரநினைக்க, அதற்குள் நாய் குரைத்ததில்..... சாலையில் வாகனம் எதுவும் வருகிறதா என்று கூட பார்க்காமல் விரைந்து வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் செயலுக்கு அவனிடம் ஆதரிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை... ஆனால் நடையை மட்டும் அவன் நிறுத்திடவில்லை. அவனுடன் இணைந்து அவள் நடந்தாளா? இல்லை அவன் நடத்திச் சென்றானா? என்று அவளுக்கேத் தெரியவில்லை.

பிரதான சாலைக்கு சற்று முன் அவளை நிறுத்தியவன், "மிர்லா கைய எடுங்க... யாராவது பாத்தா தப்பா நெனைக்கப் போறாங்க..." என்றிட,

அவளின் முகம் கோபத்தில் சிவந்தது. கண்கள் ஏன் கலங்கியது என்று அவளுக்கேத் தெரியவில்லை. கையை மடக்கி அவன் வயிற்றில் குத்திவிட்டு அவனைவிட்டு விலகிச் சென்றாள்.



-தொடரும்​