• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 1

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 1 (1)

யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியான வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில், நடு நாயகமாக விளங்கும் சிவன் கோவிலிலும் அம்மன் கோவிலிலும் பூஜை மணி ஒரே நேரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அம்மன் கோவிலும் சிவன் கோவிலும் அருகருகே அமைக்கப்பட்டு இருந்தது, அந்த ஊருக்கே ஒரு இலட்சணமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது.

அம்மன் கோவில் கண்ணைக் கவரும் வர்ணப் பூச்சுக்களோடு காட்சி கொடுக்க, சிவன் கோவிலோ பழமையான கருங்கல் கோபுரத்துடன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

இருளும் அல்லாத பகலும் அல்லாத அந்த வைகறைப் பொழுதினிலே, சிவன் கோவிலோடு ஒட்டியிருந்த தோட்டத்துப் பூச்செடிகளின் மலர்கள் மெல்ல மடல் அவிழ்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன.

கோவில்களின் வெளி வீதியில் நின்றிருந்த மாமரத்துக் கிளையின் மேலே, ஒரு இலையைக் குடையாக்கி மெல்லக் கண்ணயர்ந்து கொண்டிருந்த சின்னஞ்சிறு குருவி ஒன்று, தனது குண்டுமணிக் கண்களை மெல்ல விரித்துச் சிறகுகளை அடித்துச் சோம்பல் முறித்துவிட்டுப் பறந்து சென்றது.

பட்சிகள் சில ஒன்று கூடி, வைகறையைத் தொடர்ந்து வரப் போகின்ற ஆதவன் வருகைக்கு ஆதரவு தெரிவிப்பது போலச் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.

வானத்திலே மங்கிய வடிவத்தில் இருந்த மதி, தனது சேவை முடிந்து விட்டது என்பது போல ஓய்வுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

வானத்து மதி தன் சேவையை முடித்து ஓய்வுக்குப் புறப்பட்ட அந்த வேளையில், கோவில் வெளி வீதியில் அமைந்திருந்த வீடொன்றின் தலைவாசல் கதவைத் திறந்து கொண்டு, வெள்ளிக் கொலுசுகள் ஓசை எழுப்பக் கையிலே கோலப் பொடியுடன் வெளியே வந்தாள் வான்மதி.

வெளியே தவழ்ந்து கொண்டிருந்த மெல்லிய குளிர் காற்று மெல்லத் தேகம் தீண்டிச் செல்லவே அவளது மேனியும் லேசாகச் சிலிர்த்து அடங்கியது.

சில நொடிகள் அதிகாலை நேரத்துத் தூய காற்றை நின்று ஆழ்ந்து சுவாசித்தவள், பின்னர் வாசலைக் கூட்டித் தண்ணீர் தெளித்து அழகான பூக்கோலத்தைப் போட்டு விட்டு, மெல்ல எழுந்து நின்று தான் போட்ட கோலத்தைத் தானே இரசித்துப் பார்த்தாள்.

அந்த நேரத்தில் வெளியே வந்த பக்கத்து வீட்டுச் சீதாமாமி, தனது எதிர் வீட்டின் வாசலில் மின்குமிழ் ஒளிர்வதைப் பார்த்து விட்டு, தன் வீட்டு மதிலோரம் இருந்த கல்லில் ஏறி நின்று வான்மதி போட்ட கோலத்தை இரசித்தார்.

"மதிம்மா.. உன்னால மட்டும் எப்புடி இந்த மாதிரி வெள்ளாப்புல எழும்பிக் கோலம் எல்லாம் போட முடியுது.. அதுவும் ஒவ்வொரு நாளும்.."
என்று கேட்ட சீதாமாமியை நிமிர்ந்து பார்த்த வான்மதி மெல்லிய புன்னகையோடு, பழகி விட்டது என்று சைகையில் காட்டினாள்.

"அதுவும் சரி தான்.. ஆனாப் பாரன் பழகுறது தான் எனக்குக் கொஞ்சம் இல்லை நிரம்பவே கஷ்டமாக் கிடக்குது.. என்ன செய்யிறது என்ரை தலைவிதி ஒவ்வொரு நாளும் வெள்ளன எழும்பி.. வீட்டுக்கே வடிச்சுக் கொட்டுற வேலையைப் பாக்க வேண்டிக் கிடக்கு.. ஒரு நாளாச்சும் எனக்கு லீவு குடுக்க வேணும் எண்டு இந்த வீட்டில இருக்கிற ஆருக்காவது தோணுதா.. கேட்டால் நான் தான் இங்கினை வீட்டரசியாம்.. பேசாமல் வீட்டுரசி எண்டு சொல்லலாம்.. காலமை இரவு எண்டு நேரகாலம் இல்லாமல் இந்த வீட்டையும் சட்டிபானையளையும் உரசி உரசிக் கழுவுறது தானே என்ரை வேலை.."
என்று வழமை போலத் தன் மனக்கிடக்கையை வான்மதியிடம் கொட்டினார் சீதாமாமி.

இந்த ஆதங்கத்திற்கு வான்மதியிடம் இருந்து எந்த மறுமொழியும் வரப் போவதில்லை என்பது சீதாமாமிக்கு நன்கு தெரியும், ஆனாலும் அவளிடம் எதையாவது சொல்லும் போது ஆறுதல்மொழிக்குப் பதிலாக அவள் கண்களாலேயே காட்டும் அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு அவருக்குச் சொல்ல முடியாத ஆறுதலைக் கொடுக்கும்.

அவ்வாறே அன்றும்
"எல்லோருடனும் ஒரு நாள் அமர்ந்து மனம் விட்டுப் பேசுங்கள் எல்லாமே சரி ஆகி விடும்.."
என்பது போலச் சைகையில் காட்டி, ஆறுதல் போலக் கண்களை மூடித் திறந்து கொண்டாள் வான்மதி.

அவளது செய்கையையும் கண்ணசைவையும் பார்த்த சீதாமாமி பதிலுக்கு முறுவலித்து விட்டுத் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டார்.

வெளி வேலைகளை முடித்து விட்டு வீட்டினுள் நுழைந்த வான்மதியை
"பெரியக்கா.. எனக்குத் தேத்தண்ணி வேண்டாம்.. தேவையெண்டால் நானே ஆத்திக் குடிக்கிறன்.."
என்ற தம்பியின் குரல் அவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவு படுத்தியது.

அவசரமாக ஓடிச் சென்று படுக்கையறையினுள் எட்டிப் பார்த்தாள், அங்கே போர்வைகள் எல்லாம் அழகாக மடிக்கப் பட்டு ஓரமாக அடுக்கப் பட்டிருந்தன.

"அங்க என்னக்கா பாக்கிறியள்.. இண்டைக்கு நானாவே எழும்பீட்டன்.. இனிமயும் நானே வெள்ளன எழும்பி உங்களுக்கு ஏதாவது ஒத்தாசை செய்ய வேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறன் தெரியுமோ.."
என்று முகத்தைத் துடைத்த படி வந்தாள் தங்கை தேன்மதி.

அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுச் சமையலறையினுள் நுழைந்த தமக்கையைப் பின் தொடர்ந்தபடி
"ஏன் அக்கா சிரிக்கிறியள்.. நான் மெய்யாத் தான் சொல்லுறன்.."
என்று சிணுங்கியபடி சொன்னாள் தேன்மதி.

"பரமசிவன் படியளக்க வார இந்தக் காலங்காத்தால ஏன் இப்புடி பொய்யாச் சொல்லுறாய் சின்னக்கா.."
என்றபடி சமையலறையினுள் புகுந்தான் தம்பி அபிராம்.

தம்பியைப் பார்த்து முறைத்தபடி
"ஏன்டா நீ கூடத் தான்.. தேத்தண்ணி வேண்டாம் எனக்கு தேவைப்படேக்க நானே ஆத்திக் குடிக்கிறன் எண்டு ஒரு பெரிய பொய்யா அவுத்து விட்டியே.. அதைப் பத்தி நான் ஏதாவது சொன்னனானோ சொல்லு.."
என்று பதிலடி கொடுத்தாள் தேன்மதி.

சமையல் மேடையில் இருந்த தேயிலைப் பேணியையும் சீனிப் பேணியையும் எடுத்தபடி
"நான் ஒண்டும் பொய் சொல்லேல்லை.. இந்தா பாரு தேத்தண்ணி ஊத்தப் போறன்.. அதுகும் உனக்கும் சேத்துத் தான்.."
என்ற தம்பியிடம் நானே தேநீர் தயாரிக்கிறேன் என்று வான்மதி சைகை காட்டியதை அவன் கண்டு கொள்ளாமல், மூவருக்கும் சேர்த்துத் தானே தேநீர் தாயாரித்தான்.

தம்பியின் தலையை ஆதுரத்துடன் மெல்லக் கோதியவள் தேன்மதியைத் திரும்பிப் பார்த்தாள்.

தமக்கையின் பார்வையைப் புரிந்து கொண்ட சின்னவளோ
"எனக்கு ஆறு மணி அப்புடி வீட்டை இருந்து வெளுக்கிட்டால் சரியா இருக்கும் அக்கா.. மத்தியானம் கடந்து தான் திரும்பி வருவன் அதனால மதியச் சாப்பாடு வேண்டாம் அக்கா.."
என்று சொன்னாள்.

'உனக்கு மதிய உணவும் கட்டிக் கொடுக்கிறேன் நீ வெளியே எங்கும் சாப்பிட வேண்டாம்'
என்று அவசரமாகச் சைகையில் காட்டிய மூத்தவள் சமையல் வேலையில் இறங்கினாள்.

காலை உணவுக்கு மரவள்ளிக்கிழங்குத் தோசையும், அதோடு தொட்டுக் கொள்ளச் சிவப்பு மிளகாய்ச் சம்பலும் தயாரிக்க தொடங்க, தோசையை வான்மதி சுட்டு எடுக்க, சம்பலை அபிராம் இடித்து எடுத்து வைத்தான்.

மதியத்திற்குச் சின்னவளுக்குக் கொடுத்து விடுவதற்காக, இருந்த காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டு மரக்கறிச்சாதம் தயாரித்துக் கொடுத்தாள் வான்மதி.

தேன்மதி யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில்லில் அமைந்துள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிகிறாள்.

காலையில் ஆறு மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டால் தான் ஆறு முப்பது மணி அளவில் வல்வெட்டித்துறைச் சந்தியில் வருகின்ற அரச பேருந்தில் அவளால் ஏறிக் கொள்ள முடியும்.

பேருந்துக்குச் செல்வதற்குத் தயாராகி வந்த சின்னக்காவைத் தனது துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வெளியே புறப்பட்டான் அபிராம்.

அவள் பேருந்து ஏறும் இடம் நடந்தே சென்று விடக்கூடிய இடம் தான் ஆனால் அவளது வலது காலில் அடிக்கடி ஏற்படும் வலியினால் அவளால் கொஞ்சத் தூரத்துக்கு நடப்பதே கடினம். அதனால் பக்கத்து இடத்துக்குச் செல்வது என்றாலுமே தேன்மதிக்கு எப்போதுமே அபிராம் தான் சாரதி.

தேன்மதியைப் பேருந்துத் தரிப்பிடத்தில் இறக்கி விட்டு அவள் பேருந்தில் ஏறும் வரை நின்று பார்த்து விட்டே சின்னவன் வீட்டுக்கு வருவான்.
அதன் பிறகே அவன் சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் செய்வதும் பள்ளிக்குச் செல்வதற்குத் தயாராவதும் நடக்கும்.

அபிராம் வல்வெட்டித்துறையை அடுத்து உள்ள பிரதேசமான உடுப்பிட்டியில் அமைந்துள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தரத்தில் படிக்கிறான். வீட்டில் இருந்து ஏழு முப்பது மணியளவில் அவன் துவிச்சக்கர வண்டியில் புறப்பட்டால் தான் அவனால் பள்ளி மணி அடிப்பதற்குள் பாடசாலையினுள் நுழைய முடியும்.

தம்பியும் தங்கையும் வெளியே புறப்பட்டுச் சென்றதும் தான் சுட்ட மரவள்ளித்தோசையில் எட்டுத் தோசையை எடுத்து ஒரு தட்டத்தில் வைத்து மூடியபடி, வீட்டு வெளிக் கதவைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கி நடந்தாள் வான்மதி.

சிவன் கோவிலும் அம்மன் கோவிலும் கிழக்குப் பக்கம் பார்த்தவாறு அமைந்து இருக்க, இரு கோவில்களுக்கும் தென் கிழக்குப் பக்கத்தில் பிள்ளையார் கோவிலும் முருகன் கோவிலும் அமைக்கப்பட்டிருந்தது.
தாய் தந்தை இருவரும் தங்கள் மைந்தர்கள் இருவரையும் தம்மோடு அருகாகவே வைத்திருப்பது போல இருக்கும் அந்தக் கோவில்களின் அமைப்பு.

பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றை நோக்கியே வான்மதி இப்போது வந்து கொண்டிருந்தாள்.

அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணியும் அவரது வயதான கணவரும் மட்டுமே வசித்து வருகிறார்கள். வான்மதியும் அவளது சகோதரர்களும் தங்குவதற்கு ஒரு வீடு தேடி அலைந்த போது அவர்களுக்கு வீடு கொடுத்து உதவியது இந்த வயதான தம்பதியர்கள் தான்.

வீட்டு வாசலைத் திறந்து உள்ளே வந்த வான்மதியைப் பார்த்ததும் கலப்படம் அற்ற சிரிப்புடன்
"வாம்மா வாம்மா.."
என்று அழைத்தபடி வந்தார் செல்லம்மா.

வாசலில் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த செல்லம்மாவின் கணவர் எதிர்வீரசிங்கம், வான்மதியைப் பார்த்ததும் விழுந்தது போக மீதம் இருந்த பற்கள் தெரியச் சிரித்தபடி அவளை வரவேற்றார்.

"உள்ள வாம்மா.. புழுக்கொடியல் மா இருக்குது சாப்பிடுறியோ.."
என்றபடி உள்ளே செல்லப் போன செல்லம்மாவிடம் வேண்டாம் என்பது போல சைகை காட்டியவள் தான் கொண்டு வந்திருந்த மரவள்ளிக்கிழங்குத் தோசையை அவரிடம் கொடுத்தாள்.

செல்லம்மா அதை வாங்குவதற்கு முன்பாகவே அவரின் கணவன் தோசையை வாங்கியபடி
"இவளுக்கு வேற வேலையே இல்லை பிள்ளை.. காலங்காத்தாலேயே சத்துமா சித்துமா எண்டு எதையாவது குடுத்துத் தொண்டைக் குழியை மாவாலேயே அடைச்சுப் போடுவாள்.. நான் இண்டைக்கு நீ என்ன கொண்டு வருவாய் எண்டு தான் வழி மீது விழி வைச்சுப் பாத்துக் கொண்டிருந்தனான் பிள்ளை.."
என்று சொல்லி விட்டுச் சிரித்தார்.

"ஏன் சொல்ல மாட்டியள் அடுப்படியில வேகுறது நான் தானே.. செஞ்சு குடுக்கிறதும் பிடிக்கேயில்லை எண்டால் எனக்கும் சேத்து நீங்களே எதையாவது செஞ்சு குடுக்க வேண்டியது தானே.."
என்றபடி கணவனின் காதினை வலிக்காமல் முறுக்கினார் செல்லம்மா.

இருவரதும் அந்தச் செல்லச் சண்டையை இரசித்துப் பார்த்திருந்த வான்மதிக்கு லேசாகக் கண்கள் கலங்கியது.

அவர்கள் அறியாமல் விழி நீரைச் சுண்டி விட்டவள்
'வீட்டுக்குப் போகிறேன் நிறைய வேலைகள் இருக்கிறது'
என்பது போல சைகையால் காட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்.

வான்மதி வெளியே வந்ததும் அங்கே உள்ளே
"ஏன் செல்லா.. இந்த ஊரில தானே ஆண்டுக் கணக்கா இருக்கிறம் எத்தனை பேருக்கு இருக்கிறதுக்கு வீடு குடுத்து இருக்கிறம்.. வயசான இந்தக் காலத்தில இப்புடி ஆராவது வந்து எங்களை அக்கறையாப் பாத்து இருக்குதுகளோ.. எங்கடை மதி என்ன ஒரு அருமையான பிள்ளை.. ஆனாப் பாரன் அந்தக் கடவுளும் நல்லவையைத் தான் நிறைய சோதிக்கிறான் அந்தப் பிள்ளையிந்தை குடும்பத்தைப் பறிச்சுப் போட்டானே.. என்னத்தைச் சொல்ல.."
என்று சொல்லி ஆதங்கப் பட்டார் எதிர்வீர சிங்கம்.

கணவன் சொன்னதைக் கேட்டதும்
"கடவுள் குடும்பத்தை மட்டுமோ பறிச்சவன்.. அந்தப் பிள்ளையின்ரை பேச்சையும் சேத்தெல்லே பறிச்சுப் போட்டான்.."
என்று தன் பங்குக்கு ஆதங்கப் பட்டார் செல்லம்மா.

வீட்டுக்கு வந்த வான்மதியை வாசலில் நின்றிருந்த பக்கத்து வீட்டுச் சீதாமாமி எதிர்கொண்டார்.

"மதிம்மா.. உன்னைத் தேடித்தான் வந்தனான்.. என்ரை ஒண்டை விட்ட அக்காந்தை குடும்பம் கொழும்புல இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கினம்.. இவ்வளவு காலமும் வெளிநாட்டுல இருந்தவை.. நாளைக்கு தான் இங்கால எங்கடை வீட்டை வரப் போகினம்.. ஒரு அஞ்சு நாளைக்கு எங்களோட தங்கி இருப்பினம்.. எனக்கு அந்த அஞ்சு நாளைக்கும் ஏதாவது பலகாரங்கள் செய்து குடுக்க வேணும் மதிம்மா.. ஒரு நேரத்து சாப்பாட்டுக்கு குடுக்க வேண்டிய காசை விடவுமே மேலதிகமாப் போட்டுக் குடுக்கிறன்.. எனக்கு கொஞ்சம் உதவி செய் மதிம்மா.."
என்று தான் அவளைத் தேடி வந்த விஷயத்தைச் சொன்னார் சீதாமாமி.

வாய்பேச முடியாத வான்மதியால், வெளியே சென்று எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை என்பதால் ஒன்றும் அவள் சோர்ந்து போய் விடவில்லை.

வீட்டிலேயே தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து பணம் சாம்பாதிக்கத் தொடங்கியிருந்தாள். அதில் ஒன்று தான் சாப்பாடு தயாரித்து விற்பனை செய்வது, அவள் தயாரிக்கும் உணவு சுத்தமாகவும் ருசியாகவும் இருப்பதோடு பாரம்பரியம் மிக்கதாகவும் இருந்தது. அதனால் எப்போதுமே அவளுக்கு உணவு தயாரிக்கும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.

செய்து கொடுக்கிறேன் எனத் தலையை ஆட்டிய வான்மதி எத்தனை பேர் வரப் போகிறார்கள் என்று சைகையில் கேட்டாள், அதற்கு ஐந்து பேர் என்று சொன்ன சீதாமாமி பெருத்த நிம்மதியோடு தன் வீட்டுக்குச் சென்று விட்டார்.

வீட்டில் உள்ளவர்களோடு புதிதாக வரும் ஐந்து பேருக்கும் சமைப்பது என்றால், வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் காய்கறிகள் போதாது என நினைத்த வான்மதியோ காய்கறிக் கூடையை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டாள்.

இரண்டு தெரு தள்ளி இருக்கின்ற கனகலிங்கம் ஐயா பெரிய பெரிய காய்கறித் தோட்டம் வைத்து இருக்கிறார், இப்படி ஒரு அளவிற்கு பெரிய சமையல் வந்தால் அவள் அவரிடம் தான் மரக்கறி வாங்குவது, அவர் இயற்கைப் பசளை போட்டுத் தான் பயிர்களை வளர்க்கிறார் என்பதே அதற்குக் காரணம்.

கூடை நிறைய காய்கறிகளை வாங்கி வந்து வீட்டில் வைத்தவள், வெளியே மாமரத்துக்குக் கீழே இருந்து வைரமுத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.

நாளைய தினத்தில் இருந்து அவளது வாழ்க்கை வேறு மாதிரிப் பயணிக்கப் போகிறது என்பதை அறியாதவளாகப் புத்தகத்திற்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள் அவள்.

விதியோ என்றோ ஒரு நாள் காலத்தின் கட்டாயத்தில் பிரிந்தவர்களை மீண்டும் சந்திக்க வைப்பதற்காகத் தனது விளையாட்டைத் துவக்கியிருந்தது.
 
Last edited:

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 1 (2)

இலங்கைத் திருநாட்டில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில், மிக முக்கியமான முருகன் கோவிலான யாழ் நகரில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலில், அதிகாலை நேரத்திற்கான பூஜை மணி ஆழ் துயிலில் இருக்கும் ஊரையே எழுப்புவது போல ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

கோவிலோடு ஒட்டி அமைக்கப் பட்டு இருந்த பூந்தோட்டத்தில் புதிதாகப் பூத்த பூக்கள் தங்களது இனிய வாசனையைத் தாராளமாகக் காற்றுடன் சங்கமிக்க விட்டுக் கொண்டிருந்தன.

பூக்களின் இனிய சுகந்தத்தைப் பெருமிதத்துடன் ஏந்திக் கொண்ட புத்தம் புதிய காற்று மெல்லத் தவழ்ந்து சென்று கொண்டிருந்தது.

நல்லூரானின் ஆலயத்தின் பின் வீதியில் கொஞ்சத் தூரம் தள்ளி வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன, ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகள் எல்லாம் பழமை வாய்ந்த வீடுகளாகவே காணப்பட்டன.

அந்த வீடுகளில் பச்சை வண்ணம் பூசப் பட்டு அம்பிகை இல்லம் என்று வெள்ளை நிறக் கல்லில் பொறிக்கப் பட்டு இருந்த வீடு மட்டும், தனித்துவமாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் கம்பீரமாக நின்றிருந்தது.

அந்த வீட்டினுள் இருந்து கந்தசஷ்டிக் கவசம் மெல்ல மெல்லக் கசிந்து வந்து ஏற்கனவே தெய்வீகமயமாக இருந்த தெருவை மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்குக் குளித்து விட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்தார் அமுதவாணி.

கோவிலுக்குக் கொண்டு செல்வதற்காக பூமரங்களில் இருந்த பூக்களைக் கொய்து கொண்டிருந்தார் அமுதவாணியின் கணவர் கவிவாணன்.

"அத்தான்.. பெரியவனையும் சின்னவனையும் எழுப்பி விட்டனியளோ.."
என்று கேட்டபடி பக்கத்துக் காணியில் இருந்து பறித்து வந்த பூசணிப் பூவைக் கோலத்தின் நடுவில் வைத்தார் அமுதவாணி.

மனைவியைத் திரும்பிப் பார்த்த கவிவாணன்
"அம்மா தாயே அமுதா.. நீ போய்த் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பினா மட்டும் தான் எங்கடை குலக் கொழுந்துகள் எழும்பிக் கொள்ளுவினம்.."
என்று சிரித்தபடி சொன்னார்.

அவ்விதம் சொன்ன கணவனை முறைத்தபடி வீட்டினுள் சென்ற அமுதவாணி
"தமிழா.. வேந்தா.."
என்று குரல் கொடுத்தார்.

"பாவம் குழந்தையள் கொஞ்ச நேரம் படுக்கட்டுமன்.. என்னத்துக்கு அவங்களை எழுப்புறாய் வாணி.."
என்றபடி வந்தார் அமுதவாணியின் அன்னை அம்பிகை.

"என்னம்மா நீங்கள் இப்பவும் அவங்களைக் குழந்தையள் எண்டு கொஞ்சுறியளே.. நேற்று இரவே சொன்னான் தானே நாளைக்கு காலமை வெள்ளன எழும்ப வேணும் எண்டு.. அது தானம்மா எழுப்ப வந்தனான்.. வேளைக்கு வெளுக்கிட வேண்டாமே.."
என்றபடி தன் மகன்கள் தூங்கிக் கொண்டிருந்த அறைக் கதவைப் பலமாகத் தட்டினார் வாணி.

"அங்க ஆரைத் தேடுறியள் அம்மா.. நானும் அண்ணாவும் எப்பவோ எழும்பீட்டம் தெரியுமோ.. கொஞ்சத் தூரம் நடந்திட்டு வருவம் எண்டு வெளியால போயிட்டு வந்தம்.."
என்றபடி வீட்டினுள் நுழைந்தான் அமுதவாணியின் இரண்டாவது மகன் இசைவேந்தன்.

சின்ன மகனைத் திரும்பிப் பார்த்தவரோ
"என்னடா சொல்லுறாய் நான் இங்க வாசலில தானே இருந்தனான்.. நீங்கள் வெளியால போனதை நான் காணவே இல்லையே.."
என்றார் அதிசயமாக.

"ஏன் அம்மா இந்த வீட்டுக்கு ஒரு வாசல் தானோ கிடக்கு.. அதோட சுவர் ஏறிக் குதிச்சு கன காலமாகியிட்டுது எண்டு அண்ணா தான் கொஞ்சம் கவலைப்பட்டவன்.."
என்றபடி கண்ணடித்துச் சிரித்தான் இசைவேந்தன்.

"அடப்பாவி மக்களே சுவர் ஏறிக் குதிச்சோடா போனீங்கள்.."
என்ற சின்னவனின் காதைப் பிடித்து வலிக்காமல் திருகினார் அம்பிகை.

"ஐயோ வலிக்குது அம்மம்மா.."
என்று சிரித்தபடி அவரின் கன்னங்களைக் கிள்ளினான் சின்னவன்.

"கொண்ணா எங்கேடா வேந்தா.."
என்றபடி வந்தார் கவிவாணன்.

"அப்பப்பா வார பாதை முழுக்க எத்தினை ரகத்தில காவற்காரர்கள் தெரியுமோ.. எல்லாரிட்டையும் இருந்து தப்பி வர வேண்டாமோ சொல்லுங்கோ.."
என்றபடி தொப்பென்று கதிரையில் இருந்தான் இசைவேந்தன்.

"காவற்காரர்களா அது யாருப்பா.."
என்று கேட்ட அம்பிகைக்கு
"அவன் தெருவில நிற்கிற நாயளைச் சொல்லுறான் அம்மம்மா.."
என்று பதில் கொடுத்தபடி உள்ளே வந்தான் கவிவாணன் தம்பதியினரின் மூத்த மகன் தமிழ்பரிதி.

"என்னப்பா நாயளிட்டை ஏதும் கடிகிடி வாங்கித் தொலைச்சிட்டியோ.."
என்றபடி சிறு பதட்டத்துடன் தன்னை ஆராய்ந்த தாயை
"அப்புடி எல்லாம் இல்லையம்மா.."
என்று சமாதானப் படுத்தினான் மூத்தவன்.

"சரி சரி இப்புடியே கதைச்சுக் கொண்டு நிக்காமல் எல்லாரும் ரெடியாகுங்கோ.. சரியா ஏழு மணிக்குக் கயஸை வரச் சொல்லி இருக்கு.. கொழும்பில இருக்கிற எங்கடை காரை இங்க கொண்டு வார வரைக்கும் வாடகைக்கு தான் வாகனத்தைப் பிடிக்கோணும்.."
என்றபடி கவிவாணன் உள்ளே போய் விட்டார்.

"டேய் அண்ணா.. புது ஊரு புதுச் சொந்தங்கள் எல்லாம் எப்புடி இருக்கும் எண்டு பாக்க ஒரே ஆர்வமா இருக்குது.. உனக்கு அப்புடி ஒண்டுமே இல்லியோ.."
என்று தன் தமையனிடம் விளக்கம் கேட்டான் சின்னவன்.

"ஏன்டா நமக்கு இந்தப் புதுப் புது ஊரு.. புதிய புதிய சொந்தங்களை எல்லாம் பாக்கிறது இது தான் முதல் தரமோ.. நான் காண விரும்புரவங்களைத் தான் எங்க போனாலும் என்ரை கண்கள் தேடுது.. ஆனா காணத் தான் முடியுதில்லை.. அந்த ஏமாற்றம் எல்லாம் எனக்குப் பழகீட்டுது.."
என்று சலித்தபடி உள்ளே போய் விட்டான் தமிழ்பரிதி.

தமையனின் உள்ளம் புரிந்தவனோ வேறு ஒன்றும் பேசாமல் அமைதியானான்.

சரியாக ஏழு மணியளவில் நல்லூர்க் கோவிலின் பின் வீதியில் இருந்து, கவிவாணன் குடும்பத்தினரை ஏற்றிக் கொண்ட அந்தப் பெரிய வாகனம் வல்வெட்டித்துறையை நோக்கிப் புறப்பட்டது.

சரியாக ஒரு மணி நேரத்துப் பயணத்திற்குப் பின்னர் வல்வெட்டித்துறைச் சிவன் கோவில் வெளி வீதியில் இருந்த அந்த மாடி வீட்டுக்கு முன்னால் அவர்களது வாகனம் நின்றது.

வாசலிலேயே அவர்களை வரவேற்றபடி அந்த வீட்டினர் நின்றிருந்தனர்.

"எப்புடிச் சுகம் சீதா.."
என்றபடி தன் ஒன்று விட்ட தங்கையை அணைத்துக் கொண்டார் அமுதவாணி.

"வாசலில நிண்டே பேசாமல் எல்லாரும் உள்ள வாங்கோ.." என்றபடி வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் சீதாவின் கணவர் ரவிதாசன்.

எல்லோரும் உள்ளே சென்றதும் வாகனத்திற்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டு உள்ளே செல்லத் திரும்பிய தமிழ்பரிதியின் காதுகளில், கொலுசுச் சத்தம் கேட்கவே எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தான்.

கையில் ஒரு தண்ணீர் வாளியுடன் குட்டி நாயொன்றைக் குளிப்பாட்டுவதற்காகத் துரத்தியபடி ஒரு பெண் ஓடிக் கொண்டு இருந்தாள்.

அந்தக் காட்சி அவனுக்கு வேடிக்கையாக இருக்கவே அப்படியே நின்று அவள் என்ன செய்யப் போகிறாள் என்பது போலப் பார்த்திருந்தான்.

தன் குட்டி நாய் வீரனைக் குளிப்பாட்டுவதற்கு வான்மதி கிட்டத் தட்ட ஊரைப் பாதிச் சுற்றுச் சுற்றியிருந்தாள், வீரனுக்குக் குளிப்பது என்றால் சரியான கள்ளத்தனம், இன்றும் அப்படித் தான் வான்மதியை ஓட வைத்துக் கொண்டிருந்தது.

விட்டால் இன்று முழுவதும் ஓட வேண்டியது தான் என நினைத்தவளோ சட்டென்று கீழே அமர்ந்து கால்களைப் பிடித்துக் கொண்டாள்.

ஓடிக் கொண்டிருந்த வீரனும் வான்மதி கீழே அமர்ந்து கால்களைப் பிடிப்பதைப் பார்த்ததும் அவளருகில் ஓடி வந்து அருகில் இருந்த தண்ணீர் வாளியைத் தொட்டுக் காட்டியது.

ரொம்பத் தூரம் ஓடி வந்ததால் தனக்குக் கால்கள் வலிக்கிறது என அவள் கால்களைப் பிடித்துக் காட்டிச் சைகையில் சொன்னதால் தான், வீரன் மனமிரங்கி அவளருகில் வந்து நின்று வாளியைத் தொட்டுக் காட்டிக் குளிக்கிறேன் என்பது போல நின்றது.

அதிலும் அது முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு தன்னைப் பார்ப்பதைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பே வந்து விட்டது. ரொம்ப நேரம் எல்லாம் குளிப்பாட்ட மாட்டேன் என்பது போலச் சைகையில் அவள் காட்டியதும், அவ்வளவு தான் வீரன் துள்ளிக் குதித்துக் கொண்டு அவளோடு வீடு நோக்கிச் செல்லத் தொடங்கியது.

நாய்க்குட்டியும் அவளும் தங்கள் வீட்டினுள் நுழையும் வரை அவர்களை வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்பரிதி, அதன் பிறகு தான் உள்ளே சென்றான். வான்மதியின் முகத்தை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

'யாரு அந்தப் பொண்ணு.. குட்டி நாயோட ஏதவோ குழந்தையளிட்டை நடந்துக்கிற போல சைகையில எல்லாம் ஏதோ பேசுறாளே..'
என்று நினைத்தபடி உள்ளே சென்றவன் அங்கே நடந்த தடல்புடல் வரவேற்பில் அதன் பிறகு அவளையும் அவளின் குட்டி நாயையும் மறந்தே போய் விட்டான்.

"பயணம் எல்லாம் எப்புடி இருந்த அமுதம்.. ஒருவழியா நாட்டுக்கு வந்து சேந்துட்டியள்.. அப்ப எப்ப கிளிநொச்சியில உங்கடை சொந்த இடத்தைப் போய்ப் பாக்கப் போறியள்.."
என்று கேட்டார் சீதாவின் அன்னை
அகிலா.

"போகத்தான் வேணும் சித்தி.. இப்பத்தானே யாழ்ப்பாணம் வந்து இருக்கிறம்.. ஒரு பத்து நாள் போகட்டும் அதுக்குப் பிறகு போகலாம் எண்டு இருக்கிறன்.. என்னை விடவும் உங்கள்ரை பேரப் பிள்ளையள் தான் அங்க போக வேணும் எண்டு முனைப்பா இருக்கிறாங்கள்.. ஆனாப் பாருங்களேன் எனக்கு அங்க போனால் மனசுக்க கனமாகிப் போடும்.. அதனால தான் போற நாட்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறன் சித்தி.."
என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் அமுதவாணி.

"அங்க வீடுகள் எல்லாம் எந்த நிலையில இருக்குதோ என்டுற எண்ணம் தான் எனக்கு அல்லும் பகலும்.."
என்ற அம்பிகையைப் பார்த்து
"சுத்திவரை இருந்தவையள் எல்லாம் இப்ப எங்க இருக்கினம் என்டு உனக்குத் தெரியுமோ அக்காள்.."
என்று கேட்டார் அகிலா.

"அந்தக் கொடுமையை எல்லாம் ஏன் கேக்கிறியள் சித்தி.. ஒருத்தரைப் பத்திக் கூட ஒரு தகவலும் இல்லை.. அதைக் கூட என்னால் ஒரு அளவுக்குத் தாங்கிக் கொள்ள முடியுது.. ஆனா அங்க எங்கள்ரை வீட்டுக்குப் பக்கத்தில நந்தனண்ணாந்தை குடும்பம் இருந்து.. நல்ல அருமையான குடும்பம் எங்களில அவ்வளவு பாசமா இருந்தவை.. ஆரம்பத்துல ஃபோன் வழிய கதைச்சது தான்.. பிறகு என்னவோ தெரியேல்லை தொடர்பும் விட்டுப் போச்சுது.. அவையள் எல்லாம் இப்ப எங்க எப்புடி இருக்கினமோ என்டுறது தான் என்ரை தீராத கவலை.. வாய்ப்புக் கிடைச்சதுமே நாங்கள் தாய்நாட்டுக்கு வந்ததே அவையளை எல்லாம் பாக்கோணும் என்டுறதுக்காக தான்.."
என்று கண் கலங்கியபடி சொன்னார் அமுதவாணி.

தாயைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட படி
"கவலைப்படாதேங்கோ அம்மா.. எப்புடியும் அவையளை எல்லாம் பாத்து விடுவம் என்டுற நம்பிக்கை எனக்கு இருக்குது.."
எனத் தாயோடு சேர்த்துத் தனக்கும் தைரியம் சொல்லிக் கொண்டான் தமிழ்பரிதி.

என்றோ ஒருநாள் காலத்தின் கட்டாயத்தில் தான் பிரித்த அன்பான உறவுகளை மீண்டும் இணைத்து வைப்பதற்காக, விதி மனமிரங்கித் தன் விளையாட்டைத் துவக்கியிருந்தது, அதை அறியாமல் இவர்கள் விதியை நொந்து கொண்டு இருந்தார்கள்.
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வாவ் 😍ரொம்ப அருமையா இருக்குது 👌
அமுதவாணி சொன்ன குடும்பம் வானமதியோட குடும்பம் தானோ?
அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK5

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
வாவ் 😍ரொம்ப அருமையா இருக்குது 👌
அமுதவாணி சொன்ன குடும்பம் வானமதியோட குடும்பம் தானோ?
அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
ரொம்ப ரொம்ப நன்றி