• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 2

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 2 (1)

சிவன் கோவிலின் கருங்கல்லில் அமைக்கப்பட்ட கோபுரக் கலசத்தில், மாடப்புறாக்கள் இந்த இடம் நமக்கு மட்டும் தான் சொந்தமானது என்பது போல தலையை அங்குமிங்கும் ஆட்டியபடி நடை பயின்று கொண்டிருக்க, போதாக் குறைக்குக் காகங்களும் கிளிகளும் கூட எங்களுக்கும் இங்கே பங்குண்டு என்பது போலக் கோவில் கோபுரத்தைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன.

எந்த விதமான ஒப்பனைகளோ வர்ணப் பூச்சுக்களோ இல்லாமல் தனிக் கருங்கல்லில் நிறுவப் பட்டிருந்த சிவனாலயத்தின் கோபுரம், பறவைக் கூட்டத்தின் வருகையினால் அழகுக்கு அழகு சேர்த்தது போல அத்தனை அழகாக இருந்தது.

அந்தக் காட்சியை, வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி இமைக்க மறந்து பார்த்திருந்தான் தமிழ்பரிதி. அவன் அவ்விதம் நின்று கோவில் கோபுரத்தை இரசித்த வேளையில், பக்கத்து வீட்டு மாமரத்தில் ஏதோ சலசலப்புக் கேட்கவே லேசாகத் திடுக்குற்றபடி மாமரத்தைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

அதற்குள் அவனைத் தேடி
"அண்ணா.. இங்கினை தனியா என்ன செய்து கொண்டு இருக்கிறாய்.."
என்றபடி வந்தான் இசைவேந்தன்.

"இந்த இடத்துல நின்டு பாத்தால் கோவில் கோபுரம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் என்டு சித்தி சொன்னவா வேந்தா.. அது தான் வந்தனான் நிஜமாவே ரொம்ப ரொம்ப அழகா இருக்குது.."
என்று தமிழ்பரிதி தன் தம்பிக்குச் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் பக்கத்து வீட்டு மாமரத்தில் சலசலப்புக் கேட்டது.

"என்ன அண்ணா இது சத்தம்.."
என்றவாறு தானும் பக்கத்து வீட்டில் நின்றிருந்த மாமரத்தைப் பார்த்தான் இசைவேந்தன்.

"நீ இங்க வாறதுக்கு முதலும் சத்தம் கேட்டது.."
என்றபடி கிட்டத்தட்ட மொட்டை மாடிக்குப் பக்கமாக நின்றிருந்த அந்த மாமரத்தின் அருகில் சென்று பார்த்தான் பரிதி.

சீதாவின் வீட்டுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும், வான்மதியின் வீட்டில் நிற்கும் பெரிய வைரக்கண்டி மாமரம், சீதா வீட்டு மொட்டைமாடிக்கு நேர் எதிராக ரொம்பப் பக்கத்தில் அமைந்திருந்தது என்பதால், மாமரத்தில் யார் ஏறினாலும் இறங்கினாலும் அப்படியே தெளிவாக மொட்டைமாடியில் நிற்பவர்களுக்குத் தெரியும்.

வான்மதி வீட்டு மாமரத்தின் உச்சிக் கிளையில் இரண்டு குருவிக் கூடுகள் இருந்தன, என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு கூடுகளுமே கீழே நிலத்தில் விழுந்து கிடந்தன.

அதைப் பார்த்ததும் பதறிப் போன வான்மதியோ தேன்மதியிடம்
'நான் மரத்தில் ஏறுகிறேன்.. நீ கீழே மேசையில் நின்று கூடுகளை ஒவ்வொன்றாக மேலே தூக்கிக் கொடு..'
என்று சைகையில் காட்டி விட்டு வேகமாக மாமரத்தில் ஏறத் தொடங்கி விட்டாள், அந்த நேரத்தில் தான் மொட்டைமாடியில் நின்றிருந்த தமிழ்பரிதிக்கு மாமரத்தில் சலசலப்புச் சத்தம் கேட்டது.

அண்ணன் தம்பி இருவரும் மாமரத்தின் பக்கமாக நின்று பார்த்த போது, வான்மதி ஒரு குருவிக் கூட்டைக் கிளையில் மூன்று கொப்புகள் சேரும் இடத்தில் பக்குவமாக வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் லாவகமாக மரத்தில் நின்று கூட்டை வைத்த விதம் சுவாரஷ்யமாக இருக்கவே, அதையே வேடிக்கை பார்த்திருந்த தமிழ்பரிதிக்கு வான்மதியின் முகம் மட்டும் சரியாகத் தெரியவில்லை.

"யாரு அந்தப் பொண்ணு.. ஒரு வேளை நேற்றைக்கு நாய்க்குட்டியோடு பேசிக் கொண்டிருந்த பொண்ணா இருப்பாளோ.. அவளாத் தான் இருக்கோணும் ஏனென்டால் அவள் உந்த வீட்டுக்க தானே போனவள்.."
என்று தனக்குத் தானே சொல்லியபடி மாமரத்தை உற்றுப் பார்த்த தமையனின் அருகில் வந்த இசைவேந்தன்
"அண்ணா.. இப்புடித் தானே பப்பியும் அடிக்கடி மரத்தில ஏறி நின்டு கொண்டு உங்களுக்கு கடுப்பு ஏத்துறது போல பழிப்புக் காட்டுவாள்.."
என்று சொல்லியபடி தானும் மாமரத்தையே பார்த்தான்.

இசை வேந்தன் 'பப்பி' என்ற பெயரை உச்சரித்த வினாடியே, தமிழ்பரிதியின் முகத்தில் ஒருவித மாற்றம் வந்து போனது. பப்பி என்பது அவனது சிறு வயதுத் தோழிக்கு அவன் வைத்த பட்டப் பெயர்.

"இப்பல்லாம் இனிமேல அவளைப் பாக்கவே முடியாமப் போய்டுமோன்டு தோணுது வேந்தா.."
என்று மெல்லச் சொன்ன தமையனின் தோளை ஆதுரத்துடன் தொட்ட சின்னவனோ
"அண்ணா.. ஏன் இப்புடி நெகடிவாவே யோசிக்கிறாய்.. எப்பவுமே பொஸிடிவா நினைக்கோணும்.. பொஸிடிவாவே கதைக்க வேணும் அப்ப தான் எல்லாமே நல்லதா நடக்கும்.. இந்த முறை நிச்சயமா நாங்கள் அவையள் எல்லாரையும் பாக்கத் தான் போறமெண்டு எனக்கு முழு நம்பிக்கை இருக்குது அண்ணா.."
என்று ஆறுதல் சொன்னான்.

அப்போதும் எதையோ யோசித்துக் கொண்டு நின்றிருந்த தமையனை இலகு நிலைக்குக் கொண்டு வர வேண்டி
"அண்ணா.. பொன்னியின் செல்வனில் வருமே ஒரு அத்தியாயம் மரத்தில் ஒரு மங்கை என்டு.. எனக்கு இப்ப அந்தப் பக்கம் தான் நினைவுக்கு வருது.. உனக்கு அந்த நினைவு வரல்லையோ.."
என்று பேச்சுக் கொடுத்தான் இசை.

அவன் நினைத்தது போலவே சட்டென்று கலகலப்பாகப் பேசத் தொடங்கி விட்டிருந்தான் தமிழ்பரிதி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பற்றிப் பேசுவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது தமிழ்பரிதி மட்டும் விதிவிலக்கா என்ன?

மாமரத்தின் உச்சிக் கொப்பில் இரண்டு குருவிக் கூடுகளையும் வைத்த வான்மதி, அதன் பிறகே மரத்தை விட்டு இறங்குவற்காகக் கீழே பார்த்தாள். அவள் நின்றிருந்த கொப்பில் இருந்து அடுத்த கொப்பு சற்றே கீழே இறக்கமாக இருந்தது. ஏறும் போது வேகமாக ஏறி விட்டிருந்தவளுக்கு இறங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கவே, சீதாமாமியின் வீட்டு மொட்டைமாடிப் பக்கமாக நீட்டிக் கொண்டிருந்த கொப்பின் வழியாக இறங்குவதே சரியாக இருக்கும் என்ற எண்ணமும் அவளுக்குத் தோன்றியது.

அதே எண்ணத்தில் கொஞ்சம் திரும்பி, அடுத்த பக்கத்துக் கிளையில் காலை வைக்கப் போனவள், அப்போது தான் அங்கே மாடியில் நின்றிருந்த ஆண்கள் இருவரையும் பார்த்து விட்டுச் சங்கடத்துடன் லேசாகத் தயங்கி நின்று விட்டாள்.

மரத்தில் இருந்து மெல்ல இறங்கத் தொடங்கியிருந்த பெண்ணின் முகம் மரக் கிளைகளின் ஊடாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவள் தங்களைப் பார்த்ததும் தயங்கி நிற்பதைப் பார்த்த தமிழ்பரிதி, அவள் நிலையை உடனே புரிந்து கொண்டு தம்பியை அழைத்துக் கொண்டு அடுத்த பக்கம் போய் விட்டான். அதன் பிறகே வான்மதி சங்கடம் இல்லாமல் கீழே இறங்கி வந்தாள்.

மரத்தில் இருந்து வேகவேகமாக இறங்கிய மூத்தவளை என்னவென்பது போலப் பார்த்தாள் சின்னவள் தேன்மதி, அதற்குப் பதிலாக
'ஒன்றுமில்லை நான் சமையல் வேலைகளைக் கவனிக்க வேண்டும்..' என்று சைகையில் காட்டி விட்டு உள்ளே போய் விட்டாள் பெரியவள்.

அங்கே சீதாவின் வீட்டு முன் கூடத்தில், சீதாவும் அவரின் ஒன்று விட்ட அக்கா அமுதாவும் அமர்ந்து ஊர் நடப்புகள் பற்றி அலசிக் கொண்டிருந்தனர். அமுதாவின் அன்னை அம்பிகையும் வந்து அவர்களோடு இணைந்து கொண்டார்.

"சீதா.. உன்னட்டை ஒன்டு கேக்கோணும் என்டு இருந்தனான்.. நீ எப்போதுல இருந்து இத்தனை அருமையாவும் பாரம்பரிய முறைமாறாமலும் சமைக்கப் பழகின்னி.. ஒவ்வொரு உணவிலயும் ஒவ்வொரு ருசி.. இவ்வளவு அருமையா சமைச்சுப் போட்ட உன்ரை கைக்கு வைர வளையல் போட்டாலும் அது குறைவான பரிசு தான்.."
என்று தன் பெறாமகளைப் பார்த்து மெச்சுதலுடன் கேட்டார் அம்பிகை.

"பெரியம்மா.. நீங்கள் இப்புடிக் கேக்கும் போது.. ஓம் அது என்ரை கைகளில இருக்குற வித்தை தான் என்டு சொல்ல ஆசையாத் தான் இருக்குது.. ஆனாப் பாருங்கோவன் பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது என்டு சொல்லுவினம்.. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் உண்மையைச் சொல்லி விடுறன்.. உங்களுக்கு குடுத்த பலகாரம் சாப்பாடு எல்லாம் நான் சமைக்கல்லை.. பக்கத்து வீட்டில இருக்குற ஒரு பிள்ளை தான் மொத்தச் சமையலையும் கவனிச்சுக் கொள்ளுறாள்.."
என்று அசடு வழிந்தபடி பதில் சொன்னார் சீதா.

"என்னடி சொல்லுறாய் உண்மையாவே.. அவ்வளவு அருமையான ருசியில இத்தனை ஆளுங்களுக்கு ஒரு பிள்ளையால சாதாரணமா சமைக்க முடியுதோ என்ன.. ஒரு வேளை ரொம்ப வருஷத்து அனுபவமா இருக்குமோ.. உன்னைய விடவும் வயசில மூத்தவளோ.."
என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டார் அம்பிகை.

தன் பெரியம்மா கேட்ட கேள்விக்கு உடனே பதில் ஒன்றும் சொல்லாத சீதா
"என்னோட கொஞ்சம் வெளியால வாங்கோவன்.."
என்றபடி அம்பிகையையும் அமுதாவையும் அழைத்துக் கொண்டு தங்களின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் வான்மதியின் வீடு நோக்கி சென்றார்.

தங்கள் வீட்டு முற்றத்தில், வேப்பம் பூ வடகம் செய்வதற்காகக் கொத்துக் கொத்தாகப் பறித்திருந்த வேப்பம் பூவைப் பனையோலைப் பாயில் காயப் போட்டிருந்தாள் வான்மதி.

"சீதா.. இது ஆரிந்தை வீடு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிதே.. ஒரு வேளை இங்க இருந்து தான் வேப்பம்பூ வடகம் வாங்குறனியோ.."
என்று ஆர்வத்துடன் கேட்டார் அம்பிகை.

"எல்லாத்துக்கும் பதில் சொல்லுறன் பெரியம்மா.. முதல்ல ரெண்டு பேரும் இதில இருங்கோ.."
என்றபடி முற்றத்தில் நின்ற, வேப்பமரத்துக்குக் கீழே போடப் பட்டிருந்த வாங்கைக் காட்டி விட்டு வீட்டின் உள்ளே போய் விட்டார் சீதா.

"என்னடி பிள்ளை.. ஆரிந்தை வீடு இது என்டு கேட்டால்.. பதில் சொல்லாமல் உன்ரை தொங்கச்சி எங்கினை போறாள்.."
என்று கேட்டபடியே வாங்கில் அமர்ந்து கொண்டு வீட்டின் முன்னால் வைக்கப் பட்டிருந்த செடி கொடிகளைப் பார்வையால் அளந்தார் அமுதாவின் அன்னை அம்பிகை.

"அது தான் எனக்கும் தெரியேல்லை அம்மா.. பொறுங்கோவன் பாப்பம்.."
என்றபடி தானும் தாய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார் அமுதா.

வீட்டின் முன் பக்கக் கதவையே இருவரும் பார்த்துக் கொண்டு இருக்க வீட்டினுள் இருந்து வான்மதியை அழைத்துக் கொண்டு இருவரையும் நோக்கி வந்தார் சீதா.

"பெரியம்மா.. உங்கள்ரை பாராட்டும் புகழாரமும் என்டு எல்லாம் சேர வேண்டிய ஜீவன் இந்தா இந்தப் பிள்ளை தான்.."
என்று வான்மதியை அம்பிகையின் முன்பாக நிறுத்தியபடி சொன்னார் சீதா.

முற்றத்தில் நின்றிருந்த வேப்பமரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த தூதுவளைச் செடி, மெல்லிய ஊதாநிறப் பூக்களாலும், சிவப்புநிற உருண்டை வடிவப் பழங்களாலும் நிறைந்து இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமுதவாணி அப்போது தான் வான்மதியின் முகத்தை முழுவதுமாகப் பார்த்தார்.

ஏற்கனவே வாசற்பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அம்பிகை
"உண்மையாவே பிள்ளை.. நீ குடுத்து விட்ட பலகாரம் சாப்பாடு எல்லாமே ரொம்ப அருமையாத் தான் இருந்தது.. நீ நல்ல கெட்டிக்காரி என்டு நினைக்கிறன்.. உன்ரை பேர் என்ன பிள்ளை.. இத்தனை அருமையாச் சமைக்கிறதுக்கு ஆரிட்டைப் பழகின்னி.."
என்று ஆர்வத்துடன் வான்மதியைப் பார்த்துக் கேட்டார்.

மரத்தருகில் நின்றிருந்த அமுதவாணி வான்மதியை யோசனையாகப் பார்த்தபடியே அவளருகில் வந்து, அவளது கைகளைப் பற்றியபடி அவளது முகத்தை ஆராய்வது போலப் பார்த்தார்.

யார் இவர் எதற்காக என்னை இப்படிப் பார்க்கிறார் என்று சங்கடத்துடன் நெளிந்த வான்மதி, தானும் அமுதவாணியின் முகத்தைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள்.

அவளது மனது பரபரத்தது தான் காண்பது கனவா நனவா என்பதை அவளது மூளை உள்வாங்கச் சில நொடிகள் எடுத்துக் கொண்டது.

அது நனவு தான் என்பதை உணர்ந்ததும் அவளுள் ஏதோ ஒரு உணர்வு தோன்றி அவளது விழியோரம் நீர்த்துளி எட்டிப் பார்க்கவே, தொண்டை வரை வேகமாக வந்த வார்த்தைகள் வெளி வரத் துடித்தன. அப்போது தான் தன்னால் பேச முடியாது என்பதை உணர்ந்த வான்மதி வேகமாகச் சீதாவைத் திரும்பிப் பார்த்து, வீட்டின் பக்கம் கையைக் காட்டி உள்ளே இருக்கும் தேன்மதியை வரச் சொல்லுங்கள் என்று சைகையில் காட்டினாள்.

எதற்காக இவள் இப்படிப் பரபரக்கிறாள் என யோசித்தவாறே தேன்மதியைச் சத்தமாக அழைத்தார் சீதா.

சீதா இரண்டு மூன்று முறை அழைத்த பின்னரே வெளியே எட்டிப் பார்த்து
"என்னங்கோ மாமி.. ஏன் கூப்பிட்டனீங்கள்.."
என்று கேட்டவாறு மெதுவாக நடந்து வந்தாள் தேன்மதி.

அதற்குள் வான்மதியின் கையைப் பற்றியிருந்த அமுதாவோ
"உன்னைப் பாத்தால் எனக்குத் தெரிஞ்ச ஒரு பிள்ளையைப் பாக்கிறது மாதிரி இருக்குது.. உன்ரை பேர் என்ன பிள்ளை.."
என இரண்டு தடவைகள் கேட்டு விட்டார்.

அவரது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், மெல்ல நடந்து வந்து கொண்டிருக்கும் தன் தங்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள் வான்மதி.

அப்போது தான் சீதாவுக்குமே
"ஐயோ.. பிள்ளையால கதைக்க முடியாதெல்லோ.. அதனால தான் தங்கச்சியைக் கூப்பிடச் சொல்லிச் சொன்னவள் போல.. ஆனாத் தேனுவால தான் வேகமா நடக்க முடியாதே.."
என்ற எண்ணம் தோன்றியது.

"அமுதாக்கா..‌‌ பிள்ளையின்ரை பெயர் மதி.. எனக்குமே இவளை ஆரம்பத்தில பாத்த நேரம் எங்கயோ எப்பவோ பாத்தது மாதிரி ஒரு உணர்வு வரத்தான் செஞ்சது.."
என்று விளக்கம் கொடுத்தார் சீதா.

'யாரு இவங்க.. ஒருவேளை சீதாமாமி வீட்டுக்கு கொழும்பில இருந்து வந்த சொந்தக்காரங்களா இருக்குமோ..'
என யோசித்தவாறே நால்வரும் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தாள் தேன்மதி.

அமுதாவிற்கு மனதினுள்
'இவளைப் பாத்தால் நந்தன் அண்ணாவின்ரை மகள் போலவும் கிடக்குது.. ஆனால் என்னால உறுதியாயும் இவள் தான் என்டு முடிவுக்கு வரவும் முடியேல்லை.. அவளைப் பாத்துக் கன வருஷம் ஆகீட்டுதே.. ஒருவேளை அவளை மாதிரி சாயல் இந்தப் பிள்ளைக்கும் இருக்கலாம் எல்லோ ஏனென்டால் அவையள் எல்லாரும் இங்க எப்புடி.. இந்தப் பிள்ளை ஏன் வாயைத் திறந்து ஒரு பதிலும் சொல்ல மாட்டன் என்டுது..'
என ஏதேதோ கேள்விகள் எழுந்தன.

"ஓம் மாமி.."
என்றவாறே அம்பிகை அமர்ந்திருந்த வாங்கின் ஓரத்தில் சாய்ந்து நின்று வலிக்கத் தொடங்கிய வலது காலைப் பிடித்து விட்டுக் கொண்டபடி புதிதாக வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள் தேன்மதி.

தங்கை வரும் வரை பொறுமை பொறுமை என்று நின்றிருந்த வான்மதி ஒரு எட்டில் தங்கையின் கையைப் பிடித்து அமுதாவைக் காட்டினாள்.

தமக்கையின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்த சின்னவள் அமுதாவை அப்போது தான் பார்த்தாள், தமக்கை பரபரப்புடன் ஒருவரைக் கை காட்டுகிறாள் என்றால் நிச்சயமாக மிகவும் வேண்டப்பட்ட நபராகத் தான் இருக்கும் என்பதை உணர்ந்த சின்னவள் அமுதவாணியை ஆராய்ச்சிப் பார்வையுடன் தான் பார்த்தாள்.

அவளது ஆராய்ச்சிப் பார்வை ரொம்ப நேரம் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவள் அமுதவாணியை அடையாளங் கண்டு கொண்டு விட்டாள், தேன்மதிக்குக் கூடத் தான் காண்பது கனவா நனவா என்பது ஒரு கணம் புரியவில்லை.

உடனே வாங்கில் தன்னருகில் அமர்ந்திருந்த அம்பிகையைத் திரும்பிப் பார்த்த சின்னவளுக்குத் தான் காண்பது நனவு தான் என்பது சட்டென்று புரிந்து போய் விட்டது.

தேன்மதிக்கு ஒரு நொடி என்ன பேசுவது எதைச் செய்வது என்பதே புரியவில்லை, தன்னுடைய நிலையே இப்படி இருக்கிறதே பாவம் அக்காவுக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்தவள், தமக்கையின் வலது கரத்தை இறுகப் பற்றி அவளுக்குப் பார்வையால் ஆறுதல் சொன்னவள் அமுதவாணியின் பக்கம் திரும்பி
"அமுதமாமி.. எப்புடி இருக்கிறீங்கள் எங்களை உங்களுக்கு அடையாளம் தெரியுதோ.."
என்று அழுதபடியே அமுதவாணியை இறுக அணைத்துக் கொண்டாள்.

தங்களை நோக்கி வந்த புதிய பெண் தன்னை 'அமுதமாமி' என்று சொல்லியபடி கட்டியணைத்ததும் திகைத்த அமுதவாணிக்கு, ஆழ் மனதில் ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ என்று ஏதோ தோன்றவே தேன்மதியைத் தன்னிடம் இருந்து விலக்கி அவள் முகத்தைப் பார்த்து
"நீ நந்தன் அண்ணாவின் மகள் தேனு தானே.."
என்று கேட்டே விட்டார்.

அவரது கன்னங்களைப் பிடித்து ஆட்டியபடி
"ஓம் ஓம் நான் தான் மாமி.. இந்தா இது தான் உங்களின்ரை தங்கமான வானத்து நிலவு.."
என்றவள் தமக்கையை இழுத்து அவர் முன்னே நிறுத்தினாள்.

இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பிகை எப்படித்தான் சற்றே உயரமாக இருந்த அந்த வாங்கில் இருந்து குதித்து இறங்கினாரோ தெரியவில்லை, வேகமாக வந்து தேன்மதியையும் வான்மதியையும் ஒன்றாக அணைத்துக் கொண்டார்.

அருகில் நின்றிருந்த அமுதா பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, வான்மதியை மார்போடு அணைத்துக் கொண்டு
"எல்லாரும் இனிமல் தாய் நாட்டுக்குப் போகலாம் என்டதுமே நான் ஓடி வந்ததே உங்களை எல்லாம் பாக்க வேண்டும் என்டு தான் தெரியுமோ.. தெரிஞ்ச ஒரு சிலர் மூலமா விசாரிச்சதில நீங்கள் எல்லாம் கிளிநொச்சி உட்பட அந்தச் சுற்று வட்டாரத்திலயே எங்கயும் இல்லை என்டு தான் சொன்னவை.. அதோட எங்க போனீங்கள் என்டுமே தெரியேலை அப்புடின்டு தான் சொல்லிச்சினம்.. நாங்களும் உங்களைப் பத்தி விசாரிக்காத இடமில்லை.. ஒரு வழியா எங்களில நல்லூரான் தன்ரை கருணையைக் காட்டீட்டான்.. அதனால தான் இப்பயாச்சும் உங்களைக் கண்ணில காட்டி இருக்கிறான்.."
என்று குரல் தடுமாறச் சொன்னார்.

இவர்களையே பார்த்திருந்த சீதா
"என்னதான் நடக்குது இங்க.. மதியை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமோ அக்கா.."
என்று கேட்டக, சீதாவின் தலையில் லேசாகக் கொட்டியபடி
"அடி அசடு.. தெரியாத பிள்ளையளையோ நானும் உன்ரை கொக்காவும் மாத்தி மாத்திக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறம்.."
என்று கேட்டார் அம்பிகை.

பின்னர் வான்மதியின் பக்கம் திரும்பி
"உன்னை எனக்கு அடையாளமே தெரியேல்லை நிலவு.. எவ்வளவு வளந்துட்டாய் நீ.. இவள் தேனுவும் நல்லா வளந்துட்டாள்.. நீங்களாச் சொல்லி இருக்காட்டால் எங்களுக்கு உங்களை அடையாளமே தெரிஞ்சு இருக்காது.."
என்று சொன்ன அம்பிகைக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

அதைப் பார்த்த தேன்மதி அவரது கண்களைத் துடைத்தபடியே
"நீங்கள் அழுதால் வடிவு தான்.. அதுக்காக இப்புடியா அழுறது அம்மம்மா.."
என்று சொல்லி விட்டு அம்பிகையை அணைத்துக் கொண்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற மூவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

"தொலைந்து போன ஒன்று
இனிமேல் பார்க்கவே முடியாதா
எனத் தவித்திருந்த ஒன்று
மீண்டும் கண் முன்னே
தோன்றும் போது
இந்த மனம் தான் எப்படிக்
குதியாட்டம் போடுகிறது.."
 

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 2 (2)

காற்று சற்றே பலமாக வீசியதால் மரக் கிளைகள் நர்த்தனம் ஆடுவது போல ஆடி அசைந்து கொண்டிருந்தன. அதிலும் வான்மதி வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த வேப்பமரம் காற்றில் அசைந்து அசைந்து வேப்பம் பூக்களைக் கீழே உள்ளவர்கள் மீது உதிர்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்க்கும் போது பல வருடங்களுக்குப் பிறகு பார்த்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்குப் பூமாரி பொழிந்து வாழ்த்துக் கூறுவது போல இருந்தது.

வான்மதியின் தலையில் வேப்பம் பூவோடு விழுந்த வாலெறும்பு ஒன்றைத் தட்டி விட்டவாறே
"என்ன நிலா.. நானும் பாத்துக் கொண்டு இருக்கிறன் நீ வாயைத் திறந்து ஒரு வாத்தை கூடக் கதைக்க மாட்டன் என்டுறியே.. ஒரு வேளை இன்டைக்கு ஏதும் மௌன விரதமோ.."
என்று கேட்டார் அமுதா.

"எங்களைப் பாத்த உடன அதிர்ச்சியில வாயடைச்சுப் போயிட்டுப் போல பிள்ளைக்கு.."
என்றவாறே வான்மதியின் கன்னத்தைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினார் அம்பிகை.

அவர்கள் இருவரும் சொன்னதைக் கேட்டதும் என்ன செய்வது என்பது போலத் தன் தங்கை தேன்மதியைப் பார்த்தாள் வான்மதி.

இவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தவாறு நின்றிருந்த சீதாவுக்கு, அப்போது தான் வான்மதிக்குப் பேச்சு வராது என்பது அவர்களுக்குத் தெரியாது என்பதே புரிந்தது. அதோடு வான்மதியைப் பார்க்கவும் அவருக்குப் பாவமாக இருந்தது. அந்தச் சங்கடமான சூழலை மாற்றுவதற்காக அவரே அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார்.

"அக்கா.. இதை எப்புடிச் சொல்றது என்டு தெரியேல்லை.. ஆனா சொல்லித் தானே ஆகோணும்.. மதியால கதைக்க ஏலாது.. அவளுக்குப் பேச்சு வராது.."
என்று சுற்றி வளைக்காமல் விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சீதா.

என்னடி சொல்கிறாய் என்பது போலச் சீதாவைப் புரியாத பார்வை பார்த்தார்கள் அமுதாவும் அம்பிகையும்.

அவர்கள் இருவரது முகபாவனையையும் பார்த்த தேன்மதி
"அம்மம்மா.. நடந்த யுத்தத்தில அக்காவின்ரை தொண்டைப் பக்கமாக் குண்டு ஒண்டு பட்டதால அக்காவுக்குப் பேச்சுப் போயிட்டுது.."
என்று அவர்களுக்குப் புரியும் படி கூறினாள்.

அதைக் கேட்டதும் மற்ற இருவருக்கும் என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியவில்லை ஒரு கணம் பேச்சற்றுப் போய் நின்றிருந்தார்கள்.

தன்னைத் தானே சுதாரித்துக் கொண்ட அமுதா தன் காதில் விழுந்த செய்தி உண்மை தானா என்ற கலக்கம் மாறாமல்
"என்னடி பிள்ளை சொல்லுறாய்.."
என்றபடி தேனுவைப் பிடித்து உலுக்கினார்.

அம்பிகையோ அதிர்ச்சி மாறாமல் அப்படியே வான்மதியைப் பார்த்தபடி நின்றுருந்தார்.

கண்கள் கலங்க நீ சொல்றது உண்மைதானா என்பது போலத் தன்னை மறந்து தேன்மதியைப் பிடித்து உலுக்கியபடியிருந்த அமுதாவின் தோள் தொட்டுத் தன் பக்கமாகத் திருப்பினாள் வான்மதி.

அவளது மென்மையான ஸ்பரிசத்தில் திடுக்குற்றுத் திரும்பிய அமுதாவின் வலது கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்து
"தேனு சொல்வது உண்மை தான்.."
என்பது போலச் சைகையில் செய்து காட்டினாள் வான்மதி.

அவளது சைகையை நொடியில் புரிந்து கொண்ட அமுதாவிற்கு அழுகை வெடித்துக் கொண்டு வரவே வான்மதியை இழுத்து இறுக அணைத்துக் கொண்டு தன் மனக் கவலையை அழுதே தீர்த்து விட்டார்.

தன் கழுத்தில் முகத்தை மறைத்து அழுது கொண்டிருந்த தன் அமுதமாமியை மெல்ல நிமிர்த்தி அவரது கண்களை அழுந்தத் துடைத்த வான்மதி மெல்லத் திரும்பித் தன் தங்கையைப் பார்த்தாள்.

தமக்கையின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட தேன்மதி, அமுதாவின் முகம் பார்த்து
"மாமி.. இந்த விஷயத்துக்கே இப்புடிக் கண்ணீரைச் செலவு செஞ்சால் மிச்ச விஷயங்களுக்குக் கண்ணீர் போதாமல் போயிடும் எல்லோ.. முதல்ல வீட்டுக்க வாங்கோ உங்களை எல்லாம் பாத்து எத்தினை வருஷம் ஆயிட்டுது.. உள்ள வந்து அக்கான்ரை கையால செஞ்ச வாழைக்காய்ப் பஜ்ஜியைச் சாப்பிட்டு அது எப்புடி இருக்கின்டு ஒரு சான்றிதழ் ஒண்டு குடுங்கோ பாப்போம்.."
என்று சொல்லியபடி சீதாவையும் வரச் சொல்லி விட்டு அமுதாவின் கையைப் பிடித்து வீட்டினுள் அழைத்து சென்றாள் தேன்மதி.

அதிர்ந்து போய் அசையாமல் நின்ற அம்பிகையின் அருகில் சென்று, அவரை அணைத்தபடி வீட்டினுள் அழைத்துச் சென்றாள் வான்மதி.

வீட்டின் முன் பக்கமாக இருந்த அந்த நீளமான அறையில் எல்லோரையும் அமர வைத்து விட்டு, ஏற்கனவே செய்து வைத்திருந்த வாழைக்காய்ப் பஜ்ஜியுடன் சுடச் சுடத் தேநீரையும் கொண்டு வந்து பரிமாறினாள் வான்மதி.

"சரி அதெல்லாம் இருக்கட்டும் அப்பா அம்மா மற்றவையள் எல்லாம் எங்க நிலா.."
என்று வான்மதியைப் பார்த்துக் கேட்டார் அம்பிகை.

லேசான விரக்திப் புன்னகையுடன் வீட்டின் அந்த நீளமான அறையில் தொங்க விடப் பட்டிருந்த படங்களைக் காட்டினாள் அவள்.

அதை நிமிர்ந்து பார்த்த அம்பிகைக்கும் அமுதாவிற்கும் அடுத்த இடி தலையில் விழுந்தது. யார் யாரை எல்லாம் பார்க்க வேண்டும் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று இத்தனை வருடங்களாக யார் யார் மூலமாகத் தேடி அலைந்தார்களோ, அவர்களில் ஒன்றிரண்டு உறவுகள் சுவரில் மாலையுடன் தொங்குவதைப் பார்க்கையில் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்களது முகத்தில் தெரிந்த வேதனை பறைசாற்றியது.

ஒரு நீண்ட நெடிய நேரம் யாருமே ஒன்றுமே பேசிக் கொள்ளாது தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

அந்த நேரத்தின் அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதா அந்தக் கன அமைதியை உடைப்பதற்காக மெல்லப் பேச்சுக் கொடுத்து அந்தச் சூழ்நிலையை மாற்ற முயன்றார்.

"சரி சரி முடிஞ்சு போன விஷயத்தை நினைச்சு அதைப் பத்தியே கதைச்சு அந்தப் பிள்ளையளையும் கண்கலங்க வைக்காமைக்கு.. நீங்கள் கன வருஷத்துக்கு பிறகாச்சும் பாத்துக் கொண்டியளே இந்த நொடியைச் சந்தோஷமாக்குங்கோ..."
என்றபடி தன் பெரியம்மாவையும் அக்காவையும் சமாதானப் படுத்தினார்.

அப்போதும் கூட அவர்கள் தரையை வெறித்துப் பார்த்தபடி இருப்பதைப் பார்த்துத் தாங்கிக் கொள்ள முடியாமல்
"அக்கா.. அப்பாம்மா என்டு எந்தப் பெரியாக்களிந்தை துணையுமில்லாமல் இருக்கிற இந்தப் பிள்ளையளுக்கு நீங்கள் தானே தாய் மாதிரி இருந்து இனிமேல பாத்துக் கொள்ள வேணும்.. அதை விட்டுட்டு நீங்களுமே இப்புடி இடிஞ்சு போய் இருந்தால் பாவம் சின்னனுகள் என்ன செய்யுங்கள் சொல்லுங்கோ.."
என்று ஆதங்கத்துடன் கேட்டார் சீதா.

அவர் அவ்விதம் கேட்டதற்குப் பலன் இருந்தது. சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த படத்தைக் காட்டி விட்டுச் சமையலறையினுள் போய் விட்டிருந்த வான்மதியையும் தேன்மதியையும் தேடி உள்ளே சென்றார் அமுதா.

சமையற்கட்டில் நின்றிருந்த இருவர் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு
"எனக்கு என்ன சொல்லுறது என்டே தெரியேல்லை பிள்ளையள்.. நான் நினைச்சு வைச்சிருந்தது வேறை இங்க நடந்திருக்கிறது வேறை.. இப்பத் தான் இந்த இழப்புகளைப் பத்தித் தெரிஞ்சு கொண்டனான்.. அதைத் தெரிஞ்சு கொண்ட நொடியில இருந்து என்னாலேயே அதைத் தாங்கிக் கொள்ள முடியேல்லை.. நீங்கள் ரெண்டு பேரும் அந்த இழப்பையும் தாங்கிக் கொண்டு எத்தினை தைரியத்தோட இப்புடித் தனியாத் திடமா உங்கள்ரை சொந்தக் காலில ஆரையும் சார்ந்து இருக்காமல் நிக்கிறியள்.. இதைப் பாக்கும் போது எனக்கு உங்களை நினைச்சுப் பெருமையா இருக்குது தெரியுமோ.."
என்று தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப் படுத்தினார்.

அவரது கையை மெல்லத் தட்டிக் கொடுத்தபடி
"அமுதமாமி.. உங்களுக்கு இன்னொரு ஆளைப் பற்றியும் சொல்லோணும்.. உங்களைப் பாத்த சந்தோஷத்தில அவனைப் பத்திச் சொல்ல மறந்துட்டன்.."
என்று தேன்மதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

"பெரியக்காச்சீ.."
என்று கத்தியபடி வீட்டினுள் நுழைந்தான் அபிராம்.

உள்ளே நுழைந்தவனை வெளியறையில் அமர்ந்திருந்த அம்பிகையும் சமையலறையினுள் நின்றிருந்த அமுதாவும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.

அபிராமும் அப்போது தான் உள்ளே இருந்த புதியவர்களைப் பார்த்தான். யாரோ அக்காக்களுக்குத் தெரிந்தவர்கள் போல என நினைத்தவன், சீதாவைப் பார்த்து மெல்லப் புன்னகைத்து விட்டுச் சமையற்கட்டினுள் புகுந்து
"ஆரு அக்காச்சி அது.. மாமியோட வந்திருக்கினமே.."
என்று கேட்டபடி அங்கே நின்ற அமுதாவைப் பார்த்தான்.

"அபி.. இவையளை உனக்கு அடையாளம் தெரியுதோ.."
என்று மெல்லிய புன்னகையுடன் கேட்ட தன் சின்னக்காவையும் அமுதாவையும் சில நொடிகள் மாற்றி மாற்றிப் பார்த்தவனோ
"இவையள்.. அமுதமாமி தானே.."
என லேசான சந்தேகத்துடன் இழுத்தான்.

"நானே தான்டா கண்ணா.."
என்றவாறு அவனது தோளைத் தட்டியபடியே
"எவ்வளவு உயரமா வளர்ந்திட்டான் இவன்.. உள்ள வரும் போதே வாசலின்ரை நிலைக்கதவு வரை அவன்ரை தலை முட்டுறதைப் பாத்தனே.."
என்று அமுதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அம்பிகையும் சமையலறையினுள் வந்து விட்டார்.

உள்ளே வந்தவரோ அபிராமைப் பார்த்தபடி
"இந்தப் பெடியன் நந்தனின்ரை கடைக்குட்டி அபி தானே.. அப்புடியே அவன்ரை அப்பாவை மாதிரியே நல்ல வளத்தியா இருக்கிறான்.. அதனால நீங்கள் ஆரும் சொல்லாமலேயே எனக்கு அவனை அடையாளம் தெரிஞ்சிட்டுது.."
என்று சொல்லி விட்டு அபிராமின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அபிராமுக்கு அப்போது இருந்த சந்தோஷத்தை அவன் முகம் அப்படியே காட்டியது. அவர்களைப் பார்த்த நொடியில் இருந்து அவனுக்குள் ஏதோ ஒரு நிம்மதி ஊற்றெடுத்தது. தங்களுக்கு இனிமேல் யாரும் இல்லை என்ற கவலை இனி இருக்காது என்பதை அவனது ஆழ் மனது அவனுக்குக் கூறுவது போல இருந்தது.

முகமெல்லாம் பிரகாசமான புன்னகையுடன்
"அம்மம்மா.. மாமா.. அத்தானாக்கள் எல்லாம் எங்க நீங்கள் இப்ப எங்க இருக்கிறியள்.. இனிமேலயாச்சும் எங்களோட இருப்பியளோ.."
என்று அபிராம் ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டபடி அமுதாவையும் அம்பிகையையும் மாற்றி மாற்றிப் பார்த்து வைத்தான்.

அவனை அருகில் இருந்த சமையல் மேடையில் அமர வைத்து, அவனது தலையைக் கோதி விட்ட அம்பிகை
"உங்களை எல்லாம் பாத்த பிறகு அப்புடியே விட்டுட்டுப் போயிடுவமோ நாங்கள்.. உங்கள்ரை சீதாமாமி வீட்டில தான் இருக்கிறம்..
மாமாவும் அத்தானாக்களும் அங்க தான் நிக்கினம்.. நாங்களே இப்பத்தானே உங்களைப் பாத்தம்.."
என்று சொன்னவர் சீதாவைப் பார்த்து,
அமுதாவின் கணவர் கவிவாணனையும் தன் பேரப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பி விட்டார்.

சீதாவுடன் நடந்தபடியே
"என்னம்மா.. என்ன சங்கதி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா உன்ரை அக்காளையு காணேல்லை என்ரை அத்தையையும் காணேல்லை.. இப்ப நீ எங்க கூட்டிக் கொண்டு போறன் என்டு சொல்லாமலயே கூட்டிக் கொண்டு போறாயே.."
என்றவாறு சொல்லிக் கொண்டே வந்தார் கவிவாணன்.

"அதெல்லாம் சொல்ல முடியா பெரியத்தான்.. நீங்களே வந்து பாத்துத் தெரிஞ்சு கொள்ளுங்கோ.. ஏனெண்டால் அது ஒரு இரகசியம்.."
என்று சொல்லி விட்டு வான்மதியின் வீட்டினுள் நுழைந்தார் சீதா.

தானும் அந்த வீட்டினுள் நுழைந்தபடி
"இது ஆரோட வீடு.. ஒரு வேளை உன்ரை அக்காள் பூக்கன்டுகள் எதையாச்சும் ஆட்டையைப் போடப் போய் அவளைப் புடிச்சுக் கட்டிக்கிட்டி வைச்சிட்டினமோ.."
என்று சிரித்தபடியே கேட்ட கவிவாணன் வான்மதியின் வீட்டைச் சுற்று முற்றும் பார்த்தார்.

அதற்குள் வீட்டின் முன் பக்க அறையினுள் நுழைந்த சீதா
"முதல்ல உள்ளுக்க வாங்கோ பெரியத்தான்.. உங்களின்ரை வருகையை எதிர்பாத்து உள்ளுக்க ஒரு கூட்டமே காத்து நிக்குது.."
என்று சத்தமாக அழைத்தார்.

"என்னம்மா.. உன்ரை அக்காளுக்குப் பதிலா என்னைய பிடிச்சுக் கட்ட போறினமா என்ன.."
என்று மீண்டும் சிரித்தபடியே வீட்டினுள் வந்த கவிவாணன் உள்ளே நின்றவர்களைப் பார்த்ததும் ஒரு கணம் நிதானித்து நின்றார்.

அவரைப் பார்த்து விட்ட அமுதாவோ
"அத்தான்.. இவையளை ஆரு என்டு தெரியுதோ.."
என்று கேட்டு விட்டுக் கணவன் யோசிக்கும் முன்பாகவே
"எங்கள்ரை நந்தன் அண்ணான்ரை பிள்ளையள்.. இவள் நிலா.. இவள் தேனு.. இவன் அபி.."
என்று முகமெல்லாம் பூரிப்போடு அவர்களை அறிமுகப் படுத்தி விட்டுக் கணவன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தார்.

கவிவாணனும் அப்போது தான் மூவரையும் பார்த்தார், அவருக்கும் லேசாகக் கண்கள் கலங்கியிருந்தது. அவரது சிறு வயதுத் தோழன் தான் வான்மதியின் தந்தை நந்தன். இடையில் இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் போரினால், அவர்கள் எல்லோருமே திக்குத் திசை தெரியாமல் சிதறி ஓடிப் போனதால் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எந்தத் தகவலுமே கிடைக்கவில்லை.

ஆனாலும் கவிவாணன் தன்னுடைய நண்பர்கள் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என நிறைய ஆட்கள் மூலமாகத் தன்னுடைய நந்தன் பற்றித் தேடிக் கொண்டு தான் இருந்தார். ஆனால் இன்று தான் அவர்கள் குடும்பத்தை அவரால் பார்க்க முடிந்திருந்தது.

பெண் பிள்ளைகள் இல்லாத கவிவாணனுக்கு, நந்தனின் மகள்கள் மீது தனிப் பாசமே உண்டு. அவர்களை இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் அவருக்கும் வார்த்தைகள் வெளிப்படாமல் சொல்ல முடியாத மகிழ்ச்சியாக இருந்தது.

"நிலா.. தேனு.."
என்று குரல் தடுமாற அழைத்தவரை
"மாமா.. என்னைய எல்லாம் கண்ணுக்குத் தெரியல்லையா உங்களுக்கு.."
என்று கேட்டபடி கவிவாணனை அணைத்துக் கொண்டான் அபிராம்.

அவனது தோளில் தட்டியபடி புன்னகைத்தவர்
"அப்படி எல்லாம் இல்லை அபி.. நீ மாமாவைக் கோபிச்சுக் கொள்ளாத.."
என்று அவனைச் சமாதானப் படுத்தி விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தார்.

அவர் யாரைத் தேடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அமுதா அவருக்குப் பதில் சொல்வதற்கு முன்பாக
"இவன் நந்தன் எங்க ஆளையே காணேல்லை.. ஒருவேளை வெளியால எங்கையாவது போயிட்டானா.. அவன் என்னைப் பாத்தால் என்ன செய்வான் எப்புடிச் சந்தோஷத்தை வெளிப் படுத்துவான் என்டுறதைப் பாக்க எனக்கு ஆசையா இருக்குது.."
என்று மீண்டும் வீட்டினைப் பார்வையால் சல்லடை போட்டார் கவிவாணன்.

அவரிடம் விடயத்தை எப்படிச் சொல்வது என்று எல்லோரும் தயங்கி நிற்கத் தேன்மதி தானே சொல்லி விட வேண்டியது தான் என்பது போலச் சொல்ல வரவும், அவரது கையை இறுகப் பற்றிய அமுதா ஒன்றும் சொல்லி விடாதே என்பது போலக் கண்களால் ஜாடை காட்டினார்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
உணர்வுமயமான எபி 😍

இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் தவித்து ஒரு கட்டத்தில் சில உறவுகளைக் கண்டு நிகழ்ந்த மற்ற உறவுகளின் இழப்புகளை அறிந்து ஜீரணிக்க முடியாமல் ஏற்றே ஆகவேண்டிய சூழ்நிலையை எப்படி வார்த்தைகளால் வெளிப்படுத்த.... 😢😢


அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK5

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
உணர்வுமயமான எபி 😍

இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் தவித்து ஒரு கட்டத்தில் சில உறவுகளைக் கண்டு நிகழ்ந்த மற்ற உறவுகளின் இழப்புகளை அறிந்து ஜீரணிக்க முடியாமல் ஏற்றே ஆகவேண்டிய சூழ்நிலையை எப்படி வார்த்தைகளால் வெளிப்படுத்த.... 😢😢


அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி