• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 4

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 4 (1)

தெருவின் இரு மருங்கிலும் ஊதா நிறப் பூக்களைச் சுமந்த கொடிகள், மரங்களையும் மின் கம்பத் தூண்களையும் பற்றிப் பிடித்து படர்ந்து காணப் பட்டன.

கடலை ஒட்டி இருந்த தெருக்களில் எல்லாம் கடல் மணலை நிரவி, நடப்பதற்குத் தோதாக அமைக்கப் பட்டிருந்தது.

சற்றுத் தள்ளிக் கிடந்த பற்றைகள் கூட ஏதோ அழகான மலர்த் தோட்டம் போல, சில பல பெயர் தெரியாப் பூக்களைச் சுமந்தபடி கண்களுக்குக் குளிர்ச்சியைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்த இயற்கையழகுகளை எல்லாம் இரசித்தபடி தன் தம்பியின் தோளில் கை போட்டபடி நடந்து கொண்டிருந்தான் தமிழ்பரிதி.

"இசை.. இங்க பாரன் இந்த இடமெல்லாம் எவ்வளவு அழக்கா கண்ணுக்குக் குளிர்ச்சியாக் கிடக்கு.. பாத்தாப் பாத்துக் கொண்டே இருக்கலாம் போலயே தோணுது என்ன.."

"அடடா.. அப்புடியோ அண்ணா.. அது ஏன் தெரியுமோ பத்தையள் எல்லாம் உனக்கு அழகாத் தெரியுது.."

"ஏன்.. உன்ரை முழியைப் பாத்தால் ஏதவோ விஷமமாச் சொல்லப் போறாய் என்டு தெரியுது.. சரி சரி சொல்ல வந்ததை மறைக்காமல் சொல்லு பாப்போம்.."

"அது வந்து அண்ணா.. அந்தப் பிள்ளை உனக்கு நன்றி சொல்லிப் பூங்கொத்தும் இனிப்பும் குடுத்து விட்டதால அந்தப் பரவசத்தில தான் உனக்குப் பாக்கிற இடமெல்லாம் அழகாத் தெரியுதெண்டு நினைக்கிறன்.."

"போடா.. எதையாவது சொல்லி என்னைக் கிண்டல் செய்றது தான் உன்ரை வேலை.. நான் போறன் நீ தனியா வா.. தெரு நாயள் துரத்தினால் தான் உன்ரை வாய்க் கொழுப்பு அடங்கும்.."
என்று சொல்லிக் கொண்டே தன் தம்பியின் காதை வலிக்காமல் திருகி விட்டு, வீட்டை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினான் தமிழ்பரிதி.

தமிழைத் துரத்திக் கொண்டு ஓட முயன்ற இசையை அப்போது தெருவில் வந்த தெரிந்தவர் ஒருவர் கதை கேட்கவே, அவன் மெல்லத் தேங்கி நின்று அவரோடு பேசத் தொடங்கினான்.

தாங்கள் தங்கியிருந்த சீதாச் சித்தியின் வீட்டு வாசலருகே வந்து வேகமாக உள்ளே நுழையப் போன தமிழ், அப்போது உள்ளே நுழையப் போன வான்மதியோடு நன்றாக மோதிக் கொண்டான்.

அவன் மோதிய வேகத்தில் இருவரும் அங்கப்பிரதட்சணம் செய்யாமல் தப்பித்ததே பெரும்பாடாய்ப் போய் விட்டது.

ஒரு வழியாகத் தானும் விழாமல் அவளும் விழாமல் சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்தவன் அப்போது தான் அவளது முகம் பார்த்தான்.
அவளை இனங் கண்டு கொண்டவனது விழிகள் அவளது முகத்தை ஆராய்ச்சி செய்ய, கைகளோ சட்டைப் பைக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த அவள் சற்று முன்னர் கடற்கரையில் வைத்துக் கொடுத்து விட்ட சிறு மடலை இருக்கிறதா என ஆராய்ச்சி செய்தது.

அவனோடு மோதிய வான்மதி கீழே உருளாமல் அவனால் காப்பாற்றப் பட்டாலும், வேற்று ஆடவனது ஸ்பரிசத்தில் மிரள மிரள முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

மோதியவள் மேல் லேசான எரிச்சல் துளிர்த்தாலும், அவளை இவள் தான் என இனங் கண்டதும் தமிழின் உதடுகள் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டன.

"ஏய் பொண்ணு.."
என உற்சாகமாக அழைத்தவனை அப்போதும் மிரள மிரளத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் வான்மதி.

இவள் எதுக்கு நம்மைப் பார்க்கிற நேரம் எல்லாம் ஏதோ தீவிரவாதியை முறைக்கிற கணக்காகப் பார்த்து வைக்கிறாள் என யோசித்தவன், அப்போது தான் அவளது பார்வை தன்னைத் தாண்டிப் போய் விழுவதைப் பார்த்தவன் அவள் அப்படி எதைப் பார்க்கிறாள் என்பது போலத் திரும்பிப் பார்த்தான்.

பார்த்தவனது விழிகள் அங்கே ஒரு பக்கமாகப் படம் விரித்தாடிய பாம்பைப் பார்த்ததும் பயத்தில் விரிய
"ஐயோ.. அம்மா.."
என்று கத்தியபடி வான்மதிக்குப் பின்னால் ஓடிப் போய் நின்று கொண்டான். அவனது வலக் கரம் தன்னிச்சையாக வான்மதியின் தோளைப் பிடித்துக் கொண்டது.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் தமிழ்பரிதி மட்டும் எம் மாத்திரம். அது தான் அவன் பயத்தில் வான்மதியைப் பிடித்துக் கொண்டான்.

வான்மதியும் பயந்து போய்த் தான் நின்றிருந்தாள். ஆனால் தமிழ் பயந்த அளவுக்கு அவள் பயப்படவில்லை.
அவள் மெல்லத் தமிழனைத் திரும்பிப் பார்க்க அவனோ
"அந்தத் தடியை எடுத்து அந்தப் பாம்பை விரட்டும்மா.."
என்று படபடத்தான்.

அவனது நிலையைப் பார்த்தவளுக்கு அது வரை இருந்த பயம் மாறி சிரிப்புத் தான் பீறிடத் தொடங்கியது. பயம் மாறி அவள் சிரிக்கத் தொடங்கவும் அவளைப் பார்த்துத் தமிழ் அசடு வழிய வேண்டியதாகப் போய் விட்டது.

வாசலருகே நின்றிருந்த தூதுவளையில் இலைகளைப் பறித்துக் கொண்டு நின்றிருந்த அமுதவாணிக்கு, வாசலில் தமிழ் கத்திய சத்தம் கேட்டதும் அவர் என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

அவரது பார்வை வட்டத்தினுள் வான்மதியின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு நின்ற மகனும், மகனது முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த வான்மதியும் விழுந்தனர்.

அந்தக் காட்சியைப் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு வந்த அமுதவாணியின் முகம் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.

மெல்ல அவர்களருகில் சென்று
"என்ன நிலாம்மா.. இந்த வாலு உன்னட்டை என்ன வம்பிழுத்து வைச்சான்.."
என்று சொல்லிக் கொண்டு வான்மதியின் கரத்தைப் பற்றி வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார்.

இந்தப் பிள்ளையை அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் போலவே என நினைத்துக் கொண்டவன் தாயின் பின்னால் வால் பிடித்துக் கொண்டு நடந்தபடி
"ஐயோ.. நான் ஒண்டும் வம்பிழுக்கல்லை அம்மா.. எங்களுக்குப் பின்னால பாம்பு ஒண்டு படமெடுத்துக் கொண்டு நின்டது.. அதைப் பாத்துப் பயந்து போய்த் தான் இந்தப் பிள்ளைக்குப் பின்னால போய் நிக்க வேண்டியதாப் போச்சுது.. மத்தபடி நான் ஒரு வம்பும் இழுக்கல்லை அம்மா.."
என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.

அவனுக்குள் எழுந்த
'யார் இவள்.. இவளை அம்மாவுக்கு எப்படிப் பழக்கம்.. அதுவும் அத்தனை உரிமையாக நிலாம்மா என்று வேறு சொல்கிறாரே..'
என்ற கேள்விகளுக்கு விடை தான் இன்னும் கிடைக்கவில்லை.
தாயிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தவன் தாயின் பின்னால் வேகமாக நடந்தான்.

அதற்குள் வீட்டில் இருந்து வேகமாக வந்த கவிவாணன் வான்மதியை
இரு கரம் கொண்டு அணைத்து உச்சி முகரவே, தமிழ் அப்படியே அசையாது நின்று விட்டான்.

இத்தனை தூரம் தன் குடும்பம் உரிமை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும் இவள் யாராக இருக்கும் என மண்டையைப் பிய்த்துக் கொண்ட தமிழ், பக்கத்தில் அந்தப் பெண் இருப்பதால் வாய் வரை வந்த கேள்விகளைக் கேட்காமலேயே அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

அவனது பொறுமையை ரொம்பவும் சோதிக்காமல் அருகில் நின்றவள் யாரென்பதை அமுதவாணியே தன் மகனிடம் சொன்னார்.

"தமிழ்.. என்ன அப்புடி முழிச்சுக் கொண்டு நிக்கிறாய்.. இது ஆரென்டு தெரியல்லையோ.."

"இல்லைம்மா.. இந்தப் பிள்ளையை எனக்கு முதலே தெரியும்.."

"அது இவள் இந்த ஊர்ப் பிள்ளை என்டதால உனக்குத் தெரியும்.. அதை விடவும் ஒண்டு இருக்கு.."

"அம்மா.. ரொம்பவும் குழப்பாதேங்கோ.. ஆரென்டு சொல்லிடுங்கோ.. எனக்கு மண்டை காயுது.."

"உண்மையாவே உனக்குத் தெரியல்லையோடா.."

"இந்தப் பிள்ளையை இதுக்கு முன்னுக்கு வேற எங்கயோ பாத்தது போல ஒரு நினைவு வருதும்மா.. ஆனாலும் அது தெளிவா இல்லை.. ரொம்ப வருசங்களுக்கு முன்னால பாத்து இருக்கிறன் போலத் தோணுது.."

"உன்ரை எண்ணம் சரி தான் அப்பன்.. இது நம்ம நந்தனண்ணான்ரை மகள் வான்மதி.. அதாவது உன்னோட சின்ன வயசு தோழி பப்பி.. நிலா.. இது உன்ரை தமிழத்தான்.."
என்று அமுதவாணி சொல்லி முடிக்கவும், தன் முன்னால் நின்றிருந்தவளையே இமைக்காமல் பார்த்திருந்த தமிழ்பரிதி அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டான்.

அவனுக்கு முன்னால் நிற்பது அவனுடைய பப்பியா.. யாரைப் பார்க்க வேண்டும் யாருடன் பேச வேண்டும் என்று இத்தனை வருடங்களாகத் தவங் கிடந்தானோ அந்த பப்பியா.. பல வருடங்கள் பாராமல் பேசாமல் இருந்தாலும் அவளுடனான நினைவுகளை நேற்று நடந்தது போல இன்றும் உணர வைத்துக் கொண்டு இருக்கிறாளே அந்த பப்பி.. சந்தர்ப்பம் கிடைத்ததும் யாரைத் தேடிக் கடல் கடந்து ஓடி வந்தானோ அந்த பப்பியா..

அமுதவாணியோ திகைத்துப் போய் நின்ற தன் பெரிய மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவனை மெல்ல உலுக்கினார். அப்போது தான் சுற்றுப்புறத்தை உணர்ந்த தமிழ் ஒரு எட்டில் வான்மதியை இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் அணைத்த வேகத்தில் திகைத்துத் தடுமாறியவளுக்கு மெல்ல மெல்ல அந்தத் திகைப்பும் தடுமாற்றமும் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது.

அவளுக்கு முன்னால் நிற்பது அவளது தமிழத்தானா.. அவனைப் பார்க்கவே முடியாதோ என்று தவித்த நாட்கள் எல்லாம் மனதில் வந்து போக
கைமுஷ்டி இறுக நின்றவள், இறுக்கம் தளர, கண்கள் கலங்க அவனைத் தானும் அணைத்துக் கொண்டாள்.

அவர்கள் இருவருக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவு பற்றி கவிவாணனுக்கும் அமுதவாணிக்கும் நன்கு தெரியும். அதனால் அந்த அணைப்பு அவர்களுக்கு எந்த விகல்பத்தையும் மனதில் தோற்றுவிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமுதவாணி மகிழ்ச்சியுடன் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டார்.

சில நொடிகள் அப்படியே கரைய, அணைப்பில் இருந்து வான்மதியை மெல்ல விலக்கி அவளை மேலும் கீழுமாய் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்
"என்னடி.. அடையாளமே தெரியாமல் இப்புடி வளர்ந்து பெரிய பொண்ணாகி விட்டாய்.."
என உரிமையோடு 'டி' போட்டுக் கதைத்தான்.

"என்னடா.. நீயே இப்படி நெடு நெடுனு வளர்ந்து நிற்கும் போது அவள் வளர மாட்டாளோ.."
என்று அமுதவாணி சிரிக்க,
"இருந்தாலும்.. அடையாளம் தெரியாத அளவுக்குப் பெரிய பொண்ணாகி விட்டாளேயம்மா.."
என அதிலேயே நின்றான் தமிழ்பரிதி.

"ஏன்.. நீயும் தான் அவளுக்கு அடைளாளம் தெரியாத அளவுக்கு வளந்து பெரியவன் ஆகி விட்டாய்.."
என இடை புகுந்தார் கவிவாணன்.

"அதுவும் சரி தான்.. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே வந்து எத்தனை வருஷங்கள் பப்பி.."
என்று வான்மதியைப் பார்த்துக் கேட்ட தமிழைப் பார்த்துத் தன் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள் அவனது பப்பி.

அவனுக்கு அவள் வாயைத் திறந்து ஏதாவது பேச மாட்டாளா என்று ஏக்கமாக இருந்தது. சின்ன வயதில் அவள் ஓயாது வாயாடிக் கொண்டு இருப்பது கண் முன்னே வந்து போனது. அவனைப் பார்த்த நொடியிலேயே அவள் பேசியே கொன்றிருக்க வேண்டுமே ஏன் அமைதியாகவே நிற்கிறாள் என்று ஆதங்கமாகக் கூட இருந்தது அவனுக்கு.

"என்னடி.. சிரிச்சுக் கொண்டு நிற்கிறாயே தவிர வாயையே திறக்க மாட்டேன் என்கிறாயே.."
என்று நேரடியாகவே ஆதங்கப் பட்டவன், அவள் சற்று முன்னர் கடற்கரையில் வைத்துக் கொடுத்த அந்தக் கடதாசியையும் அதில் என்னால் பேச முடியாது என்று அவள் குறிப்பிட்டதையும் மறந்தே போனான்.

தன் மகனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட அமுதவாணி, அவனது தோளில் கை வைத்து
"தமிழ்.. நிலாவால கதைக்க முடியாதுடா.. அவளுக்குப் பேச்சு வராது.. முள்ளிவாய்க்கல் யுத்தத்தில அவள்ரை தொண்டைப் பக்கம் குண்டடி பட்டு அவளோட பேச்சுப் போயிட்டுது.."
என வான்மதி பேசாமல் நின்றதுக்கு விளக்கம் கொடுத்தார்.

தாய் சொன்னதைக் கேட்டதும் திரும்பி தன் முன்னே புன்னகை முகமாக நின்றவளைப் பார்த்தவனுக்கு, பேச்சு நின்று போனது அடுத்த கட்ட உறைநிலையை அடைந்திருந்தான் அவன்.

அவனுடைய வாயாடி பப்பியால் இனிமேல் வாயாடி வம்பிழுக்க முடியாதா.. அவளது குறும்புப் பேச்சுகளை இனிமேல் கேட்க முடியாதா.. தமிழின் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது. அந்த வலி தாங்க முடியாமல் தலையை இறுகப் பிடித்துக் கொண்டான் தமிழ்பரிதி.

"உன் பேச்சிலும் குறும்பிலும் என்னைக் கட்டிப் போட்டவளே
விரும்பியே எனைத் தொலைத்தேன் உன் தேன்மொழியில்..
இன்றோ உந்தன் தொலைந்த மொழிகளை நான் தேட
நீயோ மௌனத்தில் கீதமிசைக்கிறாய்.."
 

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 4 (2)

மதிய நேரத்துக்கே உரிய வெப்பக் காற்று முற்றத்தில் நின்றிருந்த மரங்களை மெல்ல அசைத்துச் செல்ல, மெல்லிய குளுமை ஒன்று அந்த இடத்தை மெதுவாக ஊடுருவிச் சென்றது.

ஆனால் அந்த மெல்லிய குளுமையால் கூட தமிழ்பரிதியின் தேகத்தைத் தீண்ட முடியவில்லை.
மனம் புழுங்கிக் கொண்டிருக்கும் போது வெளியே வீசும் குளுமையாலும் இதத்தைக் கொடுக்க முடியாது அல்லவா..

நெடு நேரமாகத் தலையைப் பிடித்தபடி கீழே இருந்த கட்டில் அமர்ந்திருந்த தன் பெரிய மகனின் பக்கம் குனிந்த அமுதவாணி
"தமிழ்.. என்னடா நீ.. இப்புடி இருந்திட்டாய்.. நிலாந்தை முகத்தைப் பார்.. உன்னை எப்புடிப் பாத்துக் கொண்டு நிக்கிறாள்.. அவளுக்குத் தன்னைப் பாத்து ஆரும் அனுதாபப் படுறது பிடிக்காது என்டு உனக்குத் தெரியாதோ.. அதிலயும் நீயே இப்புடிக் கவலையா இருந்தால் அவளுக்குக் கவலை கூடுமே தவிரக் குறையாதடா.."
என்று அதட்டுவது போலச் சொல்ல, அவரது அதட்டலுக்குப் பலன் இருந்தது.

ஆழமான மூச்சொன்றை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்தியபடி கண்களை மூடித் திறந்தவன் மெல்ல நிமிர்ந்து வான்மதியைப் பார்த்தான்.
அவளது விழிகளில் புதைந்திருந்த சோகம் அவனுக்கு ஆயிரங் கதைகள் சொன்னது. அந்தக் கதைகளை மிக மிகப் பொறுமையாக அவன் தான் அறிந்து கொள்ள வேண்டும்.

தன் அந் நேரத்து உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு, எழுந்து வான்மதியின் அருகில் சென்று அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். அவனது அந்த ஸ்பரிசம் அவளுக்குத் தேவைப் பட்டதோ இல்லையோ அவனுக்குத் தேவைப் பட்டது.

அவளை அணைத்தபடியே
"கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டன் பப்பி.. உன்னைக் கன வருஷம் கழிச்சுப் பாத்ததால தான் அப்புடி ஆகிட்டேன் போல.. அதை எல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக் கொள்ளாத.. வா வீட்டுக்குள்ள போவம்.. இனிமேல் எப்பவுமே நீ என் கூட தான்.. இல்லை இல்லை.. நான் உன் கூட தான் இருப்பேன்.."
என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவனின் கால்கள் தரையில் படவில்லை. அத்தனை தூரம் அவன் சந்தோஷக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தான்.

அவளால் வாய் பேச முடியாது என்ற கவலை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கிப் போய் அவளைப் பார்த்த சந்தோஷம் வேகமாக வந்து முன்னே அமர்ந்து கொண்டது.

வான்மதியுடன் வீட்டினுள்ளே நுழைந்த தமிழின் விழிகள் உள்ளே இருந்தவர்களைப் பார்த்ததும் மீண்டும் விரிந்தன. அவனுக்கு முன்னால் நின்றிருந்த இருவரையும் அடையாளங் கண்டு கொள்ள அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை.

"தேனூ.. அபீ.."
எனக் கத்தியபடி ஓடிச் சென்று இருவரையும் இறுக அணைத்துக் கொண்டவனைத் திகைத்துப் போய்ப் பார்த்தனர் தேன்மதியும் அபிராமும், தமிழ்பரிதி அடையாளமே தெரியாத அளவிற்கு நெடு நெடுவென வளர்ந்திருந்தது ஒரு பக்கம் என்றால், யாரிவன் எங்கள் பெயரை உரிமையோடு சொல்லி அழைக்கிறான் என்று அவர்கள் உணரும் முன் அவர்களைத் தமிழ்பரிதி அணைத்திருந்தது ஒரு பக்கம் என்பதால், சின்னவர்களுக்கு அவனைச் சட்டென்று புரியவில்லை.

அவர்களது நிலையைப் பார்த்த அமுதவாணியோ
"உங்களின் தமிழத்தான்.."
என்று சிரித்தபடி சொல்ல மற்ற இருவரும் அவனை வாயைப் பிளந்து பார்த்தனர்.

"என்னடா அப்புடிப் பாக்கிறியள்.."
என்று தமிழ் பதிலுக்குக் கேட்டது தான் தாமதம், இருவரும் அவனது இரண்டு பக்கத் தோள்களிலும் தொங்கியபடி அவனை அணைத்துக் கொண்டார்கள்.

தேன்மதியோ ஒரு படி மேலே போய் அவனது தோளில் முகத்தை மூடி அழவே தொடங்கி விட்டாள்.

தேனு அழுவதைப் பார்த்ததும் தமிழ் பதறிப் போய்
"தேனுக்குட்டீ.. அது தான் அத்தான் உங்களிட்டை திரும்பி வந்துட்டேனே.. பிறகு ஏன் இந்த அழுகை.."
என்று கேட்க, அவளது அழுகை கூடியதே தவிர குறைந்தபாடேயில்லை.

கவிவாணனுக்கும் தன் தேனு அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வருடக் கணக்காகத் தொடர்புகள் இன்றி இருந்தாலும் அவருக்கு என்றுமே நந்தனின் பிள்ளைகள் என்றால் உயிர் அல்லவா..

"இனிமேல் நாங்கள் உங்களை எல்லாம் விட்டு எங்கயுமே போக மாட்டம் தேனுக்குட்டீ.. இப்புடி அழாதே.. நீ அழுறதை என்னால் பாக்க முடியல்லை.."
என்று ஆதங்கத்துடன் கவிவாணன் சொல்ல,
"இத்தனை நாள் வரைக்கும் நீங்கள் அழுதது எல்லாம் போதும் தேனும்மா.. இனிமேல் எப்பவுமே சிரிக்க மட்டும் தான் செய்யோணும்.."
என்று தன் பங்குக்கு அமுதவாணியும் சொல்ல, தேனுவுக்கோ தன் விருப்பத்துக்கு உரிய உறவுகளைப் பார்த்து விட்ட சந்தோஷமும், அவர்கள் தொலைவில் பார்க்காமல் இருந்தாலும் அல்லும் பகலும் தங்களைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் கொடுத்த பூரிப்பில் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் எல்லாம் அழுகையாக வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது.
அவளால் அந்த அழுகையை நிறுத்தவே முடியவில்லை.

அவளது அழுகையை எப்படி நிப்பாட்டுவது என யோசனை செய்த தமிழுக்கு உடனே ஒரு எண்ணம் தோன்றவே மெல்லத் தேனுவின் தலையை நிமிர்த்தி
"தேனுக்குட்டீ.. இது தான் சாக்கென்டு உன்ரை மூக்கைச் சிந்தி என்ரை சட்டையில் துடைக்கிறியோ.."
என்று கேட்க, அவன் அப்படிக் கேட்ட தினுசில் பக்கென்று சிரித்து விட்டாள் தேனு.

அதன் பிறகு தேனு அழவேயில்லை. இது வரை அழுதது போதும் என்று நினைத்தாளோ தெரியவில்லை. அவளது அழுது சிவந்த விழிகள் மெல்ல மெல்லப் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டன.

"இனிமேல் உங்களை எல்லாம் விட்டு எங்கேயும் போவதாக இல்லை.. ஒரு வேளை வெளிநாடு போறது என்டாலும் உங்களை எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு தான் போகப் போறோம்.."
என்று தமிழ் சொல்ல, அவன் விளையாட்டாகத் தான் சொல்கிறான் என்று வான்மதி நினைத்துக் கொண்டாள்.

ஆனால் தமிழ்பரிதி இனி ஒரு போதும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை என்பதில் எத்தனை உறுதியாக இருக்கிறான் என்று பாவம் அவளுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை அல்லவா.

மூவருக்காகவும் அமுதவாணியும் சீதாவும் குறுகிய நேரத்துக்குள் பார்த்துப் பார்த்து வகை வகையாகச் சிற்றுண்டிகளைத் தயாரித்து இருந்தனர். அது போக ஏற்கனவே செய்து வைத்திருந்த பலகாரங்களையும் சமையலறையில் எடுத்து வைத்தனர்.

அந்தச் சிற்றுண்டி வகைகளை கவிவாணனும் தமிழ்பரிதியும் எடுத்து வந்து வெளி வரவேற்பறையில் கடை பரப்பினர்.

தங்களுக்கு முன்னால் வைக்கப் பட்ட அத்தனை வகைப் பலகாரங்களையும் விழி விரித்துப் பார்த்தான் அபிராம். அவனுக்கு எதை முதலில் எடுப்பது எதைப் பிறகு எடுப்பது என்று தெரியவில்லை.
ஏனெனில் அங்கே
கடலை வடை
உளுந்து வடை
உளுத்தம் புட்டு
கிழங்குப் பொரியல்
பால் ரொட்டி
சீனிக் கிழங்கு
உள்ளி முறுக்கு
அன்னாசிக் கேசரி
பொரித்த கடலை
பனங்காய்ப் பணியாரம்
பூந்தி லட்டு
வாழைப்பழப் பணியாரம்
பயற்றுத் துவையல்
பால் பாயாசம்
தேங்காய்ப் பூ அல்வா
அரியதரம்
கச்சான் அல்வா
என அத்தனை வகைப் பலகாரங்களும் இனிப்புகளும் முன்னே கிடந்தன.

சில நொடிகள் என்ன என்ன வகை பலகாரங்கள் இருக்கிறது எனப் பார்த்து விட்டு அதனை உள்ளே தள்ளும் வேலையை அபிராம் செய்ய, அவனைத் தொடர்ந்து தேன்மதியும் அந்தப் பணியில் இறங்கினாள்.

சின்னவர்கள் இருவரும் ஆசையாக உண்பதைப் பார்த்துக் கொண்டே இருந்த தமிழ் எதேச்சையாக வான்மதியின் பக்கம் திரும்பினான். அவளோ கீழே பார்த்தபடி கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

தன் நெற்றியைத் தேய்த்தபடி அவளைச் சில நொடிகள் பார்த்தவன்
"அப்பா.. துளசிச்சாறும் தூதுவளைச்சாறும் போட்டுத் தேத்தண்ணி ஒண்டு கொண்டு வர ஏலுமோ.."
என்று தந்தையிடம் சொல்ல, அமுதவாணன் உத்தரவு மகாராஜா என்பது போலச் சமையலறையினுள் நுழைந்தார். தமிழ் மெல்ல எழுந்து வான்மதிக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.

அவன் தன்னருகே அமர்ந்ததைக் கூட உணராமல் தன் கைவிரல்களைப் போட்டு அப்படியும் இப்படியுமாக நெரித்துக் கொண்டிருந்தவளது கையை மெல்லப் பற்றிக் கொண்டான் தமிழ். அவனது ஸ்பரிசத்தில் பதறிப் போனவள் தன்னிச்சையாகக் கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டாள். அப்போது தமிழ் அவளது அந்தச் செய்கையைப் பற்றி யோசிப்பதற்கு முன்பாக அமுதவாணன் கையில் தேநீர்க் குவளையோடு வந்தார்.

அவரிடம் இருந்து அந்த தூதுவளைச்சாறும் துளசிச்சாறும் கலந்த தேநீரை வாங்கி வான்மதியின் கையில் திணித்து
"இதைக் குடி பப்பி.."
என்று தமிழ் கொடுக்க, அவளுக்கும் அப்போதைக்கு அந்தத் தேநீர் தேவைப் படவே அதை வாங்கிப் பருகத் தொடங்கினாள்.

அவள் பருகுவதையே பார்த்திருந்தவன் பிறகு ஏதோ யோசித்தவனாக உள்ளே எழுந்து செல்ல, அதைச் சாக்காக வைத்து மெல்ல எழுந்து கொண்ட வான்மதி தேனுவிடம் ஏதோ சைகையில் சொல்ல அதற்குத் தேனு
"மாமா.. அக்கா எங்களுக்குத் தெரிஞ்ச தாத்தா பாட்டிக்கு இந்தப் பலகாரங்களில கொஞ்சத்தைக் கொண்டு போகலாமோ என்டு கேட்கிறா.."
என்று அமுதவாணனைப் பார்த்துக் கேட்க, அவரோ வேகமாக உள்ளே எழுந்து சென்று ஒரு தூக்குவாளி நிறையப் பலகாரங்களை எடுத்து வந்து வான்மதியின் கையில் கொடுத்தார்.

அவரிடமும் அமுதவாணியிடமும் தலையசைத்து விட்டு வேகமாக வெளியே கிளம்பி வந்தவளுக்கு தன் வீட்டில் இருந்த தன் அறைக்குள் நுழைந்ததும் தான் மூச்சே வந்தது.

"இனிமேல் தமிழத்தானைப் பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்து விட வேண்டும்.."
என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டவளுக்கு அந்த உறுதியைத் தன்னால் உறுதியாகச் செயற்படுத்த முடியாமல் போய் விடும் என்று அப்போது தெரியவில்லை.

ஆழ மூச்செடுத்துத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு கிணற்றடிக்குச் சென்று முகத்தை அடித்துக் கழுவிக் கொண்டு வீரன் பின் வர, பலகாரம் நிரம்பிய தூக்குவாளியுடன் எதிர்வீரசிங்கம் செல்லம்மா வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வான்மதி.

அங்கே உள்ளே எழுந்து சென்ற தமிழ்பரிதி தன் பெட்டியின் அடியில் பத்திரப் படுத்தி வைத்திருந்த நாட்குறிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வர, வெளியே அவனின் பப்பியைக் காணவில்லை.

சுற்றுமுற்றும் பார்த்தபடி சமையலறைக்குள் புகுந்தவன் அங்கேயும் அவள் இல்லாமல் போகவே
"அப்பா.. பப்பி எங்க.."
என்று தந்தையின் அருகே வந்து கேட்டான்.

"மதி.. ஆரோ அவளுக்குத் தெரிந்த தாத்தா பாட்டிக்குப் பலகாரம் குடுக்கப் போயிட்டாள்.."
என்று சொன்னவர் தேனுவின் பக்கம் திரும்பி ஊர்க்கதை பேசத் தொடங்கி விட்டார்.

தந்தை சொன்னதைக் கேட்ட தமிழுக்கோ என்னிடம் சொல்லாமல் போய் விட்டாளே என்று ஆதங்கமாக இருந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தானும் தன் தந்தையோடு இணைந்து ஊர்க்கதை பேசத் தொடங்கினான்.

இன்று மட்டும் இல்லை இனி வரும் நாட்களில் கூட அவள் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் தான் ஓடி ஒளியப் போகிறாள் என்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. அது தெரிய வரும் போது தான் தமிழ்பரிதி பற்றி வான்மதி முழுதாகப் புரிந்து கொள்வாள்.

"வானத்து மதியே மேகத்துள் ஒளிவதேனோ
வார்த்தைகள் தான் வீசாது போனாய் பார்வையாவது வீசாயோ
வாசம் கொண்ட மலர் உனைத் தேடி வண்டாய் நான் வர
வாசம் துரந்து வாடி வதங்கிப் போனதேனோ.."
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வாவ்🤩 ரொம்ப அருமையா அவங்களோட உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க👌❤️

ஏன் திடீர்னு வான்மதி ஓடி ஒளியிறா? 🤔

அப்படி ஒளிய தமிழ் விட்டுடுவானோ? 🤔🧐
 
  • Like
Reactions: MK5

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
வாவ்🤩 ரொம்ப அருமையா அவங்களோட உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க👌❤️

ஏன் திடீர்னு வான்மதி ஓடி ஒளியிறா? 🤔

அப்படி ஒளிய தமிழ் விட்டுடுவானோ? 🤔🧐
நன்றி அக்கா