• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 6

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 6 (1)

யாழ் கோட்டைப் பகுதியின் பின்புறமாக அமைந்துள்ள பண்ணைக் கடற்கரையில், ஜனநடமாட்டம் ஜே ஜே என்று இல்லாமல் போனாலும் ஓரளவுக்கு ஆஹா ஓஹோ என்றே இருந்தது.

பண்ணைக் கடலோரமாக செங்கற்களைப் பதித்துப் போடப் பட்ட நடைபாதையிலும், அதோடு ஒட்டிப் பக்கத்தில் போடப் பட்ட கல் இருக்கைகளிலும், நீள் வரிசையாக இடம் விட்டு நாட்டப் பட்டிருந்த மரங்களின் கீழும் இருந்த மக்கள் கடலையும் அதோடு சேர்த்துப் போவோரையும் வருவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடலை ஊடறுத்துப் போவது போல குறிக்கட்டுவானுக்கு செல்லும் தார்ச்சாலை அமைந்திருக்க, சிவப்பு நிறப் பெரிய அரச பேருந்துகளும் மஞ்சள் நிறப் பார ஊர்திகளும் அந்தச் சாலையில் போவதும் வருவதுமாக இருந்தன.

அந்த நேரத்தில் தமிழும், இசையும் தங்கள் நண்பர்கள் கூட்டத்தோடு பண்ணைக் கடற்கரையில் வந்திறங்கினர். அவர்களை வரவேற்பது போல கடற்கரைக் காற்று வேகமாக வீச, அதற்குத் தோதாக மரங்களும் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

தமிழோடும் இசையோடும் வந்த எட்டு நண்பர்களும், இவர்கள் கிளிநொச்சியில் இருக்கும் போது பாடசாலை நண்பர்களாக இருந்தவர்கள். தமிழுக்கும் இசைக்கும் ஒவ்வொரு வயது தான் வித்தியாசம் என்பதால், சேரும் நண்பர்கள் அனைவருமே இருவருக்குமே நண்பர்களாகி விடுவார்கள்.

இசையும், தமிழும் இடையில் வெளிநாடு சென்ற பின்னர் கூட, அவர்களின் நண்பர்கள் சமூகவலைத்தளத்தின் ஊடாக மீண்டும் தொடர்பினை ஏற்படுத்தி இதோ இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். அதனால் தான் தமிழும் இசையும் இலங்கை வந்ததுமே தங்கள் நண்பர்கள் அனைவரையுமே நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தனர். அதன்படி இன்று அனைவருமே ஒன்றாகக் கூடி, பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்த சந்தோஷத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் தான் தமிழுக்குத் திடீரென ஒரு நினைவு வந்தது.

கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால், அவனும் வான்மதியும் கவிவாணனும் இங்கே இந்தப் பண்ணைக் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.

அப்போது தள்ளு வண்டியில் மணி அடித்தபடி முறுக்கு, சுண்டல், மாங்காய், பஞ்சுமிட்டாசி, குச்சிமிட்டாசி போன்ற சிற்றுண்டிகளைத் தள்ளிக் கொண்டு தள்ளு வண்டிக்காரர்கள் வருகை தருவார்கள்.

இப்போதும் ஆங்காங்கே தள்ளு வண்டிகள் நின்றிருந்த போதும் அன்றைக்கு இருந்த பரபரப்பும் சுவாரஷ்யமும் இப்போது அவனிடம் அவ்வளவாக இருக்கவில்லை.

தமிழுக்கு அப்போது இங்கே வந்த நேரம் வயது பதினெட்டு, வான்மதிக்கு வயது பதினாறு, இருவரும் வளர்ந்த குழந்தைகள் என்றாலும் சுண்டலையும் முறுக்கையும் சண்டை போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள்.

அவ் வேளை ஒரு வித்தியாசமான தள்ளுவண்டி வரவே அந்த வண்டிலை ஆர்வமாக எட்டிப் பார்த்தாள் வான்மதி.

ஒரு அளவில் பெரிதான கண்ணாடிப் போத்தல்கள் வண்ண வண்ண நிறத்தில் அந்தத் தள்ளுவண்டியினுள் கிடந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்ததும் அதன் மீது ஆசை கொண்டு, சுண்டல் சுருளை அப்படியே தமிழின் மடியில் போட்டு விட்டுத் தள்ளுவண்டிலை நோக்கி ஓடினாள் அவள்.

அவள் செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்பரிதி
"பப்பீ.. எங்க ஓடுறாய்.. ஒரு இடமா இருக்க மாட்டியோ நீ.."
என்றபடி அவள் பின்னாலேயே ஓடினான்.

கவிவாணன் சற்றுத் தள்ளி நின்று தனது யாழ் நண்பர் ஒருவரோடு நாட்டு நடப்புகளை அளவளாவிக் கொண்டிருந்தாலும் பிள்ளைகள் மீது ஒரு கண்ணை வைத்தேயிருந்தார்.

தள்ளுவண்டிலின் முன்னால் நின்று அதைச் சுற்றிச் சுற்றிப் பார்த்த வான்மதி வண்டிக்காரனை அண்ணாந்து பார்த்து
"அண்ணா.. இது என்ன.. இது என்ன விலை.. எனக்கும் தருவியளோ.. இது நல்ல வடிவா இருக்குதே.. இதை வைச்சு என்ன செய்றது.. சூரிய வெளிச்சம் பட்ட உடன சும்மா மினுங்குகுது.. ராவிலயும் மினுங்குமோ.."
என அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க அவளுக்கு மூச்சு வாங்கியதோ இல்லையோ தமிழுக்கு மூச்சு வாங்கியது.




"இரு.. இரு.. ஒவ்வொரு கேள்வியாக் கேளு பப்பீ.. அவசரப் படாதே.. அவரும் பாவம் தானே.. இத்தினை கேள்வியளுக்கு எப்புடி ஒரேயடியாப் பதில் சொல்லுறது.."
என்று சொல்லியபடி
"அண்ணா.. இதென்ன.."
எனக் கேட்டான் தமிழ்பரிதி.

"இது அதிஷ்ட அலங்காரப் போத்தல் தம்பி.. இந்தா இங்க இருக்கிற ஓலையில ஜோடியாப் பேருகளை எழுதி இந்தப் போத்திலுக்குள்ள போடோணும்.. அதை நாங்கள் மரத்தில செய்த தக்கை மாதிரி வைச்சு இறுக்கமா மூடிக் கயிற்றால கட்டி.. அந்தா தெரியுதே அந்தப் பகுதியில இருக்குற பெரிய படகில கம்பிகளோட பிணைச்சுக் கடல் நீரில் விடோணும்..
அதுக்கு முதல்ல கண்ணை மூடிக் கொண்டு சோடியா நீங்களே ஒரு வர்ணப் போத்திலை எடுக்கோணும்.. போத்தலின்ரை வர்ணத்தைப் பொறுத்து இருக்கும் பெயர் எழுதிப் போடப் போறவங்களின்ரை உறவு முறை.."
என்று நீண்டதொரு விளக்கம் கொடுத்தார் அந்தத் தள்ளு வண்டிக்காரர்.

வர்ணத்தைப் பொறுத்தே பெயர் எழுதிப் போடுகின்ற நபர்களின் உறவுமுறை இருக்கும் என்று வண்டிக்காரன் சொன்னதை வான்மதி சரியாகக் கவனிக்கவில்லை.
அவளது பார்வை முழுவதும் அந்த வர்ணப் போத்தல்களிலும், பக்கத்தில் கிடந்த ஓலைகளிலுமே பதிந்திருந்தது.

"அண்ணா.. ஒவ்வொரு வர்ணத்திற்கும் என்ன அர்த்தம் என்று சொல்லுங்களேன்.."
என்று அடங்காத ஆர்வத்தோடு கேட்டான் தமிழ்.

"பச்சை நிறம் காதல் திருமணம் தம்பி.. மஞ்சள் நல்ல நட்பு.. சிகப்பு வண்ணம் எதிரிகள்.. ஊதா வர்ணம் சகோதரர்.. நீல நிறம் பிரிவு தம்பி.."
எனப் பதில் சொன்ன வண்டிக்காரர் வண்டியின் கண்ணாடியை திறந்து சில வர்ணப் போத்தல்களை எடுத்து வெளியே வைத்தார்.

தமிழின் வலது கையை இறுகப் பற்றிக் கொண்டு, அவனையும் கண்களை மூட வைத்து, தானும் கண்களை மூடிக் கொண்டு ஒரு போத்தலை எடுத்தாள்.

இருவரும் கண்களை மூடிக் கொண்டு போத்தல்களை எடுக்க முயன்ற வேளை இருவரின் கரங்களும் நீல நிறப் போத்தலின் மீது விழவே, அவர்கள் அறியாமல் அவர்களது கைகளுக்குள் பச்சைப் போத்தலைத் தள்ளி விட்டார் வண்டிக்காரர்.

இதனை எதேச்சையாகக் கண்களைத் திறந்த தமிழ் பார்த்து விட்டான்.

அப்போது அவன் அதனை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போதோ அந்த நீல நிறப் போத்தலைத் தொட்டதால் தான் தானும் தன் பப்பியும் பிரிந்தோமா என யோசிக்கத் தொடங்கி இருந்தான்.

அதன் பின்னர் அந்தப் பச்சை வண்ணப் போத்தலினுள் தமிழ், பப்பி என்று எழுதிய ஓலையைப் போட்டு அதைக் காற்றுப் புகாதபடி இறுக மூடி, கயிற்றால் கட்டிக் கடல் தண்ணீருக்குள் போட்டனர்.

அந்த நாளுக்குப் பின்னர் இதோ இப்போது தான் அவன் அந்தப் பண்ணைக் கடற்கரைக்கு வந்திருக்கிறான். இடையில் பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி இருப்பதை இப்போது தான் அவனே கணக்குப் பார்த்துச் சரி பார்த்துக் கொண்டான்.

பக்கத்தில் நின்றிருந்த இசையும் நண்பர்களும் ஏதேதோ கதைகளைப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, தமிழ்பரிதியின் பார்வை மட்டும் அந்தப் படகையே தேடியது.
தமிழை அதிகம் ஏமாற்றாமல் சில நொடிகளிலேயே அவன் பார்வைக்கு, அந்தப் படகு தட்டுப் படவே இசையிடம் சொல்லி விட்டு, அந்தப் படகு நின்றிருந்த திசையை நோக்கி ஓடினான்.

பல வருடங்களுக்கு முன்னால் அமைக்கப் பட்டிருந்த அந்தப் படகின் படிகள் இப்போது தண்ணீருக்குள் மூழ்கி, உடல் முழுவதும் பாசியை அப்பிக் கொண்டு கிடந்தது.
கால்கள் வழுக்காமல் மெல்ல அதிலேறி அமர்ந்து கொண்டு, கடல் நீரினுள் கிடந்த கயிறுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துப் பார்த்தான் தமிழ்.

கயிறுகள் முழுவதும் கூடப் பாசியேறிக் கிடந்தது. அவன் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் கயிறுகளை நிதானமாக இழுத்து இழுத்துப் பார்த்தான்.
அவனை அதிகமாகச் சோதிக்காமல், ஒன்பதாவது தரத்திலேயே அவனது கைகளில் அந்தப் பச்சை வர்ணப் போத்தல் கிடைத்து விட்டது.

போத்தல் பாசியேறிக் கிடந்தாலும் கூட உள்ளே இருந்த ஓலை லேசாகத் தெரிந்தது. அதைக் கடல் நீரில் நன்கு கழுவி விட்டுப் பார்க்க, இப்போது உள்ளே எழுதப் பட்டிருந்த பெயர் தெளிவாகத் தெரிந்தது.

போத்தலினுள் கிடந்த ஓலைகளை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டு எழுந்தவனுக்கு ஏதோ மனதில் பாரம் கொஞ்சம் குறைவது போல இருந்தது.

அதை உடனேயே தன் பப்பிக்குக் காட்ட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.

நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த இசைக்குக் கவனம் முழுக்க தமையன் மீதே இருந்தது. ஒரு வழியாக எல்லோருடனும் சிரித்துப் பேசி அவர்களை வழியனுப்பி விட்டுத் தமையனைத் தேடி வந்தான் அவன்.

"அண்ணா.. என்ன விஷயம்.. என்ன புதையல் எடுத்தனீங்கள்.. முகமெல்லாம் விளக்குப் போட்டது போல வெளிச்சமாக் கிடக்குதே.."
எனச் சிரித்தபடி கேட்ட தம்பியின் தோளில் கை போட்டபடி
"அதெல்லாம் ஒண்டுமில்லை.. வா.. சுண்டல் வாங்கிச் சாப்பிடுவம்.."
என்று சொல்லிக் கொண்டு சுண்டல் வண்டி நோக்கி நடக்கத் தொடங்கினான் தமிழ்பரிதி.

"சரி சரி.. சொல்ல விருப்பம் இல்லாட்டிக்கு விடுங்கோ.. சுண்டல் மட்டும் போதாது முறுக்கும் வாங்கிக் குடுங்கோ.."
என்று இசை பதில் பேசிக் கொண்டே தமையனோடு இணைந்து நடக்க, பதில் பேசாமல் புன்னகை ஒன்றை மட்டும் பரிசாக்கினான் அவன் அண்ணன்.

அவன் எண்ணம் எல்லாம் அந்தப் பெயர் எழுதிய ஓலையை வான்மதியிடம் காட்ட வேண்டும் என்பதிலும், இனிவரும் சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கூட அவளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலுமே இருந்தது.

"தொலைத்த சந்தோஷங்களும் தொலைந்த சந்தோஷங்களும் போனாலும் போகட்டும்..
இனி வரப் போகும் சந்தோஷங்களையேனும்
உன்னுடன் பகிர நான் காத்திருக்கிறேன் தோழி.."
 
  • Love
Reactions: Kameswari

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 6 (2)

முற்றத்தில் நின்றிருந்த கறுத்தக் கொழும்பான் மாமரத்தில், காய்த்திருந்த எண்ணுக்கணக்கற்ற மாம்பிஞ்சுகளை அணில்களும், கிளிகளும் போட்டி போட்டுக் கொண்டு கொறித்தும் கொத்தியும் கொண்டிருந்தன.

மாம்பிஞ்சுகள் காய்களாக மாறி கனியாகும் வரை அவைக்கும் பொறுமை இல்லை போலும்.

அணில்களினதும் கிளிகளினதும் சின்னச் சின்னச் செயல்களைக் கூட உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மதி, வான்மதி அடுக்களையில் தினைக்கொழுக்கட்டை செய்து கொண்டிருந்தாள்.

மதியின் கைகள் கொழுக்கட்டையைச் செய்வதில் மும்முரமாக இருந்தாலும், மனமோ வேறெங்கோ பயணிப்பதில் மும்முரமாக இருந்தது.

அதே நேரம் முகமெல்லாம் சந்தோஷம் அப்பிக் கிடக்க, கையில் ஒரு கிளிக் கூண்டுடன் வீட்டினுள் பறந்தோடி வந்தான் அபிராம்.

அதுவரை அமைதியே உருவாக இருந்த தேன்மதியை அபிராமின் சந்தோஷம் தொற்றிக் கொள்ளவே
"தம்பி.. என்ன இது கிளிக்குஞ்சோடா.."
என்று கேட்டுக் கொண்டே அபியின் கைகளில் இருந்த கிளிக் கூண்டை மெல்ல வாங்கிக் கொண்டாள்.

ஆமாம் என்பது போலத் தலையை அசைத்தபடி
"இதை அந்த மரத்தில தொங்க விடலாமோ சின்னக்கா.. உள்ள இருக்குற ரெண்டுமே சின்னக் குஞ்சுகள் தானக்கா.. இசையண்ணா தான் வாங்கிக் குடுத்தவர்.."
எனச் சொன்ன தம்பியை முறைத்தவள்
"இதை நீயே வைச்சுக் கொள்ளு.."
என அவனது கைகளிலே கிளிக் கூண்டை வைத்து விட்டு, உள்ளே போய் விட்டாள்.

அபிராமோ கிளிக்குஞ்சுளைக் கொண்டு வந்த சந்தோஷத்தில் சிறிய தமக்கையின் முகத்தைப் பார்க்கவில்லை. தன் கைகளில் இருந்த கிளிக்கூண்டை எங்கே மாட்டி அழகு பார்ப்பது என்பதையே யோசித்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் வேக வேகமாக தமிழ்பரிதி உள்ளே வந்து
"அபி.. பப்பி எங்க.. உள்ளே நிற்கிறாளோ.."
என்று கேட்டுக் கொண்டே அதற்கு அபிராம் பதில் சொல்வதற்கு முன்பாகவே சமையலறையினுள் புகுந்து கொண்டான்.

சமையற்கட்டில் வான்மதி தினைக்கொழுக்கட்டை முடிந்ததும் இனிப்புக்கு வாழைப்பழப் பணியாரமும், காரத்திற்கு உள்ளி முறுக்கும் செய்து கொண்டிருந்தாள்.

அவளது வேலையை இடையூறு செய்யாதபடி பக்கத்தில் இருந்த சமையற்கட்டில் ஏறி வாகாக அமர்ந்து கொண்டு, அவள் செய்வதனை வேடிக்கை பார்த்தபடி ஒவ்வொரு முறுக்காக எடுத்துக் கொறிக்கத் தொடங்கினான் தமிழ்.

எதேச்சையாகப் பின்புறம் திரும்பியவள் திடுக்கிட்டுப் போய் கையில் வைத்திருந்த பாத்திரத்தை அப்படியே போட்டு விட்டு அவனையே பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்று விட்டாள்.

அவள் திகைத்து நின்ற தோற்றத்தில் தமிழுக்குச் சிரிப்புத் தான் வந்ததது.

"என்ன பப்பி.. ஏன் உப்புடி முழிச்சுக் கொண்டு நிக்கிறாய்.. நீ சுட்ட முறுக்குக்கு என்டே ஒரு தனி ருசி இருக்குது தெரியுமோ.. எங்க நீ சுட்ட பணியாரத்தில ஒண்டைக் குடு அது எப்புடி என்டு பாப்பம்.."
என்று எட்டிப் பணியாரத்தை எடுத்து அவன் ருசி பார்த்தபடி
"சும்மா சொல்லக் கூடாது பப்பி.. உன்ரை கைகளில என்னவோ ஒரு வித்தை இருக்குது.. நீ என்ன சமைச்சாலும் அதுக்கு என்டே ஒரு தனி ருசி இருக்குதே அது எப்புடி.."
எனச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.

வான்மதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, எப்படி தமிழை அடிக்கடி சந்திப்பதனைத் தவிர்க்கலாம் என்பதனையே தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவ்விதம் அவனைத் தவிர்ப்பதைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கி இருந்தவளுக்கு, எதிர்பாராத விதமான அவனது வரவு சற்றுத் திக்குமுக்காடவே வைத்தது.

ஒரு விதமாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் அவனுக்கு மெல்லிய புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

சில நொடிகள் அவளது செயல்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனோ அவளைத் தன் பக்கமாக மெல்ல இழுத்துச் சமையற் கட்டில் அமர வைத்தான்.

என்னவென்பது போல மீண்டும் திகைத்தவள் அப்படியே அவனருகே அமர்ந்து கொண்டாள்.

"பப்பி.. உன்னட்டை ஒரு விசயம் சொல்லோணும் என்டு தான் இத்தினை வேகமா ஓடி வந்தனான் தெரியுமோ.."
என்றவன் தன் சட்டைப் பையினுள் அதுவரை பத்திரப் படுத்தி வைத்திருந்த ஓலைகளை எடுத்து அவளுக்குக் காட்டினான்.

அவன் காட்டிய ஓலைகளை பார்த்ததும் புருவம் சுருக்கி யோசித்தவளது விழிகள் சட்டெனப் பிரகாசமானது.

அதைக் கண்டு கொண்டவனோ
"என்ன.. இது உனக்கு ஞாபகம் வந்துட்டுதோ.. கிட்டத்தட்ட பத்துப் பதினொரு வருசங்ளுக்கு முன்னாலே எழுதிப் போட்டது.. பன்ரெண்டு வருஷமாச்சது எண்டு நினைக்கிறன்.. திரும்பவும் பண்ணைக்கடலுக்குப் போய் இதைத் தேடி எடுத்துக் கொண்டு உன்னட்டைத் தான் ஓடியந்தனான் தெரியுமோ.. நானும் நீயும் நாளைக்குப் பண்ணைக்கடலுக்குப் போவம் சரியோ.."
என்று பேசிக் கொண்டே போனான்.

அவளுக்குத் தான் அவனுடன் நாளை வெளியே செல்வதை எப்படித் தவிர்ப்பது என்று யோசனையாகவே இருந்தது.

யோசனையுடனேயே மறுப்பது போலத் தலையசைக்கப் போனவளது தலையை இறுகப் பற்றிக் கொண்டு
"நீ ஒண்டும் மாட்டன் எண்டு தலையை ஆட்ட வேண்டாம் சரியோ.. அது சரி வந்ததில இருந்து அத்தையும் மாமாவும் எங்க காணவேயில்லை.. மற்றச் சின்ன வாண்டுகள் ரெண்டும் எங்க.. அபியும் தேனுவும் நீயும் மட்டும் தானோ இப்ப நிக்கிறியள்.. மற்றவையள் ஊருக்கு ஏதும் போயிட்டினமோ என்ன.."
என்று கேட்டுக் கொண்டே போக, வான்மதியின் கண்கள் எவ்வளவு கட்டுப் படுத்தியும் முடியாமல் நீரைச் சிதற விடத் தொடங்கின.

அவளது விழிநீரை அவன் உணர முதல் தேனுவும் இசையும் தங்கள் தங்கள் உடன் பிறந்தவர்களைத் தேடிக் கொண்டு அங்கே சமையலறையினுள் ஒன்றாக நுழைந்தார்கள்.

அவர்கள் இருவரும் இரண்டு பக்கத்திலும் இருந்து வந்ததால் ஒருவரோடு ஒருவர் மோதி விடவே, தேனுவின் வலது பக்கத்துக் கால் வழமை போல வலியைத் தத்தெடுத்துக் கொள்ள, அவளது முகம் எரிச்சலைத் தத்தெடுத்துக் கொண்டது.

"எருமை மாதிரி எப்ப பாரு மேலயே வந்து இடிக்கிறியளே.. கண்ணை என்ன உச்சியிலயோ வைச்சு இருக்கிறியள்.."
எனக் காலின் வலி தாங்க முடியாமல் தேனு சொல்லி விட
"யாருடி எருமை.. நீ தான் எருமை.. உனக்கு மட்டும் கண் எங்க இருக்காம்.. நீயும் பிடரியில தானே கண்ணை வைச்சிருக்கிறாய்.."
எனத் தானும் பதிலடி கொடுத்தான் இசை.

அவன் 'டி' போட்டதும் பொங்கியெழுந்தவள்
"இஞ்ச பாருங்கோ.. இந்த 'டி' போட்டு மரியாதை இல்லாமல் கதைக்கிற வேலையெல்லாம் என்னட்டை வைச்சுக் கொள்ள வேண்டாம்.. அவ்வளவு தான் சொல்லி சொல்லீட்டன்.."
என்று சொல்லிக் கொண்டே இசையை முறைத்தாள்.

"எது 'டி' போட்டு பேசுறனா.. அது சரி எருமை எண்டு சொன்னால் அது மட்டும் நல்ல மரியாதையோ.. நல்லா இருக்குதே இந்தக் கதை.. முதல்ல எருமை எண்டு மரியாதை இல்லாமல் கதைச்சது நீ தான் சரியோ.."
என்று தானும் பதில் சொன்னவன் தேனுவை முறைத்து விட்டு, வேகமாக உள்ளே சென்றான்.

"ரெண்டு பேரும் உங்கள்ரை குடுமிப் பிடிச் சண்டையைப் பிறகு ஆறுதலா வைச்சுக் கொள்ளுங்கோ.. இப்ப நான் கேட்ட கேள்விக்குத் தேனுவைப் பதில் சொல்ல விடு இசை.."
என இடையில் புகுந்து இசையையும் தேனுவையும் திசை திருப்பினான் தமிழ்.

உடனே அவர்களும் தங்கள் அப்போதைய சண்டையை மூட்டை கட்டி வைத்து விட்டு
"என்ன கேள்வி அண்ணா கேட்டனியள்.."
என்று இசையும்
"என்ன கேள்வி தமிழத்தான் கேட்டனியள்.."
என்று தேனுவும் ஒன்றாய்க் கேட்க,
"அத்தையும்.. மாமாவும்.. தனுவும் சாருவும் எங்க எண்டு கேட்டனான்..
நான் வந்ததில இருந்து அவையளைப் பாக்கவேயில்லையே.. ஒரு வேளை கிளிநொச்சிக்குப் போயிட்டினமோ எண்டும் கேக்க வந்தனான்.."
என்று சொல்லிக் கொண்டே பதிலுக்காகத் தேனுவைப் பார்த்தான்.

அவளோ தமக்கையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளையும் வான்மதியையும் ஒரு தடவை திரும்பிப் பார்த்த தமிழ்
"என்ன தேனு.. உன்னைத் தானே கேக்கிறன்.. அவையள் எப்ப வருவினம்.."
என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்.

ஒரு வேளை தான் கேட்டது சின்னவளுக்குச் சரியாகக் கேட்கவில்லையோ என்ற எண்ணத்தில் தான் அவன் சத்தமாகக் கேட்டது.

தமக்கையில் இருந்து பார்வையைத் திருப்பிய தேனு தன் முன்னால் நின்ற தமிழைப் பார்த்தபடி
"இருந்தால் தானே.. தமிழத்தான் வாரதுக்கு.."
என்று சொன்னாள்.

அவள் சொன்ன வார்த்தையை உள் வாங்கியவனுக்கு மனதினுள் திக்கென்றானது. இருந்தாலும் தன் காதுகளில் விழுந்த வார்த்தைகள் பற்றிய தெளிவு அவனுக்கு வேண்டியதாகவிருந்தது அதனால்
"நீ சொல்றது புரியல்லை தேனும்மா.."
என மீண்டும் கேட்டான்.

"எங்கள் மூண்டு பேரையும் தவிர வேற ஆருமே இப்ப உயிரோட இல்லை தமிழத்தான்.. எங்கடை குடும்பத்தில மிஞ்சி நிக்கிறது நாங்கள் மட்டும் தான்.."
எனத் தேனுவும் எந்தச் சுற்றிவளைப்புகளும் இல்லாமல் விடயத்தைப் போட்டுடைத்தாள்.

பேசியபடி எழுந்து நின்றிருந்த தமிழ் அவள் சொன்ன செய்தியைக் கேட்டதுமே வெட்டுண்ட மரம் போலச் சட்டென்று கீழே சாய்ந்தான். வாசலருகே நின்றிருந்த இசை வேகமாக ஓடி வந்து தமையனைத் தாங்கிக் கொண்டான்.

இசையாலும் தேனு சொன்ன செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. அவனுக்கும் தலையைச் சுற்றிக் கொண்டு ஒரு விதமாக மயக்கம் வருவது போலத் தான் இருந்தது. ஆனாலும் தனக்கு முன்னால் நின்றிருந்த தமையன் கீழே விழப் போகவே அவன் மற்றவற்றை ஒதுக்கி அண்ணனிடம் ஓடிச் சென்றான்.

கீழே நிலத்தில் சரிந்து அமர்ந்த தமிழைச் சுவரோடு சாய்வாக இருக்க வைத்து விட்டு இசை நிமிரவும், அவனுக்குச் செம்பில் இருந்த தண்ணீரை எடுத்து நீட்டினாள் வான்மதி.

அதை விலக்கியவனோ தன்னருகே நின்றிருந்த இரு பெண்களையும் இழுத்துத் தன்னருகே அமர்த்திக் கொண்டு
"எப்புடிடி.. இதையெல்லாம் தாங்கிக் கொண்டீங்கள்.. உங்களுக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில நாங்கள் பக்கத்தில இல்லாமல் போயிட்டமே.."
என்று குரல் தழுதழுக்கச் சொன்னவனது விழிகள் கலங்கிப் போய் இருந்தது.

அவனது முகம் அவன் அழுகையை அடக்கப் பெரும்பாடு படுகிறான் என்பதை இசைக்கு அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.

தமிழோ தேனுவின் கையை இறுகப் பற்றிக் கொண்டு
"என்னதான்டி நடந்தது.."
என்று கலங்கிய விழிகளோடு தமிழ் கேட்க, தமக்கையை மீண்டும் பார்த்து சொல்லவா அக்கா எனக் கண்களால் அனுமதி கேட்டவள், தமக்கையின் சொல் என்ற தலையசைப்பில் தங்களுக்கு நடந்த கொடுமையைச் சொல்லத் தொடங்கினாள்.

தேனுவின் குரல் தவிர அந்த இடத்தை நிசப்தம் மட்டுமே ஆட்சி செய்யத் தொடங்கியது.

"வருடங்கள் பல கடந்திடினும்
மறக்க நினைக்கும் விடயங்கள் மீண்டும் என்றோ ஒரு நாள் உயிர்த்தெழத் தான் செய்யும்..
அதன் வடுக்கள் என்றும்
தங்கள் தடங்களை மாய்த்துக் கொள்வதில்லை என்பது தான் யதார்த்தம்.."
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
காலங்கள் கடந்தாலும் மறக்க இயலா நிகழ்வுகள்🤧
 
  • Like
Reactions: MK5