• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 7

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 7 (1)

சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் ஒரு ஓட்டு வீடு.

கதிரவன் தன் சேவை முடிந்தது என்பது போல, மேற்கு வானில் மெல்லென இறங்கிக் கொண்டிருந்த பொழுதில், தன் வீட்டு முற்றத்து மாமரத்துக்கு கீழே அமர்ந்திருந்து வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நாட்டு நடப்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் நந்தன்.

அவரைத் தேடிக் கொண்டு வேகமாக வந்தார் கவிவாணன்.

"என்னடாப்பா என்ன விஷயம்.. முகமெல்லாம் ஏன் ஒரு மாதிரிக் கிடக்குது.."

"நான் குடும்பத்தோட வெளிநாட்டுக்கு போக வேண்டிய கட்டாயம் நந்து.. எனக்கு என்ன செய்றது எண்டே தெரியேல்லை.."

"ஏன்டா.. ஏதும் பிரச்சனையோ.."

"ஓம் நந்து.."

"என்னெண்டு சொல்லன்.. அப்ப தானே என்ன செய்யலாம் எண்டு யோசிக்கலாம்.."

"இல்லை நந்து இனி யோசிக்க ஒண்டுமே இல்லை.. நான் போய்த் தான் ஆகோணும்.. அது தான் நாளைக்கே பாஸ்போர்ட் விஷா செய்ற வேலையள் எல்லாம் பாக்கோணும்.. ஒருக்கா கொழும்புக்கு போட்டு வருவம் வாறியோ.."

"என்னடா நீ.. வா எண்டு சொன்னால் வரப் போறன் அதை விட்டிட்டு வாறியோ எண்டு கொண்டு நிக்கிறாய்.. அதெல்லாம் சரி ஏதும் பெரிய பிரச்சினையோ.."

"எனக்கென்னவோ வெகு சீக்கிரத்தில சண்டை வெடிக்கும் எண்டு தோணுது.. அதோட நான் இங்கினை இருக்க ஏலாது.. நான் தனி ஆள் எண்டாலும் பரவாயில்லை பெஞ்சாதி பிள்ளையெண்டு எனக்குப் பின்னால என்னை நம்பி என்ரை குடும்பம் இருக்குது அது தான் யோசிக்கிறன்.."

"என்னடா பெரிய பிரச்சினை ஏதுமோ.."
எனத் தன் விழி பார்த்து கேட்ட நண்பன் நந்தனிடம் அவரால் மௌனம் சாதிக்க முடியவில்லை, நந்தனின் காதோரம் அப்போதைய தனது நிலையை அவர் அப்படியே இரகசியமாகச் சொல்ல, நண்பன் முகம் பார்த்த நந்தனோ சில நிமிடங்கள் அப்படியே அமைதியாகி விட்டார். உரத்துப் பேசுவது கூட உள்ளூற பதட்டத்தையும் பயத்தையும் மெல்ல மெல்லக் கொடுத்த காலமது.

அந்த இடமே மயான அமைதியைத் தத்தெடுத்துக் கொள்ள அந்த மௌனத்தை கவிவாணன் தான் உடைத்தார்.

"என்ன நந்து என்ன கனக்க யோசிக்கிறாய்.."

"இனி யோசிக்க ஒண்டும் இல்லை.. நீ வெளுக்கிடுற வழியைப் பார்.. இங்க இருந்து எப்ப என்ன நடக்கும் எண்டு செத்துப் பிழைச்சுக் கொண்டு இருக்கிறதை விட.. நீ வெளிநாடு போறது தான் சரி.. வெளுக்கிடு நாளைக்கே ஆக வேண்டியதைப் பாப்பம்.."

"என்ன வாழ்க்கையடா இது.."

"அப்புடிச் சொல்லாதடா கவி.. எல்லாம் ஒரு நாள் மாறும் எண்டு நம்புவம்.."

"நம்பி நம்பியே வாழ்க்கை போயிடும் மாதிரிக் கிடக்குது.. யாழ்ப்பாணத்தில இருந்து இங்க வந்ததே அங்க ஏதும் யுத்தம் தொடங்கீடுமோ எண்டுற பதட்டத்துல தானே.. வந்து முழுசா ரெண்டு வருஷம் கூட முடியேல்லை இங்கினை யுத்தம் எண்டுற அளவில வந்து நிக்குது என்னத்தைச் சொல்ல.."

"சரி சரி விடு.. எல்லாத்தையும் பாத்துக் கொள்ளுவம்.. தங்கச்சி என்ன சொல்லுது.."

"அது பெரிய கருமமடா.. வெளிநாடு போக வேண்டி வந்திட்டு எண்டு சொன்ன நேரம் தொட்டு அழுது கொண்டே கிடக்கிறாள்.. அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டிக் கொண்டு போறதை நினைச்சாத் தான் எனக்கு மலைப்பாக் கிடக்குது.."
என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே, கையில் இரண்டு குவளைப் பால் தேநீருடன் வந்து சேர்ந்தார் நந்தனின் மனைவி ஞானகி.

"என்ன ரெண்டு பேரும் எந்தக் கோட்டையைப் புடிக்க ரகசியம் கதைச்சுக் கொண்டு இருக்கிறியள்.. இந்தாங்கோ இந்தப் பால்த்தேத்தண்ணியைக் குடிச்சுப் போட்டு தெம்பாக் கதையுங்கோ.. நான் அமுதாட்டைப் போட்டு வாறன்.. ஆள் என்னை அவசரமா வரச் சொன்னது.. ஆள் வீட்டை தானே அண்ணா நிக்குது.."
என்று கொண்டே வந்து, தேநீரை இருவரிடமும் கொடுத்து விட்டு அப்படியே பக்கத்து வீட்டுக்குப் போய் விட்டார் ஞானகி.

"தோழிமார் ரெண்டு பேரும் ஒப்பாரி வைச்சிட்டு வர இனி விடிஞ்சிடும் எண்டு நினைக்கிறன் கவி.."

"கதைச்சிட்டு வரட்டுக்கும்.. அமுதா என்னோட ஒழுங்காவே கதைக்கிறாள் இல்லை.. தங்கச்சீட்டை எண்டாலும் கதைச்சுக் கொள்ளட்டுக்கும்.. நானும் என்ன செய்றது.."

"சரி சரி.. நீ நிறைய யோசிக்காத தமிழும் இசையும் என்ன சொல்லுறாங்கள்.."

"சின்னவன் இசைக்கு வெளிநாட்டுக்கு போகப் போறம் எண்டுறது தெரியும்.. ஆளுக்கு சரியான விருப்பம் தான் அதனால பேசாமல் இருக்கிறான்.. பெரியவனிட்டை தான் எப்புடி சொல்றது எண்டு சரியான யோசினை.."

"சொல்லித் தானே ஆகோணுமடா.."

"சொல்லித் தான் ஆகோணும்.. பாப்பம்.."
என்று கவிவாணன் பேசிக் கொண்டு இருக்கும் போதே
"என்னவாம் மாமா.. உங்கடை பிரெண்டு.."
என்று கொண்டே நந்தன் அமர்ந்திருந்த கதிரையின், சட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டான் தமிழ்பரிதி.

"அது ஒண்டுமில்லை தமிழு.. உன்னையும் தம்பியையும் வெளிநாட்டுல படிக்க வைக்க வேணும் எண்டு என்ரை பிரெண்டுக்கு விருப்பம் அது தான்.. வெளிநாட்டுக்கு போகலாம் எண்டு இருக்கிறான்.."

"என்ன கதை உது.. இங்க படிச்சால் படி படாதாமோ.. நான் அங்க எல்லாம் போய்ப் படிக்க மாட்டேன் சொல்லீட்டன்.."

"அப்புடி இல்லையப்பன்.. வெளிநாட்டுல படிக்கிறது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமோ.."

"எனக்கு அதெல்லாம் பெரிய விஷயம் மாதிரி தெரியேல்லை மாமா.. நான் போக மாட்டேன்.. சரி பப்பி எங்க ஒரு படம் ஒண்டு கீறித் தரச் சொன்னவள்.."
என்று கொண்டே தமிழ் வீட்டினுள் போய் விட்டான்.

அவன் போன திக்கையே பார்த்தபடி இருந்த கவிவாணன், 'என்னடா செய்ய' என்பது போலத் தன் நண்பரைப் பார்த்து வைத்தார்.

"அவன் சின்னப்பெடியன்டா.. அவனுக்கு எண்டும் ஆசையள் கனவுகள் இருக்கும் தானே.. சொல்லுறமாதிரிச் சொன்னால் அவனுக்கு விளங்கும் நீ குழம்பாத.."

"எப்புடியாவது அவனைச் சம்மதிக்க வையடா.."

"அது என்ரை பொறுப்பு.. நீ கவலைப்படாதே சரியோ.. முதல்ல தேத்தண்ணியைக் குடி.. ஆறிப் போகப் போகுது.. பிறகு என்ரை பெஞ்சாதி வந்து பக்கம் பக்கமா வசனம் கதைப்பாள்.. எதுக்குச் சோலி.. குடி குடி.."
எனத் தன் நண்பனைச் சகஜமாக்க முயன்றார் நந்தன்.

அதே நேரத்தில் அமுதவாணியைத் தேடிக் கொண்டு அவரின் வீட்டுக்குப் போன ஞானகி, வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்துக்கு கீழே இருந்து அழுது கொண்டிருந்த தாய் அம்பிகையையும் மகள் அமுதாவையும் பார்த்ததும் பதறி விட்டார்.

"என்னடி அமுதம்.. என்ன நடந்த ஏன் அழுறாய்.. ஏதும் பிரச்சனையோ.."

"வா ஞானு வா.. உன்னைத் தான் பாத்துக் கொண்டு இருக்கிறன்.. எனக்கு என்ன சொல்லுறது என்ன செய்யிறது எண்டே தெரியேல்லை.."
என்று கொண்டே ஞானகியைக் கட்டிக் கொண்டு, விட்ட அழுகையைத் தொடர்ந்த அமுதாவை, இவள் ஏன் அழுகிறாள் என்பது போல ஒன்றும் புரியாமல் அப்படியே நின்று விட்டார் ஞானகி.

அமுதாவின் அன்னை அம்பிகை தான் மகளுக்குப் பதிலாகத் தான் வாய் திறந்தார்.

"மருமகன்.. இனி இங்க சிலோன்ல இருக்க ஏலாதாம்.. அவர் இருந்தாப் பிரச்சினை வருமாம்.. அது தான் வெளிநாட்டுக்கு போக வேண்டிய கட்டாயம் வந்திட்டு பிள்ளை.."

"என்னம்மா சொல்லுறியள்.."

"ஓம் பிள்ளை.. அது தான் உங்களை எல்லாம் விட்டிட்டு எப்புடித் தூரத்துக்குப் போறது எண்டு நினைச்சு நினைச்சு அழுது கொண்டு இருக்கிறாள்.."

"ஏனம்மா கட்டாயம் போய்த்தான் ஆகோணுமோ.."

"ஓம் பிள்ளை விஷயம் ரொம்பப் பெருசு.."
என்று கொண்டே, ஞானகியின் காதுகளில் உண்மை நிலையை எடுத்து விளக்கினார் அம்பிகை, அதைக் கேட்டதும் தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டார் ஞானகி.

"அழுறதை நிப்பாட்டு அமுதா.. இது அழுது கொண்டிருக்கிற நேரமில்லை.. அடுத்தது என்ன செய்யோணும் எண்டு யோசிக்க வேண்டிய நேரம்.. இங்கேயே இருந்து எப்ப என்ன நடக்குமோ ஏது நடக்குமோண்டு நிம்மதி கெட்டு வாழப் போறது ஒரு வாழ்க்கையா சொல்லு.."

"அது எனக்கு விளங்குது ஞானூ.. ஆனா உங்களை எல்லாம் விட்டிட்டு.. எங்கையோ கண்காணாத தேசத்துக்கு போய் ஆரு எவர் எண்டு தெரியாத இடத்துல எப்புடி இருக்கிறது சொல்லு.."

"எனக்கு மட்டும் உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்கிறது விருப்பமோ சொல்லு.. ஆனா என்ன செய்யிறது.. எல்லாம் கொஞ்சக் காலம் தானே அமுதம்.. எங்கடை நாட்டு நிலைமை இப்போ இப்புடியாக் கிடக்குது.. இதெல்லாம் மாறும் தானே அதுவரை உதெல்லாத்தையும் சகிச்சுத் தானே ஆகோணும்.."

"அது தான்.. நானும் என்னை நானே சாமாதானப் படுத்த நினைக்கிறேன் ஆனா முடியேல்லையே.."
என்று மீண்டும் அழத் தொடங்கிய தன் தோழியை வேறு என்ன சொல்லி எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்க நின்றிருந்தார் ஞானகி.

சில நொடிகள் அப்படியே கரைய, கவிவாணனும் நந்தனும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

"நீ இன்னும் அழுது முடிக்கேல்லையோ அமுதா.. பாரன் உவளை நந்து.. நான் என்ன தான்டா செய்யிறது.."

"அழக் கூட இந்த நாட்டுல சுதந்திரம் இல்லையோ.. என்னால நிம்மதியா செய்ய முடியுற வேலை அது ஒண்டு மட்டும் தானே.. அதையும் நிப்பாட்டு நிப்பாட்டு எண்டால் நான் என்ன செய்ய.."

"சரி சரி விடு கவி.. பாவம் தங்கச்சி.. அதுக்கும் இந்த விஷயம் கஷ்டம் தானே.."

"அப்ப எனக்குக் கஷ்டம் இல்லையோடா.. அவள் வாய் விட்டு அழுறாள்.. என்னால அது கூட முடியேல்லை.. எல்லாம் எங்கடை தலைவிதி.. தாய்நாட்டை விட்டுட்டு அடுத்த நாட்டுக்கு ஓடுறது எண்டுறது எவ்வளவு பெரிய வலி.. தனியாளா இருந்திருந்தா கதையே வேறை.. என்னைச் சாட்டி இதுகளுக்கு ஒண்டும் ஆகக் கூடாது எண்டதால இதுகளை எல்லாம் ஒரு இடத்தில பத்திரப்படுத்தோணுமே.."
என்று சொன்ன கவிவாணனின் கண்கள் கலங்கியதோ தெரியவில்லை, அவர் வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொள்ள, அந்த நேரம் அங்கு வந்த தமிழ்பரிதி தந்தையின் கடைசி வார்த்தைகளைக் கேட்டு விட்டான்.

அதோடு தாயும் அம்மம்மாவும், மற்றும் ஞானகி மாமியும் அழுது சிவந்து போய் நிற்பது வேறு அவனை என்னவோ செய்தது.

"என்னப்பா என்ன விஷயம்.. நாட்டை விட்டுப் போற அளவுக்கு அப்புடி என்ன நடந்தது.."
எனக் கேட்கும் போதே, சிறுவன் என்கிற பருவத்தை முடித்து அடுத்த பருவத்துக்குள் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்த அவனது குரல் தடுமாறியது.

அவனுக்கும் நாட்டு நடப்புகள் தெரியும் தானே, என்னவொன்று நாட்டு நடப்புகள் வீட்டுக்குள் செல்வாக்குச் செலுத்தும் போது தான் மனதும் தடுமாறிப் போகிறதே.

இதற்கு மேலும் மறைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை எனப் புரிந்து கொண்ட நந்தன், தன் நண்பன் மகனுக்கு அப்போதைய இக்கட்டை விளக்கிச் சொல்ல, அப்படியே இறுகிப் போய் நின்று விட்டான் தமிழ்பரிதி.

எப்படிப் பட்ட ஒரு காலகட்டத்தில் நிற்கிறோம் என்பதை அவன் அப்போது தான் உணர்ந்தான்.

கணப்பொழுதுகள் நிமிடங்கள் ஆகி நிமிடங்கள் மணித்தியாலங்கள் ஆகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, கவிவாணன் குடும்பம் வெளிநாடு செல்ல, கொழும்பு செல்ல வேண்டிய நாளும் வேகமாக ஓடி வந்து முன்னால் நின்று கொண்டது.

சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு செல்வது, அதுவும் குடும்பமாகச் செல்வது என்பது அத்தனை எளிதல்லவே, அதற்கு போதிய பணம் வேண்டும் என்பதுவும் ஒரு காரணம், அடுத்தது வேறொரு நாட்டில் சென்று அடுத்தது என்ன செய்வது என்பது அடுத்த கட்ட பிரச்சினை. அதோடு யார் கண்ணையும் உறுத்தாமல் போய் சேருவது என்பது அடுத்த கட்ட அழுத்தம்.

கவிவாணன் குடும்பத்துக்காக, தன் காணி பூமிகளை விற்றுப் பணத்தைச் சேகரித்தார் நந்தன்.
 

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 7 (2)

எட்டு வயது தேன்மொழியும் அவளை விடவும் ஒன்பது வயது மூத்தவனான இசையும் எப்போதும் முறுக்கிக் கொண்டே வலம் வந்தார்கள்.

அவனும் சின்னவள் என்று விட்டுக் கொடுப்பதேயில்லை, அவளும் பெரியவன் என்று மதிப்பு கொடுப்பதேயில்லை, இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பதற்குள் ஞானகிக்கும் அமுதாவுக்கும் போதும் போதுமென்றாகி விடும்.

இப்போதும் கவிவாணன் குடும்பத்தோடு வெளிநாடு போகப் போகிறார் என்பது தெரிந்ததும், அவரிடம் போன தேன்மதி
"மாமா நீங்க போவேந்தாம்.. இதை மத்தும் அனுப்பி விதுங்கோ.. சையான ஒது நூசு மாமா உது.. ஒந்துமே தெய்யாது.. அங்க போய் நல்லா அழுவட்டும்.. பாதுங்கோவன் ஆளை நூசு நூசு.."
என இசையைக் காட்டிச் சொல்ல அவன் தந்தையைத் தான் முறைத்தான்.

அவளுக்கு லூசு என்று சொல்ல வராது, அதற்கு பதிலாக நூசு என்று தான் சொல்லுவாள். தேன்மதி என்ன சொன்னாலும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவள் பேசுவதையே இரசிக்கின்ற ரகம் தான் கவிவாணன். அதனால் தான் இசைக்கு அவர் மீது கோபம் கோபமாக வந்தது.

"குட்டிச்சாத்தானுக்கு கொழுப்பைப் பாரன்.. லேசாத் தட்டி விட்டா உருண்டு கொண்டு போற சைஸில இருந்து கொண்டு பேச்சைப் பாரன் அதுக்கு.. நீங்களும் அவள் என்ன சொன்னாலும் ஏதவோ காணாததைக் கண்ட மாதிரி ஆவெண்டு வாயைப் பிளந்து கொண்டு பாருங்கோ.."
என இசை முடிக்கவும், அவனுக்குப் பழிப்புக் காட்டி விட்டு விளையாட ஓடி விட்டாள் அவள்.

மெல்லிய சிரிப்போடு கவிவாணனும் உள்ளே போய் விட, தேனு பற்றிய குற்றப் பத்திரிகை படிக்க ஞானகியைத் தேடிக் கொண்டு போனான் இசை. ஏனெனில் இந்த தேன்மதி பயந்து போய் பம்மிக் கொண்டு நிற்கும் ஒரே நபர் அவர் தான்.

அதே நேரத்தில் அந்தப் பெரிய மாந்தோப்புக்கு நடுவில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் வான்மதி.

நாளை காலை கவிவாணன் குடும்பம் கொழும்புக்குச் செல்கிறார்கள், அப்படியே இலண்டன் போய் விடுவார்கள்.

இனிமேல் அவர்களை எல்லாம் எப்போது பார்ப்பது, அவளைச் சுற்றித் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் தனுவும் தேனுவும் மற்றும் அபியும்.

அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதையே பார்த்திருந்த வான்மதிக்கு, தானும் அவர்களைப் போல் சின்ன குழந்தையாக இருந்தால் என்னவென்று தோன்றியது.

அவர்களைப் பொறுத்தவரை நந்தன் மாமா தங்களுக்கு சாக்லேட் வாங்கி வர வெளிநாடு செல்கிறார் என்று மட்டுமே நினைத்துக் கொண்டார்கள், அதனால் அவர்களுக்கு எந்தக் கவலையுமே இருக்கவில்லை.

அப்போது தமக்கையைத் தேடிக் கொண்டு வந்தாள், வான்மதிக்கு அடுத்ததாகப் பிறந்த தங்கை சாருமதி.

"அக்கா.. என்னடி யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய்.."

"வா சாரு.. எனக்கு ஒரே கஷ்டமாக் கிடக்கடி.."

"அவையள் போகப் போகினம் எண்டு கஷ்டப் படுறியோ.."

"ஓம் சாரு.."

"எனக்கும் விளங்குது அக்கா.. ஆனா என்ன செய்யிறது.."

"உனக்குக் கஷ்டமா இல்லையோ சாரு.."

"கஷ்டமா இருக்குது தானக்கா.. ஆனா உன்ரை அளவுக்கு இல்லை எண்டு நினைக்கிறன்.. அவை போய்த் தான் ஆகோணும் அதனால போகினம்.. வேறை என்ன செய்றது.."

"ம்ம்.."

"அதெல்லாம் சரி.. இப்பவாச்சும் தமிழத்தானை நீ விரும்புறதைச் சொல்லன்.."

"ஐயோ வேண்டாம் சாரு.."

"ஏனக்கா.. சொன்னால் தானே அவருக்கும் தெரியும்.. இனி அவையள் போனால் அங்க எங்க இருப்பினமோ தெரியாது.. அது போக இனிக் கதைக்கிற சந்தர்ப்பம் எப்ப வருமோண்டும் கூடத் தெரியாது.. நீ வாயைத் திறந்து உன்ரை விருப்பத்தைச் சொன்னால் தானே.. சரி நமக்காண்டி ஒருத்தி சிலோன்ல இருக்காள் என்ட எண்ணத்திலயாச்சும் அவர் அங்கினை வெள்ளைக்காரியளைப் பாக்காமல் இருப்பார்.."
எனச் சாருமதி சொல்லிக் கொண்ட இருக்கும் போதே, அவர்களை நோக்கி தமிழ்பரிதி வருவது தெரிந்தது.

அதைக் கண்டதும் பதறிப் போன வான்மதி, சட்டென்று தங்கையின் கையை எடுத்துத் தன்னுடைய தலையில் வைத்து
"அக்கா சத்தியமா இதைப் பத்தி நீ மூச்சுக் கூட விடக் கூடாது.."
என்று சொல்லி விட்டு, சட்டென்று எழுந்து விட்டாள்.

தங்களை நோக்கி வரும் போதே ஏதாவது, வம்புக் கதை பேசிக் கொண்டு வரும் தமிழத்தான், அமைதியாக வந்து ஒரு ஓரமாக அமரவும், விளையாடிக் கொண்டிருந்த தன் சகோதரர்களை அழைத்துக் கொண்டு, இங்கிதமாக அந்த இடத்தை விட்டுப் போய் விட்டாள் பதினான்கு வயதேயான சாருமதி.

தங்கை செல்வதையே பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள் வான்மதி. அவளுக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் என்றாலே தனிப்பிரியம். அவன் எது செய்தாலும் என்ன சொன்னாலும் நாடியில் கை வைத்தபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

தமிழுக்கும் வான்மதி என்றால் மிகவும் பிடிக்கும், குட்டி நாய் போல எப்போதும் தன்னையே சுற்றி வரும் அவளைச் செல்லமாகப் பப்பி என்றே அவன் அழைப்பான். இன்னும் சொல்லப் போனால் தமிழ் வான்மதிக்கு வைத்த பட்டப் பெயர் பப்பி.

வான்மதி வயதுப் பெண்ணான பின்னர் அந்தத் தனிப்பிரியம் காதலாக மலர்ந்து மணம் வீசத் தொடங்கியிருந்தது.

இந்தக் காதல் மலர் மலர்ந்த விவகாரம், வான்மதியின் தங்கை சாருமதிக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இருவரும் தோழிகள் போல தங்களுக்குள் எப்போதும் எதையும் மறைப்பதே கிடையாது.

தமிழின் மீது தனக்கு காதல் வந்து விட்டது என்பதை வான்மதி உணர்ந்த பிற்பாடு, இருவரும் தனியே சந்திக்கும் முதல் சந்திப்பு இது.

தனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவனை நேர்கொண்டு பார்க்கத் திராணியற்றவளாகி, குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் வான்மதி.

இருவரும் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது.

முதலில் பேச்சை ஆரம்பித்தது தமிழ் தான், வான்மதியோ வழக்கம் போல அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனால் அவனின் கண்களை மட்டும் அவள் பார்க்கவேயில்லை, நெஞ்சுக்குள் காதல் குடியேறிய பிறகு அவன் கண்களை அவளால் பார்க்க முடியவில்லை.

"என்ன பப்பி.. நீ இப்புடியே உம்மிண்டு இருந்தால் எனக்கு ரொம்பக் கஷ்டமாக் கிடக்குது.. ஏதாவது வாயைத் திறந்து கதையன்.."

"எனக்கு என்ன கதைக்கிறது எண்டே தெரியேல்லை.. இனிமேல் உங்களைப் பாக்கவே ஏலாதோ.."
எனும் போதே, அவள் குரல் உடைந்து விட்டது.

தான் அழுவதை அவன் பார்க்க கூடாது என்பதற்காக, முகத்தைச் சட்டென்று வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள்.

ஆனால் நொடியில் அவள் அழுவதைக் கண்டு கொண்டவனோ, ஒரு எட்டில் அவளது முகம் திருப்பி, அவள் கண்களைத் துடைத்து விட்டபடி
"என்ரை பப்பி தைரியமான பிள்ளை எல்லோ.. இப்புடி எல்லாம் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிக்கக் கூடாது சரியோ.. எவ்வளவு தூரம் போனாலும் உங்களோட கதைக்காமல் உங்களை நினைக்காமல் நான் இருப்பனோ சொல்லு.."
எனக் கேட்க, அவளது அழுகை அதிகரித்ததே தவிர, குறையவேயில்லை.

தமிழின் கரம் வான்மதியின் தலையில் இருக்க, அவள் அழுது தீர்க்கட்டும் என்பது போல அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மெல்லத் தன் அழுகையை முடிவுக்குக் கொண்டு வந்தவளோ, நீர் தேங்கிய விழிகளால் அவன் முகம் பார்த்தாள்.

மனதோடு அவள் ஒட்டிக் கொண்ட கடைசிப் பதிவு அது தானே, முகத்தை அழுந்தத் துடைத்தபடி மெல்ல எழுந்து கொண்டவள்
"நீங்கள் கவனமாப் போயிட்டு வாங்கோ தமிழத்தான்.. மாமாந்தை பிரச்சினை எல்லாம் தீர்ந்து போய் நீங்கள் திரும்பி வரும் வரை நாங்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டு இருப்பம்.. எங்கடை உருத்திரபுரீஸ்வரர் உங்களுக்கு எப்பவுமே துணையா நிப்பார்.."
என்று சொல்லிக்கொண்டே செல்ல, அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் தமிழ்பரிதி.

இவள் இல்லாத பொழுதுகளை எப்படிக் கடக்கப் போகிறோம் என்கிற எண்ணம் அவனுள் பெருக்கெடுத்து அரித்துக் கொண்டிருந்தது.

பேசுவதற்கு இருவருக்குமே எண்ணுக்கணக்கற்ற எத்தனையோ விடயங்கள் இருந்தாலும், இருவராலுமே பேச முடியவில்லை. மீண்டும் அந்த இடத்தை நிசப்தம் ஆட்சி செய்ய, அந்தக் கனத்த அமைதியை சகிக்க முடியாமல், இருவருமே அங்கிருந்து எழுந்து வந்து விட்டார்கள்.

வீடு சென்று சேரும் வரையில் கூட இருவரும் வேறு பேசிக் கொள்ளவேயில்லை. அவனுக்கு ஏதாவது தன் நினைவாகக் கொடுத்து விட வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தாலும் கூட, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக வலம் வந்தாள்.

ஆனாலும் முடிவில் ஒரு மயிலிறகு வைத்த குட்டிப் புத்தகத்தை அவனுக்கு கொடுத்து விட்டாள். உள்ளே பப்பி பரிதி என்று அவளது அழகான எழுத்தில் இருவரது பெயர் மாத்திரமே எழுதி இருந்தது. வேறு எதையும் அவளால் எழுத முடியவில்லை.

நேரம் யாருக்காகவும் காத்துக் கொண்டிருக்காமல் அடுத்த நாள் காலையில் கொண்டு வந்து தள்ளி விட்டது.

அந்தத் தெருவில் வந்து நின்ற வாகனம், கவலையையும் கனத்த அமைதியையும் சேர்த்தே கொண்டு வந்தது போல, எல்லோரும் வாயைத் திறந்தால் அழுது விடுவோமோ என்பது போல, இறுகிய முகத்துடனேயே வலம் வந்தார்கள்.

முடிவில் வாகனத்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லோரும் ஒரு நொடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அதிலும் வான்மதியின் பார்வையில் தமிழுக்கு அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் போய் விட்டது.

நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நின்ற தோற்றமே, அதுவரை பெரும்பாடு பட்டு அடக்கி வைத்திருந்த அழுகையை அவிழ்த்து விடப் போதுமானதாக இருந்தது.

பெரும்பாடு பட்டு தங்கள் உணர்வுகளை அடக்கியபடி நந்தன் குடும்பம் நிற்க, குனிந்த தலை நிமிராமல் வாகனத்தில் ஏறி உட்கார்ந்தது கவிவாணன் குடும்பம்.

புழுதியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்ட அந்த வாகனம், தெருமுனையில் மறையும் வரை அசையாமல் நின்றிருந்தாள் வான்மதி.

மெல்ல வந்து அவள் தோள் தொட்ட சாருமதி, தமக்கையின் விழிகளில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை மெல்லத் துடைத்து விட்டாள்.

சட்டென்று அவள் தோளில் முகம் புதைத்து வெடித்து அழுதாள் அந்தப் பதினாறு வயதுப் பாவை.

பதினாறு வயதில் வந்த காதல் என்பதால், இது ஒன்றும் பட்டாம்பூச்சிக் காதல் அல்ல. ஆழ்மனதில் இது தான் என் வாழ்க்கை என முடிவான உக்கிரம் ஏறிய காதல் அது.

கவிவாணன் குடும்பம் ஊர் விட்டுப் போய், மூன்று கிழமைகள் முடிந்த நிலையில், அவர்கள் வீட்டு லான்ட்லைனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதன் சாராம்சம் கவிவாணன் குடும்பம் இலண்டன் போய் சேர்ந்து விட்டதாகவும், இப்போது தான் அங்கே தெரிந்த இஸ்லாமிய நண்பர் ஒருவரது வீட்டில் குடியிருப்பதாகவும், அவருடைய முதலாளி மூலமாக ஒரு ரெஸ்ராரன்டில் வேலை கிடைத்திருப்பதாகவும் தகவல் பரிமாறப் பட்டது.

அதன் பின்னர் அதிக நேரம் பேச முடியாமல் தொலைபேசி பில் அதிகரித்து விடும் என்பதால் ஓரிரு நல விசாரிப்புகளோடும், ஒவ்வொரு ஞாயிறும் பேசுகிறோம் என்பதோடும் அந்தப் பேச்சு வார்த்தை முடிந்தது.

தன் நண்பன் பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு இடத்தில் தங்கி நலமாக இருக்கிறான் என்பதே பெரும் ஆறுதலைக் கொடுக்க, உருத்திரபுரீஸ்வரர் கோவிலுக்கு பொங்கல் வைக்க ஆயத்தமானார் நந்தன்.

அதோடு வன்னி வாழ் தமிழர்களை கொத்தோடு கொண்டு போகவென்றே யுத்தப் பேரிகையும் மின்னாமல் முழங்காமல் எல்லோர் தலைகளிலும் வந்து விழுந்தது.