• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 8

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 8 (1)

உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு பொங்கல் செய்ய வேண்டி நந்தன் குடும்பமே ஆயத்தமான அந்தக் காலைப் பொழுது.

"அம்மா நான் இன்டைக்குப் பள்ளிக்கூடம் போகையில்லை.. ஏனெண்டு கேக்காதேங்கோ.. நான் சொல்ல மாட்டன்.. அதோட நான் கோவிலுக்கும் வரேல்லை.."
என்றபடி தாய் ஞானகியிடம் ஓடி வந்தாள் வான்மதி.

"அக்கா போகாட்டிக்கு நானும் போக மாட்டனம்மா இப்பவே சொல்லிப் போட்டன்.."
என்றவாறு அவளது மூத்த தங்கை சாருமதியும் ஓடி வந்தாள்.

இருவரையும் பார்த்த ஞானகியோ இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டே
"இஞ்சை பாருங்கோ அம்மாட்ட ஒன்டும் சொல்ல வேண்டாம்.. நீங்கள் போய் உங்கட அப்பாட்ட சொல்லீட்டு என்ன கூத்தெண்டாலும் செய்யுங்கோ.. நானொண்டும் கேக்க மாட்டன்.. எனக்கு ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு.. பொங்கலுக்கு கொண்டு போக வேண்டிய பொருளுகள் எல்லாம் சரியோண்டும் பாக்கோணும்.."
என்றவாறு உள்ளே போய் விட்டார்.

தந்தையிடம் பயந்தே பழக்கப் பட்ட இருவரும் தயங்கியவாறு அவர் முன்னிலையில் போய் நின்றனர்.

தன் முன்னால் நெளிந்தபடி வந்து நின்ற இருவரையும் பார்த்து நந்தன் பேசுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்பாகவே அவரது முறுக்கு மீசை இருவரையும் பார்த்து முறைத்தது.

சாருமதி மெதுவாகத் தமக்கையின் பின்னால் மறைந்த படி
"அப்பா இண்டைக்குப் பள்ளிக்கூடத்துக்கு நாங்கள் போகேல்லை.."
என்றாள் வலுக்கட்டாயமாக வருவித்த தைரியமான குரலில்.

இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவர்
"நீங்கள் பள்ளிக்கூடம் போகாமல் நிண்டால் உவன் சின்னவனும் எல்லே நிக்கப் போறன் எண்டு அழுவான்.. அதோட கோவிலுக்கு போற நேரத்துல அழுது கொண்டு நிண்டால் அப்பாவுக்கு கோபம் வருமோ வராதோ.."
என்றார் கேள்வியாக.

"தம்பி அப்பதையே போட்டானப்பா.. அவனுக்கு ஏதவோ விளையாட்டு போட்டியாம்.."
என்று இழுத்தாள் சாருமதி.

"சரி சரி இண்டைக்கு மட்டும் நில்லுங்கோ.. நானும் அம்மாவும் போய் கோவில்ல பொங்கீட்டு வாறம்.."
என்றவர் எழுந்து போய்விட்டார்.

தந்தை சென்றதும் சகோதரிகள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு துள்ளினார்கள்.

வான்மதிக்கும் சாருமதிக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம் என்பதால் இருவரும் தோழிகள் போலவே பழகுவார்கள். அதோடு தமிழ் போன பிரிவைப் பற்றி அவளால் தன் மூத்த தங்கையிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடியும்.

சாருமதியை அடுத்து நான்கு வருட இடைவெளியில் தனுராமும் அவனை அடுத்து இரண்டு வருட இடைவெளியில் தேன்மதியும் பிறந்திருந்தார்கள். என்பதால் அவர்கள் எப்பொழுதுமே வான்மதிக்கு குழந்தைகள் தான்.

தேன்மதி பிறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு கடைக்குட்டி அபிராம் பிறந்திருந்தான்.

கிளிநொச்சி பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வான்மதி பதினோராம் வகுப்பும் சாருமதி ஒன்பதாம் வகுப்பும் படிக்க, தனுராமோ ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். இளையவள் தேன்மதியும் மூன்றாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தாள்.

அபிராமுக்கு மூன்று வயதும் அப்போது தான் பூர்த்தி அடைந்திருந்தது.

கடைக்குட்டி இருவரும் ஞானகியின் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல சுற்றிக் கொண்டு இருப்பார்கள்.

தாயிடம் செல்லம் கொஞ்சும் தேன்மதிக்கு, தாயென்றால் மட்டும் தான் பயமும் கூட.

பள்ளிக்கு மட்டம் போட்ட சகோதரிகள் இருவரும் வயல்வெளியில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் தூரமாக ஏதோ ஒரு வித இரைச்சல் சத்தம் கேட்டது.

விளையாட்டில் ஆர்வமாக இருந்த இருவரது செவிகளையும் அந்தச் சத்தத்தினால் எட்ட முடியவில்லை.

தொலை தூரமாகக் கேட்ட இரைச்சல் மெதுவாக அருகில் கேட்கத் தொடங்கவும் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தாள் சாருமதி.

உருத்திரபுரீஸ்வரர் என்கின்ற பெயரில் சிவன் குடி கொண்டிருக்கின்ற ஆலயத்தின் கோபுரத்துக்கு மேலாக ஏதோவொரு பொருளொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

அது என்னவென்று தெரியாமல் சற்றுத் தூரமாக நின்ற தமக்கையை அழைத்து
"அக்கா.. அங்க பாரன்டி என்னவோ வேகமா வருதடி.."
என்றவளின் பதிலில் திரும்பிப் பார்த்தவளுக்கும், அது என்னவென்று புரியவில்லை.

"ஆரும் வெடி கொழுத்திப் போடுகினம் எண்டு நினைக்கிறன்.."
என்றவளின் பதிலைக்கேட்ட சாருமதியோ
"போடியக்கா.. வெடி கொழுத்திப் போட்டால் உப்பிடி ஒருநாளும் வராது.."
என்று சொல்லி முடிக்கவும், வேகமாக வந்த அந்தப் பொருள் இரண்டு வயல்கள் தாண்டி விழுந்து வெடிக்கவும் சரியாக இருந்தது.

காதுகளைக் கிழித்துக் கொண்டு சென்ற அந்த ஓசையில் வான்மதிக்குச் செவிப்பறை வலிப்பது போல இருந்தது.

வலி தாங்க முடியாமல் இரண்டு காதுகளையும் இறுக மூடிக் கொண்டாள்.

"அக்கா.. குண்டு வெடிச்சிட்டுப் போலடி.."
என்று சாருமதி பயத்துடன் கத்தினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு இவள் திரும்புவதற்குள் அடுத்த குண்டு இவர்கள் அருகில் வெடித்தது.

அவள் சுதாரித்து முடிப்பதற்குள்
"அம்மாஆஆஆஆ.."
என்ற அலறல் மட்டுமே வான்மதியின் காதுகளில் ஒலித்தது.

யார் செய்த பாவமோ யாரை நோவதோ வான்மதியின் கண் முன்னாடியே குண்டுக்கு இரையாகி இரத்தம் கொப்பளிக்க வானத்தைப் பார்த்தவாறு விழுந்து கிடந்தாள் சாருமதி.

தங்கையின் அருகில் ஓடியவள் அவளை மடி மீது போட்டுக் கதறித் துடித்தாள்
"சாரூ சாரூ எழும்படி சாரூ.."
அவளது கதறல் எதுவும் கேட்காத தூரத்திற்குச் சாருமதியின் உயிர்ப் பறவை பறந்து விட்டிருந்தது.

தங்கையை மடியில் வைத்து அழுது கொண்டிருந்தவளைக் கவனிக்கும் அளவில் அங்கு யாரும் இருக்கவில்லை.

காரணம் அங்கே பலியானது சாருமதி மட்டும் இல்லை அல்லவா?

குண்டு குடித்து விட்டுப் போன உயிர்கள் பத்துக்கு மேல் இருக்கும்.
அத்தனை பேரும் வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்.

அதே நேரம் சமையலறையில் நின்ற ஞானகி, அந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து விட்டு இவளை நோக்கி உயிர் பதற ஓடி வந்தார்.

வந்தவர் அப்படியே மகளின் மீது விழுந்து கத்தினார்.

அந்த அன்னையவளின் கதறல் இனிமேல் எப்போதும் கேட்காத தூரத்திற்கு மகள் போய்விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் கத்த, இரண்டு குண்டுகளைத் தொடர்ந்து மீண்டும் இரைச்சல் கேட்கத் தொடங்கியது.

தொடர்ந்து சராமரியான குண்டுத் தாக்குதல் எங்கும் வீசத் தொடங்கியது.

ஞானகியோ வான்மதியை இழுத்துக் கீழே விழுத்தி விட்டு அவளை மறைப்பது போல மேலே குறுக்கே விழுந்து மறைத்தார்.

வேகமாக வந்த குண்டொன்று ஞானகியைப் பதம் பார்த்து விட்டே ஓய்ந்தது.

ஞானகி மட்டும் குறுக்கே பாய்ந்து தடுக்கவில்லை என்றால் வான்மதி சிதறி இருப்பாள்.

இரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீடு இருக்கும் பக்கத்தைக் காட்டியவிட்டு அப்படியே விழிகளை மூடிக் கொண்டார்.

அன்னையை உலுக்கிப் பார்த்தவள் கத்திய கத்தலில் அந்த இடமே அதிர்ந்து அடங்கியது.

சுற்று வட்டாரத்து மக்கள் எல்லோரும் கத்தியபடியே குழந்தைகளைத் தூக்கியவாறு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாகச் சிதறி ஓடத் தொடங்கி இருந்தார்கள்.

குண்டுகளோ அங்கும் இங்குமென எங்கும் வீசப் பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரம் எங்கிருந்தோ வந்த நந்தன் மனைவியையும் மகளையும் கண்டு ஓவென்று அழுததைப் பார்த்திருந்தால் அந்தக் காலனும் கலங்கியிருப்பானோ தெரியவில்லை.

அவர்கள் இருந்த திசைப்பக்கம் குண்டொன்று இரைச்சலுடன் கூவிக் கொண்டு வரவே மகளை இழுத்துக் கொண்டு வீடு இருக்கும் திசைப் பக்கம் விரைந்தார் நந்தன்.

தந்தையின் இழுப்புக்கு ஓடியவளின் பார்வை மட்டும் தாயினதும் தங்கையினதும் உடலிலேயே பதிந்து இருந்தது.

"ஐயோ வாடி பிள்ளை.. சின்னதுகள் ரெண்டும் பயத்தில கத்துதுகள் நான் போய்ச் சின்னவனைக் கூட்டி வாரன்.."
என அழுது கொண்டே சொன்னார் அந்த எதற்கும் ஒரு போதும் காலங்காத மனிதன்.

மூன்று வயது மகனையும் எட்டு வயது மகளையும் மூத்தமகளிடம் கொடுத்தவர்
"கவனமாப் பாரு மதீ.. அப்பா போட்டு வாரன்.."
என்றவாறு போனவர் தான் திரும்பி வரவேயில்லை.

நெடு நேரமாகத் தந்தைக்காகவும் தம்பிக்காகவும் காத்திருந்தவளால் வீறிட்டுக் கத்திய படி இருந்த குழந்தைகளான தேனுவையும் அபியையும் சமாதானப் படுத்தவே முடியவில்லை.

பக்கத்து வீட்டில் குடியிருந்த வான்மதியின் ஒன்று விட்ட சித்தி ஓடி வந்து மூவரையும் எழுப்பித் தங்களுடன் அழைத்துக் கொண்டே மக்கள் ஓடும் திசைப் பக்கம் ஓடத் தொடங்கினார்.

தம்பியை ஒரு கையால் தூக்கிக் கொண்டும் தங்கையை மறு கையால் இழுத்தவாறும் ஓடிக் கொண்டிருந்தவள் மூச்சு வாங்கியவாறே
"சித்தீ அப்பா தம்பியைக் கூட்டிக் கொண்டு வாரன் எண்டு சொல்லிப் போட்டுப் போனவர் இன்னும் காணேல்லை.. பயமா இருக்கு.."
என்று சொன்னாள்.

"அவையள் அங்க வருவினம் நீ முன்னுக்கு வா.."
என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள் வான்மதியின் சித்தி.

நெடு நேரத்திற்குப் பிறகு வட்டக்கச்சியில் ஒரு கோவிலில் எல்லோரும் மெதுவாக இருந்து கொண்டார்கள்.

தொடர்ந்து ஓடுவதற்கு உடலிலும் தென்பில்லை மனதிலும் தென்பில்லை.

கோவிலில் இருந்தவர்களின் அழுகுரலில் பயந்து போய்த் தமக்கையை இறுகக் கட்டிக் கொண்டனர் சின்னவர்கள் இருவரும்.

அந்த நிம்மதியும் நெடு நேரம் நிலைக்காமல் இந்தப் பக்கமாகவும் குண்டுகள் வந்து விழவே எல்லோரும் எழுந்து மீண்டும் ஓடத் தொடங்கினார்கள்.

பாதைகளெங்கும் இரத்தம் கொப்பளிக்கக் கிடந்தவர்களைத் தாண்டி ஓட வேண்டிய கொடூரத்தையும் சகித்துக் கொண்டு சின்னவர்களுக்காக ஓடினாள் வான்மதி.

எங்கிலும் மரண ஓலங்கள் உயிரை உலுக்கிப் போட்டுக் கொண்டு இருக்க சின்னவர்களுக்காக மீண்டும் வேகத்தைக் கூட்டி ஓடினாள் வான்மதி.

ஒரு செல் அவளது கழுத்துப் பக்கத்தையும், இன்னொரு செல் தேனுவின் வலது பக்க தொடையையும் பதம் பார்க்கவும் தவறவில்லை. உடல் வலி மன வலி எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அவர்களின் உயிர் காக்கும் பயணம் தொடரத்தான் செய்தது.

சுதந்திரபுரம், தேவிபுரம், கோம்பாவில் என அனைத்து இடங்களையும் கடந்து இறுதியில் மாத்தளன் என்ற இடத்தில் இருந்து கடலுக்குள்ளாகக் கூட வந்தவர்களுடன் நடக்கத் தொடங்கினார்கள்.

இடையில் வந்து போன அந்தத் தினங்களை முழுக்க முழுக்க பயத்துடனும் வேதனையுடனும் எப்படிக் கடந்தாள் என்று அவளுக்கே தெரியாது.

கடல் நீர் முழங்கால் வரை இருக்கும் போது நடப்பது சுலபமாக இருந்தது ஆனால் தூரம் போகப்போக சிரமப் பட்டுப் போனாள்.

நிறைய இடங்களில் விழுந்து எழும்பித் தட்டுத் தடுமாறிக் கரை சேர்ந்தவள் அதன் பிறகே தேன்மதியைத் தேடினாள்.

அபிராமைக் கைகளில் தூக்கி வைத்திருந்ததால் அவன் அவள் கூடவேயே இருந்தான்.

தங்கையைக் காணாமல் வீறிட்டுக் கத்திக் கொண்டு இருந்தவளது வாயில் இருந்து சத்தமே வரவில்லை, அருகில் யாரோ ஒருவரின் தோளில் அமர்ந்தவாறு வந்த தேன்மதி இறங்கினாள்.

சின்னவளைக் கண்டதும் துக்கம் மறந்து சிரித்தவாறே அழத் தொடங்கினாள் வான்மதி.

தமக்கையை நோக்கி ஓடி வந்தவளை இறுகக் கட்டி ஓவென்று அழுத வான்மதியைப் பயத்துடன் மீண்டும் கட்டிக் கொண்டான் அபிராம்.

"தேனு எங்கேடி போனனி நான் பயந்திட்டன்.."
என்றவளுக்கு வாயில் இருந்து காத்து மட்டும் தான் வந்தது.

"அப்பாவும் அண்ணாவும் அங்க விழுந்து கிடந்தவை நான் எழுப்பினான் எழும்பேல்லை.."
என்ற சின்னவளின் பதிலில் மின்னாமல் முழங்காமல் அடுத்தடுத்து தலையில் இடிகள் இறங்கவே
அப்படியே மண்ணில் சரிந்தாள் அந்தப் பேதை.

அதன்பின் இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்தது பின்னர் யாழ்ப்பாணத்தில் குடியேறியது எல்லாம் ஜீவன் அற்ற வாய் பேச முடியாமல் போற வான்மதி தான்.

அந்த நேரங்களில் துணையாக இருந்தது அவளது சித்தி அன்பரசி.

ஆரம்பத்தில் இரவுகளில் பயங்கரக் கனவு கண்டு கத்தியவாறே எழுபவள் காலம் செல்லச் செல்ல அது மறைவதை உணர்ந்தாள் மறைந்து விட்டதென்றும் நினைத்தாள்.

ஆனாலும் வருடங்கள் ஆக ஆக மனதில் அந்த நினைவுகள் பெரும் வலியை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள்.

அப்போதெல்லாம்
"எனக்காச்சும் தேனுவும் அபியும் இருக்கினம் சிலருக்கு யாருமே இல்லைத் தானே.."
எனத் தன்னைத் தானே மனதோரம் தேற்றியும் கொள்வாள்.

"நானும் எப்பவோ விஷத்தைக் குடிச்சுச் செத்து போயிருப்பன் ஆனால் அப்பா சொன்னது போல தம்பி தங்கச்சிக்காக நான் வாழோணும்.. கட்டாயம் அவையளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவன்.."
இந்த வார்த்தைகள் தான் வான்மதியைப் பதினைந்து வருடங்களாக இயக்கிக் கொண்டு வருகிறது.

அந்த நேரங்களில் தமிழின் நினைவுகள் ஒரு மயிலறகின் வருடல் போல அவளைத் தழுவிச் செல்லத் தவறியதில்லை.

எத்தனை காலங்கள் கரைந்தாலும் யுத்தமது கொடுத்துச் சென்ற ரணங்கள் ஆறப் போவதில்லை, அவையெல்லாம் நெஞ்சில் ஒரு மூலையில் நீறு பூத்த நெருப்பு போல இருந்து கொண்டே தான் இருக்கும்..

"மனித உயிரதின்
மதிப்பறியாத மூடர் தனை
மனித குலமதுவே ஈன்றதேனோ
மனிதமது மரித்துப் போனதேனோ மறைந்த மரண ஓலங்கள் இன்றும் தூரமாக ஒலிப்பதோனோ..
இறைவன் கொடுத்த சாபமோ இல்லை நாம் வாங்கிய வரமோ இனியேனும் சாந்தி நிலவிட வேண்டி நிற்போம் "
 

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 8 (2)

தேன்மதியின் வாய் வழி கேட்ட நினைவுகள் கொடுத்த சம்மட்டி அடியை, உள் வாங்கி வெளிவர முடியாமல் தமிழும் இசையும் பிரமை பிடித்தவர்கள் போல அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

கதையைச் சொல்லி விட்டு, மெல்ல எழுந்து சென்ற தேனுவையே இமைக்காமல் பார்த்திருந்தான் இசை.

அவன் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தாலும், மறந்தும் அவன் முகம் பார்க்கவில்லை தேன்மதி.

உள்ளூர
'போடா.. வளந்து கெட்ட எருமைமாடு.. உன் அனுதாபம் ஆருக்கு வேணுமாம்..'
எனச் சொல்லிக் கொள்ளவும் அவள் மறக்கவில்லை.

அவளது வேதனை எதுவென்று தெரியாமல் அறியாமல் தான் மீண்டும் அவளை நோகடித்து விட்டேனோ என்கிற எண்ணம் இசையைக் குற்றவுணர்வுக்குள் பிடித்துத் தள்ளி விட்டது.

தமிழின் நிலை தான் ரொம்ப மோசமாக இருந்தது, அவனுக்கு வாய் விட்டு அழுதாலொழிய இந்த இழப்புத்துயரில் இருந்து வெளி வர முடியவே முடியாது என்று தான் தோன்றியது.

சட்டென்று எழுந்து கொண்டவன் வேகமாக வெளியே போய் விட்டான். அண்ணன் போனது கூடத் தெரியாமல் தேனுவையே பார்த்திருந்தான் இசை.

அவள் கடந்து வந்த பாதைக்கு முன்னால் அவனது ஈகோ சுக்குநூறாகிப் போகவே, வான்மதியின் தலையில் ஆறுதல் போலக் கை வைத்த இசை, தேனு இருந்து இடத்துக்குப் போய் அவளையே பார்த்தபடி சுவரோரம் சாய்ந்தபடி நின்று விட்டான்.

எதேச்சையாக அவனைப் பார்த்தவளோ சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு
"இப்ப மட்டும் இந்த எருமை மாடு ஏதாவது கேக்கட்டும்.. குரல் வளையைப் பிடிச்சுக் கடிச்சுத் துப்பி விடுறன்.."
எனத் தனக்குள் சொல்லிக் கொள்ள, அவள் முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகக் கேட்ட போதும், வழமை போல சண்டைக்கு போகாமல் அமைதியாகவே நின்றிருந்தான்.

அவன் நின்ற தோரணையைப் பார்த்துக் கொண்டே, வெளியே செல்லப் போனவளின் கையைப் பிடித்துக் கொண்ட இசை, தன் இரண்டு கரங்களுக்குள்ளும் தான் பிடித்த அவளது கையைப் பொத்தியபடி
"சாரிம்மா.."
என்று சொல்லி விட்டுப் போயே விட்டான்.

அவன் போன திக்கையே பார்த்தபடி நின்றிருந்த தேன்மதிக்கு, நியாயமாக அவன் நடந்து கொண்ட விதத்தில் சந்தோஷம் தான் வந்திருக்க வேண்டும், ஆனால் ஏனோ தெரியவில்லை கோபம் கோபமாக வந்தது.

அவளால் எப்போதும் மல்லுக்கு நிற்கும் இசையைத் தான் எதிர்கொள்ள முடியுமே தவிர, இப்படிச் சட்டென்று மாறி நடந்து கொண்ட இசையை எதிர்கொள்ள முடியவில்லை.

வெளியே வந்த இசை, வான்மதியின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கத் திராணியற்று வேகமாகத் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

இசையை எதிர் கொண்டு அழைத்த அமுதா
"சின்னவனே.. அண்ணாக்கு என்னடா ஆச்சுது.. முகமெல்லாம் சிவந்து போய் உள்ள வந்தவன்.. என்ன நடந்த எண்டு கேக்க முதல் குளியலறைக்குள்ள போயிட்டான்.. உள்ள போய் பதினைஞ்சு நிமிஷத்துக்கு மேல வரும் கதவைத் திறக்கிறானே இல்லையடா.. ஒருக்கா என்னெண்டு பாரு.. வீட்டை ஒருத்தரும் இல்லை.. ஏதவோ சொந்தக்காரரைப் பாக்க எண்டு எல்லாரும் எங்கயோ போயிட்டினம்.. அவன்ரை முகத்தை நான் இப்புடிப் பாத்ததே இல்லை.. எனக்கு என்னவோ பயமாக் கிடக்குதடா.."
எனக் கலங்கிய முகத்தோடு சொல்ல, தாயின் தலையை மெல்ல வருடி விட்டபடி
"பயப்பிட ஒண்டும் இல்லைம்மா.. அங்க நந்தன் மாமா மாமி இறந்த விஷயத்தைக் கொஞ்சம் முதல் தான் தேனு சொன்னவள்.. அதைக் கேட்டதும் தான் அண்ணா கவலையா வந்தவர் வேறை ஒண்டும் இல்லையம்மா.. நான் நினைக்கிறன் அழுறார் போல கிடக்குது.."
என்று கொண்டே தொப்பென்று வெறும் தரையில் இருந்த இசை, முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினான்.

தன் சின்ன மகன் இப்படி அழுதே பார்த்திராத அமுதாவிற்கு, அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேகமாக ஓடி வந்து மண்டியிட்டு அவனை அவர் அணைத்துக் கொள்ள, தாயைத் தானும் இறுக அணைத்துக் கொண்டு அவர் தோளில் முகம் புதைத்தான் இசைவேந்தன்.

தாயும் மகனும் எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்திருந்தார்களோ தெரியவில்லை, அமுதாவின் முதுகுப் புறமாக யாரோ அவரை அணைப்பது போல இருக்கவே, தலையைத் திருப்பாமலேயே தன் மூத்த மகனை உணர்ந்து கொண்டவரோ, வலது கரம் கொண்டு அவன் தலையை வருடி விட்டார்.

நீண்ட நேரத்துக்கு பின்னர், வெளியே போய் விட்டு உள்ளே வந்த கவிவாணன், தன் குடும்பத்து அங்கத்தவர்கள் மூவரையும் அந்த நிலையில் பார்த்ததும், பதறிக் கொண்டு ஓடி வந்தார்.

"என்ன நடந்த என்ன நடந்த.. ஏன் மூண்டு பேரும் அழுறியள்.."
என்று கொண்டே வந்த கணவனை இழுத்து அவரையும் தங்களோட அமர வைத்த அமுதா, நடந்த விசயத்தை வாயசைத்துச் சொல்ல, இத்தனை நாள் அடக்கி வைத்த அவரது அழுகையும் மகன்களது அழுகையைக் கண்டதும் மெல்ல எட்டிப் பார்க்கவே, மனைவியின் வலது புறத் தோளில் தலை பதித்து தானும் சத்தமின்றி அழத் தொடங்கினார் கவிவாணன்.

தன் நண்பனின் குடும்பமே தங்களுக்காக இவ்விதம் கண்ணீர் விடுவது தெரிந்திருந்தால், போனவர்களின் உயிர் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டிருக்குமோ தெரியவில்லை.

தங்கள் வீட்டில் இருந்து போன இரண்டு அத்தான்களின் முகமுமே சரியில்லை என்பதை உணர்ந்த வான்மதியோ, அப்போது தான் உள்ளே வந்த அபிராமையும் தேனுவையும் அழைத்துக் கொண்டு, தமிழையும் இசையையும் தேடிக் கொண்டு வந்தாள்.

வந்த மூவரும் கண்ட காட்சி அவர்களை எவ்விதமான உணர்வுப் பிடிக்குள் தள்ளி விட்டது என்பதை அவர்களால் கணிக்கவே முடியவில்லை.

அபிராம் ஓடிப் போய் இசையைக் கட்டிக் கொள்ள, தேனு மெல்ல மெல்லப் போய், கவிவாணனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அந்தப் பாசப் பிணைப்பையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்த வான்மதியோ நின்ற இடத்திலேயே சரிந்து அமர்ந்து விட்டாள்.

தாயும் தங்கையும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காட்சியும், தந்தை போன கடைசி நிமிடமும், பள்ளி செல்ல முதல் தனக்கு டாட்டா காட்டிச் சென்ற மூத்த தம்பியின் முகமும் என மாறி மாறி மனக் கண் முன்னே வந்து போக, அப்படியே அமர்ந்திருந்தாள் வான்மதி.

எதேச்சையாக இந்தப் பக்கம் திரும்பிய கவிவாணன், அப்போது தான் வான்மதியைப் பார்த்தார். தேனுவும் அபியும் இழப்பின் துயரத்தை அறியாத பருவத்தில், எல்லா இழப்பையும் ஒட்டுமொத்தமாகத் தனியே தாங்கிக் கொண்ட இரும்புப் பெண் அல்லவா இவள் என நினைத்துக் கொண்டவரோ, அவள் மட்டும் தங்களை விட்டுத் தூரமாக நிற்பதை உணர்ந்தார்.

தன் தோளில் சாய்ந்து இருந்த தேனுவை மெல்ல அமுதாவின் தோளில் தலைசாய்த்து விட்டவர், எழுந்து போய் வான்மதியின் முன்னால் நின்றார்.

தன் முன்னால் வந்து நின்றவரைக் கூட கவனிக்காமல், நிலைகுத்திய பார்வையோடு உட்கார்ந்திருந்த பெண்ணின் தலையை அவர் மெல்ல வருடிக் கொடுக்க, அப்போது தான் திடுக்கிட்டுப் போய் அவரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

வான்மதிக்கு எப்பொழுதுமே நந்தன் வேறு கவிவாணன் வேறு என்று தோன்றியதே இல்லை. இப்போது முன்னால் நின்றவரின் முகத்தில் தன் தந்தையின் சாயலைக் கண்டவளது கண்கள் கலங்கவே, இரண்டு கரங்களையும் விரித்தவரின் கைகளுக்குள் வேகமாக எழுந்து அடைக்கலமானாள் வான்மதி.

தன் தந்தையே தன்னை அணைத்திருப்பது போன்றதொரு உணர்வு அவளது நாடி நரம்புகளுக்குள் எல்லாம் பாய்ந்து, அவளைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்தது.

"இனிமேல் என்ரை மதி.. எதுக்காகவும் ஆருக்காகவும் அழவே கூடாது.. போனது எல்லாம் போகட்டும் இனி நடக்கிறது எல்லாமே நல்லதாவே நடக்கும் எண்டு நம்புவம்.."
என்று கொண்டே தன் அணைப்புக்குள் நின்றிருந்த தன் மகள் போன்ற நண்பனின் மகளது தலையை மெல்லக் கோதி விட்டார் அந்த நல்ல மனிதர்.

அமுதாவும் வந்து தன் பங்குக்கு வான்மதியை அணைத்துக் கொள்ள, தன் தாயின் அணைப்புக்குள் நின்றிருந்த வான்மதியையே பார்த்தபடி நின்றிருந்தான் தமிழ்பரிதி.

தேன்மதி அப்போதும் மெல்ல வந்து
"அப்போ நானு.."
என்று கொண்டே அமுதாவை மற்றப் பக்கம் கட்டிக் கொள்ள,
"நானும் நானும்.."
என்று கொண்டே ஓடி வந்து அந்த ஜோதிக்குள் கலந்து கொண்டான் அபிராம்.

அப்படியே அவர்களுக்கு திருஷ்டி சுத்துவது போல, அவர்களை கைகளால் சுத்தி விரல்களால் நெற்றியில் நெட்டி முறித்தார் கவிவாணன்.

நீண்ட கால துயரத்திற்கு பிறகு, மனதோரம் மெல்லியதான ஒரு நிம்மதியையும் சந்தோஷத்தையும் அந்த நொடி வான்மதி உணர்ந்தாள்.

கடவுள் இத்தனை நாள் தங்களை சோதித்து விட்டு, இப்போது தான் கருணை கொண்டு தங்கள் பக்கம் கண் திறந்தது போல இருந்தது அவளுக்கு, இந்த நினைப்புடனேயே அமுதாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அவள்.

அவளது அணைப்பிலேயே அவளது உள்ளத்தைப் படித்த அமுதாவும், அவளது உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் வைத்தார்.

"கடவுள் இனியாச்சும் என்ரை பிள்ளைக்கு நல்ல நிம்மதியையும் சந்தோஷத்தையும் குடுக்கட்டும்.."
என மானசீகமாக இறைவனை வேண்டிக் கொண்டார் அந்தத் தாய்.

இறுக்கமாக இருந்த அந்தச் சூழலை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டி
"சரி சரி மகளிரணி பாசப் பயிர் வளத்தது காணும்.. எங்களுக்கு கொறிக்க ஏதாச்சும் செய்து குடுக்கிற வழியைப் பாருங்கோவன்.."
எனக் கவிவாணன் சொல்ல
"அதென்ன.. மகளிரணியோ எப்ப பாத்தாலும் கொறிக்கக் கிறிக்க ஏதும் செய்யோணும்.. மகளிரணி கொறிக்க செய்ய போக உங்கடை ஆண்களனி எங்க கொரியாவுக்கு போகப் போறியளோ.."
என்று கொண்டு வந்த தேனுவின் காதை வலிக்காமல் முறுக்கிய அவர்
"அப்புடியே இருக்கிற ஆளெண்டால் அது நீதான்டி தங்கம்.. அப்பவும் இப்பவும் வரிஞ்சு கொண்டு வாற வாயாடி.."
என்று சொல்லி, சூழ்நிலையைக் கலகலப்பாக்கும் பணியில் தேனுவை மெல்ல அவிழ்த்து விட்டார்.

அதன் பிறகு கொறிக்கக் கேட்ட குற்றத்திற்காக, கவிவாணன் தானே ஒரு பலகாரத்தைச் செய்து வர வேண்டியதாகப் போயிற்று.

பலகாரத்தை அவராகச் செய்தார் என்பதை விட, தேனு அவரைச் செய்ய வைத்தாள் என்பது தான் உண்மை.

அன்பான உறவுகள் என்பது கண்டிப்பாக இரத்த சம்பந்தம் உடையவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை, என்பதற்கு இவர்களது உறவு கூட ஒரு உதாரணம் தான் என்பது மிகையல்ல.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கண்ணீரை வரவழைத்த பதிவு 🤧💔
உணர்வுகளின் பிடியில்...