• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூவையின் மொழி 9

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 9 (1)

அந்தி நேரத்து மஞ்சள் வெயில் தன் கைங்கரியத்தால், காணும் இடம் யாவிலும் மஞ்சள் வண்ணத்தை அப்பிக் கொண்டிருக்க, கையில் தேநீர் கோப்பைகளோடு வெளியே வந்தார் சீதா.

சீதாவின் வீட்டு முற்றத்தில் மாமரத்துக்குக் கீழே கதிரைகள் வட்ட வடிவமாகப் போடப்பட்டு இருக்க, அதில் அமர்ந்திருந்தார் அந்தத் தரகர். அவரை அம்பிகை தான் அவசரமாக வரவழைத்திருந்தார்.

"தரகரே.. என்ன மாதிரி நான் சொன்னது எல்லாம் தெரியும் தானே.. குறிப்புகள் எல்லாம் கையோட கொண்டு வந்தனீங்களோ.."

"ஓம் ஓம்.. எல்லாம் தெரியும் அம்மா.. அதோட எல்லாம் எடுத்துக் கொண்டு தான் நான் உங்களைப் பாக்க வந்ததே.."

"சரி சரி.. இப்ப எந்த எந்தக் குறிப்புகள் பொருந்தி வருகுது எண்டு பாத்திட்டியளோ.. அதைப் பத்திக் கேக்கத் தான் கூப்பிட்டனான்..

"ஓமம்மா.. என்ன விஷயம் எண்டால் தம்பியிந்தை குறிப்பிக்கு ரெண்டே ரெண்டு குறிப்புத் தானம்மா பொருந்துது.. அதிலயும் ஒண்டு எண்பது பொருத்தம் ஒண்டு எண்பத்தைஞ்சு பொருத்தம்.."

"சரி அந்த எண்பத்தைஞ்சு பொருத்தத்தை எடுங்கோ.. என்ன மாதிரி எண்டு ஒருக்காப் பாப்பம்.."

"பொண்ணு கரவெட்டி.. வயது முப்பத்தொண்டு.. தாய்திகப்பனுக்கு ஒண்டே ஒண்டு கண்ணே கண்ணு எண்டுற மாதிரி ஒரு பிள்ளை தான்.. அதனால சீதனத்துல ஒரு குறைவும் வராது.. வீடு வளவு காணி பூமி நகை நட்டெல்லாம் மிகளுக்குத் தானாம்.. அவை அதைச் சொல்லித் தான் வரன் பாக்கவே குறிப்பைக் குடுத்திருக்கினம்.."

"சீதனத்தை இப்ப ஆர் கேட்டது.. சீதனத்தைப் பிறகு ஆறுதலா யோசிச்சுப் போட்டுப் பாப்பம்.. அந்தப் பெட்டை என்ன மாதிரி சுபாவங்கள்.."

"சும்மா சோக்கான பிள்ளை.. நம்பிக் குடும்பத்துக்க எடுக்கலாம்.. பிள்ளைக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை தான் பாக்கினம்.. அது தான் நானும் உடன நீங்கள் குடுத்த உங்கடை பேரனிந்தை குறிப்போட பொருத்திப் பாத்தனான்.."

"அப்புடியெண்டா நல்லதாப் போச்சுது.. நாங்களும் வெளிநாடு தானே.. அதனால இது தோதுப்படும் எண்டு நினைக்கிறன்.."
என அம்பிகை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, வெளியே போய் விட்டு உள்ளே வந்து கொண்டிருந்த அமுதாவும் கவிவாணனும் அவரை நோக்கி வந்தார்கள்.

"என்னம்மா.. எப்புடியெண்டா நல்லாப் போச்சுது.. நாங்கள் வெளிநாடு எண்டதால என்ன தோதுப்படும்.."
என்று கொண்டே தாய்க்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டார் அமுதா.

கவிவாணனோ நின்றவாக்கிலேயே அருகேயிருந்த தரகரையும் அவர் வைத்திருந்த குறிப்புகளையும் கேள்வியாகப் பார்த்தார்.

தரகரை பிறகு பேசுவதாக அனுப்பி விட்டு, மகளிடமும் மருமகனிடமும் திரும்பினார் அம்பிகை.

"அது ஒண்டுமில்லையடி பிள்ளை.. மூத்தவனுக்கு இங்கின வரன் பாக்கச் சொல்லிக் குறிப்புக் குடுத்து விட்டனான்.. அது தான் அது விசயமா ரெண்டு குறிப்பு அவனுக்குப் பொருந்தி வருதாமாம்.. அதில எது நல்லா இருக்குது எண்டு பாத்துக் கொண்டு இருந்தனான்.."

"என்னம்மா நீங்கள் விளையாடுறியளே.."

"ஏன்டி என்ன.. நான் ஏன் விளையாடோணும்.."

"உங்களுக்கு என்டை முடிவு தெரியும் தானே.."

"ஓ அதுக்கென்ன இப்ப.."

"ஓ அதுக்கென்ன இப்பவோ.. என்னம்மா நீங்கள்.."

"இஞ்சை பார் அமுதா.. முதல் இருந்த விஷயம் வேறை.. இப்ப இருக்கிற விஷயம் வேறை.."

"எனக்கு விளங்கேல்லை.. எங்கடை நிலா வயதுக்கு வந்த உடனேயே நானும் அவரும் நந்தனண்ணாட்டை கதைச்ச விஷயம் எனக்கு இப்பவும் அப்புடியே நினைவுல நிக்குதம்மா.. அப்ப இருந்து இந்தா இப்ப வரை நாங்கள் ரெண்டு பேரும் உறுதியாத் தான் இருக்கிறம்.. அதோட என்ரை மூத்தவனுக்கு இப்ப வயசு முப்பத்திநாலு.. அவனுக்கு இவ்வளவு காலமா நாங்களா வரன் பாக்காமல் இருக்கக் காரணமே நந்தனண்ணாக்குக் குடுத்த வாக்குத் தான்.. அது தெரிஞ்ச நீங்களே இப்புடிச் செய்யலாமோ.."
என்ற அமுதாவுக்கு அழுகை வரும் போல இருக்கவே அவர் வேகமாக உள்ளே போய் விட்டார்.

மகள் போன திக்கை விட்டு தன் மருமகன் பக்கம் திரும்பினார் அம்பிகை.

"என்ன தம்பி.. அவள் தான் விளங்காமக் கதைக்கிறாள் எண்டால்.. நீங்களும் பாத்துக் கொண்டு சும்மா நிக்கிறியளே.."

"என்ரை மனுஷி சொன்னதில என்ன பிழை இருக்கு மாமி.. நாங்கள் அதில உறுதியாத் தான் இருக்கிறம்.. அதிலயும் இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு மதியைப் பாத்த பிறகு அடுத்த வார்த்தைக்கு அவசியமே இல்லை.."
என்று கொண்டே அவரும் உள்ளே போய் விட்டார்.

மகளையும் மருமகனையும் மானசீகமாகத் திட்டிக் கொண்டு தானும் உள்ளே வந்தார் அம்பிகை.

அமுதாவுக்கு வான்மதி பிறந்த காலம் தொட்டே அவள் மீது அலாதிப் பிரியம், அவருக்கு பெண்பிள்ளை இல்லை என்ற குறையை அவள் தான் தீர்த்து வைத்தாள் என்று கூட சொல்லலாம்.

அவள் பிறந்த போதே இவள் தான் தன் வீட்டு மூத்தமருமகள் என்று கூட அவர் முடிவு செய்திருந்தார். பின்னரும் குழந்தைகள் வளர்ந்து வரும் காலத்தில் அவர்கள் வேறு யாரையும் நேசித்தால் என்ன செய்வது என்கிற எண்ணத்தில், தன் விருப்பத்தைத் தன்னுள்ளேயே வைத்திருந்தார்.

காலப் போக்கில் தமிழும் வான்மதியும் பழகிக் கொள்ளும் விதமே அவரை மிகவும் கவரத்தான் செய்தது, வான்மதி 'தமிழத்தான்' என்று கொண்டே மகனைச் சுற்றி வருவதைப் பார்க்கையில், வான்மதி தங்கள் வீட்டுக்காக பிறந்த மகாலக்ஷ்மி என அவர் முடிவே செய்து விட்டார்.

வான்மதி வயதுப் பெண்ணான பின்னர், தன் விருப்பத்தைப் பற்றித் தனது கணவனிடம் அமுதா தெரிவிக்க, அதே விருப்பத்தில் தான் கவிவாணனும் இருந்தார் என்பதால் நந்தனிடமும் ஞானகியிடமும் இது பற்றி இருவரும் பேச முடிவு செய்தார்கள்.

"என்ன கவி.. வந்த நேரத்துல இருந்து ஒராள்ரை முகத்தை ஒராள் பாத்துக் கொண்டே இருக்கிறியளே தவிர வாயைத் திறந்து கதைக்கிறபாட்டைக் காணோமே.."

"அண்ணா.. நான் தான் உங்களிட்டை ஒண்டு கேக்கோணும் எண்டு சொல்லி இவரையும் கூட்டிக் கொண்டு வந்தனான்.."

"சரி கேக்க வந்ததைக் கேக்க வேண்டியது தானே தங்கச்சி.."

"நீங்கள் ஒண்டும் தப்பா எடுத்துக் கொள்ளக் கூடாது அண்ணா.."

"நான் ஏன் தங்கச்சி உன்னைத் தப்பா எடுத்துக் கொள்ளப் போறன்.. நீ கேளு.."

"அண்ணா.. எனக்கு எங்கடை நிலா எனக்கு மூத்த மருமகளா வர வேணும் எண்டு விருப்பம்.. இது இண்டைக்கு நேத்தைக்கு வந்த விருப்பம் இல்லை.. அவளை என்ரை கையில தூக்கின காலம் தொட்டு வந்த விருப்பம் அண்ணா.. ஆனாலும் பிள்ளையள் ரெண்டும் வளர வளர என்ன மாதிரி விருப்பப்படுதுகளோ எண்டு தெரியாது எல்லோ.. அதனால கடவுள்ள பாரத்தைப் போட்டிட்டு பேசாமல் இருந்திட்டன்.. ஆனா நிலாவும் தமிழும் ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்வளவு பாசமா இருக்கிறதைப் பாக்கும் போது.. உங்களிட்டையும் ஒரு வார்த்தை கேட்டு வைக்கிறது நல்லம் எண்டு எனக்குத் தோணிச்சுது அது தான்.."
என அமுதவாணி முடிப்பதற்குள், கையில் தேநீர் கோப்பைகளோடு வந்த ஞானகி
"ஐயோ.. எப்புடி அமுதா என்னை மாதிரியே உனக்கும் தோணி இருக்குது.. நான் கூடத் தமிழை இவள் நிலாக்குக் கட்டி வைச்சால் எவ்வளவு நல்லா இருக்கும் எண்டு நினைக்காத நாள் இல்லை.."
என்று கொண்டே வந்து, தேநீர் கோப்பைகளை வைத்து விட்டு, அமுதாவை அணைத்துக் கொண்டார்.

பிறகு அவரை மெல்ல விடுவித்துக் கொண்டு
"இந்த மனுஷனை என்ன கேக்கிறது.. மகளைப் பெத்தவள் நான் சொல்லுறன் நிலாக்கு தமிழ் தான்.. தமிழுக்கு நிலா தான்.."
என்று சொல்ல
"அடியேய் ஞானு.. நான் ஒண்டும் மாட்டன் எண்டோ வேண்டாம் எண்டோ சொல்லலியேடியம்மா.."
எனப் பாவமாகச் சொன்னார் நந்தன்.

"நந்தூ.. பிள்ளையள் ரெண்டும் நாளைக்கு பின்னால கம்பஸ் போன பிறகு.. வேறை ஆரையும் விரும்புதுகளோ தெரியேல்லை.. அப்புடி ஒருவேளை நடக்காமல் இருந்து பிள்ளையளுக்கு நாங்கள் தான் வரன் பாக்கிறது எண்டால்.. கண்டிப்பா தமிழ் நிலாக்கு தான்.. நிலா தமிழுக்கு தான்.."
எனக் கவிவாணனும் தன் பங்குக்கு சொல்ல, அன்று முடிவாகிப் போனது வான்மதி தமிழ்பரிதிக்கான முடிச்சு.

அதன் பிறகு கவிவாணன் குடும்பம் வெளிநாடு செல்ல முடிவான பின்னரும் ஒரு நாள் சில சம்பாஷணைகள் நடைபெற்றன.

"ஏன் ஞானு.. நாங்கள் லண்டன் போன பிறகு.. திரும்பி வர எத்தினை வருஷம் ஆகுமோ தெரியேல்லை எண்டிட்டு நிலாவை வேறை ஆருக்கும் கட்டிக் குடுத்திடுவீங்களோ.."

"என்ன கதை கதைக்கிறாய் அமுதம்.. நானே தமிழ் வெளிநாட்டுல வெள்ளைக்காரியள் ஆரையும் பாத்து விரும்பினால் என்ன செய்யிறது எண்டு யோசிச்சுக் கொண்டு இருக்கிறன்.. நீ என்ன இப்புடிக் கேக்கிறாய்.."

"அதெல்லாம் அவன் அப்புடி விரும்ப மாட்டான் எண்டு நான் நம்புறன் ஞானு.."

"அப்புடி நடந்தால் நல்லது தானே.."

"ஞானு.. எனக்கு என்னவோ என்ரை ஆழ் மனசு சொல்லுது ரெண்டு பேருக்கும் தான் கடவுள் முடிச்சுப் போடுவாரெண்டு சொல்லி.. இருந்தாலும் அண்ணாக்கும் உனக்கும் நாங்கள் ரெண்டு பேரும் சத்தியம் பண்ணி வாக்கு குடுக்கிறம்.. நாங்கள் நிலாவை விட்டு வேறை எந்தப் பிள்ளையையும் எங்கடை மூத்த மகனுக்காக வரன் பாக்க மாட்டம்.."

"நானும் இவரும் கூட உங்கள் ரெண்டு பேருக்கும் மறு வாக்கு குடுக்கிறம் அமுதம்.. என்ரை மூத்தவளுக்கு தமிழ் தவிர வேறை மாப்பிள்ளை பாக்க மாட்டம்.."

"ரொம்ப ரொம்ப நன்றி ஞானு.."

"இதுல நன்றி சொல்ல என்ன கிடக்குது அமுதம்.. என்னைக் கேட்டால் பெத்த பொண்ணுக்கு ஒரு நல்ல பையனைக் கஷ்டப் பட்டுத் தேடிப் பிடிச்சுக் கட்டி வைக்க வேண்டிய இடத்துல.. நான் கஷ்டப் படாமலேயே எனக்கு ஒரு நல்ல மருமகன் கிடைக்கப் போறான் எண்டுறது எவ்வளவு பெரிய சந்தோஷம்.. அதைக் குடுத்த உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லோணும்.."
என ஞானகி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கே வந்து சேர்ந்த அம்பிகை தன் பங்குக்கு சில வார்த்தைகளை அவிழ்த்து விட்டார்.

"நீங்கள் நாலு பேரும் சொல்லுறதைக் கேக்கும் போது சந்தோஷமாத் தான் கிடக்குது.. ஆனா நாளைக்கு இங்க இருக்கிற மதி இங்க ஆரும் பெடியனையோ இல்லாட்டிக்கு வெளிநாட்டுல இருக்கப் போற தமிழ் அங்க இருக்கிற ஆரும் பெட்டையையோ விரும்பினால் என்ன செய்யிறது.. அதனால அவசரப் பட்டு வாக்குக் குடுக்காதேங்கோ.."

"அம்மா.. அதெல்லாம் தெரிஞ்சு தான் நாங்கள் வாக்கு குடுத்தம்.. அதோட இந்த விஷயத்தைப் பத்தி ஏற்கனவே கதைச்சாச்சுது.. அதாவது பிள்ளையள் ரெண்டும் ஆரையும் விரும்பாத பட்சத்தில.. நாங்களா அவைக்கு வரன் பாக்கிற பட்சத்தில.. நிலாவுக்கு தமிழ்.. தமிழுக்கு நிலா.. இது தான் எங்கடை முடிவம்மா.."
என அமுதம் குறுக்கிட்டு அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப் புள்ளி வைத்தார்.

இது தான் அந்த இரண்டு குடும்பத்துக்கும் இறுதியாக உறுதியாக நடந்த உரையாடல்.
 
  • Love
Reactions: Kameswari

MK5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
33
39
18
Thanavur
மொழி 9 (2)

கிட்டத்தட்ட தன் மேல் கோபங் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே போன, மகளையும் மருமகனையும் தொடர்ந்து தானும் உள்ளே வந்த அம்பிகை, இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் பேசாமல் நின்றிருந்தார்.

"என்னம்மா.. ஏன் இப்ப நீங்கள் கோபமா நிக்கிறியள்.. நாங்கள் தான் நியாயமாக் கோபப் படோணும்.. இப்ப தமிழுக்கு வெளியால வரன் பாக்குற அளவுக்கு மதியில உங்களுக்கு அப்புடி என்ன கோபம்.."

"அவளில எனக்கு என்னடி கோபம் வேண்டிக் கிடக்குது.. அப்புடி ஒரு கோபமும் இல்லை.."

"பிறகு என்னத்துக்கு தமிழுக்கு வெளியால வரன் பாக்கிறியள்.. நாங்கள் தமிழுக்கு நிலாவைத் தான் கட்டி வைக்கோணும் எண்டு சத்தியம் செய்து குடுக்கேக்குள்ள நீங்களும் பக்கத்தில நிண்டனியள் தானேம்மா.."

"ஓமடி பிள்ளை நிண்டனான் தான்.. உனக்கு எப்புடியோ எனக்குத் தெரியாது.. என்ரை பேரனுக்கு ஒரு வாய்பேசாத ஊமையைக் கட்டிக் குடுக்கிறது எனக்கு விருப்பம் இல்லை.."

"அம்மாஆஆஆ.."

"என்னடி அம்மா.. நான் என்ரை மனசுல தோணுற உண்மையைத் தான் சொல்லுறன்.. அதுக்காக மதியில எனக்குப் பாசம் எல்லாம் இல்லை எண்டு இல்லை.. அவளுக்கும் அவளுக்கு ஏத்த மாதிரி ஒரு வாய்பேச முடியாத ஊமைப் பெடியனாப் பாத்து நாங்களே கட்டி வைப்பம்.. அது தான் ரெண்டு பேருக்குமே நல்லது.."

"காணும் நிப்பாட்டுங்கோம்மா.. உங்கடை மனசுக்குள்ள எப்புடி இப்புடி ஒரு அழுக்கு வந்தது அம்மா.. நான் இதைக் கொஞ்சம் கூட உங்களிட்டை இருந்து எதிர்பாக்கவே இல்லை.."

"இதுல என்ன அழுக்கு வேண்டிக் கிடக்குது.. நாளைக்குப் பின்ன பிறக்கிற குழந்தையும் ஊமையாப் பிறந்தால் என்ன செய்யிறது சொல்லு.."
என்று கேட்ட அம்பிகையை, இவருக்கு என்னதான் நடந்தது என்பது போலப் பார்த்திருந்த கவிவாணன்
"மாமி.. என்ன நீங்கள்.. மதி ஒண்டும் பிறக்கும் போதே வாய் பேச முடியாமல் பிறந்த பிள்ளை இல்லை.. அவளுக்கு யுத்தத்தில பட்ட செல்லால தான் பேச்சுப் போனது.. அப்புடி இருக்க இது என்ன.. அதோட இதென்ன கதை மாமி.. நீங்கள் இப்புடிக் கதைக்கிறது எனக்குச் சரியான கஷ்டமாக் கிடக்குது.. இப்புடி மனசுக்குள்ள கூட நினைக்காதேங்கோ பிளீஸ்.."
என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.

தாயையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அமுதா
"அம்மா.. முடிவாச் சொல்லுறன் என்ரை மூத்தவனுக்கு என்ரை நிலா தான்.. நிலா மட்டும் தான்.. இனிமேல் ஏதாவது தேவையில்லாமல் யோசிச்சு.. தேவையில்லாத வேலை பாக்காதேங்கோ சொல்லீட்டன்.."
என்று கொண்டே எழுந்து, தன் கணவனைப் பார்த்து
"நான் இப்பவே போய்.. தமிழிட்டைக் கதைக்கப் போறன் அத்தான்.. இனியும் நான் சும்மா இருந்தால் வீண் மனக் கஷ்டங்கள் தான் மிஞ்சும்.."
என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே போனார்.

அவர்கள் மூவரும் இருந்த அறைக்குப் பக்கத்து அறைக்குள் தமிழ் இருந்ததை மூவரும் அறியவில்லை.

தன் காதுவழி கேட்ட விஷயத்தில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய் அப்படியே நின்று விட்டான் தமிழ்பரிதி.

அவனுக்கு அந்தக் கணத்தில் தான் தன் மனதே புரிந்தது, எத்தனை பெண்கள் தன்னிடம் வந்து ரோஜாப் பூக் குடுக்காத குறையாகத் தங்கள் காதலை நேசத்தைச் சொல்லியிருப்பார்கள், காரணமே இல்லாமல் அதையெல்லாம் விலத்திக் கொண்டு தான் ஏன் வந்தேனென்று அவனுக்கு அப்போது தான் புரிந்தது.

அவனுடைய பப்பியைத் தவிர அவனால் வேறு பெண்களை நேசிக்க முடியாது என்பது தான் உண்மை என்பதை அந்தக் கணம் தான் அவன் உணர்ந்தான்.

அப்படி ஒரு உணர்வு தோன்றிய கணத்திலேயே,
'பப்பிக்கும் என் மீது நேசம் இருக்குமா.. ஒருவேளை அவள் வேறு யார் மீதேனும் நேசம் வைத்திருப்பாளோ..'
என்ற கேள்விகளும் தோன்றின.

அந்த நேரத்தில் தான் அவனைத் தேடிக் கொண்டு உள்ளே வந்தார் அமுதா, வந்தவரோ எந்தச் சுத்திவளைப்பும் இல்லாமல்,
"தமிழு.. உனக்கு நிலாவைக் கட்டி வைக்கலாம் எண்டு அப்பாவும் நானும் விரும்புறம்.. நீ என்ன நினைக்கிறாய்.."
என்று சட்டென்று கேட்டு வைக்க,
"உங்கடை விருப்பம் போலச் செய்யுங்கோம்மா.."
எனத் தானும் பட்டென்று சொல்லி விட்டான் தமிழ்பரிதி.

தாயிடம் அவ்விதம் சொன்னாலும், வான்மதியின் மனதில் யாரும் இருப்பார்களோ என்கிற எண்ணம் அவனை லேசாகத் துளைத்துக் கொண்டு தான் இருந்தது. அதே எண்ணத்தோடு வான்மதியைத் தேடிக் கொண்டு போனவனை, தன் அறைக்குள் இருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த வான்மதியின் தோற்றம் தான் வரவேற்றது.

வாசல் நிலையோடு சாய்ந்து நின்று, அவள் எழுதி முடிக்கும் வரை அமைதியாக இருந்தான் தமிழ்.

தனது டயரியில் தமிழ் பற்றிய தன் மனத்து விருப்பத்தைத் தான் வான்மதியும் எழுதிக் கொண்டிருந்தாள், எழுதி முடித்து விட்டு மெல்ல எழுந்தவள், ஏதோவொரு உந்துதலில் திரும்பிப் பார்த்தாள்.

பார்த்தவள் தன் எண்ணத்தினதும் எழுத்தினதும் நாயகனை அங்கு பார்த்ததும், லேசான பதட்டத்தோடு டயரியை வேகமாக மூட, அவளது செயலில் புருவம் உயர்த்தியவனோ, நிதானமாக நடந்து வந்து அவளது டயரியை அவளிடம் இருந்து எடுத்தான்.

அவன் தனது டயரியை எடுக்கிறான் என்பதைப் பார்த்திருந்தவளுக்கு, அதை அவனிடம் இருந்து பறிக்கக் கூடத் தோன்றாது அவன் முகத்தையே பார்த்தபடி திகைத்து நின்றிருந்தாள்.

டயரியை வாங்கியவன் அதைத் திறந்து பார்க்க வேண்டிய தேவையே இல்லாமல், அதன் முன் அட்டையிலேயே அழகான மினுங்கல் நிறத்தில் 'தமிழ் பப்பி' என ஒரு இதயத்துக்குள் எழுதி இருப்பதைப் பார்த்ததும், இன்பமாக அதிர்ந்தான்.

அந்த இதயத்தைப் பார்த்ததும், டயரியைத் திறக்கும் தயக்கம் இல்லாமல் போகவே, அதை விரித்தவனது கண்கள் வழியே இதயத்துக்குள் புகுந்து சப்பணம் இட்டு அமர்ந்து கொண்டது, அவனது பப்பியின் அவன் மீதான காதல்.

டயரியை முழுதும் படிக்காமலேயே தன் இதயங் கவர்ந்தவளது இதயத்துக்குள் தான் மட்டும் தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்தத் தருணம், எப்படி உணர்ந்தான் என அவனுக்கே தெரியவில்லை.

தன் பப்பி குட்டிப் பெண்ணாக இருந்த காலம் தொட்டே, தன்னை நேசித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு அத்தனை உவப்பாக இருந்தது.

அதோடு இதற்கு மேலும் அவளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என நினைத்தவன்,
"ஐ லவ் யூ பப்பீ.."
என்று கொண்டே அவளுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.

தமிழிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையையோ செயலையோ எதிர்பாராத வான்மதிக்கு, தொண்டைக்குள் இருந்து வார்த்தைகள் வெளிவரத் துடிக்கவே, அது முடியாமல் போய் அவளது வார்த்தைகள் கண்ணீராய் உருக் கொண்டு அவளது கன்னம் தொட்டது.

வான்மதியின் கண்ணீரைப் பார்த்தவனுக்கு அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

வேகமாக எழுந்தவன் ஒரு கணம் தயங்கிப் பின்னர் அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்புக்குள் அடங்கி நின்றவளுக்கோ, அழுகையை அடக்க முடியவில்லை, தன் அத்தானும் தன்னைத் தான் நேசித்தாரா என்பதை, குறித்த இந்தக் கணப்பொழுதுகளில், தனக்குள் நிறையத் தடவைகள் கேட்டு விட்டாள் அவள்.

இருவருக்குமே அந்த மோனநிலையே போதுமானதாக இருக்க, இருவருமே அந்த நிமிடங்களில் யுகம் யுகமாக வாழ்ந்து முடித்தார்கள்.

தன் அணைப்பில் இருந்தவளது முகத்தை மெல்ல நிமிர்த்தியவன், அவள் நெற்றியில் மெல்லிய முத்தம் ஒன்றை வைத்து விட்டு,
"எனக்கு என்ன கதைக்கிறது என்டே தெரியேல்லை பப்பி.. உன்னைத் தேடிக் கொண்டு உள்ள வர்ர வரைக்கும் நீ ஆரையும் நேசிக்கிறியோ எண்டு எப்புடிப் பயந்து கொண்டு வந்தனான் தெரியுமோ.. ஆனா நீ அப்போதையில இருந்தே என்னைய மட்டும் தான் நேசிச்சு இருக்கிறாய் எண்டுறதை நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமோ.."
என்று கொண்டே மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.

"ஐ.. தமிழத்தான் நீங்கள் எங்கடை அக்காவைத் தான் கட்டிக்கப் போறீங்களா.. அப்போ நீங்கள் நிஜமாவே எங்களுக்குச் சொந்த அத்தானா.."
என்று கொண்டே துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தான் அபிராம்.

அவனது சத்தத்தில் சட்டென்று தன் அணைப்பை விலக்கியவன், வான்மதியைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு தலையை மெல்லக் கோதியபடி,
"ஆமான்டா தங்கம்.. நான் தான் எப்பவுமே உனக்கு அத்தான்.."
என்று கொண்டே அபிராமின் தோளில் கை போட்டு அவனை வெளியே அழைத்துச் சென்று விட்டான் தமிழ்.

அதே நேரத்தில் உள்ளே வந்த தேன்மதி
"அக்கா.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது எண்டு தெரியுமோ.. அவையள் எங்களில எவ்வளவு பாசம் வைச்சிருந்தாலும்.. நாளைக்கு அவைக்கு எண்டு மருமகள் வந்தால் அவாவால எங்கடை உறவுகளுக்குள்ள ஏதும் பிக்கல் பிடுங்கல் வருமோண்டு எனக்குக் கவலையாக் கிடந்தது அக்கா.. இனி அந்தக் கவலைக்கே இடமில்லை.. இனிமேல் தமிழத்தான் எங்களுக்கு மட்டும் தான் அத்தான்.. அதோட இனி நான் அவரைத் தைரியமா உரிமையா உரிமை கொண்டாடுவன்.."
எனும் போதே அவளது முகம் பளிச்சென்று பிரகாசித்தது.

அந்த நேரத்தில் உள்ளே வந்த இசை முதலில் பார்த்தது, தேன்மதியின் சந்தோஷமான அந்த முகத்தைத் தான், இங்கே வந்த நாள் தொட்டு அவளது முகத்தில் இப்படி ஒரு சந்தோஷத்தை அவன் பார்க்கவேயில்லை.

அவளது சந்தோஷத்தைப் பார்த்த சந்தோஷமும், ஏற்கனவே இருந்த அண்ணனதும் மதியினதும் திருமணம் பற்றிய சந்தோஷத்தோடு தொற்றிக் கொள்ள இசையின் சந்தோஷம் இரட்டிப்பாகிப் போனது.

அதே சந்தோஷத்தோடு வான்மதியின் அருகில் வந்தவன், அவளைது கரத்தைப் பற்றித் தலையை மெல்ல வருடி விட்டு
"ப்பா.. எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா மதீ.. எங்கள்ரை மதியே எனக்கு அண்ணி எண்டு நினைக்க எனக்கு அப்புடிச் சந்தோஷமாக் கிடக்குது.. உனக்கு மட்டும் ஒரு உண்மை சொல்லட்டுமா மதீ.. என்ரை அண்ணாக்கு வரப் போற மனைவி எந்த மாதிரி இருப்பாங்களோ.. எனக்கும் என்ரை அண்ணாக்கும் நடுவுல ஏதும் பிரிவினையை உண்டுசெய்திடுவாங்களோனு ஒரு பயம் எனக்கு உள்ளூர இருந்து கொண்டே இருந்தது.. என்ரை பிரெண்ட்ஸ்ல பாதிப் பேரோட வாழ்க்கையில இப்புடித் தான் அண்ணன் தம்பிக்குள்ள அண்ணிமாரால சண்டை சச்சரவு தான் வாரது.. அது தான் எனக்கு அப்புடியொரு பயம்.. ஆனா இனிமேல் எனக்கு அப்புடி ஒரு கவலையே இல்லை.. என்ரை மதி மாதிரி ஒரு அண்ணி கிடைக்க நான் கோடி புண்ணியம் செஞ்சிருக்கோணும்.."
என்று சொல்லியபடி மெல்லப் புன்னகைத்தான்.

அவர்கள் இருவருக்கும் முன்னால் நின்றபடி, இசை பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேனு. இந்த இசை அவளுக்குப் புதிது. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் அவளோடு வம்பிழுக்கும் இசை மட்டும் தான். முதல் முறையாக ஒரு பக்குவப்பட்ட ஆண்மகனாக அவளின் விழிகளுக்கு அவன் தெரிந்தான்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
நல்லவேளை அம்பிகை பாட்டி பேசினதை வான்மதி கேட்கலை 🤧 கேட்டிருந்தா சீனே வேற... 🧐

சூப்பர் எபி👌❤️