• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பெண் போலிஸ் - முனைவர் க.வீரமணி

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
869
பெண் போலீஸ்.

சிறுகதை!


முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது.

ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ் திலகவதிக்கும் இன்று டியூட்டி.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் அவள் காலை 7 மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறாள். முதலமைச்சரின் கான்வாய் தோராயமாக பதினோரு மணி அளவில் கடக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

மணி 9 ஆகிவிட்டது. கட்சிக்காரர்களும் பொதுமக்களும் சாலையின் இருமருங்கிலும் கூட தொடங்கிவிட்டனர். கொடிகள், பேனர்கள், கட் அவுட்டுகள் என சாலை பரபரத்துக் கிடக்கிறது.

திலகா இன்று அவசர அவசரமாய் யூனிபார்மை மாட்டிக்கொண்டு வண்டியை எடுத்து கொண்டு டியூட்டி இடத்துக்கு வந்துவிட்டாள்.

நேரம் ஆகிவிட்டதால் ஒரு முக்கியமான வேலையை செய்யாமல் வந்துவிட்டாள். எப்போது டியூட்டி கிளம்பினாலும், பாத்ரூம் போய்விட்டு வருவது தான் அவள் வழக்கம்.

இன்று கொஞ்சம் வீட்டில் வேலை அதிகம் இருந்ததால் நேரம் ஆகிவிட்டது அவசர அவசரமாக கிளம்பி இங்கு வந்து நிற்கிறாள்.

இங்கு எந்த வசதியும் இல்லை. இந்த இடத்தை விட்டு இப்போதைக்கு நகரவும் முடியாது. அவளுக்கு வயிறு லேசாய் உப்பிக்கொண்டு வலிக்க தொடங்கியது.

முதலமைச்சரின் வாகனம் இந்த வழியாக கடந்து போன பின்பு தான் பாத்ரூம் போக வாய்ப்பு. அதுவரை ரௌத்திரம் பழக வேண்டும்.

அவளுக்கு இது ஒன்றும் புதிதல்ல, பன்னிரெண்டு வருடம் ஆகிவிட்டது. இந்த போலீஸ் வாழ்க்கையில், கான்ஸ்டபிள் பதவியிலேயே திலகவதியின் வாழ்க்கை கழிகிறது.

வேலைக்கும் குடும்பத்துக்கும் நேரம் செலவழிப்பது சரியாக இருக்கிறது. பதவி உயர்வுக்கு என்று எதுவும் அவளால் செய்ய முடியவில்லை.

அவளுக்குப் பின்னால் வேலைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் தேர்வு எழுதி பதவி உயர்வு பெற்று போய்விட்டார்கள். இது பற்றிய ஒரு சின்ன வருத்தம் திலகவதிக்கு அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் அவள் சொந்த வாழ்க்கை ரம்யமாகத்தான் போகிறது.

திலகவதி போலீஸ் துறையிலேயே வேலை பார்த்த ரகுராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். ரகுராமன் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறான்.

இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அம்மாவின் துணையால் பிள்ளை வளர்ப்பது ஓரளவுக்கு பிரச்சனை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இன்று கூட குழந்தை ஜுரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு இங்கு டியூட்டிக்கு வந்து விட்டாள்.

திடீரென்று குழந்தை ஞாபகம் வந்து வீட்டுக்கு போன் செய்தாள். ‘குழந்தைக்கு ஜுரம் சுத்தமாக விட்டு விட்டது என்றும் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு நன்றாக விளையாடுகிறாள்’ என்றும் அம்மாவிடமிருந்து செய்தி வந்தது.

அவளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒருவாரமாய் இருந்த கவலை தீர்ந்தது. ஆனாலும் இந்த பாத்ரூம் பிரச்சினை, வயிற்று வலி அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் செய்கிறது.

மணி பத்தை நெருங்குகிறது. முதலமைச்சரின் வருகை பற்றி தகவல்கள் மாறிமாறி வருகின்றன. இருந்தாலும் அதிகாரிகள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

திலகவதிக்கு ‘எப்படா இந்த டியூட்டி முடியும்?’ என்று இருந்தது.

திலகவதியின் போன் ஒலித்தது. மறுமுனையில் அவள் கணவன் ரகுராம் பேசினான். மறுபடியும் ஒரு நல்ல செய்தி.

அவள் கணவன் கடந்த ஒரு மாதமாக ஒரு துறை ரீதியான பிரச்சனையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மிகவும் மன உளைச்சலில் இருந்து கொண்டிருந்தான்.

செய்யாத தவறுக்கு கிடைத்த தண்டனையால் ரொம்பவும் நொந்து போயிருந்தான். திலகாவுக்கும் இது பெரும் யோசனையாகவே இருந்து கொண்டிருந்தது.

இன்று அந்த வழக்கு முடிவுக்கு வந்து ரகுராமன் மீது தவறில்லை என்று தீர்ப்பாகி அவனை மீண்டும் பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியை அவளுக்கு அவன் போனில் மிகவும் உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி இருந்தும் இந்த சந்தோசத்தையும் அனுபவிக்க முடியவில்லை.

நேரம் நீண்டு கொண்டே இருந்தது. முதலமைச்சர் மீட்டிங் முடிந்து கோட்டையிலிருந்து கிளம்பி விட்டதாகவும், சரியாக ஒரு மணிக்கு இந்த சாலையை கடந்து விடுவார் என்றும் சொன்னார்கள்.

முதலமைச்சரைக் காண, தடுப்புகளையும் மீறி மக்கள் குவிந்து கொண்டிருந்தனர். கையில் மனுவுடனும், மாலை, கொடி தோரணங்களுடனும் பெரும் கூட்டம் ஆர்ப்பரித்து நின்று கொண்டிருந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்குமிங்கும் நோட்டமிட்டபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.

திலகா நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்சிக்கார இளைஞரணி தம்பி திலகவதியிடம், “அக்கா கூல்டிரிங்ஸ் குடிங்கக்கா” என்று பாட்டிலை நீட்டி கேட்டுக் கொண்டிருந்தான்.

“வேண

்டாம்” என்று மறுத்தாலும் அவன் விடுவதாக இல்லை. “குடிங்கக்கா” என்று மறுபடியும், மறுபடியும் திலகவதியின் நிலைமை புரியாமல் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

“நாங்கல்லாம் கொடுத்தா குடிப்பீங்களா?” என்று வசனம் வேறு.

திலகவதிக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. எரிச்சலாக வந்தது. “ஏற்கனவே இங்க உயிர் போய், உயிர் வருது. இவன் வேற இம்சை” என்று முனகி கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

ஆனால் திலகவதிக்கு இன்று எல்லாமே நன்றாகத்தான் நடக்கிறது. குழந்தைக்கு ஜுரம் சரியாகி விட்டது. காதல் கணவனின் ஒரு மாதகால துயர் முடிவுக்கு வந்தது.

நல்ல செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும் இந்த உபாதை எதையும் ரசிக்க முடியாமல் செய்து கொண்டிருக்கிறது.

‘சரி எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான்.’ என்று தன்னை சமாதானப்படுத்தி நின்று கொண்டிருந்தாள்.

‘இன்னும் சற்று நேரத்தில் முதல் அமைச்சரின் வாகனம் கடந்து சென்று விடும். பின்பு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.’

சரியாக பத்து நிமிடத்தில் முதலமைச்சர் வாகனம் வந்துவிட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒரு முதியவர் கையில் மனுவுடன் திலகவதி நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேராக, முதலமைச்சரின் வாகனத்தை நோக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து விட்டார்.

சட்டென்று சுதாரித்த திலகவதி, அவரை அப்படியே அலேக்காக தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டு சாலையோரத்தில் மண் தரையில் விழுந்தாள்.

கொஞ்சம் தாமதித்தாலும் அந்த முதியவர் வண்டிக்கு அடியில் போயிருப்பார்.

மிக சாதுரியமாக செயல்பட்டு திலகவதி அந்த முதியவரை காப்பாற்றிவிட்டாள்.

முதலமைச்சரின் வாகனம் நின்று விட்டது. அனைத்து வண்டிகளும் நின்று விட்டன. பெரியவரைத் தூக்கி நிற்க வைத்து, முதலமைச்சர் மனுவை பெற்றுக் கொண்டார். கட்சிக்காரர்கள் ஆரவாரம், கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

முதலமைச்சரை மிக அருகில் திலகவதி பார்த்தாள். முதலமைச்சர் “வெரிகுட்” என்று பாராட்டவும் செய்தார்.

அதிகாரிகளும் திலகவதிக்கு பாராட்டை தெரிவித்தனர்.

மீடியாக்களின் கேமரா வெளிச்சத்தில் திலகவதி மிதந்தாள். திலகவதிக்கு பெரும் மகிழ்ச்சியாகவும் படபடப்பாகவும் இருந்தது. முதலமைச்சரின் கான்வாய் புறப்பட்டுவிட்டது.

மீடியாக்காரர்கள் திலகவதியை சூழ்ந்துகொண்டு படம் எடுத்தார்கள். இந்த தருணத்தையும் அவளால் ரசிக்க முடியவில்லை வயிற்று வலி முகத்தில் தெரிந்தது.

ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து வந்தாள். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

“இரண்டு வயது ஆகிவிட்டது. இன்னமும் ஜட்டியிலேயே பாத்ரூம் போகிறாள்” என்று அம்மா கம்ப்ளைன்ட் செய்தாள்.

“பரவாயில்லை விடுங்கமா” என்று கூறிக்கொண்டே பாத்ரூமை நோக்கி விரைந்தாள்.

“அப்பாடா என்ன ஒரு அவஸ்தை..” என ஆசுவாசம் அடைந்தாள்.

குளித்து, நைட்டிக்கு மாறி ஹாலுக்கு வந்தாள்.

டிவி மாலை செய்திகளை உறுமிக் கொண்டிருந்தது.

திலகவதியின் செயல், மீடியாவால் அலங்கரிக்கப்பட்டு செய்தியாக வந்து கொண்டிருந்தது.

“முதியவரை காப்பாற்றிய பெண் போலீஸ் திலகவதி” என்று அவளுடைய வீர தீர வீடியோ ஒளிபரப்பானது. வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.

திலகவதியின் துணிச்சலான செயலைப் பாராட்டி, பதவி உயர்வு அளிக்கப் போவதாக கமிஷனர் அலுவலகத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன‌. நண்பர்கள், அதிகாரிகள் என போன் செய்து வாழ்த்து சொன்னார்கள்.

திலகவதிக்கு உண்மையிலேயே இன்று நல்ல நாள். எல்லா மகிழ்ச்சியான செய்திகளும் இன்று ஒரே நாளில் வந்து சேர்ந்தன. எல்லாவற்றையும் இப்போதுதான் நிதானமாக அனுபவித்து மகிழ்கிறாள்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த அம்மா திலகவதியை பார்த்து, “டி.வி‍‍‍க்காரங்க போட்டோ எடுக்கும்போது ஏண்டி, மூஞ்சிய கடுகடுன்னு வச்சுருக்க, அப்ப உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டாள்.

“ஒன்னும் இல்லம்மா” என்று சிரித்துக் கொண்டே, பாத்ரூம் போனதால் நனைந்த குழந்தையின் ஜட்டியை மாற்றிக் கொண்டிருந்தாள் திலகவதி.

முனைவர் க. வீரமணி,

சென்னை.
 
Top