• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ப்ரணா - தன்னிலை தாழாமை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
தன்னிலை தாழாமை!



மாரிச்சாமி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது சுள்ளென சுட்டுக்கொண்டிருந்தது சூரியன்.

கதர் சட்டையும் பழுப்பு நிற வேட்டியும் அணிந்திருந்த மாரிச்சாமி நடக்க முடியாமல் மெள்ள நடந்தார்; அவரின் சுருங்கிய தோல்களிலெல்லாம் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன. மூச்சு வாங்கிய படியே நடந்து பேருந்து நிலையம் விட்டு வெளியே வந்தார். நாக்கு வறள தாகத்திற்கு ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்தது.

அருகே இருந்த சோடா கடையில், ஒரு பன்னீர் சோடா வாங்கி ஒரு மிடறு குடித்த பிறகு தான் அவருக்கு உயிரே வந்தது. ரசித்து ருசித்து குடித்தார்; குடித்து விட்டு கடைக்காரரைப் பார்த்து,

“எவ்வளவு?”

“பன்னிரெண்டு ரூபா!”

“இவ்வளவு சின்ன பாட்டில், நூற்றைம்பது எம்.எல் கூட இருக்காது இதுவே பன்னிரெண்டு ரூபாயா?”

“வழக்கமா பதிமூனு இல்ல பதினாலுக்கு விப்பேன். பார்க்க பாவமா இருக்கியேன்னு பன்னெண்டு சொன்னேன்” வெடுக்கென பேசினார் கடைக்காரர்.

இந்த நேரம் பார்த்து ஒரு வயதான மூதாட்டி பிச்சைக்கேட்டு கடைப் பக்கம் வந்து கையேந்த, ”சீ…சீ…போ… போ….” என்று துரத்தினார் சோடா கடைக்காரர்.

அந்த பிச்சைக்கார மூதாட்டியைப் பார்த்து, ‘பாவம், இந்த வயசுல, இந்த வெயில்ல பிச்சையெடுக்கற மாதிரி இதோட நிலைமை இருக்கே’ என்று எண்ணியபடியே அந்த மூதாட்டிக்கு பிச்சைப் போட சட்டைப் பையில் கை விட்ட மாரிச்சாமிக்கு சுருக்கென்றது. சட்டையில் காசும் இல்லை அவர் கையில் கொண்டு வந்த மஞ்சப்பையையும் காணவில்லை. எல்லா பணமும் அதில் தான் இருக்கிறது. பேருந்திலேயே மறந்து விட்டுவிட்டோமோ என்ற திகைப்பு வர,

“என் பணம்... என் பணம்…” என புலம்பிக்கொண்டே ஓட முடியாமல் பேருந்து நிலையத்திற்குள் ஓடினார். அவர் வந்த பேருந்து புறப்பட்டு போயிருந்தது. தலையில் கையை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டார் மாரிச்சாமி.

சோடா கடைக்காரர் இவர் பின்னாலேயே ஓடி வந்து,

“ஏய்…பெருசு காசு கொடுக்காம அப்படியே எஸ் ஆயிடலாம்-னு பார்த்தியா; எடு பன்னிரெண்டு ரூபா-ய” என்றார்.

இவர் கண்களில் கண்ணீர் முட்ட கடைக்காரரைப் பார்த்து,

“காசு… காசு… போச்சு… ஆயிரத்து ஐநூறு ரூவா போயிடுச்சு…” என்றார் தளுதளுத்த குரலில்.

“யாரை ஏமாத்தப் பார்க்குற? பாக்கெட்ல பத்து ரூபா கூட இல்லயா?”

“நெசமாத்தான் சொல்றேன் பணம் முழுக்க பையில தான் வெச்சிருந்தேன்” கிட்டத்தட்ட மாரிச்சாமி விசும்பவே ஆரம்பித்துவிட்டார்.

இவரைப் பார்த்து கடுப்போடு, “நமக்குனு வந்து சேரானுங்க பாரு… பிச்சைகாரனுங்க” என்று திட்டிவிட்டு சோடா கடைக்காரர் கோபத்தோடு திரும்பிப் பேனார்.

மாரிச்சாமிக்கு கன்னத்தில் அறைந்தாற் போல் இருந்தது ‘பிச்சைகாரனுங்க’ என்ற வார்த்தைகள்.

()()()()()()()

எழுபது வயதாகும் மாரிச்சாமி தஞ்சைக்கு அருகே உள்ள கிராமத்தில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.

“வயசான காலத்துல சும்மா மொடங்கி கெடக்காம என்ன பெட்டிக் கடை வேண்டிகிடக்கு; அன்னிக்கு கடையிலயே மயங்கி விழுந்து கெடந்த; ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா யார் பொறுப்பு...” என்று மூத்த மகன் திட்டினாலும், பெரிதாய் வருமானம் இல்லாமல் இருந்தாலும் விடாப்பிடியாய் மாரிச்சாமி கடந்த பத்து வருடங்களாய் கடையை நடத்தி வருகிறார்.

வயலில் வேலை செய்ய தெம்பு இருந்தவரை அவருக்கென இருந்த சொந்த நிலத்தில் உழைத்தார் பிறகு இரு மகன்களுக்கும் பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டு மூத்த மகனோடு தங்கிக்கொண்டு வீட்டின் அருகேயே பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

தஞ்சையிருந்து பதினைந்து கிலோ மீட்டரில் திருக்காட்டுப்பள்ளி போகும் வழியில் உள்ளது அவரது கிராமம். இரு வாரங்களுக்கு ஒரு முறை அவரே தஞ்சைக்கு வந்து தனது கடைக்குத் தேவையான முறுக்கு, தேன் மிட்டாய், பர்பி, சீனி மிட்டாய், கடலை மிட்டாய், மைசூர் பாகு, மிக்சர், ஊறுகாய் பொட்டலங்கள் என அத்தனை இனிப்பு மற்றும் கார வகைகளை மொத்த விற்பனை நிலையமான அண்ணாச்சி கடையில் தான் வாங்குவார்.

அது போல் இன்று வரும் பொழுதுதான் பேருந்திலேயே தனது பையைத் தவறவிட்டுவிட்டார்.

இப்பொழுது என்ன செய்வதென்று ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனார். பிறகு, அண்ணாச்சி தனக்கு ஆறு வருடமாய் பழக்கமானவர் அவரிடம் நடந்ததைச் சொன்னால் நிச்சயம் கணக்கில் வைத்துக் கொண்டு பொருள் கொடுப்பார் என மனதை தேற்றிக் கொண்டார். கிராமத்துக்கு திரும்பிச் செல்லவும் அவரிடம் பணம் கேட்டு விடலாம் என முடிவு செய்தார்.

வெயிலை பொருட்படுத்தாமல் தெற்கு வீதி நோக்கி நடந்தார். குடித்த பன்னீர் சோடா நாக்கில் இனித்தாலும் ‘பிச்சைக்காரன்’ எனற வசவு மனசில் கசந்தது.ச்

()()()()()()()

நடந்து ஒரு வழியாக அண்ணாச்சி கடைக்கு வந்து சேர்ந்தார்.

“வாங்க, வாங்க!” என்ன வேணும். கடையில் இருந்தவர் மாரிச்சாமியை இருகரம் கூப்பி வரவேற்றார்.

“அண்ணாச்சி இல்லையா?”

“அவரு வெளியூர் போயிருக்காரு;அவரு என்னோட மச்சான் தான்; என்ன வேணும் சொல்லுங்க நான் தரேன்..”

“என் பேரு மாரிச்சாமி….” அதற்குள் கடைக்கு மொத்த விலைக்கு சாமான் வாங்க இரண்டு மூன்று நபர்கள் வரவே, கடை பையனை கூப்பிட்டு, “டேய், பெரியவருக்கு நாற்காலி போடு” என்று சொல்லிவிட்டு, மாரிச்சாமியைப் பார்த்து, “அஞ்சே நிமிஷம் இவங்களை கவனிச்சிட்டு வந்திடறேன்” என்று வியாபாரத்தில் மும்முரமானார்.

கிட்டத்தட்ட இருபது நிமிடம் ஓடியது.

பிறகு மாரிச்சாமியைப் பார்த்து, “மன்னிச்சுகோங்க பெரியவரே… இப்ப சொல்லுங்க”

“நான் இங்க தான் தஞ்சாவூர் பக்கத்துல இருக்கற கிராமத்துல பெட்டிக்கடை வெச்சிருக்கேன்; அண்ணாச்சிக்கு எனக்கும் ஆறு வருஷம் பழக்கம்; உங்க கடையில தான் இனிப்பு, காரம் எல்லாம் வாங்குறது; அதான்… அண்ணாச்சியைப் பார்த்து வாங்கிகிட்டு போலாம்-னு வந்தேன்; அண்ணாச்சி இல்லையா?”

“சரி.. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க; நல்ல தரமா நான் எடுத்து தரேன்…”

“இல்ல அண்ணாச்சியை பார்த்து….”

“அண்ணாச்சி குலதெய்வம் கோவிலுக்கு போயிருக்காரு. கடைக்கு ஒரு போன் பண்ணி கேட்டுகிட்டு வந்திருக்கலாமே…?”

“அது..…அது வந்து…என் கிட்ட போன் கிடையாது” என்று அப்பாவியாய் சொன்னார் மாரிச்சாமி.

“மதியம் வரைக்கும் தொந்தரவு செய்யக்கூடாது-னு சொல்லியிருக்காரு; இல்லை-னா அவருக்கே போன் பண்ணிடுவேன்…”

“எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்ல; நான் காத்திருக்கேன்”

“சரிங்க பெரியவரே…ஒன்னு பண்ணுங்க எப்படியும் அண்ணாச்சி நாலு மணிக் கிட்டக்க வந்திடுவேன்-னு சொல்லியிருக்காரு. இப்ப பன்னிரெண்டு தான் ஆவுது…உங்களுக்கு வேற வேலை ஏதாவது இருந்தா… போயிட்டு நாலு மணிக்கு வாங்களேன்.”

“எனக்கு அப்படி எதுவும் வேல இல்ல… உங்களுக்கு பிரச்சினை இல்லை-னா இங்கயே உட்கார்ந்துகிறேன்” என்றார் கெஞ்சலாய் மாரிச்சாமி.

“சரிங்க…”

“தண்ணி கொஞ்சம் குடிச்சிக்காலாமா?”

“என்ன பெரியவரே இதெல்லாம் கேட்டுகிட்டு தாராளமா”

பானையிலிருந்த தண்ணீரை எடுத்து மடக் மடக்கென குடித்தார் மாரிச்சாமி.

“சரியான தாகம் போல? டீ இல்ல சோடா ஏதாவது குடிக்கிறீங்களா?” என்று கேட்ட கடைக்காரரிடம்,

“வேண்டாம்” படக்கென சொன்னார். காலையில் நிகழ்ந்த பன்னீர் சோடா சம்பவம் அவரை உறுத்திக்கொண்டிருக்கிறது போலும்.

பிறகு கடையின் மூலையில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டார். கடைக்கு வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கை பார்ப்பதை தவிர அவருக்கு வேறு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த கடையில் கிலோ கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இனிப்பு வகைகளும், கார வகைகளும் கலந்து வந்த வாசனை ஏதோ ஒரு புது வித உணர்வைத் தந்தது மாரிச்சாமிக்குள்.

இப்படியே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடியது.

கடைக்காரர் இவரைப் பார்த்து, “பெரியவரே, போய் சாப்பிட்டு வேணா வாங்களேன்!”

“இல்ல பரவாயில்ல” என்றார் மாரிச்சாமி.

“அதுக்கில்ல ஒன்றரைலேர்ந்து ரெண்டரை வரைக்கும் மதிய சாப்பாட்டு நேரம்; கடைய அடைக்கணும் அதுக்குத் தான் சொல்றேன்”

இப்போது மாரிச்சாமிக்கு வேறு வழியில்லை; எழுந்து வெளியே போகத்தான் வேண்டும்; ஆனால் எங்கே போவார்? கையில் காசும் இல்லை. அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உருவமில்லாத பசி வேறு வயிற்றில் உருளத்துவங்கியது. சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி 1:20.

“கடையை அடைக்கும் போது சொல்லுங்க, நான் கிளம்பிடுறேன்.” என்றார்.

சரியாக மதியம் ஒன்றரை மணிக்கு கடை அடைக்கப்பட்டது. கடையை அடைத்துவிட்டு கடையில் இருந்தவர்கள் கிளம்ப,

தெருவில் இறங்கிபடியே, “சாப்பிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தூரம் மெதுவாக நடந்தார் மாரிச்சாமி.

கடையில் வேலை பார்க்கும் பையனும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாப்பிட கிளம்பினான். கொஞ்ச தூரம் இவர் நடந்து வந்திருப்பதைக் கண்ட கடைக்கார பையன். “பெரியவரே! சாப்பிடத்தான போறீங்க, வாங்க சைக்கிள்-ல ஏறுங்க, நான் கூட்டிக்கிட்டு போறேன்” என்றான்.

“இல்லப்பா வேண்டாம்; நான் போயிக்கிறேன்” என்றார் இவர். மறுமுறையும் கூப்பிட்டுப் பார்த்தான், இவர் மறுக்கவே; வேகமாய் சைக்கிளை மிதித்துக் கொண்டு சிட்டாய் பறந்துவிட்டான்.

இருந்த இடத்தில் நின்ற மாரிச்சாமி, இருவரும் கண்ணிலிருந்து தெருவுக்குள் மறைந்துவிட்டனர் என உறுதி படுத்திக் கொண்டு மீண்டும் கடை வாசலுக்கே வந்து சற்று நிழலாய்ப் பார்த்து அமர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு நொடியும் நகரவே மறுத்தது. எப்படியும் நாலு மணிக்கு அண்ணாச்சி வந்துவிடுவார் அவரைப் பார்த்து விடலாம் என்ற ஒற்றை நம்பிக்கையில் பசியோடு அமர்ந்திருந்த மார்ச்சாமி, கடை வாசலில் அமர்ந்தபடியே தூக்க மயக்கதில், மயக்க தூக்கத்தில் ஆழ்ந்தார்.

“பெரியவரே! பெரியவரே!” கடைக்கார பையன் வந்து உலுக்கி எழுப்பிய பொழுது தான் எழுந்தார்.

“என்ன மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்டிடீங்க போல இருக்கு? உண்ட மயக்கமா?” என்றான்

கடினப்பட்டு சிரிப்பை வரவழைத்து சிரித்தார்.

()()()()()()()

மீண்டும் அதே மூலை; அதே ஸ்டூல்; என அமர்ந்து கொண்டு எப்ப தான் மணி நாலாகும் என காத்திருந்தார். மணி 3:10 என காட்டியது.

கடைக்காரரிடம், “அண்ணாச்சி கிட்ட பேசிட்டீங்களா?” என்றார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் செஞ்சேன்; இன்னுமே கோவில்ல தான் இருக்கறதா சொன்னாரு; நீங்க வந்திருக்கீங்க-னு சொன்னேன். அதுக்குள்ள சிக்னல் கட் ஆயிடுச்சு; எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே போன் பண்ணுவாரு”

அந்த கொஞ்ச நேரம் என்பது எப்போது என்று தெரியாமல், பானையிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கடையின் மூலையில் அமர்ந்து கொண்டார் மாரிச்சாமி.

அவ்வப்போது சுவர்க்கடிக்காரத்தை வெறித்து வெறித்துப் பார்த்தார்.

இப்படியே மணி மூணு முப்பதாகியது; பிறகு மூணு நாற்பத்தைந்து ஆகியது; பிறகு நாலு ஆகியது; பிறகு நான்கு பதினைந்து ஆகியது, பிறகு நான்கு முப்பது ஆகியது, பிறகு நான்கு நாற்பத்தைந்து ஆகியது.

எதிரே டீக்கடையிலிருந்து கடைக்கு டீ வந்தது.

“பெரியவரே! கொஞ்சம் டீ சாப்பிடுறீங்களா?” என்றான் கடைக்கார பையன்.

மாரிச்சாமிக்கும் கொஞ்சம் டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல் தான் இருந்தது; ஆனால் ஒரு வறட்டு பிடிவாதத்தில்,

“இல்ல வேண்டாம்” என்றார்.

“ஏன் மதியம் சாப்பிட்டதே இன்னும் செரிக்கலையா?” என்றான் கிண்டலாக.

“அப்படித்தான் போல இருக்கு” என்று இவரும் பதிலளித்தார்.

()()()()()()()

ஒரு வழியாக ஐந்து பதினைந்துக்கு அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது.

“சரிங்க மச்சான்; ஆகட்டும் மச்சான்; ஒண்ணும் பிரச்சினையில்ல…அது வந்து” என முடிப்பதற்குள் மீண்டும் டவர் பிரச்சினையில் போன் கட்டானது.

மாரிச்சாமி கடைக்காரரை ஆவலாய்ப் பார்த்தார்.

“பெரியவரே! மச்சான் வர இன்னிக்கு ராத்திரி ஆயிடுமாம்; கோவில்ல தாமதமாயிடுச்சாம். அதனால நீங்க நாளைக்கு வறீங்களா?”

“நான் வந்தது அண்ணாச்சிக்கு தெரியுமா?”

“தெரியும் உங்கள பத்தி ஏதோ சொல்ல ஆரம்பிச்சாரு; ஆனா போன் கட்டாயிடுச்சு; நானும் மச்சான் நாலு மணிக்கு வந்திடுவாரு- னு நினைச்சுத் தான் உங்கள காக்க வெச்சேன். இவ்வளவு தூரம் வந்துட்டீங்க; என்ன என்ன சாமான் வேணும் -னு சொல்லுங்க நான் எடுத்து தரேன்”.

“இல்ல இன்னொரு நாள் வரேன்” என்று புறப்படத்தயார் ஆனார்.

இப்போது என்ன செய்வது எங்கு போவது என அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. கிளம்பி பேருந்து நிலையம் போகலாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்.

மெதுவாக நடந்து பேருந்து நிலையம் அருகே வந்தவர், அவர் காலையில் பன்னீர் சோடா குடித்த கடையை கடக்க நெருங்குகையில்,

“பெரியவரே! பெரியவரே! கொஞ்சம் நில்லுங்க!” என்று கூவிக்கொண்டே அண்ணாச்சி கடையில் வேலை செய்யும் பையன் சைக்கிளில் வேகமாக இவரை நோக்கி வந்தான். மூச்சிறைத்தது அவனுக்கு. ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

“அண்ணாச்சி போன் பண்ணினாரு; உங்களை சந்திக்க முடியாம போனதுல வருத்தம்-னு சொன்னாரு; அது மட்டுமில்ல, போன தடவை சாமான் வாங்கும் போது ஏதோ மறதியில நீங்க மீதி பணம் எண்பத்தஞ்சு ரூபா வாங்காம கிளம்பிட்டீங்களாம்; இந்தாங்க உங்களோட எண்பத்தஞ்சு ரூபா; மறக்கறதுக்கு முன்னாடி கொடுத்திடச் சொல்லி அண்ணாச்சி உத்தரவு” என்று மூச்சு விடாமால் பேசிவிட்டு ஒரு ஐம்பது ரூபாய்த் தாளையும், மூன்று பத்து ரூபாய்த் தாளையும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் இவர் கையில் திணித்துவிட்டு அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டு புறப்பட்டுப் போனான்.

அந்த பணத்தை வாங்கிய மாரிச்சாமி, புத்துணர்ச்சி வந்தவராய், தான் காலையில் பன்னீர் சோடா குடித்த கடையை நோக்கிப் போனார். காலையில் பார்த்த கடைக்காரர் அங்கிருந்தார். அவர் கையில் பத்து ரூபாய்த் தாளையும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் கொடுத்த மாரிச்சாமி அவரைப் பார்த்து, உரக்கச் சொன்னார்

“நான் ஒன்னும் பிச்சைக்காரன் இல்ல"



***
நன்றி
 
  • Like
Reactions: Dharsini

prana_2021

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
16
0
1
Trichy
Mk Rajamanikam Karur
💕
🙏

Congratulations

🎈
🎊
🎉
Excellent வாழ்க, வளமுடன் தலைவா
 

Dharsini

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
20
18
3
Tamilnadu
Superb..கடினமான சூழ்நிலையிலும் மாரிச்சாமி தன்னோட தன்மரியாதையை விட்டு இறங்கி வரல..சோடா கடைல நான் ஒண்ணும் பிச்சைக்காரன் இல்லனு சொன்னது அருமை..வாழ்த்துக்கள் சிஸ்..
 
  • Like
Reactions: prana_2021

prana_2021

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
16
0
1
Trichy
Superb..கடினமான சூழ்நிலையிலும் மாரிச்சாமி தன்னோட தன்மரியாதையை விட்டு இறங்கி வரல..சோடா கடைல நான் ஒண்ணும் பிச்சைக்காரன் இல்லனு சொன்னது அருமை..வாழ்த்துக்கள் சிஸ்..
மிக்க நன்றி!!!