• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -23

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
கோபத்தில் கண்கள் சிவக்க கனகம் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள். அவர்களை அவமானப்படுத்த நினைத்து தானே அவமானப்பட்டு நின்றதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.. அதையெல்லாம் விட கடைசியில் அவளுக்கு பைத்தியக்கார பட்டம் கட்டியதை தான் அவளால் தாள முடியவில்லை. இதையும் கூட கொஞ்சம் மறந்து போவாள் ஆனால் இவள் பத்து மாதம் சுமந்தெடுத்த புத்திரனே இன்று அவளை எதிர்த்து பேசியது என அனைத்தும் எரிந்து கொண்டிருந்த தீபத்தில் மேலும் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.

'இல்லை இதை இப்படியே விடக்கூடாது கனகம்.. இப்படியே விட்டால் அவன் முன்னே கைகட்டி நிற்கக் கூடாது.. என்னையா பைத்தியக்காரி என்றான்.. இந்த பைத்தியக்காரி என்ன செய்யப் போகிறாள் என்பதை கூடிய சீக்கிரம் அவன் அறிவான்.. அடேய் ஆதவா அவ யாருன்னு உனக்கு தெரிஞ்சிருச்சா.. அப்படி தெரிஞ்சாலும் உன் உறவை அவகிட்ட நீ சொல்ல முடியாது.. அப்படியே சொன்னாலும் அவ உன்ன விட்டு விலகித் தான் போவா.. அவ இருந்த இடமே தெரியாம அழிக்கிறேன்.. அப்போ தான் நீ இன்னும் துடிக்க முடியும்..

உன் குடும்பம் அழிஞ்சு நின்னப்போ எப்படி நீ துடிச்சியோ அதை விட அதிகமா துடிப்ப.. துடிக்க வைப்பா டா இந்த கனகம்.. திரும்ப இந்த சொத்து பூராவும் என் கைக்கு வர வைப்பேன்.. அப்புறம் பேசிக்கிறேன் என் பையனை.. இப்போ நான் என்ன செய்யறது.." என்று சிறிது யோசித்தவள், " ஆஆ உடனே நான் அவங்களை சந்திக்கனும் அது தான் இப்போ சரி.. அப்போ தான் இந்த ஆதவனையும் வெண்மதியையும் துடிக்க வைக்க முடியும்..' என்று ஏதோ முடிவெடுத்தவள் வெளியே ஹாலில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை என்று உறுதி செய்தவள் வேகமாக வெளியே வந்தாள்.

யாருமறியாமல் அவள் வீட்டைத் தாண்டி வெளியே சென்றதாக அவள் தான் நினைத்தாள்.. ஆனால் அவளை இரு விழிகள் பின்தொடர்ந்ததை அவளறியவில்லை.. கண்களில் ஆக்ரோஷத்தை சுமந்து அவளை தொடர்ந்தது அந்த விழிகளுக்கு சொந்தமான உருவம்.

இங்கே தன் அறையில் சுயபச்சாதாபத்தில் மூழ்கி தன் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் வெண்மதி.

அதோடு இன்று ஆதவன் அவளை அழைத்த வீதம் கண்டு மனதில் ஏதோதோ நிழல்கள் நினைவுகளாய் வந்து தொந்தரவு செய்தது.. அந்த நிழல்களில் யாரோ சரியாக முகம் தெரியாத ஒருவன் "ஏய் பட்டுமா இங்கே என்னடி பன்ற.." என்று கேட்பது போல் இருந்தது.

அதுவும் அந்த சித்தர் கூறி சென்ற வார்த்தை.. ஆதவனின் பிரத்யேகமான அழைப்பு.. தனக்கு நிழலாய் தன்னை காவல் காப்பது போல் இருந்தது.

ஆனால் அவனுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்ன உறவு எதுவும் அவளுக்கு தெரியவில்லை.. தான் போய் கேட்டாலும் அவன் கண்டிப்பாக சொல்லப் போவதில்லை.. ஆனால் யாரிடம் இதை கேட்க முடியும்.. அவனுக்கு இங்கே நெருங்கியது என்றால் அது வளவன் தான்.

ஆம் அவன் தான்.. அந்த ஆதவன் வரும் வரை கனகம் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாது இருந்தவன் இன்று அவனுக்கு துணையாக நின்று தன் அன்னையை எதிர்க்கிறான்.. அப்படி என்றால் அவனுக்கு அந்த ஆதவன் யார் என்று தெரியும்.. நிச்சயம் நம்மளை பற்றியும் தெரிந்திருக்கும்.. இதை அவனிடம் தான் கேட்க வேண்டும்.. அதுவும் இப்பொழுதே என்று எழுந்தவள் அந்தியில் கனகம் பேசியதில் மனம் உடைந்தவள் அவனிடம் தனியாக சென்று பேசினாள் நிச்சயம் அதற்கும் கலங்கம் தான் சுமத்துவாள்.


இல்லை அவனிடம் கண்டிப்பாக பேசியாக வேண்டும் என்று எழுந்தவள் வளவன் தேடி சென்றாள்.

வீட்டின் பின்புறம் அமர்ந்து யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான் அவன்.அவன் பின்னே மெதுவாய் போய் நின்றாள் அவனை எப்படி அழைப்பது என்று யோசித்தபடி நின்றிருந்தாள்.

தனக்கு முன்னே தெரிந்த நிழல் வெளிச்சத்தில் தன் பின்னே யாரோ நிற்கின்றனர் என்பதை யூகித்த வளவன் யாரென்று திரும்பி பார்த்தான்.. அங்கே கைகளை பிசைந்தபடி நின்றிருந்த வெண்மதியை பார்த்தவன்,

"அண்ணி என்னாச்சி இப்படி இங்கே வந்து நிக்கிறிங்க.." என்றான் கேள்வியாய்.

"அது.. அது.. உங்களைத் தான் பார்க்க வந்தேன் வளவன்.. அது என்னன்னா.." அதற்கு மேலும் எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இருந்தாள்.

"சொல்லுங்க அண்ணி.. உங்களுக்கு எதுனாச்சும் வேணுமா.. என்ன வேணும்னு சொல்லுங்க அண்ணி நான் வாங்கிட்டு வர்றேன்.." என்றான் அவளுக்கு சேவை செய்யும் சேவகனாய்.

"இல்லை எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்.." என்றாள் பதட்டத்துடன்.

"சொல்லுங்க அண்ணி என்ன கேட்கனும்.."

"அது ஆதவன் பத்தி கேட்கனும்.. அவரு யாரு அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.. எனக்கும் அவருக்கும் என்ன உறவு.. ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு இதெல்லாம் யோசிச்சி யோசிச்சி மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு.." என்று அவனின் முன் கையேந்தி கேட்டுவிட்டாள்.

அவள் கையேந்தவும் அதிர்ந்தவன்,

"அய்யோ அண்ணி நீங்க என்ன பன்றீங்க.. முதல்ல கையை எறக்குங்க அண்ணி.. ஏன் அண்ணி என்னை இப்படி இக்கட்டுல நிறுத்திறீங்க.. எனக்கும் உங்களோட மனநிலை புரியுது அண்ணி.. ஆனா ஆதவன் அண்ணாவோட சம்மதம் இல்லாம நான் எதுவும் சொல்ல முடியாது அண்ணி.. ப்ளீஸ் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீங்க அண்ணி.. ஆனா என்னால ஒன்னு மட்டும் சொல்ல முடியும் அண்ணி.. இனி உங்களுக்கு எப்பவும் நல்ல நேரம் தான் அண்ணி.. உங்களோட கஷ்டம் எல்லாம் இனி ஓடப் போகுது அண்ணி.." என்று அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

தனது எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காமல் மனம் சுருங்கி போனாள் பெண்ணவள்.

தன் நிழலை எவ்வளவு நேரம் பார்த்தாளோ அப்பொழுது தான் தன் நிழலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.

இது என்ன இத்தனை நாட்களாக இல்லாமல் என் நிழலே எனக்கு ஏதோ வித்தியாசமாக தெரிகிறதே.. என்னவென்று அதை நன்றாக உற்றுப் பார்த்தாள்.

அப்பொழுது தான் அந்த வித்தியாசம் அவள் கண்களில் புலப்பட்டது. அதை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள்.

ஆம் அவள் விலகினாலும் அந்த நிழல் அதே இடத்தில் தான் இருந்தது.. அதுவும் இருகைகளையும் விரித்து நீட்டியபடி இருந்தது.. எப்படி இது சாத்தியம் நம் நிழல் நம்முடன் தானே வர வேண்டும் இது ஏன் என் பின்னால் வரவில்லை என்ற குழப்பத்தில் ஏனோ விரக்தியின் நிலைக்கே சென்று விட்டாள்.



இங்கே யாரையோ அந்த காட்டு பங்களாவில் தேடி வந்த கனகம் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தாள்.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பாகத்துக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.